Wednesday, 9 October 2024

வடக்குபட்டி பஸ் ஸ்டாப்

                     ஐம்பதாண்டுகள் முன்புவரை கூட மேற்கத்திய நாடுகளின் வசம் காலனி நாடுகள் இருந்தன.அதனால் ஏற்பட்ட ஒரு பலன்(!!???) காலனி ஆதிக்கம் செய்த நாட்டின் மொழி காலனி நாடுகளில் அரைகுறையாகவேணும் தெரிந்துகொள்ள உதவியது.
       அந்நாடுகள் சுதந்திரம் பெற்ற பின்னர் கடும் முயற்சியில் ஒரு மாதிரி சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்த பிறகு அந்நாடுகளில் இருந்து மக்கள் ஆதிக்கம் செய்த நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தனர் .
      இங்கிலாந்தில் இப்போது இந்தியா பாகிஸ்தான் மக்கள் அதிகம்.அதுபோல பிரான்ஸ் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.இன்று அந்த ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏகப்பட்ட அகதிகள் பிரான்சில் குடிபுகுந்து விட்டனர் . அவர்களுக்கு உள்ள பிரெஞ்சு மொழி பரிச்சயம் கூடுதல் பலம்.அதிகாரப்பூர்வமாக அல்லது கள்ளத்தோணி என்பதாக எப்படியாவது மேற்கத்திய நாட்டுக்குள் போய்விட வேண்டும் என்று நினைப்போர் ஏராளம்.
      அதிலும் இருவகை உண்டு.ஒன்று உண்மையாகவே தனது பிள்ளைகள் ஒரு நல்ல வாழ்வை வாழ வேண்டும் என்பதற்காக அங்கே செல்வோர் உண்டு.மற்றொன்று வேறு சில.....ahem...ahem....காரணங்களுக்காக அங்கே அகதியாக செல்வோர் உண்டு.

    இப்படம் முந்தைய பிரிவினரை பற்றி சில கதாபாத்திரங்கள் மூலம் பேசுகிறது.ஆனால் படத்தின் நாயகி செல்மா மிக விநோதமாக பிரான்சில் இருந்து துனீசியாவுக்கு வருகிறார்.அங்கு சைக்கோதெரபி பிராக்டிஸ் செய்ய முயல்கிறார்.அதற்கு ஏகப்பட்ட வினோத தடைகள்,அபத்தமான கேள்விகள்,வினோத அரசு சம்பிரதாயங்கள்(நம்மூர் அரசு அலுவலகம் குறித்த பரிச்சயம் உள்ள எவருக்கும் இது எந்தவித அதிர்ச்சியையும் தராது என்பது வேறு விஷயம்) என்று ஏகப்பட்ட தடைகள் அவருக்கு.

 

      அதைத்தாண்டி அவர் என்ன செய்தார் என்பதே படம்.தெரபி சம்மந்தமான காட்சிகளை வைத்தே ரணகளம் செய்திருக்கலாம்.ஆனால் அதையும் பெரிதாக தொடவில்லை.அரசு அலுவலக அவலத்தை ஓரளவு காட்டுகிறார்கள்.காவல் துறை அதிகாரியாக வரும் அந்த நபர் ஒரு பக்கம் அரசு விதிக்கும் வினோத சட்டங்கள் ,மற்றொரு புறம் தனக்கு தெரிந்த நபர்கள் மீது கரிசனம் காட்ட முயலுதல் என்பதாக திரிசங்கு நிலையில் சிக்கி இருப்பதாக காட்டியது நன்றாக இருந்தது.
         Sigmund Freud போட்டோவில் அவருக்கு துருக்கி குல்லாய் வரைந்து அறையில் மாட்டி அதனால் இவரை மொசாத் ஏஜென்ட் என்று அதிகாரிகள் சந்தேகப்படும் காட்சிகள் நன்றாக இருந்தன .
     ஆனால் வூடி ஆலன் போன்ற ஒருவர் இதே கதைக்களனை வைத்து ஒருபக்கம் நகைச்சுவை மற்றொருபக்கம் இருத்தலியல் அவலங்கள் என்று பட்டையை கிளப்பி இருப்பார் .இங்கே எதுவாகவும் இல்லாமல் படம் limbo வில். வூடி ஆலன் போலவே தோற்றம் கொண்ட ஒருவரும் இதில் நடித்துள்ளார்.

               Golshifteh Farahani யை தொடர்ந்து அழுகாச்சி படங்களிலேயே நடிக்க வைக்கிறார்கள்.ரொம்ப கனமான கேரக்டர் செய்யுமளவு எல்லாம் அவர் சிறந்த நடிப்புத்திறன் கொண்டவரில்லை.வணிக சினிமாக்களில் நடிக்க பொருத்தமானவர்.

 

     சிறந்த நடிகன்/நடிகை என்று பெயர் பெறுவதற்கு ஒரு குறுக்கு வழி உள்ளது.நடிக்கும் எல்லா படமும் சீரியசான படமாக அதில் எந்நேரமும் முகத்தை உர்ர் என்று வைத்துக் கொண்டிருந்தால் போதும்!அப்படி சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர்கள் இந்தியாவில் பலர்.இப்போதும்.....சரி பெயர்கள் வேண்டாம்! (பா.... - கும்மாங்கோ)


    படத்தில் ஏகப்பட்ட வில்லங்கமான வசனங்கள்!நம்மூரில் திரையிட்டால் ...ahem... ahem!

