Saturday 16 November 2013

சூர்யபார்வை (1999) மற்றும் Leon the professional(1994)

Leon The professional(1994) பார்க்க நேர்ந்தது.இதில் முரண் என்னவெனில் இந்த படத்தின் தமிழ் உல்டாவான அர்ஜுன் நடித்த சூரியபார்வை (1999) படத்தை ஒரு பிரதி என்று தெரியாமலேயே(அப்பெல்லாம் விக்கிபீடியா கிடையாதே) ஐந்து முறை பார்த்திருக்கிறேன்.நன்றாகவே இருந்தது.குறிப்பாக கவுண்டரின் காமெடி.வெளிநாட்டில் கம்ப்யூட்டர் படித்துவிட்டு இந்தியாவுக்கு சேவை செய்வதற்காக வந்து செந்திலின் சூழ்ச்சியால் வீரப்பன் போல காட்டுக்குள் ஒளிந்து வாழும் கேரக்டர்.விஷயம் அதுவல்ல...இந்த லியோனுக்கும் சூரிய பார்வைக்குமான வேறுபாடு/ஒற்றுமைகள் பற்றி...


               லயோன் படத்தை பொறுத்தளவில் உணர்ச்சிகள் அற்ற/உணர்சிகள் இல்லாதது போல வாழும் ஒரு ஹிட்மேன் மற்றும் தனது அன்பு தம்பியை இழந்த ஒரு சிறுமி.இவர்களுக்கு இடையேயான உறவு.தமிழ் படத்தை பொறுத்தளவில் நடலி போர்ட்மேன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர் போலவே தோன்றும்.அவரை ஒரு ஆடிப்பாடும் வழக்கமான ஹீரோயின் போலவே காட்டி இருப்பார்கள்(டூயட் மட்டும்தான் பாக்கி).மேலும் நம் தமிழ் சினிமாவில் பதிமூன்று வயது சிறுமிகள் எல்லாம் நாயகியாக பார்த்து(லிப் கிஸ் காட்சிகளில் எல்லாம் நடிக்க வைத்த ஓலக இயக்குனர்கள் உள்ள நிலையில்) பழகிவிட்டதால் இந்த படத்தில் இந்த சிறுமியின் கதாபாத்திரம் வித்தியாசமாக தெரியவில்லை ..

                ஆனால் லயோன் படத்தில் அந்த சிறுமியின் கதாபாத்திரம் மற்றும் அவருக்கும் லியோனுக்குமான உறவு/நட்பு என்பது கத்தி மேல் நடப்பது போல சொல்லப்பட்டுள்ளது.பதின்ம வயதினருக்கே உரிய  இனக்கவர்ச்சி (infatuation), அதை காதல் என்று நம்புதல், அதை லயோன் மறுத்தல் எல்லாம்(இது  லயோன்  படம் வந்த  சமயத்தில்  கடுமையான விமர்சனத்திற்கு  உள்ளானது) தமிழில் இல்லை என்றாலும்  படத்தின்  முடிவில்  அர்ஜுனும்  அந்த  சிறுமியும் சேர்ந்து  தப்பிப்பதாக  கேள்வியோடு  முடித்திருப்பார்கள்.காதலா?நட்பா?ஒருமாதிரி  தந்தை  உறவா? அதைப்பற்றி  தெளிவான  காட்சிகள்  தமிழில்  இல்லை.



ஆங்கிலத்தில்  லயோனுக்கு  பிளேஸ்பேக்  என்று  எதுவும்  இல்லை.ஆனால்  தமிழ்  பார்வையாளர்களுக்காக  இங்கே   அர்ஜுன்   உயிராக கருதும் செடிக்கு  ஒரு பிளேஸ்பேக்.அனாதையான அர்ஜுனை விஜயகுமார்-மஞ்சுளா தத்தெடுத்து வளர்க்க அதன் பின்னர் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறக்க "இனி இவன் எதுக்கு?" என்று பேசிகொண்டிருக்கும் காட்சியை பார்க்கும் சிறுவயது அர்ஜுன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.பின் பல ஆண்டுகள் கழித்து சிறையில் அவரும் விஜயகுமாரும் ஒரே செல்லில் இருக்க அப்போது அவர் "நான்தான் உங்கள் மகன்" என்று சொல்லாமல் புழுங்குகிறார்.பின் வி.குமார் மரணமடைய அவரது அஸ்தியை ஒரு பூந்தொட்டியில் நிரப்பி அதில் செடி வளர்ப்பதாக காட்சியமைப்பு இருக்கும்.
          அந்த சிறுமிக்கு சுட கற்றுகொடுக்கும் காட்சிகள்,லியோனும் சிறுமியும் சேர்ந்து வீடு வீடாக சென்று கொலை செய்யும் காட்சிகள் எல்லாம் தமிழில் இல்லை.அந்த காட்சிகள் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும் 

               முக்கியமாக  கவனிக்கவேண்டியது  லயோன் படத்தில்  ழான்  ரெனோவின்(Jean Reno)  உடல்மொழி  பேசும்  விதம்  ஆகியவற்றை  அப்படியே  அர்ஜுன்  தமிழில்  பிரதி  எடுத்திருப்பார்.ஆனால் வில்லனாக  வரும்  Gary Oldman ன்  சாயல்  துளியும்  இல்லாமல்  ரகுவரன்  தனது  தனித்துவமான  ஸ்டைலில்  அந்த  வில்லன்  கேரக்டரை  செய்திருப்பார்!அதான்  ரகுவரன்!


