Saturday, 16 December 2017

அருவி

                                         I exist, that is all, and I find it nauseating-Sartre 

                 வாழ்தல் என்பதைவிட அபத்தமான செயல் எதுவும் இருக்க முடியாது!பல அபத்த கணங்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டதே ஒருவரின் வாழ்க்கை!அர்த்த வெங்காயங்கள் பிறகு கற்பிக்கப்பட்டவை!வாழ்வின் மீதான பிடிப்பு ஏற்பட ஒரு லாரி சக்கரை பூச்சு பூசி மெழுகி உண்டாக்கப்பட்ட ஒரு தோற்றம்!அவ்வளவே!

                   நாம் காணும் வணிக  சினிமாக்கள் தொடங்கி ,தெருவின் சந்து பொந்தெல்லாம் நம் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் ஜிகினா விளம்பரங்கள் வரை எல்லாமே நம்மை வாழ கட்டாயப்படுத்துவதே!எந்த மாதிரியான வாழ்க்கை?படிப்பு வேலை மனைவி வீடு குழந்தைகள் சரவணா ஸ்டோர்ஸ்  blah blah என்பதே லட்சிய வாழ்வு!அதை எப்படியாவது வாழ்ந்து தொலைக்கத்தான் எத்தனை கேப்மாரித்தனங்கள்! கோமாளித்தனங்கள்! எத்தனை துரோகங்கள்!

                மேற்கூறிய விஷயங்கள் படத்தில் வசனமாகவே வருது.கொஞ்சம் நீளமாவே போய்விட்டது என்றாலும் வாழ்வின் அர்த்தமற்ற தன்மையை இவ்வளவு அப்பட்டமாக பேசிய தமிழ் படம் இதுதான் என நினைக்கிறேன்!ஆனால் அதை முழுமையாக செய்திருக்கிறார்களா?என்றால் இல்லை.

            "இந்தமாதிரி குப்பை வாழ்க்கை வாழுறதுக்கு எய்ட்ஸ் வந்து செத்துபோலாம்" என்று அல்டிமேட்டா ஒரு வசனத்தை அருவி பேசுகிறார்!தேட்டர்ல நான் கைத்தட்டிய இடமும் அதான்!ஆனால் அருவியின் கதாபாத்திர தன்மை என்பது ஒரேபோல இருக்கவில்லை.

             வாழ்க்கைக்கு எந்த வெங்காய அர்த்தமும் இல்லை!அதன் போக்கில் வாழும் அருவி ;வாழ்வின் randomness ஐ  தன் கையில் எடுத்துக்கொண்டு சுற்றி இருப்பவரை ஆட்டிவைக்கும் அருவி திடீரென்று கைது செய்யப்பட்ட பிறகு உடைந்து நொறுங்கி போவதாக காட்டியது அருவியின் பாத்திரப்படைப்பில் விலகிப்போனதாகவே  எனக்கு தோன்றியது!
    நோயின் தீவிரத்தால் அப்படியான ஒரு உடைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினாலும் திடீரென்று Hrishikesh Mukherjee ன் படம் பாத்துக்கொண்டிருக்கிறோமோ(ஆனந்த்,மிலி) ஒரு குழப்பம் வந்துட்டுது!நோயின் தாக்கம் குறைவாக உள்ளவரை வாழ்க்கையை எள்ளி நகையாடிய அருவி நோயின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க மேலும் ஒருநாளாவது கூடுதலாக வாழ்ந்துவிட முடியாதா என்று ஏங்குகிறார்.
Mili(1975)


        இந்த இடத்தில் ஒரு கிடாயின் கருணை மனு படம் பற்றிய எனது பதிவிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டியுள்ளது:
அபத்த நகைச்சுவையை ரணகளமாக ஆரம்பித்த இயக்குனர் "ஐயோ டெட் பாடிய வச்சிட்டு காமெடி பண்றோமே!யாராச்சும் திட்டிடுவாங்களோ?" என்ற பயத்தில் அப்படியே கொஞ்சம் செண்டிமெண்ட் உருக்க்கம்னு திசைமாறுகிறார்.அபத்த நகைச்சுவைதான் எடுக்கபோறோம் என்று முடிவு செய்துவிட்டால் ஈவு இரக்கம் செண்டிமெண்டு எதையும் பாக்காம அடிச்சி தூக்கணும்
          இந்தப்படத்திலும் இந்த திசைமாற்றம் நிகழ்ந்துள்ளது!முக்காவாசி படத்துக்கு பிறகான மாற்றம் ஒருபுறம் இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு வரும் அந்த கிராமத்து பணியாரக்கிழவி தொடர்பான காட்சி தனித்து தெரியுது!கொஞ்சம் இந்த இடத்தில் செண்டிமெண்டா காட்சி வைப்போம் என்று வைத்தாற்போல!அதையும் ரசிப்போர் உண்டு.இது எனது சொந்த கருத்து!


                          வாழ்க்கை என்பது அவலம் என்று தெரியாமலேயே அதை படு சீரியஸா அணுகி அணுகி பை-பாஸ் ஆபரேஷன் வரை போவோர்தான் இன்று அதிகம்.வாழ்வின் அவலத்தை தனியே எடுத்துக்காட்டினால் அதைக்கண்டு சிரிப்போரும் அவர்களே!தியேட்டரே சிரிப்பலையில் குலுங்கியது என்ற க்ளீஷே மேற்கோளை இங்கே பயன்படுத்தவேண்டியுள்ளது.
         இதைத்தவிர படத்தின் transgressive தன்மையை பாராட்டலாம்!ஸீரோ டிகிரி நாவலின் நடுவில் அவந்திகாவின் கதை வந்தது போல இதிலும் செண்டிமெண்டா திசை மாறுகிறது!ஆனாலும் இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்டத்தான் வேண்டும்.பெரிய ஈரோ படமெல்லாம் ஆயிரம் தேட்டரில் அசிங்கம் பண்ணிட்டு இருக்கும்போது இதுபோன்ற படங்களுக்கு குறைந்த அளவு தியேட்டரே  கிடைத்திருக்கும் அவலத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது!

        அருவி கேரக்டர் அதிதி பாலனுக்காகவே  என்பது போல இருந்தது!சொந்தக்குரலில் பேசியிருக்கிறார் என்று நினைக்கறேன்.லூசு  மாதிரி சிரிப்பது;போலியா blush பண்ணுதல்;கழுத்து சுளுக்கும் அளவுக்கு படம் முழுக்க அலைபாயும் கூந்தலை காற்றில் பறக்கவிட்டபடி திரும்பி பார்த்தல் என்ற கூத்துகள் இல்லாமல் இருந்தது!நல்லா ரெண்டு இன்ச்சு மேக்கப்பை பூசி மெழுகாமல் இயல்பான தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்!


அப்புறம் இதுவரை மற்றவர்கள் இப்படம் பற்றி எழுதிய பதிவில் குறிப்பிட்ட பொதுவான விஷயம் "முதல் பாதி செம காமெடி!இரண்டாம் பாதியில் அழவைத்துவிட்டார்கள்" .அழவைக்கும் அளவுக்கு என்ன இருக்கு?மரணம்தான்   விடுதலை!
The Man Who wasnt there  படத்தில் கடைசியில் Ed மரண தண்டனை பெற்று மின்சார நாற்காலியில்  அமரும் வரை அந்த அவல நகைச்சுவைதன்மை விலகாமலே இருக்கும்!

