"உனக்கு இடையூறா இருக்கும் மனைவியை நான் கொல்றேன்.எனக்கு இடையூறா இருக்கும் எனது தந்தையை நீ கொன்றுவிடு!"என்று ப்ரூனோ (Bruno) கய் ஹெய்ன்ஸ்(Guy Haynes) -இடம் கேட்பதுதான் கதையின் மையக்கரு என்று பலர் எழுதியுள்ளதை பார்த்தேன்.
கதையின் மையக்கரு அதுவல்ல!இது பல சிக்கலான முடிச்சுகளை கொண்டது.உதாரணமாக Guy க்கும் ப்ரூனோவுக்குமான உறவு ஒருபாலின சேர்க்கையின் கீற்றை கொண்டது.அப்போதிருந்த சமூக கட்டுப்பாடுகளால் (திரைப்படத்தில் production code கட்டுப்பாட்டால்)கதையில் அது விரிவாக சொல்லப்படவில்லை என்றாலும் அதை புரிந்துகொள்ளமுடிகிறது!
கய் ஒரு வளர்ந்துவரும் ஆர்கிடெக்ட்.பால்மைரா ப்ராஜெக்ட், சிறுநகர ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ப்ராஜெக்ட் என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருபவன்!நல்ல திறமைசாலி!மனைவி மிரியம் வேறு சில ஆண்களோடு உறவுகொன்டதை தெரிந்துகொண்டு விவாகரத்து பெற நினைக்கிறான்.இப்போது அவள் கர்ப்பம்!காரணம் அவனல்ல!
மேலும் மிரியம் தனது கரியருக்கு இடையூறாகவும், விவாகரத்து பெறுவதில் பெரும் தடைக்கல்லாகவும் இருப்பதாகவும் Guy நினைக்கிறான்.அதை ரயிலில் தன்னுடன் வலிந்து பேசிக்கொண்டிருக்கும் ப்ரூனோவிடம் எதேர்ச்சையாக சொல்கிறான்.அப்போதுதான் முதல் வரியில் இருக்கும் வரிகளை ப்ரூனோ சொல்கிறான்.
இப்ப ப்ரூனோ அவளைக்கொன்றும் விடுகிறான்.இப்போது மொத்த நெருக்கடியும் கய்யின் மேல்!இப்போது அவன் மிரியம் கொலை தொடர்பாக தன்னிடம் விசாரிக்கும் போலீசிடம்(முதல் சந்தேகத்திற்குரிய நபர் கைதான்) ப்ரூனோவை காட்டிக்கொடுத்திருக்கலாம்!"நான் எதேர்ச்சையாகத்தான் மிரியம் பற்றி சொன்னேன்.அதை ப்ரூனோ தீவிரமாக எடுத்துக்கொண்டு அவளைக்கொன்றுவிட்டான் பாவி" என்று தன்னை புனிதனாக்கிக்கொண்டு ப்ரூனோவை சிக்க வைத்திருந்தாலேபோதும்!
அவன் நிம்மதியாக(!!??) வாழ்வை தொடர்ந்திருக்க முடியும்!தான் விரும்பும் ஆன்(Anne) னோடு சந்தோசமாக வாழ்திருக்கலாம்!ஆனால் அவன் அதை செய்யவில்லை!காரணம் ப்ரூனோ செய்த கொலையில் தனக்கும் பங்கிருப்பதாகவும் ப்ரூனோ தண்டனைக்குறியவன் என்றால் தானும் அவ்வாறே என்றும் எண்ணுகிறான்!
அதனால் இன்னும் நெருக்கடிக்கு உள்ளாகிறான்.இப்போது அவன் ப்ரூனோவின் தந்தையை கொல்லவேண்டும்!ப்ரூனோ விடுவதாக இல்லை.சுத்திசுத்தி வருகிறான்!கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறான் கை.ஆன் அதை பற்றி கேக்கும்போது "வேலைப்பளு!"என்று சமாளிக்கிறான் கய்.
