Saturday 16 November 2013

சூர்யபார்வை (1999) மற்றும் Leon the professional(1994)

Leon The professional(1994) பார்க்க நேர்ந்தது.இதில் முரண் என்னவெனில் இந்த படத்தின் தமிழ் உல்டாவான அர்ஜுன் நடித்த சூரியபார்வை (1999) படத்தை ஒரு பிரதி என்று தெரியாமலேயே(அப்பெல்லாம் விக்கிபீடியா கிடையாதே) ஐந்து முறை பார்த்திருக்கிறேன்.நன்றாகவே இருந்தது.குறிப்பாக கவுண்டரின் காமெடி.வெளிநாட்டில் கம்ப்யூட்டர் படித்துவிட்டு இந்தியாவுக்கு சேவை செய்வதற்காக வந்து செந்திலின் சூழ்ச்சியால் வீரப்பன் போல காட்டுக்குள் ஒளிந்து வாழும் கேரக்டர்.விஷயம் அதுவல்ல...இந்த லியோனுக்கும் சூரிய பார்வைக்குமான வேறுபாடு/ஒற்றுமைகள் பற்றி...


               லயோன் படத்தை பொறுத்தளவில் உணர்ச்சிகள் அற்ற/உணர்சிகள் இல்லாதது போல வாழும் ஒரு ஹிட்மேன் மற்றும் தனது அன்பு தம்பியை இழந்த ஒரு சிறுமி.இவர்களுக்கு இடையேயான உறவு.தமிழ் படத்தை பொறுத்தளவில் நடலி போர்ட்மேன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர் போலவே தோன்றும்.அவரை ஒரு ஆடிப்பாடும் வழக்கமான ஹீரோயின் போலவே காட்டி இருப்பார்கள்(டூயட் மட்டும்தான் பாக்கி).மேலும் நம் தமிழ் சினிமாவில் பதிமூன்று வயது சிறுமிகள் எல்லாம் நாயகியாக பார்த்து(லிப் கிஸ் காட்சிகளில் எல்லாம் நடிக்க வைத்த ஓலக இயக்குனர்கள் உள்ள நிலையில்) பழகிவிட்டதால் இந்த படத்தில் இந்த சிறுமியின் கதாபாத்திரம் வித்தியாசமாக தெரியவில்லை ..

                ஆனால் லயோன் படத்தில் அந்த சிறுமியின் கதாபாத்திரம் மற்றும் அவருக்கும் லியோனுக்குமான உறவு/நட்பு என்பது கத்தி மேல் நடப்பது போல சொல்லப்பட்டுள்ளது.பதின்ம வயதினருக்கே உரிய  இனக்கவர்ச்சி (infatuation), அதை காதல் என்று நம்புதல், அதை லயோன் மறுத்தல் எல்லாம்(இது  லயோன்  படம் வந்த  சமயத்தில்  கடுமையான விமர்சனத்திற்கு  உள்ளானது) தமிழில் இல்லை என்றாலும்  படத்தின்  முடிவில்  அர்ஜுனும்  அந்த  சிறுமியும் சேர்ந்து  தப்பிப்பதாக  கேள்வியோடு  முடித்திருப்பார்கள்.காதலா?நட்பா?ஒருமாதிரி  தந்தை  உறவா? அதைப்பற்றி  தெளிவான  காட்சிகள்  தமிழில்  இல்லை.



ஆங்கிலத்தில்  லயோனுக்கு  பிளேஸ்பேக்  என்று  எதுவும்  இல்லை.ஆனால்  தமிழ்  பார்வையாளர்களுக்காக  இங்கே   அர்ஜுன்   உயிராக கருதும் செடிக்கு  ஒரு பிளேஸ்பேக்.அனாதையான அர்ஜுனை விஜயகுமார்-மஞ்சுளா தத்தெடுத்து வளர்க்க அதன் பின்னர் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறக்க "இனி இவன் எதுக்கு?" என்று பேசிகொண்டிருக்கும் காட்சியை பார்க்கும் சிறுவயது அர்ஜுன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.பின் பல ஆண்டுகள் கழித்து சிறையில் அவரும் விஜயகுமாரும் ஒரே செல்லில் இருக்க அப்போது அவர் "நான்தான் உங்கள் மகன்" என்று சொல்லாமல் புழுங்குகிறார்.பின் வி.குமார் மரணமடைய அவரது அஸ்தியை ஒரு பூந்தொட்டியில் நிரப்பி அதில் செடி வளர்ப்பதாக காட்சியமைப்பு இருக்கும்.
          அந்த சிறுமிக்கு சுட கற்றுகொடுக்கும் காட்சிகள்,லியோனும் சிறுமியும் சேர்ந்து வீடு வீடாக சென்று கொலை செய்யும் காட்சிகள் எல்லாம் தமிழில் இல்லை.அந்த காட்சிகள் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும் 

               முக்கியமாக  கவனிக்கவேண்டியது  லயோன் படத்தில்  ழான்  ரெனோவின்(Jean Reno)  உடல்மொழி  பேசும்  விதம்  ஆகியவற்றை  அப்படியே  அர்ஜுன்  தமிழில்  பிரதி  எடுத்திருப்பார்.ஆனால் வில்லனாக  வரும்  Gary Oldman ன்  சாயல்  துளியும்  இல்லாமல்  ரகுவரன்  தனது  தனித்துவமான  ஸ்டைலில்  அந்த  வில்லன்  கேரக்டரை  செய்திருப்பார்!அதான்  ரகுவரன்!


ராதாரவியும்  தனது  கேரக்டரில்அட்டகாசமாக  பொருந்தியிருப்பார்(வழக்கம்போல?)!
உறுத்தல் அந்த நாயகியாக நடித்த சிறுமியின் தேர்வு சரியில்லையோ என்று எண்ண வைக்கும்.லயோன் கடைசியில் மரணமடைவார்.ஆனால் தமிழில் அவர் அந்த சிறுமியோடு தப்பிப்பதாக காட்டி இருப்பார்கள்.இரண்டு படத்துக்கும் பொதுவாக என்ன  வேறுபாடு என்றால் ஆங்கிலப்படம் ஆழமாக/கத்திமேல் நடக்கும் விதத்தில் காட்சியமைப்பு இருக்கும்.அந்த படத்தை பார்த்தபின் சூரியபார்வை பார்த்தால் தட்டையான புரிதலோடு எடுக்கப்பட்டதாக தோன்றும்.

Friday 8 November 2013

விஜயகாந்த் படக்காட்சிகளை சுட்ட கமல்& அஜித் படங்கள்

இந்த பதிவை  இந்தாண்டின் முதல் பாதியிலேயே  எழுதிவிட நினைத்தேன்...வழக்கம்போல சோம்பேறித்தனம் அமுக்க இப்போதாவது எழுத முடிந்ததே என்று சின்ன ஆறுதல்.
முதலில் ஒரு விஜயகாந்த் படக்காட்சியை விளக்குகிறேன்.அதைப்படிக்கும்போதே அது எந்த படத்தில் வந்தது என்று தெரிந்துவிடும் 
                            >>விஜயகாந்த் கமலக்கண்ணன் என்ற பேரில் ஒரு கோவிலில் யானைப்பாகனாக வாழ்ந்து வருகிறார்....அவருடன் மணிவண்ணன் இருக்கிறார்..அவ்வப்போது விஜயகாந்த் எங்கோ காணாமல் போய்விடுகிறார்.எங்கே என்று தெரியவில்லை.சரி இது என்ன ரகசியம் என்று கண்டுபிடிக்க மணிவண்ணன் ஒரு நாள் விஜயகாந்தை ரகசியமாக பின் தொடர்கிறார்.அங்கே ஒரு இடத்தில் சென்று மணிவண்ணன் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்..காரணம் விஜயகாந்த் அங்கே ஒரு இஸ்லாமியர் போல தொழுகை செய்து கொண்டிருக்கிறார்.உடனே மணிவண்ணன் அங்கே சென்று "நீ யாருடா? உண்மையை சொல்லு" என்றவுடன் "நான் கமலகண்ணன் இல்லை கமாலுதீன்" என்றவுடன் அதிர்கிறார் மணிவண்ணன்..நீள்கிறது பிளேஷ்பேக்.

                            >> தான் ஒரு ஆணுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளதால் அதை நியாயப்படுத்த தன கணவன்(கமல்) விஸ்வநாத்துக்கும் அதே மாதிரி கள்ள உறவு ஏதேனும் இருந்தால் தன செய்கையை நியாயபடுத்தி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஒரு தனியார் துப்பறியும் நிபுணரை வைத்து கமலை கண்காணிக்க சொல்ல அவர் எங்கோ ஒரு மறைவுடன் சென்று இஸ்லாமிய முறைப்படி தொழுகை நடத்த ...சில காட்சிகளுக்கு பிறகு "நான்  விஸ்வநாத் இல்லை விஸாம் அஹமத் காஷ்மீரி" என்கிறார் ...பிறகு ப்ளேஷ்பேக்...ஒற்றுமை ஏதேனும் தெரிகிறதா?
முதல் படம் கள்ளழகர்(1999) இரண்டாம் படம் உங்களுக்கே தெரியும் விஸ்வரூபம்.
******************************************************************************
படம் துவங்கியவுடன் ஹீரோ வெடிகுண்டு வைத்து கொலை செய்தல்  அயன் பாக்சை வைத்து மிரட்டுதல் போன்ற விஷயங்களை செய்கிறார்..படம் பார்ப்பவர்கள் "இவர் வில்லனோ?" என்று நினைக்க  அவரை போலீஸ் கொண்டுபோய் சித்ரவதை செய்கிறது...அதெல்லாம் ஹீரோவை ஒன்றுமே   செய்யாத நிலையில் ப்ளேஷ்பேக்..... பிறகு பார்த்தால் ஹீரோவே ஒரு காவல்துறை அதிகாரி  சொல்லப்படுகிறது...இந்த காட்சி ஆரம்பம் பட காட்சி...நரசிம்மா (2001) என்ற படத்தையும்  பாருங்கள்..ஒற்றுமை தெரிகிறதா?

