Sunday, 2 June 2024

NTR

 என்.டி. ராமாராவ் என்றாலே தமிழ் மக்களுக்கு இரண்டு விஷயங்கள் உடனே நினைவுக்கு வரும்
- படங்களில் ராமர் கிருஷ்ணர் வேடம் போட்டவர்

- எம்.ஜி.ஆர் போல தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆனவர்.

 
    முதல் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்.இருபதுக்கும் மேற்பட்ட  படங்களில் அவர் ராமர் மற்றும் கிருஷ்ணர் வேடம் போட்டார். பி.ஆர்.பந்துலு இயக்கிய கர்ணன் படம் வெற்றி பெற்றது.அதில் கர்ணன் கதாபாத்திர சித்தரிப்பு என்பது அசல் மகாபாரதத்தில் உள்ளதற்கு துளியும் தொடர்பில்லாத ஒன்று என்பது அசல் புராணத்தை வாசித்தவர்களுக்கு தெரியும்.


 

     கர்ணன் ரொம்ப உத்தமன்.ஏகப்பட்ட தான தர்மங்கள் செய்தவன்.தன்போக்கில் அமைதியாக இருந்தவன்.
சூழல் காரணமாகவே அவன் வில்லனாக மாறினான் என்று பார்ப்போருக்கு கழிவிரக்கம் உண்டாகும் வகையிலேயே அந்த போலி சித்தரிப்பு இருக்கும்.அதைப்பார்த்து என்.டி.ஆர் தானவீரசூரகர்ணன் மாதிரியான படங்களை எடுத்தார் .கர்ணனும் அவரே துரியோதனனும் அவரே கிருஷ்ணரும் அவரே.அதில் கர்ணன் படப்பாணியில் கர்ணன் துரியோதனன் ஆகியோர் மீது கழிவிரக்கம் வருவது மாதிரியான காட்சிகளை வைத்தார்.
      நிஜ வாழ்வில் என்.டி.ஆர் தீவிர பக்திமான் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.அத்தனை புராணப்படங்களில் நடித்தவர், பிற்காலத்தில் காவி உடையில் வலம் வந்தவர் என்றெல்லாம் சொன்னாலும் அவர் பெரிய பக்தி ஈடுபாடு கொண்டவர் அல்ல என்பதே உண்மை.வீட்டில் பெரிதாக பூஜைகள் செய்பவர் இல்லை.வெளியில் ஷூட்டிங், பிற்காலத்தில் பிரச்சாரம் என்று சென்றாலும் தனது உடனிருப்பவர்களை கோவிலுக்கு செல்ல சொல்லி விபூதி குங்குமம் பிரசாதம் மட்டும் வாங்கிவர சொல்வார்.
      ஆனால் அவருக்கு வேறு ஈடுபாடு இருந்தது.நள்ளிரவில் தனது பங்களாவில் சில தாந்த்ரீக பூஜைகள் செய்தார் என்ற குற்றசாட்டு எழுந்தது.அதெல்லாம் உண்மையா என்று தெரியாது.ஆனால் அந்த குற்றச்சாட்டு எழுந்ததும் என்.டி.ஆர் தனது பண்ணை வீட்டிற்கு செல்வதை நிறுத்தினார் .ஆனால் அவர் என்றும் செலக்ட்டிவ் நாத்திகம் பேசியதில்லை.இந்த ஒன்றுதான் வித்தியாசம்!இந்த விஷயத்தில் அவர் கொஞ்சம் எம்ஜியாருக்கு நெருக்கமானவர் என்றே கூறலாம்.

     இப்போது இரண்டாவது விஷயம்.எம்.ஜி.ஆர் போல கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர் என்பது மேலோட்டமாக உண்மையாக இருக்கலாம்.ஆனால் பலத்த வேறுபாடுகள் உண்டு.

 
     எம் ஜி ஆர் முதலில் காங்கிரஸ், பிறகு திமுக என்று இருபது வருடங்களுக்கு மேல் அரசியல் கட்சியில் தொண்டனாக பிறகு பல்வேறு பதவிகளில் இருந்தவர்.அரசியல் ஆர்வம் என்பது அவருக்கு இருந்தது.தொடர்ந்து அன்றாட அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பவராக இருந்தார்.பிற்காலத்தில் தான் தனிக்கட்சி முதல்வர் பதவி எல்லாம் வந்தது.