Sunday, 19 November 2017

Persona 1966

               


               எலெக்ட்ரா பட ஷூட்டிங்கின் போது  ஒரு நிமிடம் அமைதியாக இருக்கும் எலிசபெத் பிறகு வாய்விட்டு சிரிக்கிறார்.படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியேறுகிறாள். அடுத்தநாள் படக்குழு தொலைபேசியில் அழைக்கும்போது பணிப்பெண் அவள் அறைக்கு சென்று பார்த்தால் அவள் விழித்துக்கொண்டிருந்தாலும் பதிலளிக்க மறுக்கிறாள்.மூன்று மாதங்கள் எல்லாவித டெஸ்டுக்கு பிறகும் ஒன்றும் மாற்றமில்லை
She is perfectly healthy both psychically and mentally என்கிறார் டாக்டர்
மனதில் எந்த குறைபாடும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் மற்றவர்களை விட அதிக மனவலிமை கொண்டவராகவே அவர் உள்ளார்.அதனாலேயே அவரால் எந்தவித எதிர்வினையும் ஆற்ற மறுக்க முடிந்தது.
            நர்ஸ் ஆல்மா அவளை கவனித்துக்கொள்ள பணியமர்த்தப்படுகிறார்.எலிசபெத்தின் complexity ஐ எதிர்கொள்ள முடியாது என்று முதலில் தயங்கும் ஆல்மா பிறகு டாக்டரிடம் சம்மதம் தெரிவிக்கிறாள் . மனவலிமை கொண்ட  எலிசபெத்துக்கு நர்சின் சிக்கலற்ற மேம்போக்கான விளையாட்டுத்தனமான பல்வேறு கனவுகள்(கணவன் குழந்தை மகிழ்வான வாழ்க்கை) கொண்ட  வாழ்வியல் பார்வை ரசிக்க வைப்பதாக இருக்கிறது.அவளுக்கு அந்த எளிமை தேவைப்படுகிறது
நர்சுக்கு பலப்பல கனவுகள்!வேளையில் இருக்கோம்.Security உண்டு.கணவன் குழந்தை பிள்ளைகளை நன்றாக வளர்ப்பேன்  ...எல்லாம் நன்றாக இருக்கும்! என்று கனவுகள்.
Alma


கணவனின் கடிதத்தை எலிசபெத்திடம் படித்துக்காட்டுகிறாள் நர்ஸ்.திருமணம் பற்றி எலிசா சொன்னதை மேற்கோள் காட்டிவிட்டு மரங்கள் அடர்ந்த பகுதியில் நடந்துபோகும் போது எனது பெல்ட்டை  பிடித்து இழுத்தாயே!..... என்ற வாசகம்  வாசிக்கப்படும்போது தனது பெல்ட்  இழுபட்டதுபோல நடுங்குகிறார் எலிசா.
the hopeless dream of being.not seeming to be,but being
                   

 எலிசபெத் இப்போது ஏற்றிருப்பது ஒரு வேடம்!வாழ்வின் அனைத்தும் மீதும் விருப்பம் அற்றுப்போன ஒரு வேடம்!வாழ்விற்கு எதிர்வினை ஆற்ற மறுக்கும் வேடம்!வாழ்வின் பிற அம்சங்கள் எப்படி இவளுக்கு சலித்துப்போனதோ அதுபோல இந்த வேடமும் ஒருநாள் சலித்துப்போகும்!அப்போது அவள் வெளியே வந்துதான் ஆக வேண்டும்!
life oozes in from all sides....you are forced to react.உனது எதிர்வினைகள் உண்மையா பொய்யா நீ சொல்வது உண்மையா பொய்யா என்பது பற்றியெல்லாம் எவருக்கும் கவலையில்லை!

      முதலில் ஆல்மா நர்ஸ் என்ற professional ரீதியிலேயே எலிசபெத்தை அணுகுகிறாள்.அது தோற்றதும் பெரிய நடிகை என்ற அண்ணாந்து பார்க்கும் அணுகுமுறைக்கு மாறுகிறாள்..அதுவும் தோற்றதும்  தனது பெரும்பாலும் சலனமற்ற வாழ்வில் மிக அதிகபட்ச அதிர்வை உண்டாக்கிய ஒரு அனுபவத்தை எலிசபெத்திடம் சொல்கிறாள் ஆல்மா.மிக அந்தரங்கமான அந்த அனுபவம்.கடற்கரையில் முகம் தெரியாத பதின்ம வயது சிறுவனோடு உடலுறவு கொண்ட தருணம்!அதனால் கர்ப்பமானது;பிறகு தனது பாய் பிரென்ட் மூலம் கருக்கலைப்பு செய்த அனுபவத்தை பகிர்கிறாள்.
         இப்படியொரு அந்தரங்கமான பகிர்வின் மூலம் எலிசபெத்தை கொஞ்சம் அவளால் நெருங்கவும் முடிகிறது.
         



 நீங்கள் நானாக நொடிப்பொழுதில் மாறிவிடலாம்!என்ன உங்கள் ஆன்மா மிகப்பெரியது! எங்கும் நிரம்பி வழியும்  என்கிறாள் ஆல்மா.இதை சொல்லி முடித்ததும் படுக்கைக்கு போ!இல்லாவிட்டால் இங்கேயே தூங்கி விடுவாய் என்று  அசரீரி போல ஒரு குரல் கேட்கிறது!அது யார் பேசியது என்பது காட்டப்படுவதில்லை அதே வசனத்தையே நர்ஸ் திரும்ப தனக்குத்தானே சொல்கிறாள்!
நர்ஸ் உரையாடல்களை விரும்புபவள்.எதிரில்  இருப்பவர் எதிர்வினை ஆற்றினாலும் ஆற்றாவிட்டாலும் அதை கேட்டால் போதும் என விரும்புபவள்.She needs someone to listen to her.தனது குறைபட்ட; அனுபவ முதிர்ச்சியற்ற ஆளுமையின் சிறு சிறு மனவெழுச்சிகளால்கூட பெரிதாக பாதிக்கப்படுபவள்.அந்த பாதிப்புகளை உரையாடல்கள் மூலம் பிறருக்கு உணர்த்த நினைப்பவர்!பார் என் வாழ்வும் எவ்வளவு சிக்கலுள்ளதாக இருக்கிறது என்ற எண்ணத்தை  தோற்றுவிக்கும் முயற்சி.

          டாக்டருக்கு  எலிசபெத் எழுதிய கடிதத்தை போஸ்ட் செய்யப்போகும் ஆல்மா ஆர்வம் தாங்காமல் அதை பிரித்துப்படிக்கிறார் .ஆல்மா பற்றித்தான் எலிசபெத் எழுதியிருக்கிறார்.Its a lot of fun studying her!அந்த கடற்கரையில் நடந்த அந்தரங்க அனுபவத்தையும் கடிதத்தில் எழுதி இருக்கிறாள் எலிசபெத்.

  எலிசபெத் வரும் பாதையில் வேண்டுமென்றே உடைந்த கண்ணாடி துண்டுகளை போட்டு வைக்கிறாள் ஆல்மா.தனது மிக அந்தரங்கமான ஒரு அனுபவத்தை வேறொரு நபரிடம் எலிசபெத் பகிர்ந்து கொண்டதற்கான கோபமா? அல்லது உடல்ரீதியான வாதைக்கு எலிசபெத் எப்படி எதிர்வினையாற்றுகிறாள் என்று பார்க்க விருப்பமோ? அல்லது இரண்டுமா?
          கண்ணாடித்துண்டை மிதிக்கிறாள் எலிசா.வலியில் சிணுங்கி ஆல்மாவை பார்க்கிறார்!எலிசாவின் பார்வை இப்போது நிர்சலனமற்ற ஊடுருவும் பார்வையல்ல!எரிச்சல் கலந்த பார்வை!ஆல்மாவின் பார்வை இப்போது ஆழமற்ற,வாழ்க்கை குறித்த பல்வேறு கனவுகளுடனான பார்வையல்ல!எலிசாவின் வெற்றுப்பார்வை!! படத்தின் துவக்கத்தில் சினிமா துவங்கிய காலம் முதலான பல்வேறு சிறு காட்சி துணுக்குகள் காட்டப்படும்.இப்போது மீண்டும் அந்த துவக்கம்!உடைதல்!ஆளுமை மாற்றம்!இதை விளக்குதல் மிக சிக்கலானது.அந்த காட்சி உண்டாக்கும் பாதிப்பை வார்த்தைகளில் வடிக்கவே முடியாது  

இந்த காட்சியில் ஆல்மாவின்  பிம்பம் உடைந்து மீண்டும் ரீல் முதலிலிருந்து ஓடத்துவங்குகிறது.இப்போது ஆல்மாவின் மூலமாய்!


