இக்கதை என்பது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியை பதிவு
செய்வது.அதோடு நில்லாமல் அந்த கடலோர கிராமமான தேங்காய்பட்டினம் என்ற ஊரில் உள்ள
மக்களின் வாழ்க்கைமுறை, பேச்சுவழக்கு, மதநம்பிக்கையே பிரதானமான ஒரு வாழ்க்கை என்று
மிக நுட்பமான சித்தரிப்பாக உள்ளது.உண்மையில் தோப்பில் முகம்மது மீரான் அவர்கள்
வாழ்ந்த சூழலை பதிவு செய்திருக்கிறார்.
வடக்குவீட்டு
முதலாளி எனப்படும் அகமதுகண்ணு, மேற்கு வீட்டு முதலாளி இருவருக்கும் இடையே நடக்கும்
ஈகோ போட்டியாக துவங்கும் கதை பின்னர் பல்வேறு கிளைக்கதைகளாக விரிகிறது.
சாகுல் ஹமீது என்பவரின்
மகன் அகமதுகண்ணு.அவரின் சகோதரி நூஹு பாத்திமா.சகோதரி பருவமடைந்ததுமே தந்தை
மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறார்.ஊரே அசந்து போகும் ஒரு கல்யாணம்.யானை குதிரை
சகிதம்.மாப்பிள்ளை படகில் வந்து இறங்கும் தருணத்தில் அவருக்கு பத்து பவுன் சங்கிலி
போட்டு தடபுடலாக வரவேற்க செல்கிறார் அகமதுகண்ணு.அங்கே மாப்பிள்ளையை கண்டதும் அவர்
மட்டுமல்லாது பலரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.அங்கே நிற்பது அறுபது வயது
முதியவர்.தனது மகனுக்குத்தான் பெண் பார்த்ததாகவும் அவனுக்கு பதினேழு வயதே ஆவதால்
தானே திருமணம்(மூன்றாவது)செய்துகொள்ள முடிவு செய்ததாகவும் சொல்லி சிரிப்பதாக
வருகிறது.
பின்னர் திருமணம் முடிந்து
ஒரே வருடத்தில் நூஹு பாத்திமாவின் கிழ கணவன் மரணமடைய சகோதரன் அகமதுகண்ணு
வீட்டுக்கே வந்துவிடுகிறாள்.அப்படியாக இருபது வருடங்கள்!அந்த திருமணத்தின் மூலம்
பிறந்தவன் பரீது.அவனுக்கு இருபது வயதானாலும் கொஞ்சம் மன வளர்ச்சி
குறைந்தவன்.அகமதுகண்ணு வீட்டில் மாடுகளை கவனிப்பது சாணி அள்ளி போடுவது சாக்கடை
அடைப்பை எடுப்பதுவரை அனைத்தும் பரீதுதான்!
தோப்பில் முகமது மீரான் |
அகமது கண்ணுவுக்கு ஆயிஷா
என்றொரு மகள்.ஆயிஷாவுக்கு பரீது மீது அளவில்லா பிரியம்.பரீதுக்கும் அத்தகைய
பிரியம் இருந்தாலும் தான் மனவளர்ச்சி குறைபாடுல்லவன்.தான் ஆயிஷாவுக்கு எந்த
விதத்திலும் தகுதி இல்லை என்று கருதிக்கொண்டவன்.
ஆயிஷாவுக்கு அவள் விருப்பத்திற்கு மாறாக(வழக்கம் போல)திருமணம்
செய்துவைக்கிறார் அகமதுகண்ணு.ஒரே வாரத்தில் அவளும் தனியே வீடு திரும்புகிறாள்.காரணம் மாப்பிள்ளை ஒரு
மனநோயாளி.நூஹுவுக்காவது வாழ்க்கையை முன்நடத்தி செல்ல பரீது எனும் மகன்
உள்ளான்.ஆனால் ஆயிஷாவுக்கோ எந்த பிடிப்பும் இல்லாமலேயே மீத காலத்தை கடத்தியாக
வேண்டும்!அது அகமதுகண்ணுவை உடைத்துப்போடுகிறது.பட்ட காலிலே படும் எனும்படி தொடர்ந்து வேறுபல
சிக்கல்கள் சோதனைகள் இக்கட்டுக்கள் அகமதுகண்ணு குடும்பத்தை சூழ்கிறது.
