Sunday, 13 October 2019

Executive Action (1973)


              
            இப்படம் வெளியானபோது வைக்கப்பட்ட விமர்சனங்கள் பல : படத்தில் ஒரு ஆழம் இல்லை.தவிர படத்தில் எல்லோரும் கிளிப்பிள்ளை போல வசனத்தை ஒப்பிக்கிறார்கள்,பல கற்பனை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்..etc..etc..ஆனால் கென்னடி படுகொலை தொடர்பாக சந்தேகம் எழுப்பிய முதல் முழுநீளப்படம் இதுவே!கென்னடி கொலை நிகழ்ந்து பத்தாவது ஆண்டு நினைவாக படம் வெளியிடப்பட்டது.படம் பார்க்க வந்தவர்களுக்கு பல்வேறு புகைப்படங்கள் ஆவண தகவல்கள் என்று ஒரு pamphlet போல வழங்கப்பட்டது.

    சரி படத்தில் பல சம்பவங்கள் அதில் காட்டப்பட்டது போல நிகழாமல் இருந்திருக்கலாம்.கதாபாத்திரங்கள் மாறுபட்டிருக்கலாம்.ஆனால் படம் எழுப்பும் கேள்விகள் ...அதை மறுக்க முடியுமா?என்றால் இல்லை என்பதே பதில்.
     கென்னடி சோவியத்துடன் சமாதானமாக போவது பற்றி பேசுதல்,வியத்நாமில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க படைகளை விளக்கிக்கொள்ளுதல் பற்றிய வாக்குறுதி,சிஐஏ அமைப்பையே கலைக்கும் முயற்சி என்று பல பேச்சுக்கள் செய்திகள் காட்டப்படுகின்றன.அதை ஒரு குழு பார்த்துக்கொண்டிருக்கிறது.அக்குழு யார் என்ன?என்பது பற்றியெல்லாம் சொல்லப்படுவதில்லை.என்றாலும் அது தீவிர வலதுசாரி குழு என்பது உறுதியாகிறது.இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் KKK மாதிரியான ஒரு வெள்ளை ஆதிக்க குழு,போர் தளவாடங்கள் விற்கும் தொழிலதிபர்கள் அடங்கிய குழு.அவர்களுக்கு கென்னடி பெரும் இடைஞ்சல்!He must go! 
கொலைக்கு நிதி அளித்தவராக காட்டப்படுபவர்

   கென்னடியை எங்கே வைத்து கொல்லலாம் என்பது பற்றிய விவாதங்கள் நடக்கிறது.பிறகு டல்லாஸ்க்கு திறந்த காரில் செல்ல உள்ளார் என்ற தகவல் கிடைத்ததும் அங்கேதான் அவரை முடிக்க வேண்டும் என்று இடத்தை உறுதி செய்கிறார்கள்.பிறகு அவரது வாகன அணிவகுப்பு செல்லும் இடங்களை மேப்பில் ஆராய்ந்து மூன்று இடங்களில் மூன்று துப்பாக்கி சுடும் வல்லுனர்களை இருத்தி கென்னடியை ஒரு triangulated gunfire zone(மூன்று புறத்தில் இருந்து சுடுவதற்கு வாகான இடம்) க்குள் கொண்டுவருதல் பற்றி திட்டமிடுகிறார்கள்.அதாவது ஒரு துப்பாக்கி குண்டில் இருந்து அவர் தப்பித்தாலும் மீதமுள்ள இரண்டு நபர்களின் குண்டிலிருந்து தப்பிக்க வாய்ப்பு மிக மிக குறைச்சல்.

      மலைப்பாங்கான இடத்தில் பயிற்சி எடுக்கிறார்கள்.,மூவரும் மூன்று வெவ்வேறு இடங்களில் துப்பாக்கியோடு நிற்க ஒரு திறந்த காரில் ஒரு ஆளுயர பொம்மை போல வைத்து அதை ஓட்டி செல்கிறார்கள்.அந்த கார் அந்த மூவரையும் கடந்து செல்லும் முன் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த வேண்டும்.டைமர் வைத்து பக்காவாக திட்டமிடுகிறார்கள்.இறுதியில் பொம்மையின் எந்தெந்த பகுதியில் குண்டு துளைத்தது என்பதையும் ஆராய்ந்து சுடுவோர் நிற்கும் இடங்களையும்  டைமிங்குகளையும்  இன்னும் fine tune செய்கிறார்கள்.
துல்லியமாக சுட பயிற்சி எடுக்கிறார்கள்

   சரி மூன்று கொலைகாரர்களை வைத்து முடித்துவிடலாம்.ஆனால் யாரை சிக்க வைப்பது?அங்கேதான் லீ ஹார்வி ஆஸ்வால்ட் சிக்குகிறான்.இவர்களின் திட்டம் குறித்தெல்லாம் அவனுக்கு எதுவும் தெரியாது.ஆனால் அவனை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?கொரிய யுத்தத்தில் US Marines ல் இருந்தவன்.பிறகு வெளியேறி சோவியத் யூனியன் செல்கிறான்.அங்கே சில காலம் இருந்துவிட்டு அங்கே சோவியத் குடிமகளான மரீனாவை மணம் புரிந்து மீண்டும் அமேரிக்கா திரும்புகிறான்!
மனைவி குழந்தையுடன் ஆஸ்வால்ட்


