Wednesday, 3 January 2018

Synecdoche, New York (2008)

                               Uncomfortable movies to sit through பட்டியலில் தான் இப்படத்தின் பெயரை பார்த்தேன்.பொதுவாக அந்த மாதிரி படங்கள் என்றால் ஒருவித ஈர்ப்பு!மதிய வேளையில் சுடுமணலில் நிற்க வைத்ததுபோல "இதமாக" இருக்கும்!உதாரணமாக பெர்க்மன் படங்களை சொல்லலாம்.மைக்கேல் ஹேன்கி படங்கள் வேறுவகையாக சுடும்!

                          படத்தின் துவக்கத்தில் தியேட்டர்(இங்கே தியேட்டர் என்பது நாடகத்தை குறிக்கும்) இயக்குனரான கேடன் அவரது மனைவி அடில்,நான்கு வயது மகள் ஆலிவ் மூவருமே hypochondriac ஆக காட்டப்படுகிறார்கள்.ஆலிவின்  பதட்டங்கள் என்பதும் உடல்நிலை சார்ந்தே உள்ளது.மலத்தின் நிறம் மாறியது ஏன் என தாயிடம் திரும்பத்திரும்ப வினவுகிறாள்.Pipe னா என்னான்னு ஆலிவின் கேள்விக்கு  கேடன் விளக்கும்போது "உடலில் ரத்தம் ஓடுதே அதைப்போல வீடுகளில் பைப்புகள் ஓடுது" என்று சொன்னதும் ஆலிவ் பதட்டமடைந்து கத்த ஆரம்பிக்கிறாள்!"எனக்கு ரத்தம் வேண்டாம்"!
Olive

                ஆனால் இந்த hypochondriac தன்மை என்பது பிறகு அடில்&ஆலிவிடம் காண முடிவதில்லை.ஆனால் கேடனிடம் காண முடிகிறது.சிறுநீரும் மலமும் ரத்தமாக போகிறது.பொது மருத்துவரிடம் காட்டினால் கண் டாக்டரிடம் போக சொல்கிறார்!அவரிடம் சென்றால் நரம்பு ஸ்பெசலிஸ்ட்டிடம் போக சொல்கிறார்!Dentist இடம் சென்றால் அவர் periodontist இடம் சென்று ஈறுகளை கவனிக்க சொல்கிறார்!இக்காட்சிகள் தொடர்ச்சியாக அவல நகைச்சுவையாகவே வருகிறது.மருத்துவமனையில் காத்திருக்கும் கேடனை நர்ஸ் பெயர் சொல்லி அழைக்கிறாள்.இவன் அவளை பின்தொடர்ந்து செல்லும்போது திடீரென்று இடைப்பட்ட ஒரு அறையில் இருந்து எட்டிப்பார்க்கும் டாக்டர் இவன் பேரை சொல்லி அழைக்க அந்த அறைக்குள் செல்கிறான்.அந்த நர்ஸ் அதை கண்டுகொண்டதாகவே  தெரியவில்லை!

                ஆனால் அந்த வியாதி(அது என்ன வியாதி என்று எந்த ஸ்பெசலிஸ்ட்ம் கண்டே பிடிக்கவில்லை என்பது மற்றொரு அபத்தம்) என்பது கேடனிடம் தொடரவில்லை!கைப்பிடி அளவு மாத்திரைகளை உண்டு உயிர் வாழ்கிறான்.
                அடில் ஆலிவை அழைத்துக்கொண்டு ஜெர்மனிக்கு சென்றுவிடுகிறாள்!தனியே கேடன்!தன்னை வைத்துக்கொண்டு என்ன செய்தான்?என்பதே படம்.

                படத்தை பார்க்கும்போது என்னை ஈர்த்தது படம் நெடுக நிலவும் bleakness.படம் செல்லச்செல்ல "என்னடா இது!எங்கெங்கோ திசை மாறி போகுதே!" என்ற குழப்பம் இருந்தது.படம் பார்த்து முடித்து இரண்டு மூன்று மணி நேரத்தில் படத்தின் பல்வேறு பரிமாணங்கள் மனதில் விரிய ஆரம்பித்தது!படம் எதைப்பற்றி சொல்ல வருகிறது என்பது விளங்கியது.அதை முழுவதுமாக வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்றாலும் என்னால் இயன்றதை சொல்கிறேன்.
             
