Monday, 8 April 2019

அநீதிக்கதைகள் 2.0


          படத்தை இரண்டாவது முறை பார்த்தேன்.அதில் கண்ட சில விஷயங்கள்&தோன்றிய எண்ணங்கள்.

   இரண்டாவது முறை கண்டபோது அப்பட்டமாக தெரிந்தது காலம் நேரம் இடம் அனைத்தும் skew செய்யப்பட்டுள்ளது.அற்புதமும் மாணிக்கமும் சுனாமியில் தப்பித்தவர்கள்.வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணிக்கம் ஷில்பாவாக திரும்புவது ஏழாண்டுகள் கழித்து.அப்போ அது 2011 ஆம் ஆண்டு.ஆனால் அந்த விடலைகள் பார்க்கும் டிவி,பெர்லினின் மொபைல் எல்லாம் நவீன காலத்தவை.
    அப்போ இந்த கதைகள் ஒரே நாளில் நடக்கவில்லையா?அந்த விடலைகள் லோக்கல் தாதாவின்  டிவியை உடைத்தததும் வேறொரு டிவியை எப்படியோ வாங்கி அவன் வீட்டுக்கு எடுத்துட்டு போனதும் “ஒரே நாள்ல நாப்பத்தெட்டு இன்ச் டிவி வாங்கிட்டோம்.நாளைக்கின்னா அம்பது இன்ச் டிவி கிடைக்கும்”னு சொல்லி அனுமதி வாங்கிட்டு அந்த டிவியை தூயவனின் வீட்டுக்கு எடுத்து செல்கிறார்கள்.இங்க மட்டும்தான் நாள் பற்றிய குறிப்பு வருது.

   ஆனா பெர்லின் திடீர்னு பட்டு வேட்டி சட்டையோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறான்.கொஞ்ச நேரம் கழித்து யூனிபார்ம் அணிந்து நிற்கிறான்,பேரலலா  முகிலன் வேம்புவை வேற மப்டில கண்காணிக்கிறான்.இவை அனைத்து ஒரே நாளில் சாத்தியமா?என்ற கேள்வியும் இருக்கு.
    மற்றொன்று படத்தின் பிற்பகுதியில் பெர்லின் முகிலன் வேம்புவை ஒரு பழைய பேக்டரி மாதிரியான இடத்தில் வைத்து மிரட்டுகிறான்.அந்த விடலைகள் உடைந்த டிவியை தூக்கி எரிவதோ அவர்கள் குடியிருப்புக்கு வெளியே.அது இங்கே விழுகிறது.
  அதுபோல ஷில்பா தனது மகனை பள்ளிக்கு அழைத்து செல்லும் வழி என்பது எந்த ஊர் எந்த இடம் என்பதுபற்றிய எந்தவித தெளிவான அடையாளங்களும் இல்லாத ஒருவித surrealistic இடமாகவே தெரிந்தது.அப்புறம் ஷில்பாவும் தனசேகரும் சந்தித்துக்கொள்ளும் சப்வே(அந்த காட்சியை இரண்டாம் முறை பார்த்த போதும் அதே வீரியத்தோடு இருந்தது).குறிப்பாக விளக்கு மின்னி மின்னி அணையும் அந்த டைமிங்கை ஏற்கெனவே முடிவு செய்து எடுத்திருக்கிறார்கள்.அற்புதம்!
  அப்புறம் விளக்கமளிக்கமுடியாத சில நிகழ்வுகள். லிப்டுல கரண்ட் போனதும் வேம்பு கரண்ட் வரும் என்கிறாள்.”ஆமா நீ பெரிய பத்தினி!சொன்னதும் நடந்துட போவுது”னு முகிலன் அலட்சியமா  சொல்லி முடித்ததும் கரண்ட் வருகிறது.அதுபோல காவல் நிலையத்தில் ஷில்பா பெர்லினின் தலையில் அடித்து சபிக்கிறாள்.பிறகு பெர்லினின் தலையில் அடிபட்டே இறக்கிறான்.
   ஷில்பா ஒரு திருநங்கை என்றதும் அவர் மீது கழிவிரக்கம் வரும்படியான செண்டிமெண்ட் காட்சிகள் எதையும் இயக்குனர்  வலிந்து வைக்கவில்லை.இன்னும் சொல்லப்போனால் ஷில்பாவும் ஒருவிதத்தில் பெரும் குற்றத்தில் பங்கு வகித்தவளாகவே காட்டப்படுகிறாள்.இரண்டு குழந்தைகளை யாரிடமோ கொடுத்ததாகவும் ஒரு வாரம் கழித்து ட்ராபிக் சிக்னல்ல அவர்கள் இருவரும் கண் பார்வை இழந்து கை கால் ஒடிந்த நிலையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததாகவும் சொல்கிறாள்.ஆக அவளுமே பாவத்தில் பங்கு வகிக்க தயங்கவில்லை.
   வேம்பு முகிலன் இடையேயான உரையாடல்கள் அப்பட்டமான கணவன் மனைவி உரையாடல்களை ஒத்திருந்தது.மிகையான சக்கரை பூச்சோடு பார்த்ததும் காதல் பிறகு எப்படியாவது ஹீரோயினியை வற்புறுத்தி திரும்ப காதலிக்க வைப்பது பிறகு   காதலின் வெற்றி பிறகு  கல்யாணம்.அதன் பிறகு they happily lived ever after என்றுதான் 99% தமிழ் படங்கள் முடியும்.இதில் அந்த மாய தோற்றங்கள் உடைக்கப்பட்டுள்ளன.
   மூன்று தம்பதிகளின் கதையே இங்கு பிரதானம்.சமீபத்தில் திருமணமான முகிலன்—வேம்பு,திருமணமாகி ஏழு வருடங்கள் ஆனா மாணிக்கம்-ஜோதி,பதினேழு பதினெட்டு ஆண்டுகள் ஆனா தனசேகர்-லீலா.மூன்று தம்பதிகளுமே மகிழ்வான  வாழ்க்கையை வாழவில்லை.
   