தன் வீட்டின் ப்ளான்,தெருவின் ப்ளான்,எந்த நேரத்தில் வீட்டில் யார் இருப்பார்கள் என்ற அட்டவணை,தந்தையை கொன்றுவிட்டு எந்தவழியே குதித்து வெளியேறி ரயிலேற வேண்டும் என்பதுவரை மிகத்துல்லியமாக வரைபடங்களோடு கைக்கு ப்ரூனோ கடிதம் அனுப்புகிறான்.திரும்பத்திரும்ப அதைப்பார்த்து பார்த்து கய்க்கே ப்ரூனோவின் வீட்டில் பலகாலம் வாழ்ந்துவிட்ட உணர்வு!தந்தையை கொல்ல செல்கிறான்!"ஏற்கெனவே பலமுறை ப்ரூனோவின் தந்தையை கொன்றதுபோலவும் இது அதில் ஒரு தடவை" என்பதாக அவனுக்கு தோன்றுகிறது.சுடுகிறான்.தப்புகிறான்.ப்ரூனோ பிளான்படி அல்லாது வேறுவழியில்!காட்டுசெடிகள் கிழிபட்டு மண்டையில் அடிபட்டு வீடு வந்து சேர்கிறான்.
ஆன் காயம் பற்றி கேக்கும்போது சமாளிக்கிறான்.ப்ரூனோவின் தந்தையின் ஆஸ்தான டிடெக்டிவ் ஜெரார்ட் துப்பறிய ஆரம்பிக்கிறார்!போலீசு மிரியம்&ப்ரூனோவின் தந்தை இருவரையும் கொன்றது யார் என்பது தெரியவில்லை என்று ஃப்ரீயாவிட ஜெரார்டோ மிகத்தீவிரமாக துப்பறிகிறார்
ஜெரார்ட் துப்பரிவதை பிறகு பார்ப்போம்.இப்போது மிரியத்தை ப்ரூனோவும்,ப்ரூனோவின் தந்தையை கையும் கொன்றாகிவிட்டது!போலீசும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை!இப்ப இவர்கள் இருவரும் ஜாலியாக வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்களே? என்று கேட்டால் இல்லை!
Patricia Highsmith |
ப்ரூனோவுக்கு என்ன பிரச்சனை?தந்தை மேல போயாச்சு!ஜாலியா சொத்துக்களை குடித்தே அழிக்க தடைகள் ஏதுமில்லை(அவனது தாய் இவைகளை கண்டுகொள்வதில்லை) மஜாவா இருந்துட்டு போகலாமே!ஆனால் அவனால் அப்படி இருக்கமுடியவில்லை!Guy மீதான ஒரு ஈர்ப்பு(ஒருபாலின ஈர்ப்பாகவே நாம் இதை புரிந்துகொள்ள வேண்டும்) அதையும்தாண்டி Guy தனிப்பட்ட வாழ்விலும்,கரியரிலும்,பொதுவாக சமூகத்திலும் மிகவும் மதிக்கப்படும் ஒரு நபராக இருப்பதை ப்ரூனோ பார்க்கிறான்.
ப்ரூனோவால் எதுவாக இருக்கவே முடியாதோ அதுவாகவெல்லாம் கய் இருப்பதே அவன் மீதான ஈர்ப்புக்கு மற்றுமொரு காரணம்.திரைப்படத்தில்கூட
"Oh,i certainly admire people who do things";
என்று கய்யிடம் ப்ரூனோ சொல்வதாக வசனம் வரும்." You know it must be pretty exciting to be so important"
ப்ரூனோவுக்கு தனிப்பட்ட தொழிலோ வேலையோ இல்லை!அவன் ஒரு ப்ளேபாய்!குடி குடி குடி&சாகசங்கள்(கண்களை கட்டிக்கொண்டு காரை நூறு மைல் வேகத்தில் செலுத்தியிருக்கிறான்) தான்!எந்தளவுக்கு என்றால் குடித்தால்தான் அவன் ஸ்டெடியா இருப்பான் எனுமளவு குடி!தந்தை இருந்தவரையில் பணம் கொடுக்காமல் மிக கண்டிப்பாக இருந்தார்!