             உலகில் பிறந்த அனைவருக்குமே கனவுகள் லட்சியங்கள் உண்டு.அதற்காக சிரமப்பட்டு படித்தோ அல்லது ஏதேனும் திறனை வளர்த்துக்கொள்ள அரும்பாடுபட்டு தங்கள் கனவுகள் லட்சியங்களை நோக்கிய பயணத்தை மேற்கொள்வர்!பெரும்பான்மையினரால் அந்த so called இலக்கை எட்டவே முடியாமல் போகும்!அப்படியே அடித்துப்பிடித்து இலக்கை அடைந்தவர்களுக்கும் அடைந்த  இலக்கின் மீதான ஈர்ப்பும் கவர்ச்சியும் காலப்போக்கில் மங்கிப்போய் நைந்து போன பொம்மையை கையில் வைத்துக்கொண்டு விழிக்கும் குழந்தை போல விழித்துக்கொண்டிருப்பார்கள்!ஆனால் அந்த ஏமாற்றத்தை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.

         மேலும்  தன்னை சுற்றி இருப்பவர்களையும் அவர்கள் தங்கள் இலக்கை அடைவதற்கான படிக்கல்லாகவே பார்ப்பார்கள்.உடல்  உழைப்பு/மூளை உழைப்பு இவை எல்லாவற்றுக்கும் மேல் உணர்வு ரீதியாக யாரையாவது சுமைதாங்கியாக பயன்படுத்திக்கொள்ளுதல்!(காதல்??).இப்படி சுற்றி இருப்பவர்களை தங்கள் தேவைக்காக பயன்படுத்தும்போதே அவர்கள் மீதான எதிர்பார்ப்பு என்பது உச்சத்தில் இருக்கும்!குறிப்பாக நட்பு -காதல்-மனைவி  இந்த உறவுகள் மீதான எதிர்பார்ப்பு.அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் அவர்கள் நடந்துகொள்ளாத போது சிக்கல் வருகிறது.இலக்கை நோக்கிய பயணம் தடுமாறுகிறது.அந்த நபர்களின் தனித்தன்மையை எதிர்கொள்ள தவறுகிறார்கள்.   மனரீதியாக அந்த நபர்கள் குறித்த முன்முடிவுகள் கனவுகள் எதிர்பார்ப்புகள் எல்லாம் சிதைய துவங்குகின்றன.
              அப்போது அவர்களையும் எதிர்கொள்ள முடியாமல் சுயமாக தன்னையும் எதிர்கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.
              இப்படத்தில் இந்த நடிகர் இந்த கதாபாத்திரத்தை செய்திருக்கிறார் என்று அறுதியிட்டு கூற முடியாது.கேடன் ஒரு மிகச்சிறந்த நாடகத்திற்கான ஒத்திகையை பார்க்கிறான்.அது உண்மையில் நாடகமல்ல!அது அவன் வாழ்க்கை!தனது கதாபாத்திரமாக நடிக்க நடிகரை தேடும்போது சேம்மி (Sammy)  வருகிறான்.
Sammy

"உன்னை இருபது வருடங்களாக நான் கண்காணித்து வருகிறேன்.உனது மன ஓட்டங்களே எனக்கு தெரியும்" என்று கேடனின் மன ஓட்டங்களை இவன் சொல்கிறான்.இவனை ஒத்திகைக்கு தேர்வு செய்கிறான் கேடன்.அவன் கேடனின் ஆழ்மனதில் இருப்பவற்றை எல்லாம் ஒத்திகையில் சொல்லி கிளைர் உடனான கேடனின் உறவின் முறிவுக்கு காரணமாகிறான் சேம்மி!
Everyone is disappointing the more you know them.
               ஏற்கெனவே பாக்ஸ் ஆபீசில் பணியாற்றிய ஹேசல்(Hazel) உடன் உறவு வைத்துக்கொள்கிறான் கேடன்.கேடனின் கதாபாத்திரத்தை நாடகத்தில் செய்யும் சேமமியும் ஹேசலை விரும்புகிறான்.கேடன் அவனை கண்டிக்க தற்கொலை செய்துகொள்கிறான் சேம்மி.
Hazel