அகமதுகண்ணு பல்லக்கில்தான்
பயணம் செய்வார்.அவர் பல்லக்கில் வரும்போது ஊர் மக்கள் எவரும் அந்த பாதையை மறித்து
நிற்கவோ நடக்கவோ கூடாது.பாதை ஓரமாக நின்று மரியாதை செலுத்த வேண்டும்.அப்படி
மரியாதை செலுத்தாமல் திமிராக நடக்கிறான் மஹ்ம்மூது.அவன் சுறாப்பீலி
விற்பவன்.எவருக்கும் அஞ்சாதவன்.
அகமதுகண்ணு உத்தரவு
கிடைத்தபின்னரே ஊர் பள்ளிவாசலில் ஒவ்வொரு வேலை தொழுகை துவங்கும்.அப்படி அவர்
வரமுடியாத/விரும்பாத பட்சத்தில் அவர் தனது தலையை சுற்றி தலைப்பாகை மாதிரி ஒரு
வெள்ளை துணியை சுற்றி எடுத்து அதை அனுப்பி தொழுகையை ஆரம்பிக்கலாம் எனும்
அங்கீகாரத்தை கொடுப்பார்.
இவரின் இத்தகைய செயல்களை
கடுமையாக எதிர்க்கிறான் மஹ்ம்மூது.அதுமட்டுமல்லாது ஒரே ஒரு மதரசா பெயரளவுக்கு
நடக்கும் ஊரில் ஆங்கில பள்ளிக்கூடம் அமைப்பதற்கான இடத்தையும்(தனது மகள்
திருமணத்திற்கு வரதட்சணையாக கொடுக்க வைத்திருந்த நிலம்)தானமாக கொடுக்கிறார்.அங்கு
ஆங்கில பள்ளியும் வருகிறது.
ஆங்கில பள்ளி என்பது
நரகத்திற்கான வழி!”மூணாம் வேதத்துக்காரன்(கிறிஸ்தவர்கள்) நம்மை காபிராக்க
பார்க்கிறான்”.”கால்சராய், கிராப்பு எல்லாம் காபிரின் அடையாளங்கள்” என்பது
மாதிரியான பிரச்சாரத்தின் பயனாக(!!) பள்ளிக்கு வெகுசில மாணவர் தவிர்த்து யாருமே
வருவதில்லை!அவர்களிலும் ஒருத்தரை தவிர அனைவரும் முஸ்லிமல்லாதவர்கள்.ஒரே ஒரு
முஸ்லிம் மாணவன்.அது மஹ்ம்மூதுவின் மகன்.
அந்த பள்ளியையும் தீவைத்து
கொளுத்துகிறார் அகமதுகண்ணு.பள்ளி ஆசிரியரையும் அவரது மனைவியையும் ஊரே பலவாறாக
அசிங்கப்படுத்துகிறது.அதையும் தாங்கிக்கொண்டு எப்படியாவது இந்த கிராமத்தின்
இருள்நீக்க அவர் அங்கே இருக்கிறார்.கடைசியாக
பள்ளியும் தீயில் கருகிவிட கதறி அழுவதாக வருகிறது.
மதரசாவில் அசனார் லெப்பைதான் எல்லாம்.பத்து நாட்களுக்கு ஒருமுறை
குளிப்பவர்.மாணவர்களில் நீண்ட நகம் கொண்டவனை அழைத்து உடம்பெங்கும் சொறிய
சொல்கிறார்.மதரசா கரும்பலகையில் ஒரு மாணவன் தமிழில் ஏதோ எழுதிவிட "குரானின் புனித
வசனங்கள் எழுதும் பலகையில் காபிரின் மொழியை எழுதியது யார்?" என்று கண்டுபிடித்து
பிரம்படி கொடுக்கிறார்.
அந்த ஊருக்கு ஜின் விரட்ட
தங்ஙள் ஒருவர் வருகிறார்.மேற்குவீட்டு முதலாளி வீட்டில் தங்கும் அவருக்கு ராஜ
மரியாதை என்று கேள்விபட்டதும் அகமதுகண்ணு அவரை தன் வீட்டில் இரண்டு மாதங்கள்
வைத்து அதை மிஞ்சும் உபசாரம் அளிக்கிறார்.அதற்காக பெரும்பணத்தை செலவழிக்கிறார்.
