Thursday, 20 October 2016

தொட்டி ஜெயா (2005)


                  சிம்பு நடித்த ஒரே உருப்படியான படமாக நான் கருதும் படம்!!


                                'ஆறு  மெழுகுவர்த்திகள்'  படத்துக்கு ஒலக விமர்சகர்கள் எல்லாரும்  சொல்லி வச்சாப்ல "இந்த இயக்குனர் ஏற்கெனவே எடுத்த முகவரி படத்தை  பார்த்தோமானால் ..." என்ற டெம்ப்ளேட் வாசகத்தோடே விமர்சனத்தை துவக்கினார்கள்.ஆனால் அதற்குப்பின் (காதல் சடுகுடு குப்பை என்பதால்  அதை  விட்டுவிடுவோம் ) வந்த  இந்தப்படம் பற்றி பேசாமல் விட்டுவிட்டார்கள்.
சரி எல்லா ஒலக விமர்சகர்களும் ஒரே 'வாத்து' அச்சில் வார்த்தது என்பதால் விட்டுவிடுவோம்!               எப்படி  அரசியல்  சமூக  நிலைப்பாடுகளில்  status quo  என்பது  உள்ளதோ  அதேபோல  சினிமா உலகிலும்,  திரைப்படப்பாடல்கள்  உலகிலும்  உண்டு.எந்த  படம்  எல்லாராலும்  பேசப்படுகிறதோ  அதைப்பற்றியே  விவாதங்கள்  எழும்பும்.பேசப்படாத  பல  நல்ல  படங்கள்  அதனால்  வெளிச்சத்திற்கு  வராமலேயே  போய்விடும்.அதற்காக  தொட்டி  ஜெயா  ஓலகத்தரமான  படம்  என்றெல்லாம்  சொல்லவில்லை.அது  ஒரு  நல்ல  வணிக சினிமா.நல்ல  வணிக  சினிமாக்கள்  அருகிவரும்  இக்காலகட்டத்தில்;  போலியான  பல  படங்கள் மாற்று  சினிமா/ஒலக  சினிமா  என்று  ஏகோபித்த  பாராட்டுக்கு(அதே  status quo தான்) உள்ளாகிவரும்  வேளையில் இப்படம்  பற்றி  பேசவேண்டிய தேவை  உள்ளது.

                       இப்பட  டிரைலர்,  போஸ்டர்  எல்லாவற்றிலும்  இருளே  பிரதானமாக  இருந்தாலேயே  இப்படத்தை  பார்க்க  சென்றேன்.மொத்த  தியேட்டரையும்  ஒற்றை  தூண்  தாங்கிக்கொண்டிருக்க  சற்று  பயத்துடனேயே படத்தை  பார்க்க  வேண்டியதாயிருந்தது!
படம் பிடிக்க மிகமுக்கிய காரணம் சிம்புவின் மொத்த வசனத்தையும் ஒரே பக்கத்தில் எழுதிவிடலாம்!சிறுவயதில் இருந்தே அனாதையாக ஒருவித கடுமையான, இறுக்கமான சூழலில் வளர்ந்தவன்தான் ஜெயச்சந்திரன்.அதனாலேயே அவன் அதிகமாக பேசுவதில்லை.ஒன்லி ஆக்ஷன்!

           2002  ல்  தாதா  சீசன்  ஆரம்பித்தது.அஜித்தின்  ரெட்,விக்ரமின்  ஜெமினி,சூர்யாவின்  ஸ்ரீ, விஜயின்  பகவதி ஏன்  ரசினியின்  பாபா  கூட  தாதா  சீசனில்  வந்தபடம்தான்.அதன்பின்  காதல்  கொண்டேன்  துவங்கி  சைக்கோ  சீசன்  வந்தது.சிம்புவின் மன்மதன்  வந்தது.சிகப்பு  ரோஜாக்கள்  சாயல் ஓவராக  இருந்ததாலேயே  எனக்கு  அப்படம்  பிடிக்கவில்லை.தவிர  மொட்டை  சிம்புவின்  ஓவராக்டிங்  கொடுமை  வேற! தாதா  off season  சமயத்தில்  வந்ததுதான்  தொட்டி  ஜெயா.

                    துவக்க  காட்சியான  "முத்து கணேஷ்  யாரு?" மறக்க  முடியாத  காட்சி!நயீவான  நாயகி  தாதா  ஹீரோன்னு  வழக்கமான  கதைதான்.இன்னும்  சற்று  உற்று  கவனித்தால்  இப்படத்தின்  கதையும்  ஷாம்  நடித்த  பாலா (2002) படத்தின்  கதையும்    ஒன்றுதான்.அதில்  ரகுவரனிடம்  அடியாளாக  இருக்கும்  ஷாம் ரகுவரனின்  இரண்டாம்  மனைவியின்  மகளான  மீரா  ஜாஸ்மினை  லவ்வுகிறான்.அதற்கு  ரகுவரனின்  எதிர்ப்பு  அதைமீறி  சேர்ந்தார்களா?இல்லையா?  என்ற  கதைதான்.

