Monday 1 January 2018

விழா மாலைப்போதில்-அசோகமித்திரன்

               ஃபிலிமோத்சவ்க்கும் திரைப்பட விழாவுக்குமான வித்தியாசத்தை விளக்குவதோடு துவங்கும் குறுநாவல் பிறகு கதைசொல்லி சுந்தர்ராஜ் தன்னைப்பற்றியும் தனது வாழ்க்கை பற்றியும் விளக்குவதாக கதை விரிகிறது.

                 வழக்கமாக அசோகமித்திரன் எழுத்துநடை என்பது விலகல் தன்மை கொண்டதாக இருக்கும்.ஒரு கதாபாத்திரம் எவ்வளவு சிரமத்தில் இருந்தாலும் "அது அப்படிதான்!அவர் அப்படி சிரமப்படத்தான் வாழ்கிறார்" என்ற தொனியிலேயே அவரது எழுத்துநடை இருக்கும்.தனது உணர்ச்சி கொந்தளிப்புகளை நேரடியாகவோ அல்லது ஏதேனும்இ கதாபாத்திரம்தி வாயிலாகவோ வெளிப்படுத்தவே மாட்டார்.அவரிடம் பிடித்ததே அந்த பாணிதான்! அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு மைய கதாபாத்திரமான சுந்தர்ராஜின் ஆற்றாமை,இயலாமை,வெறுமை,தொடர் இழப்புகளின் வழியே நிரந்தரமாக தங்கிவிட்ட கசப்பு,அது எள்ளலாக பிறர் மீது வெடிப்பது என்று கொஞ்சம் கொந்தளிப்பான நடையிலேயே இந்த குறுநாவல் எழுதப்பட்டுள்ளது.பிற எழுத்தாளர்களின் மொழிநடையை ஒப்பிடும்போது இது subtle தான்!ஆனால் அ.மி.யின் standard ல் இது உணர்ச்சிப்பூர்வமான(மிகையாக அல்ல) மொழிநடைதான்.

            சினிமா வேலையே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் சுந்தர்ராஜ் திரைப்பட விழாவிற்கு அழைக்கப்படுகிறான்.விழா நிகழ்வுகளைப்பற்றியும்; விழாவில் காட்டப்படும் சினிமாக்கள் பற்றிய விமர்சனங்களையும் அவன் எழுதித்தர வேண்டும்.சினிமாத்துறையில் நேரடியாக இல்லாவிட்டாலும் விளம்பரப்பிரிவில் பணியாற்றிய கசப்பான அனுபவங்கள் அதனால் அவனது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட இழப்புகள் எல்லாவற்றையும் தாண்டி அவன் ஹைதராபாத் செல்கிறான்.காரணம் அவன் தனது பழைய சூழலில்(சென்னை) இருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக்கொள்ள பார்க்கிறான்.
       கதையில் நான்கு இடங்களில் மரணம்/இறப்பது குறித்து வருகிறது.ஒவ்வொரு முறையும் அது வெவ்வேறு தொணியில் சொல்லப்படுகிறது.
    ஹைதராபாத் செல்ல சென்னை விமானநிலையம் செல்கிறான்.அவசர அவசரமாக செய்த முகச்சவரம் எரிகிறது.அப்போது அவனது தந்தை கொடுத்த பித்தளை ரேசரை இன்னமும் பயன்படுத்துவது பற்றிய நினைவு வருகிறது.முதன்முதலில் அவனது தந்தை அதை அவனிடம் வழங்கி அவன் சவரம் செய்தபோது கண்ட இடங்களில் கீறல் விழுந்து ஒரே எரிச்சல்.
  "நீங்க கொடுத்த ரேசர் எப்படி இருக்கு பாருங்க" என்று அப்பாவைக் கோபித்துக்கொண்டேன்.என் கோபத்தை பொருட்படுத்த முடியாத கவலைகளில் என் அப்பா மூழ்கியிருக்க வேண்டும்.என்னுடைய இரண்டாவது சவரம் சுடுகாட்டில்.........அந்த சுடுகாட்டு தொழிலாளி வெறும் தண்ணீர் தடவி என் முகத்தையும் தலையையும் மழித்த போது ஏகமாக எரிந்தது.அப்பாவும் மகனும் ஒரே நேரத்தில் எரிந்து கொண்டிருந்தோம்"

