Saturday 3 October 2015

ஒரு ஓடை நதியாகிறது (1983)

                    காலம்  காலமாக  குழந்தைகள்  என்றாலே  நாம்  நமது  மனதில் சில  பிம்பங்களை  சுமந்துவருகிறோம்.
  • பொய்  சொல்ல  மாட்டார்கள்..
  • குழந்தையும்  தெய்வமும்  ஒன்னு(மனுசன  டார்ச்சர்  பண்றதுலையா  உதயா?-முனியாண்டி)
  • கள்ளம்  கபடமற்றவர்கள் 
  • உள்ளொன்று  வைத்து  புறமொன்று  பேசாதவர்கள் 
இப்படி  பலப்பல..நம் மனதில்  இருக்கும்  இந்த  முன்முடிவுகளை  குழந்தைகள்  மேல்  திணிக்கிறோம்.அல்லது  இரண்டையும்  ஒப்பிட்டு  பார்த்து  ஏமாற்றமடைகிறோம்.எரிச்சல்  அடைகிறோம்.அது அந்த  உறவில்  சரிசெய்ய முடியா  ஒரு விரிசலை  உண்டுபண்ணி  விடும்.
                    சமூகத்திலும்  சரி  சினிமாவிலும்  சரி  தந்தை  கேரக்டர்  பெரும்பாலும்  மகனால்  வெறுக்கப்படும்  ஒரு  சர்வாதிகாரி  போலத்தான்  பார்க்ப்படுகிறது/சித்தரிக்கப்படுகிறது.காரணம்  மேற்சொன்ன  அந்த  முன்முடிவுகள்!எவ்வித  எதிர்பார்ப்பும்  முன்முடிவுகளும் இல்லாமல்  குழந்தைகளை  அணுகுவதே  சிறந்தது.
                  இந்தப்படம்  கூட  ஒரு  சிறுவனின்  கணிக்க  முடியா  மன  ஓட்டத்தை  சொல்வதாகவே  உள்ளது.
                 பதினெட்டு  வயதானால்  மேஜர்  என்பது  சட்டவிதி.ஆனால்  அதற்குமுன்பே  ஏதோ  ஒரு  தருணத்தில்;  யாரோ  ஆற்றும்  எதிர்வினையில்;  ஏதோ  ஒரு  அனுபவத்தால் குழந்தைத்தனம்  விலகி பெரிய  மனுசத்தனம்  என்று  சொல்லமுடியாவிட்டாலும்  ஓரளவு maturity குழந்தைகளுக்கு  வந்துவிடும்.
                 இப்படத்தில்  அந்தத்தருணம்  மிக  அற்புதமாக  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.தந்தை  பெயர்  தெரியாது  வளரும்  சிறுவன்.அவனின்  தாய்  நோய்வாய்ப்பட்டு  இறந்துபோகிறார்.அவனை  எடுத்து வளர்ப்பது  யார்?என்ற  கேள்வி  வருகிறது.திருமணத்திற்கு  முன்பு    உணர்ச்சி  வேகத்தில் செய்த  செயலின்  விளைவு  இப்போது  சிறுவனாக  நிற்பதை  ரகுவரன்  பார்க்கிறார்.மனைவி  குழந்தை  என்று  செட்டிலாகிவிட்டார்.வேலை  கிடைத்ததேகூட  அந்த  ஏமாற்றப்பட்ட  பெண்ணின்  தந்தையின்  உதவியால்தான்.இவ்விரண்டு  விஷயமும்  அவரின் குற்ற  உணர்ச்சியை  நாளுக்கு  நாள்  அதிரிக்கரிக்கச்செய்கிறது.