Guyன் மனநிலை இந்தளவு எளிதாக விளக்கிவிடக்கூடியதாக இல்லை!முதலில் ப்ரூனோவை போலீசிடம் காட்டிக்கொடுக்காமல் இருந்தது,பிறகு அவனின் நெருக்கடிக்கு பணிந்து தந்தையை கொல்வது,பிறகும் விடாமல் ப்ரூனோ தன்னைச்சுற்றியே வரும்போது எரிச்சலோடு ஒருவித ஈர்ப்பையும் உணர்வது,மனைவி ஆனிடம் ப்ரூனோ பற்றி சொல்லும்போதுகூட அவன் தடுமாறுகிறான்.ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு கதை சொல்கிறான்!ப்ரூனோகடலில் வீழ்ந்து மரித்தபோது "எங்கே என் சகோதரன்" என்கிறான்!
ப்ரூனோவின் தந்தையை கொன்ற சிலகாலம்வரையில் பெரிதாக கவலைப்படாத கய் போகப்போக தான் இரு நபர்களாக உடைபட்டுநிற்பதை உணருகிறான்.
ஒருவன் கொலைகாரன்
இன்னொருவன் ஆன்-ஐ திருமணம் முடிக்கவிருக்கும் ஒரு ஆர்கிடெக்ட்.
இந்தப்பிளவு போகப்போக அதிர்கரித்துக்கொண்டே போவதை கய் உணர்கிறான்.
ஜெரார்ட் ப்ரூனோவுக்கும் கய்க்குமான ரயில்சிநேகத்தை கண்டுபிடிக்கிறார்!போலீசிடம் அதைப்பற்றி சொல்கிறார்(கொலைகளை பரிமாறிக்கொண்டது பற்றி).போலீசு "நீங்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்பே ரிட்டையர் ஆகியிருக்க வேண்டியவர்!ஓய்வெடுங்கள்" என்று பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.
ஜெரார்டுக்கு தெரியும்!சட்டம் இருவரையும் தண்டிக்காவிடினும் அவர்களது குற்ற உணர்ச்சியே அவர்களை தண்டிக்கும் என நம்புகிறார்!உறுமீன் வரும்வரையில் காத்திருக்கிறார்!வழக்கை விசாரித்து முடித்ததாக போலியாக தகவல் பரப்புகிறார்!
இந்த நேரத்தில் ப்ரூனோ சொகுசு படகிலிருந்து கடலில் குதித்து இறக்கிறான்!
ஏற்கெனவே குற்ற உணர்ச்சியால் இரண்டாக பிளவுற்றிருந்த கய் இப்போது மேலும் அதிக நெருக்கடிக்கு ஆளாகிறான்.இருகொலைகளின் பாரத்தையும் தான் தனியொருவனாக சுமக்கவேண்டிய கட்டாயம் மூச்சு திணற வைப்பதை உணர்கிறான்.
இந்த பாரத்தை இந்த குற்ற உணர்ச்சியை யாரிடமாவது சொல்வதன்மூலம் குறைத்துவிட எத்தனித்து மிரியம் கொலையுண்டதால் அதிகம் பாதிக்கப்பட்ட அதிகவருத்தத்தில் இருக்கும் நபர் யாரென யோசிக்கும்போது அதிர்கிறான்!மிரியத்தின் சகோதரன் அதைப்பற்றி எந்தவித எண்ணங்களுமே இல்லாதவனாக இருக்கிறான்.மிரியத்தின் தாயும் அவ்வாறே!மிரியத்தை திருமணம் செய்வதாக இருந்த ஓவன்(Owen) நினைவுக்கு வருகிறான்.அவனின் பிள்ளையத்தான் மிரியம் சுமந்துகொண்டிருந்தாள்!