          ஆனால்  அதில்  ஒரு  முக்கியமான  வேறுபாடு  உண்டு.ஷாம்  ஏன்  அப்படி  இறுக்கமான  அடிதடி  ஆசாமியாக  மாறினான்  என்பதற்கு  ஒரு  பிளேஸ்பேக்  இருக்கும்.தாய்  தந்தை  தங்கச்சின்னு  வாழ்ந்துவந்த  குடும்பத்தில்  சில  ரவுடிகள்  செய்யும்  வேலைகளால்  தங்கச்சி  தாய்  தந்தை  மூவரும்  இறந்துவிட அதற்கு  பழிவாங்கவே ஷாம்  அப்படியாக  மாறினார்  என்று  காட்டியிருப்பார்கள்.
       ஆனால்  இப்படத்தில்  சிம்பு  ஏன்  அப்படி  இறுக்கமான  இருண்மையான  தன்மை கொண்ட  ஒரு  கேரக்டராக  மாறினான்   என்பதற்கு  பெரிய  பிளேஸ்பேக்  சம்பவங்கள்  எதுவும்  காட்டப்பட்டிருக்காது.வாழ்க்கை அதன்  இயல்பான  தன்மையிலேயே  ஒருவனை  இறுக்கமான  ஆளாக  மாற்றிவிடக்கூடியது.அதற்கு  எந்த  நெஞ்சை  நக்கும்  பிளேஸ்பேக்கும்  அவசியமில்லை  என்பதுதான்  நிஜம்.
     


ஆர்டி ராஜசேகரின் மிகச்சிறந்த ஒளிப்பதிவு  இப்படத்தில்தான்!இருளுக்கும் ஒளியுக்குமாக    cat and mouse  விளையாடியிருப்பார்! முக்கால்வாசி  படம்  இருட்டிலேயே(மிஸ்கினுக்கு முன்னோடி துரை!) படமாக்கப்பட்டிருக்கும்.
                 டிஜிட்டல் கேமராவில்  இருளில் எடுக்கிறேன் பேர்வழின்னு  ஸ்க்ரீன்ல  சாணியடிச்சாப்ல  ஒருமாதிரி   சாம்பல்  கலர்ல  இருள்  காட்டப்படும்  இக்காலகட்டத்தில்  அப்படத்தை  பார்க்கும்போது  ஒளிப்பதிவில்  எவ்வளவு இழந்திருக்கிறோம்  என்பது  புலப்படும்.ஹாரிஸின்  தீம்  ம்யூசிக்  நன்றாகவே  பொருந்தியது(அது  காப்பியா  என்னான்னு  நமக்கு  தெரியாது).உயிரே  என்  உயிரே  பாடலை  குறிப்பிட்டு  சொல்லலாம்...

குறை என்றால் சிம்பு பேசவேண்டிய வசனங்களை சேத்துவச்சி பேசும் கொச்சின் ஹனீபா.அதிலும்

ஓடுறது ஒளியுறதுக்கில்ல வாழுறதுக்கு
ஓடுறது ஒளியுறதுக்கில்ல வாழுறதுக்கு
ஓடுறது ஒளியுறதுக்கில்ல வாழுறதுக்கு
ஓடுறது ஒளியுறதுக்கில்ல வாழுறதுக்கு
  என்று  இம்போசிஷன்  சொல்லிகொண்டிருப்பது  கடுப்பை  கிளப்பும்.அதேபோல  வில்லனாக  வரும் பிரதீப்  ராவத் அந்த  கேரக்டரில்  கொஞ்சமும்  பொருந்தவில்லை.அதிலும்  "நம்ம  வூட்டாண்டையே  வன்ட்டானா?" ன்னு  சென்னை  தமிழ்  டப்பிங்  குரலுக்கும்  அவரின்  வாயசைப்பு +பாடி  லாங்குவேசுக்கும்  எந்த  தொடர்புமேயில்லை.
                   மற்றபடி  ஏற்கெனவே  சொன்னபடி  இது  நல்லதொரு  வணிக  சினிமா!

Monday, 17 October 2016

Notஆமை-நாட்டமை ரீமேக்

நாட்டாமை-விஜயகுமார் 
பசுபதி- தலைவர்  கவுன்டர் 
கணக்குப்பிள்ளை-மனோபாலா
பட்டாளத்தான்-வெண்ணிற  ஆடை  மூர்த்தி 
மற்றும்  பலர்...
*********************************************************************************
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ  நாட்டாம  பாதம்  பட்டா  அந்த  வெள்ளாம  வெளையுமடி ..நாட்டாம  கை  அசைச்சா  அந்த  போயிங்  விமானமே  நிக்குமடி...
ஆடி  கார்  வந்து  இறங்க  நாட்டாமை  இறங்குகிறார்..கூடவே  தம்பி   பசுபதி  ...ஆலமரத்தடிக்கு  வருகிறார்கள் 


