இப்படம் வெளியான காலத்தில் அன்றைய அமெரிக்க சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்திருக்கலாம்.ஆனால் இன்று இப்படம் இந்திய- குறிப்பாக- தமிழ் சமூகத்தின் அவலங்களுள் முக்கியமான ஒன்றைப்பற்றிய satire ஆக புரிந்து கொள்ளலாம்.
சான்ஸ்(Chance) ஆரம்ப காட்சியில் காட்டப்படும் விதம் என்பது வேறு. அதை காண்போர் அவர்தான் அந்த பெரிய வீட்டின் முதலாளி என்று எண்ணக்கூடும்.ஆனா கொஞ்ச நேரத்தில் அவர் அந்த வீட்டின் தோட்டக்காரன் என்பது தெரிய வருகிறது.படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு முதியவர்தான் வீட்டின் முதலாளி.அவருக்கு பணிவிடை செய்யும் பணிப்பெண் லூயிஸ்(Louise) .அவள் பரிதாபப்பட்டு சான்சுக்கு வேளாவேளைக்கு உணவளிக்கிறாள்.வீட்டின் ஒவ்வொரு அறையிலும் டிவி பெட்டிகள்.சான்ஸ்க்கு எல்லாமே டிவிதான்.தோட்ட வேலை செய்யும் இடத்தில்கூட ஒரு டிவி ஓடிக்கொண்டிருக்கிறது.
வீட்டின் முதலாளி இறக்கும் வரை அங்கே தோட்ட வேலை செய்துவரும் சான்ஸ் பிறகு அங்கிருந்து அட்டர்னி ஒருவரால் வெளியேற்றப்படுகிறார்.அந்த நேரத்தில் சோகமான இசையாக அல்லாமல் upbeat பின்னணி இசை ஒலிப்பதிலிருந்து தொடங்கும் மெல்லிய முரண்பாடான நகைச்சுவை என்பது கடைசிவரை நீடிக்கிறது.
யாரையுமே தெரியாத நிலையில் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு சிறு கார் விபத்து.பிறகு there is no looking back என்பது போல தொடர் ஏற்றங்கள்.காரில் இருக்கும் ஈவ் ரேண்ட்(Eve Rand) சான்சுக்கு காலில் அடிபட்டிருப்பதை கண்டு இரக்கமுற்று தன் பங்களாவிற்கு அழைத்து செல்கிறாள்.அங்கு ஈவின் வயதான கணவன் பென் ரேண்ட்(Ben Rand) அவரை கவனித்துக்கொள்ள ஒரு மருத்துவர்.அவரே சான்ஸின் கால்களையும் குணப்படுத்துகிறார்.கால் குணமாக இரு நாட்கள் அவ்வீட்டில் தாங்கும் சான்ஸ் பிறகு பென் மற்றும் ஈவின் மனதில் நிரந்தர இடம் பிடிக்கிறார்.
சான்ஸ் அப்போதுதான் நிஜ உலகை காண்கிறார்."டிவி காட்சிகள் போலத்தான் இருக்கு.என்ன இன்னும் கொஞ்சம் கூடுதலா பார்க்க முடியுது" என்று ஈவிடம் சொல்கிறார்!
பென் பில்லியனர்.அமெரிக்க சனாதிபதிக்கே ஆலோசகராக இருப்பவர்.அமெரிக்க சனாதிபதி தனிப்பட்ட முறையில் பென்னின் பங்களாவிற்கு விஜயம் செய்யுமளவு நெருக்கம்.நீங்கள் யார்?உங்களுக்கு வீடில்லையா?என்று பென் கேட்க அதற்கு சான்ஸ் தோட்ட வேலை சார்ந்து சில பதில்களை சொல்ல பென் அவற்றை தொழில் சார்ந்த மாபெரும் தத்துவங்களாக காண்கிறார்.
