Sunday, 27 October 2024

Mukundan Unni Associates

 சாதாரண நகைச்சுவை படங்கள் சிரிக்க வைக்கும்.ஆனால் அவல & அபத்த நகைச்சுவை படங்கள் சிந்திக்க......இது அரதப்பழசான வாக்கியம்......இல்லை....அவல நகைச்சுவை படங்கள் அன்றாட வாழ்வின் குரூரத்தை,அடுத்தவர்களை ஏமாற்ற பயன்படும் குறுக்கு வழிகளை, தில்லாலங்கடி வேலைகளை அப்பட்டமாக சமரசமின்றி காட்டும்.

 

       இப்படமும் அப்படித்தான்.Nightcrawler படத்தின் தழுவல் தான்.அப்படத்தில் ஊடக நிறுவனத்தில் "செய்திகளை முந்தித்தரும்" போட்டியில் இருக்கும்  பணம் பண்ணும் ஒரு மகத்தான வாய்ப்பை நாயகன் காண்கிறான்.அதை நடைமுறைப்படுத்தி குறுகிய காலத்திலேயே கோடீஸ்வரன்.... இல்லை.... மில்லியனர் ஆகிறான்.


        இதில் இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக் அப்படத்தின் சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதை அப்படியே மருத்துவ காப்பீட்டில் நடக்கும் மோசடிகளை கதையின் களமாக மாற்றியதில் அவரது சாமர்த்தியம் பளிச்சிடுகிறது!

 அதைவிடவும் சாமர்த்தியம் வாய்ந்த ஒரு காட்சிப்படுத்தல் என்றால் அது படத்தின் aspect ratio!முகுந்தன் உன்னி அன்றாட வாழ்க்கைக்கே போராடும் ஒரு சாதாரண ஜூனியராக இருந்து பிறகு அந்த  வேலையும் போய் அடுத்து என்ன செய்யலாம் என்று போராடும் வரையில் படம் பழங்கால letterbox format ல் காட்டப்படுகிறது.பிறகு கால் உடைந்த நபரின் மனைவி மூலமாக வழக்கில் வெற்றி பெற்று அந்த பெண்ணுக்கு 45000 ஜி பே செய்யும் அந்த தருணத்தில் மிகச்சரியாக காட்சி விரிந்து முழு திரையை ஆக்கிரமிக்கிறது!Wow!இதை நாம் எதிர்பார்க்கவில்லை.படம் பார்க்க துவங்கியதில் இருந்தே ' ஏன் 4:3?' என்ற குழப்பம் இருந்துகொண்டே வந்தது!பிறகு மேற்சொன்ன காட்சி!
      மற்றொரு பிடித்த விஷயம் வாய்ஸ் ஓவரில் நாயகன் தான் சந்திக்கும் மனிதர்களை தான் எடை போடும் விதம்,தான் எடுத்த முடிவுகள்,அதில் உள்ள பிழைகளால் வரும் பின்விளைவுகள்,எடுக்கப்போகும் முடிவுகள்,தான் வாழ்வில் பொருளாதார உச்சத்தை அடைய டிஸ்யூ பேப்பர் போல சக மனிதர்களை பயன்படுத்தி தூக்கி எறியப்போகும் விதம் போன்றவற்றை சொல்லிக்கொண்டே வருகிறார்.

 
      குறிப்பாக தன்னிடம் உதவியாளராக இருக்கும் ராபின் தாடி- கலைந்த தலை- செருப்பு- கசங்கிய பேண்ட் சட்டை என்று வருவதை கண்டிப்பதாக ஒரு காட்சி .பிறகு வேறொரு தருணத்தில் வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் பளபள ஷூ க்ளீன் ஷேவ் தலையில் ஹேர் ஜெல் என்று வந்து நிக்கும்போது ஹீரோ "இவன் நம்மை விட ஸ்மார்ட்டாக இருக்கானே" என்று பொறாமைப்படும் காட்சியில் பேட்ரிக் பேட்மேன்  விசிட்டிங் கார்டை பார்த்து கொதிக்கும் காட்சியை காண முடிந்தது.இதை காப்பி என்று சொல்ல முடியாது.ஆனால் அந்த கேரக்டரின் தன்மையை முகுந்தன் உன்னியில் காண முடிந்தது.