கணக்குப்பிள்ளை: ம்  என்னைய்யா  பாத்துகிட்டு  நிக்குறீங்க?நாட்டாம  காலடி  மண்ண  எடுத்து எல்லாரும்    நெத்தியில  பூசிக்கிங்க
பசுபதி:  க்கும்..நாட்டாம  இப்பத்தான்  அவுட்சைட்  போயிட்டு  வந்திருக்காரு..அந்தக்காலடி  மண்ணை  எடுத்து  பூசுனா சிக்கன்குனியா  இல்ல  மட்டன்குனியாவே  வரும்டா!சொன்னா  கேக்க  மாட்டானுங்களே..
......எல்லாரும்  காலடி  மண்ணை  நெற்றியில்  பூசிக்கொள்ள  ஒருவர்மட்டும்  நைசா  காலடி  மண்ணை  பார்சல்  பண்ணுகிறார்.....
பசுபதி:  அடேய்  என்னடா  பண்ணுற?
ராசப்பன்:  அய்யா  இந்த  மண்ணை  செய்வினக்கி  வெக்குறதுக்காக  எடுத்துட்டு  போறேனுங்க
பசு:  ஆகா  நாம  நெனச்சத  எவனோ  செய்யுறானே..சரி  நல்லா  செய்..இந்த புடி  ஐநூறு..நீ  வெக்குற  வினையில  அடுத்த  பஞ்சாயத்துல  நான்தான்  நாட்டாமையா  இருக்கோணும்
ராசப்பன்:  சரிங்கைய்யா
பசு:  டேய்  ஸ்டாப்..இந்த  நாட்டாமக்கி  வெக்குறாப்ல அடுத்து  எனக்கும்  வெக்கலாம்னு  ப்ளான்  பண்ணாத.நா  தூங்கும்போது  கூட  கால்  பூட்ஸ  கழட்டமாட்டேன்.போடா..
.

நாட்டாமை:  அப்புறம்  பிராது  குடுத்தவன்  எல்லாம்  வந்துட்டானா?
பசுபதி:  பிராது  குடுக்குறவன்  பிஸ்கொத்து   குடுக்குறவன்  எல்லாம்  வந்துட்டான்  ஆரம்பிங்க.
ஒண்டிப்புலி :நாட்டாமகாரய்யா  நியாயம்  செத்துபோச்சு..அநியாயம்  அழிஞ்சு  போச்சு..

