Friday 29 September 2017

Das Experiment 2001

                                           நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்; எதிர்த்தாலும் உடன்பட்டு போனாலும் நாம்அனைவருமே  அதிகாரத்தின் கட்டுப்பாட்டில்தான்  இருக்கிறோம்.அரசு அதிகாரம்,அரசுகள் ஆதரவு  பெற்ற  பன்னாட்டு நிறுவனங்கள்,அரசு  சிக்கலில்லாமல்  நடக்க  சிறுவயதிலிருந்தே மக்களை  அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு செல்ல  பழக்கப்படுத்தும்  கல்வி நிறுவனங்கள் என்று பல  அதிகாரங்களின்  பிடியில்தான்  நாம்  அனைவருமே   இருக்கிறோம்.
           அது  சனநாயக  அரசோ  சர்வாதிகார  அரசோ  பழங்கால  மன்னராட்சிகளோ  எதுவாக இருப்பினும்  அரசு  என்பது   மக்களின்  மீது  அதிகாரம்   செலுத்தி  ஆள்வது! எந்தளவு  அதிகாரம்;வெளிப்படையான  அதிகாரமா?அல்லது சனநாயக போர்வையில்  அதிகாரமா  என்பதில்   வேண்டுமானால்  வித்தியாசங்கள்  இருக்கலாம்!
             இப்படத்தில்   ஒரு   பரிசோதனைக்காக சில  நபர்கள்  தேவைப்படுவதாக  விளம்பரம்  வருகிறது.நாலாயிரம்  பிரான்குகள்  பரிசோதனையின் முடிவில்  வழங்கப்படும்   என்பதாக  விளம்பரம் சொல்கிறது.வேறெதையும்  விளக்குவதில்லை.

             இந்த பரிசோதனை என்பது ஏதோ இந்த கதைக்காக யோசிக்கப்பட்டதல்ல!Stanford prison experiment என்று 1971 ல் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட நிஜ பரிசோதனையை ஒட்டியே இப்படம் அமைந்துள்ளது.அந்த பரிசோதனைக்கு ஸ்பான்சர் செய்தது அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி நிறுவனம். அதில்  கல்லூரி  மாணவ  மாணவிகள் கைதிகளாகவும் காவல்  அதிகாரியாகவும்  இருக்க  ஒப்புக்கொண்டார்கள்!அதிலும்  உடல்  ரீதியான  சித்திரவதைகள்  இல்லாவிடினும்  உளவியல்  ரீதியான  சித்திரவதைகள் தாராளமாக  கைதிகள் மேல்நேரடியாகவோ மறைமுகமாகவோ திணிக்கப்பட்டன.
          ஜெயில்  செட்டப்.பாதி  நபர்கள்  கைதியாகவும்  மீதி  பேர்  காவல் அதிகார்களாகவும்  நடிக்க  வேண்டும்.கைதிகளுக்கு  உள்ளாடைகள் இல்லாத ஒரே ஒரு   "ஆபரேசன்   பேசன்ட்" உடுப்பு.காவல்   அதிகாரிகளுக்கு  வழக்கமான  காவல்  உடுப்பு  லத்தி  கைவிலங்கு  உண்டு..ஆனால்  அவர்கள்  கைதிகள் மேல  வன்முறையை செலுத்த  உரிமையில்லை  என்பது  முக்கியமான  விதி.


           மேற்கண்ட   கண்டிசனை   கண்டதும்  "ஆகா!வன்முறை  இல்லை!அப்போ  கைதிகள்  நிம்மதியா   இருக்கலாம்"  என்ற  எண்ணம் எழலாம்!ஆனால் இங்கே  தடுக்கப்பட்டிருப்பது  உடல்  ரீதியான  வன்முறை  மட்டுமே!அதாவது  அடிப்பது  உதைப்பது  போன்று.மற்றபடி  மனரீதியான  வன்முறைக்கு  தடையில்லை!  அதாவது  கைதியின்   கையில்   விலங்கு   மாட்டி   தனியே  உணவு  நீர்   கொடுக்காமல் நாள் கணக்கில்  அமரவைப்பது(வாயில்  பிளாஸ்திரி  ஒட்டி)  என்பது போன்ற  சித்திரவதைகளுக்கு  தடையில்லை.
          ஆரம்பத்தில்  கைதி-போலீசு  வித்தியாசம்  என்பது  பெரிதாக  இல்லை!கைதிகளாக  நடிப்பவர்கள்  போலீசாக இருப்பவர்களை  கேலி  செய்கிறார்கள்,கொஞ்சம் வார்த்தை  ரீதியில்  அவமானப்படுத்தவும்  செய்கிறார்கள்.அதை போலீசு வேடத்தில் இருக்கும்  சிலர்  ஜாலியாக  எடுத்துக்கொள்ள,  வேறுசில போலீசுகள்   இதை கவுரவ பிரச்சனையாக பார்க்கிறார்கள்.அத்தோடு நில்லாமல்  ஜாலியாக  எடுத்துக்கொண்ட  போலீசுகளை  "நீ போலீசு"  என்று நினைவுபடுத்துகிறார்கள்.
           கைதிகளுக்கு  வழங்கப்படும்  உணவில்  கொஞ்சம் கூட  மிச்சம் வைக்காமல்  சாப்பிட  வேண்டும்  என்பது மற்றொரு  விதி.உணவோடு   பாலும்  வழங்கப்படுகிறது.ஒரு  கைதிக்கு  பால் அலர்ஜி!குடிக்க  மறுக்கிறார்.உடனே மற்றொரு கைதி தெரிக்  பஹ்த்(கிட்டத்தட்ட இவனைத்தான் படத்தின்  நாயகனாக  காட்டுகிறார்கள்) "இத காலி  பண்ணனும்!அவ்வளவுதான?"  என்று சொல்லி  அவனே பாலை  குடிக்கிறான்.கைதிகள் ஆரவாரம்  செய்கிறார்கள்.
பஹ்த்