 

         பேட்ரிக் பேட்மேன் பணத்துக்காக எதையும் செய்வதில்லை!அவனிடம் இல்லாத பணமில்லை!அதனாலேயே எதோ ஒரு பிராயத்தில் தடம் புரண்டதால் அப்படி நடந்து கொள்கிறான்.ஆனால் முகுந்தன் உண்ணி அப்படியல்ல.
     ஒன்று தான் ஜெயிக்க வேண்டும்.இல்லாவிட்டால் மரணிக்க வேண்டும் என்று இரு எதிரெதிர் முடிவுகளை மட்டுமே வைத்துக்கொண்டு முன்னகர்பவன். வெகுகாலமாக ஒரு வழக்கறிஞரிடம் டம்மியான அல்லைக்கை போல இருந்து இருந்து அவனுக்கு அந்தமாதிரியான நிலையில் இனி என்றுமே இருக்க கூடாது என்ற வெறி வந்துவிட்டது.அதற்காக எதையும் செய்யலாம்!யாரையும் மிதிக்கலாம் என்று பயணிக்கிறான்!
       இதில் குறிப்பிட வேண்டிய மற்ற கதாபாத்திரங்களில் அந்த பெண் எம்.எல். ஏ கேரக்டர்.அதுசரி 'அரசியல்வாதிகள் என்றாலே தியாகிகள் தானே!' என்பதால் அவரை விட்டுவிடுவோம்.மற்றொரு கேரக்டர் மீனாட்சி!
       மருத்துவமனை போர்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் டாக்டர் வின்சென்ட் தன்னை ஒருதலையாக காதலிக்கும் போது கூட எந்தவித சம்மதமும் தராமல் வேறொரு பெரிய "கை"க்காக காத்திருக்கிறார்.அப்போதுதான் முகுந்தன் உண்ணியை சந்திக்கிறார்.

      இதில் மிகவும் பிடித்த விஷயம் மீனாட்சியின் பாத்திரப்படைப்பு!தற்கால படங்கள் பலவற்றில் காட்டப்படும் "independent ,goal oriented ,நிறைய படிக்கணும், career ல் உச்சம் தொட வேண்டும்,ஆண்களை விட பெண்கள் மேல்" அப்படி இப்படியென்று எந்தவித template க்குள்ளும் சிக்காத ஒரு பாத்திரப்படைப்பு.

      வசதியான ஒருவனை திருமணம் செய்துகொள்ள வேண்டும்.படிப்பு வேலை எந்த பிடுங்கலும் இல்லாமல் chillout செய்ய வேண்டும் என்பதே இவர் ஆசை.



    நம்மிடம் கூடுதல் பணமிருந்தால் அதை வங்கி வைப்பு நிதியில் போட்டால் அதிக லாபம் வருமா?தங்கத்தில் போடலாமா?etc..etc.. என்று சிந்திப்பது போல இவர் யாரை திருமணம் செய்தால் அதிக return of investment கிடைக்கும் என்பதாக கணக்கு போட்டு வின்சென்ட்டை ஏற்க மறுத்து முகுந்தன் உண்ணியை திருமணம் செய்கிறார்.

 
     தற்கால திருமணங்கள் 90% இப்படி Return of investment என்ற கணக்குப்படி தான் நடக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.மேலும் முகுந்தன் உன்னிக்கு சகல விதத்திலும் மருத்துவமனை ஊழியராக உதவுவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது சாமர்த்தியமான யோசனைகளையும் கொடுக்கிறார்.அவ்வகையில் இறந்து போன வேணு வக்கீல்(சூரஜ்) கொடுக்கும் யோசனைகளை விடவும் இவை நன்றாக இருக்கிறது.ஒருவகையில் முகுந்தன் மீனாட்சியை திருமணம் செய்ததே இந்த சாமர்த்தியம் மிகுந்த குணத்தினால் தான் என்பதையும் மறுக்க முடியாது!
    வினீத் ஶ்ரீநிவாசன் நடித்த  காமெடி படங்களை பார்த்துள்ளோம்.இவ்வளவு தீவிரமான கேரக்டரில் அவர் நடிப்பதை பார்த்து இதுவே முதல்முறை.எதற்கும் பெரிதாக ஜெர்க் ஆகாமல் மிகத்துல்லியமாக கணக்கிட்டு காய் நகர்த்தும் கேரக்டரை கச்சிதமாக செய்துள்ளார்.சூரஜுக்கு இதில் பெரிய வேலையில்லை!அந்த கார் பள்ளத்தில் விழும் காட்சியில் அதீத மன திருப்தியுடன் "ஒரு கவிதை போல" என்று முகுந்தன் உன்னி  சொல்லும் காட்சி ரணகளம்!

