Sunday, 24 November 2024

G.W.e

 
தள்ளுமாலா :

     படம் முழுக்க அதிரடி சண்டைகள் கொண்ட கேப்புடன் படங்களை விடாது தியேட்டரில் பார்த்ததுண்டு.அது போதாமல் போய் மீண்டும் வீட்டில் வீடியோ கேசட்டில் அதே படத்தை பார்ப்போம்.
 
          குறிப்பாக சண்டைக்காட்சிகளில் கேப்புடனோ அல்லது வில்லன் கோஷ்டியோ சண்டையில் காற்றில் சுழன்று விழும் காட்சிகளை pause செய்து பிறகு Still Adv என்ற சிறப்பு பட்டனை அமுக்கினால் ஒவ்வொரு ஃபிரேமாக காட்சி முன்னகரும்.
 

ஆகாயத்தில் இருக்கும் நபர் அப்படியே மெதுவாக காற்றில் சுழன்று சுழன்று  தரையில் விழுவதை பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி!  பிற நடிகர்கள் பிற மொழியில் வந்த சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களையும் ரசித்ததுண்டு.ஆனால் அவற்றில் சண்டை என்பது எதோ ஒரு நியாயத்தை நிறுவுவதற்காக/தீயவர்களை அழிப்பதற்காக/நல்லவர்களை காப்பதற்காக...etc...etc... என்று எதேனும் ஒரு காரணம் சொல்லப்படும்.

    ஆனால் அடிதடி செய்யணும் என்பதற்காகவே அடிதடி பண்றோம் என்று ரணகளம் செய்த படங்கள் மிக குறைவு!ஃபைட் கிளப் சொல்லலாம்.கில் பில் படத்தில் கூட ஒரு காரணத்திற்காகவே உமா துர்மேன் ரத்தக்களரி செய்வார்!

      எந்த காரணமும் இல்லாமல் அல்லது எதேனும் சல்லித்தனமான காரணத்திற்காக இவ்வளவு அடி உதை குத்து என்பது மிக மிக ரசனையான விஷயம்.இளவயதில்(அதாவது 290 வருடங்களுக்கு முன்பு என்று படிக்கவும் - கும்மாங்கோ)  போட்ட 'தள்ளு மாலை'கள் நினைவுக்கு வந்தது.

 

      சேறு நிறைந்த ஜில்லென்ற பரப்பில்/உச்சி வெயிலில் ஒவ்வொரு மணல் துகளும் ஒரு நெருப்பு கங்கு மாதிரி சுடும் பரப்பில்/சிமெண்ட் தரையில்/காய்ந்த சேறு மேடும் பள்ளமுமாக மிக கூரான பரப்புடன் இருக்கும் தளத்தில் என்று கண்மன் தெரியாமல் அடித்து ,பரஸ்பரம் அடிவாங்கி முடித்து எழுந்தால் சற்று நேரத்திற்கு எதற்காக சண்டை போட்டோம் என்பதே நினைவுக்கு வராத அந்தக்கணத்தில் வாயில் வெது வெதுப்பாக சற்று  புளிப்பாக இரத்தம் வரும் அந்த தருணத்தை  அப்படியே மீண்டும் உடல் முழுவதும் உணர வைத்தது இப்படம்!ஒருமாதிரி ஜிவ்வென்று முதுகுத்தண்டில் ஏறி 'எவன் கூடவாவது இப்ப உரண்டை இழுத்தால் என்ன?' என்ற பரபரப்பு அடங்க வெகுநேரம் ஆனது! :D

    ஏற்கெனவே பிரேமம் படத்தில் வரும் களிப்பு பாடலை (முரளி கோபியின் எனர்ஜி லெவல்+ ராஜேஷ் முருகேசனின் அதிரடி பீட்ஸ்+ அல்போன்ஸ் புத்திரன் பாடலை படமாக்கியிருந்த விதம்!!!!🔥🔥🔥) பார்த்த போதும் இதே உணர்வு! :D

 
 

   அவ்வகையில் படத்தின் இயக்குனருக்கு இது பெருவெற்றி தான். குறிப்பாக ஷைன் டாம் சாக்கோவும் டோவினோவும் மோதும் அந்த சண்டைக்காட்சி அட்டகாசம்! ரோப் ஷாட் கிரீன் மேட் என்றெல்லாம் படுத்தாமல் எடுத்ததற்கு நன்றி.(ஸ்டண்ட் மாஸ்டர் : சுப்ரீம் சுந்தர்)
எல்லாருக்கும் இப்படம் புடிக்காது.நாம் சொன்னதுபோல நிஜ தள்ளு மாலைகள் போட்டோர் படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் அப்படி ரசித்து பார்க்கலாம்! எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்.யாரையாவது வெளுக்க வேண்டும் என்ற வெறியை கண்டிப்பாக படம் ஏற்றி விடும்!
*************************************************
     பிரேமலு:
 கதை ஹைதராபாத்தில் நடப்பதால் இப்படியொரு தலைப்பு!பிரேமம் படம் தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் அளவுக்கு இப்படமும் உண்டாக்கியுள்ளது.

      ஒரு சாதாரண கதை/சிறிய சம்பவத்தை வைத்தே இரண்டு மணி நேரம் சுவாரஸ்யமாக கட்டிப்பொடுவதில் மலையாள சினிமா உச்சம் தொட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

 

இப்படம் முழுக்க கொண்டாட்டம் தான்!முனியாண்டி சொல்லும் ஹெடோனிசம் மாதிரியான வகைப்பாட்டில் இது வருமா என்று நமக்குத்தெரியவில்லை!ஆனால் வாழ்வை அதன் எல்லைவரையில் கொண்டாடி உள்ளார்கள்!இந்தளவு எனர்ஜி லெவல் எப்படித்தான் மலையாள காமெடிப்படங்களுக்கு  அற்புதமாக வாய்க்கிறது என்ற ரகசியம் நமக்கு விளங்கவேயில்லை!