ராதாரவியும்  தனது  கேரக்டரில்அட்டகாசமாக  பொருந்தியிருப்பார்(வழக்கம்போல?)!
உறுத்தல் அந்த நாயகியாக நடித்த சிறுமியின் தேர்வு சரியில்லையோ என்று எண்ண வைக்கும்.லயோன் கடைசியில் மரணமடைவார்.ஆனால் தமிழில் அவர் அந்த சிறுமியோடு தப்பிப்பதாக காட்டி இருப்பார்கள்.இரண்டு படத்துக்கும் பொதுவாக என்ன  வேறுபாடு என்றால் ஆங்கிலப்படம் ஆழமாக/கத்திமேல் நடக்கும் விதத்தில் காட்சியமைப்பு இருக்கும்.அந்த படத்தை பார்த்தபின் சூரியபார்வை பார்த்தால் தட்டையான புரிதலோடு எடுக்கப்பட்டதாக தோன்றும்.

Friday 8 November 2013

விஜயகாந்த் படக்காட்சிகளை சுட்ட கமல்& அஜித் படங்கள்

இந்த பதிவை  இந்தாண்டின் முதல் பாதியிலேயே  எழுதிவிட நினைத்தேன்...வழக்கம்போல சோம்பேறித்தனம் அமுக்க இப்போதாவது எழுத முடிந்ததே என்று சின்ன ஆறுதல்.
முதலில் ஒரு விஜயகாந்த் படக்காட்சியை விளக்குகிறேன்.அதைப்படிக்கும்போதே அது எந்த படத்தில் வந்தது என்று தெரிந்துவிடும் 
                            >>விஜயகாந்த் கமலக்கண்ணன் என்ற பேரில் ஒரு கோவிலில் யானைப்பாகனாக வாழ்ந்து வருகிறார்....அவருடன் மணிவண்ணன் இருக்கிறார்..அவ்வப்போது விஜயகாந்த் எங்கோ காணாமல் போய்விடுகிறார்.எங்கே என்று தெரியவில்லை.சரி இது என்ன ரகசியம் என்று கண்டுபிடிக்க மணிவண்ணன் ஒரு நாள் விஜயகாந்தை ரகசியமாக பின் தொடர்கிறார்.அங்கே ஒரு இடத்தில் சென்று மணிவண்ணன் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்..காரணம் விஜயகாந்த் அங்கே ஒரு இஸ்லாமியர் போல தொழுகை செய்து கொண்டிருக்கிறார்.உடனே மணிவண்ணன் அங்கே சென்று "நீ யாருடா? உண்மையை சொல்லு" என்றவுடன் "நான் கமலகண்ணன் இல்லை கமாலுதீன்" என்றவுடன் அதிர்கிறார் மணிவண்ணன்..நீள்கிறது பிளேஷ்பேக்.

                            >> தான் ஒரு ஆணுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளதால் அதை நியாயப்படுத்த தன கணவன்(கமல்) விஸ்வநாத்துக்கும் அதே மாதிரி கள்ள உறவு ஏதேனும் இருந்தால் தன செய்கையை நியாயபடுத்தி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஒரு தனியார் துப்பறியும் நிபுணரை வைத்து கமலை கண்காணிக்க சொல்ல அவர் எங்கோ ஒரு மறைவுடன் சென்று இஸ்லாமிய முறைப்படி தொழுகை நடத்த ...சில காட்சிகளுக்கு பிறகு "நான்  விஸ்வநாத் இல்லை விஸாம் அஹமத் காஷ்மீரி" என்கிறார் ...பிறகு ப்ளேஷ்பேக்...ஒற்றுமை ஏதேனும் தெரிகிறதா?
முதல் படம் கள்ளழகர்(1999) இரண்டாம் படம் உங்களுக்கே தெரியும் விஸ்வரூபம்.
******************************************************************************
படம் துவங்கியவுடன் ஹீரோ வெடிகுண்டு வைத்து கொலை செய்தல்  அயன் பாக்சை வைத்து மிரட்டுதல் போன்ற விஷயங்களை செய்கிறார்..படம் பார்ப்பவர்கள் "இவர் வில்லனோ?" என்று நினைக்க  அவரை போலீஸ் கொண்டுபோய் சித்ரவதை செய்கிறது...அதெல்லாம் ஹீரோவை ஒன்றுமே   செய்யாத நிலையில் ப்ளேஷ்பேக்..... பிறகு பார்த்தால் ஹீரோவே ஒரு காவல்துறை அதிகாரி  சொல்லப்படுகிறது...இந்த காட்சி ஆரம்பம் பட காட்சி...நரசிம்மா (2001) என்ற படத்தையும்  பாருங்கள்..ஒற்றுமை தெரிகிறதா?