"ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கு.அதை வெளியேற்ற மனிதர்கள் எல்லைதாண்டி போவதுண்டு.மதத்தின் போர்வையில் சாதியின் போர்வையில், போலீசு,அரசியல்வாதி போன்ற அதிகாரத்தின் போர்வையில் மனித நேயத்தின் போர்வையில் எல்லைதாண்டி கொல்வதுண்டு.நான் எந்த முகமூடியின் பின்னாலும் ஒளிந்து கொள்ளாமல் கொல்கிறேன்.சாப்பிடுவது, கடவுளை வணங்குவது ,தூங்குவது, மலம் கழிப்பது போன்று கொல்கிறேன். உச்சத்தை கண்டுவிட்டேன் அதனால் சரண்டர் ஆகிறேன்"இதுதான் ராமன்(நவாசுதின்) ராகவனிடம் (விக்கி ) சொல்லும் காரணம்.
பொதுவாக சீரியல் கொலைகாரன் அவனை பிடிக்கப்போகும் நேர்மையான போலீசு போன்ற வழமையான சித்தரிப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு அப்பட்டமாக சில உண்மைகளை காட்டியிருக்கிறார் .போலீசாக வரும் ராகவன் வழக்கமாக சட்டைக்கு போடும் கஞ்சியை உள்ளுக்கும் கொஞ்சம் விட்டுக்கொண்டு விறைப்பாக காய்கறி விக்குறவன் தொடங்கி மந்திரி வரையில் முஷ்டியை முறுக்கி "அடிங்..நா போலீசுடா" என்று தமாஸ் பண்ணுவதில்லை.ராகவனின் கதை என்பது தனி.
ஆளவந்தான் நந்து கேரக்டர் உங்களுக்கு நினைவில் இருக்கலாம் ."பூ விழாம தல விழுந்திருந்தா நீ இந்தப்பக்கம் நா அந்தப்பக்கம்" என்று நந்து விஜயிடம் சொல்வதாக ஒரு வசனம் இருக்கும்.நந்து சித்தியிடம் வளராமல் மாமாவிடம் வளர்ந்திருந்தாலும் இதே மாதிரிதான் ஆகியிருப்பார்.The inherent desire to sin என்பது சிறுவயதிலேயே நந்துவின் மனதில் இருந்த விஷயம்.அதை சித்தி ஊதி பெருக்கிவிட்டாள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ராகவனும் கிட்டத்தட்ட அப்படியே.சிறுவயதில் கஞ்சா அடிப்பதை தந்தை பார்த்துவிடுகிறார்.அதன்பின் தொடர் பெல்ட் விளாசல்கள் ஆழ்மனதில் இருக்கும் அந்த தீய எண்ணங்கள்/செயல்கள் மீதான ஈர்ப்பின் விரிசலை பெரிதுபடுத்துகிறது.இப்படிப்பட்ட ஒரு ஆள் காவல்துறையில் சேர்ந்தால் தனக்குள் இருக்கும் அந்த தீய எண்ணங்களை வெளிக்கொண்டுவர ஒரு வடிகாலாக இருக்கும் என்று எண்ணுகிறான் ராகவன்(அது படத்தில் சொல்லப்படுவதில்லை என்றாலும் அவ்வாறு புரிந்துகொள்ளலாம்) .போதைக்கு அடிமையான ஒரு insomniac ஆகவும் sexual pervert ஆகவும் இருக்கிறான்.அதிகார முகமூடியில் அவன் நினைத்ததை செய்யமுடிகிறது.
நினைத்த பெண்ணோடு உறவு கொள்கிறான்.ஆனால் திருமணம் குழந்தை என்ற commit ஆக அவன் விரும்பவில்லை.அது அவனுக்கு சரிப்படாது என்பதையும் உணர்ந்திருக்கிறான்.உறவு கொள்ளும் பெண்களை காயப்படுத்துவதோடு அல்லாமல் தன்னையும் ஒரு self destructive path ல் வழநடதத்துவதில் மகிழ்கிறான்.
எல்லா நேரத்திலும் அதே கடுமையோடு ராகவனால் நடந்துகொள்ள முடிவதில்லை.போதைப்பொருள் சப்ளை செய்யும் அந்த நைஜீரியன் ராகவனை உதைத்து கீழேதள்ளி துப்பாக்கியை காட்டியதும் நடுங்கிப்போகிறான்.அந்த நேரங்களில் மனதின் இருண்ட குகைக்குள் முற்றிலுமாக சிக்கிக்கொண்டு வெளிவரமுடியாமல் கிடக்கிறான்.இருண்ட மனதிற்கும் இவனிற்குமான இடைப்பட்ட சுவர் போலவே அவன் போதைப்போருட்களையும் பெண்களுடனான perverse உடலுறவுகளையும் பயன்படுத்துகிறான்.
கீழ்லிருந்து மேல் வரை முற்றிலும் அழுகிப்போன சமூகத்தின்; மனித மதிப்புகள் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தின் பிரதிநிதிகளாகவே ராமண்ணாவும் ராகவனும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.ராகவன் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன்.ராமன் அடித்தட்டு சேரியிலிருந்து வந்தவன் என்பதெல்லாம் இங்கே எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை.எல்லா தரப்பிலும் எல்லா தட்டுகளிலும் இத்தகைய மனிதர்கள் நிறைந்த சமூகமாகவே நம் சமூகம் உள்ளது.