    ஆனால் என்.டி.ஆர் அப்படியல்ல!நடிகராக இருக்கும்வரை அரசியல் உள்ளிட்ட எந்த அன்றாட நிகழ்வு குறித்தும் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தார்.செய்தித்தாள் வாசிப்பு பழக்கம் கிடையாது .எந்த கட்சியிலும் இருந்ததில்லை.தனது அறுபதாவது பிறந்தநாளில் அரசியலில் நுழையப்போவதாக அறிவிக்கிறார் .
       மேலும் எம்ஜியார்  தானதர்மங்கள் செய்பவர்.அந்த விஷயத்தில் அவர் கணக்கு பார்ப்பதில்லை.ஆனால் என்.டி.ஆர் அப்படியல்ல.ஒரு பைசா செலவு செய்வதாக இருந்தாலும் அதை கையில் எடுத்து இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு மீண்டும் ஜேபுக்குள் போட்டுக்கொள்பவராக இருந்தார்
     கட்சி ஆரம்பித்த பிறகு கூட தனது ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் ஓரமாக கிடந்த பழைய வேனை ரிப்பேர் செய்து அதையே பயன்படுத்தினார்.ஆந்திரா முழுக்க அதிலேயே சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.பகல் முழுவதும் மக்களை சந்திப்பது.இடையில் கிடைத்ததை வாங்கி சாப்பிடுவது.இரவில் எதாவது தொண்டர் வீட்டில் தூக்கம்.காலையில் சாலையோரமாக குளித்து விட்டு(அந்த போட்டோ அப்போது பிரபலமாக இருந்தது) மீண்டும் பிரச்சாரம் ஆரம்பம்.
      


அப்போது காங்கிரஸ் ஆட்சி.மேலிடத்தில் இருந்து 'நியமிக்கப்பட்ட ' முதல்வர்கள் மூன்று பேர் மூன்றாண்டுகளில் மாற்றப்பட்டிருந்தார்கள்.ஒருவகையில் அதுவே ராவுக்கு கட்சி ஆரம்பிக்கும் உத்வேகத்தை உண்டாக்கியது. "தெலுகு பிரைட்" என்பதை அவர் முன்வைத்தார்.அதுவே அவர் கட்சியின்/ஆட்சியின் பிரதானமாக இருந்தது.

    ஆனால் எதிர்கட்சியினர் தெலுகு தேசம் கட்சியை கம்மா கட்சி என்றார்கள். கம்மா பிரிவு நபர்களுக்கே கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. "அதெல்லாம் இல்லை.என் கட்சி அத்தனை தெலுங்கு மக்களுக்காகவும் தான்"  என்று ராவ் எத்தனை சொல்லிப்பார்த்தும் அந்த பிம்பத்தை அவரால் உடைக்க முடியவில்லை.அந்தப்பக்கம் ஆந்திரா காங்கிரஸ்-  ரெட்டி கட்சி என அறியப்பட்டது!
      யாரும் எதிர்பாராத வகையில் ஆட்சியை பிடித்ததும் இந்திரா அரசு மூலம் ஆந்திரா காங்கிரஸ் கட்சி இவருக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்கிறது.உச்சகட்டமாக பாஸ்கர ராவ் என்ற தெலுகு தேசம் கட்சியின் அமைச்சரை வைத்தே ஆளுநர் உதவியுடன் ஆட்சியை கவிழ்த்து பாஸ்கர ராவ் முதல்வராகிறார்.



      இதை என்.டி.ஆர் எதிர்பார்க்கவே இல்லை.அதிர்ந்து போகிறார்.இரா.செழியன்,சோ ராமசாமி,வாஜ்பாய் ஆகியோர் ஆந்திரா ஆளுநரை சந்தித்து இது சட்டப்படி தவறு என்று விளக்குகிறார்கள்.
     பிறகு தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் ஜனாதிபதி மாளிகை முன்பு நிறுத்துகிறார் என்.டி.ஆர்.கடும் போராட்டத்திற்கு பிறகு அவர் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்.அப்போதெல்லாம் அவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் அவர் மகன் ஹரிகிருஷ்ணா மற்றும் மருமகன் சந்திரபாபு நாயுடு!



