Wednesday, 1 January 2020

Yavanika 1982


                  கிளாசிக் அங்கீகாரம் பெற்ற படங்கள் பல கவனிப்பாரற்று கிடக்கின்றன.இருந்தும் இப்படி எருமை மாட்டு தோலால் செய்த sensibility யோடு அரசு நிறுவனங்கள்(National Film Archives!BLAH!)  இருக்கும் வேளையில் சில தனி நபர்கள்/விடியோ விஷன் நிறுவனங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள்,மற்றும்  யூ ட்யூப் சேனல்கள்  முயற்சி எடுத்து சில படங்களை நல்ல முறையில் காப்பாற்றி வைத்துள்ளன.குறிப்பாக ஹாட்ஸ்டார் நிறுவனம் மற்றும் Cinema Limitless செய்துள்ள/செய்துவரும்  பணி மகத்தானது.பெரும்பாலான மலையாள கிளாசிக் படங்களை தரமாக சப்டைட்டில் சேர்த்து(இது என்னை பொறுத்தளவில் மிக முக்கியம்.காரணம் சாதாரணமாக இப்படங்கள் சப்டைட்டில் இல்லாமல் யூட்யூபில் கிடைக்கின்றன)வெளியிடுகின்றன.
   இப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற தீராத எண்ணம் பல வருடங்களாக  இருந்தாலும் சப்டைட்டில் இல்லை என்பதால்  இப்படத்தை இதுவரைக்கும் பார்க்க இயலவில்லை.
      ஐயப்பன் எனும் மேடை நாடக/நடன நிகழ்ச்சிகளுக்கு தபேலா வாசிப்பவர் காணாமல் போகிறார்.அவனுக்கு என்ன நேர்ந்தது?கொலை செய்யப்பட்டானா?அப்படியென்றால் அதை செய்தது யார்?கொல்லவேண்டிய காரணம் என்ன?என்பதை ஆராய்வதே படம்.
        “ஓ!இது மற்றுமொரு whodunit ஆ?” என்று கேட்டால் இல்லை.அதையும் தாண்டிய ஒரு பரிமாணம் இப்படத்திற்கு உள்ளது.வெறும் கொலையாளி யார் என்று கூறி பார்வையாளனை அதிர வைப்பதல்ல இப்படத்தின் நோக்கம்.இன்னும் சொல்லப்போனால் யார் கொலையாளி என்று இறுதியில் காட்டப்படும்போது நமக்கு பெரிதாக அதிர்ச்சி எதுவும் ஏற்படுவதில்லை.உண்மையில் அத்தகைய அதிர்ச்சியை உண்டாக்குவதல்ல இயக்குனரின் நோக்கம்.
   படத்தின் ஆன்மாவாக இருப்பது மேடை நாடக குழு ஒன்றின் வாழ்க்கை,அவர்களது எதிர்பார்ப்பு- ஏமாற்றங்கள், ஒத்திகை பார்ப்பது,ஒவ்வொரு ஊராக பயணிப்பது,ரத்தசொந்தம்-நட்பு போன்றவை இல்லாவிட்டாலும் மேடை நாடக நடிகர்கள் என்ற அந்த ஒரு மெல்லிய இழையால் பின்னப்பட்டவர்கள்.
     ஏதோ சினிமா நடிகர்கள் போல லட்சக்கணக்கில் அல்ல ஏன்  ஆயிரக்கணக்கில் கூட அவர்களால் சம்பாதிக்க முடியாது.சில நூறுகள் ஐம்பதுகள் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும்.இருந்தாலும் அவர்கள் அதை செய்கிறார்கள்.பெரிய புகழெல்லாம் கூட கிடைக்காது. இருந்தாலும் நாடகம் நடத்துகிறார்கள்.
   நடிகர்களுக்குள் பல்வேறு பிரச்சனைகள் சண்டைகள் இருந்தாலும் நாடகம் நடந்துகொண்டே இருக்கிறது.துவக்கத்தில் ஐயப்பன் வராதபோதும் நாடகம் நடக்கிறது.பிறகு வேறொருவர் வந்து தபேலா வாசிக்கிறார்.ஒரு நடிகை திருமணம் புரிந்து துபாய் செல்லவிருக்க அவள் இடத்தில்  இன்னொருத்தி என்று நாடகம் எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் நிறுத்தப்படுவதில்லை.
   அதனாலேயே ஐயப்பன் காணாமல் போய் இருவாரங்களுக்கு யாருமே பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.பிறகு சக நாடக நடிகர்களின் வற்புறுத்தலால் குழுவின் தலைவர் வக்கச்சன் (திலகன்) போலீசில் புகார் தருகிறார்.அதன்பிறகு காவல் அதிகாரி ஜேக்கப் (மம்மூட்டி) இவ்வழக்கை விசாரிக்கிறார். 
     இதன்பிறகு வந்த பல படங்களில் மம்மூட்டி இதுமாதிரியான வேடத்தில் நடித்துள்ளார்.அதில் சிலவற்றை பார்த்துள்ளேன்.உண்மை(Truth) படம் ஒரு உதாரணம்.இருந்தாலும் இதில் அவர் ஒரு ஹீரோ வேடத்தில் மையமாக அல்லாமல் படத்தை முன்னகர்த்தும் ஒரு முக்கிய கேரக்டராக மட்டுமே வருகிறார்.
     படத்தின் முக்கிய அச்சாணி போல வருபவர் ஐயப்பன்(பரத் கோபி).இந்த கேரக்டர்ல நடிக்க அவர் தபேலா வாசிக்க கற்றுக்கொண்டார் என்று படித்தேன்.அதை காட்சியில் காண முடிகிறது.வெறுமனே மண்டையை ஆவேசமா ஆட்டியபடி வரட்டி தட்டும் பாவனைகள் எதையும் இப்படத்தில் அவர் தபேலா வாசிக்கும் காட்சியின் எந்நொடியிலும்  காண முடியாது.
  இவர் ஒரு பேட்டியில் “நடிகன் என்பவன் ஒரு கேரக்டர் என்ற அந்த வரைமுறைக்குள் நுழைந்து நடிக்க வேண்டுமே ஒழிய தன்னில் அந்த கேரக்டரின் வரைமுறையை உருவாக்கி நடித்தால் அந்த நடிகன் என்பவனே திரையில் தெரிவான்.”
    பரத்கோபி நடித்த படம் பார்ப்பது இதுவே முதன்முறை.இவரிடம் கண்டது spontaneity .ஒரு அறைக்குள் நுழைகிறார் என்றால் 'இந்த குறிப்பிட்ட இடத்தில் அந்த கேரக்டர் நிக்கும்.அதை நோக்கி நமது நடை அமைய வேண்டும்' என்றெல்லாம் அவர் திட்டமிடுவதில்லை.அப்படியே வேகமாக நுழைகிறார் அதன்பின் நிகழ்வது முற்றிலும் தன்னியல்பான எதிர்வினையே! 
   இப்படத்தில் பெண்பித்தனாக குடிகாரனாக அதேநேரம் தபேலா வாசிப்பதில் கை தேர்ந்த ஒரு கலைஞனாக என்று பல்வேறு பரிமாணங்கள்.ஐயப்பன் கேரக்டரே ஒரு மர்மமாகத்தான் படத்தில் காட்டப்பட்டுள்ளது.இங்கிருந்த ஐயப்பன் ஏதோ லக்னோ சென்றதாகவும் பதினைந்து வருடம் கழித்து திரும்பியபோது தபேலா வாசிப்பில் கைதேர்ந்தவனாக திரும்பியதாக கூறப்படுகிறது.அதோடு அல்லாமல் அங்கே ஒரு மனைவியை கைவிட்டுவிட்டு கேரளம் வந்து இங்கே ஒரு மனைவி பதின்ம வயது மகன் விஷ்ணு (அசோகன்) சகிதம் வாழ்வதாக காட்டப்படுகிறான்.அதோடு எங்கு சென்றாலும் அங்குள்ள பெண்களை தன்வயப்படுத்திவிடுபனாகவும் காட்டப்படுகிறார்.
        எந்நேரமும்  குடி&பெண்கள்!இதேபோன்ற இன்னொரு  பெண் பித்தனும் அதே நாடக குழுவில் உண்டு. பாலகோபாலன்(நெடுமுடி வேணு).


