Sunday, 6 August 2017

Caché (2005)


    இப்படம் ஜாலியாக பாப்கார்ன் கொறித்துக்கொண்டு சோபாவில் சாய்ந்தபடியோ படுத்தபடியோ பார்க்க முடிகிற படமல்ல!அவ்வளவு ஈசியாக எல்லாம் தனது பார்வையாளனை உணர அனுமதிப்பதில்லை ஹேன்கி.
         பொதுவாக  ஒரு சினிமாவில் ஒரு கதாபாத்திரம்/குடும்பம் கடும் நெருக்கடியில் இருப்பதாக காட்டினால் உடனே சற்று ஆசுவாசப்படுத்தும்படியான காட்சி அதை தொடரும்.நமது இந்திய சினிமாக்களில் நகைச்சுவை ட்ராக் வரும்.ஹாலிவுட் படங்களில் வேறு வகையான திருப்பம் வரும்.இவ்விரண்டுமே ஹேன்கியின் படங்களில் காணமுடியாது!

Michael Haneke


        மிகக்கடுமையான உளவியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் கதாபாத்திரத்தை டைட் போகஸில் அப்படியே விட்டுவிடுவார்!பார்வையாளன் வேறு எந்த வகையிலும் தப்ப முடியாது!அந்த கதாபாத்திரத்தின் ஐம்பது  விழுக்காட்டு வேதனையாவது/உளவியல் நெருக்கடியாவது  பார்வையாளனுக்கு கடத்தப்படும். மெல்லிய மனம் கொண்டோர் அவர் படங்களை பார்க்காமல் இருப்பது நல்லது!
           இப்படத்தில் ஜார்ஜ்ஸ் அவரது மனைவி ஆன், மகன் பியர்ரே  ஒரு பிளாட்டில் வசிக்கிறார்கள்.தொடர்ந்து அவர்கள் வீட்டு முகப்பை படம் பிடித்து ஒரு வீடியோ கேசட் அவர்களுக்கு அனுப்பபடுகிறது.இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய கேசட்டை பாஸ்ட் பார்வர்ட் செய்து பார்க்கும்போது ஜார்ஜ்ஸ் வீட்டுக்குள் வருவது வீட்டிலிருந்து தெருவுக்கு வந்து காரை கிளப்பி அலுவலகம் செல்வது போன்ற  காட்சிகள்.

