Sunday, 9 January 2022
கோலிவுட் ரவுண்டப்-6.0
பிவகுமார் வீட்டுக்கு முன்ஜாக்கிரதையாக ஹெல்மெட் மாட்டிக்கொண்டு சென்றோம்!வழக்கம்போல "செல்போனை குடுத்துட்டு போ ராஜா..ஆ." ஒரு குரல் கேட்க பம்மியபடி அவர் கையில் மொபைலை கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம்.பாதை மூன்றாக பிரிய எந்த வழியில் போகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது கிலோ கணக்கில் பழைய பேப்பர்களை சுமந்தபடி பத்து பணியாட்கள் செல்ல நாமும் ஆர்வத்தோடு அவர்களை பின்தொடர்ந்தோம்.
"...ம்ம்...ஹூம்..வேணாம்!..இன்னும் நல்ல ஹெவி சம்பவமா எடு!"
"ஐயோ!அவங்க பீரியட்ல நடந்ததா?அப்போ வேணாம்...இவிங்க பீரியடை மட்டும் தேடுங்க போதும்"
என்று குரலை பின்தொடர்ந்தால் அங்கே கூர்யா நின்றபடி தனது உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டுக்கொண்டிருந்தார்!
"ண்ணா வணக்கமுங்க" என்று பம்மியபடி வணங்கி ஒரு மூலையில் சென்று நின்றோம்.
"நல்லா முற்போக்கு புரட்சி பொதுவுடைமைன்னு கேமராவ பாத்து ஆவேசமா பேசுறாப்ல சப்ஜக்ட் இருக்கணும்!அதுக்கு தகுந்தமாதிரி செய்தியை தேடி எடுங்க"
நாம் அமைதிகாக்க கவுண்டர் சும்மா இல்லாமல் "அண்ணா ஒரு சந்தேகம்"
"ம்.நானே பிஸியா இருக்கேன்.சரி கேளுங்க"
"படத்துல பொதுவுடமை கார்ப்பரேட் ஒழிப்புன்னு பேசுறீங்க.ஆனா அந்த படத்தையே நீங்க பொதிகை டிவிக்கு குடுக்காம எதுக்கு தனியார் சேனலுக்கும் தனியார் பெருநிறுவனத்துக்கும் கொடுக்குறீங்க?"
"இவனுங்க இம்சை தாங்கல" என்ற மைன்ட் வாய்ஸ் நமக்கு சத்தமாகவே கேட்டாலும் ஒன்றும் கேட்காதபடி முகத்தை வைத்துக்கொண்டு அவரையே பார்க்க
"து....வந்து.....அது .....நிச்சயமா....சத்தியமா..."
"அண்ணா கேள்விக்கு பதிலை சொல்லுங்கன்னா உங்க டிரேட்மார்க் வசனத்தை சொல்லி பம்முரீங்களே!"
"வந்துடுச்சு" இது உதவியாளர்
"டேய் வந்துடுச்சுன்னா வெளிய போயிட்டு வா.பழைய பேப்பர் நினைப்புல இங்கையே ....கூர்யா கவுண்டரை பார்த்து முறைக்க .......இல்ல..இங்கையே படிச்சத சொல்லுன்னு சொல்ல வந்தேன்"
"***2 ல ஒரு சம்பவம் நடந்திருக்கு...என்று பேப்பரை காட்ட "ம் என்றபடி கூர்யா அதை படித்துக்கொண்டிருக்க கவுண்டர் சும்மா இல்லாமல் மீண்டும் "அண்ணா இன்னொரு சந்தேகம்"
"படத்துக்கு துளு மொழில தலைப்பு வக்குறீங்க.ஆனா படத்துல யாராவது துளு மொழில பேசுனா பளார்னு அறை உடுறீங்க!இது எப்படிங் "
"அதுவா! அவன்கிட்ட ஏன் கேக்குற?என்னை கேளு" என்றபடி பிவகுமார் வேகமாக வர
"ஐயோ சாமீ!எஸ்கேப்" என்றபடி கவுண்டர் ஜூட் விட நாமும் பின்னாலேயே அப்பீட் ஆனோம்!