   சார்லி சாப்ளின் பற்றி பலருக்கும் தெரியும்.அவர் இடதுசாரி அனுதாபி என்று கட்டம் கட்டி அமெரிக்கா அவரை வெளியேற்றியது.பிறகு அவரது கடைசி காலத்தில் தான் ஏதோ பிச்சை போடுவது போல அமெரிக்காவுக்கு அழைத்து ஆஸ்கர் கொடுத்தார்கள்.எப்படி?வெறும் இடதுசாரி அனுதாபி என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவரை இப்படி குடைந்து எடுத்திருக்கிறார்கள்(மேலும் பல பல ஹாலிவுட் பிரபலங்கள் மெக்கார்த்தி ஆட்சியில் இப்படி நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள்).ஆனால் ஒரு ex marine ஆஸ்வால்ட் சகஜமா சோவியத் போகிறான்.திரும்ப அங்கிருந்து எந்த சிக்கலும் இல்லாமல் அமெரிக்கா திரும்புகிறான்.


  சோவியத் என்பது அக்காலத்தில் ஒரு இரும்புத்திரை என்பது தெரிந்ததே!அதற்குள் இவன் சுலபமா போயிட்டு சுலபமா அமேரிக்கா திரும்பி அங்கே வாழ துவங்குகிறான்.
 
சோவியத் குடியுரிமை அளிக்குமாறு ஆஸ்வால்ட் வேண்டிக்கொண்ட கடிதம்
சிஐஏ எப்பிஐ ஆகியோரின் கண்காணிப்பில் அவன் இருக்கிறான்.தெருவில் நின்று கேஸ்த்ரோ ஆட்சியை காப்பாற்றும்படி துண்டு சீட்டு கொடுக்கிறான்.அசல் வீடியோ கீழே.


   ஆக இத்தனை கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் ஒருவன் தனியே திட்டமிட்டு எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி  கென்னடியை கொன்றான் என்பதெல்லாம்  அப்பட்டமான புழுகு என்பது உறுதியாகிறது.கடைசியில் மெக்ஸிகோ சென்று அங்கிருந்து கூபா செல்லவும் முயன்றுள்ளான்.அப்புறம் முடிவை மாற்றிக்கொண்டு டெக்சாஸ் வந்து டெக்சாஸ் ஸ்கூல் புக் டெப்பாசிட்டரி(TSBD) ல் வேலைக்கு சேர்கிறான்.

    இப்ப முதலில் சொன்ன அந்த குழு ஆஸ்வால்ட் மாதிரியே ஒரு இளைஞனை பிடித்து ஆஸ்வால்டின் நடை உடை பாவனை உச்சரிப்பு முறை போன்றவற்றை வீடியோ கேசட் மூலம் காட்டி அந்த இளைஞனை அவனைப்போலவே பழக்குகிறார்கள்(பில்லா படத்தில் அலெக்சாண்டர்-   ராஜப்பாவிடம்  பில்லாவின் வீடியோ  கேசட்டை காட்டி   பழக்கும் காட்சி நினைவிருக்கா?அந்த மாதிரி!).பிறகு அவன் ஒரு பழைய கார் விற்கும் கராஜில் போய் தகராறு செய்கிறான்.கடைசியில் என்பேர் ஆஸ்வால்ட் என்று உரக்க சொல்லிவிட்டு வருகிறான்.ஒரு துப்பாக்கி விற்கும் கடையில் கார்கேனோ ரைபிளை கொடுத்து அந்தில் scope பொருத்தி தருமாறு சொல்கிறான்.அங்கும் பெயரை உரக்க சொல்கிறான்.இப்படி ஆஸ்வால்ட் அங்கெல்லாம் நடமாடியதாக ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
ஆஸ்வால்ட் போலவே ஒருவன்
 
வெட்டி ஒட்டப்படும் ஆஸ்வால்டின் முகம்
   அந்த மூவருக்கும் கூலி பேசப்படுகிறது.இப்போதைக்கு கொஞ்சம் தொகை.பிறகு ஐந்தாண்டுகள் கழித்து ஒரு பெரும் தொகை அவர்களுக்காக திறக்கப்படும் சுவிஸ் வங்கி கணக்கில் வரவு.பத்தாண்டுகள் கழித்து மேலுமொரு பெரிய தொகை!ஐந்தாண்டுகள் அமெரிக்கவை விட்டு வெளியே இருக்க வேண்டும்!Heat அடங்கியதும் நாடு திரும்பலாம் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்படுகிறது.
    கென்னடி அடுத்தாண்டு தேர்தலில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த செல்வாக்கு குறைந்த இடம் என்று சொல்லப்படும் டெக்சாஸ் வருகிறார்.திறந்த காரில் சென்றால் கூடுதல் மக்களின் அபிமானத்தை பெறலாம் என்று நினைக்கிறார்.காரின் இருபுறங்களிலும் நின்றுகொண்டே வரும் சீக்ரட் சர்வீஸ் நபர்களை கூட வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.பிறகு நடந்தது வரலாறு.

Foster: [speaking to Farrington] Dallas has one of the highest murder rates in the country. In the last two years, the Secret Service has established 149 threats against Kennedy's life from Texas alone, yet they send him into hostile territory with no more protection than you and I would arrange for a favorite dog. 

TSBD ஆறாவது மாடியில்  ஒருவன்.இவன் சுட்டுவிட்டு துப்பாக்கியை வைத்துவிட்டு செல்கிறான்.பிறகு ஆஸ்வால்ட் சிக்கியதும் அவனையும் இந்த துப்பாக்கியையும் இணைத்து கதை பின்னுகிறார்கள்!