            தனது மகளின் உடல் முழுதும் tattoo வரைந்து அவளை மாடலிங்கிற்கு பயன்படுத்துகிறாள் தாய் அடில்."நான்கு வயது சிறுமியை இப்படி படுத்துறீங்களே!" என்று கத்தும்போது அவளுக்கு பத்து வயது என்கிறாள் அடிலின் தோழி மரியா.மரியாவுக்கும் ஆலிவுக்கும் பின்னர் ஒருபாலின ஈர்ப்பு உருவாகிறது.ஆலிவின் சிறுவயது டயரியை கண்டுபிடிக்கிறான் கேடன்.அது நான்கு வயதில் அவள் பயன்படுத்திய டயரி என்றாலும் அவள் வளர வளர அவளின் வாழ்க்கை சம்பவங்கள் டயரியில் எழுத்தாக பிரதிபலிக்கிறது.அந்த tattoo க்கள் வரைந்ததில் ஏற்பட்ட நோய்த்தொற்றில் மரிக்கிறாள் ஆலிவ்.

       
             
                   இன்னொரு புறம் அடில் சிறுமியாக இருந்தபோது தனது தாயோடு பிக்னிக் வருகிறாள்.அப்போது அவள் "இருபது வருடம் கழித்து எனது மகளை இதே நாளில் இதே இடத்திற்கு பிக்னிக் அழைத்து வருவேன்" என்று தாயிடம் சொல்ல அவள் அகமகிழ்கிறாள்.ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு!எத்தனை கனவுகள்!எத்தனை கற்பனை கோட்டைகள்!
Adele

இப்போது இங்கே கவனிக்க வேண்டியது படம் செல்லச்செல்ல இந்த நாடக ஒத்திகை என்பது கேடனின் வாழ்வில் தனிப்பட்ட ஒரு பணியாக துவங்கி பிறகு அவனது நிஜ வாழ்வுக்கும் அந்த நாடக ஒத்திகைக்குமான கோடு அழிந்து போகிறது.அந்த நாடக ஒத்திகையே அவனது வாழ்வாக மாறுகிறது.இது ஒருவகையில் பின்நவீனத்துவ படமாகவே பார்க்க வேண்டும்!காரணம் கதை நடப்பது எந்த வருடம் என்பதும் சொல்லப்படுவதில்லை!காலம் skew செய்யப்பட்டதாகவே உள்ளது.ந்யூயார்க் என்று சொன்னாலும் அங்கே உள்ள கட்டிடங்களின் பாணி என்பது எவ்வகையிலும் பொறுத்த முடியாத(இதுவும் பி.ந பாணிதானே?) வினோதமான டிசைனோடு உள்ளது.

            படத்தில் முக்கியமான காட்சி என் நான் கருதுவது அந்த பாதிரி வேஷம் போட்ட நபர் அந்த இறுதி சடங்கு ஒத்திகையில் பேசும் வசனங்கள்!சுடும் யதார்த்தம் என்ற வார்த்தை கூட under statement!
   you are only here for a fraction of a fraction of a second. Most of your time is spent being dead or not yet born. But while alive, you wait in vain, wasting years, for a phone call or a letter or a look from someone or something to make it all right. And it never comes or it seems to but it doesn't really. And so you spend your time in vague regret or vaguer hope that something good will come along. Something to make you feel connected, something to make you feel whole, something to make you feel loved. And the truth is I feel so angry, and the truth is I feel so fucking sad, and the truth is I've felt so fucking hurt for so fucking long and for just as long I've been pretending I'm OK, just to get along, just for, I don't know why, maybe because no one wants to hear about my misery, because they have their own. Well, fuck everybody. Amen.

இதைவிட யதார்த்தமான வசனத்தை நான் கேட்டதில்லை!

நிஜ வாழ்க்கைக்கும் நாடக ஒத்திகைக்குமான இடைவெளி என்பது ஒரு கட்டத்தில் முற்றிலும் அழிந்துபோக கேடனால்   ஒன்றைத்தான் செய்ய முடிகிறது! காத்திருப்பது!மரணத்திற்காக!
     நாடக ஒத்திகையில் இருந்த அனைவருமே காலப்போக்கில் இறந்து போய்விட ஒரு நடிகை மட்டுமே மிஞ்சியிருக்கிறாள்.அவளது தோளில் தலைவைத்து சாய்கிறான்.Die என்று இயற்பீசில் குரல் வர இறந்து போகிறான்!