   இரண்டாம் முறை பார்த்தபோதும் பல காட்சிகளின் தேவையற்ற நீளத்தை உணர முடிந்தது.அப்புறம் அவ்வப்போது ஒலிக்கும் ராசைய்யாவின் பாடல்கள்(ஆரம்பத்தில் வரும் ஐயம் ஏ டிஸ்கோ டான்சர் தவிர்த்து) ஒருவித வினோத உணர்வை தந்தது.ஷில்பா உடைமாற்றும்போது ஒலிக்கும் மாசிமாசம் பாடல், வனிதாமணி பாடலில் ஆண் குரலுக்கு மட்டும் வாயசைக்கும் தூயவன்   என்று இப்பாடல்களை தனியே கேட்டால் அந்த காட்சிகள் நினைவுக்கு வரும் என்கிற அளவுக்கு பயன்படுத்தியுள்ளார் இயக்குனர்.அப்புறம் அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் பின்னணியில் ஒலித்த அந்த அரவை இயந்திரம் போன்ற அந்த ஒலியை மறக்க முடியாது.
  படத்தின் color tone நன்றாக இருந்தது.படத்தின் கதைக்களன் போலவே அதுவும் ஒருவித dreamy தன்மை கொண்டதாக இருந்தது.
    இப்படம் ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து எப்படி இருக்க போகுதுன்னு என்னால யூகிக்க முடியல(இப்பவே இரண்டாம் முறை பார்த்தபோது வேறு அனுபவமாகவே இருந்தது).இப்போது இருப்பதை காட்டிலும் சிறந்த படமா தெரியலாம்.அல்லது இப்போது கண்டதை விட மோசமான அனுபவமாகவும் அமையலாம்.

Friday, 5 April 2019

அநீதிக்கதைகள்


                       படத்தில் மூன்று ட்ராக்கில்  மூன்று கதைகள்.படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே மூன்றிலும் எதிர்பாராத திருப்பம்.ஆகா செம விறுவிறுப்பா போக போவுதுன்னு நினைச்சா அதற்குப்பின் நடப்பது வேறு.இந்த மாதிரி தொடர்ச்சியா மூன்று எதிர்பாராத ட்விஸ்ட் வச்சிட்டமே!தொடர்ந்து இந்தமாதிரி ட்விஸ்ட் வச்சா அப்புறம் பல்வேறு குறும்படங்களின் தொகுப்பாகிடும்.அதனால கொஞ்சம் இழுப்போம் என்று இயக்குனர் நினைத்தாரோ என்னவோ!

              அதற்கு பின் ஒவ்வொரு காட்சியையும் தேவைக்கும்  அதிகமான நீளத்திற்கு sustain பண்ணுகிறார்.அது எதுக்குன்னு புரியல!
               படம் நல்லாருக்கா இல்லையா? என்று பைனரியில் பதிலளிக்க முடியாத படங்களுள் இதுவும் ஒன்று.நன்றாக வந்திருக்கவேண்டிய படம் என்பதுமட்டும் உறுதியா சொல்லலாம்!.
    ஷில்பாவுக்கும் மகனுக்குமான அந்த பாச பிணைப்பு.”நானும் அம்மாவும் உன்னை ஏதாவது சொன்னமா?” என்று கேட்கும் அந்த சிறுவன்(ஆரண்ய காண்டத்திலும் இதுபோல ஒரு கெட்டிக்கார சிறுவன் உண்டு) தருணம்;அந்த சப்வேல ஷில்பாவும் (தான் இறைதூதர் என்ற நினைப்பில் வாழும்)அற்புதமும் தற்செயலா சந்தித்து பேசும் காட்சி என்று சில நல்ல தருணங்கள் நிச்சயம் உண்டு.

     ஆனால் இப்படி பல நல்ல தருணங்கள் நிரம்பிய படமாக  வந்திருக்க வேண்டியது. காட்சிகள் பல இழுவையாக இழுக்கப்பட்டதால் அதன் உன்னதத்தை வீரியத்தை இழந்து வெறுமனே பார்வையாளனால் கடந்துபோகும் தருணமாகிவிட்டது.உதாரணமாக முகிலன்-வேம்பு தொடர்பான காட்சிகளில் அவர்களுக்குள் நிகழும் மோதல் பிறகு  ஏற்படும் புரிதல் நன்றாக வந்திருக்க வேண்டியது!ஆனால் வரவில்லை!அந்த காட்சிகளை செல்வராகவன் பட பாணில எடுப்போம் என்று இயக்குனர் நினைத்தாரா அல்லது திரைக்கதை எழுதியவர்களுள் ஒருவர் நினைத்தாரா என்று தெரியல!