அருகில் உள்ள கட்டிடத்தில் இரண்டாவது ஆள்

Grassy Knoll ன் பின்புறத்தில் மூன்றாவது ஆள்.இந்த ஆள் சுட்டதில் தான் கென்னடி தலை சிதறியது!இது மட்டும் கென்னடிக்கு  முன்புறத்தில் இருந்து சுடப்பட்டது


   துப்பாக்கியால் சுட்ட மூவரும் கூலாக தங்களது துப்பாக்கிகளை எடுத்துகொண்டு வெளியேறுகிறார்கள்.ஆங்காங்கே சீக்ரட் சர்வீஸ் என்ற போலி பேட்ஜ் உடன் இருக்கும் நபர்கள் உதவியோடு இவர்கள் விமானம் ஏறி தப்பிக்கிறார்கள்.ஆஸ்வால்ட் கொலை நடந்த 12.30 மணிக்கு TSBD கட்டிடத்தின் வேறொரு தலத்தில அமர்ந்து கோக் குடித்துக்கொண்டிருக்கிறான்.பிறகு அங்கிருந்து வெளியேறுகிறான்.முக்கால் மணி நேரம் கழித்து காவல் அதிகாரி ஜே.டி.டிப்பிட் கொல்லப்படுகிறார்.ஆனால் ஆஸ்வால்டால் அல்ல!வேறொரு நபரால் என்றும் அதை அப்பகுதி மக்கள் சிலர் பார்ப்பதாகவும் காட்டுகிறார்கள்.
   அதிபரை கொன்ற(??!) ஆஸ்வால்ட் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கிறான்!ஆகா!எத்தனை cool personality!ஒலகத்திலேயே இப்படி எங்காவது கொலை செஞ்சிட்டு படம் பார்த்த கதை உண்டா?அங்கே அவனை கைது செய்கிறார்கள்(பக்ரா சிக்கிடுச்சு).
              அதற்காக ஆஸ்வால்ட் மகா உத்தமன் என்றெல்லாம் சொல்லவில்லை.அவன் சிஐஏவின் கீழ் சோவியத்தில் ஏதோ பணிக்காகவே அனுப்பி வைக்கப்பட்டான்.அது சரியாக நடந்துமுடின்ததோ இல்லையோ அவன் அமேரிக்கா திரும்புகிறான்.எப்பிஐ அதிகாரி ஒருவர் இவனை கண்காணித்து வந்ததாகவும் இவன் ஒருநாள் அந்த கண்காணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து எப்பிஐ அலுவலகத்திற்கே சென்று கடிதம் ஒன்றை கொடுத்திருக்கிறான்.உண்மையில்  அதில் என்ன இருந்தது என்பது இன்றுவரை தெரியவில்லை!காரணம் அந்த கடிதத்தை அந்த அதிகாரி எரித்துவிட்டார்!அவனுக்கொரு சந்தேக பின்னணி இருந்ததை இவர்கள் வாகாக பயன்படுத்திக்கொண்டுவிட்டார்கள் 
Day of the Jackal
          அதே காலகட்டத்தில் பிரெஞ்ச் அதிபராக இருந்த சார்ல்ஸ் டி கால் மீதும் பல்வேறு கொலை முயற்சி தாக்குதல்கள் நடந்துள்ளன.(இத்தகைய ஒரு கொலை முயற்சியை  கற்பனையாக அதே நேரத்தில் பயங்கர விறுவிறுப்பாக சொன்ன படம் The Day of the Jackal).ஆனால் அவருக்கு எழுபதுக்கும் மேற்பட்ட சீக்ரட் சர்வீஸ் வீரர்களின் பாதுகாப்பிலேயே இருந்தார்.ஆனால் கென்னடிக்கோ வெறும் பன்னிரண்டு பேர்தான்!அவர்களில் ஒன்பது பேர்  முந்தைய தினம் ஃபுல்லா சரக்கேத்திகிட்டு அரைமப்பில் அடுத்தநாள் ட்யூட்டிக்கு வந்தவர்களாம்!

  பதினெட்டு சாட்சிகள் 1967 க்குள் வெவ்வேறு காரணங்களால் மரணத்தை தழுவுகிறார்கள்.அப்படி நான்காண்டுகளுக்குள் பதினெட்டு பேர் தற்செயலா இறந்து போவதற்கான ப்ராபபலிட்டி  ஓராயிரம் ட்ரில்லியனில் ஒன்றாம்!
எனது மிக அபிமான நாயை கூட இப்படி ஒரு டுபாகூர் பாதுகாப்பு அடங்கிய வாகன அணிவகுப்பில் அழைத்து செல்ல மாட்டேன் என்கிறான் ஃபாஸ்டர் .