....ஒண்டிப்புலி  தலைமுடியை  பிடித்து  ஆட்டுகிறார்  பசுபதி..
ஏண்டா  உனக்கு  குடுத்ததே  இந்த  ஒருவரி  வசனம்தான.அதையும் போட்டு சொதப்புனா எப்படிடா?
டைரக்டர்:  அட  என்னைய்யா  கிளவுட்ஸ்  வருது  .சட்டுபுட்டுன்னு  சீன  எடுத்து  முடிப்போம்.எல்லாம்  டப்பிங்ல  பாத்துக்கலாம்
பசு:க்கும்..எல்லா  படத்துலயும்  இதத்தான  பண்ணுறீங்க?
டைரக்டர்:ஓகே  ரீடேக்
ஒண்டிப்புலி: நாட்டாமகாரய்யா  நியாயம்  செத்துபோச்சு..அநியாயம்  அழிஞ்சு  போச்சு..
நாட்டாம:  என்னடா  சொல்லிப்போட்ட  நீயி?
பட்டாளத்தான்  ஒண்டிப்புலி  காதருகே  வந்து  ,ஏண்டா  போட்டா  என்கிட்டே  சொல்லோணும்னு  சொல்லியிருக்கேனில்ல?அப்புறம்  ஏண்டா  சொல்லல?
ஒண்டிப்புலி:  அய்யா இவுரு  அத  கேக்கலீங்
நாட்:  என்றா  என்றா  அங்க  குசு  குசுன்னு?
பட்டாளத்தான்:  குசுவும்  இல்ல  .கு....(காக்காய்  வந்து  தலையில்  கொத்திட்டு  போகிறது)
பசு:  க்கும்  நீ  தூங்குனாலே  டபுள்  மீனிங்ல  தான  தூங்குவ?
நாட்:  என்றா  என்றா  ப்ராது?
ஒண்டிப்புலி:  அய்யா  நேத்து  செத்துப்போன  குப்புசாமி  பொணத்த  பதினெட்டு  பட்டியில   எந்த  தெரு  வழியாவும்  எடுத்துட்டு  போக  கூடாதுங்க.நீங்கதான்  நல்ல  தீர்ப்பா சொல்லோனும்
பசு:  ஏண்டா 18  பட்டி  வழியாவும்  எடுத்துட்டு  போக  கூடாதுன்னா?பின்ன  எப்படிடா  குப்புசாமிய  அடக்கம்  பண்ணுறது?ஹெலிகாப்டர்ல  எடுத்துட்டு  போக  சொல்றியா?
நாட்:  என்றா  பசுபதி  என்றா  அங்க  முணுமுணுப்பு?
பசு: ஒன்னும்  இல்லீங்
நாட்:  என்றா  ஒண்டிப்புலி  நீ  சொன்னா  மாதிரியே  இந்த  19  பட்டி
பசு:  அய்யா  பக்கத்து  பட்டிய  எக்ஸ்ட்ராவா  சேத்துகிட்டீங்க..
நாட்:  எல்லாம்  எனக்கும்  தெரியும்டா.இந்த  18  பட்டி  வழியாவும்  குப்புசாமி  பொணத்த  எடுத்துட்டு போக  அனுமதிக்க  முடியாது.இதாண்டா  இந்த  நாட்டாமையோட  தீர்ப்பு.
பசு: அய்யா  அப்படி  செஞ்சா  போலீசு  கேசாகி  போகுமுங்,
நாட்:  என்றா  பெரிய  போலீசு?இப்படித்தான்  நம்ம  பதினேழாவது  பட்டியில  ஒரு  கொலைய  விசாரிக்குறேன்னு  ஒரு  இன்ஸ்பெக்டர்  வந்தான்.அவன்  கால  வெட்டி  கெணத்துல  போட்டோமுல்ல
பசு:  க்கும்  பல  வருசமா  துவைக்காத  அந்த  சாக்ஸ்  காலோட  வெட்டி  கெணத்துல  போட்டு  இன்னிக்கும்  அது  குடிக்க  வக்கில்லாம  ஆகிப்போச்சு..இதுல  என்னடா  பெரும?
நாட்:  என்றா  பசுபதி  என்றா  அங்க  முணுமுணுப்பு?
பசு:  அண்ணா  இதே  வசனத்த  திரும்பத்திரும்ப  பேசுனா  க்ளீஷேன்னு  பொறந்த  கொழந்த  கூட  வெளிய  தம்மடிக்க  போயிடுதுங்க.மாத்தி  பேசுங்க.
நாட்:  அதெல்லாம்  முடியாதுடா..இதெல்லாம்  எங்க  பாட்டன்  முப்பாட்டன்  காலத்துலேர்ந்து  செஞ்சிகிட்டு   வாறது.
பட்டாளத்தான்:  அய்யா  அந்தக்காலத்துல  பல  வீடுங்க  வச்சுக்க  அனுமதி  இருந்துச்சிங்க.அந்தமாதிரி  இப்பவும்  அனுமதி  குடுத்தீங்கன்னா...
பசு:  கரக்டா  அவன்  பாயிண்டுக்கு  வந்துட்டான்
பட்டா:  பாயிண்டுக்கு  நா  வரல..அதுதான் ஏ....
பசு:  போதும்டா  டபுள்  மீனிங்கு!
.
டிங்கு :  அய்யா  நம்மூருல  கக்கூசு  கட்டனும்னுட்டு   அதிகாரிங்க  தொல்ல  குடுக்குறாங்கைய்யா..நீங்கதான்  அத  தடுக்கோணும்
நாட்:  என்றா  என்ற  பாட்டன்  முப்பாட்டன்  காலத்துலேர்ந்து ஓப்பனாத்தான் போயி  பழக்கம்.இப்ப  என்றா  வெள்ளக்காரன்  கக்கூசெல்லாம்?
பசு:  அய்யா  நீங்க  வச்சிருக்குற  ஆடி  கார்கூட  வெள்ளக்காரன்  கண்டுபிடிப்புதானுங்க..
நாட்:  அமுத்துடா  பசுபதி .அதுக்காக  எல்லா  விசயத்துலையும்  வெள்ளக்காரன  நாம  பாலோ  பன்னோனுமா?
பட்டாளத்தான்:  அய்யா   வெள்ளக்காரன்  போட்ட  புக்கு  ஒண்ணு  படிச்சேன்  ...
பசு:  நீ  எங்கடா  படிச்ச?படம்  பாத்தன்னு  சொல்லு
பட்டா:  ஆமா  படம்  பாத்தேனுங்க.அதுல  என்னன்ன  மாதிரிலாம்..
பசு:  யோவ்  நிறுத்து.நீ  பஞ்சாயத்த  பிட்டு பட  தேட்டரா  மாத்திடுவ  பேசாம இரு..
நாட்:  கக்கூசு  கட்டணும்னு  சொல்றவன்  நாக்க  வெட்டுலே..கட்ட முயற்சி  பண்றவன்  கைய  எடுலே!
பசு: கருமாந்தரம்  புடிச்சவனுங்களா...

.