        அடுத்தநாள் வலுக்கட்டாயமாக  பாலை திணித்து குடிக்கவைக்க அவன்  வாந்தி  எடுக்கிறான்.
           முன்பு சொன்ன  கைதிகளின் மேல் உடல்  ரீதியானவன்முறை என்பது அனுமதிக்கப்படாத நிலையில் வேறெப்படி அவர்களை கூனிக்குறுக செய்யலாம்?சமூகத்தில் ஒரு மனிதனுக்கான  மரியாதையை தருவது அவனது உடைகள் மற்றும் சிகை அலங்காரம்.
            கைதிகளின் உடைகள் வலுக்கட்டாயமாக களையப்படுகின்றன.ஒருநாள் முழுக்க அனைவரும் நிர்வாணமாக இருக்கவைக்கப்படுகிரார்கள்.அனைவருமே கூனிக்குறுகி போகிறார்கள்.அடுத்த கட்டமாக கைதிகளிடையே நிலவும் "சமநிலையை" கலைத்துக்கொண்டே  இருக்கும்  பஹ்த்தின் தலை மொட்டையடிக்கப்படுகிறது.

                அதோடு நில்லாமல் களையப்பட்ட அவனது உடையைக்கொண்டே கழிப்பறையை கழுவி துடைக்க வைக்கிறார்கள் போலீசாக நடிக்கும் ஆசாமிகள்.உடை முழுக்க  மலக்கறை மற்றும் குமட்டும் நாற்றத்தோடு அதே உடையை திரும்ப அணிய வைக்கிறார்கள்.ஒருவனை உடல்ரீதியில் அவமானப்படுத்துவதோடு அவனை மன ரீதியில் முழுமையாக உடைத்துப்போடத்தான் எத்தனை வழிகள் எத்தனை கண்டுபிடிப்புகள்!

          மேலும் ஆட்சியதிகாரம் என்பது மக்கள் மீது நிலையாக செலுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கத்தான் சாதி,மதம்,பள்ளிகளில் நிகழ்த்தப்படும் domestication,வெகுஜன ஊடகங்கள்,வெகுஜன சினிமா போன்று பல்வேறு கருவிகள் பயன்படுகின்றன.ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மைகள் உண்டு.அவைகளை அதிகரிக்க விடாமல் அவைகளை மேலெழும்ப செய்யாமல் தடுப்பதே  ஆட்சி அதிகாரம் செய்வோருக்கும் பிற நிறுவனங்களுக்கும் தலையாய பணியாகிறது.இந்த பரிசோதனையிலும் தனித்தன்மைகள் ஒடுக்கப்படுகின்றன.குழு நடவடிக்கைகளை மீறி செயல்படுவோர் மிக கொடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.அதன்மூலம் குழுவில் உள்ள பிறர் தங்களுக்குள்ளேயே ஒடுங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

      படத்தில் தேவையில்லாததாக நான் உணர்ந்தது அந்த பெண் வேடம்.ஹாலிவுட் பாணியில் ஒரு உடலுறவு காட்சி,அப்புறம் பஹ்த்க்கும் அவளுக்குமான உரையாடலில் ஹாலிவுட் க்ளீஷேவாக சிறுவயதில் தனது தந்தை செய்த சித்திரவதைகளை(you know my old man used to lock me up in a room...blah blah) விவரிப்பது,அந்தப்பெண் அவனது அபார்ட்மெண்டில் தங்குவது,அவள் காணும் சில சர்ரியலிச பாணி கனவுகள் இதெல்லாம் தனியே துருத்திக்கொண்டு நிற்கின்றன.

          மிக முக்கியமாக குறிப்பிட விரும்பும் முரண்பாடு ஒன்று உண்டு.படத்தின் இறுதியில் இந்த பரிட்சார்த்த முயற்சியில் சிக்கிக்கொண்ட அனைவரும் காப்பாற்றப்படுகிறார்கள்...யாரால்?அரசால்!அதாவது ஒரு சிறு அதிகாரக்குழு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை நசுக்கும்போது அதிலிருந்து மக்களை விடுவிக்க அதைவிட பெரிய அதிகாரம் கொண்ட அமைப்பு தேவைப்படுகிறது ! ஒருவேளை அந்த பெரிய அதிகாரம் கொண்ட அமைப்பு அதே நசுக்கும் வேலையை செய்தால்???? என்ற முக்கிய கேள்வியை இப்படம் எழுப்புவதாகவே நான்உணர்கிறேன்.(கடைசியில்காப்பாற்றப்பட்டவர்களை கேமரா காட்டிக்கொண்டே செல்கிறது.யார் காப்பாற்றினார்கள் என்பதை காட்டாமல்!)

No comments:

Post a Comment