Thursday 15 September 2016

ஹம்மிங்பர்ட் (2013)

                                  பொதுவாக ஜேசன்  ஸ்டேதம்  படங்கள்  என்றாலே  கண்டிப்பாக  அதிரடி  சேஸிங்  ,சண்டைக்காட்சிகள்,விறுவிறுப்பான  காட்சியமைப்புகள்  என்றிருக்கும்.அதிலிருந்து  விலகி  அவர்  நடித்திருக்கும்  படமிது.இப்படத்தில்  அடிநாதமாக  இருப்பது  குற்ற  உணர்வும்  அதற்கான  பிராயச்சித்த  தேடலும்தான்..அதை  சரியாக  சொல்லியிருக்கிறார்களா  இல்லையா  என்பதைத்தாண்டி  இப்படம்  எனக்கு  பிடித்திருந்தது..குறைகள்  உண்டு  என்றாலும்கூட..

                      ஷெர்லாக்  ஹோம்ஸ்  நாவல்  எழுதப்பட்ட  19 ஆம்  நூற்றாண்டில் டாக்டர்  வாட்சன்  கதாபாத்திரம்  ஆப்கன்  போரில்  காயம்பட்டு  நாடு  திரும்பியவராக  சித்தரிக்கப்பட்டிருப்பார்.பிறகு  நூறாண்டுகள் கழித்து  ஷெர்லாக்  தொடர்  2010 ஆம்  ஆண்டு  நவீன  காலகட்டத்தின்  பின்னணியில்  டிவி  தொடராக  எடுக்கப்பட்டது.அப்போதும்  வாட்சன்  கதாபாத்திரம்  ஆப்கன்  போரில்  காயம்பட்டு  நாடு  திரும்பியவராக காட்டமுடிந்தது  நகைமுரண்.அப்போதும்  ஆப்கனுடனான  சண்டை  இருந்தது.நூறாண்டுகள்  முன்பும்  ஆப்கனுடன்  போர்  புரிந்துள்ளது  பிரிட்டன்.இதைசொல்ல  காரணம்  போரின்,  சண்டைகளின்  அர்த்தமற்ற  தன்மையை  மேற்கோள்  காட்டுவதற்காகவே.
                         இப்படத்திலும்  ஜோசப்  ஸ்மித்/ஜோயி(ஸ்டேதம்) ஆப்கன்  போரில்  நடந்த  பிழையான  சில விஷயங்களுக்குப்பிறகு நாடற்றவராக  வாழ்ந்து  வருகிறார்.அவருடன்  இசபெல்  என்ற  மற்றொரு  வீடற்ற  தோழி  தங்கியிருக்கிறார்.இருவரும்  தாக்கப்பட  ஜோசப்  ஓடி புகைப்படக்காரர்  வீட்டில்   ஒளிந்துகொள்கிறான்.அமெரிக்கா  சென்றுள்ள  புகைப்படக்காரர்  திரும்ப  வர  பல  மாதங்கள்  ஆகும்  என்ற  நிலையில்  வசதியான  அந்த  அபார்ட்மெண்டில்  சகல  வசதிகளையும்  அனுபவித்து  வாழ்கிறார்  ஸ்மித்.அண்டை  வீட்டார்  விசாரிக்கும்போது  அந்த  புகைப்படக்காரரின்  பாய்ஃபிரன்ட் என  சொல்லி  தப்பிக்கிறார்.

                       சிஸ்டர்  கிறிஸ்டினாவுடன்  நட்பில்  இருக்கும்  ஸ்மித் அவ்வப்போது  அவரை  சந்திக்கிறான்.அவருக்கு  ஸ்மித்  வேறொருவரின்  வீட்டில்  தங்கியிருப்பது  தெரிந்து  கண்டிக்கிறார்.பிறகு  ஸ்மித்  சீன உணவகத்தில்  வேலை  செய்து  சொந்த  சம்பாத்தியத்தில்  வாழ்கிறான்.அங்கு நடக்கும்  அடிதடிமூலம்  சீன  அண்டர்கிரவுண்ட்  கும்பலோடு  தொடர்பு-அடியாள்  வேலை  என்று  நாள்  கழிகிறது.பிறகு  கிறிஸ்டினா  மூலம்  இசபெல்  கொல்லப்பட்டதை  அறிகிறான்.அவனை  பழிவாங்குகிறான்.அதன்பின்னராவது  அவனுக்கு  மன  நிம்மதி  கிடைத்ததா?
                     இப்படத்தின்  மிகப்பெரும்  பலமாக  நான்  கருதுவது  கிறிஸ்டினா  கதாபாத்திரம்தான்.சிறுமியாக  இருந்தபோது  பேலே (Ballet)  நடமங்கையாக  ஆசைப்பட்டு  தந்தையின்  வற்புறுத்தலால்  ஜிம்னாஸ்டிக்ஸ்ல்   சேர்கிறாள்.அங்கே    தன்னை  பலமுறை  பாலியல்  பலாத்காரம்  செய்த  ஜிம்னாஸ்டிக்ஸ்  பயிற்சியாளனை  கொன்றுவிட்டு      சீர்திருத்தப்பள்ளி  எல்லாம்  கடந்து  nun  ஆகிவிடுகிறாள்.

