Saturday 9 August 2014

Safety Last(1923)- மரண சாகசம்

                                          படத்தை பற்றி சொல்வதற்கு முன் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.அவர்தான் பிரபல திரைப்பட விமர்சகர் மறைந்த Roger Ebert.இவரின் ஒரு விமர்சனத்தை வாசித்துகொண்டிருந்த போது அதில் silent film trio என்று மூவர் பெயரை குறிப்பிட்டிருந்தார்.
ரோஜர் எபர்ட்

                  அதுவரை எனக்கு மவுனப்படம் என்றாலே சாப்ளின்(ஆங்கில படங்களை பொறுத்தளவில்) மட்டும்தான் தெரியும்.மேற்சொன்ன trio வாக அவர் குறிப்பிட்டிருந்த மூன்று பெயர்கள் சாப்ளின்,Buster Keaton மற்றும்  Harold Lloyd. கீட்டோனின் The General படம் பற்றி ஐந்து வருடங்கள் முன்பு கேள்விபட்டிருந்தாலும் படத்தை பார்க்கவில்லை.சமீப காலத்தில் மீண்டும் கீட்டோன் பெயரை கேட்க நேர்ந்தது.காரணம் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் கீட்டோனின் Our Hospitality படத்தின் உல்டா என்பதாலேயே.சரி உல்டாவை பார்ப்பதை விட ஒரிஜினலை பார்ப்பதே மேல் என்று பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் அதை மனக்குறிப்பாக குறித்துக்கொண்டேன்.
                   மூன்றாவது பெயரான ஹரோல்ட் லாய்ட் பற்றி தேடி கொண்டிருந்த போது Safety Last படத்தின் போஸ்டரை இணையத்தால் கண்டபோது ஒரு சுவாரஸ்ய காட்சி நினைவுக்கு வந்தது.
அது விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐ.பி.எஸ் படத்தின் காட்சிதான். பெரிய கடிகாரம் ஒன்று பன்னிரண்டு மணி அடித்தால் குண்டு வெடிப்பது போல செட் செய்யப்பட்டிருக்கும்.இவர் அதில் ஏறி அந்த நிமிட முள்ளில் தொங்குவார்.அது பதினொன்று ஐம்பத்தைந்தில் இருந்து பதினொன்றரைக்கு சரியும்.அந்த காட்சியின் ஷூட்டிங்கை அப்போது தூர்தர்ஷனில் காட்டினார்கள்.டூப் போடாமல் நிஜமாகவே ஏறியதை கண்ட அந்த காட்சி Safety Last பட போஸ்டரால் மீண்டும் நினைவுக்கு வந்தது.ஆனால் S.L படத்தை பார்த்து வாசு இந்த காட்சியை சேதுபதி படத்தில் வைத்திருக்க மாட்டார்.S.L பட பாதிப்பில் பல்வேறு படங்களில் அதே போன்று நாயகன் கடிகார முள்ளில் தொங்கும் காட்சிகள் வந்துள்ளன.ஜாக்கி சானின் ப்ரோஜக்ட் ஏ படத்திலும் பிறகு 1991 ல் சில்வஸ்டர் ஸ்டால்லோன் நடித்த Oscar படத்திலும் வந்தது.அதை பார்த்து இயக்குனர் அதே போன்றதொரு காட்சியை வைத்துள்ளார்.பிறகு ஸ்கார்ஸீஸ் இயக்கிய மௌனப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் எடுத்த  Hugo படத்திலும் அப்படி ஒரு காட்சி உள்ளது உங்களுக்கு தெரிந்திருக்கும்.