Monday 8 July 2013

A Clockwork Orange(1971)-அதிவன்முறை சமூகத்தை எதிர்கொள்ளுதல்



         குப்ரிக்கின் படங்களை இரண்டு பத்திகள் மூலம் எழுதி விளக்கிவிடவே முடியாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.அது உண்மையும் கூட.எனவே இந்த படத்தை பார்த்தபோது எனக்கு தோன்றிய வெகு சில விஷயங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.மற்றபடி ஒலக சினிமா வெமர்சகன் என்று எனக்கு நானே பெயரிட்டு கொண்டு முதல் பத்தியில் படத்தின் கதையை எழுதி இரண்டாம் பத்தியில் நடிகர்கள் இயக்குனர் இசையமைப்பாளர் ஆகியோர் பற்றி இரண்டிரண்டு வரிகள் எழுதி முடித்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
*********************************************************************************
          நாமே இதை வாழ்வில் உணர்ந்திருப்போம்..ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சினிமா அல்லது குறிப்பிட்ட சினிமாவில் வரும் ஒரு குறிப்பிட்ட பாடல் நம் வாழ்வின் ஒரு முக்கியமான(மகிழ்ச்சி தருவதோ அல்லது அதீத வேதனை தருவதோ அல்லது அதீத தன்னம்பிக்கையோடு நாம் செயல்பட்ட  ) சம்பவத்தோடு நம் விருப்பம் இல்லாமலேயே பிணைக்கபட்டிருக்கும்.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட காதல் பாடல் ஒரு நபரின் பிரிந்து போன காதலியை/காதலனை நினைவூட்டலாம்.அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் தான் காதலித்த நபரோடு பேசிய பழகிய நாட்கள் கண் முன் வந்து போவதை உணர்ந்திருக்கலாம்.இதுபோல ஒரு நண்பனையோ அல்லது நெருக்கமான உறவினரையோ நினைவுபடுத்தவும் கூடும்.அந்தந்த நபர் பொறுத்து.இது போல பீத்தோவனின்  சிம்பனிகளுக்கு (ஒன்பதாவது சிம்பனி அதிலும் குறிப்பாக Molto Vivace) எதிராக அலெக்ஸ் பழக்கபடுத்தபடுகிறான்.Ludovico technique க்கு முன்பு அந்த இசையை அவன் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அவன் இன்பத்தின் உச்சத்தை அடைகிறான்.பல்வேறு அழகிய பெண்களுடன் உல்லாசமாக அவன் இருப்பதாக  அவனது மனக்கண் முன்பு தோன்றுகிறது .அந்த காட்சியை கீழே நீங்கள்  கீழே பார்க்கலாம் .
            இப்படி பீத்தோவனை கேட்கும் போதெல்லாம் இன்பத்தின் உச்சநிலையை அடையும் அலெக்ஸ் அந்த லுடோவிக்கோ முறைக்கு உட்பட்ட பிறகு ஒவ்வொரு முறை பீத்தோவனை கேட்கும்போதும் அவனுக்கு தான் பார்த்த அந்த நாஸி வீடியோக்கள் மற்றும் பிற அதிவன்முறை காட்சிகளே நினைவுக்கு வந்து கிட்டத்தட்ட மூச்சே நின்றுவிடும் அளவுக்கு மூச்சு திணறல் வாந்தி அதன்பின் மயக்கம் என்றாகிப்போகிறது.
           க்ளைமாக்ஸில் அதே பீத்தோவன் இசை ஒலிக்கிறது.ஆனால் இந்த முறை வாந்தியோ மயக்கமோ மூச்சுதிணறலோ ஏற்படவில்லை.அதற்கு மாறாக அவன் முன்பு உணர்ந்து இன்பத்தின் உச்ச நிலையில் பெண்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை அவன் மனக்கண் முன்பு தோன்றுகிறது.இந்த மாறுதலுக்கு காரணம் எதிர்கட்சிகள் மருத்துவர் உதவியால் ஏதேனும்  memory Reversal பாணி அறுவை சிகிச்சை செய்தனரா அல்லது அலெக்ஸ் மேல்மாடியில் இருந்து விழுந்த அதிர்ச்சியில் லுடோவிக்கோ டெக்னிக் டம்மியாகி போனதா என்பது நமக்கு சொல்லப்படுவதில்லை.ஆனால் ஒன்றை நாம் உணர்கிறோம்.இந்த டெக்னிக்கால் நிரந்தரமாக ஒருவரை குற்றம் செய்யாமல் தடுத்துவிட  முடியாது என்பதுதான் அது.
                                           

          நம் சமூகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போவதை நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்கும்போதோ/டிவியில் செய்திகள் பார்க்கும்போதோ  உணர்திருக்கலாம்.
எதிர்கட்சி ஆளும்கட்சியை விமர்சிக்க ஒரு வருடத்தின் குற்ற எண்ணிக்கையை பட்டியலிட்டு தாங்கள் ஆட்சியில் இருந்தபோது இருந்த குற்ற எண்ணிக்கையை காட்டிலும் இவ்வளவு விழுக்காடு உயர்ந்துள்ளது அதனால் மக்களுக்கு பாதுகாப்பில்லை... அது... இது... என அளப்பார்கள்.
                                         
        ஆனால் பெருகி வரும் குற்றங்கள் அனைத்தயும் ஒரு அரசு தவிர்த்துவிட/குறைத்துவிட முடியுமா? என்றால் இல்லை என்ற பதில்தான் நிதர்சன உண்மையான பதிலாக இருக்கமுடியும்.
சில குற்றங்களை அரசு தடுப்பது அரசின்  கடமையாக  உள்ளது.உதாரணமாக தீவிரவாதிகள் தாக்குதல் ,வெடிகுண்டு வைத்தல்,ஒரு அரசியல்/சமூக பிரபலத்தை கொலை செய்ய நடத்தப்படும் முயற்சி போன்றவை தவிர்க்க கூடியது.தவிர்க்க வேண்டியது அரசின் கடமையும் கூட..ஆனால் சில குற்றங்களை அடிப்படை சமூக புரிதல்கள் மீதான மாற்றம் நிகழும்வரை தவிர்க்கவோ குறைக்கவோ முடியாது.
உதாரணமாக குடிக்க காசு தர மறுக்கும் தாயை மகன் வெட்டி கொல்லுதல்/அல்லது கணவன் மனைவியை கொலை செய்தல்,கள்ளக்காதல் கொலைகள் etc..etc., போன்றவைகளை எல்லாம் அரசு தடுக்க முடியாது.ஆனால் தடுப்பதற்கான சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் சிலவற்றை செய்யலாம்.
                                       அப்படி ஒரு மனிதனின் குற்றம் செய்யும் எண்ணத்தை/மனோபாவத்தை முற்றிலுமாக அழித்தல் மூலம் குற்றம் என்பதே நிகழாது என நம்பும் ஒரு அரசு Ludovico Technique என்னும் தொழில்நுட்பத்தை குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது பரிசோதனை செய்துபார்த்து அதில் வெற்றியும் கண்டாகி விட்டோம் என்றுவேறு அலம்பல் செய்கிறது.எதிர்கட்சி இந்த எண்ணமாற்றங்கள்  செய்யும் தொழில்நுட்பம் மனித உரிமைக்கு எதிரானது.மேலும் ஒருகட்சி சர்வாதிகார  ஆட்சி நடக்கும்  (Totalitarian)சமூகத்தை நோக்கியே இது நம்மை இட்டு செல்லும் என பல எதிர்ப்புகள் கிளம்புகிறது.
                            