          தனது மிக மிக அந்தரங்கமான ஒரு அனுபவத்தை டாக்டரிடம் கடிதத்தில் தெரிவித்ததை சொல்லி கோபத்தின் உச்சத்தில் கொதிக்கும் வெந்நீரை எலிசபெத்  மீது கொட்டப்போகிறாள் ஆல்மா! No Dont! என்று பதறுகிறாள் எலிசா.அவளது முதல் எதிர்வினை!தன்னை சுற்றி எழுப்பப்பட்ட கோட்டையில் விரிசல்!ஆல்மா அதை மகிழ்வோடு ஒருவித திமிரோடு பார்க்கிறாள்!உன்னை உடைத்துவிட்டேன் பார்த்தாயா? -பார்வை!
         அந்த கண்ணாடியை எலிசா மிதித்ததன்  பிறகு ஆல்மா மாறி மாறி காட்டப்படுகிறாள்.அதற்கு முன்வரை அவள் submissive ஆக ஒரு நடிகையை மேல்நோக்கி பார்க்கும் தொணியில்,சகோதரிகள் இல்லாமல் வளர்ந்ததால்  எலிசாவை சகோதரியாக அன்போடு பார்க்கும் தொணியில்; தன் அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ளுதல் மூலம் எலிசாவிடம் ஒரு மாற்றத்தை உண்டாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை தொணியில்தான் இருந்தது.அந்த கடித்தத்தை ஆல்மா படித்ததன் பிறகு apprehensive ஆக எலிசாவை பார்ப்பது,ஒருகட்டத்தில் dominating ஆக எலிசாவை உடைத்துப்பார்ப்பது, அடுத்த நிமிடம் குளியலறையில்  உடைந்து அழுவது என்று பெரும் பாறையை உடைக்க மாறி  மாறி அறையும் கடலலை போல காட்டப்படுகிறாள்.


          எலிசாவின் கணவன் அழைக்கிறான்.ஆல்மா பதில் சொல்ல செல்கிறாள்.எலிசா என்று நினைத்து "மகனிடம் எதை சொல்லியும் புரிய வைக்க முடியவில்லை" என்று பேசிக்கொண்டே போகிறான்."நான் எலிசா இல்லை" என்கிறாள்.அவன் கண்டுகொள்ளவில்லை.அவள் பின்னாடி எலிசா வந்து நிற்கிறாள் அப்போதும் கணவன் ஆல்மாவையே எளிசாவாக கண்டு பேசிக்கொண்டே போகிறான்

its all sham and lies –alma
"மகன் பிறந்த கதையை சொல்" என்கிறாள் ஆல்மா!முடியாது என்கிறாள் எலிசா.நானே சொல்கீறேன் என்று சொல்லத்தொடங்குகிறாள்.ஒரு பார்ட்டியில்  ஒருவர் எலிசாவிடம் "உங்களிடம் பணம் பேர் புகழ் எல்லாம் இருந்தும் தாய்மை இல்லையே?" என்று கேட்க அப்போது சிரிக்கும்  எலிசா பிறகு அதை தீவிரமாக உணர்ந்து தாய்மை அடைகிறாள்.பிறகு பயம்!பொறுப்புகள் கைகளை கட்டிப்போடும்; கடமைகள் தியேட்டரை விட்டு விலக நேரிடும்; மரணத்தின் மீது; உடலின் மீது; வயோதிகம் மீது பயம்!

     எந்தளவு பயம் என்றால் பிள்ளை வேண்டாமென்று பலமுறை அபார்ஷன்  செய்ய முயலும் அளவு;பிள்ளை இறந்தே பிறக்காதா என்று ஏங்கும் அளவு;பிள்ளை பிறந்தபின் அதை வெறுக்கும் அளவு!ஆனாலும் யார் யாராலோ வளர்க்கப்பட்டும் மகன் எலிசா மீது பாசமாக இருக்கிறான்.இவளுக்கு மீண்டும் பயம்!அந்தளவு பாசத்தை தன்னால் திருப்ப செலுத்த இயலாது என்ற பயம்!Cold and indifferent ஆக இருக்கும் எலிசாவுக்கு மகனின் தூய அன்பை எதிர்கொள்ளவே முடியவில்லை!அன்பிற்காக ஏங்குவோர் உலகில் இருந்தாலும் அவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தப்படும்போது அதை கையாளத்தெரியாமல் போட்டு உடைத்துவிடுவார்கள்!!இந்த இயலாமைக்கு பயந்தே பலர் எந்த வகையிலும் அன்பு தன்னை அணுகிவிடாதபடி ஒரு அரணை எழுப்பி வைத்திருப்பார்கள்.அன்பைப்பெறுதல் என்பதைவிடவும் மிக மிக கடினமானது அந்த அன்பை திரும்ப செலுத்துதல்!
தனது தாயை திரை மூலமாகத்தான் பார்க்கிறான் அந்த சிறுவன்.பிம்பங்களாக மட்டும்!



        எலிசாவின் ஆளுமை;தனது சொந்த ஆளுமை என்று மாறி மாறி உணர்வதின் வாதை ஆல்மாவை பிய்த்து எரிகிறது!You cant get to me என்று துணிச்சல் தொணியில் எலிசாவிடம் சொல்கிறாள் ஆல்மா!அது உண்மையில் துணிச்சலில் சொல்லப்பட்டதல்ல!கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயத்தை இழந்து கொண்டிருப்பதை தடுக்க முடியாமல் போகிறதே என்ற இயலாமையின் வெளிப்பாடு.எலிசா என்ற மாபெரும் ஆன்மாவின் வீச்சை எதிர்கொள்ள முடியாததன் அச்சம்.விடாது எலிசாவை அறைகிறாள்.முழுமையாக ஆட்கொள்ளப்படுகிறாள்! எலிசாவின் வேடத்தை ஏற்கிறாள் ஆல்மா!
                  படம் நெடுக மிக வலிமையான காட்சிகள்.அதற்கு பெர்க்மனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் Sven Nykvist ன் ஒளிப்பதிவு உயிர்மூச்சாய் உள்ளது.கதாபாத்திரங்களின் தகிப்பை பார்வையாளன் உணர மிகப்பெரும் கருவியாய் அவரது ஒளிப்பதிவு உள்ளது.குறிப்பிட்டு சொல்லவேண்டிய மூன்று வலிமையான காட்சிகள் ஆல்மாவின் தலையை எலிசபெத் கோதும் காட்சி;கண்ணாடியை மிதித்ததும் ஆல்மாவின் முகத்திற்கு வரும் க்ளோசப்;இறுதியில் ஆல்மாவின் முகம் பாதி எலிசபெத்தின் முகம் பாதியாக மிரள வைக்கும் காட்சிகளை சொல்லலாம்!

Wednesday, 1 November 2017

காக்கா காக்கா

                         ஒப்பனிங் காட்சியில்  அன்பு செல்வன்  கூவக்கரையில் மல்லாந்து கிடக்கிறார்...
voice over : தல சுத்துது மேல இவனுங்க வேற சுத்திகினு இருக்கானுவ...Vertigo!வெர்டின் மாத்திரை போட மறந்துட்டேன்.மருந்து கடைக்காரன்கிட்ட "டேய் நா போலீஸ்டா"னு ஓசில வாங்கியிருக்கணும்.இப்ப ரெண்டு மைல் நடந்து போனாத்தான் மெடிக்கல் ஷாப்.எந்திரி அன்பு செல்வன்..எந்திரி.....