மிஸ்கின், நலன் குமாரசாமி, நீலன்.கே.சேகர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.இதில் மிஸ்கின் எழுதிய காட்சிகள் இவைதான் என்று சொல்ல முடியும்.உதாரணமாக அந்த சப்வே காட்சி,ஹாஸ்பிடலில் மனைவி  விடம் கடவுள் குறித்து பேசும் காட்சி சுனாமியில் தப்பித்தது(அவன் கடல்ல விழ போனான்.கடல் அவனை பின்தொடர்ந்தது), அந்த சிலை உடைப்பின் முடிவில் வரும் திருப்பம்  போன்றவைகளை சொல்லலாம்(இவை நானாக ஊகித்து சொல்பவை)!

            இதுல பிரச்சனை மிஸ்கின் படங்களுக்கே உரிய மனதை நெகிழ வைக்கும் அந்த உன்னத தருணங்கள் பல அவர் படங்களில் அற்புதமாக வெளிவந்திருக்கும்.இதுல என்ன நடந்துச்சோ அவர் எழுதியதை காட்சிப்படுத்தும்போது எங்கோ திசை மாறிட்டுதோ என்னவோ..அவை உன்னத தருணங்களாக மாறவில்லை(முன்பு குறிப்பிட்ட சப்வே காட்சி தவிர).
   இதுல முனியாண்டி இப்படத்தை 2006 ல இன்னாரித்து இயக்கத்தில் வந்த  Babel படத்தோடு ஒப்பிட்டிருந்தார்.அப்படமும் இதுபோல மூன்று வெவ்வேறு கதை மாந்தர்கள் விளக்கவியலா ஒரு மெல்லிய இணைப்பு சங்கிலியால் இணைக்கப்பட்டிருப்பதை காண முடியும்.ஆனால் அப்படம் கன கச்சிதமான காட்சியமைப்பை  கொண்டிருந்தது. இப்படத்தில் அது மிஸ்ஸிங்.

    ஏற்கெனவே தசாவதாரம் படத்தில் இந்த பட்டர்ஃபளை எபெக்டை மையமா வச்சு கதை பண்ணுறேன்னு ஏதோ குழப்பியடித்திருப்பார் கமல்.இப்படத்தில் அவ்வளவு குழப்பங்கள் இல்லை.கடவுளின் இருப்பு தொடர்பான வசனங்கள் உண்டு.ஆனால் விவாதங்கள் இல்லை(தசா அசின் நியாபகம் உள்ளதா?).
   படத்தின் பிற்பகுதியில் வரும் இன்னும் இரு திருப்பங்கள்.ஒன்றை ஊகிக்க முடிந்தாலும் இன்னொன்று நிச்சயம் ஆச்சரியம்தான்(சேட்டு வீட்டில்).ஆனால் அந்த ஆச்சரிய தருணத்தை தாண்டி என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கமான கோடம்பாக்க பார்முலாபடி மொட்டைமாடிக்கு போய்ட்டார்.
     கடைசி சில காட்சிகளில் சுஜாதா எழுதிய கடவுள் புத்தகத்தை அப்படியே இரத்தின சுருக்கமா கேப்ஸ்யூல் வடிவில் கொடுக்கலாம்னு யாரோ ஐடியா கொடுத்திருக்காங்க போல!

          மாணிக்கம்  திருமணம் செய்து மனைவிக்கு  பிள்ளை உண்டானதும் தனது உடலில்  பெண் தன்மை அதிகரித்துக்கொண்டே செல்ல தாங்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்ததாக சொல்லப்படுது(சுனாமி-அற்புதம்-சிலை).இதுல ஷில்பாவின் மனைவியும் மகனுமே அவளை முழுமையாக ஏற்றுகொள்கின்றனர்.அந்த எஸ்ஐ பெர்லின்  (வாய்ப்பு கிடைக்குமானால் ஆண் பெண் திருநங்கை என யாரையும் விட்டுவைக்காத) அணுகும் விதமும், அந்த பள்ளி ஹெட் மாஸ்டர் அணுகும் விதமும் அதிகாரத்தின் அணுகுமுறை.அந்த பள்ளியில் பணியாற்றுவோர் மட்டுமல்லாமல் அந்த பள்ளியில் “ அச்சில் வார்த்தெடுக்கப்படும்”  மாணவர்களுமே ஷில்பாவை கேலி கிண்டல் செய்கின்றனர்.இழிவாக பேசுகின்றனர்.”வித்தியாசமான நபர்களை உலகம் கண்டு பயப்படும்” என்று ஷில்பா சொல்வதாக வருகிறது.