        இந்த சமயத்தில் அவர் மனைவி பசவ தாரகம் இறந்து போகிறார்.இவருக்கு இருதய பைபாஸ் செய்யப்படுகிறது.
      சென்றமுறை எதோ மூன்றாவது நபரான பாஸ்கர ராவ் ஆட்சியை கவிழ்த்தார்.ஆனால் அடுத்தமுறை சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவே அதை செய்கிறார்.இம்முறை அதை வெற்றிகரமாக செய்கிறார்.  
    ஆட்சி கவிழ்ப்பு வெற்றிபெற மிக முக்கிய காரணம் லக்ஷ்மி பார்வதியை என்.டி.ஆர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டது.ஆம் இருவருக்கும் அது இரண்டாம் திருமணம் தான். கதாகாலட்சேபம் செய்பவரின் மனைவியாக இருந்தவர் லக்ஷ்மி பார்வதி.பட்டப்படிப்பு படித்தவர்.புத்தக வாசிப்பு பழிக்கம் கொண்டவர்.ராமா ராவ் சுயசரிதை எழுத அவருடன் தினம் நடத்திய உரையாடலில் ராவுக்கு இவரின் துணை ஆறுதல் தருவதாக இருப்பதை உணர்கிறார்.ஏற்கெனவே மனைவியின் மரணம்,சொந்த உடல்நிலை கோளாறுகள், தில்லி கொடுக்கும் குடைச்சல் போக சொந்த கட்சியிலேயே ஏகப்பட்ட குழிபறிப்புகள் என்று கடும் நெருக்கடியில் இருந்தவர் இந்த உறவில் ஆறுதல் காண்கிறார்.
    இடையில் காங்கிரசுக்கு எதிராக நாடு முழுக்க ஒரு அரசியல் அணியை திரட்டுகிறார்.ஐக்கிய முன்னணி 1989 இல் ஆட்சியை பிடிக்கிறது.ஆனால் தெலுகு தேசம் ஒரு எம்பி ஸீட் கூட வெல்லவில்லை என்றாலும் அவர் மீதுள்ள மரியாதையில் ஆட்சியின் முக்கிய முடிவுகள் என்.டி.ஆர் உடன் கலந்தாலோசித்து பிறகே எடுக்கப்படுகிறது.

மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பது அவரது பிரதான நோக்கமாக இருந்தாலும் அவர் என்றும்  தேச பிரிவினைவாதம் பேசியதில்லை.
     ஆனால் பிள்ளைகளுக்கு அசல் தாய் தந்தை தான் என்றும் மனதில் நிற்பார்கள்.அது இயல்பு.அவரது மகன் மகள்கள் மருமகன் மருமகள்கள் என்று யாருமே இவரின் இரண்டாம் திருமணத்தை ஏற்கவில்லை.குறிப்பாக சந்திரபாபு நாயுடு!

 