                  சோவியத் அதிபர் ஒரு சாலையில் செல்கிறார் என்றால் அங்குள்ள கட்டிடங்களின் ஒவ்வொரு தளத்திலும் பாதுகாப்பு வீரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர் என்பது மாதிரியான பல்வேறு  அசல் தகவல்களை இப்படம்  வழங்குவதன் மூலம் வேண்டுமென்றே கென்னடியை குறைவான பாதுகாப்பு ஏற்பாட்டில் அழைத்து சென்று முடித்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

Saturday, 28 September 2019

11/22/63-Stephen King


       ஸ்டீபன் கிங் கதைகள் சிலவற்றோடு பரிச்சயம் உண்டு.ஆரம்பத்தில் இயல்பாக துவங்கி செல்லும் கதை ஒருகட்டத்தில் அமானுஷ்ய சக்திகள்-நிகழ்வுகள் என்று  சென்றுவிடும்.உதாரணமாக The Shining மற்றும் சென்ற வருடம் வந்த The Outsider.இவற்றை ரசிப்போருக்கு இவை நிச்சயம் திருப்தியை தரும் என்றாலும் இம்மாதிரி அமானுஷ்ய தன்மைகள் இல்லாமல் அவர் எழுதிய கதைகள் பற்றி தேடிக்கொண்டிருந்தபோது கண்டடைந்ததே இந்த நாவல்.

    பொதுவாக ஒரு சாமானியனின் கொலை சம்பவத்தை எடுத்துக்கொண்டாலே நேரடியாக சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட வழக்குகள் தவிர்த்து பல்வேறு குழப்பங்கள் நிறைந்த வழக்குகளை சுற்றி எப்போதுமே விலகாத மர்மங்கள் இருந்துவந்துள்ளன. ஒரு சாமானியனின் கொலைக்கே இவ்வளவு சந்தேகங்கள் கேள்விகள் எழும்போது உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பதவி எனப்படும் அமெரிக்க அதிபர் கொலை என்பது எவ்வளவு சந்தேகங்கள்-கேள்விகள்- ஊகங்கள்-குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கமுடியும் என்று விளக்கிசொல்ல தேவையில்லை.
   அத்தகைய கொலைவழக்குகள் குறித்த பல்வேறு சந்தேகங்கள் சதித்திட்டங்கள் குறித்த கோட்பாடுகள் காலம் தோறும் மாற்றத்துக்கு உட்பட்டவாறே இருக்கும்.இந்நாவலில் ஜான் பிட்ஸ்ஜெரால்ட் கென்னடி சுட்டு கொல்லப்பட்ட 22 நவம்பர் 1963 ஐ மையமாக வைத்து எழுதப்பட்டதால் அதையே தலைப்பாக கொண்டுள்ளது.
இறுதி பயணம்!

   கென்னடி கொலை குறித்து அறுபதுகள் தொடங்கி இன்றுவரையிலும் பல்வேறு சதித்திட்டங்கள் குறித்த கேள்விகள், சந்தேகங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவாறே இருந்துவருகிறது.அவ்வப்போது இந்த வழக்கில் நேரடியாகவோ மறைமுகமாகவோ  சம்பந்தப்பட்ட நபர்கள் கொடுக்கும் பேட்டிகள்; எழுப்பும் கேள்விகள்; சிஐஏ மற்றும் எப்பிஐ வெளியிடும் ரகசிய  ஆவணங்கள்  இந்த சதித்திட்ட சந்தேகங்களை மென்மேலும் வலுப்பெற செய்கின்றன.
   கென்னடியை சுட்டுகொன்றதாக கைது செய்யப்பட்டவன் லீ ஹார்வி ஆஸ்வால்ட்.டெக்சாஸ் ஸ்கூல் புக் டெபாசிட்டரி எனப்படும் பள்ளி புத்தகங்கள் வைக்கும் அந்த கட்டிடத்தில் தற்காலிக பணியாளனாக வேலைபார்த்துக்கொண்டிருந்த ஆஸ்வால்ட் கென்னடி அந்த கட்டிடத்தின் முன்னே உள்ள பிரதான சாலை வழியே திறந்த காரில் பயணம் செய்வதை தெரிந்துகொண்டு ஆறாவது மாடி ஜன்னலருகே துப்பாக்கியால் செய்து சுட்டதில் கென்னடி மூளை சிதறி பலியானதாக சொல்வார்கள்.
ஆஸ்வால்ட் 

  ஆஸ்வால்ட் கென்னடியை சுட்டுவிட்டு கட்டிடத்தின் வெளியே வந்துகொண்டிருந்தபோது அவனை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் அவன்மேல் சந்தேகம் வராததால் அவனை விட்டுவிடுகிறார்கள்.பின்பு  ஜே.டி.டிப்பிட் எனும்  போலீஸ்காரர் வேறொரு இடத்தில்  அவனைக்கண்டு சந்தேகப்பட்டு நிற்க சொல்ல அவரை சுட்டுவிட்டு தப்பிக்கிறான்(என்றுதான் அதிகாரப்பூர்வ தகவல் சொல்கிறது.உண்மை என்னன்னு இன்னமும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.உதாரணமாக டிப்பிட்டை கொன்றதே ஆஸ்வால்ட்தானா?)
 
J.D.Tippit

.பிறகு அவனை ஒரு தியேட்டரில் வைத்து கைது செய்கிறார்கள்..அதாவது கென்னடி கொலை நடந்து நாற்பது நிமிடங்கள் கழித்தே அவன் சிக்குகிறான்.அந்தளவு டெக்சாஸ் போலீஸ் அலட்சியமாகவும் திறனற்றும் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.அதற்கு சிகரம் வைத்தாற்போல் ஆஸ்வால்டை காவல் நிலையத்தில் இருந்து வெளியே கொண்டுவரும் போது ஜாக் ரூபி  என்ற பார் ஓனர் அவனை சுட்டு கொல்கிறான்.
ஆஸ்வால்டை  சுடும் ஜாக் ரூபி