     இது கொஞ்சம் எள்ளலாக!
இதன்பிறகு ஹைதராபாத் செல்லும் விமானத்தில் செல்லும் சமயத்தில் இறப்பது குறித்து சில வரிகள் வருகிறது.
   "எனக்கு ஐந்தாறு விமான விபத்துக்கள் நினைவுக்கு வந்தன.இரு விபத்துக்களில் நானே எனக்கு நெருங்கியவர்களை இழந்திருக்கிறேன்.இறந்தவர்களின் வாரிசுகள் சார்பில் நிறைய இடங்களுக்கு அலைந்து திரிந்து அவர்களுக்குப் பணம் வாங்கி கொடுத்திருக்கிறேன்.இந்த விமான நொறுங்கி விழுந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என் அம்மாவுக்கு நிறையப் பணம் கிடைக்கும்"
 இப்படி தனது சொந்த வாழ்வின் கசப்புகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது இந்திய சினிமா,அபத்த காதல் கதைகள்,ஸ்டுடியோ அபத்தங்கள் என்று கேலியும் கிண்டலுமாகவே எழுதுகிறார்.அ.மி. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றியவர் மேலும் பல்வேறு திரைப்பட துறை பணிகளை செய்தவர் என்பதால் ஆங்காங்கே தனது சொந்த அனுபவங்களை கலந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.உதாரணமாக 
"என் கண்களுக்கு எல்லாமே அபத்த களஞ்சியமாகத் தான் தோன்றியது.அஷோக்குமார் சற்று முதிர்ச்சியுடன் பேசக்கூடுமே என்று நினைத்தேன்.ஆனால் அவரும் தடுமாறினார்"


நடிகை தேவிகா ராணி விழாவிற்கு வராத இயக்குனர்களை புகழ்ந்து தள்ளியதையும் அவர்கள் யாருமே விழாவிற்கு வரவில்லை என்று உறுப்பினர் ஒருவர் நினைவுபடுத்தியதையும் என்று நிஜ வாழ்வின் பிரபலங்களும் கதையில் வந்துபோகிறார்கள்.
அச்சுத் கன்யா 

      அசோக் குமார் தேவிகா ராணி இணைந்து நடித்த படம் அச்சுத் கன்யா.அப்படம் குறித்த எள்ளலும் உண்டு.
"எப்படி பார்த்தாலும் காதல் நிறைவேறாது.'அச்சுத் கன்யா'வில் நிறைவேறவில்லை.ஆனால் அதன் பிறகு வந்த பல படங்களில் அத்தகைய காதல் கை கூடி விடும்.ஒரே ஒரு வில்லன் எதிர்க்க,எட்டு பேர் கதாநாயகனையும் கதாநாயகியையும் மணமுடித்து விட்டுத்தான் மறுகாரியம் என்று செயல்படுவார்கள்.இந்த எட்டுப் பேரில் காமெடியனும் ஒருவனாக இருப்பான்.முடிவில் அவனும் அவனுடைய ஜோடியை மணந்து கொள்வான்"
என்று மொத்த இந்திய சினிமாவின் காதல் கதை அபத்தத்தை சுட்டுகிறான் சுந்தர்.
அசோக் குமார்-தேவிகா ராணி 



    அடுத்த மரணம் அவனது தங்கை சீதா.பல வருடங்கள் ஆகியும் திருமணம் ஆகாத விரக்தியில் இரண்டாவது மாடியில் இருந்து விழுகிறாள்.பன்னிரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிர் துறக்கிறாள்.அப்போது  சுந்தர் எவனோ ஒரு விளம்பர அதிகாரியின் உதவியாளனுக்கு உதவியாளன் பின்னாடி அலைந்து திரிந்து இரவு ஒரு மணிக்கு வீடு திரும்புகிறான்.வீடு பூட்டியிருக்க அசதியில் வெராண்டாவிலேயே  தூங்கிவிடுகிறான்.தங்கை இறந்து ஒரு நாள் கழித்தே அவனுக்கு விஷயம் தெரிகிறது.அங்கே ஓடுகிறான்.அம்மா  இருக்கிறாள்.தனந்தனியாளாக பன்னிரண்டு மணி நேரம் மருந்து வாங்கி கொடுத்து... தவித்து....
   "அம்மாவுக்கு என்னைப்பார்த்து அழத்தெரியவில்லை.வையத்தெரியவில்லை.பேசக்கூடத்தெரியவில்லை"
"இப்படித்தான் ஏற்கெனவே தனியனாக இருந்தவன் இப்போது  முற்றிலும் முழுவதுமாக தனியனானேன்"
அப்புறம் அம்மன் என்ன சொல்கிறாள்? என்று பார்ப்பதற்காக கோவிலுக்கு சென்றதாகவும் அங்கே ஒரு இளம்பெண் சுற்றத்தை பற்றி கவலைப்படாமல் அழுது கொண்டிருந்ததையும் "அழாதேம்மா" என்று சுந்தர் ஆறுதல் சொன்னதையும் சொல்கிறான்.அவள் ரேகா.சினிமாவில் அவளை பிரபல நடிகையாக்கிவிடத்தான் அவள் தாய் முட்டி மோதுகிறாள்.
      ரேகாவும் சுந்தரும் காதலிக்கிறார்கள்.பிறகு ஒரு அசம்பாவிதம்.ரேகாவின் தாய் சுந்தரை நம்பினால் மகளை ஸ்டாராக்க முடியாது என்று தெரிந்து ஹைதராபாத் அழைத்துசென்று விடுகிறாள்.பிறகு ரேகா ஜெயதேவி என்று பெரும் ஸ்டாரான கதை தனி.
இந்த திரைப்பட விழாவில் ஜெயதேவி சுந்தரை தனியே சந்திக்க விரும்புகிறாள்.சுந்தர் அதை பேட்டி எடுக்க ஒரு சந்தர்ப்பமாகவே பார்க்கிறான்!அவள் மீதான காதல்??என்னதான் மிக நெருக்கமாக ஒருவரோடு உணர்ந்தாலும் சந்திக்காத வருட இடைவெளி என்பது இட்டு நிரப்பவே முடியாத ஒரு அகழியாக மாறிவிடும்.
" ரேகா,சில சமயங்களில் விரிசல் வரும்.விரிசலை சரி பண்ணிவிடலாம்.துண்டாகும்.உடனே ஏதாவது பண்ணி அதைக்கூட சரிபண்ணி விடலாம்.ஆனா நம்ம விஷயத்திலே துண்டாகி தூளாகி எல்லாம் காத்திலே பரந்தாச்சு"
"பழையது எல்லாம் முடிந்து விட்டது.உன்னை ரேகா ரேகா என்று கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேனே தவிர,நீ ரேகா இல்லை.நான் எப்போதோ செத்துப்போயாகி விட்டது."