ஓவனை தனி ஓட்டல் அறைக்கு அழைத்து அனைத்தையும் சொல்கிறான்!அனைத்தையும்!இப்படி அனைத்து உண்மைகளையும் யாரிடமாவது சொல்லிவிட்டால் தனது மனப்பாரம் அகன்றுவிடும் என்பது வெறும் கற்பனை என்பதை உணர்கிறான்.அனைத்தையும் சொன்னபின்பும் கடுமையான குற்ற உணர்ச்சியை உணர்கிறான்.
தான் சொன்ன எதையுமே தான் நினைத்த ரியாக்சனோடு உள்வாங்காது indifferent ஆக இருக்கும் ஓவனை பார்த்து கத்துகிறான்!அப்போதும் ஓவன் அசையாது ஸ்காட்ச் அடித்துக்கொண்டிருக்கிறான்.சமூகம்-சட்டம்-தனி மனிதன் போன்ற விஷயங்களை பற்றி லெக்சர் கொடுக்கிறான் கய்.ஓவன் எதையும் கண்டுகொள்ளவில்லை!
ஆனால் அனைத்தையும் சரியாக வைக்கப்படாத தொலைபேசி(இது ஜெரார்டின் திட்டம்) மூலம் ஜெரார்ட் கேட்டுவிட்டு அறைக்கதவை தட்டியவுடன் திறந்து "என்னை கைது செய்யுங்கள்" என்கிறான் கய்!
இதில் முக்கியமாக எழுப்பப்படும் கேள்வி ஒருவரை கொலை செய்தால்; அந்த நபரின் இழப்பை யாருமே பொருட்படுத்தவில்லை என்றால் அந்தக்கொலை குற்றமாகாதா?இதில் மிரியம் கொலையுண்டதாலோ ப்ரூனோவின் தந்தை கொலையுண்டதாலோ யாரும் எதையும் இழக்கவில்லை!அதை யாருமே பொருட்படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும்!இருந்தாலும் கய்யின் மனதில் ஆட்டிப்படைக்கும் குற்ற உணர்ச்சி அவனை சரணடைய வைக்கிறது!
இப்போது இதை மையமாக வைத்து ஹிச்காக் எடுத்த படத்தைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் இந்த நாவலின் மையக்கருவாக பலராலும் கருதப்படும் நான் மேற்குறிப்பிட்ட அந்த இரண்டுவரிகளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கும்!
நாவல் அகவயமானது என்றால் ஹிச்காக்கின் படம் புறவயமானது!நாவலில் கய் ஒரு ஆர்கிடெக்ட்!சினிமாவில் டென்னிஸ் வீரன்.அந்த டென்னிஸ் மேட்சையே வைத்து நகம் கடிக்கும் த்ரில்லை கொடுத்திருப்பார் ஹிச்காக்!சினிமாவில் கய் நல்லவன்-ப்ரூனோ கெட்டவன்!
நாவலில் அந்தவேறுபாடு போகப்போக அழிந்துவிடும்!கய் நாவலில் கொல்கிறான்.சினிமாவில் கொல்வதில்லை!சினிமா ஒரு பரபரப்பான சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கவைக்கும் டிபிகல் ஹிச்காக் படம்!நாவலோ முழுக்கமுழுக்க உளவியல் சார்ந்தது!அதற்காக படம் மோசமானது என்று சொல்லவில்லை.standalone திரைப்படமாக அது ஹிச்காக்கின் மற்றுமொரு மகுடம்!
பல intense ஆனா தருணங்கள் நாவலில் உண்டு.உதாரணமாக ப்ரூனோவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு தனது உடைகளை அனைத்தையும் கிழித்தெறிந்துவிட்டு மெத்தையில் மயங்கி சரிவதாகவும் மருத்துவர் ஊசி போட்ட உடனேயே அந்த asphyxiating உணர்வு நீங்கியதாகவும் வரும்!கய் ப்ரூனோவின் தந்தையை கொன்றபின் எந்த குற்ற உணர்வுமே இல்லாததைக்கண்டு தன்னைத்தானே வியக்கிறான்.பிறகு அவனே அந்த குற்ற உணர்வின் பாரத்தால் மூச்சுத்திணற வைக்கும் அந்த பிடியால் வீழ்கிறான்!