.
பேக்ரவுண்ட் சாங் ஒலிக்க ஆரம்பிக்குது.
                                ஓமக சீயா ஒகயாலா சீச எவசாரா...
அன்பு செல்வன் டென்சனாகி டைரக்டரை நோக்கி :யோவ் நானே வெர்டிகோல மயங்கி கிடக்குறேன்.இப்ப போய் பத்து மைல் இந்த பாட்டுக்காக நிக்காம ஓட சொல்றியா?அதெல்லாம் முடியாது.அசிஸ்டெண்டை உட்டு வெர்டின் வாங்கிவர சொல்லு.அப்புறம்தான் சாங்....
.
ஒருவழியா மருந்து சாப்பிட்டு கைத்தாங்கலா எந்திரிச்சி நிக்குறாரு அன்பு.
பவுதம் பேனன்: ஓகே...நவ் யு ஸ்டார்ட் சேஸிங் மாயா...
அன்பு: யோவ் அதெல்லாம் இன்னிக்கி முடியாது.நாளக்கி மார்னிங் ஜாக்கிங் போவேன்.அப்போ அதையே சாங்கா ஷூட் பண்ணிக்க .
.
அடுத்தநாள் காலை ஐந்து மணி.சாங் ஷூட்டிங்..
அன்பு: யோவ் ஒட்டு மீசைக்கு நிறைய பெவிகால் போடு!ஏன்னா இந்த பாட்டுக்கு பத்து மைல் ஓடனும்......ஒகயாலா சீச எவசாரா...
.
பிளேஸ்பேக்.
நாங்க நாலு பேர்.எங்களுக்கு பயமே இல்ல...ஏன்னா நாங்க சஸ்பென்ஷன்ல இருக்கோம்..ஏன் சஸ்பென்ஷன்?வாங்க சொல்றேன்.....
.
அன்புசெல்வன்: நா மொதல்ல மாயாவ சந்திச்சது ஒரு விபத்து.அன்னிக்கித்தான் முக்கியமான பிளாட்பாரத்துல மாமூல் வாங்கிட்டு இருந்தேன்.அப்போ ஒரு கேடி எங்கிட்டியே பிக்பாக்கெட் அடிச்சிட்டான்.அவனை சேஸ் பண்ணி போகும்போதா ஒட்டு மீசை கழண்டு விழனும்....
மாயா தன் தோழியிடம்:ஹே! லுக் தேர் யார்!ஃபேக் முஷ்டாக்.எல்லாரும் சிரிக்கிறார்கள்.
 அன்பு செல்வன் வாய்ஸ் ஓவர் :அசிங்கப்பட்டேன்.அன்னிக்கி அசிங்கப்பட்டளவு என்னிக்குமே அசிங்கப்படல...கோபம்.அந்த இடத்துல மாயாகிட்ட என்னோட கெத்து என்னன்னு காட்ட நெனச்சேன்.அப்படியே பக்கத்துல நின்னுட்டு இருந்த ஆளை புடிச்சி "அடிங்..நா போலீஸ்டா" என்று அறஞ்சேன்.அப்புறம் பாத்தாதான் தெரியுது அவர் டிஎஸ்பின்னு.இருக்கேன், சஸ்பென்ஷன்ல இருக்கேன்.இல்ல.பயமில்ல.சும்மா வீட்ல சாப்ப்ட்டு சாப்ப்ட்டு தூங்குறதால எங்க நாலு பேருக்குமே பயமில்ல!
.
ரெண்டு மாசத்துக்கு முன்னர்.
டிஜிபி:(ஹே காய்ஸ்....நான்தான் பவுதம் பேனன்.நான்தான் டிஜிபி ரோல் பண்றேன்) பாய்ஸ்....இந்த மாச என்கவுண்டர் கோட்டா வந்திருக்கு.பெட்ரோல் பங்க் சேகர்,கொக்கி குமார்,கொருக்குபேட்டை ரவி,அகரம் சேது.
உதயா: ஏண்டா அதென்ன ரவுடின்னாலே அது நார்த் மெட்ராஸ் ஆளாத்தான் இருப்பானா?என்னிக்காவது நீ நார்த் மெட்ராஸ் போயிருக்கியா?அப்டியே கைத்தாமட்ல உட்டா தெரியும்.
பவுதம்: ஹே கூல் டூட்!! ஐ கோ பை தி கன்வென்ஷன்ஸ்.
உதயா: க்கும்.எதுவுமே தெரியாம படமெடுக்க வந்துட்டு கன்வெஷன் மண்ணுன்னு அள!
.
பாண்ட்யா ரிலீஸ்.

சேது: வா பாண்ட்யா.நீ இல்லாம அந்த ஒட்டுமீச அன்பு செல்வன் ரொம்ப துள்றான்.
பாண்ட்யா: அண்ணே நா வந்துட்டன்ல.இனி அவன் எப்படி பிளாட்பார கடைல மாமூல் வாங்குறான்னு பாக்குறேன்.
மனோகர்: பாண்டியா நீ ஜெயில்லேர்ந்து எஸ்கேப் ஆனத பேனர்,போஸ்டர்   அட்ச்சி வச்சிக்கிறேன்.ஊரு பூரா ஒட்டிடவா.
பாண்ட்: அடேய் இதுக்கு நீ நேரா கமிஷனர் ஆபீசுக்கு போய் நா இங்கதான்னு இருக்கேன்னு சொல்லிடேன்!
மனோகர்: அதான் நல்ல ஐடியா நா போய் சொல்ட்டு வரேன்
சேது மனோகரை புடித்து நாலு அப்பு அப்பிட்டு :போடா போய் ஓரமா ஒக்காரு.
மனோகர்: நாறிடும் பரவால்லையா?
சேது: ஐயோ!முடியலடா!
மனோகர்: நா வேண்ணா ரெண்டு குளுகோஸ் டப்பா வாங்கியாரட்டா?
பாண்ட்யா: ங்கோ...அவன் வாய்ல பிளாஸ்திரிய ஒட்டுங்கடா.

.
சேது: பாண்ட்யா வாசு சேட்னு ஒத்தன் கீறான்.அவன் புள்ளைய கடத்துறோம்.
பாண்ட்யா: ஆமாண்ணே நாம யாருன்னு இந்த ஊருக்கு இல்லாட்டியும் சவுக்கார்பேட்காவது தெரியனும்.செய்யுறோம்!
.
கடத்தல் ஓவர்!சாக்கு மூட்டைல!
பாண்ட்யா மொபைலில்: டே வாசூ சேட்
வாசு சேட்: அரே ஆமா
பாண்ட்: உம்புள்ளைய கடத்திட்டேன்
வாசூ வெடிச்சிரிப்பு சிரிக்கிறார் 
பாண்ட்: டேய் வாசூ சேட் த்தா புள்ள கழுத்துல மார்க் போடணுமா?
வாசூ: அரே நம்மல் பீவி பச்சா அல்லாம் ராஜஸ்தான்ல இருக்குது.இந்தமாதிரி எவனாவது கிட்னா பண்ணுவீங்கோன்னு தெரிஞ்சிதான் நம்மல் பரிவாரை அங்கே வச்சிருக்குது.
பாண்ட்: டேய்ய்ய் ....ங்கோ அப்போ இது யாருடா?
வாசூ: அரே நம்மல்கிட்ட கேட்டா எப்டி தெரியும்.. பேவகூப் போனை வய்யி!
பாண்ட் சேதுவிடம் : அண்ணே அவம்புள்ள இல்லங்குறான்...
சேது: அப்போ யார்தாண்டா இது?
.
மூட்டையை பிரிச்சா உள்ள அன்பு செல்வன்.
.
சேது மனோகரிடம் : ஏண்டா வாசு சேட் புள்ளைய தூக்கியாற சொன்னா நீ அன்பு செல்வன  தூக்கியாந்துக்கிற?
மனோகர்: இந்தாளுதான் இஸ்கூலு வாசலாண்ட டவுசர் போட்டுகினு நின்னுகினு இருந்தாரு.அத்தான் இவன தூக்கியாந்தேன்.
அன்பு செல்வன்: ஏண்டா சஸ்பென்ஷன்ல இருக்கேன்னு ஒட்டு மீச ஒட்டாம இருந்தா இப்படி கேவலப்படுத்துறீங்களேடா!
பாண்ட்யா: உன் ஹைட்டுக்கெல்லாம் எவன்டா போலீஸ் வேல கொடுத்தான்?
அன்பு :டேய்ய்ய் அடுத்த வாரம் சஸ்பென்ஷன் முடியுது.அப்போ உங்க எல்லாரையும் தூக்குறண்டா!
மனோ: ஜேசிபி வாடகக்கி எட்த்தாந்து தூக்கப்போரியா?
அன்பு: த்தா மொதல்ல உனக்குதாண்டா ஸ்கெட்ச்சு போடப்போறேன்.!
மனோகர்: ரொம்ம்மம்ப்ப தேங்க்ஸுப்பா!எம்புள்ள ஸ்கெட்ச் வாங்கியாரப்போறியா இல்லையான்னு ஒரே கொடச்சல் குடுக்குறான்.போடுறதுதான் போடுற நல்ல காஸ்ட்லி ஸ்கெட்ச் பாக்கெட்டா போடு!
அன்பு: டேய்ய்ய் டேய்ய்ய் டேய் நா போலீஸ்டா!
மனோகரு: நீதான் இப்ப சஸ்பென்சன்லகீறியே உன்னால இன்னா பண்ண முடியும்?
பாண்ட்யா: டேய் மனோகரு விட்றா.இதுக்குமேல கலாய்ச்சா இவன் தாங்க மாட்டான்!இவன சைதாபேட்ட கூவத்தாண்டதூக்கி போட்டுட்டு வந்துடுங்க.....
.
கூவக்கரைல அன்பு .......
தல சுத்துது மேல......(முதல் பேரா)
...


