Wednesday, 6 November 2024

வடக்குபட்டி பஸ் ஸ்டாப்

 பாவாட:

 கேரளத்தின் இரு பெரும் பிரச்சினைகளாக இருந்தது குடிப்பழக்கம் மற்றும் நீலப்பட பித்து!இரண்டாவது சமாச்சாரம் இப்போது வெளிப்படையாக இல்லை.அதாவது ஒரு காலத்தில் ஷகிலா படங்களின் வசூல் மம்மூட்டி மோகன்லால் படங்களுக்கே சவாலாக இருந்ததை மறுக்க முடியாது.அந்த நிலை இப்போது இல்லை.அவர்கள் வேறு வழியில் படங்களை பார்க்க கூடும்.ஆனால் தியேட்டரில் இல்லை.

 

         
    உண்மையில் அது நீலப்படமாக ஆரம்பிக்கப்பட வில்லை.தீவண்டிப்பாத(Railway track) எனும் கலைப்படமாகத்தான் அது ஆரம்பிக்கப்படுகிறது.தீவிர கலைத்தாகம் கொண்ட ஒரு இயக்குனர் (முரளி கோபி) நீலப்படங்களில் பிரபலமான நடிகைகளை புறந்தள்ளி ஒரு மகனுக்கு தாயாக இருக்கும் ஒருவரை (ஆஷா சரத்) தேர்ந்தெடுக்கிறார்.படம் வளர்ந்து வரும் வேளையில் ஏகப்பட்ட சிக்கல்.இயக்குனரும் மரித்துப்போக பிறகு கடன்காரனுக்கு பயந்து அதை வேறொரு நடிகையை வைத்து நீலப்படமாக எடுத்து வெளியிடுகின்றனர்.
      இதனால் மனமுடைந்து தயாரிப்பாளரான ஆங்கில பேராசிரியர் (அனூப் மேனன்)மொடாக்குடியனாக மாறுகிறார்.அந்த நடிகையின் மகனும் வேறொரு சூழலில் அவ்வாறே இருக்கிறான்!இருவரும் என்ன செய்தனர் என்பதே கதை.
   ஒன்று குடிப்பழக்கம் தொடர்பான தீமைகளை எடுத்துரைக்கும் படமாக இருந்திருக்க வேண்டும்.அல்லது நீலப்படங்களில் நடிக்கும் நடிகைகள் சமூகத்தில் சந்திக்கும் அவமானங்கள், அவப்பெயர், வெளியில் தலைகாட்ட முடியாத நிலை,அந்தரங்க காட்சிகளில் ஒரு நடிகை நடிக்க மறுத்தால் வேறொரு நடிகையை body double ஆக பயன்படுத்தி படத்தை வெளியிடுதல்(இப்படத்திலும் ஆஷா சரத் கதாபாத்திரம் நடித்தது ஒரு சாதாரண படத்தில் தான்.அதனிடையே வேறொரு நடிகையை வைத்து அந்தரங்க காட்சிகளை படமாக்கி இணைந்ததாக கதை செல்லும்) போன்றவற்றை சுட்டும் படமாக இருந்திருக்க வேண்டும்.இரண்டுமே இல்லாமல் அந்தரத்தில் ஊசலாடுகிறது!
      படத்தின் முதல் பாதி குடி இரண்டாம் பாதி நீலப்பட பாதிப்பு என்று குழப்பி அடித்துவிட்டார்கள்!நீதிமன்ற காட்சிகள் இழுவை!படத்தில் உருப்படியான ஒரே விஷயம் மேக்கப்.மொடாக்குடி பேர்வழிகள் எப்படி இருப்பார்களோ அச்சு அசல் அது போலவே பிரித்விராஜ் மற்றும் அனூப் மேனன் ஆகியோர் தோற்றமளித்தார்கள்!

    இதில் அநியாயமாக முரளி கோபி எனும் திறமைசாலி கருவேப்பிலை கணக்காக வீணடிக்கப்பட்டுள்ளார்!

 

     இப்படத்தை பார்க்க ஒரே காரணம் படத்தில் பிரித்விராஜ் கேரக்டர் ஒரு தீவிர அண்ணா ரசிகர் என்றும் புலி படத்தை முதல் நாளே பார்த்து ஃபயர் விடும் காட்சிகள் எல்லாம் படத்தில் உள்ளதாகவும் படம் வெளியான நேரத்தில் கசிந்த வதந்தியால் தான்!அந்த வதந்தியை படத்தின் தயாரிப்பாளரே பரப்பி விட்டிருக்க கூடும் .காரணம் கேரளத்தில் அண்ணா ரசிகர்கள் அதிகம்.அவர்களை வைத்தே படத்தை ஓட்ட நினைத்துள்ளார் போல!ஆனால் படத்தில் அப்படி எதுவும் இல்லை.அண்ணாவின் படம் ஓடும் தியேட்டரில்(துப்பாக்கிடா!) இடையில் பிளாக் டிக்கெட் விற்க முயன்று(வேறு எதுக்கு?குடிக்காசுக்கு தான்) அண்ணா ரசிகர் மன்றத்தினருடன் அடிதடி செய்து பிரித்விராஜ் உள்ளே செல்லும் காட்சிதான் இருக்கு! அண்ணாயியன்ஸ் ஷ்ரத்தயோடே!

