Saturday, 2 November 2024

Bong Bong!



ம்ருணாள் சென் இயக்கியதாலோ என்னவோ நமதபிமான சௌமித்ரா நடித்த படம் என்றாலும் Akash Kusum படத்தை பார்க்காமல் தள்ளிப்போட்டு வந்தோம்.கம்யூனிசம் அது இதுவென்று சவட்டி விடுவாரோ என்ற பயம் தான் .

     ஆனால் படத்தில் பொருளாதார வேறுபாடுகள் காட்டப்பட்டாலும் அதைவைத்து பெரிய லெக்சர் கொடுக்காதது ஆறுதல்!

     இந்தப்படமும் இதற்கு முன் சத்யஜித் ரே இயக்கி சௌமித்ரா நடித்த Ka Purush படமும் ஒருவகையில் ஒற்றுமையானவை. இரு படங்களிலும் வரும் பிரதான கதாபாத்திரங்களும் சில விஷயங்களில் ஒரே தன்மை கொண்டவர்கள்.

 

     அவனுக்கு ஆபீஸ் போய் வருவது போல தினம் காதலியோடு ஜாலியாக சுற்ற வேண்டும்.சாப்பிட வேண்டும்.பேச வேண்டும்.அவ்வளவே.அதைத்தாண்டி திருமணம் சம்பாத்தியம் குடும்ப பொறுப்பு இதெல்லாம் எட்டிக்காய்கள்!

     Ka Purush படத்தில் காதலி வீட்டை விட்டே வெளியில் வந்து தன்னை அடைக்கலம் புகுந்த சமயத்தில் அந்த பொறுப்பை தட்டிக்கழிக்கிறான் அமிதாபா ராய்     .பிற்காலத்தில் முன்னாள் காதலி வேறொரு வசதியான ஆசாமியை திருமணம் செய்து கடமைக்கு வாழ்ந்து வருவதை கண்டு குற்ற உணர்ச்சி கொள்கிறான்.தனது வாழ்வை மட்டுமல்லாது அந்த பெண்ணின்  வாழ்வையும் நரகமாக்கியது குறித்து வேதனைப்படுகிறான்.

 

     உண்மையில் அன்றாட வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு காதலியோடு குடும்பம் நடத்துவதை விடவும் இப்படி விட்டத்தை பார்த்து வேதனைப்படுவது அவனுக்கு சுலபமான ஒன்றாக இருக்கிறது.அந்த வேதனைகளை அப்படியே தனது படைப்பிற்கான கச்சாப்பொருளாக மாற்றவும் அவன் தயங்கப்போவதில்லை!



    Akash Kusum படத்தில் அஜய் ஒரு பணக்கார பெண்ணை தான் ஒரு லட்சாதிபதி என்று பொய் சொல்லி காதலிக்கிறான்.ஆனால் கா புருஷ் படத்தை போல வெறுமனே கனவு காணாமல் எதோ பழைய வோல்ட்மீட்டர் அம்மீட்டர் கேல்வனோ மீட்டர் போன்றவற்றை சரி செய்து செகண்ட் ஹேன்ட் பொருட்களாக விற்க நினைக்கிறான்.
 

    அதில் பெரும் சறுக்கல்.இவன் பணக்காரனாக நடிக்க தனது கார் வீடு பணம்  போன்றவற்றை கொடுத்து உதவிய நண்பனுக்கும் இவன் மேல் கடும் கசப்புணர்வு.
      கடைசியில் பெண்ணின் தந்தைக்கு உண்மை தெரியவர இவனின் உறவை அவள் கத்தரிக்கிறாள்.இதிலும் அந்த பெண்ணிற்கு  கடும் கசப்பு  நிறைந்த நினைவுகளை விட்டு செல்லும் மற்றொரு (கா புருஷ்)கோழை தான் இவன்.
*************************************************

உத்தம் குமார் நடித்த Deya Neya ஒரு ஜாலியான மசாலா படம்.பணக்கார குடும்பத்தில் பிறந்து இசையில் சாதிக்க எண்ணி தந்தையை முறைத்துக்கொண்டு வீட்டை விட்டே வெளியேறும் எம்ஜியார்த்தனமான ஒரு கேரக்டர்!

 

       தனது உண்மை அடையாளத்தை மறைத்து வாழ்கிறான்.புனைப்பெயரில் பாடுகிறான்.அந்த குரலுக்கோ ஏகப்பட்ட ரசிக ரசிகைகள்!நாயகியின் வீட்டிலேயே டிரைவர் வேலை பார்க்கிறான்.பாடகணின் உண்மை அடையாளத்தை தெரிந்துகொள்ளத்துடிக்கும் நாயகி(தனுஜா).கடைசியில் எல்லாம் சுபம்! உத்தம் குமாரின் ஸ்கிரீன்  presence படத்தின் பெரும் பலம்.மற்றொன்று இசை.

   படத்தில் அத்தனை பாடல்களும் அற்புதம்.இதில் நாம் கண்டுகொண்ட ஒரு புதிய குரல்(நமக்கு புதிய குரல் தானே!) ஷ்யாமால் மித்ரா.ரஃபியின் குரலை விடவும் மென்மையான ஒரு குரல்.

 

படத்தின் இசையமைப்பாளர் அவரே.தயாரிப்பும் கூட !
படம் பார்த்து முடித்ததும் சரிகமா யூ ட்யூப் சேனலில் இவரது பாடல்கள் அடங்கிய தொகுப்பை கேட்டு ரசித்தோம்.


No comments:

Post a Comment