Tuesday, 13 January 2015

கரைந்த நிழல்கள்



  நாட்டின் மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில் சினிமாவின் வீச்சு அதிகம்.கடந்த ஐம்பதாண்டு அரசியலை தீர்மானித்தது சினிமாத்துறையை சார்ந்தவர்கள்தான்.இதன் காரணமாகவே இன்று பிரபலமாக இருக்கும் நடிகர்களும் ஆட்சியை பிடிக்க முயலும் அவலங்கள் தெரிந்ததே.அதைப்பற்றி பேசினால் திசை திரும்பிவிடும்.
              இன்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு சினிமா மோகம் உண்டு.சினிமா பார்க்கும் மோகம் தெரிந்ததே.நான் சொல்வது சினிமாவில் சேர்ந்து சாதித்து பெரியாளாக புகழ் பெற வேண்டும் என்பதற்காகவே ஊரை விட்டு படிப்பை விட்டு குடும்பத்தை விட்டு கோடம்பாக்கத்தில் பத்துக்கு பத்து அறைகளில் இருபது பேர் போராடி கொண்டிருப்பதைத்தான்.இவை அனைத்தும் சினிமாவில் பேர் புகழ் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே.
             இந்த கரைந்த நிழல்கள் நாவல் சினிமா துறையை சர்க்கரை பூச்சு,பகட்டுகள் இல்லாமல் அப்பட்டமாக காட்டுகிறது.

             இந்த நாவலை பற்றிய பல விஷயங்களை சொல்ல வேண்டும் .
முதலில் இது வழக்கமான நாவல் இல்லை.அதாவது ஒரு துவக்கம் .அங்கே நாவலின் கதாபாத்திரங்கள் வாசகனுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே அறிமுகம் செய்யப்படும்.பிறகு ஒருவித linear வழியில் துவக்கம், இடையில் பல்வேறு திருப்பங்கள், முடிச்சுக்கள் பிறகு அவை தீர்ந்து ஒரு முடிவு.சில நாவல்கள் முடிவில்லாமல் தொக்கி நிற்கும்.
        ஆனால் இந்த நாவல் மேற்குறிப்பிட்ட அந்த டெம்ப்ளேட்டை உடைத்தெறிகிறது.முழு நாவலுமே எடிட் செய்யப்படாத ஒரு திரைப்படம் போல ஒருவித jumble போல கலைந்து கிடக்கிறது(முன்னுரையில் "நாவல் புரியவில்லை" என்று பலர் சொன்னதாக சொல்கிறார் அசோகமித்திரன்.காரணம் இதுவாக இருக்கலாம்).வாசித்து முடித்ததும் நாமாக அவைகளை ஆங்காங்கே பொருத்தி பார்த்துக்கொள்ள வேண்டும்.பொருத்தி பார்க்காவிட்டாலும் பிரச்சனை இல்லை.Raymond Chandler எழுத்து போல கதை முடிந்ததா?முடிச்சுகள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைவிட கதாபாத்திரங்கள் தங்களுக்குள் interact செய்துகொள்ளும் விதம் ,கதாபாத்திரங்களின் மன ஓட்டங்கள்,அவர்களின் பிரச்சனைகள், அதை தீர்க்க முடியாமல் அவர்கள் மனதில் எழும் ஆற்றாமை அனைத்துமே வாசகனை உச்சு கொட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லாமல்  ஒருவித சமநிலையில் ஆசிரியர் இதை நம் முன் வைத்துள்ளார்.அதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது அவரவர் அனுபவங்களைப்பொறுத்த்து!
         உதாரணமாக பட தயாரிப்பாளர் ரெட்டியார் படத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டார்.கொஞ்சமே பாக்கி.நடிகை ஷூட்டிங் வர மறுக்க அங்கே சென்று இவர் சத்தம் போடுகிறார்.நடிகை மயக்கம் போட்டு விழுகிறாள்.அத்தோடு ரெட்டியார் segment முடிந்தது.ரெட்டியாருக்கு என்னானது என்பதை 2 வருடம் கழித்து வேறொரு தயாரிப்பாளர் அந்த முடிக்காத படத்தை தூசு தட்டி பார்க்கும் போது ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.கடன் நெருக்கி மூழ்கிப்போனார்
         ஒரு  நாவலின் எழுத்துநடை என்பது அந்த எழுத்தாளரை காட்டிகொடுத்து விடும்.இந்த எழுத்தாளர் இப்படித்தான் எழுதுவார்.வார்த்தை பிரயோகம் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்கலாம்.இந்த நாவல் அதையும் நொறுக்கி விட்டது.அசோகமித்திரன் அவர்களின் எழுத்து நடை என்பது மென்மையானது என்றுதான் பலர் நினைக்கிறார்கள் . உதாரணமாக ஒற்றைவிரல் டைப் ரைட்டர் கதையை படித்தால் தெரியும்.இந்த நாவல் அத்தகைய மென்மையான மொழிநடையின் சாயல் துளியும் தெரியாமல் எழுதப்பட்டுள்ளது.

          இன்னும் சற்று தெளிவாக சொல்ல வேண்டுமானால் நாவலில் ஆசிரியர் கதை சொல்லவில்லை.அவர் வசனங்களை எழுதவில்லை.அந்தந்த கதாபாத்திரங்களை  தங்களுக்குள் interact செய்ய வைத்துவிட்டார். குவென்டின் டரண்டினோ ஒரு பேட்டியில்எனது படத்திற்கு நான் வசனங்கள் எழுதுவதில்லை.படத்தில் வரும் கதாபாத்திரங்களே அதை எழுதுகிறார்கள்” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.இதைத்தான் அசோகமித்திரன் செய்துள்ளார்.தவறாமல் வாசிக்கவேண்டிய ஒரு அற்புத படைப்பு.

No comments:

Post a Comment