ஆனால் அவரின் பெண் பித்து என்பது வேறு.வெறுமனே படுக்கைக்கு அழைத்தோ நிர்பந்தத்தின் பேரில் மனைவியாக்கிக்கொள்ளும் தன்மையோ இல்லாது அனைத்து இளம் பெண்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து நல்ல பேர் வாங்கி கொள்ளுதல்.அதன்மூலம் ஏதேனும் ஆதாயம்(!!??) பெற முடிந்தால் சரி.இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பாலகோபாலன் பலவந்தம் செய்யாத பெண் பித்தன்!
    இப்படி படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டருமே ஒரு தனித்தன்மையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.திலகன் மேடை நாடகத்தில் அந்த காலகட்டத்திலும் ஆக்டிவ்வாக நடித்து கொண்டிருந்தவர் என்பதால் அந்த கேரக்டருக்கு அவர் நியாயம் செய்ய முடிந்துள்ளது.

அதுமட்டுமல்லாது படத்தில் வரும் மேடை நாடக காட்சியில் அந்த சிகப்பு திரைச்சீலை அவர் தனது நிஜ  நாடக குழுவில் இருந்து கொண்டுவந்ததாம்.யவனிக என்றால் திரைச்சீலை!இதே தலைப்பில் ஓவியர் ஜீவா அவர்கள் ஒரு புத்தகம் எழுதி தேசிய விருது பெற்றார்(அதிலும் இப்படத்தை பற்றி எழுதியிருப்பார்)
     உண்மையில் படத்தில் என்னை கவர்ந்தது யதார்த்தம்.இந்த வார்த்தையை பயன்படுத்தவே பயமாக உள்ளது.யதார்த்தம்-யதார்த்த சினிமா கலைப்படம் என்றெல்லாம் இப்போது தமிழில் ஏதேதோ செய்து பயமுறுத்தும் நிலையில் இவ்வார்த்தை கடும் ஒவ்வாமையை தந்தாலும் இந்த வார்த்தையே இங்கே பொருந்தி வருவதால் வேற வழியில்ல.படத்தின் துவக்கத்தில் அந்த நாடக குழு வேனில் ஏறி நாடகம் போட வேறொரு ஊருக்கு செல்வதாக துவங்குவதும் படம் முடியும் போதும் அதே போல வேனில் ஏறி சொந்த ஊருக்கு செல்வதாகவும் முடிகிறது.இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த குழுவினரோடு நமக்கே நெருங்கிய பரிச்சயம் உண்டாகிவிட்ட ஒரு உணர்வு.அதை சரியாக வார்த்தைகளில் கொண்டுவரவே முடியாது.ஆனால் உணர்வுகளில் கொண்டுவந்துவிட்டார்கள்!