Friday, 27 May 2022

விஜயகாந்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும்

                     தலைப்பை படித்ததுமே நமுட்டு சிரிப்பு/அட ஆமால்ல! என்ற எண்ணம் வந்தால் நாம் வியப்படைய மாட்டோம்! காரணம் மீடியா மற்றும் தமிழ் சினிமாவை சார்ந்த சில நடிகர்களே. மறைந்த பத்திரிக்கையாளர் ஞாநி ஒருமுறை "அரசியல்ல punching bag ஆக விஜயகாந்த்தை திட்டமிட்டே மாற்றிவிட்டனர்" என்றார்.ஒருவகையில் சினிமாவிலுமே அது நடந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

                  என்னமோ விஜயகாந்த் நடித்த நூற்று அறுபத்து சொச்சம் படங்களிலுமே கையில் துப்பாக்கியுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழித்துக்கொண்டிருந்தார் என்பதுமாதிரியான ஒரு பிம்பம் உண்மையா என்று பார்ப்போம்! விஜயகாந்த் நாயகனாக நடித்த சட்டம் ஒரு இருட்டறை  துவங்கி இறுதியாக அவர் நடித்த விருதகிரி வரையில் கிட்டத்தட்ட 90% படங்களை திரையரங்கில் பார்த்த வகையில் நம்மால் சில விஷயங்களை உறுதியாக கூற முடியும். பாகிஸ்தான் தீவிரவாதிகளை விஜயகாந்த் அழிக்கும் வகையிலான படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

                                -தாயகம் படம்தான் அதற்கு ஆரம்பம்.அதில் மன்சூர் அலிகான் கேரக்டர் (வினோதமான மேக்கப்பில்) காஷ்மீரை தனியாக பிரிக்க சில சதிவேலைகள் செய்வார்.அதை கேப்புடன் தடுப்பதாக கதை செல்லும். 

-பிறகு எல்லாரும் troll செய்யும் முதல் படமான வல்லரசு.வாசிம் கானை பிடிக்க கேப்புடன் மேற்கொள்ளும் முயற்சிகள் பிடித்த பின்னர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் உள்நாட்டிலேயே இருக்கும் துரோகிகள் என்பதாக கதை செல்லும்.

-அடுத்தது மிக அதிகமாக troll செய்யப்பட்ட கேப்புடன் படம் என்ற பெயரை பெற்ற நரசிம்மா.அதில் பாகிஸ்தான் எல்லையில் இருந்தபடி இங்கே சதிவேலை செய்வோரை கண்டுபிடித்து அழிப்பதாக கதை செல்லும்.இதில் வரும் சில சாகச காட்சிகள்(கரண்ட் ஷாக் கொடுக்கும் காட்சி) சமூக வலைதளங்கள் வளர ஆரம்பித்தபோது அதிகமாக troll செய்ய பயன்பட்டன.இதைவிட பல சாகச காட்சிகளில் ரஜினி(ஊர்க்காவலன் காலில் கயிறு கட்டி எதிர்முனையில் ஜீப் நகர மறுக்கும் காட்சி சிறு உதாரணம்) கமல்(விக்ரம் படத்தில் ஆகாயத்தில் இருந்து விழும் கமல் டிம்பிள் கபாடியாவை லாவகமாக பிடித்து தரை இறங்கும் காட்சி) போன்றோர் நடித்திருந்தாலும் ஏதோ விஜயகாந்த் மட்டுமே இப்படியெல்லாம் செய்வதாக ஒரு பொய் பிம்பம் வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டது.

நமக்கு கேப்புடன் பட சண்டைக்காட்சிகளின் தரம் வீழ்ந்தது பற்றி கடும் விமர்சனங்கள் உண்டு.புலன் விசாரணை, மாநகர காவல், கேப்டன் பிரபாகரன், கருப்பு நிலா, ஆனஸ்ட்ராஜ் ,சத்ரியன்...etc..etc.., என்று அற்புதமான- யதார்த்தமான- உக்கிரமான சண்டைக்காட்சிகள் கொண்ட கேப்புடன் படங்கள் எத்தனையோ உண்டு.

 


               ஆனால் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் (அலெக்சாண்டருக்கு பிறகு) அதிகமாக ரோப் ஷாட்களை வைக்க ஆரம்பித்தார் கேப்புடன். சமந்தமே இல்லாமல் காற்றில் பறப்பது(ராஜ்ஜியம் பட கிளைமேக்ஸ்) மீசையை சுண்டி விட்டதும் எதிரிகள் பறந்து போய் தூர விழுவது மாதிரியான காட்சிகள் இடம்பெற்றதை மறுக்கவில்லை.ஆனால் அதே காலகட்டத்தில் வந்த மற்ற ஹீரோக்கள் படங்களிலும் அதே அளவு சாகசங்கள் இருந்தன.அஜீத் விஜய் போன்றோர் படங்களிலும் இன்றுவரையில் அதுபோன்ற காட்சிகள் உண்டு.ஆனால் அவர்கள் என்றும் கேப்புடன் ஆரம்ப காலங்களில் நடித்த அளவுக்கு உக்கிரமான சண்டை காட்சிகளில் நடித்தவர்களில்லை! 

