Sunday, 16 December 2018

ராட்சசன்,prosthetic மற்றும் தேஜாவூ


   கச்சிதமான திரைக்கதை உள்ள முதல் தமிழ் படம் என்றெல்லாம் சில ஒலக விமர்சகர்கள் பில்டப் கொடுத்திருந்தது படம் பார்ப்பதை மேலும் தள்ளிப்போட வைத்தது.
              படம் நெடுக "இத எங்கையோ பாத்திருக்கமே" மைன்ட் வாய்ஸ் ஓடிட்டே இருந்தது.
உதாரணமா பட துவக்கத்தில் நாயகனுக்கு போலீசில் சேர பெரிதாக விருப்பமில்லை.அவனுக்கு இயக்குனர் ஆகவே விருப்பம்.அவனது மாமாவின் சிபாரிசில் எஸ்ஐ ஆகிறான்.முதல் நாள் தயங்கியபடி ஸ்டேசனுக்குள் நுழைந்தால் அங்கே ஒரு கைதியை மேலதிகாரி போட்டு துவைத்துக்கொண்டிருக்கிறார்...இவன் பயந்தபடியே பார்க்கிறான்..etc..etc..அப்புறம் ஒரு தொடர்கொலை வழக்கு பற்றிய  விசாரணை குழுவில் சேர்க்கப்படுகிறார்...நிற்க..இதெல்லாம் அஞ்சாதே படமா?ராட்சசன் படமா?என்ற முதல் குழப்பம்.
அஞ்சாதே!


       அப்புறம் அந்த பிரேத பரிசோதனை டாக்டர் நிழல்கள் ரவி பண்ணியிருக்கார்.அப்புறம் அங்கங்க மர்மமான பெட்டிகள் கண்டெடுக்கப்படுது ..நிற்க....என்னவோ யுத்தம் செய் மாதிரி..யூதாஸ்(ஜெயப்பிரகாஷ்) கேரக்டர் மாதிரி. ஆனா நிழல்கள் ரவியினது யூதாஸ் போல   metaphysical  தன்மைகள் எதுவும்  இல்லாத  கேரக்டர் !
                 இதெல்லாம் ஒரு மேட்டரா?இயக்குனர் மிஸ்கின் ரசிகனா இருந்திருக்க கூடும் என்று விட்டுட்டேன்.அப்புறம் அந்த முக்கிய காட்சி.அந்த கணக்கு வாத்தி அந்த மாணவியை மட்டும் இருக்க சொல்லிட்டு மத்தவங்களை அனுப்பிவிட்டு சில்மிஷம் செய்துகொண்டிருக்கும் அந்த வேளையில் ..அதெப்படி சொல்ல..பள்ளியில் மேஜிக் ஷோ நடப்பதாக இரண்டும் மாறி மாறி காட்டப்படுது!ஏன்?
பெண் வேடமிட்ட ஆண்!
         மேஜிக்ல முக்கியமான அம்சம் பார்வையாளனின் கவனத்தை ஒரு பொருள்/இடத்தில் குவிய செய்துவிட்டு அந்த மைக்ரோ விநாடிப்பொழுதில் மேஜிக் நிபுணர் வேறொரு வித்தையை செய்து தயாராக இருப்பார்!தயாரானதும் மக்களின் பார்வையை அந்த தயார் செய்யப்பட்ட இடம்/பொருளின் மீது கவனத்தை குவிய செய்வார்.அந்த மாதிரி இந்த இரண்டு காட்சிகள்.இங்கே இயக்குனர் மக்களின் பார்வை நிச்சயமாக படும் என்று கருதும் அந்த கணக்கு வாத்தியின் சேட்டை..அந்த நேரத்தில் பள்ளி மேஜிக் ஷோவில் அந்த வினோத தோற்றத்தில் மேஜிக் செய்துகொண்டிருக்கும் அந்த நபர்.
திசை திருப்பலுக்கு இக்காட்சி!

          இயக்குனர் நிச்சயமாக நம்பியது மக்களின் கவனம் அந்த வினோத தோற்ற நபர் மீது விழாது என்பதே!ஏனெனில் அந்த மாணவிக்கு ஒன்னும் ஆகிட கூடாதே!அந்த நேரத்தில் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து விடாதா?நாயகன் கதவை உடைத்து வந்துவிட மாட்டானா?என்று தவித்துக்கொண்டிருப்பர். அப்ப போய் "என்னாதிது?வினோதமா ஒரு நபர் மேஜிக் பண்ணிட்டு இருக்குது?" என்ற சந்தேகமே எழுந்திருக்காது.