                                             இந்த இடத்தில் நாம் ஒரு நாவலை நினைத்துப்பார்க்க வேண்டும்.George Orwell எழுதிய 1984 என்னும் நாவல்தான் அது.இந்த நாவல் பற்றி அடியேன் ஏற்கெனவே  அப்போதிருந்த ஸ்டாலினிய சோவியத் யூனியன் பற்றிய நாவல் என ஒரு சிறு வட்டத்திற்குள் இதை அடைத்துவிட முடியாது.அப்போது இரண்டாம் உலகப்போர் காரணமாக பொருளாதார சேதாரம் அடைந்திருந்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்க பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.இப்போது கூட அமெரிக்கா உலகின் அனைத்து இணைய பயன்பாட்டு தகவல்ககளியும் கண்காணிக்கிறது என்ற உண்மையை உலகிற்கு தெரிவித்த எட்வர்ட் ஸ்னோடேனை நாடு நாடாக துரத்தி அடித்து எப்படியாவது உள்ளே தள்ளிவிட அமெரிக்கா முயற்சிப்பதை நாம் அறிவோம்.இதெல்லாம் நமக்கு உணர்த்துவது ஒன்றையே..அமெரிக்காவும் கிட்டத்தட்ட எதிர்ப்பில்லாத/இடைவிடாத கண்காணிப்பை மேற்கொள்ள விரும்பும் ஒரு அரசு நீடிப்பதையே விரும்புகிறது.அத்தகைய முயற்சி நோக்கி செல்லும் போது தடைகற்களாக இருப்பவர்களை சுவடில்லாமல் செய்ய பார்க்கிறது.
              1984 நாவலில் கூட வின்ஸ்டன் ஸ்மித் எனும் அரசு ஊழியன் totalitarian ஆட்சிக்கெதிராக முயல்வதை கண்டுகொள்ளும் அரசு அவனை ஒரு சிறை போன்ற இடத்தில் அடைத்துவைத்து சில வழிமுறைகள் மூலம்  அவன் மனதின் அடிஆழம் வரை ஊடுருவி செல்கிறது.அந்த அடிஆழத்தில் உள்ள அரசுக்கெதிரான ஒரு சிறு கருத்து எண்ணம் கூட மிச்சம் இல்லாத வரை ஸ்மித்தை டார்ச்சர்(உடல் ரீதியாக மட்டுமல்ல) செய்து அழித்துவிடுகிறது.அதன்பின் அவன் கிட்டத்தட்ட ஒரு நடைபிணம் போலத்தான் இருக்க வேண்டும்.அரசுக்கெதிராக கலகம் செய்ய நினைக்ககூட திராணியற்ற ஒரு மனிதனாக அவன் இருப்பதாக அந்த நாவல் முடியும்.
                         

             கிட்டத்தட்ட அதேபோலத்தான் இந்த Ludovico Technique ம்.(இந்த நாவலை எழுதிய Anthony Burgess 1984 நாவலின் பாதிப்பால் 1985 என்ற நாவல் கூட எழுதியுள்ளார்.).நான் மேற்சொன்ன அரசால் தடுக்க முடியாத குற்றங்கள் நிகழ்வதற்கு மிக முக்கிய காரணம் நொடி நேர உணர்ச்சிவயப்படுதல்.அந்த நொடியில் உணர்ச்சியின் வேகத்தில் எதிராளியை கொலை செய்தல்.காரணம் ஒவ்வொருவர் மனத்திலும் வன்முறை காமம் குரோதம் போன்றவை கிட்டத்தட்ட மனிதனின் இயல்பாகவே காலம் காலமாக  தொடர்ந்து வருகிறது.இந்த எண்ணங்களின் விழுக்காடு ஆளுக்காள் மாறுபடலாமே ஒழிய இவை அனைத்தும் நிச்சயம் அனைவர் மனிதலும் சிறிதளவாவது இருக்கும்.இந்த டெக்னிக் என்பது ஒருவன் எந்த வகையில் குற்றம் செய்தானோ அந்த குற்றம் செய்ய அவனை தூண்டியது எதுவோ அந்த விஷயமே அவனுக்கு வெறுத்துபோகும்படி செய்தல்.அலெக்ஸ் விவகாரத்தில்  வன்முறை என்பதே அவனுக்கு வெறுப்பூட்டுவதாக மயக்கம் வரசெய்வதாக மாற்றப்படுகிறான்.
                               
கண்களை இமைக்கவிடாமல் வன்முறை காட்சிகளை பார்க்க செய்யும் லுடோவிக்கோ டெக்னிக்

                    பரபரப்பான சமூக தொடர்பை அறுத்தெறிந்து Spring summer fall winter and spring படத்தில் ஒரு புத்த துறவியின் சீடனாக கிம் கி டுக் கதாபாத்திரம் இருக்கும்போது கூட அவனின் மனித இயல்புகள் மேலோங்கி ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான்.பிறகு  தனது மனைவி வேறொருவனுடன் உறவு வைத்திருந்தது தெரிந்து அவளை கொன்றுவிடுகிறான்.எனவே எந்த சூழலில் சமூக தொடர்பற்று இருந்தாலும் இந்த அடிப்படை மனித இயல்பான காமம் குரோதம் வன்முறை போன்றவைகளை முழுமையாக அழித்தல் சாத்தியமற்றது(One flew over cuckoos nest போல Lobotomy செய்யாதவரை).
            இப்படி ஒரு வழிமுறையை அனைத்து குற்றவாளிகள் மீதும் செய்து பார்ப்பதற்கு முன் ஒருவரை இதற்கு உடன்படுத்தி அதன் முடிவுகளை வெளியுலகிற்கு propaganda செய்தால் அனைவரையும் இத்தகைய procedure க்கு உடன்படுத்துதல் சாத்தியமாகும் என அரசு நம்புகிறது.இந்த வழிமுறைக்கு உடன்படும் குற்றவாளி இரண்டு வாரத்தில் விடுவிக்கபடுவான்.அதன்பின் அவன் சாதாரண வாழ்வை வாழலாம் என சொல்வதை நம்பி அலெக்ஸ் டி லார்ஜ் இதற்கு வாலண்டியராக உடன்படுகிறான்.
                        (Alexander The large என்பதை பகடியாக Alexander De Large என வைத்தது டிபிகல் குப்ரிக் ஸ்டைல்.இதேபோல் முன்னர் வெளியான Dr.Strange love படத்தில் Jack The ripper என்ற பெயரை Jack.D.Ripper என்று வைத்திருப்பார்.)
தல.....

        இதற்கு சிறையில் ஆன்மீக வகுப்புகள் எடுக்கும் ஒருவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்.நல்லது கெட்டது என்ற Choice இல்லாமல் ஒருவரை செய்துவிடுவது நற்பண்புகளுக்கே எதிரானது.இத்தகைய மாற்றப்பட்ட "நல்லவர்களால்" சமூகத்துக்கு பெருமை சேராது என்கிறார்.ஆனால் அவரது பேச்சு காற்றில் கரைகிறது.

                          
அடியேனுக்கு பிடித்த காட்சி..அட்டகாசமான ஸ்லோமோஷன்  ஒளிப்பதிவில் பின்னி இருப்பார்கள்

 சில முக்கிய குறியீடுகள் பற்றிய எனது சிறு புரிதல்:


  •  அந்த அதிகமான பூனைகளுடன் வாழும் பெண்மணி(அலெக்ஸ் இவளை கொலை செய்வதால்தான் சிறைக்கு செல்கிறான்)யின் ரசனை கிட்டத்தட்ட அலெக்சின் ரசனையுடன் ஒத்துபோவதாகவே உள்ளது.இதற்கு ஆதாரமாக அந்த பெண்மணி தனது வீட்டு சுவற்றில் மாட்டி இருக்கும் காமம்/உடல் சார்ந்த படங்கள்.இதே போன்ற படங்களைத்தான் அலெக்சும் தனது வீட்டு அறையில் மாட்டி வைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.இதை  ஒருவகையான interpretation செய்யலாம்.அதற்கு முன் அந்த முதல் காட்சிக்கான விளக்கத்தை பார்த்துவிடுவது நல்லது.
  •  முதல் காட்சியில் காட்டப்படுவது என்ன?அலெக்சின் கண்களில் இருந்து கேமரா பின்னே நோக்கி செல்கிறது.அப்படி செல்ல செல்ல அந்த அறையின் பரிணாமங்களை புரிந்து கொள்ளலாம்.நிர்வாணமாக பல பெண் சிலைகள் பல்வேறு காமம் சார்ந்த போஸ்களில் ஆங்காங்கே இருக்கிறது.அது ஒரு milk bar என அடையாளம் காட்டபடுகிறது.ஆனால் அங்கு விற்கப்படுவது எந்த வகையான பால் என்பதை மறைமுகமாக சொல்கிறார்கள்.Milk plus என்று சொல்லபடுகிறது.அது ஒருவகையான காம வெறியை  தூண்டும் ஒருவித போதை வஸ்துவாகத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இப்போது இதை விளக்க வேறொரு விஷயத்தை விளக்கியாக வேண்டி உள்ளது.
  • ஏன் அங்கு போதையூட்டகூடிய பால் விற்க்கபடுகிறது?அரசு அதை தடுக்கவில்லையா?என்ற கேள்வி எழலாம்.ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி தனது ஆட்சிக்கு எந்தவித ஊறும் விளைந்துவிடக்கூடாது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதை நாம் அறிவோம்.அதுபோல தனது குடிமக்களை ஏதேனும் ஒருவித போதையிலேயே (குடி மட்டுமல்ல ..காமம்,வன்முறை,மதம்,சாதி..etc..etc.,)தொடர்ந்து இருக்க செய்துவிட்டால் தனது தவறுகள் கண்டுகொள்ளப்படாது என்பதை நம்புகிறது.அதன் விளைவாகவே அரசு இந்த போதை/காம வெறியை ஊட்டக்கூடிய வஸ்துவை விற்பதாக எடுத்து கொள்ளலாம்.
  • இப்போது சமூகம் முழுவதும் காமவெறியை தூண்டும்  மில்க் ப்ளஸ் புழக்கத்தில் உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவே அந்த பூனைகளை வைத்திருக்கும் பெண்மணியின் காமம் சார்ந்த ரசனைக்கும் அலெக்சின் அதே வகையான ரசனைக்கும் ஒத்துபோவதை நாம் உணரலாம்(முதல் புல்லட்டிர்கான புரிதலாக இதை எடுத்து கொள்ளலாம்).இதே போல அலெக்ஸ் ஹாஸ்பிடலில்  கோமாவில் இருந்து மீண்டு முனகும் பொது மிக நீண்ட நேரம் கழித்தே நர்ஸ் அவனை கவனிக்க வருகிறார்.காரணம் நர்ஸும் டாக்டரும் உடலுறவு செய்து கொண்டிருப்பதாக காட்டுவதையும் நாம் இங்கே சேர்த்து கொள்ளலாம்.
  • மேலும் அந்த பூனை பெண்மணி ஒரு போர்ஸலீன்  ஆண் குறி சிலையை வைத்துள்ளார்.அதே போல அலெக்ஸ் தனது வலது கண்ணில் பெண்கள் அணியும் Fake eyelashes அணிகிறான்.அதாவது காம எண்ணங்கள் அதிகமாக தூண்டப்பட்ட ஒரு சமூகமாக அது இருப்பதால் எதிர் பாலினத்தின் மீதான ஈடுபாட்டையே அலெக்ஸ் ஐ லேஷஸ் மூலமும் அந்த பெண்மணி ஆண் குறி சிலை மூலமும் காட்டுவதாக புரிந்து கொள்ளலாம்.