                                 இன்று விஷால் சண்டைக்காட்சியில் நடித்தபோது "முழங்கையில் லேசான கீறல்" என்பதையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்  அங்கலாய்த்து பேசும் நிலைதான் உள்ளது.கேப்டன் பிரபாகரன் சண்டைக்காட்சி படமாக்கலின் போது கை மூட்டு கழண்டு போன கேப்புடன் பற்றியோ கருப்பு நிலா படத்தில் ரோப் எதுவும் இல்லாமலே பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து தொங்கியபடி நடித்ததையோ எவரும் பேசியதில்லை. 

                                          ஒரு பழைய ஸ்டன்ட் மாஸ்டரை பேட்டி எடுத்தாலும் "நீங்க ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் ,கமலுடன் பணியாற்றிய அனுபவம்" என்றுதான் கேட்பார்களே தவிர கேப்புடனுடன் பணியாற்றிய அனுபவங்கள் அவர் எதிர்கொண்ட விபத்துகள் எலும்பு முறிவுகள் பற்றியெல்லாம் எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.அதற்கு ஏற்கெனவே உண்டாக்கி வைத்த ஒரு பொதுபிம்பம் தடையாக உள்ளதை மறுக்க முடியாது. இதில் அபத்தத்தின் உச்சம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தனது படத்தில் தொடர்ந்து தீவிரவாதியாக காட்டியதால் அந்த சாபத்தால் இன்று கேப்புடன் உடல் நலிந்து போய்விட்டாராம்.என்ன அபத்தம் இது?ஒரு பொய்யான பொதுபிம்பம் கட்டமைப்பதால் எந்தளவு வக்கிரமான கருத்துக்கள் வருகிறது என்பதை ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

                                                 இதில் மற்றொரு குற்றவாளி சினிமா துறை சார்ந்த சில நடிகர்களே!! விவேக் காமெடிகளில் தொடர்ந்து கேப்புடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடிப்பதையே வேலையாக கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை தனது வசனங்கள் மூலம் மக்கள் மத்தியில் பதிய வைத்தார்(விஸ்வநாதன் ராமமூர்த்தி,அலை போன்று பல படக்காட்சிகளை சொல்லலாம்). 

                         சத்யராஜ் மகாநடிகன் படத்திலும் "ஆத்தா ஆடு வளர்த்துச்சு கோழி வளர்த்துச்சு நாய் வளர்க்கல.ஏன்னா அதை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுடுவாங்க" என்று கேப்புடனை மிமிக்ரி செய்து பேசி இருப்பார். 

                            தமிழ் படம் 2 இல் வாசிம் கான் என்ற பேருக்கு வக்காலத்து வாங்கும் காட்சி வைக்கப்பட்டது. 

 மேலும் சினிமா துறையில் பல பத்தாண்டுகள் பழம் தின்று கொட்டை போட்டதாக சொல்லப்படும் தமிழ் டாக்கீஸ் மாறன் போன்றவர்களும் தீவிரவாதிகள் வரும் தற்கால தமிழ் சினிமா விமர்சனம் செய்யும்போது போகிற போக்கில் "இதெல்லாம் ஏற்கெனவே விஜயகாந்த் அர்ஜுன் அடிச்சு துவைச்ச கதை தான்" என்று அடிச்சு விடுவதும் நடந்து வருகிறது .

                          உண்மையில் இம்மாதிரியான அபத்த காட்சியமைப்புகள் வசனங்கள் குற்றச்சாட்டுக்கள் போன்றவைகளுக்கு கேப்புடனோ அல்லது அவர் சார்ந்தவர்களோ என்றுமே மறுத்து அறிக்கையோ பேட்டியோ கொடுக்கவே இல்லை என்பது இந்த வதந்தி மன்னர்களுக்கு வசதியாக போய்விட்டது! இதேபோன்று ஊடகங்களால் ஒரு பொதுபிம்பம் மேலே திணிக்கப்பட்ட மற்றொரு நடிகர் ராமராஜன்.அவர் பற்றி முன்பு எழுதிய பதிவு இதோ

 

                இறுதியாகதிரையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை காட்டினால் இங்கு கொந்தளிக்கும் சிலரின் கவனத்திற்காக ஒரு கொசுறு தகவல்:

          பாகிஸ்தானில் அப்துஸ் ஸலாம் என்ற பேரில் ஒரு இயற்பியல் விஞ்ஞானி இருந்தார்.அவரின் பெரும் பங்களிப்பிற்காக அவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.1996 இல் அவர் இறந்தபிறகு அவரது கல்லறையில் "the first Muslim Nobel laureate"என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.ஆனால் அவர் அஹமதியா பிரிவை சார்ந்தவர் என்பதால் அவரை இசுலாமியர் என்று ஏற்றுக்கொள்ளாத   மாற்றுப்பிரிவை சார்ந்தவர்கள் கல்லறையில்  இருந்த 'முஸ்லிம்' என்ற வார்த்தையை அழித்துவிட கல்லறையில் மிஞ்சிய வாசகம் "the first  Nobel laureate" என்பதே!

