Sunday 13 January 2019

Catch Me If You Can- Frank Abagnale Jr,Stan Redding


                 Catch  Me if you can படம் பார்த்தவர்களுக்கு பிரான்க் ஆபக்நேல்  யாருன்னு சொல்ல வேண்டிய அவசியமில்லை பைலட்டாக,டாக்டராக,வக்கீலாக,ஆசிரியராக  வேடம் போட்டும் போலி செக் வழங்கியும்  பல மில்லியன் டாலர் பணம் ஏமாற்றி சம்பாதித்தவர்.

             விமானத்தில்  ஜம்ப் சீட் என்ற ஒரு இருக்கை உண்டு.வேறு விமான நிறுவனத்தில் வேலை செய்வோர் தனது நிறுவன விமானம் இயங்கும் ஏர்போர்டுக்கு செல்ல இதை பயன்படுத்துவதுண்டு.அதில் இவர் பயணம் செய்கிறார்.காக்பிட் அருகிலேயே இந்த இருக்கை இருப்பதால் விமான பைலட்(அசல்) இவரிடம் பேச்சு கொடுப்பது நிறுவனம் குறித்த கேள்விகள் என்று சம்பிரதாயமாக பேசிவிட்டு பிறகு விமானம் ஓட்டுவதில் கவனம் செலுத்த துவங்கி விடுவதாக கூறுகிறார் பிரான்க்.
ஆனால் இப்படி பைலட் வேடம் போட FAA லைசன்ஸ் மற்றும் PanAm நிறுவன அடையாள அட்டை இரண்டும் தேவைப்படுகிறது.

                அடையாள அட்டை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றிற்கு பகட்டாக சூட் அணிந்துகொண்டு செல்லும் பிரான்க் தான் கரீப் ஏர்லைன்ஸ்ல் இருந்து வருவதாகவும் தனது நிறுவன ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு சில மாடல்கள காண விரும்புவதாகவும் தெரிவிக்கிறார்.அந்த நபரும் பல்வேறு விமான நிறுவனங்களின் அடையாள அட்டைகளை தனது நிறுவனம்தான் வடிவமைத்து கொடுத்ததாக சொல்ல "அந்த மாடல்களை காட்ட முடியுமா?" என்று பிரான்க் கேட்க அதில் குறிப்பாக  PanAm நிறுவன மாதிரி அட்டையை வாங்கிக்கொண்டு திரும்ப அழைப்பதாக சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்.
                    பிறகு அந்த மாதிரி அட்டையில் தனது பெயர், போலியான பணியாளர் எண் உள்ளிட்ட தகவல்களை டைப் செய்துகொள்கிறார்.ஆனால் அதில் PanAm logo இல்லை.சின்ன மாதிரி PanAm விமானம்  ஒன்றை வாங்கி அதில் இருக்கும் லோகோவை ரசாயனத்தில் ஊற வைத்து வெளியே எடுத்து அந்த அடையாள அட்டையில் ஓட்டுகிறார்.இத்தனைக்கும் அது லேமினேட் செய்யப்பட்ட அட்டை மீதே ஒட்டியதாகவும் கடைசி வரை அதை யாருமே கண்டுபிடிக்கல என்றும் கூறுகிறார்.
அசல் பிரான்க் 