முன்பொருமுறை இருவரும் தற்கொலை செய்துகொள்ள முயன்ற பேச்சும் சுந்தர் நினைவுக்கு வருகிறது.
தங்கை இறந்ததும் தனக்கு ஏற்பட்டதை சுந்தர் ரேகாவிடம் சொல்கிறான்.
"........ஒருவாரம்,பத்து நாள்கூட நான் எப்போதும் போல் இருந்தேன்,ஆனால் அதற்குபிறகு ஒரு வலி ஆரம்பித்தது.வலிச்சுக் கொண்டேயிருக்கு.சில சமயங்களில் தாங்க முடியலை.இன்னக்கு அரை மணி முன்னால் அப்படித்தான் இருந்தது.நானே தற்கொலை செய்து கொண்டு விடுவேனோ என்றுகூட நினைச்சேன்"
இப்படி கதை முழுவதும் மரணம் இழப்பு அதனால் ஏற்பட்ட கசப்பு வெறுமை இவைகள்தான்."கசப்பின் ருசி!"
   சுந்தரோடு இதே சினிமா விளம்பர பணியில் டெக்னீஷியன் ஆக சேர்ந்த அனந்து திருமணமாகி குழந்தை பெற்று பிறகு தந்தையின் வற்புறுத்தல் முயற்சியினால் ஹிண்டு பத்திரிகையில் சேர்ந்தது அவன் வாழ்க்கை அப்படிப்போக சுந்தர் தங்கைக்கும் திருமணம் செய்துவைக்க முடியாமல் அவளை பலி கொடுத்து தனியனாக நிற்கிறான்.
   ஹோட்டல் அறையின் தனிமையில் சுந்தரின் கசப்புணர்வு மேலும் கிளர்ந்தெழுகிறது. தாங்க  முடியாத அளவுக்கு ...
"ஓவென்று கத்த தோன்றியது.......கூப்பிட்ட குரலுக்கு திரும்பி பார்க்காவிட்டாலும் விபரீதமாக யாராவது கத்தினால் உலகம் திரும்பி பார்க்கும்.என்னை யாரும் திரும்பிப்பார்க்க வேண்டாம்.எனக்கும் யாரையும் திரும்பிப்பார்க்க வேண்டாம்.........என் தலையை இனியும் எங்காவது மோதிக்கொள்ளாமல் இருக்க முடியாது என்ற கட்டத்தை அடைந்தபோது யாரோ கதைவைத்தட்டும் சத்தம் கேட்டது.என் முன்னிரவுப்பகல் கனவு கலைந்து எழுந்தேன்"
 இப்படி சினிமா துறையில்த இருந்ததால் தனிப்பட்ட வாழ்வின் உண்டான கசப்புகள் இழப்புகள் அனைத்தையும் மீண்டும் அந்த சினிமா பார்த்தே கரைப்பதாக!
 அடுத்த பதினைந்து நாட்களுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை அவன் பார்த்து விமர்சனம் எழுத வேண்டும்.
"என் மூளையில் என் சிந்தனை என்று ஒன்றும் இருக்காது..........என் சொந்தத் துக்கங்களுக்கு இரு வாரங்களுக்கு விடுமுறை"

No comments:

Post a Comment