    ஒரு இயக்குனரின் கற்பனையில் அவ்வளவு உற்சாகம் மிகுந்த காட்சிகள் தோன்றலாம்.ஆனால் அதை சரியான முறையில் படக்குழுவுக்கு விளங்க வைத்து அதை அப்படியே திரையில் கொண்டு வருவது என்பது தலைகீழாக மலையில் ஏறுவதற்கு சமம்!அதை இயக்குனர் செவ்வனே செய்துள்ளார்!

    ஆனால் ஒரே தயக்கம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக ஒரு செய்தி!இந்த இரண்டாம் பாகம் என்ற மாய சுழலில் சிக்காமல் இருப்பது தனிப்பட்ட சினிமாவுக்கு மட்டுமல்லாமல் மொத்த திரை உலகுக்கே நலம் பயக்கும்!தமிழ் சினிமாவில் இப்படித்தான் நான்கு ஐந்து என்று போய் டார்ச்சர் செய்கிறார்கள்!அது தேவையில்லை.திரும்ப அந்த மேஜிக்கை நிகழ்த்த முடியாது!
      
       ஒருபக்கம் தீவிரமான படங்களும் வருகிறது இன்னொரு பக்கம் இடைநிலை என்று சொல்லும் படங்களும் வருகிறது.மற்றொரு பக்கம் தள்ளுமாலா,பிரேமலு மாதிரியான படங்களும் வருகிறது.அனைத்துமே ரசிக்கும்படி உள்ளது.
   ஆனால் தமிழ் சினிமாவில்????உருப்படியான ஒரு மசாலா படம் கடைசியாக எப்போது வந்தது?நமக்கு தெரியவில்லை!இடைநிலைப்படங்கள் தீவிர படங்கள் என்று எடுக்கப்பட்ட படங்கள் எந்தளவு அரைவேக்காட்டுத்தனமாக இருக்கிறது என்று சில நியாயமான விமர்சகர்கள் புலம்புவதை பார்க்க முடிகிறது.முன்ன போனா முட்டுது!பின்ன போனால் உதைக்குது என்ற நிலையில் தமிழ் சினிமா இருக்கு!
***************************************************
மேலே குறிப்பிட்ட இரு படங்களின் எனர்ஜி லெவல் அந்தளவு மேலே சென்றதற்கு மற்றொரு காரணம் இசை!Western beats ஐ எப்படி அட்டகாசமாக பயன்படுத்தி உள்ளார்கள் என்று வியக்க வைத்துவிட்டார்கள்(ஆவேஷம் படத்தையும் இதில் சேர்க்கலாம்)!நல்ல சுவாரஸ்யமான rythmic வெஸ்டர்ன் பீட்ஸ்களை கேட்டாலே நமக்கு அளவுகடந்த உற்சாகம் பீறிட்டு எழுந்துவிடும்!இப்படங்களில் அவற்றை கேட்க முடிந்தது.
     இந்த பீட்ஸ்களை கேட்கும்போது நினைவுக்கு வந்தவர் யுவன்!ஒருகாலத்தில்(ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்று கூறலாம்) வெஸ்டர்ன் பீட்ஸ்களை எந்தளவு அற்புதமாக அவர் பயன்படுத்தினார் என்று நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
வெண்ணிலா வெளியே வருவாயா
தீப்பிடிக்க தீப்பிடிக்க
நீ இல்லை என்றால்
Boom boom

...etc..etc...போன்ற பாடல்களில் அந்த பாடல் முழுக்க பயணிக்கும் பீட்ஸ் தான் முதுகெலும்பு! கேட்ட முதல் முறையே மனதில் ஒட்டிக்கொண்டு விடும்!
 

ஆனால் கடந்த சில வருடங்களாக மண் சார்ந்த இசை,பிர்லா ஒயிட் சார்ந்த இசை என்று யாரோ இவரை உசுப்பிவிட இவரும் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்."இது யுவன் போட்ட இசை" என்று யாராவது சொல்லித் தெரியும் அளவுக்குத்தான் அவரின் தற்கால பாடல்கள் உள்ளது!பீட்ஸ் கொண்ட பாடல்களை அவர் சமீபத்தில் போட்டிருந்தாலும்(ஸ்டார்) அதில் ரிதமை காணோம். முதல்முறையே பாடலின் பீட்ஸ் மனதில் ஒட்டிக்கொள்ளும் யுவனின் திறன் காற்றோடு போய் விட்டதோ!

***********************************************

பதிவின் தலைப்பு கிகாவாட் எலக்ட்ரிக்கல் என்பதை குறிக்கும்.சில படங்களை பார்க்கும்போதே அதிலிருந்து அசாத்தியமான எனர்ஜி அப்படியே நமது உடல் நோக்கி பாயும் உணர்வை  உணர முடியும்(மற்றவர்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுமா என்று தெரியாது).
 

உதாரணமாக நோலன் இயக்கிய Batman Trilogy படங்களை பார்க்கும் போது புல்லரிப்புடன் கிகாவாட் கணக்கில் எனர்ஜி உடலில் பாய்ந்து கொண்டே இருப்பதாக நமக்கு தோன்றும்.அத்தகைய உணர்வை மேற்சொன்ன இரண்டு படங்களும் கொடுத்தது!(இப்படி வெவ்வேறு இடங்களில் எனர்ஜியை திருடித்தான் வண்டி ஓடுது!- கும்மாங்கோ)

 

No comments:

Post a Comment