                 பிறகு இந்த வேடம் அலுத்துவிட அடுத்து டாக்டர் வேடம் அடுத்து அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் உதவியாளர் வேடம் இடையில் சம்மர் கோர்ஸ் எடுக்கும் ஆசிரியர் பணி என்று பலவாறான வேடங்கள் தரித்து பணம் சம்பாதிக்கிறார்.பணம் சம்பாதிப்பது என்பதை அவர் பிரதானமாக கொள்ளவில்லை.பல மில்லியன் டாலர்கள் சம்பாதித்து விட்டாலும் அதுக்கு மேலையும் ஏமாற்று வேலைகளை தொடர்கிறார்.அது ஒருவகையில் அவரது passionமாதிரி!
           ஆனால் இப்படியெல்லாம் ஏமாற்றினாலும் பிரான்க் அடிப்படையில் குரூரமான மனிதரெல்லாம் இல்லை.போலி செக் தயாரித்து பல நூறு வங்கிகளில் அதை ரொக்கமாக்கினாலும் காப்பீடு செய்யாத சிறு வியாபாரம் செய்யும் கடைகள் போன்றவைகளில் அவர் ஏமாற்றுவதில்லை.பெரிய கார்பரேட்களையே  அவர் ஏமாற்றியுள்ளார்.
       அது மட்டுமில்லாமல் இப்படி ஒவ்வொரு துறை சார்ந்தவனாக வேடம் போட்ட போதெல்லாம் அந்த துறை சார்ந்த அறிவை பெற பிரான்க் தயங்கியதில்லை.இன்னும் சொல்லப்போனால் அந்த துறையில் மேலோட்டமான அறிவோடு இயங்கும் பலரை விடவும் இவர் அதிகம் கற்றவராக இருந்திருக்கிறார்!!

                   அதே போல மருத்துவர் வேடம் போடும்போது குழந்தைகள் மருத்துவனமையில் சூப்பர்வைசிங் டாக்டர் பணியில் இருக்கிறார்.அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகள்  கொண்டுவரப்படும்போதெல்லாம்  இவர் அங்கெ intern ஆக இருக்கும் டாக்டர்களையே அதை கவனிக்க சொன்னதாகவும் அதனாலேயே தனக்கு அங்கே பெரும் மரியாதை இருந்ததாகவும் சொல்கிறார்.அதேபோல ஒருநாள் ஆக்சிஜன் பற்றாக்குறை கொண்ட குழந்தை(blue baby) ஒன்றை இவர் சிகிச்சை அளிக்க நேரிட அதிர்ந்து போய் இனிமேலும் இங்கே நாம் ஏமாற்ற கூடாது என்று வெளியேறுகிறார்.
        பிறகு செக் மோசடிகள்.நம்மூர்ல செக்கை பேங்க்ல மட்டும்தான் ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும்.ஆனா அமேரிக்கால கடைகளிலும்  ஓட்டல்களிலும் மாற்றிக்கொள்ளலாம்.அதை பயன்படுத்திக்கொள்கிறார் பிரான்க்.PanAm நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட செக் போல தயாரித்து ஆங்காங்கே ரொக்கமாக்கி கொள்கிறார்.அப்படி பல மில்லியன் டாலர் பணத்தை ஆங்காங்கே பதுக்கி வைக்கிறார்.ஊருக்கொரு GF என்று வசதியாக வாழ்திருக்கிறார் :P.அவர்களிடம் விலையுயர்ந்த  உடைகள் ரொக்கம் போன்றவற்றை கொடுத்து வைக்கிறார். 

         பைலட் வேஷம் போட்டுக்கொண்டு தனியாக ஏர்போர்ட்டுக்கு போனால் ஒருத்தர் விடாமல் உங்கள் crew எங்கே? என்று கேட்பதை உணர்ந்து விமான பணிப்பெண் பயிற்சி அளிக்கும் ஒரு நிறுவனத்துக்கு சென்று அங்கிருந்து தேர்வு செய்து சில பெண்களை அழைத்துக்கொண்டு(அவர்களுக்கு பணிப்பெண் சீருடை போலி அடையாள அட்டை சகிதம்) தன் சொந்த செலவில் ஒவ்வொரு ஊர் விமான நிலையத்துக்கும் சென்று வருகிறார்.