        

Sunday, 22 May 2022

The Batman (2022)

                          தற்கால படங்களை ,அது எந்த மொழிப்பாடமாக இருந்தாலும் சரி பெரும் எச்சரிக்கை உணர்வுடனேயே பார்ப்பதா வேண்டாமா? என்ற முடிவை எடுக்க வேண்டியுள்ளது.பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாக நாம் கருதுவது Woke narrative . இந்த woke narrative நேரடியாக படம் முழுக்க விரவிக்கிடப்பதும் உண்டு.இவை எவ்வளவோ மேல்.நாம் ஒதுங்கி செல்ல முடியும்.ஆனால் ஒரு சாதாரண கதை சொல்லல் என்பதாக ஆரம்பித்து மிக லாவகமாக woke சமாச்சாரங்களை காட்சிகள்- காட்சியின் பின்னணி அமைப்புகள் (தமிழ் சினிமா இதற்கு மிக பிரசித்தம்!)-பாடல் வரிகள்-கதாபாத்திர வடிவமைப்பு என்று பலவிதங்களில் நைச்சியமாக வோக்கிசமை உள்ளே திணிப்பார்கள். ஆனால் இப்படத்தில் அப்படி எந்த woke narrative ம் இல்லை என்பதே பெரும் ஆறுதல்.அதைத்தாண்டி இப்படம் ஒருவகையில் old school வகையறா என்று ஒலக விமர்சகர்கள் சொல்லக்கூடும்.ஆனால் இதுபோன்ற சூப்பர் ஹீரோ படங்கள் அவ்வகையில் அமைவதே சாதாரண ரசிகனுக்கு திருப்தி அளிப்பதாய் அமையும்.
                           உதாரணமாக Wolverine வரிசையில் கடைசியில் வந்த படமான Logan படத்தை சொல்லலாம்!ரொம்பவும் உணர்வுப்பூர்வமாக ஒலக சினிமா மாதிரி எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டரை கிழடுதட்டி- தடி ஊனாத குறையாக காட்டி கடுப்பேற்றி இருந்தார்கள்.சூப்பர் ஹீரோ படங்கள் பார்ப்பதன் அடிப்படையே சாமானிய வாழ்வில் சாத்தியமில்லாத ஒரு செயலை ஹீரோ செய்யும் போது ஏற்படும் அந்த சிலிர்ப்பு/துள்ளல்/திருப்தி....etc.... உணர்வுகளுக்காக தான்!

அந்த வகையில் இப்படம் சூப்பர்ஹீரோ லாஜிக்கில் இருந்து பெரிதாக விலகாமல் எடுக்கப்பட்டுள்ளது.கொஞ்சம் விலகி இருக்கிறார்கள்.நோலன் பேட்மேன் சீரிஸ் எடுக்க ஆரம்பித்த போது பேட்மேன்- உணர்வு சிக்கல்களுக்கு ஆட்பட்ட- சாமானிய மனித பலகீனங்களுக்கு உட்பட்ட- ஒரு சாதாரண மனிதன் போலத்தான் என்று மெலிதாக போட்ட கோட்டை இதில் கொஞ்சம் பெரிதாக போட்டுள்ளார்கள். 

                                     உதாரணமாக பேட்மேன் மிக உயர கட்டிட உச்சியில் இருந்து குதிக்கும்போது batsuit ஒரு சிறு பாலத்தின் அடியில் சிக்கி ரோட்டில் தடுமாறி விழுவதாக ஒரு காட்சி வரும்.அதேபோல பட துவக்கத்தில் கொலையாகி இருக்கும் மேயரின் பிரேதத்தை ஆய்வு செய்ய பேட்மேன் வருவதற்கு அங்குள்ள காவல் அதிகாரி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.பிறகு ஜேம்ஸ் கோர்டன் சொல்கேட்டு அவர்கள் அமைதியாகிறார்கள்.ஆனால் இந்த விதிமீறல் காட்சிகள் இவ்வளவே!மற்றபடி ஒரு சூப்பர் ஹீரோ படத்தை போலவே செல்கிறது.