                                                   

      
  • அந்த எழுத்தாளர் தனது மனைவி இறந்த பின்னர் தனது பாதுகாப்புக்காக ஒரு பாடிகார்டை வைத்துகொள்கிறார்.எழுத்தாளர் தனது மனைவி அலெக்ஸ் மற்றும் குழுவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அந்த அதிர்ச்சி காரணமாக கால்கள் செயலிழந்து போய் வீல் சேரிலேயே நடமாடுகிறார்.அந்த வீல் சேரை அலேக்காக தூக்கி வேறொரு இடத்தில் அவரது பாடிகார்ட் வைக்கிறார்.அவ்வளவு வலுவானவராக அவர் உள்ளார்.ஆனால் ஏன் அவ்வளவு வலுவான கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட அவர் ஒரு சோடாபுட்டி கண்ணாடி போட்டிருப்பதாக காட்டியுள்ளார் குப்ரிக்? அவர் படிப்பில் சிறந்தவராக இருந்தும் எந்தவித வேலையும் கிடைக்காததால்(அப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் தான் இந்த முழு கதையும் நடப்பதாக காட்டபடுகிறது) தனது உடலை பராமரித்து பிழைப்புக்காக அடியாள் வேலை செய்கிறார் என்பதாக எடுத்துகொள்ளலாம்.
  • இந்த கதையின் பின்னணி நடக்கும் சமூகம் கம்யூனிச சோவியத் யூனியனை குறிக்கிறதா? என்ற கேள்விக்கு குப்ரிக் சொன்ன பதில் இல்லை..வலது இடது இரண்டிற்கும் வேறுபாடு இல்லை.இடதுசாரி எழுத்தாளர் அலெக்சை ரூமில் பூட்டி அதிகபட்ச ஒலியில் பீத்தோவனை ஒலிக்க வைத்து சித்ரவதை செய்து இன்புறுகிறார்.வலது சாரி ஆளும் அரசு அதிவன்முறை காட்சிகளை வலுகட்டாயமாக அலெக்சை பார்க்க செய்து அதன்மூலம் அவன் சித்ரவதைக்கு உள்ளாவதை வேடிக்கை பார்க்கிறது.இதில் இரண்டிற்கும் வேறுபாடு எங்கே உள்ளது?
  •  அந்த எழுத்தாளர் கதாபாத்திரம்(நடிகரை சொல்லவில்லை..நிஜத்தில் சொல்கிறேன்) Anthony Burgess தான்.அவரும் அவர் மனைவியும் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு வன்முறை கும்பல் அவளை சீரழிக்கிறது.அந்த அதிர்ச்சியில் இருந்து மீள ஆண்டனியின் மனைவி குடிபழகத்துக்கு அடிமையாகி கல்லீரல் செயலிழந்து இறந்து போகிறார்.அந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பையே ஆண்டனி நாவலாக எழுதினார்.
  • Clockwork Orange என்பதை எப்படி புரிந்து கொளவது??   Clockwork(சேர்த்தே சொல்லவேண்டும்) என்பது குறிப்பிட்ட செயல்களை கட்டளைகளை திரும்ப திரும்ப சலிப்பற்று எதிர் கேள்வி கேட்காமல் செய்வதை குறிக்கும்.அதாவது ஒரு எந்திரம்...ஏன் ஒரு கடிகாரம் என்றுகூட எடுத்துகொள்ளலாம்.கடிகாரம் தினம் தினம் ஒரே மாதிரியாகத்தான் நேரம் காட்டுகிறது.எனக்கு போர் அடிக்குது நான் ஓட மாட்டேன் என்று சொல்வதில்லை.Orange என்பது ஒரு உயிரி பொருளை/உயிரினத்தை(அதாவது மனிதனை)குறிக்கும். Clockwork Orange என்பது ஒரு உயிருள்ள மனிதனை எந்திரம் போல ஆக்குவது அதன் மூலம் சமூக குற்றங்களை இல்லாமல் செய்வது என்பதை குறிக்கும்.

Monday 1 April 2013

எலங்கையை கண்டித்து தமிழ் நடிகர்கள் உண்ணாவிரதம் (ஒரு கற்பனை)

  இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே..நகைச்சுவைக்காகவே கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.எந்த மனிதரையோ, வாழும் உயிரினங்களையோ, ஹிக்ஸ் போஸான்களையோ  தனிப்பட்ட விதத்தில்  புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல.
************************************************************************************

கஜீத் வருகிறார்.மேடை ஏறுகிறார்.அப்போது ககாநதி பங்கர் வந்து கல நீ ஆடு கல என்கிறார்
கவுண்டர்: டேய் கிட்டத்தட்ட ஆறடி ஒசரத்தில் ஒரு மனுசன் நிக்குறாரு..நீ என்னடான்னா நக்கலா அவர ஆடுன்னு சொல்ற..மாத்தி சொல்டா
ககாநதி டெரர் ஆகி  : கல நீ மனுசன் கல
கவுண்டர்: இது...
 கஜீத் : அய்யா மெரட்றாங்கய்யா...
கவுண்டர்: அண்ணா  ஆட்சி மாறி ரெண்டு வருஷம் ஆகுதுங்ணா ..
கஜீத் : அண்ணே சாரிண்ணே...போன தடவ ஒரு டமில் டீச்சர்கிட்ட எளுதி வாங்கி வந்ததை அப்படியே படிச்சிட்டேன்..

(திருத்திக்கொண்டு பேசுகிறார்)
 அம்மா மெரட்றாங்கம்மா As I am suffering from fever அப்படின்னு லெட்டர் எழுதி கொடுத்தாலும்  மெரட்றாங்கம்மா.எனக்கு யாரை பற்றியும் கவலை இல்லைம்மா...என்னோட லட்சியமே  ஒரு டூபர் ஷ்டார் நாக்காலி வாங்கணும்..அவ்வளவுதான்.
 கவுண்டர்: யப்பா யாருப்பா அங்க?அண்ணனுக்கு ஒரு டூப்பர் ஸ்டார் நாற்காலி பார்சல் பண்ணுங்க அப்புறமாவது படங்களில் நடையா நடப்பதை நிறுத்துறாரான்னு பார்ப்போம்.
 கஜீத்: அண்ணே கிண்டல் பண்ணாதீங்கண்ணே
கவுண்டர்: சரி சுண்டல் பண்ணிடுவோம்..என சொல்ல கோதாரவி வந்து முறைத்துவிட்டு போகிறார்.
கஜீத்:(திடீரென்று பேட்டி கொடுப்பதன் நினைவில்  இங்குலீசில் பேசுகிறார்) ஹியர் ஆப்டர் சிக்ஸ் மந்த்ஸ் ரேஸ். சிக்ஸ் மந்த்ஸ் ஷூட்டிங்...ஐ ஹாவ் ஸ்டார்டட் எ வெப்சைட் இட்ஸ் கால்ட் ப்ளையிங் காடை..இட் வில் பி அப்டேட்டட் எவ்ரி ஹவர்.
கவுண்டர்: என்ன பேசுராருன்னே புரியல..யப்பா யாருன்னா பக்கத்துல நின்னு மொழிபெயர்ப்பு செய்ங்க
கஜீத்: அண்ணே பல தவுசண்ட்ஸ்  ஸ்பென்ட் பண்ணி கபிடெக்ஸ் கோர்ஸ் முடிச்சிருக்கேன்.எங்கையாவது அதை பில்டப்பா காட்டாட்டி எப்டிண்ணே?
கவுண்டர்: அது சரிங்ண்ணா நீங் தமிழே ஒழுங்கா பேசாம பல படங்களில் திண்டாடுறீங்களே? தமிழ் கோச்சிங் போய் அதை ஒழுங்கா ஏன் கத்துக்கல?
கஜீத்: அண்ணே கமிழ் நாட்டு பீப்பிள்சே டமில் பேசுறதில்ல..தென் வொய் ஆர் யூ ஆஸ்கிங் மீ?டமில் தப்பா பேசுனா புத்திசாலின்னு சொல்வாங்க. இங்க்லீஷ் தப்பா பேசுனா சிரிப்பாங்கண்ணே.
கவுண்டர்: ரொம்ப வெவரமாத்தான் பேசுறாரு...ஹ்ம்ம்...சரி நீங்க கண்டின்யூ பண்ணுங்க..
கஜீத்: இத்துடன் ஐ கம்ப்ளீட் மை ஸ்பீச்.தாங்க்ஸ்.
கவுண்டர்: சரி சரி பேசிட்டீங்க இல்ல?அடுத்தது யாருப்பா?
*********************************************************************************
 நடுவில் கசன்னா பினேகா வந்து  "உண்ணாவிரத போராட்டத்தின் இந்த பகுதியை வழங்குவோர் குரங்கு மார்க் லுங்கிகள்" அணிந்தால் சுகம் தருமே தினம்.....டிங் டிங் டிங்....என்று சொல்லிவிட்டு போகிறார்கள்.
கவுண்டர்: ஐயோ பாவம் யார் பெத்த புள்ளைங்களோ இப்படி விளம்பர உலகுக்கே ஒட்டு மொத்தமா தங்களை நேர்ந்து விட்டுட்டு சுத்துதுங்க.சரி அடுத்து யாருப்பா?
**********************************************************************************