அன்பு செல்வன்: மாயாவ திரும்ப பார்த்தேன்.பிளாட்பார கடைல ஹேர்பின் வாங்கிட்டு இருந்தா...பத்து ரூபா அநியாய விலை சொன்னான் வியாபாரி."டேய் நா போலீஸ்டா"ன்னு சொல்லி அஞ்சு அம்பதுக்கு வாங்கி குடுத்தேன்.
மாயா: ஐ ஆம் தேங்க்புல்.
அன்பு: மச் வர்ட்ஸ்.பொலிஸ்னாலே தனி மரியாத, கெத்து இருக்குல்ல?
அப்போ ஒரு சிறுவன் ஓடிவந்து 
அண்ணாத்த டேஷன் சீல் வச்ச லெட்ர எய்த்த ஓட்டல்ல குடுத்து ஓசி பூரி செட்டு வாகியார சொன்னியே..இந்தா புடி..
மாயா: வாட்ஸ் திஸ்?யு ஆர் சச் எ டிஸ்க்ரேஸ்!
அன்பு: மாயா ஐ கேன் எக்ஸ்ப்லெய்ன்.
மாயா: இனஃப்.
சென்று விடுகிறாள்.
அன்புவின் போன் அடிக்க பேசினால் பாண்ட்யா 
பாண்ட்: டேய் அன்பு எப்படி ஒரு பூரி பொட்டலத்த வச்சி உன்னோட காதலுக்கு ரிவிட் அடிச்சேன் பாத்தியா?
அன்பு: பாண்ட்யாஆஆஆஆஆஆஆ!த்தா உனக்கு இருக்குடா என்கவுண்டர்.
பாண்ட்: க்கும்.உன்னோட கவுண்டர நீயே வச்சிக்கடா.நா ப்ளாக்ல டிக்கட் வாங்கிக்கிறேன்.
அன்பு: டாய்ய்ய்யி .....(போன் கட் ஆவுது).
சேஷு: அன்பு என்னாத்துக்கு கூவிகினுகிற?மாயா போனா இன்னொரு சாயா
அன்பு சேஷுவின் சட்டையை பிடித்து உலுக்கி: டேய்ய்ய்ய் பிகரு தேத்துறது எவ்வளவு கஷ்டம் தெரியுமாடா?காலைல கை நெறிய கொண்டக்கடல தின்னுட்டு பத்து மைல் ஓடி,ஜிம்ல ரெண்டு மணி நேரம் முக்கிட்டு,கிளீன் ஷேவ் பண்ணி ஒட்டு மீசைய வக்கனையா ஓட்டிகிட்டு யூனிபார்முக்கு போடுற கஞ்சிய கொஞ்சம் உள்ளுக்கும் உட்டுகினு அக்குள்ள கட்டி வந்தாமேறியே 24x7 போஸ் மெயின்டெயின் பண்ணுறது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமாடா?
சேஷு: க்கும்.அல்லா வீரத்தையும் என்னாண்டையே காட்டு!பாண்ட்யா உன்ன வச்சி காட்டு காட்டுன்னு காட்னானே அவன இன்னா பண்ண போறே?
அன்பு: என்கவுண்டர்தான்.அம்பது ரூபா செலவு.ஒரு புல்லட்.நா ரொம்ப சந்தோசப்படுவேன்ல!
சேஷு: ஏண்டா நீ சந்தோஷமா இருக்கத்தான் போற வாறவனெல்லாம் சுட்டுகினு இர்க்கியா?
அன்பு: ஆமா!பின்ன நாட்டுக்காவா இதெல்லாம் செய்யுறேன்.
..


சேஷு

.
ஒரு அட்டைப்பெட்டி அன்பு வீட்டு வாசல்ல வைக்கப்படுகிறது.
சேஷு அதைப்போய் பார்த்துவிட்டு...ஐயோ....ஐயோ....ஐயோ...
அன்பு: என்னடா அது?ஐயோ......
ஐயோ ஐயோ.....இருந்த ஒரு ஒட்டு மீசையையும் எரிச்சி அந்த சாமபல அனுப்பியிருக்கான் பாண்ட்யா.இனி நா என்னடா பண்ணுவேன்?அவனவன் ஸ்கூல் பையன்னு கேலி பண்ணுவானே!
சேஷு: கவலைப்படாத அன்பு! மை பென்ஸில் இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்...
.
பண்ணோம் அட்ஜஸ்ட் பண்ணோம்.போலீசா இருக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல.அட்ஜஸ்ட் பண்ணோம்,ஒட்டு மீசக்கி பதில் மை பென்ஸில்!மாயா அப்புறம் வரவேயில்லை!இப்படியெல்லாம் தியாகம் பண்ணிதான் நாங்க வாழுறோம்......





