பொதுவாக இந்தமாதிரி வாழ்க்கை வரலாற்று படங்கள் பெரும்பாலும் காண்பவரிடம் அவ்வப்போது மனவெழுச்சி ஏற்படுத்தும் தருணங்களை பிரதானமாக வைத்தே எடுக்கப்படுகின்றன.
பார்வையாளன் படத்தின் மைய கதாபாத்திரத்தின் சமகாலத்தவராக இருந்தால் இயக்குனருக்கு மேலும் சுலபம்.காரணம் அந்த தருணம் நிகழ்ந்த காலத்தை பார்வையாளன் தனது தனிப்பட்ட வாழ்வோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி கொண்டிருப்பான்.அந்தத்தருணங்களை மிகச்சரியாக திரையில் கொண்டுவந்தாலே போதும்!
இப்படத்தில் அது சாத்தியப்பட்டுள்ளது. முத்தையா முரளீதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு நன்றி.இல்லாவிட்டால் திரையில் யார் முரளிதரன்? யார் ரணதூங்கா? என்று பெருங்குழப்பம் வந்திருக்கும்.
முரளிதரனாக நடித்த மதுர் மிட்டல் அச்சு அசலாக பொருந்துகிறார்.அதிலும் மிக முக்கியமாக பந்து வீசும் அந்த தொனி - ஒரு தனித்தன்மையான பாணியில் ஓடிவந்து கண்களை அகல விரித்து(இதற்கும் ஒரு காட்சி வருகிறது) மணிக்கட்டை சுழட்டி பந்து வீசும் அத்தனை உடல்மொழியும் மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் காட்டப்படுகின்றன.தமிழர்கள் குறிவைத்து தாக்கப்படும் காட்சிகளும் உண்டு .அதற்கு பயந்து முரளியை ஒரு கிறிஸ்தவ கான்வெண்டில் சேர்த்து விடுவதாக படம் செல்கிறது.
கத்திமேல் நடப்பது போன்றதே இப்படத்தை எடுப்பது! ஒருபக்கம் ரொம்பவும் இலங்கையை விமர்சிக்க கூடாது.அதே நேரம் ரொம்பவும் இருட்டடிப்புச் செய்ய கூடாது.இந்தியாவையும் பகைத்துக்கொள்ள கூடாது என்று சர்வ எச்சரிக்கையாக படத்தை எடுத்துள்ளார்கள் .மேலும் இம்மாதிரியான வாழ்க்கை வரலாற்று படங்கள் பார்வையாளனுக்கு ஒருவித நேர்மறை எழுச்சியை கொடுப்பதற்காகவே எடுக்கப்படுகிறது.இதில் ஏன் அந்த கலவரத்தை நுணுக்கமாக காட்டவில்லை?ஏன் இந்த பிரச்சனை குறித்து ஆழமாக பேசவில்லை? என்றெல்லாம் கேட்பதே அபத்தம்.
தற்கால தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் இருக்கும் மாஸ்டர் ரித்விக் இந்தப்படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளான்.தொடர்ந்து இவன் நடித்த ஐந்து படங்கள் நூறு கோடி வசூல் என்கிறார்கள். தொடர்ந்து பப்படங்களாக கொடுத்து வரும் ஒங்க இவரு இதையெல்லாம் பார்த்து கற்க வேண்டும் 🤪
 |
பய நடிப்புல பின்னிட்டான்! |
அர்ஜுனா ரணதூங்கா மட்டுமே பிரதானமாக காட்டப்படுகிறார்.அவர் இலங்கை அரசியலில் முக்கிய பொறுப்பில் சில காலம் முன்பு இருந்ததாக கேள்விப்பட்டதுண்டு .அதன் காரணமாக கூட இந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.ஆனால் அப்படி எதுவும் இல்லாவிட்டால் கூட தனது அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஆஸி நாட்டின் நடுவர்கள் பத்திரிகையாளர்கள் விளையாட்டு வீரர்களால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் நேரத்தில் உறுதுணையாக அவருடன் நின்றவர் என்ற வகையில் இந்த படத்தில் எப்படி இருந்தாலும் அவர் பிரதான கேரக்டர் தான்.கிங் ரத்னம் தொப்பை வரையில் ரணதூங்கா கேரக்டரில் பொருந்துகிறார்.
96 உலக கோப்பை வெற்றி காட்டப்படுகிறது.ஈடன் கார்டன் அரை இறுதியில் இந்திய அணி அதன் ரசிகர்களாலேயே எதிர்கொண்ட அவமானங்களை காட்டாமல் மானத்தை காப்பாற்றி உள்ளனர் . ஈடன் கார்டன் கலவர காட்சிகள் இன்னமும் கண்முன் நிற்கிறது!
ஜெயசூர்யா காட்டடி அடித்த ரெண்டு ஷாட்டாவது வச்சிருக்கலாம்.அதேபோல எப்படி முரளிதரன் பந்தை எறிகிறார் என்ற குற்றசாட்டு வந்ததோ அப்படி ஜெயசூர்யா பேட்டில் ஸ்பிரிங் வைத்து அடிக்கிறார் என்று யாரோ கிளப்பி விட்டனர்.ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை.
மேலும் பிற்காலத்தில் சங்ககரா எனும் குறும்புக்கார விக்கெட் கீப்பர் கையில் பந்தே இல்லாமல் ரன் அவுட் செய்வது போல பாவனை செய்து பேட்ஸ்மேன்களை கீழே விழவைத்து கடுப்பேற்றிய காட்சிகளும் இடம்பெறவில்லை .அதை சேர்த்திருக்கலாம் 😃
ஷேன் வார்ன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பார்க்க மார்க் வா மாதிரி இருந்தார்! (தினத்தந்தியில் மார்க் வாக் என்று எழுதுவார்கள்). கபில் தேவ் சட்டென்று பார்க்க கபில் போலவும் சற்றுநேரம் கூடுதலாக பார்த்தால் கவிதாலயா கிருஷ்ணன் போலவும் இருந்தார்.