            இந்த தொடர் கேசட்டோடு சில கிறுக்கல் ஓவியங்கள்.ஒரு சிறுவனின் வாயில் இருந்து ரத்தம் வருவது,கோழியின் கழுத்து அறுபட்டு ரத்தம் தெறிப்பது என்பதாக....
             ஜார்ஜ்ஸ் இதை ஒரு prank என்பதாகவே கருதுகிறான்.இதை யாரிடமும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் அவன் மனைவியோ நண்பர் குடும்பத்தோடு உணவருந்தும்போது அவர்களிடம் சொல்லிவிடுகிறாள்.அப்போதுதான் காலிங் பெல் அடித்து ஜார்ஜ்ஸ் எழுந்துசென்று கதவருகே கேசட்டை கண்டு விருந்தினர்களுக்கு தெரியாமல் கோட்டில் கேசட்டை வைத்துவிட்டு அமர்கிறான்.ஆன் "யார் வாசலில்?" என்று கேட்க 'யாருமில்லை!' என்று மழுப்ப மேற்சொன்னவாறு கேசட் விவகாரத்தை அவள் நண்பர் குடும்பத்திடம் அம்பலப்படுதிவிடுகிறாள்.
            கடுப்பான ஜார்ஜ்ஸ் அந்த கேசட்டை போட்டு காட்டுகிறான்.போலீசுக்கு செல்லுமாறு நண்பர் சொல்கிறார். போலீசு இதை பெரிதாக பொருட்படுத்தாமல் உங்கள் குடும்பத்தின் மீது யாராவது தாக்க முயன்றாலோ தாக்கினாலோதான் தங்களால் எதுவும் செய்யமுடியும் என்று கைவிரித்ததை ஆன் சொல்கிறாள்.
           இதற்குப்பின் முழுக்க முழுக்க நாம் ஜார்ஜ்ஸ் -உடன் பயணபடுத்தப்படுகிறோம்.
               'தனியார் துப்பறியும் நிபுணரை நியமிக்கலாமே' என்று ஆன் கேட்க அதை மறுக்கிறான் ஜார்ஜ்ஸ்.காரணம் இப்போது ஜார்ஜ்ஸ்க்கு பிரச்சனை யாரோ கேசட் அனுப்புகிறார்கள் என்பதைக்காட்டிலும் அதிலுள்ள காட்சிகள் தன்னில் உண்டாக்கும் பாதிப்பையே பெரிதாக நினைக்கிறான்.
             9/11 தாக்குதல் நிகழ்ந்த பிறகு Noam Chomsky   ஒரு விஷயம் சொன்னார்-"பின்லேடன் விரித்திருப்பது ஒரு diabolical trap.நாம்(அமெரிக்கா)உணர்ச்சிவசப்பட்டு போர்தொடுப்போம்;அதனால் பேரழிவு உண்டாகும்;
அந்தப்பேரழிவை காரணம் காட்டி மேலும் தனது இயக்கத்தை வலுப்படுத்தவும்,
இயக்கத்திற்கு ஆதரவாக பலப்பல நாடுகளும் தன்னுடன் இணையும் என்பதே லேடனின் திட்டம்".அதற்காக விரித்த வலையில் அமேரிக்கா மட்டுமல்லாது பிற நேட்டோ நாடுகளும் சிக்கிக்கொண்டு இன்றுவரை அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
           அதுபோல தினம் ஒரு கேசட்&கிறுக்கல் ஓவியங்கள் அனுப்பப்படுவதும் ஒருவித trap தான்.அதில் ஜார்ஜ்ஸ் சிக்கவேண்டும்.அதனால் அவனுக்கு கடும் உளவியல் நெருக்கடி&குற்ற உணர்வை உண்டாக்கி அதன்மூலம் குடும்பத்தில் சரிசெய்ய முடியாது  விரிசல் உண்டாக்குவது என்பதே இதை அனுப்பியவனின் நோக்கம்.            தான் சிறுவயதில் வளர்ந்த வீடு கேசட்டில் காட்டப்பட தனியாக வசிக்கும் வயோதிக தாயை வெகுகாலம் கழித்து சந்திக்கிறான்!தாய் ஆச்சரியப்படுகிறாள்.அவளிடம் 'மஜீதை நினைவிருக்கா?நீங்கள் கூட அவனை தத்தெடுக்க நினைத்தீர்களே?' என்று கேட்க "அதெல்லாம் நினைவில்லை!" என்கிறாள்.
            மஜீத்!ஒரு அல்ஜீரிய குடும்பத்தை சேர்ந்தவன்.அவனது பெற்றோர்கள் ஜார்ஜ்ஸ்ன் குடும்பத்திற்காக பணிபுரிபவர்கள்.பாரிஸ்ல் அல்ஜீரிய விடுதலை அமைப்பை சார்ந்தவர்கள் கொன்றிழக்கப்பட்ட பேரழிவில் அவர்கள் இருவரும் மரிக்கிறார்கள்.மஜீத் தனித்து விடப்பட, ஜார்ஜ்ஸ்ன் தந்தையும் தாயும் அவனை தத்தெடுக்க முடிவெடுக்கிறார்கள்.மஜீத்துக்கு தனி அறை அதை ஜார்ஜ்ஸ்ம் பகிர்ந்துகொள்ள வேண்டும்!ஆறுவயது சிறுவனுக்கு இதெல்லாம் கடும் எரிச்சலை உண்டாக்குகிறது.சிறுவன் ஜார்ஜ்ஸ் ,மஜீதிடம் கோழியின் தலையை வெட்ட சொல்லி, பிறகு தனது பெற்றோரிடம்  தன்னை பயமுறுத்தவே இதை அவன் செய்தான் என்று இட்டுகட்டி அவனை வீட்டை விட்டே துரத்தும்படி செய்கிறான்.அனாதை இல்லத்தில் கடுமையான சூழலில் வளர வேண்டிய கட்டாயத்தில் மஜீத்.ஜார்ஜ்ஸ்க்கு கிடைத்த உயர்தர கல்வி உயர்குடி வாழ்க்கை எதுவும் மஜீத்துக்கு கிடைக்காமலே போக ஜார்ஜ்ஸ் காரணம்.
         சிறுவன் ஜார்ஜ்ஸ் சொல்லும் இத்தகைய சிறு புகார்களை அப்படியே நம்பிய ஜார்ஜ்ஸ்ன் பெற்றோர்கள் எத்தகையவர்கள்?அல்ஜீரியர்களுக்கு எதிரான முன்முடிவு கொண்டவர்களா?அவர்கள் வன்முறை ஆசாமிகள் என்பது மனதில் ஆழ பதிந்தவர்களா?இல்லாவிட்டால் எப்படி ஒரு சிறுவன் சொன்ன புகாரை நம்பி மஜீதை அவர்கள் அனாதை இல்லத்தில் சேர்க்க முடிவெடுத்தார்கள்? என்று இங்கேயும் பல கேள்விகள்!
           மஜீதை ஜார்ஜ்ஸ்ன் வீட்டில் இருந்து அனாதை இல்ல நிர்வாகிகள் அழைத்து செல்லும் காட்சி தூரக்காட்சியாக எவ்வித ஓசையும் இல்லாது மவுனமாக காட்டப்படுகிறது.மஜீதின் போராட்டம்.அடம் பிடிக்கும் மஜீதை அமுக்கிபிடித்து வண்டியில் ஏற்றும் அனாதை இல்ல நிர்வாகி என்பதாக அக்காட்சி பார்வையாளனை சலனப்படுத்துகிறது.எதையும் செய்யாமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளனாகிய நம்மை ஒருவித குற்ற உணர்விற்கு உள்ளாக்குகிறது(நான் முதலில் சொன்னபடியே ஹேன்கியின் ஸ்டைல் இதுதான்!)