Sunday, 15 October 2017

கோலிவுட் ரவுண்டப் 2.0

                                  முதலில் நாம் சென்றது இயக்குனர் பீலா   இயக்கும் பேச்சியா பட தளத்திற்கு.
போதிகாவுக்கு பாதுகாப்பாக இருபுறமும் கூர்யா, பிவகுமார் இருவரும் நடந்துவர பிவகுமார்"மகனே! நம்ம மருமவள தொடர்ச்சியா பெண்ணிய படங்களில் நடிக்கவச்சு பெண்ணியத்தையும் பெண்ணியவாதிகளையும்  ஒழிக்குறோம்" என்று சொல்ல அதுக்கு கூர்யா "நிச்சயமா,சத்தியமாப்பா.." என்கிறார்.
     அப்போது யாரோ போதிகாவை நெருங்க கூர்யா அந்த ஆசாமியை பொளேர் என்று அறைந்து அடிங்...என்று சொல்லிட்டு பாத்தா அது இயக்குனர் காலா."யோவ் சீன் சொல்லவந்தா இப்படி அடிக்குறீங்களே?எப்பவும் பெரிய கழிய வச்சிட்டு நான்தான் எல்லாரையும் போட்டு சாத்துவேன்.இப்ப என்னையே அடிச்சிட்டீங்களே" என கதற கூர்யா "சாரி சார்.தெரியாம...".
   அப்போது பிவி கிரகாஷ் வரான்.ஜீன்ஸ்- டி ஷர்ட்- ரேபான்- ஷாம்பூ போட்டு குளித்த கையேடு பரேஷ்ஷா!
பீலா: யோவ் என்னைய்யா இது அசிங்கமா?போ!போய் கெட்டப்ப மாத்து.டேய் மேக்கப்பு இவனை கவனிடா.
 உடனே பிவி கிரகாஷ் தலையில் சட்டியை கவிழ்த்து மிச்சமிருக்கும் முடியை தேங்காய் துருவுவது போல துருவுகிறார்கள்.அடுத்து பழுப்பு சாயம்  ஒரு சட்டி நிறைய கரைத்து அவன் தலையில் ஊத்திட்டு வெறும் கோவணத்தை கட்டிவிட்டு மேலே கரியை பூசி முடிச்சதும் காலா வருகிறார்.
பீலா: ஆகா!இப்பதான் அம்சமா இருக்கடா!சரி கக்கா போறா மாதிரி குந்திகிட்டு வானத்த வெறிக்க பாரு பாப்பம்....ஆ!இப்ப சத்தமா அடித்தொண்டையில் பாடு....நட்ட கல்லை சுற்றிவந்து நாலு புஷ்பம் சாத்தியே....ம்...நல்லா சத்தமா பாடறா வெண்ண! என்று சங்கில் மிதிக்கிறார் பீலா...நாம் அங்கிருந்து எஸ்கேப் ஆனோம்.
.
.
அடுத்து ஹரா பட ஷூட்டிங்.
கா.பஞ்சித்: சார் இந்தப்படத்தில் உங்க கேரக்டர் பேரு ஹரா.படம் முழுக்க கிளிப்பச்சை கோட்டு சூட்டு பூட்டு போட்டுக்கிட்டு வரீங்க.பின்னாடி ஜின்னா போட்டோவ காட்றோம்.நீங்க யூஸ் பண்ற கார் நெம்பர் MJ 09 PK 1948.
கஜினி:  ஆமா!எல்லா பில்டப்பும் குடுத்துட்டு கடைசில ஒரு அல்லக்கை வந்து சுட்டு கொன்னுட்டு போவான்...
கா.ப: அப்போதான் நீங்க ஆடியன்ஸ் மனசுல நிப்பீங்க சார்.
கஜினி: தேர்தல்ல நின்னா யூசாகுமா அது?
கா.ப: ஊரே ரெண்டா பிரிஞ்சி கெடக்கு...அதுல...
கஜினி: அய்யா தெரியாம கேட்டுட்டேன்.நீங்க ஷாட் ரெடி பண்ணுங்க வந்துடுறேன்...
.
.
அடுத்து குமீர் இயக்கம் நொந்தனதேவன்.
குமீர்: மொதல்ல டோரா புனித நூல்ல்றேந்து கதைக்கு சம்மந்தமே இல்லாத ஒரு வசனத்தை காட்றோம்.அப்புறம் ஒப்பன் பண்ணா நீங்க காளையின் கொம்பை புடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கீங்க..
கார்யா: அ(எ)ன்னா மச்சி...காலை(ளை) கொம்பை புடிச்சிட்டுதான் தொங்கனுமா?ஹன்சிகா நயன் இவுங்கெல்லாம் கெடயாதா?
குமீர்: இல்ல சார்.உங்க கேரக்டருக்கு பெண்கள் என்றாலே அலர்ஜி!மாட்டு வண்டில போகும்போதும் பில்லியன் சீட்டை கழட்டி வச்சிட்டு போற ஆளு நீங்க!
கார்யா: ஐயோ!இப்படித்தான் போன படமான குடம்பன் படத்துல காய விட்டானுங்க!இங்கயும் அதேதானா?இனிமே சிட்டி கேரக்டர் மட்டும்தான் பண்ணனும்!
..
.
அடுத்து பங்கர் இயக்கும் பிந்தியன் 2 பர்ஸ்ட் லுக் ஷூட்.
பங்கர்: அப்படியே இந்த ரூமை இந்தியா மேப் ஷேப்ல கட் பண்ணிட்டு அதுக்கு இந்தியக்கொடி கலர்ல பெயின்ட் அடிங்க.அப்புறம் ரோமானியாவுல ஒரு ஸ்பெஷல் டேபிள் இருக்கு.வெறும் அம்பது லட்சம்தான் விலை.அதை இப்படி செண்டரா போடுங்க.ரெண்டு சேர் இத்தாலி இம்போர்ட் . லைட்டிங்குக்கு ஸ்வீடன்லேர்ந்து மூணு  கோடி ரூபாக்கி ஸ்பெசல் லைட்டை இம்போர்ட் பண்ணுறோம்.அப்புறம் ஹிந்தியன் கேரக்டருக்கு ஹிட்லர் டிரெஸ்!தையக்கூலி மட்டும் முப்பது லட்சம்.அந்த வெண்பொங்கல் விக்கை பிரான்ஸ்லேர்ந்து இம்போர்ட் பண்றோம்.விலை இருபது கோடி.இடுப்புல கட்டுற பெல்ட்&ஷூ  ஜெர்மனிலேர்ந்து இம்போர்டட்.அந்த குல்லாவை துபாய்லேர்ந்து கொண்டாறோம்.போட்டோஷூட் எடுக்க நாலு ஸ்பெசல் கேமரா பத்து கோடி.சொல்லிக்கொண்டே போக தயாரிப்பாளர் ஐசியூவில்!
.
அடுத்து பாகராஜன் பமாரராஜா இயக்கத்தில் டூப்பர் டீலக்ஸ்.
அஜய் கேதுபதி லேடி கெட்டப்பில்.
பாகராஜன்:உங்க டயலாக் இதான் "எல்லா தொப்பையும் ஆம்பளதான்!எல்லா ஆம்பளைங்களும் தொப்பதான்!"
அஜய் கேதுபதி: ஜி வசனம் கொஞ்சம் லென்த்தா இருக்கு.பக்கத்துல குண்டாவ காணோம் படத்துல குண்டாவுக்கு டப்பிங் கொடுத்துட்டு அப்படியே கோக்கா முட்டை துணிகண்டன் படத்துல தலைய காட்டிட்டு குதாநாயகன் படத்துல போலி டாக்டர் கேரக்டர் பண்ணிட்டு வந்துடுறேன்.நீங்க ஷாட் ரெடி பண்ணி வைங்க.
.

அடுத்து 3.0 ஷூட்டிங் ஸ்பாட்.ஆயிரம் அலெக்ஸா கேமராக்களை ஜிம்மி ஜிப்ல மாட்டி அப்படியே மிக வேகமாக சுத்த விட்டும் தரையில் ரெண்டாயிரம் ரெட் ஒன் கேமராக்களை வைத்தும்  படமாக்கி கொண்டிருந்தார் பங்கர்.மெகாபோனில் "அப்படியே அந்த ஜேசிபிய பிளாஸ்ட் பண்ணுங்க.ஓகே...அடுத்து அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை தெறிக்க விடுங்க.குட்.அடுத்து அந்த லாரி ஷெட்டை பிளாஸ்ட் பண்ணுங்க".நூறு லாரிகள் வெடித்து பறக்கிறது.மேலே ஒரு நபர் முகத்தில் க்ரீன் மேட் கட்டிக்கொண்டு டைவ் அடித்துக்கொண்டிருக்க..."அவர் முகத்துல தான் கஜினியின் முகத்தை சிஜி பண்ணுறோம்" என்று எங்களிடம் பெருமையாக பேசினார் நூறாவது அசிஸ்டென்ட்.
.
பங்கர்:ஓகே!ரிகர்சல் நல்லாவே போச்சு.நாளைக்கு இதேமாதிரி எல்லா வெஹிகிள்ல்சையும் வாங்கி செட்டை ரெடி பண்ணிடுங்க.