ராமனின் சகோதரி வீட்டில் நடக்கும் அந்த செக்மன்ட்டில் Michael Haneke இயக்கிய Funny Games(1997) படத்தின் சாயலை காணமுடியும்.ஆனால் funny games போல படம் பார்ப்பவர்களை thesis paper போலவும் இயக்குனர் தன்னை பேராசிரியராகவும் கற்பனை செய்துகொண்டு இம்சை படுத்தும் வேலையை அனுராக் செய்யவில்லை. படத்திலேயே ரொம்ப இறுக்கமான காட்சிகள் அந்த காட்சிகள்தான்.தனது தந்தையையும் தாயையும் கொன்றுவிட்டதை பதற்றமில்லாமல் மெதுவாக எட்டிப்பார்க்கும் அந்த சிறுவன் இன்றைய சிறுவர் சிறுமிகள் வன்முறை மீதுகொண்ட ஈர்ப்பினை காட்டுவதாகவே உள்ளது.ஆனால் இதையெல்லாம் பார்வையாளனுக்கு preach செய்வது என்ற நிலைக்கு போய் கொல்லாமல் வெறுமனே காட்சிப்படுத்தி இருப்பது ஆறுதலளிக்கிறது!
முதலிலேயே சரணடையும் ராமனை போலீசு கைது செய்யாமல் ஏன் அவன் தப்பிக்கும் வகையில் பாழடைந்த குடியிருப்பில் பூட்டிவிட்டு செல்கிறார்கள் என்பது உறுத்தினாலும் அதன்பிறகு வரும் காட்சிகள் அந்தக்குறையை மறக்கடித்துவிடுகிறது.
கடவுளின் சிசிடிவி கேமரா! |
சமூக அவலங்களை குற்றங்களை தண்டிப்பதற்காக இருக்கும் காவல்,நீதித்துறை,அதிகார வர்க்கம் எல்லாமே பொது ஜனத்திரளில் இருந்து வந்தவையே.பொதுமக்கள் சீரழிந்த நிலையில் இருக்கும்போது அதிலிருந்து ஒருவர் வந்து அதிகாரியாகவோ நீதிபதியாகவோ போலீசாகவோ ஆனால் அவர்களும் அந்த சமூக அவலத்தின் பிரதிநிதியாகத்தான் இருப்பார்கள் என்பதை இப்படம் உணர்த்துகிறது.Of course ஒவ்வொரு மட்டத்திலும் சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் . ஆனால் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவான அளவில் மட்டும்!
ராமன் கேரக்டர் மட்டுமே படம் முழுக்க தெரிந்தது.அதில் நடித்த நவாசுதின் கண்ணுக்கு தெரியவில்லை.நவாஸ் என்ற நடிகனை முழுமையாக எரித்து ராமன் கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார்.இப்படிப்பட்ட நடிப்பை தமிழில் பார்க்க எனக்கும்தான் ஆசை..என்ன செய்ய!ராகவனாக வரும் விக்கியும் நன்றாகவே கேரக்டருக்கு பொருந்துகிறார்.சிம்மியும் கூட!
சிம்மி |
காலம் காலமாகவே ஹிந்தி படங்களில் தென்னிந்தியர்கள் கோமாளிகளாகவே சித்தரிக்கப்பட்டுவருகிறார்கள்(சிலபல விதிவிலக்குகளும் உண்டு என்றாலும்).தென்னிந்தியாவில் நான்கு மாநிலங்கள் உள்ளன.அவர்களுக்கு வெவ்வேறு மொழி பண்பாடு எல்லாம் உண்டு என்ற புரிதல் இல்லாமலேயே போட்டு குழப்பியடிப்பார்கள்.உதாரணமாக அமிதாப் நடித்த கூலி (1983) படத்தில் ஒரு தென்னிந்திய குடும்பம் காட்டப்படும்.அதில் குடும்பத்தலைவர் திருப்பதி பெருமாள் படத்தின் முன்பு நின்றுகொண்டு "முருகா" என்பார்.நல்லவேளை படத்தின் இறுதியில் வரும் அல்லா சென்டிமெண்டில் அல்லாவை ஏசுவோடு குழப்பாமல் இருந்தார்களே(அது இன்டர்நேசனல் விஷயம் உதயா-கும்மாங்கோ)!
ஷாருக் நடித்த ரா ஒன் ,சென்னை எக்ஸ்பிரெஸ் எல்லாவற்றிலும் தென்னிந்தியர்கள் சித்தரிப்பில் ஏக குளறுபடி!இந்தப்படத்தில் சிம்மி ஒரு தெலுங்கு பெண்.அதற்காக அவரின் ஒருகையில் திருப்பதி லட்டையும் இன்னொரு கையில் ஆவக்காய் ஊறுகாயையும் கொடுக்கவில்லை .அனுராகிடம் அந்த sensibility இருப்பது பாராட்டுக்குரியது. மற்ற ஹிந்தி இயக்குனர்களுக்கும் அது வரவேண்டும்.
ஒலக எழுத்தாளர் உள்ளிட்டோர் சொல்வதுபோல இது உண்மையான ராமன் ராகவின் கதையல்ல.அதை படமாக்க 60 களின் செட் போடவேண்டும் காஸ்ட்யூம்ஸ் சிக்கல் கிராபிக்ஸ் தேவைப்படும் போன்ற பட்ஜெட் பிரச்சனையால் நிஜ ராமன் ராகவின் கேரக்டரை தழுவி படமாக்கப்பட்டதே இப்படம்!
கண்டிப்பாக இது ஒரு அற்புதமான முயற்சி!ஆங்..படத்தில் சிகரெட் பிடிப்பது blah blah blah ; குடிப்பது blah blah என்றெல்லாம் மொண்ணை எச்சரிக்கைகள் வரவில்லை!இந்த அபத்தங்களை கடுமையாக எதிர்க்கும் அனுராகின் முயற்சியால் இது நடந்ததா என்பது தெரியவில்லை.ஆனாலும் அந்த அபத்த எச்சரிக்கை வாசகங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே என் கருத்தும்!
No comments:
Post a Comment