                                இதில் மற்றொரு மிக சிக்கலான விஷயம் ப்ரூஸ் வெய்னின் பெற்றோர்களை கொன்றது யார்?என்ற கேள்வி!ஒவ்வொரு படத்திலும்- சமீபத்தில் வந்த Gotham தொடரிலும் ஒவ்வொரு மாதிரி கொலையாளியை காட்டிக்கொள்கிறார்கள்.Batman Begins இல் ஒரு சாதாரண வழிப்பறி திருடன்,சில கதைகளில் அது ஜோக்கர்(பேட்மேன் கதாபாத்திரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான Bob Kane இதைத்தான் விரும்புகிறார்) என்றும் இந்த படத்தில் வேறொரு மாதிரியும் காட்டி உள்ளார்கள். இப்படத்தில் ப்ரூஸ் வேய்னின் பெற்றோர்களான தாமஸ் வெய்ன்-மார்த்தா வெய்ன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் பிற சினிமா/சீரிஸ்களை விடவும் முற்றிலும் வேறுமாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒருவித இருண்மையான வடிவமைப்பு. 

                                            Gotham தொடர் பார்த்து கொண்டிருக்கும் நிலையில் இடையில் இப்படத்தை பார்க்கும் போது சில குழப்பங்கள் எதிர்பார்த்தபடி வந்தன.Riddler கேரக்டர், ப்ரூஸ் வெய்ன் வயதை ஒத்த ஆளாக இதில் காட்டப்பட்டுள்ளார்.காதம் தொடரில் ப்ரூஸ் வெய்ன் சிறுவனாக இருந்த போது காதம் காவல் நிலையத்தில் தடயவியல் துறையில் பணியாற்றுபவராக ரிட்லர் காட்டப்பட்டிருப்பார்.இப்படத்தில் பெங்குயின் கதாபாத்திரத்துக்கு காதம் தொடரளவு முக்கியத்துவமான காட்சிகள் நிறைய இல்லை.ஆனால் படத்தில் முக்கிய திருப்பம் பெங்குயினால்தான் வருகிறது.

                           வெப்சீரிஸ் சினிமா இரண்டும் வெவ்வேறு அவகாசத்தில் பயணிக்கும் என்பதையும் இங்கே நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.சீரிஸில் கொஞ்சம் நிதானமாக கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து அவரவர் பின்னணிகளை தனித்தனி எபிசோடுகளாக காட்டலாம்.சினிமாவில் அதை செய்ய முடியாது. 

                                   படத்தில் அட்டகாசமான இரண்டு அம்சங்கள் இசை மற்றும் ஒளிப்பதிவு.படத்தை பார்ப்பதற்கு முன்பிலிருந்தே படத்தின் பின்னணி இசையை கேட்டு பழகியதால் படத்தின் தொனி இன்னதாக இருக்கும் என்பதை உணர்ந்து உடனே கதைக்குள் பயணிக்க முடிந்தது.குறிப்பாக Riddler கதாபாத்திரத்துக்கான தீம் . ஒளிப்பதிவு என்பது Arkham Asylum &Arkham City ஆகிய வீடியோ கேம்களை ஒத்து அமைக்கப்பட்டுள்ளது.படத்தில் ஒருவித பழுப்பு tone கதைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. 

                                  பேட்மேனின் உளவியல் சிக்கல்களை குழப்பங்களை மனப்பாரங்களை நோலன் ஏற்கெனவே ஓரளவு தொட்டிருந்தாலும் இதில் அதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மிக இருண்மையான தொனியில் எடுக்கப்பட்டது சிறப்பு. 

                                  இதில் பிடித்த விஷயங்கள் மேலும் சில. சாதரணமாக தற்கால படங்களில் கணினி சம்பந்தப்பட்ட காட்சிகளில் கணினியின் மானிட்டர் திரையில் க்ரீன் மேட் போட்டு பிறகு அதில் சம்மந்தமே இல்லாமல் ஏதேதோ கிராபிக்ஸ் சுழன்று கொண்டிருப்பதாக காட்டும் அபத்தம்(விவேகம் படத்தில் ஸ்பைடர் படத்தில் பார்த்தால் உங்களுக்கு புரியும்) இதில் இல்லை.மினிமலிஸ்ட்டிக் ஆக சாதாரண Line user interface மட்டுமே ரிட்லர் உடனான பேட்மேனின் கணினி உரையாடல் நிகழ்கிறது.ஏற்கெனவே ஜான் விக் படத்தில் அத்தகைய யுக்தி பிரமாதமாக இருந்தது.Keep it simple! 

                                   தவிர ப்ரூஸ் வெய்ன் பயன்படுத்தும் கார் ஒருவித எண்பதுகளின் எபெக்டை தருவது ;நோலன் படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட Batpod வடிவமைப்பு அதன் செயல்பாடுகள் இவை எல்லாம் படத்தில் ரொம்ப நுட்பமாக பார்த்து செய்திருந்ததால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் ஆகியுள்ளது.படத்தின் டைட்டில் டிசைன் நன்றாக இருந்தது.