Tuesday, 10 October 2017

Prison Break (2005-17)



          ஜெயில்ப்ரேக் வகையறா நம்ம பேவரைட்களுள் ஒன்று.Escape from Alcatraz அதை பட்டி டிங்கரிங் பாத்து ரிலீஸ் செய்யப்பட்ட The Shawshank Redemption ,A man Escaped,Midnight express, ஸ்டால்லோன் அர்னால்ட் இணைந்து நடித்த மிக சுமாரான  Escape plan என்று பட்டியல் நீளும்..
        இதில் ஜெயிலில் அடைக்கப்பட்ட பிரதான கதாபாத்திரம் தனியாகவோ சகாக்களுடன் சேர்ந்தோ  அங்கிருந்து திட்டம் போட்டு தப்பிப்பதாக வெகு சுவாரஸ்யமாக இருக்கும்.Prison Break பார்க்க நினைத்ததன் காரணமே அதுதான்.
          தற்செயலாக முதல் சீசனில் முதல் எபிசொட் பார்க்க ஆரம்பித்ததுதான்.பத்தாயிரம் வாலாவை கொளுத்தி உட்டா மாதிரி சரசரன்னு செல்லும் திரைக்கதை,எதிர்பாராத திருப்பங்கள்,அடுத்த நொடி ஒரு முக்கிய கதாபாத்திரம் போலீசில் சிக்கிக்கொண்டு விடுவார்களோ என்று விளிம்பு வரை பதட்டமடைய செய்து கடைசியில் தப்பிப்பதாக காட்டுவது,பரபரப்பான துரத்தல்கள் என்று வெகு விரைவாகவே சென்றது.
             செய்யாத கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது அண்ணன் லிங்கன் பர்ரோசை அதே ஜெயிலுக்கு வாண்டனாக கைதியாக வந்து மீட்கும் தம்பி மைக்கேல் ஸ்காஃபீல்ட்.தப்பிப்பதோடு கதை முடியாமல் அது ஏற்படுத்தும் பின்விளைவுகள், அதனால் கொல்லப்படும் நபர்கள், அமெரிக்க அரசே துரத்தும் நிலை என்று மூச்சுவிடாமல் ஓடும் சகோதரர்கள்.அதற்குள் இழுக்கப்பட்ட சிறை மருத்துவர்-கவர்னரின் மகள்-சாரா டேன்க்ரேடி(மைக்கேலின் GF),இரு சகோதர்களோடு தப்பித்த இன்னும் ஆறு பேர்,அவர்களின் கதி என்று பரபரப்பான திரைக்கதையில் நகர்கிறது.
              முதல் சீசனில் தப்பித்தல், இரண்டாவது சீசனில் எப்பிஐ ஏஜன்ட் மஹோன் அவர்களை துரத்துதல்,மஹோனை பின்னணியில் இயக்கும் The Company என்று இன்னும் அதிவேகம்!மூன்றாவது சோனா ஜெயிலில்-மெக்சிகன் ப்ளேவர்!முதலிரண்டு சீசன்கள் அளவுக்கு பரபரப்பு இல்லையென்றாலும் இதிலும் சோனா ஜெயிலில் இருந்து விஸ்லர் என்பவனை தப்பிக்க வைக்க மைக்கேல் எடுக்கும் முயற்சிகள்,அதில் லெசெரோ என்னும் பெரிய போதைக்கடத்தல் கும்பல் தலைவன் சிக்கவைக்கப்படுவது,டி பேகின் துரோகம் என்று செல்கிறது.
 நான்காவது சீசன் Fast and the furious படம் போல ஆரம்பித்து(ஒரு வேர்ஹவுசில் அதிநவீன கார்கள் கணினிகள் பிற வசதிகள்) அப்புறம்  திசைமாறிபோகிறது.
ஐந்தாவது சீசன் மேரா நாம் அப்துல் ரகுமான் என்று சம்மந்தமே இல்லாமல் ஏமனில் உள்ள ஜெயிலில்  இருந்து மைக்கேல் தப்பிப்பதாக வருகிறது.ஆனால் இதில் அவ்வளவு விறுவிறுப்பு இல்லை என்றே கூறவேண்டும்.
மேரா நாம் அப்துல் ரகுமான்!
            லிங்கன் பர்ரோஸ் சிக்கவைக்கப்பட்டதன் காரணம் அவரது தந்தை கம்பெனி என்ற ரகசிய அமைப்பில் இருந்து விலகி அதற்கெதிராக செயல்பட ஆரம்பித்தவர்.இந்த கம்பெனியின் வேலை அமெரிக்க அரசு எந்த நாட்டோடு போருக்கு செல்ல வேண்டும்(அதனால் ஆயுத கம்பெனிகள் கொள்ளை லாபம் அடையலாம்),எதுவரை போரை நடத்த வேண்டும்(அப்போது மருத்துவ சேவை வழகுவதாக மருந்து கம்பெனிகள் லாபமடையலாம்),எப்போது போரை நிறுத்துவது(அப்போது நகர உட்கட்டமைப்பு நிறுவனங்கள் லாபமடையலாம்)...etc...etc... என்று அரசின் முகமூடியில் லாபம் கொழிக்கும் பன்னாட்டு கம்பெனிகள்.லிங்கனின் தந்தை அவைகளை அம்பலப்படுத்த முயல அவருக்கு செக் வைக்க லிங்கன் சிக்கவைக்கப்படுகிறார்.துணை ஜனாதிபதியின் சகோதரரை  லிங்கன் கொன்றதாக சிக்கவைக்கிரார்கள்.மின்சார சேரில் கடைசி நொடி வரை இருந்து தப்பிக்கிறார் லிங்கன்.
Lincoln Burrows
             லிங்கன் முரட்டு ஆசாமி.ஆறடி உயரத்தில் எந்நேரமும் முன்கோபம்,அடிதடியில் ஈடுபடுதல்,கடத்தல் வேலைகள் என்றிருப்பவர்.அதில் வரும் வருமானத்தில் தம்பியை படிக்கவைக்கிறார்.மைக்கேல் ஸ்காஃபீல்ட் ஸ்ட்ரக்சுரல் எஞ்சினியர்.கட்டுமான அமைப்புகள் பற்றி மட்டுமல்லாது அனைத்து விஷயங்களை பற்றியும் அத்துபடி.எப்பிஐகே கல்தா கொடுப்பவர்.எப்படி திட்டம் போடா வேண்டும்,எப்போது செயல்படுத்த வேண்டும்,அந்த திட்டம் நினைத்தபடி நடக்காவிடில் வேறொரு திட்டத்தை பேக்கப்பாக வைத்திருந்து அதை செயல்படுத்துதல்,மின்னணு சாதனங்கள் குறித்த அறிவு என்று அவரை தேடும் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவர்.அறிவைக்கொண்டே வெல்பவர்.மனிதர்களை கொல்வதில் உடன்பாடு இல்லாதவர்.
Michael Scofield
        எப்பிஐ ஏஜன்ட் மஹோன் –ஆரம்பத்தில் நேர்மையான ஏஜண்டாக இருந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரத்தவெறி பிடித்தவராகி தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி  extra judicial killings செய்யும் கொலைகாரனாக மாறுதல்,அந்த மாற்றம் உண்டாக்கிய குற்ற உணர்வை,மன உளைச்சலை சமாளிக்க போதைப்பொருளுக்கு அடிமையாதல்,பிறகு சோனா ஜெயிலில் மைக்கேலால் சிக்க வைக்கப்பட்டதும் withdrawal effect ல் கைகால் நடுங்க வியர்வை வழிய hallucinationல் சிக்கிக்கொள்ளுதல்,பிறகு மீண்டு மைக்கேலுக்கு உதவியாகி மீண்டும் ஏஜண்டாக பணியில் சேருதல் என்று ஒருவித edge லேயே இருக்கும் ஒரு கேரக்டர்.இவரை பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது ரகுவரன்.தமிழில் இவருக்கு இப்படியொரு ரோலை கொடுத்திருந்தால் அட்டகாசமாய் செய்திருப்பார்!
Agent Mahone
      அடுத்து  T bag.Pedophile ஆக இருந்து அதனால் சிறை சென்று பிறகு தப்பித்து ஒரு கையை இழந்து மைக்கேலை பழிவாங்க துடிப்பவர்.ஐந்தாவது சீசனில் இவர் சம்மந்தப்பட்ட சில டுவிஸ்டுகள் ரொம்ப cheesy ஆக இருந்ததாக தோன்றியது.பெரும்பாலும் வில்லனாக நடிப்பவருக்கென தனி மேனரிசம் இருக்கும்.அதை அவர்கள்  வலிந்து செய்வதாகவோ  இயல்பாக வருவதாகவோ இருக்கும்.
      மொத்த சீசன்களிலும்  அசால்டாக வில்லத்தனம் செய்பவர் T Bag கேரக்டரில் நடித்த Robert Knepper .எந்தவித சிரத்தையோ மிகையான முயற்சிகளோ இல்லாது ஒரு நீரோட்டம் போல நடிக்கிறார்.அவரது deep baritone குரல் அவர் பேசும் விதம்,உடல்மொழிகள் எல்லாம் The Dark Knight ல் Heath Ledger செய்த  Joker கதாபாத்திரத்துக்கு முன்னோடி என்று கூறலாம்!
T-Bag