கஜினிகாந்த் வருகிறார்....உய்..உய்...உய்...விசில் சத்தம் வானை பிளக்கிறது.கஜினி கையை தூக்கி வணக்கம் சொல்கிறார்.
கவுண்டர்: அட என்னப்பா நீ... கைய வேற கால வேற தனி தனியா தூக்கிட்டு இருப்பியா?
கஜினி : இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை தர மாட்டாங்கன்னு சொன்னா....(நீண்ண்ண்ட இடைவெளி விடுகிறார்)
கவுண்டர்: சொன்னா என்ன? அதான் சொல்லிகிட்டே இருக்காங்களே?
(கோதா ரவி சும்மா இருக்கும்படி சைகை செய்கிறார்)
கஜினி பேசாமல்  திடீரென்று ஏதோ ஒரு வெற்று வெளியை தொடர்ந்து பார்த்துகொண்டிருக்கிறார்.
கவுண்டர்: இவுரு என்ன ராம்கோபால் வர்மா படத்துல வர்ற  சிறுமி பேயை பாத்தா மாதிரி எங்கையோ பாக்குறாரு.அண்ணா பேசுங்க்ணா
கஜினி: ஆ!....எங்க விட்டேன்?ஆ! சம உரிமை தரமாட்டோம்னு சொன்னா..ஒர்ரே நாள்ல....நம்ம ராணுவம் அவுங்கள விரட்டி அடிக்கும்... அடிக்கணும்
கவுண்டர்: அண்ணா இது உங்க பட திரைக்கதை விவாதம் இல்லீங்க்ணா
       கன்சூர் கலி கான் அருகில் வந்து  தலையை சாய்த்து முறைக்கிறார்..
கவுண்டர்: டேய் இந்த வியாதிக்கெல்லாம் மருந்து எப்பவோ கண்டு பிடிச்சிட்டாங்கைய்யா. இன்னும் தொங்கிப்போன தலையோட சுத்துற என கன்சூரை திருப்பி அனுப்பி வைக்கிறார்.

கவுண்டர்: அட  என்னடா இது... கோதாரவி  ஒரு பக்கம் கடுவன் பூனை மாதிரி..இன்னொரு பக்கம் கன்சூர்  வேற..இம்சையா போச்சு..
கஜினி: நான் வந்து .....(யோசிக்கிறார்)...நான் வந்து.....
கவுண்டர் : அதான் வந்துட்டீங்களே..
கஜினி: நா வந்து பம்பாய் போனா கன்னடன்னு சொல்றாங்க..பெங்களூரு போனா 'தமிழன் இங்க உனக்கென்ன வேலைன்னு சொல்றாங்க... தமிழ்நாட்டுக்கு வந்தா நீ கன்னடன் இங்க என்ன பண்ற?'ன்னு கேக்குறாங்க..இப்படி எல்லாருமே கேட்டா நா எங்க போவேன்?
கவுண்டர்: காஞ்ச் போன பூமியெல்லாம் வற்றாத நதிய பாத்து ஆறுதல்படும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா??..இஹு இஹு இஹு (அழுவது போல பாவ்லா செய்கிறார்)
கோதாரவி வந்து கவுண்டர் காதில் கிசுகிசுக்கிறார்...
யோவ் உனக்கு பேச நேரம் வரும்போது பேசலாம் அதுவரைக்கும் சும்மா இருய்யா
கவுண்டர்: என்னது என்ன பேச சொல்வீங்களா?இந்த டகால்டி வேலை எல்லாம் என்கிட்டே நடக்காது..நா பேசுனா எல்லார் வண்டவாளமும் தண்டவாளம் ஏறிடும்னு உங்களுக்கு தெரியாதா என்ன?
கோதாரவி: உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?கொஞ்சம் சும்மா இருய்யா
கஜினி : நா வந்து தலைப்புக்கு சம்மந்தம் இல்லாம பேசுறேன்னு நினைக்கிறேன்
கவுண்டர்: யப்பா உண்மைய ஒப்புகிட்டீங்களே..
கஜினி: கஞ்சை கத் என்ற அப்பாவியை ஆறு வருஷம் சிறையில் அடைக்க போறாங்கன்னு சொன்னா...அது வந்து...நா வந்து...எப்டி சொல்றது..அது ..சரியில்ல..தப்பு..கஞ்சை கத் வாய்ல வெரல வச்சாலும் கடிக்க தெரியாத புள்ள..அவர வந்து இப்டி உள்ள தள்றது நல்லதா இல்ல.
கவுண்டர்: அண்ணா அதுக்கும் இந்த கூட்டத்துக்கும் என்னங்கணா சம்மந்தம்?
கஜினி: கண்ணா சம்மந்தம் இல்லாம பேசி குட்டையை கொழப்புறதுதான் என் வழி குழப்பும் வழி.இஹா ஹா ஹா ...
கவுண்டர்: யப்பா ஒருவழியா வாயை தொறந்து உண்மையை ஒப்புகிட்டாரு.
**********************************************************************************
அடுத்து விமலஹாசன் வருகிறார்.அவர் வரும் போதே சிலர் குறுக்கே படுத்துக்கொண்டு பேச விடாமல் தடை செய்கிறார்கள்.அவர்களைத்தாண்டி லாங் ஜம்ப் செய்து  வந்து பேச துவங்குகிறார்
கவுண்டர்: பாவம் மனுசன நடக்க கூட விடாம அதுக்கும் தடை போடுறாங்க.
விமல: வெல் ஆ....பஸ்வரூபம் பற்றி பேச கூடாதுன்னு நெனச்சேன்.இங்க குறுக்கே படுத்துக்கொண்டு செய்த ஆர்ப்பாட்டம் மீண்டும் அதையே பேச வைக்கிறது.ஏற்கெனவே எனது ஹே பாம் படத்தை சிலபேர் வெட்டணும் ஓட்டணும்னு பாத்தாங்க.நடக்கல
கவுண்டர்: நீங்க அவங்களுக்கு எடிட்டர் வேலை கொடுத்திருந்தா சும்மா போய் இருந்திருப்பாங்க.
விமல்: வெல் ஆ....ஒரு லட்சம் தமிழர்களை கொன்றுள்ளது இலங்கை.இதே  அமெரிக்கா என்றால் குழந்தைகள் பெண்கள் ஆண்கள்.....
கவுண்டர்: அண்ணா என்ன சுந்தர ராமசாமி புத்தக தலைப்பெல்லாம் சொல்றீங்க?
விமல்: ஓ சாரி..குழந்தைகள் பெண்களை கொல்லாது  அமெரிக்க drones.
கவுண்டர்: சரி சரி அடிச்சி விடுங்க..உங்களுக்கும் ஹாலிவுட் சான்ஸ் நெருங்கி வரும் வேளையில் இப்படி எதையாவது சொன்னாதான் உண்டு 
விமல் : இலங்கை புத்த மதம் சார்ந்த நாடு.ஆர்னால்ட் ஷ்வாஸநெக்கர் சொன்னதைத்தான் கவுதம புத்தர் சொன்னார்.If you accept pain life becomes easier.so accept pain.
கவுண்டர்: இப்போ என்ன சொல்ல வரீங்க?
விமல : ஆகாஸம்பட்டு சேஷாச்சலமும் இதையேதான் சொல்றார்.
கவுண்டர்: என்ன பேரெல்லாம் ஒரே டகால்டியா இருக்கே..
விமல்: வெல்! ஆ! நான் என்ன சொன்னாலும் அதை புரியல திருத்தணும்; தடை போடணும்னு துடிப்பது தெரியுது.அவர்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
விமல்: வெல்! எனக்கு அமெரிக்க ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு.அதனால் இத்துடன் முடித்து கொள்கிறேன்
கவுண்டர்: யப்பா இவுரு பேசுனதுல இது ஒண்ணுதான் ஒழுங்கா புரியுது.
அடுத்து யாருப்பா?
*********************************************************************************
நடுவில் கூர்யா போதிகா வந்து மூக்கு  பொடி விளம்பரம் செய்துவிட்டு போகிறார்கள்.பன்ரைஸ்  மூக்கு பொடி தருமே சுகம்! அதுவே நிஜம்..
கவுண்டர்: ஆமா கசன்னா பினேகாக்கு போட்டியா இந்த ஜோடியா?அட்ரா அட்ரா...விளம்பர கம்பெனிக்கு அதிர்ஷ்டம்தான்.
**********************************************************************************
கரத் குமார் வருகிறார் பச்சை வேட்டி பச்சை சட்டை  அணிந்து தலையில் பன் ரைசர்ஸ் தொப்பி போட்டுகொண்டு 
கவுண்டர்: செம கில்லாடிதான் இவுரு..ஒரு பக்கம் ஆளும்கட்சிக்கு கொ.ப.செ வேலை. இன்னொரு பக்கம் பன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம்,மனைவி பன் டிவியில் தொடர்ந்து சீரியல் தயாரிப்பு.பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
கரத்குமார்: வாட்டாள் பாகராஜ்... வற்றல் பாகராஜ்
கவுண்டர்: அண்ணா அது காவேரி பிரச்சனையில் பேச வேண்டிய டயலாக்கு.அண்ணனுக்கு பசி போல..எலே அண்ணனுக்கு ஒரு புல் மீல்ஸ் பார்சல்.பேச வேண்டிய பேப்பரை மாற்றி எடுத்து வந்ததை உணரும் கரத் ஜூட் விடுகிறார்.
**********************************************************************************
 கசன்னா பினேகா மீண்டும் வந்து உண்ணாவிரதத்தின் இந்த பகுதியை ஸ்பான்சர் செய்வோர்  உடும்பு மார்க் கைக்குட்டைகள்.உச்ச வெயிலிலும் தருமே ஏசி சில்லிப்பு...உடும்பு மார்க் கைக்குட்டைகள்...டொன்டொன்டொய்ங்...
**********************************************************************************