வேலு:நாட்டாம  அய்யா  தீர்ப்ப  தப்பா  சொல்லிப்போட்டீங்களே!
நாட்:  என்றா  சொல்லிப்போட்ட  நீயி?
.....பசுபதி  வேலுவின்  சட்டையை  பிடித்து....
டேய்  எதுக்குடா  இப்படி  சொன்ன?
வேலு:  இல்ல  தப்பா  தீர்ப்பு  சொல்லிட்டோம்னு  தெரிஞ்சா  நாட்டாம  நெஞ்சடச்சி  செத்துடுவாருன்னு  சொன்னாங்க.அதான்  டெஸ்ட்  பண்ணலாம்னு
பசு:தப்பா  தீர்ப்பு  சொன்னதுக்காக  நாட்டாமைங்க  எல்லாம்  நெஞ்சடச்சி   சாகணும்னா நாட்டுக்குள்ள  ஒரு  நாட்டாமகூட  இந்நேரம்  உசுரோட  இருக்க மாட்டான்டா!ஏதோ  சினிமா  பாத்துட்டு  வந்து  நாயி  கரடி  உடுது..ஓட்றா..
நாட்:  இந்தமாதிரில்லாம்  இவனுங்க  பண்ணுவாங்கன்னு  தெரிஞ்சிதான்  தினம்  பஞ்சாயத்துக்கு  வாறதுக்கு  முன்னாடி  நாலு ஆஸ்பிரின்  மாத்திரைய  போட்டுட்டுதான்  வரேன்!
பசு:  செம  உசாரா  இருக்கீங்ணா
.
வேலுச்சாமி:  அய்யா  வூட்டுக்கு  தண்ணி  வுடுறதுக்கு  கொழா  போட்டிருக்கானுங்க.ஆனா  அது  மாடசாமி  தெருவழியா  வருதுங்க..அத  ஏத்துக்க  முடியாதுங்க.
நாட்:  என்றா  அந்த  கொழாஎல்லாம்  புடுங்கி  எறிங்கடா
பசு:  ஆமா  புடுங்கி  போட்டுட்டு  தலைல  கொடத்த  வச்சிக்கிட்டு  ஐநூறு  மைல்   போங்க..
நாட்:  என்றா  பசுபதி  நமக்கு  பாரம்பரியம்தான்  முக்கியம்.
பசு:  அய்யா  எனக்கு  ஒரு  விண்ணப்பமுங்க
நாட்:  கேள்றா
பசு:  நம்மூருக்கு  கரண்டு  சப்ளை  பண்ற  கம்பிங்க  கூட  அதே  மாடசாமி  தெருவழியாத்தான்  போகுதுங்க..
நாட்:  இத  ஏத்துக்கவே  முடியாதுடா..எலே  அந்த  ஒயரையும்  புடுங்கி  போடுங்கல
பசு:இன்னிக்கி  பாதி   ஊரு  டெட்  பாடிதாண்டி!
.
ராசப்பன்:  அய்யா  நம்மூரு  சுப்பு  பஞ்சாயத்து  கட்டுப்பாட்ட  மீறி  நடந்துட்டானுங்க.
நாட்:  டேய் இந்த சுப்புவ ஊர விட்டு தள்ளி வக்குறேன்டா.அவன்கூடா ஆரும் பேசக்கூடாது..அவன் செல்லுக்கு ஆரும் ரீசார்ஜ் பண்ணகூடாது..அவன்..
....சொல்லிமுடிப்பதற்கு முன்னமே  சுப்பு  ட்ரேவல்  பேக்  சகிதம்  ஆஜராகிறான்...

சுப்பு :அய்யா,ரொம்ப  நன்றிங்கைய்யா.நா  பட்டணத்துக்கு  போகனும்.உங்க  ஆடி  கார்ல  ஸ்டேஷன் வரைக்கும்  கொண்டுவிட்டீங்கன்னா  நல்லா  இருக்கும்!
பசு:  எகத்தாளத்த  பாரு..ஓட்றா...
.

சிங்காரம்:  அய்யா  அய்யா  தப்பு  நடந்து  போச்சு..ஐயோ  ஐயோ!
பசு:  என்னடா  இது  மொத்த  18  பட்டிக்குமே  ரத்தகொதிப்பு  இருக்குது  போல.பத்து  லாரி  பிரஷர்  மாத்திரைய  ஊரு  கெணத்துல  கலக்கி  உட்டாத்தான்  சரியாகும்  போல!
நாட்:  என்றா  பசுபதி  இது  ரத்த  கொதிப்பில்லடா..ஆதங்கம்..எங்க  பாட்டன்..முப்...
பசு:  அண்ணா  போதுமுங்ணா  ரீல்  அந்து  போச்சு..
சிங்காரம்:  அய்யா  டிரம்மும்  கலரியும்  உங்களுக்கு  போட்டியா  தேர்தல்ல  நிக்க  போராவளாம்.
பசு:  ஹிலாரியும்  டிரம்புமா?அட்ரா  அட்ரா!
நாட்:  யாருடா  அந்த கலரி?யாருலே  அந்த  டிரம்மு?இழுத்துட்டு  வாங்கலே!
பசு:  அண்ணா  அவுங்கெல்லாம்  அமெரிக்காவுல  இருக்குறாங்க.
நாட்:  எந்த  அக்காவுல  இருந்தா  என்னடா?ஊரு  கட்டுப்பாட்டுக்கு   கட்டுப்படாம  எப்படிடா  இருக்க  முடியிம்?
பசு: அண்ணா  நீங்க  அனுமதிச்சா..
நாட்:  என்றா  இழுக்குற?
பசு: நீங்க  அனுமதிச்சா  நா  வேணும்னா  அமேரிக்கா  போயி  அந்த  ரெண்டு  பேரையும்  இழுத்துட்டு  வரட்டுமாங்?
நாட்:  இப்பதாண்டா  நீ  என்ற  தம்பி!தாராளமா  போயிட்டு  வாடா .டேய்  கணக்கு பசுபதி  கேக்குற  காச  குடுத்து  உடு.
கணக்கு:க்கும்.இவன்  ஊரு  சுத்திபாக்க  ப்ளான்  பண்ணுறான்.இது  தெரியாம  நீயெல்லாம்  ஒரு  நாட்டாம..
நாட்:  என்றா  முணுமுணுப்பு?
கணக்கு:  ஒண்ணுமில்லீங்!
பசு: ஒரு  பத்து  எல்  எடுத்து  வய்யி.துணிமணிய  பேக்  பண்ணிட்டு  வரேன்..ஐ  ஆம்  எஸ்கேப்டா!ஜாலியா  அமேரிக்காவுல  ஜல்சா  பண்ண வேண்டியதுதான்.