Now it is waiting and nobody cares. And when your wait is over this room will still exist and it will continue to hold shoes and dress and boxes and maybe someday another waiting person. And maybe not. The room doesn't care either.

படத்தில் குறையாக எனக்கு தோன்றியது மேக்கப்.இந்த prosthetics, வயதான தோற்ற மேக்கப் இதையெல்லாம் தமிழ் சினிமாவிலேயே பார்த்துப்பார்த்து சலித்துப்போய் விட்டதாலோ என்னமோ அந்த மாதிரியான மேக்கப் அணிந்த நடிகர்கள் திரையில் தோன்றும்போது கொஞ்சம் ஒவ்வாமையாக இருக்கிறது(Thanks to Kamal!) . இந்தக்கதைக்கு அது தேவைப்படுகிறது என்றாலும் கூட!
                         ஆனாலும் அந்த கெட்டப் மாற்ற ஒவ்வாமைகள் தாண்டியும் நிற்பது Philip Seymour Hoffman ன் நடிப்பு.தனிமையின் இறுக்கமான பிடியில், மகளை இழந்து, பல்வேறு நோய்களோடு நெருக்கமானவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் தகர்ந்து போய், நாடக ஒத்திகை ஒன்றையே வாழ்வாக கருதி காலநேர பிரிவுகள் குறித்த பிரக்ஞை இழந்து போய் மரணத்திற்காக காத்திருப்பவராய்  அற்புதமாக நடித்துள்ளார்!

        இப்படமென்பது ஜாலியான டைம் பாஸுக்கு பார்க்கும் படமல்ல!இது உண்மையில் நாடக ஒத்திகை பற்றிய படமுமல்ல!ஒரு தனிப்பட்ட மனித மனத்தின் எதிர்பார்ப்புகள்,ஏமாற்றங்கள்,வேதனைகள்,இழப்புகள்  அவன் மனதில் உள்ள பிற மனிதர்களின் பிம்பங்கள் அவற்றுக்கும் இவனுக்குமான  நிஜ மற்றும் கற்பனையான உரையாடல்கள் இவைகளை திரையில் project செய்திருப்பதே இப்படம்.
                      ஜிகினா வேலைகள் காட்டி வாழ்வு குறித்த மிகையான போலியான நடைமுறை சாத்தியங்களற்ற காட்சிகள் கொண்ட படங்களைவிட இதுபோல  யதார்த்தத்தை வாழ்வின் அபத்தத்தை மரணம் குறித்த உரையாடல்களை கொண்ட படங்களே எனக்கு அபிமானவைகளாக உள்ளன.

Monday, 1 January 2018

விழா மாலைப்போதில்-அசோகமித்திரன்

               ஃபிலிமோத்சவ்க்கும் திரைப்பட விழாவுக்குமான வித்தியாசத்தை விளக்குவதோடு துவங்கும் குறுநாவல் பிறகு கதைசொல்லி சுந்தர்ராஜ் தன்னைப்பற்றியும் தனது வாழ்க்கை பற்றியும் விளக்குவதாக கதை விரிகிறது.

                 வழக்கமாக அசோகமித்திரன் எழுத்துநடை என்பது விலகல் தன்மை கொண்டதாக இருக்கும்.ஒரு கதாபாத்திரம் எவ்வளவு சிரமத்தில் இருந்தாலும் "அது அப்படிதான்!அவர் அப்படி சிரமப்படத்தான் வாழ்கிறார்" என்ற தொனியிலேயே அவரது எழுத்துநடை இருக்கும்.தனது உணர்ச்சி கொந்தளிப்புகளை நேரடியாகவோ அல்லது ஏதேனும்இ கதாபாத்திரம்தி வாயிலாகவோ வெளிப்படுத்தவே மாட்டார்.அவரிடம் பிடித்ததே அந்த பாணிதான்! அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு மைய கதாபாத்திரமான சுந்தர்ராஜின் ஆற்றாமை,இயலாமை,வெறுமை,தொடர் இழப்புகளின் வழியே நிரந்தரமாக தங்கிவிட்ட கசப்பு,அது எள்ளலாக பிறர் மீது வெடிப்பது என்று கொஞ்சம் கொந்தளிப்பான நடையிலேயே இந்த குறுநாவல் எழுதப்பட்டுள்ளது.பிற எழுத்தாளர்களின் மொழிநடையை ஒப்பிடும்போது இது subtle தான்!ஆனால் அ.மி.யின் standard ல் இது உணர்ச்சிப்பூர்வமான(மிகையாக அல்ல) மொழிநடைதான்.