அடுத்து குஜயகாந்த் கூட்டத்தை விலக்கி கொண்டு மேடை நோக்கி வருகிறார்.குறுக்கே சிலர் வழிவிடாமல் நிற்க அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார்.மேடை ஏறி பேச துவங்கும் வேளையில்...கீ...ஈ.ஈ...ஈ ...(மைக்கில் எக்கோ கேட்கிறது)
கண்கள் சிவக்க மேடையை விட்டு இரங்கி மைக்செட் பொறுப்பாளரை அடித்து வெளுக்கிறார்.
கவுண்டர்: யப்பா இந்த உண்ணாநிலை போராட்டம் கொஞ்சம் தொய்வடைந்தது போல இருந்த நேரத்தில் ஆக்ஷன் ப்ளாக் கொடுத்தது நல்லாதான் இருந்திச்சு.
**********************************************************************************
அடுத்து குஜை ...நெற்றி பொட்டில் ஒரு விரலை வைத்துகொண்டு தலையை சாய்த்துக்கொண்டு வருகிறார்.
கவுண்டர்: அண்ணா என்னங்கணா  தலைவலியா?
குஜை: "தலையும்" இல்ல வலியும் இல்லை
கவுண்டர்: பஞ்ச டயலாக் பேசிட்டாராம்மா...முடியலீங்ணா..

குஜை : ண்ணா! என்கட்சி ஜெயிக்கணும்..ஆ...என் தங்கச்சி ஜெயிக்கணும்னு சொல்றேன்
கவுண்டர்: எலெக்ஷன் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆகுது.இன்னும் சூலாயுதம் வசனத்தை பேசிகிட்டு அலையுறாரு.
குஜை : அண்ணா..ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா...
கவுண்டர்: எல்லாரையும் வாட்டி எடுக்காம விட மாட்டீரு..அப்படிதானே?
குஜை: அண்ணா எகத்தாளம் பேசாதீங்ணா
கவுண்டர்: சரி நீயே பேசு
குஜை: சத்தத்தின் சத்தமே என் சனியன் குடன்பிறப்பே...
கவுண்டர்: ஐயோ முடியலடா சாமீ
குஜை : என் கட்சி ஆட்சிக்கு வர அணிலாக உதவினோம்.
கவுண்டர்: அணிலா? பெருச்சாளியா? என போக போகத்தான் தெரியும்.
குஜை: அம்மா கோபாகிட்ட பேசிகிட்டிருந்தேன்.ஒரு கொழந்த என்கிட்டே வந்து விளையாடிச்சு.அதன் தாய் அந்த குழந்தைக்கு பேரு வெக்க சொன்னாங்கமா..
கவுண்டர்: காது குத்துன புள்ளைக்கு இன்னும் பேரு வெக்கலியாம்..இந்த டகால்டி வேலையெல்லாம் என்கிட்டே நடக்காது மகனே
குஜை மைன்ட் வாய்சில் :என்ன பேசுனாலும் ரவுண்ட் கட்டுறாரே...
குஜை: இப்படிதான் பண்ணா பசாரே உண்ணாநிலை போராட்டத்தில் கலந்துகிட்டேன்.
கவுண்டர்: ஆமா பார்லிமென்ட் எலெக்ஷன் வருதில்ல?எதையாவது செஞ்சாதானே..சரி வேணாம் நா ஏதாவது சொல்ல போய் ரகளையாகிடும்.
குஜை: போர் உச்சத்தில் இருந்தப்போ ராஜபக்சேவ கண்டிச்சு ஒரு லட்சம் தந்தி அனுப்பினார்கள்  என் ரசிகர்கள்.மத்திய அரசு மிரண்டது.
கவுண்டர்: போதும் நிறுத்திகிங்க.இனிமேலும் தந்தி அடிக்க பேப்பர் இல்லைன்னு சொல்லிட்டாங்களா?
குஜை: அண்ணா நக்கல் பண்ணாதீங்க்னா..இப்படிதான் எறா படத்தில் தமிழக் மீனவன் பத்தி ஒரு மெசேஜ் வச்சிருந்தேன்.படம்தான் ஓடாம போய்டுச்சு.
கவுண்டர்: மக்கள் உஷாராகிட்டாங்க...அதான்
குஜை: அடுத்து கலைவா படத்திலும் இப்படி ஒரு மெசேஜ் வைக்கலாமான்னு இயக்குனர் குஜை, பஸ்.ஏ.பந்த்ரசேகர் ஆகியோரிடம் விவாதித்து கொண்டிருந்தேன்.
கவுண்டர்: நடுவுல கரண்ட் போனதால இங்க வந்துட்டீங்களா?
ஆளை விடுங்க என எஸ்கேப் ஆகிறார் குஜை.
********************************************************************************
அடுத்து கார்யா வருகிறார்
கார்யா: அன்னா(என்னா) மச்சி அல்லாரும் நல்லா இர்கீங்களா?
கவுண்டர்: டேய் நீ என்ன பாஷை பேசுற?அத சொல்லு மொதல்ல..
கார்யா: அன்னா(என்னா) கவுண்டர்ணே நா டமில் தான் பேசுறேன்.
கவுண்டர்: நல்ல வேலை இதையெல்லாம் கேட்க பாரதி உயிரோட இல்ல
கார்யா: பாரதியா?அண்ணே யார்னேஅந்த பிகரு?என்னோட அடுத்த படத்தில் அந்த பிகரை வச்சு லிப்லாக் சீன் எடுத்துடலாம்
கவுண்டர்: ஒனக்கு சுட்டு போட்டாலும் நடிக்க வராது.தமிழும் பேச வரல.அதை பத்தியெல்லாம் ஒனக்கு கவலை இல்ல.எந்த பிகருக்கு லிப் லாக் கொடுக்கலாம்.யாரோட கடலை போடலாம் இதான் உனக்கு முக்கியம்.வெளங்கிடும் தமிழ் சினிமா
கார்யா: நாம பன் போற போரட்டம் ஒல்கத்தையே ஒலுக்கும்.
கவுண்டர்: அய்யய்யோ ரீல் அந்து போச்சுடா சாமீ ஆளை விடுங்க என தலை தெறிக்க  ஓடுகிறார்.