     இதுல குறிப்பிடவேண்டிய இன்னொரு கேரக்டர் முகிலன்.ஹீரோவாக ஆவதற்கு முன் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுப்பவன்.அதோடு மட்டுமல்லாமல் திடீர் திடீரென்று சமூக கருத்துக்களை பேசுபவன்(தேசம்னா பக்தி-மொழின்னா பற்று.சாதின்னா மட்டும் வெறியா?).அதற்கும் அவன் காரணம் சொல்கிறான்.பெரிய ஸ்டார் ஆனதும் பேருக்கு முன்னாடி புரட்சி டேஷ்(தலைவலி?) முகிலன்னு போட்டுக்கிட்டு மேற்கூறியபடி  ஆவேச கருத்துக்களை பேசி அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பது(யப்பா!மூச்சு வாங்குது).இப்ப பிரபலமா இருக்கு பல ஹீரோக்களை  இந்த கேரக்டரோடு பொருத்தி பார்க்கமுடியும்.தமிழக அரசியல் வெற்றிடத்தில் பெரிய பாதிப்பை உண்டாக்கிவிட முடியும் என்று பல ஹீரோக்களின் கண்களில் ஆசை மின்னல் மின்னுகிறது.

    ஒருகாலத்தில்  பிட்டு படத்துல நடித்த நடிகை தாயானால் உண்டாகும் பிரச்சனை- சாதாரண நடிகை சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணம் புரிந்து  தாயானாலும் எதிர்கொள்ள நேரிடும்!பாலியல் உறவுகள் குறித்த அரைகுறை புரிதல்கள் நிரம்பிய சமூகத்தில் இந்தமாதிரியான குழப்பங்கள்(சன்னி லியோனுக்கு பிள்ளை பிறந்தால் அது என்ன மனநிலையில் இருக்கும்?) நேரிடுவது இயல்பே!இதை crisp ஆ சொல்லாம ஜவ்வா இழுத்து முடித்திருக்கிறார்கள். 

   சமூகத்தில் நிகழும் ஆனால் பலரும் விவாதிக்க விரும்பாத சம்பவங்களை படத்தில் காட்டியுள்ளார்கள்."இவையெல்லாம் இங்க நிகழவே இல்லை" என்று ஒருவர் சொன்னால் அவர் நிஜ உலகம் அறியாதவர் என்பதை தவிர சொல்றதுக்கு  வேறேதும் இல்லை!
 தேவையற்ற காட்சிகள் லாஜிக் ஓட்டைகளும் உண்டு. வீட்ல அறிமுகமில்லாத சிலர் உக்காந்திருக்கும் போதே பாடியை டிஸ்போஸ் செய்ய முயலும் காட்சி ஒரு உதாரணம்.
                         ஆரண்ய காண்டம் படத்தில் வந்த அந்த ஒலி வடிவமைப்பை இப்படத்திலும் கேட்க முடிந்தது.ஒரு அறையில் இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது தெருவில் வெங்காயம் விற்பவனின் குரல்,ஏதேனும் ஸ்பீக்கரில் பாடல் ஓடிக்கொண்டிருந்தால் அடைத்த தொனியில் கேட்கும் பாடல்,வாகனம் செல்லும் சத்தம் etc..etc.. என்று அவ்வகையே இப்படத்திலும் துல்லியமாக  கேட்க முடியுது.

அப்புறம் இப்படம் குறித்த விமர்சனங்கள்.படம் சார்ந்தவை அல்ல.”இப்படிலாம் வசனம் காட்சிகள் வச்சு படமெடுத்தா சம்முவம் கெட்டுடாதா?” என்ற கலாச்சார காவலர்கள் கூச்சல்.இதுக்குமேலையுமா சம்முவத்தை கெடுக்க முடியும்?சிறுவர் சிறுமிகளின் மிக அபிமான ஸ்டார்கள் சிலர் தமிழில் உள்ளனர்.அவர்கள் படத்திற்கு குடும்பத்தோடு அவர்கள் செல்வர்.அப்படங்களில் வராத வக்கிரமா?ஆபாசமா?ஐட்டம் சாங்கா?இரட்டை அர்த்த வசனமா இதுல இருக்கு?இது வெளிப்படையா “ஆமா நாங்க இதைப்பத்தி பேசுறோம்” என்றுதான் எடுத்திருக்கிறார்கள்.

              வரிவிலக்கிற்காக பல படங்கள் யு சான்றிதழ் எப்படி பெற்றது என்பது நமக்கு தெரியும்!அப்படங்களில் உள்ள காட்சிகளில் இல்லாத வக்கிரமா?தவிர வக்கிரம் என்பது மறைமுகமா சக்கரை பூச்சோடு ஒன்றை சொல்லும்போதே கனத்து ஒலிக்கும்!நேரடியாக சொல்லும்போது அதன் போலி ஈர்ப்புகள் கவர்ச்சிகள் காணாமல் போகும்!
             விஜய் சேதுபதி வழக்கமான தேய்வழக்கு வசன உச்சரிப்பிலிருந்து முதன்முறையாக விலகி பேசியிருக்கிறார்.ஆனாலும் அப்பப்போ "என்னாச்சு?" ங்கிற நடுவுல கொஞ்சம்...பட perplexed முழிப்பை இதிலும் காண முடியுது!ஃபகத் ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் வேறு பரிமாணத்தை தொடுகிறார்!