      சென்றமுறை பாஸ்கர ராவ் தில்லி தயவை நம்பி கண்மூடித்தனமாக ஆட்சியை கவிழ்த்து தோல்வி அடைந்தார்.காரணம் பெரும்பான்மை எம்.எல். ஏக்கள் ராவ் பக்கம் இருந்தனர்.இந்தமுறை அந்த தவறு நிகழாமல் பார்த்துக்கொண்டார் நாயுடு.
ஆட்சியில் லக்ஷ்மி பார்வதி தலையீடு என்பதை நிறுவி கட்சி எம்.எல். ஏக்களை தன் பக்கம் இழுத்தார்.மேலும் ராவின் பிள்ளைகளான பாலகிருஷ்ணா ஹரிகிருஷ்ணா ஆகியோரை வைத்து பொதுவெளியில் தனக்கு ஆதரவு திரட்டினார் .
     இது போதாதென்று ரஜினிகாந்த் உதவியையும் நாடினார் .ஆட்சியை கவிழ்த்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கிறார் நாயுடு.அங்கு வந்து ரஜினி உள்ளிட்டோர் ராவின் இரண்டாம் திருமணம் குறித்தும், ஆட்சியில் லக்ஷ்மியின் தலையீடு குறித்தும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்
     அந்த ஹோட்டலுக்கு வெளியே வந்து எம்.எல்.ஏ க்களை அழைத்த என்.டி.ஆர் மீது செருப்பு உள்ளிட்டவற்றை வீசுகிறார்கள்.மனம் நொந்து வீடு திரும்புகிறார் .நாயுடு முதல்வர் ஆகிறார்.
       இது பிரச்சனையில்லை.நான் மக்களிடம் ஆதரவு பெற்றுத்தானே முதல்வர் ஆனேன்.மீண்டும் அவர்களை சந்தித்து இந்த அநியாயத்தை எடுத்து கூறி 1984 இல் மீண்டும் ஆட்சியை பிடித்தது போல வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையோடு இருந்தவர் மாரடைப்பால் காலமாகிறார்.
        ரஜினி மோகன் பாபு இருவரும் அவர் உடலுக்கு மரியாதை செலுத்த அவர் வீட்டுக்கு செல்ல முயன்ற போது என்.டி.ஆர் ரசிகர்களால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.

        எம்ஜியார் ஆட்சியில் இருந்தபோதும் அவருக்கு எதிராக எஸ்.டி.எஸ் போன்றோர் குடைச்சல் கொடுத்தனர்.வேறொரு "பெரிய" தலைவர் ராஜீவை சந்தித்து எம்ஜியார் பதவிக்கு வேட்டு வைக்க முயன்றதாக சொல்லப்பட்டது.வெளியில் நாராயணசாமி நாயுடு நடத்திய போராட்டங்கள்.ஆனால் எம்ஜியார் தன்னை தன் கட்சியினரே கவிழ்ப்பதற்கான பெரிய காரணங்கள் எதையும் கடைசி வரை கொடுக்காதது அவர் சாமர்த்தியம்.ஆனால் என்.டி.ஆர் அந்த காரணத்தை வழங்கினார்.லக்ஷ்மி பார்வதியை மறுமணம் செய்ததுதான் அந்தக்காரணம்!

 



     என்.டி.ஆர் கதானாயக்கடு ,என்.டி.ஆர் மஹாநாயக்கடு ஆகிய படங்களில் என்.டி. ஆராக பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.தோற்றத்தில் நன்றாக பொருந்தி வந்துள்ளார் பாலகிருஷ்ணா.