Ben |
இங்கே பல நுட்பமான நகைச்சுவை தருணங்கள் சற்று கவனம் தவறினாலும் கண்டுகொள்ளாமல் போய்விடக்கூடும்.உதாரணமாக சான்சை சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு லிப்டில் வைத்து லிப்ட் மேலே செல்லும்போது
சான்ஸ்"இதில் செல்வது இதான் முதன்முறை." என்று அவர் லிப்டை குறிப்பிட்டு இதுல டிவி இல்லையா? என்று கேட்க பணியாளோ அவர் சக்கர நாற்காலியை சொல்வதாக நினைத்து முதலாளி ஒன்று மோட்டாரோடு வைத்திருக்கிறார் என்று சொல்ல அங்கே அந்த முரண்பட்ட புரிதலால் நகைச்சுவை மிளிர்கிறது.லிப்டில் இருக்கும்போது சான்ஸ் பயப்படுகிறார்.மணிக்கணக்கில் இப்படியே இருக்க வேண்டும்போல என்று மிரள்கிறார்.அவையும் நகைச்சுவையாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
Lift scene |
பென்னின் பங்களாவிற்கு வருகை தரும் அமெரிக்க சனாதிபதியிடம் பல்வேறு பருவ நிலைகள் பற்றி சான்ஸ் ஏதோ தோட்டக்கலை சார்ந்து சொல்ல அதையே வேதவாக்காக நினைத்து சனாதிபதி அதை டிவியிலும் குறிப்பிட யாரிந்த சான்ஸ்?எங்கிருந்து வந்தார்?என்று தேடல் படலம் துவங்குகிறது.பதினாறு நாடுகள் அவரின் பின்னணியை ஆராய்கிறது.டிவி சேனலுக்கு ஒரு பேட்டியும் அளிக்கிறார்.பத்திரிகைகள் அவரின் பின்னணியை அறிய படாத பாடுபடுகிறார்கள்.அமெரிக்க சனாதிபதியே தனது ரகசிய உளவாளிகள் மூலம் அவரைப்பற்றி அறிய முயல்கிறார்.
அமெரிக்க சனாதிபதி |
சான்ஸ் எந்த இனக்குழுவை சார்ந்தவர் என்பதை அறிய குரல் பதிவுகள் கணினியில் ஆராயப்படுகின்றன.அவரின் கோட்டு சூட்டு அண்டர்வேர் வரை ஆராய்ந்து அமெரிக்க சனாதிபதிக்கு ரிப்போர்ட் அனுப்புகிறார்கள்.கோட்டு சூட்டு 1930 களில் தைக்கப்பட்டது.அண்டர்வேர் 1940 களில் செய்யப்பட்டது என்று அறிக்கை தருகிறார்கள் .முன்னாள் CIA agent என்று FBI யும் முன்னாள் FBI agent என்று CIA வும் சொல்கிறது.CIA வுக்கும் FBI க்குமான ஏழாம் பொருத்தத்தை இக்காட்சி பகடி செய்கிறது!
சான்ஸ் எப்போதுமே ரெண்டு இன்ச் மேக்கபுடனேயே வருகிறார்.பென்னின் பழைய கோட்டு சூட்டுக்களை அணிந்துகொள்கிறார்(கணுக்காலுக்கு மேல் பேண்ட்!).எப்போதுமே தனது இயல்பிலேயே இருக்கிறார்.சாமானிய மனிதர்கள் போல இருக்கும் சூழலுக்கு ஏற்பவோ சூழ்ந்திருக்கும் மனிதர்களுக்கு தக்கவாரோ துளியும் மாறாமல் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதையே பேசுகிறார்.அதனாலேயே அவர் அனைவராலும் விரும்பப்படுகிறார்.போலி பேச்சுக்கள் உணர்ச்சிகள் உடல்மொழிகள் இவைகளையே கண்டு சலித்த அந்த elite மனிதர்களுக்கு இவரின் சிக்கலற்ற எளிமை சொல்ல நினைத்ததை சொல்லும் துணிச்சல்(ஒரு பத்திரிக்கைகாரன் நீங்கள் உங்கள் வாழ்க்கை வரலாற்றை புத்தகமா எழுதாலமே?என்று கேட்க I cant read ...I cant write...I only watch TV என்று சொல்ல ஆமாம் மிகப்பெரும் புள்ளிகள் யார்தான் பேப்பரோ புக்கையோ வாசிக்கிறார்கள்?என்று அவனாகவே ஒரு கற்பனை அர்த்தத்தை கொடுத்துக்கொள்கிறான்.) எல்லாம் பெரும் ஈர்ப்பையும் மரியாதையையும் பெற்று தருகிறது.