Saturday, 8 October 2016

ராமன் ராகவ்

                 "ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும்  ஒரு  மிருகம்  இருக்கு.அதை  வெளியேற்ற  மனிதர்கள்  எல்லைதாண்டி  போவதுண்டு.மதத்தின்  போர்வையில்  சாதியின்  போர்வையில்,  போலீசு,அரசியல்வாதி    போன்ற  அதிகாரத்தின்  போர்வையில்  மனித நேயத்தின்  போர்வையில் எல்லைதாண்டி  கொல்வதுண்டு.நான்  எந்த  முகமூடியின்  பின்னாலும்  ஒளிந்து  கொள்ளாமல்  கொல்கிறேன்.சாப்பிடுவது,  கடவுளை  வணங்குவது  ,தூங்குவது,  மலம்  கழிப்பது  போன்று  கொல்கிறேன்.  உச்சத்தை  கண்டுவிட்டேன்  அதனால்  சரண்டர்  ஆகிறேன்"
                      இதுதான்  ராமன்(நவாசுதின்)  ராகவனிடம் (விக்கி ) சொல்லும்  காரணம்.
                      பொதுவாக  சீரியல்  கொலைகாரன்  அவனை  பிடிக்கப்போகும்  நேர்மையான  போலீசு  போன்ற  வழமையான  சித்தரிப்புகளை  ஒதுக்கிவைத்துவிட்டு  அப்பட்டமாக  சில  உண்மைகளை   காட்டியிருக்கிறார் .போலீசாக  வரும்  ராகவன்  வழக்கமாக  சட்டைக்கு  போடும்  கஞ்சியை  உள்ளுக்கும்  கொஞ்சம்  விட்டுக்கொண்டு  விறைப்பாக  காய்கறி  விக்குறவன்  தொடங்கி  மந்திரி  வரையில்  முஷ்டியை முறுக்கி  "அடிங்..நா  போலீசுடா" என்று  தமாஸ்  பண்ணுவதில்லை.ராகவனின்  கதை  என்பது  தனி.
                   ஆளவந்தான்  நந்து  கேரக்டர்  உங்களுக்கு  நினைவில்  இருக்கலாம் ."பூ  விழாம  தல  விழுந்திருந்தா  நீ  இந்தப்பக்கம்  நா  அந்தப்பக்கம்"  என்று  நந்து  விஜயிடம்  சொல்வதாக  ஒரு  வசனம்  இருக்கும்.நந்து  சித்தியிடம்  வளராமல்  மாமாவிடம்  வளர்ந்திருந்தாலும்  இதே  மாதிரிதான்  ஆகியிருப்பார்.The  inherent desire to sin  என்பது  சிறுவயதிலேயே   நந்துவின்  மனதில்  இருந்த  விஷயம்.அதை  சித்தி  ஊதி  பெருக்கிவிட்டாள்  என்று  வேண்டுமானால்  சொல்லலாம்.

                   ராகவனும்  கிட்டத்தட்ட  அப்படியே.சிறுவயதில்  கஞ்சா  அடிப்பதை  தந்தை  பார்த்துவிடுகிறார்.அதன்பின்  தொடர்  பெல்ட்  விளாசல்கள் ஆழ்மனதில்  இருக்கும்  அந்த  தீய  எண்ணங்கள்/செயல்கள்  மீதான  ஈர்ப்பின் விரிசலை  பெரிதுபடுத்துகிறது.இப்படிப்பட்ட  ஒரு  ஆள்    காவல்துறையில்  சேர்ந்தால்  தனக்குள்  இருக்கும்  அந்த  தீய  எண்ணங்களை  வெளிக்கொண்டுவர  ஒரு  வடிகாலாக  இருக்கும்  என்று  எண்ணுகிறான்  ராகவன்(அது  படத்தில்   சொல்லப்படுவதில்லை  என்றாலும்  அவ்வாறு  புரிந்துகொள்ளலாம்) .போதைக்கு  அடிமையான  ஒரு  insomniac ஆகவும்  sexual pervert  ஆகவும்  இருக்கிறான்.அதிகார  முகமூடியில்  அவன்  நினைத்ததை  செய்யமுடிகிறது.