***************************************************
Streaming தளங்களில் இசை என்பது பெரும்பாலும் 320kbps உடன் முடிந்துவிடும்.இதில் விதிவிலக்காக சொல்லப்பட்டது ஆப்பிள் மியூசிக் app.இதில் சிடி தரத்திலும் கேட்கலாம் அதற்கு மேல் Hi-Res தரத்திலும் கேட்கலாம் என்பதால் இதில் பதிவு செய்ய முடிவெடுத்தோம்.இதே போல Hi-Res பாடல்களை தரும் Tidal மற்றும் Qobuz  யானை விலை subscription என்பதால் இதுவே மேல் என்ற முடிவுக்கு வந்தோம்.
    ஆனால் ஆண்ட்ராய்ட் தளத்தில் இருந்து ஆப்பிள் ம்யூசிக் app-ல் பதிவு செய்வது அவ்வளவு எளிதாக இல்லை."ஆண்ட்ராய்ட் ஆசாமி எவனும் இந்தப்பக்கம் வந்துட கூடாதுடா" என்று சொல்லி வைத்து app ஐ வடிவமைத்து இருப்பார்கள் போல.காரணங்கள் புரிந்துகொள்ள கூடியதே! ஐபோன் , மேக் அல்லது ஐபேட் வாங்க வைக்க இப்படியொரு வழி.

  சிடி தரத்தில் கேட்க இருக்கும் ஹெட்போன்கள் போதும்.ஆனால் அதற்குமேல் Hi-Res தரத்தில் கேட்க வேண்டுமென்றால் தனி DAC மற்றும் தரமான ஹெட்போன் தேவைப்படும்!ஆனால் சிடி தரத்திலிருந்து Hi Res தரத்தை வேறுபடுத்தி கேட்கும் திறன் பலருக்கும் கிடையாது.அதனால் பெரும்பாலான ஒலித்தர பித்தர்களுக்கு சிடி தரமே போதுமானது.குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் ஹாரிஸ் ஆகியோரின் பாடல்களிலேயே இந்த வித்தியாசங்களை கேட்க முடியும்!அயலக ஆல்பங்கள் குறித்து நமக்கு பரிச்சயம் இல்லை

    
Apple நிறுவனம் : ஏன்டா தப்பித்தவறி கூட ஆண்ட்ராய்ட் ஆசாமி இந்தப்பக்கம் வரவே கூடாதுன்னு தான் அவ்வளவு தடையை போட்டு வச்சிருந்தேன்.அப்புறம் எப்படிடா உள்ள வந்த?
.
உதயா : Uncompressed தரத்தில் பாட்டு கேக்கணும்னு ஒரு வெறி!அதான் ரெண்டு மணிநேரம் போராடி பதிவு பண்ணி உள்ள வந்துட்டேன்



***************************************************
Lakshya:

 சில வருடங்களுக்கு முன்பு இப்படத்தை பார்க்க முயன்று பத்து நிமிடத்திலேயே நிறுத்தி விட்டோம்.சமீபத்தில் மீண்டும் முயன்று பார்க்கலாம் என்று நினைத்து.... ம்.. ஹூம்...வேலைவெட்டி,இலக்கு எதுவுமே இல்லாத கதாநாயகன் என்றாலே அவன் கண்டிப்பாக ராணுவத்தில் சேர்வதாக காட்டுவதுதான் சினிமா ஃபார்முலா!ஏனய்யா எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல்,அடுத்து என்ன செய்வது என்ற குழப்பங்கள் இல்லாது  ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற இலக்கு  கொண்ட எவரும் உங்கள் கண்ணில் படமாட்டார்களா??துள்ளுவதோ இளமை வாரணம் ஆயிரம் ,இந்தப்படம் எல்லாம் ஒரே டெம்ப்ளேட்!

 
       நார்னியா மாதிரியான படங்களில் நிஜத்தில் காண முடியாத ஒற்றைக்கொம்பு யுனிகார்ன்,பறக்கும் குதிரை போன்று இந்தப்படத்தில் பிரீத்தி ஸிந்தா ஒரு லட்சியவாத (ஆமா படத்துக்கு லக்ஷயா என்று பெயர் வச்சிட்டு ரெண்டு கேரக்டராச்சும் லட்சியத்தோடு காட்டாவிட்டால் எப்படி?) நேர்மையான எதற்கும் வளையாத ஒரு பத்திரிக்கையாளர்!!!!!!!!!!கொட்டாவி வந்துவிட்டது!

 

    சரி வந்தது வந்தோம் என்று "மே ஏசா க்யூ(ன்)" பாட்டை ரசித்துவிட்டு படத்தை நிறுத்தி விட்டோம்.இப்பாடலில் நடுவில் பீட்ஸ் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு திடீரென்று குழுவாக வயலின் ஒலிக்கும் அந்த மாயத்தருணம்!! 🤌
   படத்தில் நமதபிமான மற்றொரு பாடல் "அகர் மே கஹு".அதில் மௌத் ஆர்கன் பயன்படுத்தப்பட்ட விதம் அட்டகாசமாக இருக்கும்.சினிமாவில் பட்டிக்காட்டான் கேரக்டர் என்றாலே ஹீரோவுக்கு புல்லுக்கட்டு  விக்கை தலையில் மாட்டிவிடுவார்கள்!அந்தமாதிரி தான் ஹிரித்திக் ரோஷன் சிகையலங்காரம் இருந்தது!இந்த யோசனையை கொடுத்த அறிவாளிக்கு ஒப்பனைக்கான razzie அவார்ட் கொடுக்க வேண்டும்!

No comments:

Post a Comment