தங்ஙளை காண பல மக்கள்
பல்வேறு பிரச்சனைகளோடு வருகிறார்கள்.சிலருக்கு மந்திரம் ஓதிய நீரை கொடுப்பது(அதில்
ஒருவன் “எச்சில் தெளித்த தண்ணிய நா ஏன் குடிக்கணும்?” என்று தங்ஙள் முன்பே தன்
தாயிடம் வாதம் செய்கிறான்),மந்திரித்த கயிறு கொடுப்பது, பரிகாரங்கள் சொல்வது
மாதிரி செய்துகொண்டிருக்கிறார்.அப்போது திருமணமாகி பன்னிரண்டு வருடமாக பிள்ளை
இல்லாத ஒரு பெண்ணும் அவள் தாயும் வருகிறாள்.
இதுபற்றி தங்ஙள் விசாரிக்க “கணவன் ஒரு மரக்கட்டை” என்கிறாள் அவள்.கதவு
ஜன்னல்களை அடைக்கசொல்லி அந்த பெண்ணின் காலில் ஒரு கருப்பு கயிரை கட்டி இன்னொரு
முனையை கதவின் சாவி துவாரத்தின் துளை வழியே வெளிய பரீதை பிடித்துக்கொள்ள
சொல்லிவிட்டு(கதவை சாத்தியதும் அவள் காலில் உள்ள கயிற்றை கட்டில் காலில் கட்டிவிட்டு)
அவளுக்கு பிள்ளைவரம் தருகிறார்!சில காலம் கழித்து கர்ப்பம் தரித்த அவள் தாயோடு
வந்து நன்றி சொல்கிறாள்!
இந்த தங்ஙள் பகுதி பெரும்
எள்ளல் தொனியோடே சொல்லப்பட்டுள்ளது. தங்ஙள் நூஹு பாத்திமாவை மறுமணம் புரிய
விரும்பும் விருப்பத்தை அகமதுகண்ணு கேள்விப்பட்டு தங்ஙளை வீட்டை விட்டு
விரட்டுகிறார். தங்ஙள் இப்படி ஊருக்கு ஊர் திருமணம் புரிந்து பிள்ளைகுட்டி ஆனதும்
கைவிட்டு வேறூருக்கு சென்றுவிடுகிறார்.
இங்கே வடக்குவீட்டு
அகமதுகண்ணு நினைவுபடுத்தியது இரண்டு திரைப்பட கதாபாத்திரங்களை.ஜல்சாகர் படத்தின்
பிஸ்வம்பர் ராய் கதாபாத்திரம்.இன்னொன்று எலிப்பத்தாயம் படத்தின் உண்ணி.
ஜல்சாகர் படத்தில் மனைவி பிள்ளைகளை வெள்ளத்தில் பறிகொடுத்த பிஸ்வம்பர் ராய் எனும் முதியவர் தான் ஒருகாலத்தில் வாழ்ந்த ராஜவாழ்க்கையை விடமுடியாமலும் தற்கால சமூக மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து அதோடு ஒட்டி வாழ முடியாமலும் தவிப்பவர்.அடுத்த வீட்டில் குடியேறும் புதுப்பணக்காரன் பெரும்பணம் செலவழித்து ஒரு இசை கச்சேரியை தனது பங்களாவில் நடத்துவதை கேள்விப்பட்டதும் தானும் மீதமிருக்கும் நகை பணத்தை கொண்டு ஒரு இசை கச்சேரி நடத்துகிறார் பிஸ்வம்பர் ராய்.
ஜல்சாகர் படத்தில் மனைவி பிள்ளைகளை வெள்ளத்தில் பறிகொடுத்த பிஸ்வம்பர் ராய் எனும் முதியவர் தான் ஒருகாலத்தில் வாழ்ந்த ராஜவாழ்க்கையை விடமுடியாமலும் தற்கால சமூக மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து அதோடு ஒட்டி வாழ முடியாமலும் தவிப்பவர்.அடுத்த வீட்டில் குடியேறும் புதுப்பணக்காரன் பெரும்பணம் செலவழித்து ஒரு இசை கச்சேரியை தனது பங்களாவில் நடத்துவதை கேள்விப்பட்டதும் தானும் மீதமிருக்கும் நகை பணத்தை கொண்டு ஒரு இசை கச்சேரி நடத்துகிறார் பிஸ்வம்பர் ராய்.
பிஸ்வம்பர் ராய்-ஜல்சாகர் |
அதுபோலத்தான் இங்கேயும்
தங்ஙளுக்கு மேற்குவீட்டில் ராஜவிருந்து என்றதும் தனது வசமிருக்கும் தென்னம் தோப்புக்களை விற்று தினம் மீன் கறி என்று தங்ஙளுக்கு
விருந்தளிக்கிறார்.