               பிறகு ஒருகட்டத்தில் மாட்டிக்கொள்கிறார்.பாஸ்டன் லாக்கப்ல வைக்கப்படுபவர் பிறகு ஜாமீன் பெற்று தப்பிக்கிறார்.ஓரைலி தப்பிக்க விட்ட சிறை அதிகாரிகளை நொந்து கொள்கிறார்.
 பிறகு பிரான்ஸ்ல் ஒரு காட்டேஜ் எடுத்து தங்குகிறார்.'இனி இங்கேதான் நமது வாழ்க்கை.இனி மோசடிகள் வேண்டாம்' என்ற முடிவுக்கு வருகிறார்.அப்போது அந்த ஊரில் உள்ள விமான பணிப்பெண் ப்ரான்கை பாத்துவிட்டு போலீசுக்கு தெரிவிக்கிறார்.கைது-நீதிமன்றம்-ஒரு வருட சிறை தண்டனை.
        ஆமா ஒரு வருஷம்தான? என்று கேட்டால் அது சாதாரண சிறை தண்டனை அல்ல.ஐந்தடி நீளம் ஐந்தடி அகலம் ஐந்தடி உயரம் கொண்ட ஸ்டீல் மற்றும் கான்க்ரீட்டால் செய்த ஒரு coffin மாதிரிதான்.ஒரு பொட்டு வெளிச்சம் உள்ளே நுழைய முடியாது.நிர்வாணமாக உள்ளே தள்ளப்பட்டு கதவு மூடப்படுகிறது.கண்கள் இருட்டுக்கு பழகிவிடும் என்று காத்திருக்கிறார்.ஒரு மணி நேரம் ஆகியும்..ம்...ஹ்ம்ம்...முழு இருட்டுக்கு கண்கள் எப்போதும் பழகிக்கொள்ளாது என்கிறார்.இவரோ ஆறடி உயரம் இரநூறு பவுண்ட் எடை கொண்டவர்.இவரைப்போய் ஐந்தடி நீளம்-அகலம்-உயர சிறை(சவப்பெட்டின்னு தான் சொல்லணும்) வச்சா என்னாகும்?நிமிர்ந்து நிற்க முடியாது.சுருண்டுதான் படுக்க வேண்டும்.எங்கோ உள்ள சிறு துளை வழியாக மூச்சுவிடுவதற்காக காற்று மட்டும் உள்ளே அனுப்பட்டதாக சொல்கிறார்.அப்புறம் ஒரே ஒரு பக்கெட்.மலம் மூத்திரம் எல்லாத்துக்கும் அதுதான்.கழுவ துடைக்க எதுவும் கிடையாது.
        மூன்று வேளையும் ரொட்டி.குடிக்க கொஞ்சம் தண்ணீர்.ரொட்டி தட்டில் எல்லாம் கொடுக்கப்படாமல் சிறையின் தரையிலேயே வீசப்படும்.அந்த பக்கெட் முழுதும் மலம் மூத்திரம் நிரம்பி வழிந்து சிறையின் தரை முழுக்க பரவுகிறது.கடுமையான நாற்றம்.மூக்கு அதற்கு கொஞ்சம் பழகிவிட்டாலும் வேறொரு பிரச்சனை.புழுக்கள் தரை முழுக்க நெளிய ஆரம்பிக்கிறது.தாடி,தலைமுடி எல்லாம் ஜடாமுடி லெவலுக்கு வளர்ந்துவிட உடம்பு முழுக்க பேன் பிற பூச்சிகள் புழுக்கள் உடலை தின்ன ஆரம்பிக்கின்றன.
         எப்போதாவது ஒருமுறை மல பக்கெட் காலி செய்யப்பட்டு திரும்ப வைக்கப்படும்.அதைவிட அரிதாக எப்போதாவது சிறைக்கதவு திறக்கப்பட்டு தரையில் தண்ணீர் பீய்ச்சியடிக்கபடும்.அந்த இடைவெளியில் தானும் சிறை அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி அந்த பீய்ச்சப்படும் தண்ணீரில் உடலை கொஞ்சம் சுத்தப்படுத்திக்கொண்டதாக சொல்கிறார்.
இங்கே இதே மாதிரி this blinding abscence of light நாவலை நினைவூட்ட வேண்டும்.(நன்றி:முனியாண்டி).அதிலும் இதே மாதிரி ஐந்துக்கு ஐந்து சவப்பெட்டி சிறையில் பனிரெண்டு வருடங்கள் இருந்து பிழைத்து மீண்டு வந்தவர்கள் பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட நாவலது.