                  மீண்டும் இன்னொரு கேசட்.அதில் ரோடில் காரின் ஊடே ஒரு கேமரா படம் பிடித்தபடியே சென்று மலிவான ஒரு குடியிருப்பில் குறிப்பிட்ட எண் வீட்டில் கதவில் போய் முடிகிறது.அங்கே சென்று ஜார்ஜ்ஸ் பார்க்கிறான்.அங்கெ மஜீத்!மஜீத் பழைய சம்பவங்கள் எதனாலும் பாதிக்கப்படாத பழையவன்மங்கள் எதுவுமே இல்லாத ஒரு நபராகத்தான் காட்டப்படுகிறார்.ஜார்ஜ்ஸ்-ஐ அன்போடும் ஆச்சரியத்தோடும் வரவேற்கிறார்.ஆனால் ஜார்ஜ்ஸ் கடும் வன்மத்தோடு மஜீத்தை வார்த்தைகளால் புண்படுத்திவிட்டு செல்கிறான்.அடுத்தநாள் கேசட்டில் இந்த உரையாடலும் ஜார்ஜ்ஸ் சென்றபின் மஜீத் கதறி அழுவதாகவும் கட்சிகள் ஓடுகிறது.மஜீதின் வீட்டுக்குள்ளேயே எங்கோ ஒரு இடத்தில் மறைவாக வைக்கப்பட்ட கேமரா மூலம் படமாக்கப்பட்ட காட்சிகள் அவை.
மஜீத்

              அப்போ மஜீத் நடித்தாரா?உண்மையில் படம் பிடித்து அனுப்பியது அவரா?அவரது மகனா? என்ற கேள்விகளெல்லாம் இறுதிவரை தொக்கி நிற்கிறது.ஜார்ஜ்ஸ் இருவரையும் போலீசில் மாட்டிவிடுகிறான்.எந்த காத்திரமான ஆதாரங்களும் அவர்களுக்கெதிராக இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
             பிறகு மஜீதின் மகன் ஜார்ஜ்ஸ்ன் அலுவலகத்தில் வந்து பேச முயல்கிறான்.அவனையும் கடுமையாக வசைபாடி துரத்துகிறார் ஜார்ஜ்ஸ்.
பிறகு மீண்டும் மஜீத் தன் இல்லத்திற்கு ஜார்ஜ்ஸ்-ஐ அழைக்கிறார்.கடுமையான எரிச்சலில் இருக்கும் ஜார்ஜ்ஸ் பேச முயல திடீரென்று மஜீத் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்தம் பீய்ச்சியடிக்க இறக்கிறார்.
             உண்மையில் இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும்.வன்முறை காட்சிகள் என்றால் நொடிக்கு நொடி மிசின் கன் சுடுவது,குண்டுகள் எறிவது,அரிவாள் வெட்டு,கத்திக்குத்து என்பவை மட்டுமல்ல.அதைவிட வலுவான அதிரவைக்கும் வன்முறை காட்சி உண்டு.படம் முழுக்க எல்லாருமே மிக மெல்லிய தொனியில் பேசிக்கொண்டிருக்க ஒரே ஒருவரி வசனத்தை ஒருவன் சத்தமாக பேசினால் அதுவும் வன்முறைதான்!அதுபோல இப்படத்தில் எவ்வித அதிரடி கேமரா நகர்வுகள் ஆக்ஷன் காட்சிகள் இல்லாத நிலையில் திடீரென்று மஜீத் கழுத்தை அறுத்துக்கொண்டு இறப்பது மிகக்கடுமையான வன்முறையை பார்வையாளனுக்கு கடத்துகிறது.
ஜார்ஜ்ஸ்