                            ராபர்ட் பேட்டின்சன் டுவைலைட் என்ற படுசுமாரான படங்களின் நிழலில் இருந்து வெளியே வர கடுமையாக போராட வேண்டியிருந்தது.இப்போதும் அவரை ஒரு நல்ல நடிகர் என்று உலக விமர்சகர்கள் பலர் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அதில் அவரின் கதாபாத்திரம் எல்லாமே இதுவரை நன்றாக அமைந்து வந்துள்ளது.ஹாரி பாட்டர் மாயவலையில் இருந்து வெளியே வரமுடியாமல் இன்றுவரை தவிக்கும் டேனியல் ரேட்கிளிப் மாதிரியல்லாமல் இவர் டுவைலைட் மாய பிம்பத்தில் இருந்து எப்போதோ வெளியே வந்துவிட்டார்.

                                     காதம் என்பது ஒரு கற்பனை நகரம் என்று சொன்னாலும் இன்றைய உலகம் என்பதே ஒரு மாபெரும் காதம் போலத்தான் இருக்கிறது.படத்தில் மேயர் ,District Attorney காவல் ஆணையர் தொடங்கி அத்தனை அதிகார மட்டமும் புழுத்து நாறிக்கொண்டிருக்கிறது.அந்த அழிவை, பொய்களை, சீர்கேட்டை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தும் வேலையைத்தான் ரிட்லர் செய்வதாக கதை செல்கிறது.அதைத்தாண்டி அடுத்த மேயராக வரப்போகும் பெண் நல்லவராக காட்டப்படுகிறார்.சினிமாவிலாவது இப்படியான நல்ல அதிகார வட்டத்தை பார்க்க முடிகிறதே என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்! :D 

                                       நோலன் படங்களில் ஜேம்ஸ் கார்டன் கமிஷனர் ஆக இருப்பார்.இதில் லெப்டினென்ட் ஆக வருகிறார்.ஒருவகையில் இது காதம் தொடரின் கதைக்கும் நோலன் காட்டிய கதையின் காலகட்டத்திற்கும் இடைப்பட்டதாக நாம் காண்கிறோம்!காதம் தொடரில் கார்டன் ஒரு சாதாரண டிடெக்டிவ்.அப்போது ப்ரூஸ் வெய்ன் சிறுவனாக இருப்பான்.பட்லர் ஆக இருக்கும் அல்ப்ரெட் கதாபாத்திரத்துக்கு இப்படத்தில் பெரிய வேலையில்லை என்றாலும் செலினா கய்ல் எனும் கேட் வுமனுக்கு முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

                                       இப்படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது.இதையே பல விமர்சகர்கள் மிக நீளம் என்று அங்கலாய்த்திருப்பதை கண்டேன்.நம்மை பொறுத்தளவில் மூன்று மணி நேர படமோ அல்லது மூன்னூறு மணி நேர வெப் சீரிஸோ நீளம் முக்கியமல்ல!படம்/சீரிஸ் பார்க்கும்போது "என்னடா இது!இன்னும் எவ்வளவு நேரம் பாக்கி இருக்கு?" என்று பார்க்க வைக்காமல் இருப்பதே ஒரு இயக்குனருக்கு வெற்றி என்று கருதுகிறேன்.அவ்வகையில் நமக்கு இப்படம் நீளமாக தெரியவில்லை! 

                                        படம் முடியும் தருவாயில் ஆர்க்கம் அசைலமில் இருக்கும் ரிட்லர் உடன் இன்னொரு மிகப்பெரிய பேட்மேன் வில்லன் கதாபாத்திரமொன்றை காட்டுகிறார்கள்.அந்த கதாபாத்திரத்தை எப்படி வடிவமைக்க போகிறார்கள்.அதை வைத்துக்கொண்டு இரண்டாம் பாகத்தை எப்படி கொண்டுபோக போகிறார்கள் என்பதில்தான் இயக்குனர் மேட் ரீவ்ஸ்க்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