 
மீனாட்சியாக நடித்த ஆர்ஷா சாந்தினி பைஜு தனது சொந்த திட்டத்தின்படி முன்னகரும் ஒரு கேரக்டரில் நன்றாக பொருந்துகிறார்.குறிப்பாக பார்க்க படு வெள்ளந்தியாக தோற்றமளித்தாலும் உள்ளே அவரின் சாமர்த்தியமான காய் நகர்த்தல் திட்டங்கள் ரசிக்க வைத்தது!

குறிப்பாக படத்தின் இறுதியில் ஜோதியுடன் அவர் நடத்தும் உரையாடல்!வாழ்வில் பெரிய உச்சம் தொட்டவர்கள் எப்படி அந்த இடத்துக்கு வந்தார்கள் என்பதாக நடக்கும் உரையாடல் அற்புதம்!      

பணத்தையே பிரதானமாகக்கொண்டு சக மனிதர்களை எடைபோடும் தற்கால உலகில் 'உழைப்புடா!நீதிடா! நேர்மைடா!' என்று சொல்லித்திரியும் மற்றொரு டால்டாவாகவே   ஜோதிலக்ஷ்மி உள்ளார்!
 

ஒருவேளை மீனாட்சி அவர் இடத்தில் இருந்திருந்தால் இந்நேரம் லட்சங்களை ஃபீஸாகப்பெறும் வக்கீலாகி இருப்பார்!
ராபினாக வருபவர் தாடியுடன் வரும் காட்சிகளில் பாலகிருஷ்ணாவை(தோற்றத்தில்) நினைவுபடுத்துகிறார்!

 

      படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக கேள்விப்பட்டோம்.இரண்டாம் பாகம் என்றாலே கொஞ்சம் தயக்கம் தான்!பார்க்கலாம்!

      இதே மாதிரி ஈவிரக்கமின்றி சக மனிதர்கள் மேல் காலை வைத்து ஏறி உச்சம் தொடும் மற்றொரு கேரக்டர் என்றால் அது நமதபிமான மற்றொரு படமான சரண் இயக்கிய(கடைசி உருப்படியான படமான) வட்டாரம் படத்தின் பர்மாவை  சொல்லலாம்.(நா என்ன மடையனா?மாங்காயா??)
 

அடங்கப்பா!நமக்கு பிடித்த ஒரு தமிழ்ப்படத்தை சொல்ல வேண்டுமென்றால் பதினெட்டு வருஷம் back ல போக வேண்டியிருக்கு!

 
வாழ்க தற்கால போராளி தமிழ் இயக்குனர்கள் & அவர்களுக்கு முட்டு கொடுக்கும் ஒலக விமர்சகர்கள்!

Wednesday, 23 October 2024

எதிர்பாரா நடிப்பு(கள்)!

 சிறந்த நடிக நடிகைகள் என்று அறியப்படுவோர் நடிக்கும் படத்தில் அவர்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவது ஒருவகை.அது நாம் ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்று.நமது எதிர்பார்ப்பை தாண்டியும் நடிக்கலாம் அல்லது எதிர்பார்த்த அளவுக்கு கீழேயும் போகலாம்.
      ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது இப்படி ஒரு நடிகனோ நடிகையோ இருப்பதே தெரியாமல் ஒரு படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் அவர்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் அந்த தருணம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.
      பல்வேறு படங்களில் பலரை சொல்லலாம்.நாம் சமீபத்தில் பார்த்த படங்களில் கண்ட நல்ல நடிப்பை மட்டும் குறிப்பிடுகிறோம்.
*******

தங்கம் படத்தில் மராட்டிய காவல் அதிகாரியாக வரும் அந்த நடிகர் கிரீஷ் குல்கர்னி.இவர் ஏற்கெனவே தேசிய விருது பெற்றவர் என்பதெல்லாம் நமக்கு தெரியாது.வழக்கமாக ஒரு மொழி படத்தில் வேற்றுமொழி ஆசாமிகளை டம்மியாக, கோமாளியாக அல்லது தத்தியாக காட்டுவதே வழக்கம்.இவரையும் அப்படித்தான் சுற்றலில் விடப்போகிறார்கள் என்று நினைத்தால் இன்ப அதிர்ச்சி .