            சினிமா வேலையே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் சுந்தர்ராஜ் திரைப்பட விழாவிற்கு அழைக்கப்படுகிறான்.விழா நிகழ்வுகளைப்பற்றியும்; விழாவில் காட்டப்படும் சினிமாக்கள் பற்றிய விமர்சனங்களையும் அவன் எழுதித்தர வேண்டும்.சினிமாத்துறையில் நேரடியாக இல்லாவிட்டாலும் விளம்பரப்பிரிவில் பணியாற்றிய கசப்பான அனுபவங்கள் அதனால் அவனது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட இழப்புகள் எல்லாவற்றையும் தாண்டி அவன் ஹைதராபாத் செல்கிறான்.காரணம் அவன் தனது பழைய சூழலில்(சென்னை) இருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக்கொள்ள பார்க்கிறான்.
       கதையில் நான்கு இடங்களில் மரணம்/இறப்பது குறித்து வருகிறது.ஒவ்வொரு முறையும் அது வெவ்வேறு தொணியில் சொல்லப்படுகிறது.
    ஹைதராபாத் செல்ல சென்னை விமானநிலையம் செல்கிறான்.அவசர அவசரமாக செய்த முகச்சவரம் எரிகிறது.அப்போது அவனது தந்தை கொடுத்த பித்தளை ரேசரை இன்னமும் பயன்படுத்துவது பற்றிய நினைவு வருகிறது.முதன்முதலில் அவனது தந்தை அதை அவனிடம் வழங்கி அவன் சவரம் செய்தபோது கண்ட இடங்களில் கீறல் விழுந்து ஒரே எரிச்சல்.
  "நீங்க கொடுத்த ரேசர் எப்படி இருக்கு பாருங்க" என்று அப்பாவைக் கோபித்துக்கொண்டேன்.என் கோபத்தை பொருட்படுத்த முடியாத கவலைகளில் என் அப்பா மூழ்கியிருக்க வேண்டும்.என்னுடைய இரண்டாவது சவரம் சுடுகாட்டில்.........அந்த சுடுகாட்டு தொழிலாளி வெறும் தண்ணீர் தடவி என் முகத்தையும் தலையையும் மழித்த போது ஏகமாக எரிந்தது.அப்பாவும் மகனும் ஒரே நேரத்தில் எரிந்து கொண்டிருந்தோம்"

     இது கொஞ்சம் எள்ளலாக!
இதன்பிறகு ஹைதராபாத் செல்லும் விமானத்தில் செல்லும் சமயத்தில் இறப்பது குறித்து சில வரிகள் வருகிறது.
   "எனக்கு ஐந்தாறு விமான விபத்துக்கள் நினைவுக்கு வந்தன.இரு விபத்துக்களில் நானே எனக்கு நெருங்கியவர்களை இழந்திருக்கிறேன்.இறந்தவர்களின் வாரிசுகள் சார்பில் நிறைய இடங்களுக்கு அலைந்து திரிந்து அவர்களுக்குப் பணம் வாங்கி கொடுத்திருக்கிறேன்.இந்த விமான நொறுங்கி விழுந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என் அம்மாவுக்கு நிறையப் பணம் கிடைக்கும்"
 இப்படி தனது சொந்த வாழ்வின் கசப்புகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது இந்திய சினிமா,அபத்த காதல் கதைகள்,ஸ்டுடியோ அபத்தங்கள் என்று கேலியும் கிண்டலுமாகவே எழுதுகிறார்.அ.மி. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றியவர் மேலும் பல்வேறு திரைப்பட துறை பணிகளை செய்தவர் என்பதால் ஆங்காங்கே தனது சொந்த அனுபவங்களை கலந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.உதாரணமாக 
"என் கண்களுக்கு எல்லாமே அபத்த களஞ்சியமாகத் தான் தோன்றியது.அஷோக்குமார் சற்று முதிர்ச்சியுடன் பேசக்கூடுமே என்று நினைத்தேன்.ஆனால் அவரும் தடுமாறினார்"