Eve |
பென்னின் மனைவி ஈவ் சான்சை விரும்புகிறார்.பென்னும் தன் மரணத்துக்கு பிறகு என் மனைவியை நீதான் கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.தொலைகாட்சியில் என்ன காட்சி வருகிறதோ அதற்கு தகுந்தாற்போல் நடந்துகொள்பவர் சான்ஸ்.யோகா பயிற்சி ஓடிக்கொண்டிருந்தால் எந்த இடம் என்றும் யோசிக்காமல் அவரும் யோகா செய்ய ஆரம்பித்துவிடுவார்!முத்தக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போது ஈவை அனைத்து முத்தம் கொடுக்க காட்சி முடிந்ததும் அவளை விட்டுவிட்டு அமைதியாக உட்கார்ந்து விடுகிறார்.அதற்குப்பின்னர் நடப்பவை அதகளம்! :D
பென் இறந்துவிட அவரின் சவப்பெட்டியை அடக்கம் செய்ய எடுத்துசெல்லும் நபர்கள் இந்த அமெரிக்க சனாதிபதி அடுத்தமுறை வரக்கூடாது.வேறு நபரைத்தான் நாம் முன்னிருத்தணும்.பின்னணி எதுவுமே இல்லாத அல்லது மிக குறைவாக பின்னணியால் அறியப்படும் நபரே சிறந்த தேர்வு என்கிறார்கள்.அதுக்கு சான்ஸ்தான் சிறந்த நபர்.அவரின் பின்னணி என்னன்னு யாருக்குமே தெரியாது.எனவே எதிர்கட்சிகள் எதையும் கிண்டி கிளற வாய்ப்பே இல்லை என்று பேசிக்கொண்டிருக்க அந்த இறுதி சடங்கிலிருந்து விலகி சான்ஸ் ஆற்றங்கரையோரம் நடந்து செல்கிறார்...
பிறகு ஆற்றின் குறுக்கே நடந்து பாதி ஆற்றுக்கு நடுவே நின்றபடி வியந்து தனது குடையை ஆற்றுக்குள் விட அது மிக ஆழமாக உள்ளே செல்வதாக படம் முடிகிறது.
ஆற்றின் மேலேயே நடக்கிறார்!எனவே இவர் அபூர்வ சக்தி கொண்டவர்!கடவுளின் தூதர் என்றெல்லாம் reading between the lines செய்ய தேவையில்லை .அப்படி செய்வது இப்படத்திற்கும் சான்ஸ் கேரக்டருக்குமே இழுக்காக முடியும்(சில திரைப்பட ஆராய்ச்சி மாணவர்கள் அது மூழ்கியிருக்கும் pier அதன் மேல் இவர் நிற்கிறார் என்றெல்லாம் ஆராய்ந்திருக்கிறார்கள் என்று படித்தேன்).அது அப்படிதான்!என்று எளிமையாக கடந்து செல்வதே சரியான புரிதலாக இருக்கும்!
ஒரு சமூகம்-அதன் கலாச்சாரம்-தொலைக்காட்சியே பிரதானமாகிப்போன அன்றாட வாழ்க்கை-ஓவர்நைட்டில் ஒரு சாமானிய நபரை டிவி மூலம் பிரபலமாக்குவது(நம்மூர்லையே அதான நடக்குது!-கும்மாங்கோ) என அனைத்தின் மீதான satire ஆக இப்படம் இருக்கு.
சான்ஸாக பீட்டர் செல்லர்ஸ். அவரின் தனித்தன்மை என்பது " இந்தக்காட்சியில் இப்படி நடித்து மக்களை சிரிக்க வச்சிடணும் என்றோ இப்ப நம்ம நடிப்ப பாத்து ஆடியன்ஸ் என்னமா சிரிச்சிட்டிருப்பான்" என்றோ பிரக்ஞை இல்லாது ஏற்றுக்கொண்ட கேரக்டரின் தீவிரத்தோடே நடிப்பவர்!அதுதான் இன்னும் கூடுதலாக சிரிப்பை வரவைப்பது!இப்படத்தில் அனைவரும் அமெரிக்க ஆங்கிலம் பேசினாலும் இதை அமெரிக்க படமாக பார்க்க முடியாது.நகைச்சுவை பாணி என்பது ஐரோப்பிய குறிப்பாக பிரிட்டிஷ் படமாகவே இது தெரிந்தது!
No comments:
Post a Comment