 

          மனிதர் அட்டகாசமாக நடித்து மொத்த படத்தையும் கபளீகரம் செய்துவிட்டார்.கடைசியில் பிஜு மேனன் அலட்சியமாக Get lost என்பது மாதிரியான அர்த்தத்தில் மலையாளத்தில் சொல்ல சிறிது தூரம் சென்றுவிட்டு திரும்ப வந்து அதையே சொல்லிவிட்டு செல்லும் காட்சியாகட்டும் அல்லது முத்துப்பேட்டையில் உள்ள தமிழக மேலதிகாரி "உன் மேலதிகாரியை பேச சொல். அப்ப கைதியை விசாரிக்கும் உரிமையை தருகிறேன்" என்று சொன்னதும் அந்த தங்க செயினை அடிமட்ட காவல் அதிகாரி லஞ்சமாக வாங்கியதை மறைமுகமாக குறிப்பிட்டு அவரிடம் கைதியை விசாரிக்க சம்மதம் பெறும் காட்சியையும் கூறலாம்.
       இதே படத்தில் ஹசீனா கேரக்டரில் நடித்த தீபிகா ராஜா பற்றியும் கூற வேண்டும் .அந்த விசாரணை காட்சியில் கொஞ்சமும் அசராமல் கல்நெஞ்சமாக அமர்ந்திருக்கும் அந்த காட்சியில் அவரது நடிப்பு அற்புதம் . ஆனால் அடுத்து வந்த தியேட்டர் காட்சியில் தீவிரத்தை காணோம்.அந்த தீவிரத்தை தான் வரும் அத்தனை காட்சிகளிலும் தக்க வைப்பதே ஒரு சிறந்த நடிகன்/நடிகையின் அடையாளம்.தவிர இதில் அவர் வியக்க வைத்து விஷயம் உண்டு.



    தமிழில் நடிக்கும் நடிக நடிகைகள் தங்களுக்கு ஹிந்தி தெரிந்தாலும் "அதெல்லாம் எனக்கு ஒரு வார்த்தை கூட தெரியாது" என்பதாக கேமராவுக்கு முன்பும் பின்பும் நடிப்பார்கள்.(அப்படி நடித்தால் தான் அடுத்த பட வாய்ப்பு வருமோ?- கும்மாங்கோ).படத்தில் ஒரு கேரக்டர் வட மாநிலத்திலேயே வாழ்வதாக காட்டினாலும் ஒரு வார்த்தை ஹிந்தி தெரியாது என்பதாகத்தான் காட்டுவார்கள்/காட்டிக்கொள்வார்கள்!ஆனால் இவர் சரளமாக ஹிந்தி பேசி பிறகு தமிழும் பேசியது வியப்பு!சென்ற பதிவில் குறிப்பிட்ட ' மணிரத்ன நாடகம் ' பற்றி எதுவும் அறியாதவர் போலும்!
     அடுத்தது குறுக்கன் படம். ஶ்ரீநிவாசன் & வினீத் ஶ்ரீநிவாசன் ஆகியோர் நடிக்கிறார்கள் என்றதுமே உற்சாகம் தொற்றியது.ஆனால் அவர்கள் இருவரையும் வீணடித்துள்ளார்கள் .சில நல்ல நகைச்சுவை தருணங்கள் உண்டென்றாலும் அவர்கள் ஏற்கெனவே நகைச்சுவையில் அடைந்த உயரத்தை ஒப்பிடும் போது ஒன்றுமில்லை!

 

     ஆனால் இப்படத்தில் வியக்க வைத்தது ஸ்ருதி ஜெயன். வடிவேலு பாணி உடல்மொழி காமெடி அசால்ட்டாக செய்யக்கூடிய திறன் இவரிடம் காண முடிந்தது.இவர் ஒரு தொழில்முறை நாட்டிய கலைஞர் என்பதால் அது கூடுதலாக உதவி உள்ளது.