           கென்னடியை கொன்றவனை மனசு ஆறாமல் கொன்றதாகவும் இதன்மூலம் போலீசுக்கும் கென்னடியின் மனைவிக்கும் பெரும் சுமையை தான் அகற்றியதாகவும் கூறினான்.அவனுக்கு சிறை தண்டனை பிறகு நுரையீரல் புற்றுநோய் வந்து(??!!) இறந்துபோகிறான்.ஆனால் உண்மையில் அவன் தானாக அதை செய்யவில்லை என்றும் வேறொரு பெரும் கை அவனை இயக்கியதாகவும் இன்றளவும் சொல்வோர் உண்டு,
    இந்நாவலில் ஜேக் எப்பிங்  ஒரு பள்ளி ஆசிரியர்.ஆல் டெம்பிள்டன் என்பவர் ஆல்ஸ் டைனர் என்று  ஒரு உணவகம் நடத்தி வருகிறார். அவர் உணவகத்தில் மிக குறைந்த விலையில் பேக்கன் ஹேம் சிக்கன் உணவு வகைகள் விற்கப்படுகிறது.நாய்க்கறியை சமைத்து  விற்கிறார் என்று மக்களுக்கு ஒரு சந்தேகம்.உண்மையில் அவர் உணவகத்தின் பின்புற படிக்கட்டுகள் வழியே(Rabbit hole!) 1958 க்கு சென்று அங்கே பன்றி,கோழி,ஆடு,மாடு மாமிசங்களை 1958 ன் விலையில் வாங்கிக்கொண்டுவந்து 2011(நாவலில் தற்காலம்) ல் சமைத்து கொடுப்பதே அந்த குறைந்த விலைக்கு காரணம்!
   அப்படி அவர் வெறுமனே கறி மீன் வாங்க மட்டும் இதை பயன்படுத்தாமல் வேறு பயனுள்ள வகையில் ஏதேனும் செய்யலாமே என்று நினைக்கிறார்.தந்தையோடு வேட்டைக்கு செல்லும் மகள் காட்டுக்குள் வேட்டையில் மும்முரமாக இருக்கையில் காட்டின் மற்றொரு புறத்தில் வேட்டையாடிக்கொண்டிருக்கும் ஒருவன் மான் என்று நினைத்து சுட இவளின் ஸ்பைனல் கார்ட் சேதமடைந்து காலம் முழுதும் சக்கர நாற்காலியில் இருக்கும்படி ஆனதை தற்காலத்தில் கண்டுகொண்ட ஆல் காலத்தில் பின்சென்று அந்த தினத்தில் வேட்டைக்கு செல்லும் அந்த நபரின் காருக்கு முன்பு மாரடைப்பு வந்தது போல நடித்து அவனை வேட்டைக்கு செல்லவிடாமல் தடுக்கிறார்.அதன்மூலம் அந்த பெண் காப்பாற்றப்படுகிறாள்.
         இது கடந்தகாலத்தின் ஒரு மாற்றம்!அது நிகழ்காலம் வரையில் எதிரொலிக்கிறது.இதேபோல கென்னடி கொல்லப்படுவதை நாம் தடுத்தால் என்ன?என்று நினைக்கிறார்.கென்னடி கொல்லப்பட்டதும் அதிபரான லிண்டன் ஜான்சன் வியத்நாமுடன் போரை மேலும் தீவிரபடுத்துவதாக   அறிவிக்க லட்சகணக்கான அமெரிக்க ராணுவ வீரர்களின் உயிர் போகிறது.பல ஆயிரக்கணக்கானோர் ஆயுளுக்கும் முடமாக்கப்படுகிறார்கள்.
கென்னடி இறந்து இரண்டு  மணி நேரம் கழித்து   ஜான்சன் பதவியேற்கிறார்..அருகில் கணவன் மூளை சிதறி இறந்ததை மிக  அருகில் பார்த்த அதிர்ச்சியில் ஜாக்குலின் கென்னடி

        கென்னடி கொலையை தடுத்தால் இத்தனை லட்சம் பேரை காப்பாற்றலாமே!என்று ஆல் நினைக்கிறார்.ஆனால் அதற்குள் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் வந்துவிட அந்த பொறுப்பை ஜேக் எபிக்கிடம் ஒப்படைக்கிறார்.ஜேக் தனது பள்ளியில் பழைய மாணவர் ஒருவர் எழுதிய கட்டுரை கண்ணில்பட அதை வாசிக்கையில் பள்ளி வாட்ச்மேனாக உள்ளவனின் தந்தை பிரான்க் டன்னிங் தனது தாய் மற்றும்  சகோதரிகளை கொலை செய்து தன்னையும் கொல்லும் முயற்சியில் தோல்வியடைந்த (அதனால் தான் ஆயுசுக்கும் நொண்டியே நடக்க வேண்டிய அவல)சம்பவத்தை எழுதியதை வாசிக்கிறான்.
நாவலில் ஒரு கதாபாத்திரம்போலவே வரும் Texas School Book  Depository Buliding
            