நடிகை தேவிகா ராணி விழாவிற்கு வராத இயக்குனர்களை புகழ்ந்து தள்ளியதையும் அவர்கள் யாருமே விழாவிற்கு வரவில்லை என்று உறுப்பினர் ஒருவர் நினைவுபடுத்தியதையும் என்று நிஜ வாழ்வின் பிரபலங்களும் கதையில் வந்துபோகிறார்கள்.
அச்சுத் கன்யா 

      அசோக் குமார் தேவிகா ராணி இணைந்து நடித்த படம் அச்சுத் கன்யா.அப்படம் குறித்த எள்ளலும் உண்டு.
"எப்படி பார்த்தாலும் காதல் நிறைவேறாது.'அச்சுத் கன்யா'வில் நிறைவேறவில்லை.ஆனால் அதன் பிறகு வந்த பல படங்களில் அத்தகைய காதல் கை கூடி விடும்.ஒரே ஒரு வில்லன் எதிர்க்க,எட்டு பேர் கதாநாயகனையும் கதாநாயகியையும் மணமுடித்து விட்டுத்தான் மறுகாரியம் என்று செயல்படுவார்கள்.இந்த எட்டுப் பேரில் காமெடியனும் ஒருவனாக இருப்பான்.முடிவில் அவனும் அவனுடைய ஜோடியை மணந்து கொள்வான்"
என்று மொத்த இந்திய சினிமாவின் காதல் கதை அபத்தத்தை சுட்டுகிறான் சுந்தர்.
அசோக் குமார்-தேவிகா ராணி     அடுத்த மரணம் அவனது தங்கை சீதா.பல வருடங்கள் ஆகியும் திருமணம் ஆகாத விரக்தியில் இரண்டாவது மாடியில் இருந்து விழுகிறாள்.பன்னிரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிர் துறக்கிறாள்.அப்போது  சுந்தர் எவனோ ஒரு விளம்பர அதிகாரியின் உதவியாளனுக்கு உதவியாளன் பின்னாடி அலைந்து திரிந்து இரவு ஒரு மணிக்கு வீடு திரும்புகிறான்.வீடு பூட்டியிருக்க அசதியில் வெராண்டாவிலேயே  தூங்கிவிடுகிறான்.தங்கை இறந்து ஒரு நாள் கழித்தே அவனுக்கு விஷயம் தெரிகிறது.அங்கே ஓடுகிறான்.அம்மா  இருக்கிறாள்.தனந்தனியாளாக பன்னிரண்டு மணி நேரம் மருந்து வாங்கி கொடுத்து... தவித்து....
   "அம்மாவுக்கு என்னைப்பார்த்து அழத்தெரியவில்லை.வையத்தெரியவில்லை.பேசக்கூடத்தெரியவில்லை"
"இப்படித்தான் ஏற்கெனவே தனியனாக இருந்தவன் இப்போது  முற்றிலும் முழுவதுமாக தனியனானேன்"
அப்புறம் அம்மன் என்ன சொல்கிறாள்? என்று பார்ப்பதற்காக கோவிலுக்கு சென்றதாகவும் அங்கே ஒரு இளம்பெண் சுற்றத்தை பற்றி கவலைப்படாமல் அழுது கொண்டிருந்ததையும் "அழாதேம்மா" என்று சுந்தர் ஆறுதல் சொன்னதையும் சொல்கிறான்.அவள் ரேகா.சினிமாவில் அவளை பிரபல நடிகையாக்கிவிடத்தான் அவள் தாய் முட்டி மோதுகிறாள்.
      ரேகாவும் சுந்தரும் காதலிக்கிறார்கள்.பிறகு ஒரு அசம்பாவிதம்.ரேகாவின் தாய் சுந்தரை நம்பினால் மகளை ஸ்டாராக்க முடியாது என்று தெரிந்து ஹைதராபாத் அழைத்துசென்று விடுகிறாள்.பிறகு ரேகா ஜெயதேவி என்று பெரும் ஸ்டாரான கதை தனி.
இந்த திரைப்பட விழாவில் ஜெயதேவி சுந்தரை தனியே சந்திக்க விரும்புகிறாள்.சுந்தர் அதை பேட்டி எடுக்க ஒரு சந்தர்ப்பமாகவே பார்க்கிறான்!அவள் மீதான காதல்??என்னதான் மிக நெருக்கமாக ஒருவரோடு உணர்ந்தாலும் சந்திக்காத வருட இடைவெளி என்பது இட்டு நிரப்பவே முடியாத ஒரு அகழியாக மாறிவிடும்.
" ரேகா,சில சமயங்களில் விரிசல் வரும்.விரிசலை சரி பண்ணிவிடலாம்.துண்டாகும்.உடனே ஏதாவது பண்ணி அதைக்கூட சரிபண்ணி விடலாம்.ஆனா நம்ம விஷயத்திலே துண்டாகி தூளாகி எல்லாம் காத்திலே பரந்தாச்சு"
"பழையது எல்லாம் முடிந்து விட்டது.உன்னை ரேகா ரேகா என்று கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேனே தவிர,நீ ரேகா இல்லை.நான் எப்போதோ செத்துப்போயாகி விட்டது."