 


ஆனால் வழமை போலவே திறமைசாலிகளுக்கு பெரிய வாய்ப்பு தராமல் வீணடிக்கும் போக்கை இவர் நடித்த படங்களின் பட்டியலை கண்டபோது மீண்டும் காண முடிந்தது!

*****************

இதுவரை அறிமுகமில்லாத நடிக நடிகைகள் வியப்பை உண்டாக்கியதை பார்த்த வேளையில் மிகவும் தெரிந்த ஒரு நடிகர் பற்றியும் குறிப்பிட வேண்டும். இளவரசு! இவர் 2000&2010 களில் நடித்த அத்தனை முக்கிய படங்களையும் பெரும்பாலும் தியேட்டரில் நாம் கண்டுள்ளோம்.அவர் நடித்தார் என்பதற்காக என்று கூறவில்லை.அத்தனை முன்னணி படங்களிலும் அவர் இருந்தார்.

 
     ஆனால் அத்தனை படங்களில் கண்ட இளவரசுவை மாயநதி படத்தில் காண முடியவில்லை!வேறொரு நபராக மாறி இருந்தார்!இந்த பாராட்டின் பாதி பங்கு படத்தின் இயக்குனருக்கு(ஆஷிக் அபு) செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.ஏனெனில் இளவரசுவை இப்படியொரு கோணத்தில் வேறு தமிழ் இயக்குனர்கள் யோசிக்கவில்லை.இத்தனைக்கும் தமிழிலும் வில்லத்தனமான கேரக்டர்கள் செய்துள்ளார்!ஆனால் இது வேறு! இளம் வயதில் மனைவி ஒடிப்போனதில் அத்தனை பெண்கள் மீதான வெறுப்பாக கசப்பாக மாறி அந்த கசப்பே ஒரு உருவமாக நிற்பதாக அவரது கேரக்டர் இருந்தது.மாயநதி படத்தின் விருது பட்டியல் எதிலும் இவர் பெயரை காணோம் என்பது நிம்மதியை தந்தது! விருதுகளின் மதிப்பு அந்த லட்சணத்தில் உள்ளது!

     

Wednesday, 9 October 2024

வடக்குபட்டி பஸ் ஸ்டாப்

                     ஐம்பதாண்டுகள் முன்புவரை கூட மேற்கத்திய நாடுகளின் வசம் காலனி நாடுகள் இருந்தன.அதனால் ஏற்பட்ட ஒரு பலன்(!!???) காலனி ஆதிக்கம் செய்த நாட்டின் மொழி காலனி நாடுகளில் அரைகுறையாகவேணும் தெரிந்துகொள்ள உதவியது.
       அந்நாடுகள் சுதந்திரம் பெற்ற பின்னர் கடும் முயற்சியில் ஒரு மாதிரி சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்த பிறகு அந்நாடுகளில் இருந்து மக்கள் ஆதிக்கம் செய்த நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தனர் .
      இங்கிலாந்தில் இப்போது இந்தியா பாகிஸ்தான் மக்கள் அதிகம்.அதுபோல பிரான்ஸ் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.இன்று அந்த ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏகப்பட்ட அகதிகள் பிரான்சில் குடிபுகுந்து விட்டனர் . அவர்களுக்கு உள்ள பிரெஞ்சு மொழி பரிச்சயம் கூடுதல் பலம்.அதிகாரப்பூர்வமாக அல்லது கள்ளத்தோணி என்பதாக எப்படியாவது மேற்கத்திய நாட்டுக்குள் போய்விட வேண்டும் என்று நினைப்போர் ஏராளம்.
      அதிலும் இருவகை உண்டு.ஒன்று உண்மையாகவே தனது பிள்ளைகள் ஒரு நல்ல வாழ்வை வாழ வேண்டும் என்பதற்காக அங்கே செல்வோர் உண்டு.மற்றொன்று வேறு சில.....ahem...ahem....காரணங்களுக்காக அங்கே அகதியாக செல்வோர் உண்டு.