         கென்னடி கொலையை தடுப்பதற்கு முன் இவற்றை தடுத்து பரிசோதித்து பார்க்கிறான்.இதில் ஒரு சாதகமான விஷயம் என்னவெனில் டைனருக்கு பின்புற படிக்கட்டில் எப்போது வெளியே சென்றாலும் செப்டம்பர் ஒன்பது  1958 தேதிக்கே செல்ல முடியும்.கடந்த காலத்தில் எத்தனை வருடங்கள் இருந்துவிட்டு திரும்பவும் டைனருக்கு வந்தாலும் தற்காலத்தில்(நாவல்படி 2011) இரண்டு நிமிடங்களே கடந்திருக்கும்!
        ஆனால் ஒருமுறை கடந்த காலத்திற்கு சென்று எதையேனும் மாற்றிவிட்டு வந்தால் பிரச்சனை இல்லை.ஆனால் திரும்பவும் கடந்த காலத்திற்குள் நுழைந்தால் முன்பு செய்த மாற்றங்கள் அத்தனையும் ரீசெட் ஆகிவிடும்!ஆக கடந்த காலத்தில் ஒரு கொலை நிகழாமல் தடுத்துவிட்டு நிகழ்காலத்திற்கு வரலாம்!ஆனால் திரும்பவும் கடந்த காலத்திற்குள் நுழைந்ததுமே அந்த கொலை திரும்பவும் நடக்கும்!   அந்த பெண்ணை காப்பாற்றுகிறான்.பிரான்க் டன்னின்கை கொல்கிறான்.தற்காலத்திற்கு வருகிறான்.ஆனால் டன்னிங் குடும்பத்தை சேர்ந்தவன் ராணுவ வீரனாக வியத்நாமுக்கு சென்று உயிரை விட்டதை அறிந்து வேதனை அடைகிறான்.இப்போது திரும்பவும் கடந்த காலத்திற்கு செல்ல வேண்டும்.

              இம்முறை அந்த பெண்ணை திரும்பவும் காப்பாற்ற வேண்டும்.பிரான்க் டன்னின்கை திரும்பவும் கொல்ல வேண்டும்.பிறகு கென்னடியை காப்பாற்ற வேண்டும்!ஆனால் 1958 ல் நுழைபவன் ஐந்து வருடங்கள் காத்திருந்தே கென்னடியை காப்பாற்ற இயலும்.காரணம் கென்னடியை கொன்றவன் ஆஸ்வால்ட் என்று சொல்லப்பட்டாலும் வேறு யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளனரா என்று தெரியாததால் ஆஸ்வால்டை மட்டும் கொல்லுவதால் கென்னடியை காப்பாற்ற இயலுமா என்ற சந்தேகம் ஜேக்கிற்கு உள்ளது.ஜார்ஜ் ஆம்பர்சன் என்ற போலி பேரில்(போலி ஓட்டுனர் உரிமம் ஐம்பதுகளில் புழக்கத்தில் இருந்த டாலர்கள்,மேலும் பண தேவையை பூர்த்தி செய்ய கால்பந்து, மல்யுத்த போட்டி முடிவுகள்(அதை வைத்து பெட்டிங் கட்டி பன்மடங்கு சம்பாதிக்க)என்று அனைத்தையும் கொடுக்கிறார் ஆல்.பின் அவர் இறந்து போகிறார்.
    ஐந்தாண்டுகள்  சும்மா உட்காந்திருக்க மனமில்லாமல் பள்ளி ஆசிரியர் வேலையில் சேர்கிறான்.ஒருபள்ளியில் தற்காலிக பணி செய்து வெளியே வந்து சிறிது காலம் கழித்து வேறொரு பள்ளியில் சேர்கிறான்.அங்கு அனைவரது மனதையும் கவர்கிறான். ஸேடி டன்ஹில் எனும் நூலகரை காதலிக்க துவங்குகிறான்.
          ஒருகட்டத்தில் ஸேடி இவன் வருங்காலத்தில் இருந்து வந்தவன் என்பதை அறிந்துகொள்கிறாள்.ஜேக் அனைத்து உண்மைகளையும் சொல்கிறான்.தானும் கென்னடியை காப்பாற்ற வருகிறேன் என்கிறாள்."வேண்டாம்!அது ஒரு ராட்சச எந்திரம்.அதன் அருகில் வேறு நபர்கள் வந்தால் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும்" என்ற எச்சரிக்கையையும் மீறி அவள் அவனோடு செல்கிறாள்.
             கென்னடி காபாற்றபட்டாரா?ஸேடிக்கு என்ன நடந்தது?ஜேக் திரும்ப 2011 க்கு வந்தானா?கென்னடி காப்பாற்றப்பட்டதால் தற்காலத்தில்  எத்தகைய மாற்றங்களை அவன் கண்டான்...என்பதை மிக சுவாரஸ்யமாக சொல்லியுள்ளார் கிங்.குறிப்பாக கென்னடி கொலையை தடுக்க முயலும் அந்த பகுதி Prison Break டிவி சீரிஸ் ஏற்படுத்திய பரபரப்பையும் பதைபதைப்பையும் தருவதாக உள்ளது.மேலோட்டமான பரபரப்புணர்வை  மட்டுமே நாவல் தராமல் கடந்த காலத்தில் வாழ்ந்த (கென்னடி கொலையை சுற்றிய வட்டத்திற்குள் உள்ள)நிஜ மனிதர்களை நேரிலேயே கண்ட உணர்வை தருவதாக உள்ளது.
             குறிப்பாக ஆஸ்வால்ட் சோவியத்திலிருந்து அமெரிக்காவுக்கு வருவது தொடங்கி,ஆளுமை மிக்க-மகனை சபித்துக்கொண்டே இருக்கும் அவனது தாய்,தண்ணீருக்கு வெளியே விழுந்த மீன் போல அமெரிக்காவில் அன்னியமாக உணரும்  மனைவி மரீனா,
மரீனா ஆஸ்வால்ட் 
அவளை அவ்வப்போது  அடித்து உதைத்து கொண்டிருக்கும் ஆஸ்வால்ட், அவர்களது குழந்தை ஜூன் அவனை பார்க்க வரும் ஜார்ஜ் டிமோரென்ஸ்சில்ட்  உள்ளிட்ட பரிச்சயங்கள் இவை அனைத்தும் மிக துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது.நாமே அங்கு சென்று இவற்றை காணும் உணர்வை தருகிறது(இதைத்தாண்டி இந்த உணர்வை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை).அவன் மெர்சிடிஸ் தெரு வீட்டிற்கு வாடகைக்கு வந்ததும் எதிர் வீட்டை வாடகைக்கு எடுத்து தாங்கும் ஜேக் டேபிள் லாம்பில் bug வைத்து அவர்களது உரையாடல்களை ஓட்டு கேட்பது, பைனாகுலர் வைத்து அவர்களது வீட்டை கண்காணிப்பது...இவை எல்லாமே வாசகனையே ஜேக்கின் இடத்தில் நிறுத்திவிடுகிறது .