          இந்த மலம் மூத்திரத்தை சுத்தம் செய்வதும் இன்னொரு கைதி.பக்கத்து “சவப்பெட்டி” சிறையில் இருப்பவராக இருக்கக்கூடும்.அவரும் எலும்பும் தோலுமாகத்தான் இருக்கிறார்.ஒரு வருடம்!ஒரு வருடம்!கத்துகிறார்.கதவை உதைக்கிறார்- பாடுகிறார்- கற்பனையில் விமானம் ஓட்டுகிறார்- ஓட்டலில் இளம்  பெண்களோடு  பகட்டான உணவை சாப்பிடுகிறார்  என்னென்னெவோ செய்கிறார்.திடீரென்று ஒருநாள் கதவின் ஒரு சின்ன slot மாதிரி திறக்கப்படுகிறது.பிரான்சுக்கான அமெரிக்க தூதர்.தன்னால் எதையும் செய்ய முடியாமல் போனதை குறிப்பிடுகிறார்.பிரான்சில் கைதிகளுக்கென்று எந்த உரிமையும் இல்லை என்கிறார்.இன்னும் ஒரு மாசத்தில் உனக்கு விடுதலை என்கிறார்.பதினோரு மாசமா ஆகிப்போச்சு?என்று வியக்கிறார் பிரான்க்.பிறகு ஒருநாள் சிறைக்கதவு திறக்கப்பட்டு திரும்பி நிற்குமாறு சொல்கிறான் அதிகாரி.வெளியே சிறை வளாக வெளிச்சத்துக்கு கண்கள் பழக்கப்பட்ட பிறகு வெளியே அழைத்துவரப்படுகிறான்.சிறை அலுவலகத்தில் ஜடாமுடி எலும்பும் தோலுமாக வாயில் எச்சில் ஒழுகியபடி யாரிது?என்று வியந்து பார்த்தால் அது முகம் பார்க்கும் கண்ணாடி.பிறகு கை கால் கழுத்தில் சங்கிலி(பழைய மனோகரா பாணியில்!அடப்பாவிகளா பிரான்ஸ் நவீன தேசமா?) மாட்டப்பட்டு விமான நிலையத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறார்.அடுத்து ஸ்வீடன் நாட்டின் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

          ஸ்வீடன் சிறைத்துறை  என்பது முற்றிலும் வேறாக இருக்கிறது. அங்கே கைதிகளை நண்பன் போல நடத்துகிறார்கள்."பிரான்சு நீதித்துறை சிறைத்துறைகளுக்கு குற்றவாளிகளை திருத்த முடியும் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள்" என்று ஒரு பெண் அதிகாரி தெரிவிக்கிறார்."கைவிலங்கு கிடையாது.ஆனா நீ தப்பிக்க பாத்தா சுட்டுவிடுவோம்" என்றுமட்டும் சொல்கிறார்கள்.உண்மையில் பிரான்சில் நீதிபதியே கொஞ்சம் இரக்கம் காட்டி தண்டனையை ஆறு மாசமாக குறைத்தது பிறகுதான் ப்ரான்குக்கு தெரிய வருது.ஒரு வருடம் உள்ளே இருந்திருந்தால் ஒன்று இறந்திருப்போம் இலலாட்டி சுத்தமாக மனநலம் பாதிக்கப்பட்டு தான் யாரென்றே தெரியாத நிலைக்கு சென்றிருப்போம் என்று நினைத்துக்கொள்கிறான் பிரான்க்.
    ஸ்வீடன் சிறை என்பது அபார்ட்மென்ட் போல.சகல வசதிகளோடு!அங்கு இவருக்காக அரசே ஒரு வக்கீலை நியமிக்க அவர் வாதாடி இவருக்கு ஆறு மாசம் சிறை தண்டனை பெற்று தருகிறார்.ஆறு மாசம் சிறையில் இருக்கலாம்.இல்லாவிட்டால் பல்கலையில் சேர்ந்து படிக்கலாம்(அரசே அனைத்து வசதிகளையும் செய்து தரும்).இல்லாட்டா பாராசூட் கம்பெனியில் வேலை செய்து சம்பாதிக்கலாம்.
               அடுத்து அவன் செல்ல வேண்டியது இத்தாலி சிறை.அங்கு சிறைத்தண்டனை அனுபவித்த ஒருவன் கூறிய கதை கேட்டவுடன் இங்கிருந்து நாம் தப்பித்துவிட வேண்டும் என்று நினைக்கிறான்.ஆனால் ஒரு நீதிபதியின் உதவியால் அமெரிக்காவுக்கே  அனுப்பப்படுகிறான்.அமேரிக்கா சென்று அந்த நீதிமன்றத்தின் தண்டனையை அனுபவித்துவிட்டால் போதும்.இவனை கைது செய்ய முறை வைத்து காத்திருக்கும் பத்து நாடுகளும்(ஒவ்வொரு நாட்டிலும் இருபதாண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்).விமானம்  இறங்கும் முன்னரே அதிலிருந்து குதித்து தப்பிக்கிறான்(கமாண்டோ படத்தில் அர்னால்ட் தப்பிப்பாரே?அதே பாணி.ஒருவேளை இந்நாவலை  படித்த இயக்குனர் கமாண்டோ படத்தில் அக்காட்சியை வச்சிருப்பார் போல)