    ஆனா நான் அதை கவனிக்க நேர்ந்தது.கண்டிப்பாக அதை வேறு சிலரும் கவனித்திருக்க கூடும் என்றாலும் அவர்களுக்கு இங்க மறுபடியும் ஒரு தேஜாவூ வந்திருக்காது.இங்கே strike ஆனது ஜேம்ஸ் பேட்டர்சன் எழுதிய அலெக்ஸ் க்ராஸ் சீரிஸ்.அலெக்ஸ் க்ராஸ் எனும் ஆப்ரிக்க அமெரிக்க டிடெக்டிவ் -தன் தாய் மற்றும் மகளோடு வசித்துவருகிறார்.மனைவி இறந்து பல வருடங்கள் ஆனாலும் மறுமணம் புரியாதவர்.மகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியை மீது அவருக்கொரு ரொமாண்டிக் பந்தம் ஏற்படுது...நிப்பாட்டு.இங்கயும் நாயகனுக்கு தன் மகள் இல்லாட்டாலும் மாமா பொண்ணு படிக்கும் அந்த பள்ளியின் ஆசிரியை மீது லவ்வு.சரி இதை விட்டுடுவோம்.முக்கியமான மேட்டருக்கு வருவோம்.
        முன்ன சொன்ன அந்த வினோத உருவம் பார்த்ததும் எனக்கு Along came a spider(அலெக்ஸ் க்ராஸ் வரிசையில் முதல் நாவல்.)திரைப்படமாக மார்கன் ப்ரீமேன் நடித்து வந்தது.அதுல கேரி சோனிஜி என்று வினோத உருவம் கொண்ட ஒரு ஆசிரியர்.
Gary Soneji

பின்னர்தான் தெரியுது.அந்த நபரின் உண்மை பெயரும் அதுவல்ல.தோற்றமும் உண்மையல்ல.செனேடரின் மகள் படிக்கும் பள்ளியில் தீவிர கண்காணிப்பில் அவள் இருக்கும்போதே அவளை பள்ளியில் இருந்து கடத்தி சென்றுவிடுவான்.

மேக்கப் கலைத்த கேரி சோனிஜி  &கிறிஸ்டபர் 


                   அதன் பின் அந்தக்கதை வேறெங்கோ திசைமாறி போய்டும் என்றாலும் இப்படம் அதை நினைவுபடுத்தியது.
அப்புறம் படத்தின் பிற்பகுதியில் கிறிஸ்டபர் பெண் வேடம் கலைத்துவிட்டு ஆணாகவே வரும் காட்சிகள்  பலவற்றில் படத்தில்   வியாதியால் பாதிப்புற்ற லிங்கேசனை நினைவூட்டுகிறார்!
யாரு லிங்கேசன் ?யாரு கிறிஸ்டபர்?
           
                    அப்புறம் ஒரு வில்லன் அதுவும் சைக்கோவான வில்லன் என்றாலே உடனே அந்த நபருக்கொரு பிளேஷ்பேக் போட்டு எப்படி இருந்த இந்தாளு இப்படி ஆகிட்டாரு?என்று பார்வையாளர்களை உச்சுகொட்ட வச்சிட்டு கடைசில அதே நபர் ஈரோ கையால் சாகும்போது கைதட்ட வைத்தல்.ராட்சசன் மட்டுமல்ல 2.0 ல கூட அதான் நடந்துச்சு.
z             உண்மையில் எதுக்கு இந்தமாதிரி  பிளேஷ்பேக் ?இதை தெரிஞ்சிக்கிட்டு குற்றம் செய்வோரின் psychological profile உருவாக்கி அதை வச்சு வேற படங்களின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போறோமா?விறுவிறுப்பான படங்களுக்கு அது தேவையில்லை என்பது என் கருத்து.இதுமாதிரியான உளவியல் தன்மைகளை மட்டும்  மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு அவை தேவைப்படும்.
              மற்றபடி இதுவொரு நல்ல வணிக சினிமா.மேற்சொன்ன தேஜாவூ உணர்வுகள் தோன்றாமல் இருந்திருந்தால் படத்தை ரசித்திருக்க முடியும்.மற்றவர்களுக்கு அம்மாதிரியான உணர்வுகள் இல்லை  என்பதை படம் குறித்த அவரவர் பதிவுகளை பார்த்தப்போ புரிஞ்சிது.
              இங்க குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் prosthetic.கிறிஸ்டபர் கேரக்டருக்கு மேக்கப் பண்ண எவ்வளவு மெனக்கேட்டோம்...எவ்வளவு மணி நேரங்கள் ஆனது..etc...etc.. மாதிரியான தகவல்கள்.முன்பே Synecdoche New York பதிவில் prosthetic பற்றி குறிப்பிட்டிருந்தேன்.குறிப்பாக கமலால் ப்ரோஸ்தட்டிக்