   நாவலுக்கு அப்பால் கென்னடியை கொன்றது ஆஸ்வால்ட் மட்டும்தானா?இரண்டாவது ஆசாமி புல்வெளியில் இருந்து சுடவில்லையா?சோவியத்தில் இருந்துவந்த ஆஸ்வால்ட் எப்பிஐ மற்றும் சிஐஏ கண்காணிப்பிலிருந்து தப்பித்து இந்த கொலையை எவ்வாறு திட்டமிட முடிந்தது?மேலும் நான்கரை வினாடிகளில் மூன்று முறை எவ்வாறு குறி தவறாமல் சுடமுடிந்தது?ஆஸ்வால்ட் மரீனஸ்ல் இருந்தவன் என்றாலும் இத்தனை துல்லியமாக எவவாறு சுடமுடிந்தது?(இந்த சந்தேகத்தை திசைதிருப்ப ரெண்டே ரெண்டுமுறை தான் சுட்டான்.அந்த ஒரு புல்லட் கென்னடி தொண்டை வழியே வெளியேறி டெக்சாஸ் ஆளுநர் நெஞ்சு வழியே வந்து அவரின் மணிக்கட்டை துளைத்து தொடையில் தஞ்சமடைந்து பின்னர் வெளியே விழுந்ததாக சொல்வார்கள்).இதெல்லாம் நம்பும்படியாக இல்லை.
புல்வெளியின் பின்னணியில் இருந்து துப்பாக்கி வெடிக்கவில்லையென்றால்  இவர்கள் ஏன் இப்படி பதுங்கினார்கள்?


           கென்னடியை கொன்றது ஆஸ்வால்ட் மட்டும்/தான் என்பதை கொஞ்சம் மூளை சரியாக இருக்கும் ஆசாமி கூட நம்ப மாட்டான்.ஆனால் அந்த குழப்பத்திற்குள் போனால் நாவலின் கதை முடிவேயில்லாத ஒரு limbo விற்குள் சிக்கிக்கொண்டுவிடும் என்று ஸ்டீபன் கிங் நினைத்திருக்கலாம்.அதனால் ஆஸ்வால்ட் மட்டுமே கொலைகாரன் என்ற எளிய உத்தேசத்தை வைத்துக்கொண்டு கதை எழுதியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
அந்த தவறை தவிர்த்து இந்நாவல் ஒரு துணிச்சலான முயற்சி என்றே சொல்லவேண்டும்.நம்ம ஊர்லயும் பல தலைவர்களின் மர்ம மரண வரலாறுகள் உண்டு.அதையெல்லாம் வைத்துக்கொண்டு இப்படி ஒரு கதை எழுதினால் அந்த எழுத்தாளரின்  கதி என்ன என்று நினைத்து பார்க்கவே பயமா இருக்கு!
வெட்டி ஒட்டப்பட்ட முகம்?


                           இந்த கால பயணத்தில் ஜேக் உணர்வது ஒரு உண்மையை.கடந்த காலத்திற்கு சென்று அப்போது நிகழ்ந்த ஏதேனும் ஒரு சம்பவத்தை நிகழாமல் செய்தோ வேறுமாதிரி நிகழ வைப்பதோ வெறுமனே அந்த சம்பவத்தோடோ அந்த கால கட்டத்தோடோ முடிந்துவிடுவதில்லை.அந்த மாற்றம் ஏற்படுத்தும் அதிர்வுகள் என்பது காலம்தோறும் நீடிக்கும் ஒன்று.
        அந்த அதிர்வின் வீச்சு என்பது மாற்றப்படும் சம்பவத்தை பொறுத்து.உதாரணமாக 1958  பிராங்க் டன்னிங்கை கொன்று அவன் குடும்பத்தை காப்பாற்றுதல் என்பது தற்காலத்தில் பெரிய அளவில் இல்லாவிட்டாலும்   குறிப்பிடத்தகுந்த அதிர்வுகளை உண்டாக்கவே செய்கிறது.ஒரு சாமானிய நபரின் வாழ்வை முடித்துவைக்கும் போதே இத்தகைய அதிர்வுகள் இருக்குமானால் உலகின் சக்திவாய்ந்த அமெரிக்க அதிபரை காப்பாற்றினால் அது எத்தகைய அதிர்வுகளை கால இழைகளில் உண்டாக்கும்?அதன் பின்விளைவுகள் எத்தகையவை?
             காலத்தில் பின்னோக்கி சென்ற பின் அந்த கால கட்டத்திய நடை உடை பாவனைகளை மாற்றிகொண்டாலும் கூட சில நபர்கள் ஜேக்கை ஒரு அந்நியனாகவோ அல்லது  வேறு உலகில் இருந்து வந்தவனாகவே பார்க்கிறார்கள்.came out of nowhere என்கிறார் எப்பிஐ அதிகாரி.1958 க்கு சென்றாலும் அடுத்த ஐம்பதாண்டு வரலாற்று  நிகழ்வுகள் குறித்த பிரக்ஞை என்பது ஒரு மனிதனை 1958 ஐ சேர்ந்தவனாக ஏற்க மறுக்கிறதா?
டயம் ட்ராவல் குறித்த பல படங்கள் குறிப்பாக சில தமிழ் படங்கள் வரை விளையாட்டாக கடந்த காலத்திற்கு சென்று சகட்டு மேனிக்கு நிகழ்வுகளை மாற்றுதல் என்பது உண்மையில் சாத்தியமில்லை.கால இழைகளில் கடும் அதிர்வுகளை உண்டாக்காமல் அது சாத்தியமேயில்லை !(அந்த Green/Yellow/Black card man  ஜேக்கிடம்  பேசும் அந்த தருணங்கள் இதற்கு சாட்சி).