யுவனின் பின்னணி பல இடங்களில் அற்புதமாக உள்ளது.வழக்கமா தற்போதைய "வடசென்னை மீட்பு" டிரென்ட்படி ஒரு கானா வச்சு கொல்லாமல் இருந்ததற்காகவே இயக்குனருக்கும் இசை அமைப்பாளருக்கும் நன்றி!



              அப்புறம் “ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசைய தூண்டனும்”னு வசனம் பேசி படம் முழுக்க எப்படி ஃபிராடு வேலை செய்வதுன்னு டெமோ காட்டிட்டு கடைசில கிராமத்துல விவசாயம் பண்ண போறேன்னு நமக்கே அதிர்ச்சி கொடுத்த சதுரங்க வேட்டை  பட நடராஜ் படத்துக்கு எதிரா  ஓவரா கூவியிருக்கார்.”கில்மா கதை புத்தகத்துல எல்லாத்தையும் விளக்கிட்டு கடைசில இதையெல்லாம் செய்ய கூடாது தப்புன்னு சொல்ற அயோக்கியத்தனம்” என்று  படத்துலயே அவருக்கு பதிலிருக்கு!
       அப்புறம் ஷில்பா ஒரு திருநங்கை இல்லையாம் Transvestite(மாற்று பாலினத்தவரின் உடைகளை விரும்பி அணிபவர்) னு இன்னொரு ஒலக விமர்சகன் கூவுறான்.அஞ்சு ரூவாக்கி ஒரு ஜிபி டேட்டா குடுத்ததுல இந்தமேரி அரைவேக்காட்டுகள் அதிகம் உருவானதுதான் மிச்சம்.இதுக்குமேல இதுபத்தி எதுவும் சொல்ல விரும்பல!
.
             ஒரு மனிதனின் செயல் இன்னொரு மனிதனின் செயலில் வாழ்வில் பாதிப்பை உண்டாக்கும் என்கிறார்கள்.இப்படம் ஒரு மகத்தான படமா வந்திருக்க வேண்டியது.திரைக்கதைல ஏதோ ஒரு சிறு சறுக்கல் நிகழ அது இன்னொரு சறுக்கலை உண்டாக்கி அதனால் மற்றொரு சறுக்கல் என்று  மாபெரும்  பட்டர்ஃபளை எபெக்டை படத்திலும் காணமுடியுது!
.
டிஸ்கி 1: பொதுவா தியேட்டர்ல படம் ஆரம்பிச்சு அரை மணிநேரம் வரை எவனாவது வந்துகினே இருப்பான்.இந்த படம் சர்பிகேட் என்பதாலோ என்னவோ ஒரு மணி நேரம் வரை இருட்டில் ரகசியமா பலர் வந்து அமர்ந்தனர்.அவர்கள் வேறு ஏதோ எதிர்பார்ப்பில் வந்துவிட்டது மட்டும் உறுதி.
டிஸ்கி 2: இருக்குற ட்விஸ்ட்ல எல்லாம் பெரும் ட்விஸ்ட் கடைசில தியேட்டர்ல ஓடும்  பிட்டு படத்துல ஓணாண்டி புலவர் டாக்டர் கேரக்டர்ல வந்ததுதான்!செம ட்விஸ்ட் மாமு!
டிஸ்கி 3:  விஜய் சேதுபதிக்கு ரசிகைகள் நிறைய உண்டு போல!!ஆண் துணையோடோ தனியாகவோ வந்திருந்தனர்.அவர்களில் சிலர்  படம் முக்கால்வாசி நடந்துகொண்டிருக்கும் போதே வெளியேறியதை காண முடிந்தது.(நிச்சயம் இப்படம்  வணிக சினிமாவை எதிர்பார்த்து வந்தோருக்கு ஒருவித அசவுகரியத்தை தரும்!)
டிஸ்கி 4: படத்திற்கு இப்பதிவின் தலைப்பே முதலில் வைக்கப்பட்டிருந்தது.அதுவே சாலப்பொருத்தம் என்பது என் கருத்து.
     

Tuesday, 2 April 2019

Jana Aranya (1976)


“I have made both kinds of films — those dealing with contemporary problems, and I have also gone back to the past, to the nineteenth century, and made films on the stories of Tagore and other writers. There, one could think of a noble and heroic character, but no longer today — people have become diminished in stature, I feel.”-Satyajit Ray


               மக்களின் பேச்சுவழக்கில் பொதுவாக  குறிப்பிடப்படுவது அரசியல் கட்சிகளின்-அரசியல்வாதிகளின் தரமற்ற,சந்தர்ப்பவாத-அறம் பிறழ்ன்ற செய்கைகள் பற்றியே!உண்மையில் சாமானிய மக்களுமே அப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகள்தான்(அந்த சாமானியர்களில் இருந்து வருபவர்கள்தானே அரசியல்வாதிகளும்!)- தன் குடும்பம் அல்லது மிகநெருக்கடியான கால கட்டங்களில் தான் மட்டும் வாழ்ந்தா போதும் என்ற பொதுபுத்தியே இங்க அதிகமா இருக்கு.