பிறகு கனடா செல்லமுயலும்போது மீண்டும் கைது மீண்டும் சிறை.அப்போது அமெரிக்க சிறையில் கைதிகளின் அடிப்படை உரிமைகள் இல்லாத நிலை குறித்து கடுமையான போராட்டங்கள் நடந்த காலம்.இவனை சிறை அதிகாரிகள் prison inspector அண்டர்கவர்ல இந்த சிறையின் நிலையை பற்றிகண்டறிய வந்திருப்பதாகவே நினைக்கிறார்கள்.
    தனது பல GF களில் ஒருவரான ஜீனை அழைத்து ஒரு திட்டம் வகுக்கிறான் பிரான்க்.அதாவது அசல்  prison inspector ஐ ஜீன் பத்திரிக்கையாள வேடத்தில் பேட்டி காண வேண்டும்.அவரிடம் விசிட்டிங் கார்ட் பெற்று அதை ப்ரான்கிடம் கொடுக்க வேண்டும்.பிறகு ஜீன் வைத்திருக்கும்  Fbi ன் ஓரைலி கார்டில் உள்ள எண்களுக்கு பதில் அட்லாண்டா ஷாப்பிங் மால் காயின் போன் எங்களை அச்சடித்து ப்ரான்கிடம்  கொடுக்க வேண்டும்.
இப்போது சிறை அதிகாரியிடம் முக்கிய குற்றவாளி ஒருவனை பிடிக்கணும்.இதுபத்தி நா ஒரைலியை சந்திச்சி பேசணும்.நான் prison inspector என்ற உண்மையை உங்களிடம் சொன்னதை நீங்க யாரிடமும் சொல்ல கூடாது.உங்க சிறை பத்தி நா நல்லாவே ரிப்போர்ட்ல எழுதுறேன் என்று ஐஸ் வைக்க அதிகாரிகள் இவனை வெளியே அனுப்புகிறார்கள்.
     காரில் ஜீன் ஆண் போல பெரிய தொப்பி அணிந்து அமர்ந்திருக்க அதுதான் ஒரைலி என்பதுபோல பிரான்க் காருக்கு சென்று அதில் ஏறி பறக்கிறான்!
சிறையில் இருந்து கைதிகள் தப்பித்த வரலாற்றில் இது மிக மிக புதுமையான முறை என்கிறான் பிரான்க்(மைக்கேல் ச்காபீல்ட் தோற்றான் :D)
பிறகு ஒரு மோட்டலில் தங்கியிருக்கும்போது ஒரு பெண் போலீசுக்கு தெரிவித்துவிட இவன் மோட்டலில் இருந்து வேகமாக வெளியேறுகிறான்.freeze என்று போலீசு துப்பாக்கி முனையில் மிரட்ட அதற்கு அஞ்சாமல் நடந்துகொண்டே “நான்தான் ஒரைலி!வழி விடுங்க” என்றபடி இருட்டில் நழுவுகிறான்.அத்தோடு நாவல் முடிகிறது!
நிற்க மேற்குறிப்பிட்ட அத்தனை சம்பவங்களும் ப்ராங்கின் பத்தொன்பதாம் பிறந்தநாளுக்கு முன்பே முடிந்து போகிறது!அத்தனை அனுபவங்கள் அத்தனை குறுகிய காலத்தில்!
 .