என்றாலே ஒருவித ஒவ்வாமை வந்துவிட்டதை குறிப்பிட்டிருந்தேன்.அதையே இங்கும் சொல்ல வேண்டியுள்ளது.
       குறிப்பாக இந்த படத்தின் ஓட்டத்திலிருந்து விலகி அலெக்ஸ் க்ராஸ் சீரிசுக்கு குறிப்பா Along Came a Spider படத்துக்கு கவனம் சென்றதற்கு காரணமும் வில்லன் அணிந்திருந்த ப்ரோஸ்தட்டிக்  மேக்கப்தான். இந்த prosthetic அணிந்த முகங்கள் எல்லாமே கிட்டத்தட்ட எனக்கு ஒன்றாகவே தெரிகிறது.
 உதாரணமாக Sin City படத்தின் Marv  கேரக்டரின் முகமும் தசாவதாரம் பிளெட்சர் கேரக்டர் முகமும் ஒன்றாகவே இருப்பதை கவனிக்கலாம்(தசாவதாரம் படத்தில் ப்ரொஸ்தடிக் அணிந்த எல்லா   கேரக்டருமே  ஒரேமாதியான முகபாவம் கொண்டதாகவே தோன்றியது)
Fletcher and Marv

அதுபோல சீதக்காதி விசய் சேதுபதி முகம் இந்தியன்  கமல் முகம் போலவே(அவ்வை ஷண்முகியையும் சேர்க்கலாம்)!அது ப்ரொஸ்தடிக் மேக்கப்புக்கே உண்டான limitation என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடியுது.

       இந்த படத்தில் அந்த மேஜிக் செய்யும் அந்த "பெண்"னை பார்த்ததும் முதலில் ரெமோ பட நர்ஸ் நினைவுக்கு வந்தது :D .அப்போதே அது பெண்ணல்ல பெண் வேடமிட்ட ஆண் என்று விளங்கி இவன்தான் கொலைகாரன் என்பதையும் யூகிக்க முடிந்துவிட்டது(பின்ன எதுக்காக ஒருத்தன் மெனக்கெட்டு பெண் வேடம் போட்டுகினு இங்க மேஜிக் பண்ணுறானாம்?).அதுவே அந்த மேஜிக் செய்யும் கேரக்டரின் பின்புறத்தில் இருந்து கேமரா கோணத்தை வைத்திருந்தால்  அதாவது ஒரு பெண்ணின் உருவம் மட்டும் தெரியும்படி காட்டியிருந்தால் அந்த யூகத்துக்கு  இடமில்லாமல் போயிருக்கும்.
.

   டிஸ்கி:          "மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா?" என்று சிலர் கேட்கலாம். ஒரு படம் பார்க்கும்போது தோன்றும் உணர்வுகளை எண்ணங்களை எவ்வித சமரசமுமின்றி பதிவு செய்வதே நம்ம வழக்கம்.வெளியில் இருந்து பார்க்கும் பார்வைகள் மாறுபடலாம்!
                சினிமா விமர்சனம் என்ற வார்த்தையை எங்குமே நான் பயன்படுத்தாமல் இருப்பதற்கு காரணமும் இதுவே!விமர்சனம் என்று வரும்போது தனிப்பட்ட நபரின் எண்ணங்களை மட்டும் பதிவு செய்ய முடியாது.பொதுப்படையான மக்களின் சிந்தனை ஓட்டத்தை கருத்தில் கொண்டே எழுத முடியும்.அது நமக்கு வராது!