இரட்டை வேடங்களில் ஒரு நடிகர் அல்லது நடிகை நடித்த படங்கள் தமிழிலேயே ஏராளம் உண்டு.ஒருவர் நல்லவர்.மற்றொருவர் கெட்டவர்.ஒருவர் உயரம் மற்றொருவர் குள்ளம்.இப்படி நேரெதிர் தோற்றங்கள்/குணாதசியங்கள் கொண்ட படங்களை கண்டிருப்போம்.
பல காலமாக ஷின்ஜென்னுக்கு ஆபத்து நேரக்கூடிய இடங்களுக்கு அவருக்கு பதில் சென்றவர் அவர் தம்பி.தொலைவில் எதிரி நாட்டு ஒற்றர்கள் உளவு பார்க்கும்போது ஷின்ஜெண் போலவே இருப்பார்.தொடர்ந்து ஷின்ஜென்னின் நிழல் போலவே இருந்து ஷின்ஜென் இல்லாமல் போகும்போது தம்பிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை!தனக்கான ஆளுமை என்ற ஒன்றே இல்லாமல் இருப்பதை அப்போதுதான் அவன் உணர்கிறான்.
ஷின்ஜென் உயிர் துறந்ததுன் அந்த இடத்தில் இந்த திருடனை அமர வைக்கின்றனர்.அதுவரை அவரது தம்பி செய்த தோற்றமயக்க வித்தைகள் வெளியாட்களுக்கு மட்டுமே.வீட்டுக்குள் அல்ல.ஆனால் இந்த திருடன் செய்யப்போகும் ஆள் மாறாட்டம் வெளியிலும் வீட்டிலும்.
அசலும் நிழலும் |
ஒருவகையில் இப்படம் பார்ப்பதே நமக்கு மூன்று மணிநேரம் தியான செய்த ஆழ்ந்த அமைதியான உணர்வை தந்தது.ஒவ்வொரு முறை இப்படத்தை பார்க்கும்போதும் அவ்வாறே இருக்கிறது.
நெருப்பைப்போல உக்கிரமாக காற்றைப்போல துரிதமாக காட்டைப்போல அமைதியாக மலையைப்போல் எதற்கும் அசைந்து கொடுக்காத நிலை குறித்து பேசப்படும் வசனங்கள் அவ்வளவு ஆழம் பொதிந்தவை.
போர்க்காட்சிகள் என்றால் ஆவேசமாக இருபக்கமும் வெட்டி சாய்ப்பதை காட்டாமல் வெறுமனே துப்பாக்கியின் தொடர் வெடிப்புகளை ஒலிக்க வைத்து பிறகு சில குதிரைகள் மற்றும் குற்றுயிராக துடிக்கும் வீரர்களை காட்டுவதன் மூலம் அந்த குரூரத்தை பதிவு செய்கிறார்.
கடைசியில் போலி ஷின்ஜென்னும் சுடப்பட்டு ஆற்றில் அந்த ராஜ்ஜியத்தின் கொடியை கடந்து மிதந்து செல்கிறான்.அந்தக்காட்சி எடுக்கப்பட்ட விதமும் கட்சிக்கான பின்னணி இசையும் ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போது உலுக்கி விடுகிறது!
ஷின்ஜென்னாகவும் திருடனாகவும் Tatsuya Nakadai அற்புதமாக நடித்துள்ளார்.ஷின்ஜென் கதாபாத்திரத்தில் அதிகார தோரணையில் பார்ப்போர் மரியாதை செலுத்தும் வண்ணம் இருப்பதும்,திருடன் கதாபாத்திரத்தில் எதை திருடலாம் ( ஷின்ஜென்னின் உடல் வைக்கப்பட்டிருக்கும் தாழியை உடைத்து அதில் பொக்கிஷம் இருக்கும் என்று பார்க்கிறான்.ஆனால் உள்ளே இருப்பதோ வேறு) என்று முழிப்பது,பிறரை எகத்தாளமாக பார்ப்பது என்று இருந்துவிட்டு பிற்பகுதியில் தன்னால் ஷின்ஜென்னின் மாபெரும் ஆளுமையை நிரப்ப முடியாமல் போனதை எண்ணி வருந்துவது,தனது அதிகபிரசிங்கித்தனத்தால் மாபெரும் போருக்கு காரணமாகி அத்தனை உயிர் போனதை கண்டு கலங்கும் காட்சி என்று ஒரு மிகப்பெரிய கேன்வாசில் வரையப்பட்ட மாபெரும் ஓவியம் போல ஒரு பிரம்மாண்டமான கதாபாத்திரத்தை அட்டகாசமாக செய்துள்ளார்.
அதிகார உள்வட்டத்தின் சிலரைத்தவிற மற்ற எல்லாருமே இந்த திருடனை ஷின்ஜென்னாக ஏற்றுக்கொண்டு விட்டனர்.முதலில் "இது எனது தாத்தா இல்லை" என்று உண்மையை கண்டுபிடித்த பேரப்பிள்ளையும் அவனை ஏற்றுக்கொண்டு விடுகிறான்.ஷிஞ்சென் மட்டுமே பயன்படுத்த முடிந்த குதிரை ஒன்று இருக்கிறது .அதில் ஏறி குதிரை தூக்கி எறிய போலி அம்பலப்பட்டு நிற்கிறான்.ஏன் அதை செய்தான்?அவன் பாட்டுக்கு வேடத்தில் இருந்திருக்கலாம்.
சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவனுக்கு கொடுத்த ராஜமரியாதையை அவன் தனக்கானது என்று நம்பியதால் ஏற்பட்ட சறுக்கல் தான் இது!அந்த மரியாதை ஷின்ஜென்னுக்கானது!