    இப்படம் முந்தைய பிரிவினரை பற்றி சில கதாபாத்திரங்கள் மூலம் பேசுகிறது.ஆனால் படத்தின் நாயகி செல்மா மிக விநோதமாக பிரான்சில் இருந்து துனீசியாவுக்கு வருகிறார்.அங்கு சைக்கோதெரபி பிராக்டிஸ் செய்ய முயல்கிறார்.அதற்கு ஏகப்பட்ட வினோத தடைகள்,அபத்தமான கேள்விகள்,வினோத அரசு சம்பிரதாயங்கள்(நம்மூர் அரசு அலுவலகம் குறித்த பரிச்சயம் உள்ள எவருக்கும் இது எந்தவித அதிர்ச்சியையும் தராது என்பது வேறு விஷயம்) என்று ஏகப்பட்ட தடைகள் அவருக்கு.

 

      அதைத்தாண்டி அவர் என்ன செய்தார் என்பதே படம்.தெரபி சம்மந்தமான காட்சிகளை வைத்தே ரணகளம் செய்திருக்கலாம்.ஆனால் அதையும் பெரிதாக தொடவில்லை.அரசு அலுவலக அவலத்தை ஓரளவு காட்டுகிறார்கள்.காவல் துறை அதிகாரியாக வரும் அந்த நபர் ஒரு பக்கம் அரசு விதிக்கும் வினோத சட்டங்கள் ,மற்றொரு புறம் தனக்கு தெரிந்த நபர்கள் மீது கரிசனம் காட்ட முயலுதல் என்பதாக திரிசங்கு நிலையில் சிக்கி இருப்பதாக காட்டியது நன்றாக இருந்தது.
         Sigmund Freud போட்டோவில் அவருக்கு துருக்கி குல்லாய் வரைந்து அறையில் மாட்டி அதனால் இவரை மொசாத் ஏஜென்ட் என்று அதிகாரிகள் சந்தேகப்படும் காட்சிகள் நன்றாக இருந்தன .
     ஆனால் வூடி ஆலன் போன்ற ஒருவர் இதே கதைக்களனை வைத்து ஒருபக்கம் நகைச்சுவை மற்றொருபக்கம் இருத்தலியல் அவலங்கள் என்று பட்டையை கிளப்பி இருப்பார் .இங்கே எதுவாகவும் இல்லாமல் படம் limbo வில். வூடி ஆலன் போலவே தோற்றம் கொண்ட ஒருவரும் இதில் நடித்துள்ளார்.

               Golshifteh Farahani யை தொடர்ந்து அழுகாச்சி படங்களிலேயே நடிக்க வைக்கிறார்கள்.ரொம்ப கனமான கேரக்டர் செய்யுமளவு எல்லாம் அவர் சிறந்த நடிப்புத்திறன் கொண்டவரில்லை.வணிக சினிமாக்களில் நடிக்க பொருத்தமானவர்.

 

     சிறந்த நடிகன்/நடிகை என்று பெயர் பெறுவதற்கு ஒரு குறுக்கு வழி உள்ளது.நடிக்கும் எல்லா படமும் சீரியசான படமாக அதில் எந்நேரமும் முகத்தை உர்ர் என்று வைத்துக் கொண்டிருந்தால் போதும்!அப்படி சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர்கள் இந்தியாவில் பலர்.இப்போதும்.....சரி பெயர்கள் வேண்டாம்! (பா.... - கும்மாங்கோ)


    படத்தில் ஏகப்பட்ட வில்லங்கமான வசனங்கள்!நம்மூரில் திரையிட்டால் ...ahem... ahem!

************************************************************

கவின் என்றொரு நடிகர் அறிமுகம் ஆனதே தெரியாது.அவரது இரண்டாவது மூன்றாவது படங்கள் வந்த வேளையில் தான் பல்வேறு ஊடகங்களில் "தமிழ் சினிமாவையே புரட்டி போட்டுவிட்டார் கவின்" என்று சரமாரியாக எழுதியும் பேசியும் வந்தனர்.அப்படி யாருப்பா அது தென்னாட்டு அல் பசீனோ என்று ஆவலாக கவின் நடித்த எதோ ஒரு படத்தின் ஒரு காட்சியை பார்த்தோம்.