Sunday, 9 January 2022

கோலிவுட் ரவுண்டப்-6.0

பிவகுமார் வீட்டுக்கு முன்ஜாக்கிரதையாக ஹெல்மெட் மாட்டிக்கொண்டு சென்றோம்!வழக்கம்போல "செல்போனை குடுத்துட்டு போ ராஜா..ஆ." ஒரு குரல் கேட்க பம்மியபடி அவர் கையில் மொபைலை கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம்.பாதை மூன்றாக பிரிய எந்த வழியில் போகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது கிலோ கணக்கில் பழைய பேப்பர்களை சுமந்தபடி பத்து பணியாட்கள் செல்ல நாமும் ஆர்வத்தோடு அவர்களை பின்தொடர்ந்தோம். "...ம்ம்...ஹூம்..வேணாம்!..இன்னும் நல்ல ஹெவி சம்பவமா எடு!" "ஐயோ!அவங்க பீரியட்ல நடந்ததா?அப்போ வேணாம்...இவிங்க பீரியடை மட்டும் தேடுங்க போதும்" என்று குரலை பின்தொடர்ந்தால் அங்கே கூர்யா நின்றபடி தனது உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டுக்கொண்டிருந்தார்! "ண்ணா வணக்கமுங்க" என்று பம்மியபடி வணங்கி ஒரு மூலையில் சென்று நின்றோம். "நல்லா முற்போக்கு புரட்சி பொதுவுடைமைன்னு கேமராவ பாத்து ஆவேசமா பேசுறாப்ல சப்ஜக்ட் இருக்கணும்!அதுக்கு தகுந்தமாதிரி செய்தியை தேடி எடுங்க"
நாம் அமைதிகாக்க கவுண்டர் சும்மா இல்லாமல் "அண்ணா ஒரு சந்தேகம்" "ம்.நானே பிஸியா இருக்கேன்.சரி கேளுங்க" "படத்துல பொதுவுடமை கார்ப்பரேட் ஒழிப்புன்னு பேசுறீங்க.ஆனா அந்த படத்தையே நீங்க பொதிகை டிவிக்கு குடுக்காம எதுக்கு தனியார் சேனலுக்கும் தனியார் பெருநிறுவனத்துக்கும் கொடுக்குறீங்க?" "இவனுங்க இம்சை தாங்கல" என்ற மைன்ட் வாய்ஸ் நமக்கு சத்தமாகவே கேட்டாலும் ஒன்றும் கேட்காதபடி முகத்தை வைத்துக்கொண்டு அவரையே பார்க்க "து....வந்து.....அது .....நிச்சயமா....சத்தியமா..." "அண்ணா கேள்விக்கு பதிலை சொல்லுங்கன்னா உங்க டிரேட்மார்க் வசனத்தை சொல்லி பம்முரீங்களே!" "வந்துடுச்சு" இது உதவியாளர் "டேய் வந்துடுச்சுன்னா வெளிய போயிட்டு வா.பழைய பேப்பர் நினைப்புல இங்கையே ....கூர்யா கவுண்டரை பார்த்து முறைக்க .......இல்ல..இங்கையே படிச்சத சொல்லுன்னு சொல்ல வந்தேன்" "***2 ல ஒரு சம்பவம் நடந்திருக்கு...என்று பேப்பரை காட்ட "ம் என்றபடி கூர்யா அதை படித்துக்கொண்டிருக்க கவுண்டர் சும்மா இல்லாமல் மீண்டும் "அண்ணா இன்னொரு சந்தேகம்" "படத்துக்கு துளு மொழில தலைப்பு வக்குறீங்க.ஆனா படத்துல யாராவது துளு மொழில பேசுனா பளார்னு அறை உடுறீங்க!இது எப்படிங் " "அதுவா! அவன்கிட்ட ஏன் கேக்குற?என்னை கேளு" என்றபடி பிவகுமார் வேகமாக வர "ஐயோ சாமீ!எஸ்கேப்" என்றபடி கவுண்டர் ஜூட் விட நாமும் பின்னாலேயே அப்பீட் ஆனோம்! ******************************************************************************* அடுத்து அஜய் கேதுபதி!அவர் ஒரே நாளில் நூறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதை அறிந்து எங்கு சென்று அவரை சந்திப்பது என்ற குழப்பத்தில் நடந்துகொண்டிருந்தபோது "ஐயோ!" "கலத்கா மத் கர்" "சம்பேஸ்தானு" "எள்ளி நோடுத்தர" என்ற அதட்டல் குரல்கள் கேட்க செட்டுக்குள் நுழைந்தால் நெற்றிமாறன் இயக்கம் கிடுதலை ஸ்பாட்.வழக்கம்போல நாலு ஜிம்பாய்ஸ் நடுவில் ஜட்டியுடன் தலைகீழாக தொங்கி கொடிருக்கும் ஆசாமியை வெளுத்துக்கொண்டிருக்க பக்கத்தில் கூரி "Dhis ish dhe dreatmend par nad delling dhe drudh" என்று பேசியபடி நடுநாயகமாக தடியுடன் அஜய் கேதுபதியை வெளுக்க