              கடந்த காலம் என்பது தன்னை சுற்றி ஒரு கடினமான தற்காப்பு வளையத்தை கொண்டது.

அதை கிழித்துக்கொண்டே ஒவ்வொரு முறையும் கால பயணத்தை மேற்கொள்கிறார்கள்.பல நூறு முறை கடந்த காலத்திற்கு சென்றுவந்த ஆல்(மலிவு விலையில் மாமிசம் வாங்க சென்றாலுமே)அந்த பாதிப்பு அவரின் உடலை பாதித்து நுரையீரல் புற்றுநோய் வந்து இறக்கிறார்.ஜேக் அத்தனை முறை சென்று வராததால் உடல்ரீதியாக பெரிய பாதிப்பு இல்லை (இரண்டு நிமிடத்தில் முப்பத்தைந்து வயதிலிருந்து நாற்பது வயதுக்கு போய்விட்டாலும்).ஆனால் மனதளவில் அது பல பாதிப்புகளை குழப்பங்களை உருவாக்கவே செய்யும் என்பதை உணர்கிறான்.தனக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர கடந்த காலத்தை மாற்றியமைப்பதால் கடந்த கால மனிதர்களின் நினைவு இழைகளிலும் ,பொதுவாக  உலகம் முழுமைக்குமே பெரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதை காண்கிறான்(பட்டர்பளை எபெக்ட்).
.
இத்தகைய ஒரு நாவல் கடும் உழைப்பைக்கோருவது.இதை சிரமேற்கொண்டு முடித்த ஸ்டீபன் கிங் பாராட்டுக்குரியவர்.

ஸ்டீபன் கிங் 
ஆனால் இது  முற்றிலும் அசல் வரலாற்று தகவல் அடிப்படையில் எழுதப்பட்டது  என்பதை ஏற்க முடியவில்லை.தவிர கிங் நாவல்களில்(Carrie,The Outsider ..etc..) அடிக்கடி வரும் பள்ளிச்சூழல், பள்ளி மாணவர்களுக்கு இடையேயான உறவு,ஆசிரிய-மாணவ உறவு போன்றவைகளை இதிலும் காணலாம்(இரண்டு பள்ளிகள்).சில நேரங்களில் அதுவே நாவலின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டதோ என்ற எண்ணத்தையும் தவிர்க்க இயலவில்லை. மற்றபடி இது ஒரு நல்ல முயற்சி. காலநிலை பயணத்தை நாமே மேற்கொண்ட உணர்வை தருகிறது.

.
 P.S - In Cold Blood நாவலை(இந்நாவல் பற்றிய பதிவினை படிக்க இடதுபுற லிங்கை க்ளிக்கவும்) படித்த உடனே ஹெர்பர்ட் க்ளட்டர் குடும்ப போட்டோக்கள்,கொலை செய்த டிக் பெர்ரி புகைப்படங்கள் அந்த வீடு அதற்கு செல்லும் வழி எல்லா புகைப்படங்களையும் சில நிமிடங்களாவது பார்க்காமல் இருக்கமுடியாது.

அதுமாதிரி இதை படித்ததும் கென்னடி கொலை தொடர்பான புகைப்படங்கள் என்று ஆரம்பித்து மேலும் ஆர்வம் அதிகரிக்க வீடியோக்கள், ஆவணங்கள், கென்னடியின் பிரேத பரிசோதனை அறிக்கை என்று விடாமல் தேடி பார்க்க வைத்தது.இந்த புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோக்கள் இவைகளை பார்க்க பார்க்க கென்னடி கொலை என்பது பூசி மெழுகப்பட்ட ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது உறுதியாகிறது.இதில் ஆஸ்வால்ட்க்கு எந்தளவு பங்கு என்பதை உறுதிபடுத்த முடியவில்லை(ஆஸ்வால்ட் வெறும் பலியாடாக கூட இருந்திருக்கலாம்) என்றாலும்  பலரது பங்கு(சிஐஏ எப்பிஐ,மாபியா,நாஜிக்கள்????) இருந்திருப்பதை மறுக்க முடியாது.
.