Friday 8 February 2013

வடக்குபட்டி பஸ் ஸ்டாப் D1

அய்யா ஷாஜி எச விமர்சனம் என்ற பெயரில் சாருவையே மிஞ்சும் விதத்தில் அவ்வப்போது உளறி கொட்டி கொண்டிருந்தாலும் சில சமயம் உருப்படியான பதிவை எழுதுகிறார்..அது எப்பன்னா இசை தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை எழுதும் போது மட்டும்..ஏற்கெனவே ஜன.2009 ஆம் ஆண்டில் ஸ்பீக்கர்கள் பற்றி ஒரு நல்ல பதிவை எழுதினர்..அதன் பின் இம்மாத உயிர்மையில் "ஒலியா இசையா" என்ற பெயரில் ஒரு பதிவு எழுதியுள்ளார்..அதில் அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம்தான் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது..இம்புட்டு நாளாக தெரியாம போய்டுச்சே என நினைத்தேன்..அது வினைல் ரெகார்ட் மூலம் கேட்கும் இசை ஆடியோ சிடியில் கேட்கும் தரத்தை விட உயர்ந்தது என்பதுதான்...இணையத்தில் இது குறித்து தேடிய போது அது உண்மைதான் என தெரிய வந்தது.ரிகார்ட் ப்ளேயரின் தரத்தில் ஆடியோ சிடியால் ஒலியை வழங்க முடியாது என்பது ஆச்சரியமான உண்மை 

http://jimmyred.hubpages.com/hub/Why-Vinyl-Records-Sound-Better-Than-CD

************************************************************************************
ஜெமோவை எங்கு பாத்தாலும் காறி துப்பனுமாம்...அய்யா சாரு சொல்றாரு..ஜெமோ தான் 1999 ஆண்டு முதல் எழுதிய அனைத்து பதிவுளையுமே இன்றும் அவரது தளத்தில் படிக்கலாம்..அவர் அதை டெலிட் செய்து விட்டு நான் எங்கே எப்போ எதை சொன்னேன்னு மழுப்பியதில்லை.ஆனா அய்யா சாரு இருக்காரே  யப்பா யப்பா...இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளையும் கிளீன் ஸ்லேட் (நன்றி: டார்க் நைட் ரைசஸ்) ஆக்கிவிட்டு நான் எங்கே அப்படி சொன்னேன் ஆதாரம் காட்டுன்னு கேக்குற கில்லாடியாச்சே...இப்போ யார் முகத்தில் நியாயமாக காறி துப்பனும்னு தனியா சொல்லனுமா என்ன?
 
**********************************************************************************
 
டில்லி பாலியல் கொடுமை பற்றி பல விவாதங்கள் நடந்தாலும் முக்கியமான ஒன்றை பற்றி பேசாமல் விட்டுடாங்களோ என எண்ண வைக்கும் விஷயம் இது...அந்த குற்றம் நடந்தது ஒரு தனியார் பேருந்தில்.டில்லி அரசு தானே பேருந்து சேவையை நடத்த வக்கற்று உள்ளதா?தனியாரை ஊக்குவிப்பதற்கு இந்த துறைதான் கிடைத்ததா?ஒரு பேருந்தை சொந்தமா வச்சிருந்தா பேருந்து சேவை என்ற பெயரில் ரேப் கிட்னாப் என்று எது வேண்டுமானாலும் செய்யும் வாய்ப்பை அது ஏற்படுத்தாதா?சரி காங்கிரசு தனியாரின் கைக்கூலி..பிற காங்கிரசு அல்லாத மாநில அரசுகள் கஷ்டமோ நஷ்டமோ என அரசு பேருந்து சேவையை நடத்தி வருவதற்கும் மறைமுக முட்டுக்கட்டை போடும் விதமாக டீசல் விலையை பதினோரு ரூபாய் உயர்த்தி இருக்கிறீர்கள்...அப்போ பிறரும் இது போல தனியார் பேருந்து சேவையை அனுமதித்து குற்றங்களை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதுதான் காங்கிரசு அரசின் விருப்பமா?
***********************************************************************************
நோ கமண்ட்ஸ் 


Monday 28 January 2013

1984(நாவல்)

                                             நாவலின் துவக்கமே இப்படி வின்ஸ்டன் ஸ்மித் என்பவன் விக்டரி மேன்ஷன் என்ற குடியிருப்பில் வசிக்கிறான்.மணி மதியம் ஒன்று என கடிகாரம் காட்டுகிறது தேதி பதினாலு ...தேதி உண்மையில் பதினாலுதானா? என்பதே அவனுக்கு சந்தேகமாக இருக்கிறது.ஏழாவது மாடியில் இருந்து கீழே இறங்குகிறான்..லிப்ட் என்றுமே உபயோகபடப்போவதில்லை என்று தெரிந்து ஆங்காங்கே இளைப்பாறி கொண்டு இறங்குகிறான்
அவன் இருப்பது ஒஷியானியா என்ற நாட்டில்
அங்கு அனைத்தும் பிக் பிரதர் தான்
என்கு பார்க்கினும் பிக் பிரதரின் போஸ்டர்கள் வானுயரத்துக்கு எந்த கோணத்தில் பார்த்தாலும் உங்களையே பார்ப்பது போல போஸ்டர்கள் நகரமெங்கும்.
BIG BROTHER IS WATCHING
YOU

கட்சியின்  கொள்கை
WAR IS PEACE
FREEDOM IS SLAVERY
IGNORANCE IS STRENGTH


அரசின் அதிகாரபூர்வ மொழி Newspeak(இது அவ்வப்போது மாற்றம் செய்யப்படும்.)
அரசில் நான்கு அமைச்சகம்
Ministry of Truth -Minitrue(Newspeak மொழியில்.இதில்தான் வின்ஸ்டன் வேலை செய்கிறான்)
Ministry of Plenty(Miniplenty)
Minstry of Love(Miniluv)
Minstry of Peace(Minipax)

மினிட்ரூவிற்கு செய்திகள் பொழுதுபோக்கு கல்வி கலை ஆகிய பொறுப்புகளை கவனிக்கும்
மினிப்லென்டி பொருளாதார விஷயங்கள்
மினிபேக்ஸ் போரை கவனிக்கும்
மினி லவ் சட்டம் ஒழுங்கு
இதென்னடா பேருக்கும் பொறுப்புக்கும் சம்மந்தம் இல்லைன்னு கேட்டா இது போல தான்அனைத்தும் ஓசியானியாவில் என்பதன் மூலம் பகடி செய்கிறார் ஆர்வெல்.
Thought police என்பவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என்ன பேசுகிறார்கள என்பதை டெலி ஸ்க்ரீன் அல்லது அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மைக்ரோபொன் வழியாகவோ கண்டுபிடித்து அவர்கள் அரசுக்கு எதிராகவோ பிக் பிரதருக்கு எதிராகவோ மூச்சு விட்டாலும் காலி.அதன் பின் அவர்கள் என்னானார்கள் என்பது யாருக்கும் தெரியாது.மறைந்து போன அந்த நபரின் ஒரு சிறு தடயமோ நினைவு பொருளோ கூட மீதம் இருக்காது.அவன் எங்கே போனான்?என யாரேனும் கேட்டால் அவனும் காலி.ஆதலால் ஒருவனை ஒரு நாளில் காண வில்லை எனில் அந்த நாளில் மட்டும் லேசாக அது பற்றி பேசிவிட்டு மக்கள் மறந்து விட வேண்டும் அல்லது மறந்துவிட்டது போல நடித்ததாக வேண்டும்.

அவன் வசித்த பிளாட்டில் சுவரின் நான்கு பக்கமும் டெலி ஸ்க்ரீன்..அதாவது அது எப்படின்னா அது டிவி போல காட்சிகளை கட்டும் அதே நேரம் நீங்கள் என்ன செய்தாலும் அதுவும் பதிவாகும்(வெப் கேம் போல).நீங்கள் எழுப்பும் சிறு ஒலி கூட அதில் பதிவாகும்.அது கண்காணிக்கப்படும்.
தினமும் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் எழுப்பப்பட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.வின்ஸ்டன் ஸ்மித் எழுந்து நிற்கிறான்..அம்மணமாக..காரணம் பைஜாமா ரேஷன்.தினம் காலையில் எழுந்த உடன் நுரையீரலையே பிழிந்து வெளியே எடுத்து விடும் அளவுக்கு இருமல்.
உடற்பயிற்சி சொல்லி கொடுப்பவர் எல்லாரும் குனிந்து தங்கள் பாதத்தை தொடுங்கள்..என்கிறார்.ஸ்மித்தால் முடியவில்லை....கமான் எனக்கு 39 வயது ஐம்பது வயதுக்குட்பட்ட அனைவரும் பாதத்தை தொடலாம்.ஆ!... அப்படிதான்..
பைஜாமா மட்டும் ரேஷன் அல்ல சக்கரை கிடையாது அதற்கு பதில் சேக்கரின்,காபி பொடி என்ற பெயரில் விக்டரி காப்பி என்ற ஒரு வஸ்து,சாக்லேட் ரேஷன்,என அனைத்துக்கும் கடுமையான ரேஷன்.
இதில் முக்கியமான விஷயம் Double think என்ற கோட்பாடு.
அது என்னவெனில் தேவைக்கேற்றார் போல பேச்சுகளை மாற்றி கொள்வது.மேலும் பெரியண்ணன் கொடுக்கும்குத்துமதிப்பான யூகங்கள் சரியாக இருந்தால் அவை பெரிதாக விளம்பரபடுத்தப்படும்(பெரியண்ணனின் தொலை நோக்குசிந்தனை பாரீர் என்பது போல) அதே அவரது யூகம் தவறாகவோ நேர்மாராகவோ போய்விட்டால் அவர் கொடுத்த யூகங்கள் அடங்கிய பத்திரிகை பத்திகள் தொலைக்காட்சி பேட்டிகள் வானொலி பேட்டிகள் அனைத்தும் சுவடில்லாமல் அழிக்கப்படும்.அதன்மூலம் பெரியண்ணன் என்ன சொல்கிறாரோ அதுதான் நடக்கும் என்ற ஒரு மாயை உண்டாக்கப்பட்டு அதுவே நீடிக்கவைக்க படுகிறது.