நெற்றிமாறன் வழக்கம்போல "அப்படித்தான்!நெஞ்சுல மிதிலே!விலாவுல குத்துலே!போன தடவையும் ஆஸ்கர் மிஸ்ஸாகிட்டு!இந்த தபா உடமாட்டேன்" என்று கத்த நடுவில் யார் தொங்குவது என்று கூர்ந்து நோக்கினால் அஜய் கேதுபதி!ப்பா!என்றபடி நாம் அங்கிருந்து எஸ்கேப் ஆனோம்! ******************************************************************************** நூறு பைக்குகள் குறுக்கும் மறுக்குமாக போய்க்கொண்டிருக்க நடுநாயகமாக "படம் ரிலீஸாகும் வரை ஒற்றை டயரில் பைக்கை இடைவிடாமல் ஓட்டி பெட்ரோலை காலி செய்யும் போராட்டம்" என்று சிலர் கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர்!புரிந்தபடி நாம் வெளியேறினோம்!( கவுந்தியடிகள் மேற்கோள் எதுவும் அங்கே இல்லையா?- கும்மாங்கோ) ******************************************************************************** அடுத்து குஜை நடிக்கும் "ஃபீஸ்ட்". டேபிள் நிறைய சாப்பாட்டு ஐட்டங்கள் இருக்க அதை தொடாமல் ஒரு ஓரத்தில் அமர்ந்தபடி அரை இட்லியை மெதுவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார் குஜை.பக்கத்தில் இயக்குனர் பல்சன்."அண்ணா ஒப்பனிங் சீனே நீங்க அப்படியே பத்து ஃபுல் அடிச்சிட்டு டேபிள் முழுக்க இருந்த ஐட்டங்களை முழுங்கிட்டு அப்படியே காஜ்பிரண் கணக்கா ரத்தம் சொட்டும் ஆட்டுத்தொடை எலும்பை வாயில் கவ்வியபடி ஆவேசமாக கேமராவை பாக்குறீங்க.பக்கத்தில் நூறு அடியாளுங்க அடிவாங்கி மயக்கத்தில் இருக்க "ஐ ஆம் கமிங்" என்று ஃபேஸ்டைமில் வில்லனுக்கு சவால் விடுறீங்க.அங்க டைட்டில் போடுறோம்! "ஃபீஸ்ட்"... ..."ம்ம்....சூப்பர்!அப்படியே டாப் கியர்ல போட்டு தூக்கு" "வில்லன் க்ரூப் காலேஜ் பசங்களுக்கு ட்ரக் சப்ளை பண்ணுது.நீங்கள் காலேஜ் ப்ரொபசர்.ஆனா லுங்கி கட் பனியனோடுதான் காலேஜ் போறீங்க!" "யோவ் போன படத்தையே திரும்ப சொல்லாத!வேற வேற!" "வில்லன் க்ரூப் ஒரு மெடிக்கல் மாபியா...நீங்க ஒரு..." "கம்பவுண்டரா??யோவ் முன்னாடி என்னோட முந்தைய படத்த சொன்ன!இப்ப உன்னோட முந்தைய படமா?...வேற..வேற..."
"வில்லன் க்ரூப் விக்குக்குள்ள போதைப்பொருள் வச்சி கடத்துறாங்க...நீங்க ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட்!ஒரு நாளைக்கு ஒரு விஐபி கஸ்டமருக்கு ஹேர் ஸ்டைலிங் பண்றப்போ அந்த விக்குல கொஞ்சம் போதைப்பொருள் இருப்பதை ஸ்மெல் பண்றீங்க.அப்படியே அதோட பின்னணியை ஆராய ஒரு விக் விக்கும் கடைக்கு போறீங்க.அங்க உள்ள தடியனுங்க எக்குதப்பா பதில் சொல்ல வில்லன் க்ரூப்புக்கும் உங்களுக்கும் மோதல்.அப்புறம் நான் சொன்ன அந்த ஒப்பனிங் ஸீன்.." "ம்ம்...ஓகே.மேல போ" ******************************************************************************** அடுத்து கோயஸ் பார்டன் சென்றோம்!மகா அமைதி நிலவ கேட்டை திறந்து உள்ளே சென்றால் நான்கு இயக்குனர்கள், ஒரு போஸ்ட்மேன், ஒரு வாட்ச்மேன் கதை சொல்ல வரிசையில் காத்திருந்தனர்."ஓவர் தன்னடக்கம் உடம்புக்கு ஆவாது" என்றபடி நாமும் சோபாவில் ஒரு ஓரத்தில் அமர்ந்தோம்! கஜினி வந்தார்."அட என்னப்பா நீ?