                        இப்போது படத்தைப்பற்றி பார்ப்போம்.தான் வேலை செய்யும் துணிக்கடையின் விற்பனையை பெருக்க ஐடியா சொன்னால் ஆயிரம் டாலர்(1923 ல் அது எவ்வளவு மதிப்பு என்பதை நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்) என்கிறார் முதலாளி.நான் அதை செய்து காட்டுகிறேன் என்று தனது நண்பனை மனதில் வைத்து சொல்கிறார் ஹரோல்ட் .ஆனால் அந்த நண்பனை போலீஸ் தேடுகிறது(ஹரோல்ட் தனது போலீஸ் நண்பன் ஒருவனிடம் விளையாடுவதாக நினைத்துக்கொண்டு வேறொரு போலீஸ் அதிகாரியிடம் சேட்டை செய்ததன் விளைவு.நண்பனை அந்த அதிகாரி துரத்துகிறார்).அதனால் ஹரோல்டே பன்னிரண்டு மாடி கட்டிடத்தில் ஏறுவதாக படம்.

                      படத்தில் வரும் பல்வேறு நகைச்சுவை காட்சிகள் இன்றுவரை தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கிறது.உதாரணமாக வழுக்கை தலையை பார்த்து நாயகன் தலை சீவுவது பிற்காலத்தில் தலைவர் கவுண்டர் வகையறா காமெடியானது தெரிந்திருக்கும்.அவர் மட்டுமல்லாது பல்வேறு நபர்கள் இந்த மாதிரி காட்சியை பயன்படுத்திகொண்டிருக்கிறார்கள்.
                       மற்றொரு காட்சி துணிக்கடையில் துணி எடுத்துப்போடும் வேலை செய்யும் ஹரோல்ட் தனது காதலியிடம் தான்தான் முதலாளி என்று ஏமாற்றுவது கல்யாண பரிசு வகையறா.இப்படி பல்வேறு காட்சிகள் இன்றுவரை அதன் மூல காட்சியை எடுத்தவர் பெயர் தெரியாமல் பயன்படுத்திகொண்டிருக்கிறார்கள்.

              அந்த கட்டிடம் ஏறும் காட்சி படமாக்கப்பட்ட விதம் பற்றி பல்வேறு கருத்துக்கள் உலாவுவதை கண்டேன்.உதாரணமாக மலை உச்சியில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் ஹரோல்ட் ஏறுவது போல காட்டியதால் தரைமட்டத்தில் இருந்தாலும் உயரமானது போல தோன்றியது என்கிறார்கள்.இது அபத்தம்!தொலைவில் கீஈஈஈழே சாலை தெரிகிறது(ப்ளூ ரே பிரிண்டில் பார்த்ததால் இவைகளை தெளிவாக காண முடிகிறது).தவிர body double எனப்படும் டூப் போட்டதாக சொல்லப்படுவதும் அபத்தம்.கட்டிடம் ஏறும் காட்சியில் தெளிவாக அவர் முகத்தை  காண முடிகிறது.முகத்தில் க்ரீன் மேட் துணி போட்டு மூடி பிறகு கிராபிக்ஸில் இவர் முகத்தை பொருத்தும் தொழில்நுட்பம் எல்லாம் அப்போது வரல.அதனால் அவரேதான் அதில் நடித்துள்ளார்.        
                            பொதுவாகவே சாப்ளின் கீட்டோன் அல்லது பொதுவாக (நகைச்சுவை) மௌனப்படங்களில் நடிப்போர் டூப் போடாமலேயே கீழே விழவேண்டும்.விழுந்த வேகத்தில் எழுந்திருப்பது, ஓடும் ரயில்/பேருந்தில்ஏறுதல் போன்றவைகளை செய்திருப்பதை கண்கூடாக நாம் காணலாம்.

                          சாப்ளின் படங்களை விட அதிக வசூல் செய்தது ஹரோல்ட் லாய்ட் படங்களே.ஆனால் அவர், தான் எடுத்த பல படங்களை ரிலீஸ் செய்யாமலேயே புதுக்கரு கழியாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்த பிரிண்டுகள் ஒவ்வொன்றாக இப்போது வெளிவர தொடங்கியுள்ளன.சாப்ளின் கீட்டோன் அளவுக்கு ஹரோல்ட் லாய்ட் பிரபலமாகவில்லை என்பது சோகம்!