முன்பொருமுறை இருவரும் தற்கொலை செய்துகொள்ள முயன்ற பேச்சும் சுந்தர் நினைவுக்கு வருகிறது.
தங்கை இறந்ததும் தனக்கு ஏற்பட்டதை சுந்தர் ரேகாவிடம் சொல்கிறான்.
"........ஒருவாரம்,பத்து நாள்கூட நான் எப்போதும் போல் இருந்தேன்,ஆனால் அதற்குபிறகு ஒரு வலி ஆரம்பித்தது.வலிச்சுக் கொண்டேயிருக்கு.சில சமயங்களில் தாங்க முடியலை.இன்னக்கு அரை மணி முன்னால் அப்படித்தான் இருந்தது.நானே தற்கொலை செய்து கொண்டு விடுவேனோ என்றுகூட நினைச்சேன்"
இப்படி கதை முழுவதும் மரணம் இழப்பு அதனால் ஏற்பட்ட கசப்பு வெறுமை இவைகள்தான்."கசப்பின் ருசி!"
   சுந்தரோடு இதே சினிமா விளம்பர பணியில் டெக்னீஷியன் ஆக சேர்ந்த அனந்து திருமணமாகி குழந்தை பெற்று பிறகு தந்தையின் வற்புறுத்தல் முயற்சியினால் ஹிண்டு பத்திரிகையில் சேர்ந்தது அவன் வாழ்க்கை அப்படிப்போக சுந்தர் தங்கைக்கும் திருமணம் செய்துவைக்க முடியாமல் அவளை பலி கொடுத்து தனியனாக நிற்கிறான்.
   ஹோட்டல் அறையின் தனிமையில் சுந்தரின் கசப்புணர்வு மேலும் கிளர்ந்தெழுகிறது. தாங்க  முடியாத அளவுக்கு ...
"ஓவென்று கத்த தோன்றியது.......கூப்பிட்ட குரலுக்கு திரும்பி பார்க்காவிட்டாலும் விபரீதமாக யாராவது கத்தினால் உலகம் திரும்பி பார்க்கும்.என்னை யாரும் திரும்பிப்பார்க்க வேண்டாம்.எனக்கும் யாரையும் திரும்பிப்பார்க்க வேண்டாம்.........என் தலையை இனியும் எங்காவது மோதிக்கொள்ளாமல் இருக்க முடியாது என்ற கட்டத்தை அடைந்தபோது யாரோ கதைவைத்தட்டும் சத்தம் கேட்டது.என் முன்னிரவுப்பகல் கனவு கலைந்து எழுந்தேன்"
 இப்படி சினிமா துறையில்த இருந்ததால் தனிப்பட்ட வாழ்வின் உண்டான கசப்புகள் இழப்புகள் அனைத்தையும் மீண்டும் அந்த சினிமா பார்த்தே கரைப்பதாக!
 அடுத்த பதினைந்து நாட்களுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை அவன் பார்த்து விமர்சனம் எழுத வேண்டும்.
"என் மூளையில் என் சிந்தனை என்று ஒன்றும் இருக்காது..........என் சொந்தத் துக்கங்களுக்கு இரு வாரங்களுக்கு விடுமுறை"