இராவணன் கதாபாத்திரத்திற்கு பத்து தலைகளையும் தனித்தனியே படமாக்க வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட பத்து மணிநேரம் மிக அதிக வெளிச்சத்தில் அசையாமல் என்.டி.ஆர் நின்ற காட்சி காட்டப்படுகிறது.கதாநாய்க்கடு படம் அவரது திரை வாழ்வை பற்றியது.என்.டி.ஆரை பொறுத்தளவில் திரை வாழ்க்கை அரசியல் வாழ்க்கை என்று தனித்தனியே சுலபமாக பிரிக்கலாம்.அறுபது வயது வரை திரை வாழ்க்கை.அதற்குப்பின் அரசியல் வாழ்க்கை.ஆனால் எம்ஜியாருக்கு இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருந்தது .
     கதாநாயக்கடு படத்தில் சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழ் நடிக நடிகைகள் எவரும் காட்டப்படுவது இல்லை.ஏற்கெனவே நடிகையர் திலகம் படத்திலும் அவ்வாறே செய்திருந்தனர். மஹாநாயக்கடு படத்தில் அனைத்து முதல்வர்கள் மாநாட்டு காட்சியில் எம்ஜியார் இவரா?அவரா?என்று சந்தேகிக்கும் வண்ணம் ஒரு எக்ஸ்டிரா நடிகரை டம்மி போல உட்கார வைத்திருந்தனர் !
      மேலும் பசவ தாரகம் கேரக்டரில் வித்யா பாலன்.இவர் எல்லா படத்திலும் ஸ்லோ மோஷனில் நடிப்பது வழக்கம்.இப்படத்திலும் அப்படியே!ஏனென்று நமக்கு தெரியவில்லை!இதனால்தான் மனசெல்லாம் படத்தில் இவரை இயக்குனர் நிராகித்தாரோ??
     மஹாநாய்கக்கடு படம் அவரது அரசியல் வாழ்வு பற்றியது.ஆனால் அது முழுமையாக காட்டப்படவில்லை.நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியின் இறுதிக்காலம் காட்டப்படாமல் முடிக்கப்பட்டதோ அதேபோல என்.டி.ஆரின் வீழ்த்தப்பட்டது குறித்த காட்சிகள் இதில் இல்லை. சில காரணங்கள் நமக்கு தோன்றியது
- அப்படி அவர் வீழ்த்தப்பட்ட காலத்தை காட்ட வேண்டும் என்றால் பாலகிருஷ்ணா உள்ளிட்ட அனைவரும் அவருக்கு எதிராக பேசியது செயல்பட்டது போன்றவற்றை காட்ட வேண்டும்.
- நடிகர் கிருஷ்ணா(மகேஷ் பாபுவின் தந்தை) தீவிர காங்கிரஸ் அபிமானி.அவர் என்.டி.ஆரை மிக கடுமையாக கேலி கிண்டல் செய்வதை காட்ட வேண்டி இருந்திருக்கும்.
- கதாநாயக்கடு படத்தில் நாகேஸ்வர ராவ் உடனான நெருக்கமான நட்பு காட்டப்படுகிறது.ஆனால் அதே நாகேஸ்வர ராவ் பிறகு காங்கிரசில் சேர்ந்து என்.டி.ஆரை வறுத்ததெடுக்கிறார்.
- ரஜினி  சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பேசியதை காட்ட வேண்டி இருந்திருக்கும்.
இதெல்லாம் திரை உலகில் பெரிய சர்ச்சைகளை கிளப்பி பாலகிருஷ்ணாவின் பொதுவெளி பிம்பத்திற்கே வேட்டு வைப்பதாக அமைந்திருக்கும்.அது மட்டுமல்லாது சந்திரபாபு நாயுடுவின் பெயரும் அடிபட்டு தெலுகு தேசம் கட்சியின் செல்வாக்கும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்திருக்கும்.இதையெல்லாம் கருத்தில் கொண்டே பாலகிருஷ்ணா அந்தப்பகுதிகளை தவிர்த்திருக்கலாம்.தவிரவும் தெலுங்கு சினிமாவில் ரொம்பவும் இருண்மையான சித்தரிப்புகளை மக்கள் விரும்ப மாட்டார்கள்(நடிகையர் திலகம் கூட அவற்றை தவிர்த்தது).

   ஆனால் ராம்கோபால் வர்மா இயக்கிய Lakshmi's NTR படத்தில் அவர் 1989 தேர்தலில் தோல்வியடைந்து அனைவரும் கைவிட்ட நிலையில் லக்ஷ்மி பார்வதி அவரின் சுயசரிதையை எழுத வருவதாக காட்டி இருப்பார்.இந்தப்படம் மஹாநாயக்கடு படத்தை விட பல மடங்கு உண்மைக்கு நெருக்கமாக வந்திருப்பதை காண முடிந்தது.

 
      இந்த மூன்று படங்கள் உருவாக்கிய என்.டி.ஆர் குறித்தான பிம்பத்தை விடவும் Ramesh Kandula எழுதிய Maverick Messiah புத்தகம் உருவாக்கிய பிம்பம் இன்னும் தெளிவாக ஒளிவு மறைவு அவ்வளவாக இல்லாமல் இருந்தது.
 

 
சென்ற வருடம் என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடு,பாலகிருஷ்ணா,ரஜினிகாந்த் போன்றோர் பங்கேற்று அவரை புகழ்ந்து தள்ளினர். இறந்தவர்களால் எந்தப்பிரச்சனையும் இல்லையல்லவா!