எலிப்பத்தாயம் உண்ணியும் ஒரு
மேட்டுக்குடி வம்சத்தை சேர்ந்தவர்தான்.அவராலும் கால மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க
முடியவில்லை.தனது சகோதரிகள் இல்லாமல் அவராலே எதையும் செய்யமுடிவதில்லை.அவர்களுக்கு திருமணம் செய்துகொடுக்காமல் அதைப்பற்றிய எந்தவித கவலையும் இல்லாமல்
இருப்பவர்.தனக்கு கீழே பணியாற்றும் பணியாட்களை இழிவாக நடத்துபவர்.தனது
சகோதரிகளையும்கூட!
உண்ணி-எலிப்பத்தாயம் |
அகமதுகண்ணுவின் சகோதரி
மறுமணம் புரிய மறுத்துவிடுகிறார் எனும்போதிலும் தனது மகள் வாழ்க்கை நாசமாக
ஒரு காரணமாக(உண்ணி போல) இருப்பவர்.இவர்கள் மூவருக்குமே சாய்வு நாற்காலி என்பது உடலின் ஒரு அங்கமாக மாறிப்போனது மற்றொருoஒற்றுமை!
அகமதுகண்ணுவிடம் உதவி என்று
வருவோர் கண்டிப்பாக தொழுதிருக்க வேண்டும்.அதன் அடையாளங்களை கண்ட பின்பே அவர் உதவி
செய்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பார்.அதனால் இவரிடம் உதவி கேட்பதற்கு
இருவாரங்கள் முன்பிலிருந்தே தொழுது அதன் அடையாளங்கள் இருப்பதை உறுதி செய்தபின்பே
இங்கே உதவி கேட்டு வருவர்.
இங்கே கதையின் ஒரு
இடத்தில் மதம் சார்ந்த பகடி கொஞ்சம் கூராகவே இருக்கும்.அகமதுகண்ணு திண்ணை சாய்வு
நாற்காலியில் அமர்ந்திருக்க திடீரென்று நாற்காலியோடு பூமியால் தான்
விழுங்கப்படுவது போல அவருக்கு hallucination ஆகிறது.அப்போது அவர் “சரி, பூமியின்
அடிப்பாகம் காளை மாட்டின் கொம்பால் தாங்கப்பட்டிருக்கும்”.அந்த இரு கொம்புகளை
பிடித்துக்கொண்டுவிடலாம் என்று தனக்குத்தானே ஆசுவாசப்படுத்திக்கொல்வதாக வரும் அந்த
இடம்.
இந்த அசனார் லெப்பை கதையின்
முன்பகுதியில் ஒரு caricature போல காட்டப்பட்டாலும் பிற்பகுதியில் தங்ஙள்
பெயரைசொல்லி சம்பாதித்து(தங்ஙள் சட்டியில் வறுபட்டிருந்த கோழிக்கு உயிர் கொடுத்ததை
நேரில் கண்டதாக சொல்லி)பெரும் செல்வந்தனாகவும் ஊர் மதிக்கும் ஒரு பெரிய
மனிதனாகவும் மாறுவதாக வருகிறது.
இன்னொரு பக்கம் பரீது இலங்கை
சென்றுவிடுகிறான்.ஒருநாள் திரும்பிவருவேன் என்று ஆயிஷாவிடம் உறுதியளித்து
செல்கிறான்.ஆயிஷா நீரால் விழுங்கப்படுகிறாள்.அகமதுகண்ணு
முழுமையாக மனநலம் பிரழ்ன்றவறாக மாறுகிறார்.
ஒற்றை கலாச்சாரம்-ஒற்றை
பண்பாடு-'சவுதி சொல்வதே சட்டம்' என்று
straight jacket போல அந்தந்த நாட்டின் ஊரின் பழக்கவழக்கங்களின்
கழுத்தை நசுக்கி அனைத்தையும் ஒற்றை பண்பாடாக திணிக்க முயலும் வாகாபிய சூழலில் இசுலாமிய சமூகத்தில் இருந்தே இதுமாதிரியான
சுயபகடி கொண்ட படைப்புகளும் விமர்சனங்களும் சுயபரிசோதனைகளும் எழுவதன் தேவை மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.தோப்பில் செய்த அந்த பணியை இன்று தொடர எத்தனை பேர் உள்ளனர் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது!
No comments:
Post a Comment