        மஜீத் கழுத்தை அறுத்துக்கொன்டதும் உடனே வழமையாக கேமரா ஜார்ஜ்ஸ்ன் முகத்திற்கு க்ளோசப் செல்லவில்லை.மஜீத்தையே அசையாமல் காட்டிக்கொண்டிருக்கிறது.நாமும் மவுன சாட்சியாக அதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.தனது மரணத்திற்கு ஒரே சாட்சியாக ஜார்ஜ்ஸ்ஐ இருக்க வைப்பதன்மூலம்(அங்கே கதவை தாழித்துவிட்டு அங்கேயே சரிந்து மரிக்கிறார் மஜீத்.அந்த உடலை தாண்டி செல்லாமல் ஜார்ஜ்ஸ்-ஆல் வெளியே செல்ல முடியாது) மஜீத் சொல்லவருவது என்ன?
           "எனக்கு கிடைக்கவேண்டிய உயர்குடி வாழ்க்கையை தட்டிப்பறித்த உன் கண் முன்னேயே என் உயிரை விடுகிறேன்.இந்த மரணத்தின் குற்ற உணர்வு உன் வாழ்நாள் முழுவதும் உன்னையே சுற்றிக்கொண்டிருக்கும்" என்று மஜீத் சொல்லாமல் சொல்கிறாரா?ரகசிய கேமரா கொண்டு படம் பிடித்து கேசட் அனுப்பியது மஜீதின் மகனா?அப்போது மஜீத் சிறுவயதில் துரத்தப்பட்டது அவர் மகனுக்கு தெரியுமா?இப்படி பல கேள்விகள் பார்வையாளனை நோக்கி கேட்கப்படுகின்றன.
            இடையில் ஜார்ஜ்ஸ்ன் மகன் பதின்ம வயதினருக்கே உரிய ஒருவித விரக்திநிலை,பெற்றோரை கண்டாலே எரிச்சல்,பெற்றோரின் கேள்விகள் அக்கறைகள் மீதான ஒவ்வாமை இவை தாங்காமல் நண்பன் வீட்டில் ஓரிரவு பெற்றோரிடம் சொல்லாமல் தங்குகிறான்.பதட்டமடையும் ஜார்ஜ்ஸ் மற்றும் ஆன் எங்கு தேடியும் பிள்ளை கிடைக்காததால் மீண்டும் மஜீத் மற்றும் அவரது மகன் மீதே சந்தேகப்படுகின்றனர்.அடுத்தநாள் கூலாக வீட்டிற்கு வந்துவிடுகிறான் பியர்ரே.அவனுக்கு தனது பெற்றோரை ஓரிரவு முழுக்க  பதட்டமடைய செய்ததன் மூலம் தான் அனுபவிக்கும் விரக்திநிலைக்கான சிறு ஆசுவாசமாய் சிறு மருந்தாய் அதை  அவன் உணர்கிறான்!இது சாடிசமா என்றால் ஆம் இல்லை என்று தெளிவாக சொல்லிவிட முடியாத ஒரு கேள்வி.
பியர்ரே

             அவிழ்க்கப்படாத முடிச்சுகள்; தீர்க்கப்படாத மர்மங்கள்; தண்டிக்கப்படாத குற்றங்கள் எதுவும் மிச்சமிருந்து பார்வையாளனை குழப்பி விடவேகூடாது என்று உறுதியாக  இருக்கும் ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில் பல்வேறு கேள்விகள்,சந்தேகங்கள்,தீர்க்கப்படாத மர்மங்களோடு படத்தை முடிப்பார் ஹேன்கி.மேற்சொன்னவாறு  எல்லா குழப்பங்களையும் தீர்ப்பதாக  முடித்தால் படம்  முடிந்ததுமே பார்வையாளன் அந்த சினிமாவை மறந்துவிடுவான்.இந்தமாதிரி தொக்கி நிற்பது போலவும்; பல்வேறு அணுகுமுறைகள் கொண்டதாக  (ambigious) முடிப்பதன் மூலம் பார்வையாளன் படத்தை மறக்காது இருப்பான்  என்பது  அவர்  வாதம்!
        மேலும் படம் டிஜிட்டல் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது.சினிமா என்று தெரியாது நிஜத்தில் ஜார்ஜ்ஸ்ன் குடும்பத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம்!மேலும் ஜார்ஜ்ஸ்ன் குடும்ப நடவடிக்கைகளை படமாக்கி அனுப்பப்பட்ட கேசட்டுகளை பார்க்கும்போது எப்படி காட்சியமைப்பு உள்ளதோ அதேபோலத்தான் படம் முழுவதும் உள்ளது.அதற்காகவே டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தியிருக்கிறார்.அதாவது நாமே ஜார்ஜ்ஸ்ன் வாழ்வை ஒளிந்திருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்துதல்.
                 படம் முடியும் காட்சியில் நமக்கு யாரென்றே தெரியாத இருவர் பேசிக்கொண்டிருப்பதாக முடிகிறது.அப்படி பார்த்தால் ஜார்ஜ்ஸ் ஆன்ஆகியோருமே நமக்கு யாரென்று தெரியாதவர்கள்தான்!அவர்களின்  எந்த பரிமாணத்தை இயக்குனர்  நமக்கு காட்டினாரோ  அந்தளவே அவர்கள் பற்றி தெரியும்!அவர்களுமே  நமக்கு  அன்னியர்கள்தான்!