 Hate speech என்று  தினம் இரண்டு நிமிடங்கள் காட்சிகள் காண்பிக்கப்படும்.அதில் துரோகிகள் எதிரிகள் ஆகியோர் கொல்லப்படுதல் மற்றும் மிக முக்கியமாக Emmanuel Goldstein என்ற நபர் பற்றி காண்பிக்கப்படும்.இவர் யார்?.இரண்டு நிமிட வெறுப்பு பேச்சுகளில் தவறாமல் இவர் பற்றி காண்பிக்கப்படும்.இந்த கோல்ட்ஸ்டீன் என்பவர் புரட்சி ஏற்படும் நாளில் இருந்தே கட்சியில் முக்கிய பங்காற்றியவர்.ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெரியண்ணனுக்கு  நிகரான செல்வாக்குடன் திகழ்ந்து பிறகு பெரியண்ணனுக்கு  எதிராக குரல் எழுப்பியதால் மரண தண்டனை விதிக்கப்பட்டு கோல்ட்ச்டீன் தலைமறைவாகிறார்(அல்லது அப்படி இருப்பதாக சொல்லபடுகிறது.)ஆனாலும் அவ்வப்போது துண்டு பிரசுரங்கள் புத்தகங்கள் வாயிலாக மக்கள் இடையே பெரியண்ணனுக்கு  எதிராக கலக்கம் செய்ய தூண்டியதாக கோல்ட்ச்டீன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
கோல்ட்ச்டீன்  பேசுவதை கட்டும் போதே அனைவரும் நரம்பு புடைக்க வசை பாடுகிறார்கள்.அந்த கருப்பு முடி கொண்ட பெண்மணி ஒருபடி மேலே போய் புத்தகத்தை டெலிச்க்ரீன் மெல் வீசி எறிகிறார்,.
   கோல்ட்ஸ்டீனின் உருவம் விளக்கபடுகிறது.யூத முகம் உருண்டை கண்ணாடி ஆடு போன்ற தாடி மற்றும் ஆடு போன்ற குரல்...இந்த விளக்கம் யாரை குறிக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.Leon Trotsky தான் அவர்.

அந்த கருப்புமுடி கொண்ட பெண்ணை பார்க்கும் போதெல்லாம் ஸ்மித்துக்கு கடும் எரிச்சல் ஏற்படுகிறது.அவளை நிர்வாணமாக்கி உடலுறவு கொள்ளும்போது  climax இல்  கொன்று விட நினைக்கிறான்.
அப்புறம் ஒரு சமயத்தில் அவள் இவனிடம் ஒரு துண்டுசீட்டு கொடுக்க அதில் ஐ லவ் யூ என எழுதி இருக்கிறது.
பாழடைந்த ஒரு கடையின் மாடி பகுதியை ஸ்மித் வாடகைக்கு எடுக்கிறான்.அதில் அவனும் அவளும் குஷியாக இருக்கிறார்கள்.அவள் கடத்தப்பட்ட உண்மையான சர்க்ககரை காபி பொடி சாக்லேட்  என்று கொண்டு வந்து தருகிறாள்.இருவரும் அதை வாழ்நாளிலேயே காணாதது  போல அனைத்தையும்  சுவைக்கிரார்கள்.அந்த அறையில் டெலிச்க்ரீன் இல்லை என்ற குஷியில் நிம்மதியாக கிடைக்கும் நேரங்களில் வசிக்கிறார்கள்.
இப்படி செல்லும் போது திடீரென்றுஇருவரும் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லபடுகிரார்கள்.கடுமையான சித்ரவதை உடல் ரீதியாக மற்றும்மன ரீதியாக.இது முழுமையாக முடிந்த பின் அவர்கள் வெளியே விடப்படுகிறார்கள்.பெரியண்ணன் பற்றிய துளி எதிர் சிந்தனை கூட அவர்கள் மனதில் எழாவண்ணம் இருக்கிறது அந்த ட்ரீட்மென்ட்.அப்படி ஏதேனும் ஒரு கணத்தில் அவர்கள் மனதில் அப்படி எதிர் சிந்தனை எழுமானால் அவர்கள் தலையில் பாய தயாராக இருக்கிறது குண்டு.


குழந்தைகள்  அனைவரும் பெற்றோரை கண்காணிப்பது அவர்கள் கடமை என சிறு வயதில் இருந்தே பயிற்றுவித்தது கட்சி.(கல்வி என்பதே பெரியண்ணன் சொல்வதை படிப்பது மட்டுமே. அவர் என்ன சொல்கிறாரோ அதுவே வரலாறு அதுவே பூகோளம்.உலகம் தட்டை என்றோ உலகில் ஓசியானியா மட்டுமே இருக்கிறது என்றோ சொன்னால் கூட அதை நம்பித்தான் ஆக வேண்டும்)
பெற்றோர் யாரேனும் பெரியண்ணனுக்கு எதிராக பேசினாலோ அல்லது கட்சிக்கு எதிராக சதி செய்ய முயல்வதாகவோ அவர்கள் பிள்ளைகளுக்கு தெரிய வந்தால் பிள்ளைகள் தயங்காமல் தாட் போலீசிடம் பிடித்து கொடுத்து விடுவார்கள்.அப்பால அந்த பெற்றோர்கள் evaporate ஆகி விடுவர்.



சர்வாதிகாரத்தை எதிர்த்து புரட்சி அல்ல
சர்வாதிகாரத்தை அடையவே புரட்சி


 ஸ்மித் சித்ரவதை செய்யப்படும் நேரத்தில் ஒ ப்ரைன் பேசும்  சில முக்கிய வசனங்கள்::
பாஸிச  ஜெர்மனி மற்றும் கம்யூனிச சோவியத்தில் துரோகிகள் புல்லுருவிகள் ஆகியோர் சித்ரவதை செய்யபட்டோ அல்லது சுடபட்டோ கொல்லப்பட்டனர்.ஆனால் அவர்கள் இறந்து சில வருடங்களில்அவர்களது சமாதி ஒரு நினைவிடமாகவும் அவர்கள் அமரராகவும் ஏன் தலைவனாகவும் போற்றப்படுவதேன்?
ஏனெனில் அவர்கள் சாகும் கடைசி நொடி வரையில் தாங்கள் முரண்பட்ட கட்சி கொள்கைகளை மனதளவில் சிந்தனை அளவில் ஆத்மாவின் அடி ஆழத்தின் வரை எதிர்த்தே செத்திருக்கிறார்கள்.
அவர்களை சித்ரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் அனைத்தும் பொய் என பிற்காலங்களில் மக்களுக்கு தெரிந்துவிடுவதற்கு இதுவும் ஒரு காரணம்,.
அந்த தவறை நாங்கள் செய்ய மாட்டோம்.இறந்தவர்கள் எங்கள் கட்சிக்கு எதிராக வர அனுமதிக்க மாட்டோம்.அதனால் தான் நாங்கள பின்பற்றும் முறை வேறானது.உடல் ரீதியான சித்ரவதைகளை கூட சில மனிதர்கள் பொறுத்து கொண்டிருக்கிறார்கள்..ஆனால் எங்கள் வழிமுறை அனைவரையும் மனதின் ஆத்மாவின் அடி ஆழம வரை சலவை செய்து எங்கள் கொள்கைகளை நிரப்பிய பிறகே அவர்களை கொள்கிறோம்.இதனால் அவர்கள் இறந்த பின் ஒருவரும் சீண்ட மாட்டர்.

மனிதன்  என்பவன் தனியாக இயங்கும் போது தோல்விகளுக்கு ஆட்படுகிறான்...அதே அவன் கட்சி என்னும் அமைப்பில் ஒரு பகுதியாக இருக்கும்போது என்றுமே அவனுக்கு வெற்றி


வின்ஸ்டன் ஸ்மித் கேட்கிறான் : மனிதன் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே உலகம் இருந்ததே?
ஓ ப்ரையன் : இந்த உலகின் இருப்பே மனித மனத்தின் உணர்வில்தானே? மனிதன் இல்லாத போது உலகம் இருந்தா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை

இது சோவியத்தை மட்டும் குறிப்பதல்ல...இரண்டாம் உலக போரால் சீரழிந்து அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்த ரேஷன் முறை இங்கிலாந்து அமேரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இருந்தது.இவ்விருநாடுகளும் கூட இதே அளவு சீரழிந்து அழுக்கடைந்து இருந்தது.ஆர்வெல் இதை மறைமுகமாக குறிப்பிடுகிறார்.
மேலும் இரண்டாம் உலக போருக்கு பின்னர் உலக கட்டுப்பாடு காலம் காலமாக வைத்துகொண்டிருந்த இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்காவுக்கு மாறுகிறது..காரணம ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகள்.மேலும் பெரியண்ணன் மனப்பாங்கு என்ற சொல்லாடல் வந்ததே இந்த நாவலால்தான்.இப்படியாக செல்கிறது இந்த நாவல்.