                 நினைத்த  பெண்ணோடு  உறவு கொள்கிறான்.ஆனால்  திருமணம்  குழந்தை  என்ற  commit  ஆக  அவன்  விரும்பவில்லை.அது  அவனுக்கு   சரிப்படாது  என்பதையும்  உணர்ந்திருக்கிறான்.உறவு  கொள்ளும்  பெண்களை  காயப்படுத்துவதோடு  அல்லாமல்  தன்னையும்  ஒரு  self destructive  path  ல்  வழநடதத்துவதில்  மகிழ்கிறான்.
                   எல்லா  நேரத்திலும்  அதே  கடுமையோடு  ராகவனால்  நடந்துகொள்ள முடிவதில்லை.போதைப்பொருள்  சப்ளை  செய்யும்  அந்த  நைஜீரியன்  ராகவனை  உதைத்து  கீழேதள்ளி  துப்பாக்கியை  காட்டியதும்  நடுங்கிப்போகிறான்.அந்த  நேரங்களில்  மனதின்  இருண்ட  குகைக்குள்  முற்றிலுமாக  சிக்கிக்கொண்டு  வெளிவரமுடியாமல்  கிடக்கிறான்.இருண்ட  மனதிற்கும்  இவனிற்குமான  இடைப்பட்ட  சுவர்  போலவே  அவன்  போதைப்போருட்களையும்  பெண்களுடனான  perverse  உடலுறவுகளையும்   பயன்படுத்துகிறான்.

                    கீழ்லிருந்து  மேல்  வரை  முற்றிலும்  அழுகிப்போன  சமூகத்தின்;  மனித  மதிப்புகள்  முற்றிலுமாக  வீழ்ச்சியடைந்த  ஒரு காலகட்டத்தின்  பிரதிநிதிகளாகவே  ராமண்ணாவும்   ராகவனும்  சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.ராகவன்  ஒரு  நடுத்தர  குடும்பத்தில்  இருந்து  வந்தவன்.ராமன்  அடித்தட்டு  சேரியிலிருந்து  வந்தவன்  என்பதெல்லாம்  இங்கே  எந்த  வித்தியாசத்தையும்  ஏற்படுத்துவதில்லை.எல்லா  தரப்பிலும்  எல்லா  தட்டுகளிலும்  இத்தகைய  மனிதர்கள்  நிறைந்த  சமூகமாகவே  நம்  சமூகம்  உள்ளது.
                    ராமனின்     சகோதரி  வீட்டில்  நடக்கும்  அந்த  செக்மன்ட்டில்  Michael Haneke  இயக்கிய  Funny Games(1997) படத்தின்  சாயலை  காணமுடியும்.ஆனால்  funny games  போல  படம்  பார்ப்பவர்களை thesis paper  போலவும் இயக்குனர்  தன்னை  பேராசிரியராகவும்  கற்பனை  செய்துகொண்டு   இம்சை படுத்தும்  வேலையை  அனுராக்  செய்யவில்லை. படத்திலேயே  ரொம்ப  இறுக்கமான  காட்சிகள்  அந்த  காட்சிகள்தான்.தனது  தந்தையையும்  தாயையும்  கொன்றுவிட்டதை   பதற்றமில்லாமல்  மெதுவாக   எட்டிப்பார்க்கும்  அந்த  சிறுவன்  இன்றைய  சிறுவர்  சிறுமிகள்  வன்முறை மீதுகொண்ட    ஈர்ப்பினை  காட்டுவதாகவே  உள்ளது.ஆனால்  இதையெல்லாம் பார்வையாளனுக்கு   preach  செய்வது  என்ற  நிலைக்கு  போய்  கொல்லாமல்  வெறுமனே  காட்சிப்படுத்தி  இருப்பது  ஆறுதலளிக்கிறது!


                    முதலிலேயே  சரணடையும்  ராமனை  போலீசு  கைது  செய்யாமல் ஏன்   அவன்  தப்பிக்கும்  வகையில்  பாழடைந்த குடியிருப்பில்  பூட்டிவிட்டு  செல்கிறார்கள்  என்பது  உறுத்தினாலும்  அதன்பிறகு  வரும்  காட்சிகள்  அந்தக்குறையை  மறக்கடித்துவிடுகிறது.
கடவுளின்  சிசிடிவி  கேமரா!