         இப்படம் சத்யஜித்ராய் இயக்கிய படங்களிலேயே மிகவும் இருண்மையான ஸினிக்கலான படமென்று அறியப்படுவது.இதை வேறொரு வகையில் குறிப்பிடலாமென்றால் இது மேல்பூச்சற்ற பாசாங்கில்லாத அப்பட்டமாக சமூகத்தை காட்டும் ஒரு திரைப்படம்.
    படம் வந்த எழுபதுகளில் நிலவிய வேலையில்லா திண்டாட்டம்-கடும் வறுமை- கடும் மின்வெட்டு- அதனால் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் வேலையிழந்தோர் இதனால் எழுந்த நக்சல்வாதம்(இது குறிப்பாக வங்காளத்தை அதிகம் பாதித்தது) இதெல்லாம் போதாதென்று  'அம்மையார்' அமல்படுத்திய அவசரநிலை என்று தொடர்ந்து மக்களின் மென்னியை மூச்சுத்திணற அழுத்தி பிடித்திருந்த காலம்.
         படத்தின் துவக்க காட்சியிலேயே ஒரு பரீட்சை நடக்கும் அறை காட்டப்படுகிறது.சகட்டு மேனிக்கு பிட் அடித்தும் காப்பியடித்தும் மாணவர்கள் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.ஆசிரியரின் மேற்பார்வையில்!!!(இப்போதும் பல வட மாநிலங்களில் இவை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது)
சுகுமார் 

    பிறகு பரீட்சை பேப்பர் திருத்தும் ஆசிரியரின் வீடு  காட்டப்படுகிறது. தன் அறையில் அமர்ந்து பேப்பர் திருத்துகிறார்.ஒரு மாணவன் பொடி எழுத்தாக விடைகள் எழுதியிருக்க தன் அண்டை வீட்டு நண்பரிடம் கண் கண்ணாடி வாங்கி வர சொல்கிறார்(தன் கண்ணாடி பவரின் போதாமை).அவர் எங்கோ வெளியே சென்றுவிட்டதாக சொல்ல ஏதோ கண் தெரிந்தவரை திருத்துகிறார்.அதிக மார்க் பெற வேண்டிய அந்த மாணவன் ஏதோ ஒரு மார்க் எடுத்து சுமாராக பாஸ் ஆகிறான்.அவன்தான் சோம்நாத்.அந்த பரீட்சை பேப்பரில் பொடி எழுத்தாக எழுதியவன் சோம்நாத்தான் என்பதை பிறகொரு காட்சியில் உணர்த்தியிருப்பார் இயக்குனர்!*

      
     சோம்நாத்தின் தந்தை ”மறு மதிப்பீட்டுக்கு விடைத்தாளை அனுப்பலாம்” என்கிறார் அவர்.சோம்நாத் மறுக்கிறான்.அப்படியே கோல்ட் மெடல் வாங்கினாலும் என்ன பயன் என்று நினைத்திருக்கலாம்!பிறகு வேலை தேடல்!

     உண்மையில் இந்த வேலை தேடல் காட்சி மிக intense ஆக காட்டப்படுகிறது.நாட்கள்-மாதங்கள் நகர்வதை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கும் காட்சியாக திரும்ப திரும்ப காட்டப்படுகிறது.கடும் வெயில்!கூட்ட நெரிசல்!வேலை இல்லை!அப்படியே நேர்முகத்திற்கு சென்றாலும் செய்யப்போகும் வேலைக்கு சம்மந்தமில்லாத கேள்விகள் சோம்நாத்தை எரிச்சலூட்டுகின்றன.
    பிறகு தனக்கு தெரிந்த பிஷு என்பவர் உதவியோடு ஒரு ஏஜன்ட் போல செயல்பட ஆரம்பிக்கிறான். அப்படி ஒருமுறை ஆர்டர் விலையை quote செய்து எழுதி காட்டும்போது அலுவலர் “என்ன எழுத்து இவ்வளவு சின்னதா இருக்கு” என்கிறார்*

பிஷு


    ஒரு அலுவலகத்திற்கு தேவையான பேப்பர் கார்பன் பேப்பர் டைப் ரைட்டர் ரிப்பன் மாதிரியான ஸ்டேஷனரி பொருட்களை இவன் கடையில் வாங்கி அவர்களுக்கு தருவது!இடையில் இவனுக்கு கமிஷன் கிடைக்கும்.அலுவலகத்தில் இந்த ஆர்டர் எடுக்கும் நபருக்கும் கமிஷன் கிடைக்கும்.ஒருமுறை இப்படி பேப்பர் வாங்கும் கடையில் தனக்கு இந்த ஆபீசில் ஆர்டர் கிடைத்திருப்பதாக ஆபீஸ் பெயரை அந்த ஸ்டேஷனரி முதலாளியிடம் சொல்ல அவர் இவனை ஓவர்டேக் செய்து நேரடியாக அந்த அலுவலகத்தில் ஆர்டர் பெற்று இவரே சப்ளை செய்துவிடுகிறார்.                    
                     உண்மையில் இது சோம்நாத்துக்கு பிறகுதான் தெரிய வருகிறது.பிஷு “நான் ராக்கெட்டை லான்ச் மட்டும்தான் செய்யமுடியும்.மேலே செல்வது உன்பாடு” என்று அத்தோடு அவன் போக்கில் விட்டுவிடுகிறார்.
    சோம்நாத் ஆரம்பத்தில் மிக வெள்ளந்தி போலவே இருக்கிறான்.பிரிட்டிஷ் கால வீடு ஒன்று தரைமட்டமாக்கப்படும் தகவலை ஒரு ப்ரோக்கரிடம்(அவர் இடிக்கப்படும் வீட்டின் சாமான்களை பெற்று ஏலமிட்டு சம்பாதிப்பவர்) சொல்ல அவர் அந்த தகவலுக்கு பணம் தருகிறார்.சோம்நாத் அதை எண்ணாமல் வாங்கி பையில் வைக்க “பணம் வாங்கும் போதும் குடுக்கும் போதும் சரியாக உள்ளதா என எண்ணி பாக்கணும்.இப்ப ரூபா குறைஞ்சதை நாளைக்கு கண்டுபிடிச்சா நீ என்கிட்டே வந்து எப்படி கேப்ப?” என்கிறார்.
சோம்நாத் 

   இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சூதுவாது புரிய ஆரம்பிக்கிறது.அறவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கப்படுகிறது.அப்போதும் அவன் தன் இயல்பான இளைஞர்களுக்கே உரிய விளையாட்டு தன்மையோடே இருக்கிறான்.
   பிறகு ஒரு டெக்ஸ்டைல் கம்பனியில் துணிகளை வெண்மையாக்கும் ஒரு ஒய்ட்டனர் ஆர்டரை பெற அவன் தன்னிடம் மிச்சமிருக்கும் கொஞ்சநஞ்ச அறவுணர்வையும் மொத்தமாக இழக்கிறான்.
    சோம்நாத் காதலித்த பெண் நல்ல வேலையில் இருக்கும் ஒருவனை திருமணம் செய்துகொள்வது ஒருபுறம்; இன்னொரு புறம் அவனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கும் முனைப்போடு அவன் தந்தையோடு ஒருவர் பேசுவது போன்றவை அவன் மனதில் பாதிப்பை உண்டாக்குகிறது.
  இருந்தாலும் சோம்நாத் தனது அண்ணியிடம் ஒரு நல்ல நட்பில் இருக்கிறான்.வழக்கமாக திரைப்படங்களில் அண்ணியை தாய் என்று ஒருபுறம் சொல்லிட்டு இன்னொருபுறம் தான் காதலிக்கும் பெண்ணை கவர அவரிடமே ஐடியா கேட்பது மாதிரியான அபத்தங்கள் இப்படத்தில் இல்லை.

   அண்ணியிடம் எருமை வயசாகும் ஹீரோ “சீ போங்கண்ணி” என்று தனது காதலி பற்றியோ திருமணம் பற்றியோ கேட்கப்படும்போது குழந்தை லெவலுக்கு மாறி செய்யும் அபத்த கூத்துக்கள் இதில் இல்லை.ஒரு அற்புதமான இயல்பான நட்பு இருக்கிறது.
     .
  சுதந்திர போராட்ட தியாகியாக இருக்கும் சோம்நாத்தின் தந்தை, சோம்நாத் மற்றும் அவனது அண்ணன் போம்போல் ஆகியோர் சமூகத்தில் பரவலாக இயல்பான விஷயமாகிவிட்ட லஞ்சம் பற்றி பேசும் போது அதிர்ந்து போகிறார்.அவரால் இதையெல்லாம் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை!ஒரு வேலைக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பிப்பதை அவரால் கற்பனை செய்ய முடியவில்லை!அவர் காலம் என்பது வேறு!

   சுதந்திர போராட்ட காலத்தில் எதிரி வெளியில்!இப்போதோ உள்ளே!மேலும் நக்சலைட்டுகளாக மாறி உயிரை விடுவதையும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.'ஏதேனும் வலுவான கொள்கை இல்லாமலேயே எப்படி இவர்களால் சாக முடிகிறது?' என்று வியக்கிறார்.

சோம்நாத்தின் தந்தை 


                 ஆனால் சோம்நாத்தின் அண்ணி கமலா  இவை அனைத்தும் புரிந்தவராகவே இருக்கிறார்.தான் ஒரு மிடில் மேன் ஆகிவிட்டதை அண்ணியிடம் விரக்தியாக சொல்ல அப்போதும் அவர் சோம்நாத்திடம் “இதில் தவறு எதுவும் இல்லை” என்றே சொல்கிறார்.

    சோம்நாத்தின் நண்பன் சுகுமாரின் குடும்பம் வறுமையில் உழல்கிறது.சுகுமாரின் தங்கை கௌனா  நாடகத்தில் நடித்து சம்பாதிப்பதாக சொல்லி வைத்திருக்கிறாள்.சோம்நாத்தின் நண்பன் வைரஸ் காய்ச்சலால் படுத்த படுக்கையாக இருக்கிறான்(அவனுக்கும் வேலையில்லை).தான் உடை மாற்றும்போது தெரு ஜன்னல் திறந்திருப்பதையோ அதுவழியாக சில இளைஞர்கள் பார்ப்பது பற்றிய பிரக்ஞை கூட இல்லாதவளாக கௌனா இருப்பது சுகுமாருக்கு  அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

   உண்மையில் அந்த துணி ஒய்ட்டனர் ஆர்டர் பெற அந்த முதலாளியை “சந்தோஷப்படுத்த” வேண்டும்.அதற்காக சோம்நாத் தனக்கு பரிச்சயமான ஒரு ஆசாமி(டிடக்டிவ் வேலை செய்வதாக சொல்லும் பிம்ப்) யோடு ஒவ்வொரு பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கும் செல்வதாக காட்சிகள் வருகிறது.