கைய வேற கால வேற தனித்தனியா தூக்கிட்டு இருப்பியா?" என்று கவுன்டர் அடிக்க கஜினி அவரை கண்டுகொள்ளாமல் "ம்ம்....கடைசி .....ம்ம்...எத்தனை படமோ!எல்லாம் பப்படம்!கதை சும்மா நச்சுன்னு இருக்கணும்.நீ சொல்லு" இயக்குனர் பிவா " ஸார் ஓப்பன் பண்ணா கொல்கத்தா!அங்க நீங்க கையில வெட்டருவாவோட ஆவேசமா நிக்குறீங்க!பக்கத்துல உங்க தங்காச்சி" கஜினி பெரிய கும்பிடு போட்டபடி "நீ கிளம்பு ராசா" என்று அடுத்து போஸ்ட்மேனை அழைக்க... "தலைவா ஓப்பன் பண்ணா நீங்க ஸ்கூல் வாசல்ல நிக்குறீங்க .அப்படியே உங்க மகள் கேரக்டர் ஓடிவந்து "டாடீ" என்று கட்டியணைக்க வர உங்கள் மனைவி கேரக்டரான டென்தாரா மகளை புடிச்சி இழுத்துட்டு போக நீங்க கண்ணீர் தளும்ப உங்க மகளை பாக்க ...." "இது அந்த பிவா உன்னை சொல்ல சொல்லி குடுத்த கதைதான?" என்று கஜினி கேட்க... "து....அது...வந்து.." "கிளம்புங்க!நெக்ஸ்ட்"
"ஓப்பன் பண்ணா உங்களுக்கு ஒரு பேத்தி...அவ மேல உயிரா இருக்கீங்க.." "அவுட்!பொண்டாட்டி தங்காச்சி பொண்ணு பேத்தின்னு யாராவது சொல்றதா இருந்தா இப்பவே கிளம்புங்க" என்று கும்பிட அனைவரும் அப்ஸ்காண்ட்! கவுண்டர் சும்மா இல்லாமல் "அண்ணா! அல்லக்கைங்கல நாலு அப்பு அப்புங்க!எப்ப பாத்தாலும் "'எங்கேயோ கேட்ட ஓலம் ,கள்ளும் மலரும்' படங்கள்ல ஒரு மகாநடிகன் தெரியுறான்"னு உசுப்பிவிட்டத நம்பி நீங்களும் செண்டிமெண்ட் படமா நடிச்சி தள்ளுறீங்க!இதுல சில ஒலக விமர்சகனுங்க சமிதாப் ரேஞ்சுக்கு நீங்களும் நடிக்கணும்னு சொல்லிட்டு திரியுறான்!அப்படி சொல்றவன் ஒருத்தனை புடிச்சி படம் எடுக்க சொன்னீங்கன்னா அதுக்கப்புறம் ஒருபய இப்படி உசுப்பேத்த மாட்டான்!வரட்டுங்களா!" என்றபடி வெளியேற நாமும் வெளியேறினோம்! ************************************************************************** அடுத்து லோகநாயக்கடு நடிக்கும் பிக்ரம் பட ஸ்பாட்.கும்மிருட்டில் கம்பேனி ஆர்டிஸ்ட் சூழ லோகநாயக்கடு நின்று கொண்டிருக்க அருகில் போகேஷ்."ஆண்டவரே அப்படியே டபார் டபார்னு எதிரி க்ரூப் ஷூட் பண்ணிகிட்டே முன்னேறி வரான்.உங்க சைடு ஆளுங்களால கண்ட்ரோல் பண்ண முடியல!என்னடா பண்ண போறோம் என்று அங்கலாய்க்க அப்படியே நீங்க என்ட்ரி குடுக்குறீங்க.கைல வெறும் தகடை புடிச்சிகிட்டு முன்னேற எதிரிகள் சுட குண்டுகள் அப்படியே தெறிச்சி விழ...பிக்ராம் என்று உங்களின் பின்னணி குரலில் அப்படியே என்ட்ரி குடுத்து தகட்டை தூக்கி போட்டுட்டு எதிரிகளை நோக்கி சுடுறீங்க. கவுண்டர் வழக்கம்போல "அண்ணா ஒரு சந்தேகம்" "வெல் இவுரா?யாருப்பா உள்ள உட்டது" என்ற முகபாவத்தை கஷ்டப்பட்டு கண்ட்ரோல் செய்துகொண்டு "ம்ம்..கேளுங்க" "சுடுறவன் தகட்டு மேலேயேதான் சுடுவானா?ரெண்டு இன்ச் கீழ சுட்டா முட்டிக்கால் தெரிச்சிடுமே.அப்புறம் கபாலம்!" "அதெல்லாம் தெரிஞ்சவன எங்க படத்துல வில்லனா இருக்க உட மாட்டோமில்ல" என்றால் பிமல். "ஆமா!படம் முழுக்க உங்க புகழ் பாடுறா மாதிரி தான கேரக்டரை செட் பண்ணுவீங்க!" "அப்புறம் அந்த கிண்டியன் படம் என்னங்க ஆச்சு?" "வெல்!ஆ!கிண்டியன் வருமா வராதா?என்ற கேள்விக்கு வரும் வராது என்று பைனரியில் சொல்ல இயலாது.வரலாம்!வந்தும் வராமல் போகலாம்!வராமலும் வரலாம்!அப்படியே வந்தாலும்..." "பப்படம் ஆகலாம்!" என்று கவுன்டர் அடிக்க பிமல் முறைக்க நாம் எஸ்கேப்!