*******************************************************************************
அடுத்து அஜய் கேதுபதி!அவர் ஒரே நாளில் நூறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதை அறிந்து எங்கு சென்று அவரை சந்திப்பது என்ற குழப்பத்தில் நடந்துகொண்டிருந்தபோது "ஐயோ!" "கலத்கா மத் கர்" "சம்பேஸ்தானு" "எள்ளி நோடுத்தர" என்ற அதட்டல் குரல்கள் கேட்க செட்டுக்குள் நுழைந்தால் நெற்றிமாறன் இயக்கம் கிடுதலை ஸ்பாட்.வழக்கம்போல நாலு ஜிம்பாய்ஸ் நடுவில் ஜட்டியுடன் தலைகீழாக தொங்கி கொடிருக்கும் ஆசாமியை வெளுத்துக்கொண்டிருக்க பக்கத்தில் கூரி "Dhis ish dhe dreatmend par nad delling dhe drudh" என்று பேசியபடி நடுநாயகமாக தடியுடன் அஜய் கேதுபதியை வெளுக்க
நெற்றிமாறன் வழக்கம்போல "அப்படித்தான்!நெஞ்சுல மிதிலே!விலாவுல குத்துலே!போன தடவையும் ஆஸ்கர் மிஸ்ஸாகிட்டு!இந்த தபா உடமாட்டேன்" என்று கத்த நடுவில் யார் தொங்குவது என்று கூர்ந்து நோக்கினால் அஜய் கேதுபதி!ப்பா!என்றபடி நாம் அங்கிருந்து எஸ்கேப் ஆனோம்!
********************************************************************************
நூறு பைக்குகள் குறுக்கும் மறுக்குமாக போய்க்கொண்டிருக்க நடுநாயகமாக "படம் ரிலீஸாகும் வரை ஒற்றை டயரில் பைக்கை இடைவிடாமல் ஓட்டி பெட்ரோலை காலி செய்யும் போராட்டம்" என்று சிலர் கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர்!புரிந்தபடி நாம் வெளியேறினோம்!( கவுந்தியடிகள் மேற்கோள் எதுவும் அங்கே இல்லையா?- கும்மாங்கோ)
********************************************************************************
அடுத்து குஜை நடிக்கும் "ஃபீஸ்ட்".
டேபிள் நிறைய சாப்பாட்டு ஐட்டங்கள் இருக்க அதை தொடாமல் ஒரு ஓரத்தில் அமர்ந்தபடி அரை இட்லியை மெதுவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார் குஜை.பக்கத்தில் இயக்குனர் பல்சன்."அண்ணா ஒப்பனிங் சீனே நீங்க அப்படியே பத்து ஃபுல் அடிச்சிட்டு டேபிள் முழுக்க இருந்த ஐட்டங்களை முழுங்கிட்டு அப்படியே காஜ்பிரண் கணக்கா ரத்தம் சொட்டும் ஆட்டுத்தொடை எலும்பை வாயில் கவ்வியபடி ஆவேசமாக கேமராவை பாக்குறீங்க.பக்கத்தில் நூறு அடியாளுங்க அடிவாங்கி மயக்கத்தில் இருக்க "ஐ ஆம் கமிங்" என்று ஃபேஸ்டைமில் வில்லனுக்கு சவால் விடுறீங்க.அங்க டைட்டில் போடுறோம்! "ஃபீஸ்ட்"...
..."ம்ம்....சூப்பர்!அப்படியே டாப் கியர்ல போட்டு தூக்கு"
"வில்லன் க்ரூப் காலேஜ் பசங்களுக்கு ட்ரக் சப்ளை பண்ணுது.நீங்கள் காலேஜ் ப்ரொபசர்.ஆனா லுங்கி கட் பனியனோடுதான் காலேஜ் போறீங்க!"