      மற்றொரு முக்கிய கதாபாத்திரம் சுக்ரே.புவர்தோ ரீக்கனான இவர் நட்பிற்கு உதாரணமாக திகழ்கிறார்.மைக்கேல் எங்கே?என்று பனாமா போலீசு இவரை மண்ணில் உயிரோடு புதைக்கும்போதும் சொல்ல மறுக்கும் நண்பர்! 
Sucre

         மேலும் சில தொழில்முறை கொலைகாரர்கள்.கம்பனியால் நியமிக்கப்பட்டவர்கள்.எவரையும் கொல்ல யோசிக்காதவர்கள்.அப்படியே இவர்கள் மற்றவர்களிடம் சிக்கிக்கொண்டு கடுமையான சித்திரவதை செய்தாலும் ஒரு வார்த்தை பேசாதவர்கள்.
           கம்பனி தனக்கு இடையூறாக வருபவர்கள் யாராக இருந்தாலும் மேற்சொன்ன கொலைகாரர்களை வைத்து தீர்த்துக்கட்டுகிறது.பிறகு கொல்லப்பட்டவர்களின் உறவினர் யாரேனும் போய் அந்த கம்பனியின் தலைவனிடம் இதுபற்றி கேட்டால் "It was nothing personal" என்ற பதிலே கிடைக்கும்.அதாவது கொலை செய்வது,செய்யாத குற்றத்திற்காக பிறரை சிக்கவைப்பது,எப்பிஐ,ஹோம்லேண்ட் அமைப்புகளில் பணியாற்றுவோரை கார்னர் செய்து குடும்பத்தை அழித்துவிடுவேன் என்று மிரட்டி தனக்கு சாதகமான காரியங்களை சாதித்துக்கொள்ளுதல் என்று கம்பெனி மிக அபாயகரமான ஒரு அமைப்பு.
Kellerman.எந்த விதிகளும் இல்லாமல் கொல்லு!

        இது ஏதோ கற்பனையாக இந்த டிவி சீரிசுக்காக உருவாக்கப்பட்ட விஷயமல்ல.நிஜத்திலேயே இப்படிப்பட்ட கம்பெனிகள் ஏகத்துக்கும் உண்டு.ஒவ்வொரு நாட்டின் வெளியுறவு கொள்கை,உள்நாட்டு பாதுகாப்பு,மருத்துவம்,கட்டுமானம்,நீர் பங்கீடு,கல்வி  என்று எல்லாவற்றையும் இயக்குவது இதுபோன்ற அமைப்புகளே!
     உலகத்திலேயே சக்திவாய்ந்த பதவி அமெரிக்க சனாதிபதி பதவி என்பார்கள்.உண்மையில் அதுவே ஒரு டம்மி போஸ்டுதான்!காலம் காலமாக அமெரிக்க சனாதிபதியை மட்டுமல்லாது அனைத்து நாட்டு தலைவர்களையும் இயக்குவது இதுபோன்ற அமைப்புகள்தான்!அவர்களை கண்டுபிடிப்பதோ அழிப்பதோ சாத்தியமே இல்லாத ஒன்று.
மைக்கேலின் உடலில் சிறையின் ப்ளூ பிரிண்ட்

       மேலும் வழக்கமாக ஹாலிவுட் படங்களில்(கமலகாசனின் தசாவதாரம் படத்திலும் ப்ளட்சர் கேரக்டர் உண்டு என்பது நினைவிருக்கலாம்) வரும் rogue CIA ஏஜன்ட் இதிலும் உண்டு!அதாவது சிஐஏவில் இருந்தவர்/இருப்பவர்.பிறகு அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்படுபவரை அப்படி அழைக்கிறார்கள்.ஏய்யா CIA ன்னாலே rogue தான!அப்புறமென்ன தனியா rogue CIA??.
      முதலில் அரசுக்கெதிராகவே(அமெரிக்க சனாதிபதிக்கு எதிராகவே) தைரியமாக நிற்கும் மைக்கேலும் லிங்கனும் பிறகு ஒரு கட்டத்தில் அரசின் ஆசி பெற்றவர்களாக மாறுவதும் -"ஏதோ ஒண்ணு ரெண்டு பேரு அரசாங்கத்தில் அப்படி இருக்கிறார்கள்.அவர்களை ஒழித்துவிட்டால் அமெரிக்க அரசு அறம் சார்ந்தது" என்பதைப்போலெல்லாம் புருடா விட்டு முந்தைய எதிர்ப்பை மழுங்கடிக்கிறார்கள்.
      மேலும் தனது சகோதரனை பகடைக்காயாக பயன்படுத்தி,அமெரிக்க சனாதிபதிக்கு விஷம் வைத்துக்கொன்று சனாதிபதியாகும் வில்லியாக வருபவர் பிறகு திடீரென்று ஒருகட்டத்தில் "எனக்கு புற்றுநோய் உள்ளது.சிலகாலம்தான் வாழ்வேன்.நான் பதவியை ராசினாமா செய்கிறேன்" என்று அந்தர்பல்டி அடிக்கவைக்கிறார்கள்!அதாவது அமெரிக்க சனாதிபதி பதவியில் நேர்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் மனசாட்சி உள்ளவர்கள் மட்டும்தான் அமர்வார்கள் என்ற போலி நம்பிக்கையை மக்களிடம் உண்டாக்க இப்படியொரு வழி!
  அப்புறம் இன்னொரு pattern ஒருவரை முதலில் மிக மிக குரூரரமான ஆளாக காட்டிவிட்டு பின்னர் சந்தர்ப்ப சூழல்களால் அவர் நல்லவராக மாறுவது.பெல்லிக் ஒரு உதாரணம்.
Bellick
 
       சரி இது வணிக நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு டிவி சீரிஸ்.இதில் இவ்வளவு நதிமூலங்கள் பார்க்க தேவையில்லை என்று வைத்துக்கொண்டாலும் கதையோட்டத்தின் போக்கை மேற்சொன்ன அந்தர்பல்டிகள் மழுங்கடிக்கின்றன என்பதை குறிப்பிடவே இதை சொல்ல வேண்டியதானது.
        சாதாரணமாக இரண்டு மணிநேர திரைப்படத்தை விறுவிறுப்பு குறையாமல் எடுப்பதே பெரும்பாடாக இருக்கும் நிலையில் இந்த 70+ மணி நேர சீரிஸில் கிட்டத்தட்ட 50-60 மணி நேரங்கள் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொண்டது பெரிய சாதனைதான்.கண்டிப்பாக இதை பார்க்க துவங்கினால் நடுவில் நிப்பாட்ட முடியாத அளவுக்கு விறுவிறுப்பான ஒரு தொடர்.