தமிழனா? சிங்களனா?சிங்கள ஆதரவு தமிழனா?இந்திய தமிழனா?இலங்கை தமிழனா?புலிகள் ஆதரவு தமிழனா?புலிகள் எதிர்ப்பு தமிழனா?அசல் திறமை கொண்ட சுழற்பந்து வீச்சாளனா?இல்லை தில்லாலங்கடி செய்து பந்தை எறியும் மோசடியா? என்றெல்லாம் வாழ்நாள் முழுக்க இப்படியான ஏடாகூட இடியாப்ப சிக்கல் கொண்ட அடையாளமற்ற ஒரு சூழலில் சிக்கிக்கொண்டவர் முரளி.படத்திலும் இதுபோன்ற ஒரு காட்சி வருது.
தமிழ்ப்பெயர் கொண்டதாலேயே பயிற்சி ஆட்டத்திற்கு மைதானத்துக்கு உள்ளே அனுமதிக்காமல் பையில் வெடிகுண்டு என்ற சந்தேகத்தில் வெளியிலேயே இலங்கை இராணுவம் முரளியை முட்டி போட வைப்பதாக ஒரு காட்சியும் வருகிறது.
மேலும் வாழ்க்கை வரலாற்று படங்கள் என்றாலே ஒரு பத்திரிகையாளர் கேரக்டர் இருக்கும். இதில் நாசர் அந்த கேரக்டரை செய்துள்ளார் .தனது மகன் முரளி போல வருவான் என்ற நம்பிக்கையில் இருந்தவர் குண்டு வெடிப்பில் கால்களை இழந்து வாழ்க்கையையும் இழந்த ஒருவனின் தந்தையாக வருகிறார்.சில இடங்களில் படத்தின் தொனிக்கு வெளியே சென்று விடும் காட்சிகளாக இருந்தாலும் சில ஏடாகூட சர்ச்சைகள் விமர்சனங்களை தவிர்க்கவே இத்தகைய காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன என்று புரிந்து கொண்டோம் .
பாகிஸ்தான் டூருக்கு செல்ல பாதுகாப்பு காரணங்களை சொல்லி இந்தியா மறுக்க நட்புக்கரம் நீட்டுவதாக நினைத்து அனுப்பப்பட்ட இலங்கை விளையாட்டு வீரர்கள் மயிரிழையில் தீவிரவாத தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய காட்சிகளும் உண்டு.
.
. முரளிதரன் பந்தை எறிகிறார் என்று கொந்தளித்த அதே ஆஸி ஊடகங்கள் 2007 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடம் கில்கிறிஸ்ட் கிளவுசுக்குள் கோல்ஃப் பந்தை வைத்து அதன் மூலம் 150+ அடித்ததை விவாதிக்கவில்லை.
2007 2011 இரண்டிலும் இறுதிப்போட்டிக்கு வந்தது இலங்கை.2007 இல் மழை இருட்டிக்கொண்டு வந்து எதிரில் யார் நிற்கிறார்கள் என்றே தெரியாத நிலையில் இலங்கை பேட்டிங் செய்தது.
இந்த படத்தை எதிர்த்த உள்ளூர் போராளிகள் பற்றி பார்ப்போம்.இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று சொன்னது படத்திற்கு மிகப்பெரும் உதவி தான்.அடுத்து என்ன பேச போகிறோம் என்ன செய்ய போகிறோம் என்ற குழப்பத்தில் என்னாச்சு? பாணி முகபாவத்திலேயே வி.சே நடித்திருப்பார்.அதில் கண்டிப்பாக முரளிதரன் தெரிந்திருக்கவே மாட்டார்.
மேலும் லைகா நிறுவனத்திற்கு ஆரம்பத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு பிறகு "என்ன மாயமோ மந்திரமோ" மொத்தமாக அடங்கி போனது!எப்ப இங்க இலங்கை பிரச்சனை பெரிதாக ஆதாயம் தராது என்று உணர்ந்தார்களோ அப்போதே அதை கைவிட்டு விட்டார்கள்.ஒருவகையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் "ஆள விட்டதற்கு நன்றி!" என்று நினைத்திருப்பார்கள்.
தான் பந்தை எறியவில்லை என முரளிதரன் இருமுறை நிரூபித்தது,அம்பயர் நோபால் கொடுத்த வன்மம் (பொதுவாக ஆசிய அணிகளே இம்மாதிரியான குறிவைத்த தாக்குதல்களில் சிக்கியுள்ளன),96 உலகக்கோப்பை வென்ற தருணம்,முரளிதரன் முதன்முதலில் விளையாடிய மேட்ச் ( டெண்டுல்கர் முதலில் விளையாடிய மேட்சை லைவில் பார்த்தது போல இதையும் நாம் பார்த்துள்ளோம்) இதெல்லாம் நிஜத்தில் நிகழும்போதே நாம் தொடர்ந்து கண்டு வந்ததால் இப்படத்தின் பல தருணங்கள் மிக நெருக்கமாக உணர முடிந்தது.அத்தகைய அனுபவம் இல்லாதவர்கள் கூட கண்டிப்பாக படத்தை ரசிக்கலாம் .கிரிக்கெட் ஆர்வலராக இருப்பது அவசியம்!