பள்ளிக்குழந்தைகள் ஒரு மாத விடுமுறைக்குப்பிறகு முதல் நாள் மீண்டும் பள்ளிக்கு செல்லும்போது அவர்கள் முகபாவம் எப்படி இருக்குமோ அதே முகபாவத்தில் எப்போதும் உள்ளார் கவின்.அது போதாதென்று கேமரா கோணத்தொடு ஒன்றி நிற்கவே அவரால் முடியவில்லை .

 
   மேடை நாடகங்களில் தரையில் ஒரு வட்டம் வரைந்து "பூகம்பமே வந்தாலும் அதுலேர்ந்து வெளிய வரக்கூடாது" என்று சொல்வது வழக்கம்!அதுமாதிரி எதாவது வட்டத்தை போட்டு அவரை நிற்க வைக்கலாம்.ஆனால் 360 டிகிரியில் வட்டத்திற்குள் எப்படி வேண்டுமானாலும் நிற்கலாம் என்ற தர்ம சங்கடம் வேற இருக்கு!இருந்தாலும் கவினுக்கு இவ்வளவு பில்டப் அதிகம்தான்!ஆனால் தமிழ் சினிமாவில் பெரியாள் ஆக இந்தமாதிரி தில்லாலங்கடி வேலை செய்தல் அவசியம்.திறமை இரண்டாம் பட்சம் .பிழைக்கத்தெரிந்த கவின்!
 
***************************************************
  தமிழ் நடிகர்கள் ஹிந்தி சினிமாவில் நடித்து அப்படம் சம்மந்தமான விழாக்கள் பத்திரிகையாளர் சந்திப்புகள் ஆகியவற்றில் "எனக்கு ஹிந்தி தெரியாது" "எதுக்கு நீ ஹிந்தியில் கேள்வி கேட்கிறாய்?தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேளு " என்பது மாதிரியான அக்கப்போர்களை செய்வது வழக்கம்!மணிரத்னம் ஆரம்பித்த சேட்டை இது!(இவர் இரண்டு வருடங்கள் மும்பையில் படித்தும் ஹிந்தி தெரியாதாம்!ஏன் ஒரு லாரி டிரைவர் அசால்ட்டாக மூன்றே மாதத்தில் எந்த மொழியையும் கற்றுக்கொண்டு விடுவார்!அப்போ தான் ஒரு மக்கு என்று சொல்ல வருகிறாரா??) .இதில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டதால் வேண்டுமென்றே ஹிந்தி கற்கவில்லை என்று வேறு சொல்கிறார்.பிறந்ததில் இருந்து பெரும்பகுதி சென்னையில் இருந்த அவர் ஏன் தமிழை இன்றுவரை சரியாக கற்காமல் "ஏய் ஷர்வனா" என்று பேசுகிறார்?அதற்கு எந்த அரசியல் கருத்தாக்க ஈர்ப்பு காரணம்?
 
இதுவே பிற மொழி நடிகர்/நடிகைகள் தமிழில் நடிக்கும் போது இம்மாதிரி பத்திரிகையாளர் சந்திப்புகள் /விழாக்களில் " நான் டமில் கத்துட்டு இருக்கேன்" என்று அவர்களாகவே சொல்லிவிட வேண்டும்.இல்லாவிட்டாலும் "எப்போ சொந்தமா தமிழில் பேச போறீங்க?" என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் உரண்டை இழுப்பார்.அப்போது யாராவது " என் மொழியில் பேசு" என்று சொன்னால் என்னாகும்???

மேலும் இம்மாதிரி தீவிர தமிழ்ப்பித்து உள்ளவர்களாக காட்டிக்கொள்ளும் தமிழ் சினிமாவில் தான் ஏகப்பட்ட தமிழ் தெரியாத நடிகர் நடிகைகள் உள்ளனர். கன்னடம் மலையாளத்தில் கண்டிப்பாக அம்மொழி தெரிந்த ஒருவரைத்தான் நடிக்க வைக்கிறார்கள்!தெலுங்கில் கொஞ்சம் வில்லன் ஹீரோயின் கலப்படம் உண்டு.ஆனால் ஹீரோ காமெடியன் கண்டிப்பாக தெலுங்கு தெரிந்தவராக இருக்க வேண்டும்!என்னே தமிழ் சினிமா உலகின் நகைமுரண்!!!