       இதே பேரில் வந்த படம்!inspired from என்றுதான் டைட்டிலில் குறிப்பிடுகிறார்கள்.
        ஒரு நாவலை திரைப்படமாக்கும் போது இயக்குனருக்கு பல்வேறு சவால்கள்.குறிப்பாக நாவலை வாசிப்பவன் அதை அணுகும் முறையும் திரைப்படமாக பார்க்கும் ரசிகன் அதை அணுகும் முறையும் முற்றிலும் வேறுபட்டது.
            இந்நாவல்  ஒரு தனி மனிதனின் வாழ்க்கையின் ஒரு பகுதி பற்றியது.அதை அந்த நபரே சொல்வது போல எழுதப்பட்டது.அதையே திரைப்படமாக்கும்போது அதில் அந்த first person narrative ன் அனுகூலம் கிடைக்காது.அதே நேரத்தில் இந்த மாதிரி நாவல்களை படமாக்குவதிலும் சில சிக்கல்கள் உள்ளன.நாவலில் தன் வாழ்க்கை அனுபவத்தை சொல்லும் அந்த நபர் நேரடியாக வாசிப்பவனிடம் பேசிக்கொண்டே இருக்க  முடியும்.

               ஆனால் திரைப்படமாக ஆக்கும்போது எந்நேரமும் கேமராவை பாத்து ஒரு கேரக்டர் தனது மன ஓட்டங்களையும் அடுத்து தான் செய்யவிருப்பவை பற்றியும் பேசிக்கொண்டிருப்பதாக ஒரு வணிக சினிமாவில் காட்ட முடியாது.

              அங்கே நாவலில் சிறிது நேரமே வந்துபோகும் கேரக்டர்களை விரிவாக்கம் செய்து திரையில் காட்ட வேண்டியிருக்கும்.அப்படித்தான் நாவலில் எங்கோ ஒரு மூலையில் வந்து போய் கொண்டிருக்கும் ஓ ரைலி படத்தில் டாம் ஹேன்க்ஸ் கேரக்டராக(Carl Hanratty என்ற பெயர் மாற்றத்தோடு) கிட்டத்தட்ட  முழுப்படத்திலும் வந்து செல்பவராக நாயகனை(!!??) அவலத்தில் இருந்து மீட்டேடுப்பவராக சித்தரிக்க படுகிறார்.
அதுமட்டுமல்லாமல் பெற்றோர் விவாகரத்து குறிப்பாக தனது தாய் செல்வந்தரான ஒருவரோடு சென்றுவிட்டாள் என்பதே ப்ரான்கின் மனதில் பெரும் பாதிப்பை உண்டாக்கி அவன் இப்படியெல்லாம் ஏமாற்று வேலை செய்வதற்கு காரணமாகிவிட்டதாக படத்தில் காட்டுகிறார்கள்.நாவலில் அதுபற்றி பிரான்க் பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை.

                       மற்றபடி பிரான்க் வடிவமைத்த பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் இன்றைக்கும் உலகெங்கும் உள்ள செக்குகளில் பயன்படுத்தப்படுகிறது.அவர் ஒரு security consultant ஆக இருந்து ஒய்வு பெற்றவர் .உண்மையில் அவரே தான் செய்த சாகசங்களுக்காக அல்லாமல் திருந்தி நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து ஒரு குடும்பத்தை வளர்த்தெடுத்தவராகவே அறியப்பட விரும்புகிறார் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.உண்மையில் படம் அவரது ஆசைக்கு பொருந்தி வருவது போல இருக்கிறது.படத்தை தனியே பார்த்தாலும் நாவலை வாசித்துவிட்டு பார்த்தாலும் நன்றாகவே உள்ளது.படத்தை நிறைவாக positive note ல முடிக்கும் ஸ்பீல்பர்க் touch ஐ இதிலும் காணலாம்.

No comments:

Post a Comment