                  சமூக  அவலங்களை  குற்றங்களை  தண்டிப்பதற்காக  இருக்கும்  காவல்,நீதித்துறை,அதிகார  வர்க்கம்  எல்லாமே  பொது  ஜனத்திரளில்  இருந்து  வந்தவையே.பொதுமக்கள்  சீரழிந்த  நிலையில்  இருக்கும்போது  அதிலிருந்து  ஒருவர் வந்து  அதிகாரியாகவோ  நீதிபதியாகவோ  போலீசாகவோ  ஆனால்  அவர்களும்  அந்த  சமூக  அவலத்தின்   பிரதிநிதியாகத்தான்  இருப்பார்கள்  என்பதை  இப்படம்  உணர்த்துகிறது.Of course  ஒவ்வொரு  மட்டத்திலும்  சில  நல்லவர்களும்  இருக்கத்தான்  செய்கிறார்கள் .  ஆனால்  ஒப்பீட்டளவில்  மிகவும்  குறைவான  அளவில்  மட்டும்!

              ராமன்  கேரக்டர்  மட்டுமே  படம்  முழுக்க  தெரிந்தது.அதில்  நடித்த  நவாசுதின்  கண்ணுக்கு  தெரியவில்லை.நவாஸ்  என்ற  நடிகனை  முழுமையாக  எரித்து  ராமன்  கேரக்டருக்கு  உயிர்  கொடுத்துள்ளார்.இப்படிப்பட்ட  நடிப்பை  தமிழில்  பார்க்க  எனக்கும்தான்  ஆசை..என்ன  செய்ய!ராகவனாக  வரும்  விக்கியும்  நன்றாகவே  கேரக்டருக்கு  பொருந்துகிறார்.சிம்மியும்  கூட!

சிம்மி 

              காலம்  காலமாகவே  ஹிந்தி  படங்களில்  தென்னிந்தியர்கள்  கோமாளிகளாகவே  சித்தரிக்கப்பட்டுவருகிறார்கள்(சிலபல  விதிவிலக்குகளும்  உண்டு  என்றாலும்).தென்னிந்தியாவில்  நான்கு  மாநிலங்கள்  உள்ளன.அவர்களுக்கு  வெவ்வேறு  மொழி  பண்பாடு  எல்லாம்  உண்டு  என்ற  புரிதல்  இல்லாமலேயே  போட்டு  குழப்பியடிப்பார்கள்.உதாரணமாக  அமிதாப்  நடித்த   கூலி (1983)  படத்தில்  ஒரு  தென்னிந்திய குடும்பம்  காட்டப்படும்.அதில்  குடும்பத்தலைவர்  திருப்பதி  பெருமாள்  படத்தின்  முன்பு  நின்றுகொண்டு  "முருகா" என்பார்.நல்லவேளை  படத்தின்  இறுதியில் வரும்    அல்லா  சென்டிமெண்டில்  அல்லாவை  ஏசுவோடு  குழப்பாமல்  இருந்தார்களே(அது  இன்டர்நேசனல்  விஷயம்  உதயா-கும்மாங்கோ)!
             ஷாருக்  நடித்த  ரா  ஒன்  ,சென்னை  எக்ஸ்பிரெஸ்  எல்லாவற்றிலும்  தென்னிந்தியர்கள்  சித்தரிப்பில்   ஏக  குளறுபடி!இந்தப்படத்தில்  சிம்மி  ஒரு  தெலுங்கு  பெண்.அதற்காக  அவரின்  ஒருகையில்  திருப்பதி  லட்டையும்  இன்னொரு  கையில்  ஆவக்காய்  ஊறுகாயையும்  கொடுக்கவில்லை .அனுராகிடம்  அந்த  sensibility  இருப்பது  பாராட்டுக்குரியது. மற்ற  ஹிந்தி  இயக்குனர்களுக்கும்  அது  வரவேண்டும்.

ஒலக எழுத்தாளர்  உள்ளிட்டோர்  சொல்வதுபோல  இது உண்மையான   ராமன்  ராகவின் கதையல்ல.அதை  படமாக்க  60 களின்  செட்  போடவேண்டும்  காஸ்ட்யூம்ஸ்  சிக்கல்  கிராபிக்ஸ்  தேவைப்படும்  போன்ற  பட்ஜெட்  பிரச்சனையால்  நிஜ  ராமன் ராகவின்  கேரக்டரை  தழுவி  படமாக்கப்பட்டதே  இப்படம்!

                              கண்டிப்பாக  இது ஒரு  அற்புதமான  முயற்சி!ஆங்..படத்தில்   சிகரெட்  பிடிப்பது  blah blah blah ; குடிப்பது  blah blah  என்றெல்லாம்  மொண்ணை  எச்சரிக்கைகள்  வரவில்லை!இந்த  அபத்தங்களை  கடுமையாக  எதிர்க்கும்  அனுராகின்  முயற்சியால்  இது  நடந்ததா  என்பது  தெரியவில்லை.ஆனாலும்  அந்த  அபத்த  எச்சரிக்கை  வாசகங்கள்  ஒழிக்கப்பட  வேண்டும்  என்பதே  என்  கருத்தும்!