               என்னவானாலும்  சரி  மகனை  தானே  வளர்ப்பது  என்று  முடிவெடுத்து  மனைவியிடம் தைரியமாக  சொல்லும்  அந்த  தருணத்தில்தான்  ஒட்டு  கேட்கும்  சிறுவன்  உளவியல்  ரீதியில் பெரியவனாகிறான்(அதைத்தான்  ஒரு  ஓடை  நதியாகிறது  என்று  டைட்டில்  வைத்திருக்கிறார்கள்).
                தான்  தந்தை  வீட்டில்  வளர்ந்தால் அவரது  மனைவிக்கு பெரிய  தர்மசங்கடத்தை  கொடுத்துவிடும்  என்று  வேறொரு  ஊருக்கு  கிளம்புகிறான்.பேருந்து  நிலையத்தில்  அவனை  கண்டுபிடிக்கும் ரகுவரனிடம்  "நான் ஒரு  நல்ல  நிலைக்கு  வந்தபின்  உங்களை  கண்டிப்பாக சந்திக்கிறேன்" என்று  சொல்லி  பெங்களூரு  செல்லும் பேருந்தில் தனியே  கண்ணீர்  மல்க  செல்வதாக  முடிகிறது.அவனுக்கு  தந்தையோடு  இருக்க  விருப்பம்தான்.ஆனால்  தாய்க்கும்  அவரது  குழந்தைக்கும்  இது  பிற்காலத்தில்  பல  பிரச்ச்னனைகளை  உண்டாக்குமே? என்று முதிர்ந்த மனநிலையில்   சிந்தித்து உறுதியான  முடிவெடுக்கிறான்.அது  தன்னைத்தானே  அச்சூழலில்  இருந்து  விளக்கிக்கொள்ளுதல்.ஸோ காலட்  பெரிய  மனிதர்களே  இப்படியாக அடுத்தவர்  உணர்வுகளுக்கு  மதிப்பு  கொடுத்து  முடிவெடுக்காத   நிலையில்  ஒரு  சிறுவன்  இவ்வளவு  மெச்சூரிட்டியோடு  சிந்திப்பதை  ரொம்ப  இயல்பாக  அதேநேரம்  மணிரத்னம்  பாணி  குழந்தைகளைப்போல  ஓவர்  ரியாக்ட்  பண்ணாதவகையில்  காட்சிப்படுத்தியிருப்பார் ஸ்ரீதர்.

                 ரகுவரனை  பொறுத்தளவில்  கொடூர  வில்லத்தனம் என்றாலும்  சரி  மிக  மென்மையான கதாபாத்திரம்(கூட்டுப்புழுக்கள்,ஆஹா,முகவரி...etc.,) இரண்டுக்கும்  இடைப்பட்ட  சம்சாரம்  அது  மின்சாரம்   கதாபாத்திரமானாலும்  சரி  அனாயசமாக  செய்துவிடக்கூடியவர்.இப்படத்திலும் முதலில்  மைனர்  வேலைகள்  செய்வது;பின்னர் சின்ஸியராக வேலை செய்து நல்லநிலைக்கு வருதல்; பிறகு அந்தச்சிறுவனையும் மரணப்படுக்கையில்  இருக்கும்  அவன் தாயையும்   நினைத்து  உருகுதல்  என்று அட்டகாசமாய்  நடித்திருக்கிறார்.அந்த  சிறுவனுக்கு  தமிழ்  தெரியாது  என்று  நினைக்கிறேன்(ஏதோ  ஹிந்தி  படத்தில்  பார்த்ததாக  நினைவு).ஆனாலும்  சரியாக  வாயசைத்து  நன்றாகவே நடித்திருக்கிறான்.

               படத்தின் குறைகள்  இரண்டு.  ஒன்று   ரகுவரனுக்கு  எஸ்.என்.சுரேந்தரின்  டப்பிங் குரல் .அது  மோகனுக்கு அட்டகாசமாய்  பொருந்திய  அளவில்  பாதிகூட  இங்கே பொருந்தவில்லை..ஏன்  ரகுவரனே  மென்மையான  பல  கதாபாத்திரங்கள்  செய்யக்கூடியவர்தானே(கூட்டுப்புழுக்கள்)!அவர்  குரல்  ஒன்றும்  கர்ணகொடூரமானது  இல்லையே!இரண்டு அந்த  சிறுவனுக்கு  ஒரு பெண்ணின் குரலை  டப்பிங்  கொடுக்க  செய்தது.மிகப்பெரிய இயக்குனரான  ஸ்ரீதர்  இதை  எப்படி  கவனிக்காமல்  விட்டார்  என்று  தெரியவில்லை
     (வழக்கம்போல)  படத்தின்  ஆணிவேராக    இசையராஜா  இசை. 

     பி.கு:         ரகுவரன்  ஹீரோவாக  நடித்ததில்லை..வில்லனாக  மட்டுமே  நடித்திருக்கிறார்  என்று  தனுசு  போன்ற  விஷக்கொசுக்கள்  விஷமத்தனமாக  பொய்த்தகவலை  மக்கள் மனதில்  பதிய  வைப்பது கேடுகெட்ட  ஒரு  சூழலை  காட்டுகிறது.அதற்கு  மறுப்பாக கூட  இப்பதிவை  எடுத்துக்கொள்ளலாம்.