   ஒரு பெண்ணின் கணவன் குடிகாரன்.அவனே மனைவியை தொழிலுக்கு அனுப்புகிறான்.ஒரு தாய் தனது மகள்களை வைத்து தொழில் செய்கிறாள்.இறுதியாக இந்த நாடக கம்பனி போர்வையில் விபச்சாரம்.அதில்தான் சுகுமாரின்  தங்கை கௌனா ஜூதிகா என்ற பேரில்    இருக்கிறாள்.பணம் தந்துவிடுகிறேன்.நீ போய்விடு என்கிறான் சோம்நாத்.ஆனால் வெறுமனே பணம் வாங்க முடியாது.என்னை ஹோட்டலில் கொண்டு விடு என்கிறாள் அவள்.அவளிடம் எந்த தடுமாற்றமும் இல்லை.இந்தமாதிரியான அறநெறி ஊசலாட்டங்களை எப்போதோ அவள் அழித்துவிட்டாள்.ஆனால் சோம்நாத் அப்படியல்ல.கடும் தடுமாற்றத்திற்கு பிறகு அவளை கம்பனி முதலாளி இருக்கும் ஹோட்டல் அறையில் விட்டுவிட்டு வெளியே செல்கிறான்.
கௌனா 

 பிறகு வீட்டுக்கு செல்லும் அவன் ஆர்டர் கிடைச்சிடுச்சு என்கிறான்!  கமலாவுக்கு  இதன் தீவிரம் விளங்குவதாக(சோம்நாத்திடமிருந்து பல ஆயிரம் மைல் விலகி செல்வதாக அவர் முகபாவம் காட்டப்படுகிறது)
கமலா 


             படம் முடிகிறது.உண்மையில் சோம்நாத் இந்த ஆர்டர் கிடைத்ததால் மகிழ்ச்சி பெற்றவனாக இல்லை.குற்றவுணர்ச்சி கொண்டவனாகவே இருக்கிறான்.ஆனால் அந்த குற்றவுணர்வு எத்தனை காலம் நீடிக்கும்?சமூகம் அதை அவனிடத்தில் இருக்க அனுமதிக்குமா?அந்த குற்றவுணர்வை அவன் நீடிக்க செய்தால் அந்த ப்ரோக்கர் பணியையே விட வேண்டியிருக்கும்.அதுமட்டுமல்ல வேறு எந்த பணிக்குமே செல்லவிடாமல் தடுக்கும்!

   அறவுணர்ச்சி-நேர்மை-ஒழுக்கம் etc..etc.. வழக்கொழிந்த சமூகத்தில் தான் மட்டும் இவற்றை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க முடியுமா?அவனது தந்தை வாழ்ந்த ஒரு வாழ்வை இவனால் வாழமுடியுமா?
   உண்மையில் சோம்நாத் இனி இதுபோல பல ஆர்டர்களை பெற முடியும்.திருமணம் செய்துகொள்ள முடியும்.பிள்ளைகள் பெற்றுக்கொள்ள முடியும்.அவர்களை இருப்பதிலேயே சிறந்த பள்ளி-கல்லூரிக்கு அனுப்ப முடியும்!அந்த பிள்ளைகளுக்கு அறவுணர்ச்சி “தொல்லை” மட்டும்  இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதும்(பரிணாம வளர்ச்சியில் அவர்கள் அதுமாதிரியான எக்ஸ்ட்ரா பிட்டிங் எதுவுமே இல்லாமல் பிறப்பார்கள் என்பது வேறு விஷயம்).அவர்களும் சமூகத்தில் “கவுரவ” வாழ்க்கை வாழ்ந்துவிட  முடியும்!
            இன்றைய சூழலில் எழுபதுகளில் வந்த இப்படத்தை பார்க்கையில் அப்போது சோம்நாத்த்துக்கு குறைந்தபட்ச நன்னெறிகளாவது  ஆரம்பத்தில் மிஞ்சியிருப்பது வியப்பளிக்கிறது!இப்படம் வந்த காலகட்டத்தை காட்டிலும் இப்போது இது கூடுதல் relevant ஆக உள்ளது! "இந்த பிரச்சனைக்கு எல்லாம் என்ன தீர்வுன்னா..." என்று ப்ளேடு போடாததே அதற்கு காரணம்!அத்தகைய தீர்வுகள் எத்தகைய பெரும் படைப்பையும் மலினமாக்கிவிடும்(சினிமாவிலும் சரி இலக்கியத்திலும் சரி)!காலம் செல்ல செல்ல இப்படத்தின் relevance அதிகரிக்கவே செய்யும்!