************************************************************

கவின் என்றொரு நடிகர் அறிமுகம் ஆனதே தெரியாது.அவரது இரண்டாவது மூன்றாவது படங்கள் வந்த வேளையில் தான் பல்வேறு ஊடகங்களில் "தமிழ் சினிமாவையே புரட்டி போட்டுவிட்டார் கவின்" என்று சரமாரியாக எழுதியும் பேசியும் வந்தனர்.அப்படி யாருப்பா அது தென்னாட்டு அல் பசீனோ என்று ஆவலாக கவின் நடித்த எதோ ஒரு படத்தின் ஒரு காட்சியை பார்த்தோம்.

பள்ளிக்குழந்தைகள் ஒரு மாத விடுமுறைக்குப்பிறகு முதல் நாள் மீண்டும் பள்ளிக்கு செல்லும்போது அவர்கள் முகபாவம் எப்படி இருக்குமோ அதே முகபாவத்தில் எப்போதும் உள்ளார் கவின்.அது போதாதென்று கேமரா கோணத்தொடு ஒன்றி நிற்கவே அவரால் முடியவில்லை .

 
   மேடை நாடகங்களில் தரையில் ஒரு வட்டம் வரைந்து "பூகம்பமே வந்தாலும் அதுலேர்ந்து வெளிய வரக்கூடாது" என்று சொல்வது வழக்கம்!அதுமாதிரி எதாவது வட்டத்தை போட்டு அவரை நிற்க வைக்கலாம்.ஆனால் 360 டிகிரியில் வட்டத்திற்குள் எப்படி வேண்டுமானாலும் நிற்கலாம் என்ற தர்ம சங்கடம் வேற இருக்கு!இருந்தாலும் கவினுக்கு இவ்வளவு பில்டப் அதிகம்தான்!ஆனால் தமிழ் சினிமாவில் பெரியாள் ஆக இந்தமாதிரி தில்லாலங்கடி வேலை செய்தல் அவசியம்.திறமை இரண்டாம் பட்சம் .பிழைக்கத்தெரிந்த கவின்!
 
***************************************************
  தமிழ் நடிகர்கள் ஹிந்தி சினிமாவில் நடித்து அப்படம் சம்மந்தமான விழாக்கள் பத்திரிகையாளர் சந்திப்புகள் ஆகியவற்றில் "எனக்கு ஹிந்தி தெரியாது" "எதுக்கு நீ ஹிந்தியில் கேள்வி கேட்கிறாய்?தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேளு " என்பது மாதிரியான அக்கப்போர்களை செய்வது வழக்கம்!மணிரத்னம் ஆரம்பித்த சேட்டை இது!(இவர் இரண்டு வருடங்கள் மும்பையில் படித்தும் ஹிந்தி தெரியாதாம்!ஏன் ஒரு லாரி டிரைவர் அசால்ட்டாக மூன்றே மாதத்தில் எந்த மொழியையும் கற்றுக்கொண்டு விடுவார்!அப்போ தான் ஒரு மக்கு என்று சொல்ல வருகிறாரா??) .இதில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டதால் வேண்டுமென்றே ஹிந்தி கற்கவில்லை என்று வேறு சொல்கிறார்.பிறந்ததில் இருந்து பெரும்பகுதி சென்னையில் இருந்த அவர் ஏன் தமிழை இன்றுவரை சரியாக கற்காமல் "ஏய் ஷர்வனா" என்று பேசுகிறார்?அதற்கு எந்த அரசியல் கருத்தாக்க ஈர்ப்பு காரணம்?
 
இதுவே பிற மொழி நடிகர்/நடிகைகள் தமிழில் நடிக்கும் போது இம்மாதிரி பத்திரிகையாளர் சந்திப்புகள் /விழாக்களில் " நான் டமில் கத்துட்டு இருக்கேன்" என்று அவர்களாகவே சொல்லிவிட வேண்டும்.இல்லாவிட்டாலும் "எப்போ சொந்தமா தமிழில் பேச போறீங்க?" என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் உரண்டை இழுப்பார்.அப்போது யாராவது " என் மொழியில் பேசு" என்று சொன்னால் என்னாகும்???

மேலும் இம்மாதிரி தீவிர தமிழ்ப்பித்து உள்ளவர்களாக காட்டிக்கொள்ளும் தமிழ் சினிமாவில் தான் ஏகப்பட்ட தமிழ் தெரியாத நடிகர் நடிகைகள் உள்ளனர். கன்னடம் மலையாளத்தில் கண்டிப்பாக அம்மொழி தெரிந்த ஒருவரைத்தான் நடிக்க வைக்கிறார்கள்!தெலுங்கில் கொஞ்சம் வில்லன் ஹீரோயின் கலப்படம் உண்டு.ஆனால் ஹீரோ காமெடியன் கண்டிப்பாக தெலுங்கு தெரிந்தவராக இருக்க வேண்டும்!என்னே தமிழ் சினிமா உலகின் நகைமுரண்!!!
 

No comments:

Post a Comment