"யோவ் போன படத்தையே திரும்ப சொல்லாத!வேற வேற!"
"வில்லன் க்ரூப் ஒரு மெடிக்கல் மாபியா...நீங்க ஒரு..."
"கம்பவுண்டரா??யோவ் முன்னாடி என்னோட முந்தைய படத்த சொன்ன!இப்ப உன்னோட முந்தைய படமா?...வேற..வேற..."
"வில்லன் க்ரூப் விக்குக்குள்ள போதைப்பொருள் வச்சி கடத்துறாங்க...நீங்க ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட்!ஒரு நாளைக்கு ஒரு விஐபி கஸ்டமருக்கு ஹேர் ஸ்டைலிங் பண்றப்போ அந்த விக்குல கொஞ்சம் போதைப்பொருள் இருப்பதை ஸ்மெல் பண்றீங்க.அப்படியே அதோட பின்னணியை ஆராய ஒரு விக் விக்கும் கடைக்கு போறீங்க.அங்க உள்ள தடியனுங்க எக்குதப்பா பதில் சொல்ல வில்லன் க்ரூப்புக்கும் உங்களுக்கும் மோதல்.அப்புறம் நான் சொன்ன அந்த ஒப்பனிங் ஸீன்.."
"ம்ம்...ஓகே.மேல போ"
********************************************************************************
அடுத்து கோயஸ் பார்டன் சென்றோம்!மகா அமைதி நிலவ கேட்டை திறந்து உள்ளே சென்றால் நான்கு இயக்குனர்கள், ஒரு போஸ்ட்மேன், ஒரு வாட்ச்மேன் கதை சொல்ல வரிசையில் காத்திருந்தனர்."ஓவர் தன்னடக்கம் உடம்புக்கு ஆவாது" என்றபடி நாமும் சோபாவில் ஒரு ஓரத்தில் அமர்ந்தோம்!
கஜினி வந்தார்."அட என்னப்பா நீ?கைய வேற கால வேற தனித்தனியா தூக்கிட்டு இருப்பியா?" என்று கவுன்டர் அடிக்க கஜினி அவரை கண்டுகொள்ளாமல் "ம்ம்....கடைசி .....ம்ம்...எத்தனை படமோ!எல்லாம் பப்படம்!கதை சும்மா நச்சுன்னு இருக்கணும்.நீ சொல்லு"
இயக்குனர் பிவா " ஸார் ஓப்பன் பண்ணா கொல்கத்தா!அங்க நீங்க கையில வெட்டருவாவோட ஆவேசமா நிக்குறீங்க!பக்கத்துல உங்க தங்காச்சி"
கஜினி பெரிய கும்பிடு போட்டபடி "நீ கிளம்பு ராசா" என்று அடுத்து போஸ்ட்மேனை அழைக்க...
"தலைவா ஓப்பன் பண்ணா நீங்க ஸ்கூல் வாசல்ல நிக்குறீங்க .அப்படியே உங்க மகள் கேரக்டர் ஓடிவந்து "டாடீ" என்று கட்டியணைக்க வர உங்கள் மனைவி கேரக்டரான டென்தாரா மகளை புடிச்சி இழுத்துட்டு போக நீங்க கண்ணீர் தளும்ப உங்க மகளை பாக்க ...."
"இது அந்த பிவா உன்னை சொல்ல சொல்லி குடுத்த கதைதான?" என்று கஜினி கேட்க...
"து....அது...வந்து.."
"கிளம்புங்க!நெக்ஸ்ட்"
"ஓப்பன் பண்ணா உங்களுக்கு ஒரு பேத்தி...அவ மேல உயிரா இருக்கீங்க.."