                  ஸ்மித்  அடிதடி  மூலம்  சேர்க்கும்  காசை அவ்வப்போது  கிறிஸ்டினாவிடம்  கொடுக்கிறான்.கிறிஸ்டினா  அதை  மதரிடம்  கொடுக்கிறார்.இந்தப்பணத்தை  வாங்கிக்கொள்வதில்  மதருக்கு  தயக்கமில்லை.தவறான  முறையில்  சம்பாத்திததென்று  போலீசிடம்  கொடுத்தால்  அவர்கள்  பப்புக்கு  சென்று  குடித்து காலி  செய்யப்போகிறார்கள்  என்கிறார்.ஆனாலும்  கிறிஸ்டினாவுக்கு  ஒரு  தயக்கம்.இந்தப்பணத்தில்  தனக்கொரு  பொருள்  வாங்கிக்கொள்ளுமாறு  ஸ்மித்  கூறினான்  என்கிறார்.இந்தக்காட்சியில்  கிறிஸ்டினாவின்  dilemma மிகத்தெளிவாக  காட்டப்படுகிறது.தவறான  முறையில்  வந்த இப்பணத்தை  வீடற்றவர்களுக்கு  செலவழிக்க  தயங்குகிறார்.அதேநேரத்தில்  அப்பணத்தில்  தனக்கு  பிடித்த  ஒரு  பொருளை  வாங்கிக்கொள்வதில்  அவருக்கு  தயக்கம்  இருக்கவில்லை.
                       அப்பணத்தில்  Maria  Zielinska வின் கடைசி  பேலே  நட  நிகழ்ச்சிக்கு  பாக்ஸ்  டிக்கட்  வாங்கிக்கொள்கிறார் .தான்  யாராக  ஆக வேண்டும்  என்று  விரும்பி  ஆனால்  ஆகமுடியாமல்  போனதோ  அவர்தான்  மரியா.நாற்பதை  தாண்டிவிட்டவர்.அவரின்  ஃபேர்வெல்  நடன  நிகழ்ச்சிக்குத்தான்  500  பவுண்டில்  டிக்கட்  எடுக்கிறார்  கிறிஸ்டினா.தான்  அடைய  விரும்பிய  ஒரு  இடத்தை  அடைந்திருக்கும்  மற்றொருவரை  பார்த்து  மகிழும்  அந்த  உணர்வை  மிக  அற்புதமாக  வெளிப்படுத்திருக்கிறார்  கிறிஸ்டினாவாக  நடித்திருக்கும்  Agata Buzek  .இவர்பற்றி  மேலும்  தேடியபோது  இவர்  வேறுசில  படங்களில்  nun  ஆக  typecast செய்யப்பட்டிருப்பதை  காணமுடிந்தது.இருந்தாலும்  அவர்  இப்படத்தில்  மிக  அற்புதமாக  நடித்திருக்கிறார்.nun  ஆகிவிட்டபோதும்  அவ்வப்போது  எழும்  சாமானிய  பெண்ணின்  ஆசைகள்,  நிறைவேறாமலேயே  கானலாகிவிட்ட  தனது  பேலே  நடன கனவு ,அற்புதமான  உடைகள்  மீதான  ஆசை  என்று  அந்தப்பக்கம்-இந்தப்பக்கம்  என  மாறி  மாறி  வாழ்ந்துகொண்டிருக்கும்  ஒரு  பெண்  கதாபாத்திரத்தை  அப்படியே  கண்முன்  கொண்டுவந்துள்ளார்.

               
                  சினிமாவிலும்  சரி  நாவல்களிலும்  சரி  சில  கதாபாத்திரங்கள்  நமக்கு  மிகவும்  comforting  ஆக  இருப்பதை  உணரமுடியும். குறைந்தபட்சம்  சினிமாவிலும்  நாவல்களிலுமாவது  அப்படியானவர்களை காண  முடிவதில்  மகிழ்ச்சி! கிறிஸ்டினா  அப்படியான  ஒரு  கதாபாத்திரம்தான் .
                      Crime and Punishment நாவலில்  வரும்  Sonya கதாபாத்திரத்தின்  தன்மைகள்  சிலவற்றை  கிறிஸ்டினாவிடம்  காணமுடிகிறது.
                   ஸ்மித்  கதாபாத்திரத்திற்கு  வலுசேர்க்க  சில ஆப்கன் போர்க்கள  காட்சிகள்    காட்டப்படுகின்றன.தனது  சக போர்  வீரர்கள்  ஐந்து  பேரை  ஆப்கன்  தீவிரவாதிகள்  கொன்றதற்கு  பழிவாங்க  தன் கண்ணில்படும்  முதல்  ஐந்து  பேரை  கொன்றுவிட்டதாக (அவர்களில்  சாமானியர்களும்  உண்டு)கதறுகிறார்.ஆனால்  அந்த  போர்க்கள  காட்சிகள்  மனதில்  பதியவில்லை.ஏனோதானோவென்று  இருப்பதாக  எனக்கு  தோன்றியது.மேலும்  தனது தோழியான  இசபெல்லை  உடனே  தேடாமல் கிறிஸ்டினாவாக  வந்து  அவள்  கொல்லப்பட்டதை  சொன்னதும்தான்  அவளின்  நினைப்பு  ஸ்மித்திற்கு  வருகிறதா?? இதுமாதிரி    சறுக்கல்கள்  இருந்தாலும்  படம்  நிறைவைத்தந்தது.

No comments:

Post a Comment