"அவுட்!பொண்டாட்டி தங்காச்சி பொண்ணு பேத்தின்னு யாராவது சொல்றதா இருந்தா இப்பவே கிளம்புங்க" என்று கும்பிட அனைவரும் அப்ஸ்காண்ட்!
கவுண்டர் சும்மா இல்லாமல் "அண்ணா! அல்லக்கைங்கல நாலு அப்பு அப்புங்க!எப்ப பாத்தாலும் "'எங்கேயோ கேட்ட ஓலம் ,கள்ளும் மலரும்' படங்கள்ல ஒரு மகாநடிகன் தெரியுறான்"னு உசுப்பிவிட்டத நம்பி நீங்களும் செண்டிமெண்ட் படமா நடிச்சி தள்ளுறீங்க!இதுல சில ஒலக விமர்சகனுங்க சமிதாப் ரேஞ்சுக்கு நீங்களும் நடிக்கணும்னு சொல்லிட்டு திரியுறான்!அப்படி சொல்றவன் ஒருத்தனை புடிச்சி படம் எடுக்க சொன்னீங்கன்னா அதுக்கப்புறம் ஒருபய இப்படி உசுப்பேத்த மாட்டான்!வரட்டுங்களா!" என்றபடி வெளியேற நாமும் வெளியேறினோம்!
**************************************************************************
அடுத்து லோகநாயக்கடு நடிக்கும் பிக்ரம் பட ஸ்பாட்.கும்மிருட்டில் கம்பேனி ஆர்டிஸ்ட் சூழ லோகநாயக்கடு நின்று கொண்டிருக்க அருகில் போகேஷ்."ஆண்டவரே அப்படியே டபார் டபார்னு எதிரி க்ரூப் ஷூட் பண்ணிகிட்டே முன்னேறி வரான்.உங்க சைடு ஆளுங்களால கண்ட்ரோல் பண்ண முடியல!என்னடா பண்ண போறோம் என்று அங்கலாய்க்க அப்படியே நீங்க என்ட்ரி குடுக்குறீங்க.கைல வெறும் தகடை புடிச்சிகிட்டு முன்னேற எதிரிகள் சுட குண்டுகள் அப்படியே தெறிச்சி விழ...பிக்ராம் என்று உங்களின் பின்னணி குரலில் அப்படியே என்ட்ரி குடுத்து தகட்டை தூக்கி போட்டுட்டு எதிரிகளை நோக்கி சுடுறீங்க.
கவுண்டர் வழக்கம்போல "அண்ணா ஒரு சந்தேகம்"
"வெல் இவுரா?யாருப்பா உள்ள உட்டது" என்ற முகபாவத்தை கஷ்டப்பட்டு கண்ட்ரோல் செய்துகொண்டு "ம்ம்..கேளுங்க"
"சுடுறவன் தகட்டு மேலேயேதான் சுடுவானா?ரெண்டு இன்ச் கீழ சுட்டா முட்டிக்கால் தெரிச்சிடுமே.அப்புறம் கபாலம்!"
"அதெல்லாம் தெரிஞ்சவன எங்க படத்துல வில்லனா இருக்க உட மாட்டோமில்ல" என்றால் பிமல்.
"ஆமா!படம் முழுக்க உங்க புகழ் பாடுறா மாதிரி தான கேரக்டரை செட் பண்ணுவீங்க!"
"அப்புறம் அந்த கிண்டியன் படம் என்னங்க ஆச்சு?"
"வெல்!ஆ!கிண்டியன் வருமா வராதா?என்ற கேள்விக்கு வரும் வராது என்று பைனரியில் சொல்ல இயலாது.வரலாம்!வந்தும் வராமல் போகலாம்!வராமலும் வரலாம்!அப்படியே வந்தாலும்..."
"பப்படம் ஆகலாம்!" என்று கவுன்டர் அடிக்க பிமல் முறைக்க நாம் எஸ்கேப்!