தள்ளுமாலா :
ஆனால் அடிதடி செய்யணும் என்பதற்காகவே அடிதடி பண்றோம் என்று ரணகளம் செய்த படங்கள் மிக குறைவு!ஃபைட் கிளப் சொல்லலாம்.கில் பில் படத்தில் கூட ஒரு காரணத்திற்காகவே உமா துர்மேன் ரத்தக்களரி செய்வார்!
சேறு நிறைந்த ஜில்லென்ற பரப்பில்/உச்சி வெயிலில் ஒவ்வொரு மணல் துகளும் ஒரு நெருப்பு கங்கு மாதிரி சுடும் பரப்பில்/சிமெண்ட் தரையில்/காய்ந்த சேறு மேடும் பள்ளமுமாக மிக கூரான பரப்புடன் இருக்கும் தளத்தில் என்று கண்மன் தெரியாமல் அடித்து ,பரஸ்பரம் அடிவாங்கி முடித்து எழுந்தால் சற்று நேரத்திற்கு எதற்காக சண்டை போட்டோம் என்பதே நினைவுக்கு வராத அந்தக்கணத்தில் வாயில் வெது வெதுப்பாக சற்று புளிப்பாக இரத்தம் வரும் அந்த தருணத்தை அப்படியே மீண்டும் உடல் முழுவதும் உணர வைத்தது இப்படம்!ஒருமாதிரி ஜிவ்வென்று முதுகுத்தண்டில் ஏறி 'எவன் கூடவாவது இப்ப உரண்டை இழுத்தால் என்ன?' என்ற பரபரப்பு அடங்க வெகுநேரம் ஆனது! :D
அவ்வகையில் படத்தின் இயக்குனருக்கு இது பெருவெற்றி தான். குறிப்பாக ஷைன் டாம் சாக்கோவும் டோவினோவும் மோதும் அந்த சண்டைக்காட்சி அட்டகாசம்! ரோப் ஷாட் கிரீன் மேட் என்றெல்லாம் படுத்தாமல் எடுத்ததற்கு நன்றி.(ஸ்டண்ட் மாஸ்டர் : சுப்ரீம் சுந்தர்)
எல்லாருக்கும் இப்படம் புடிக்காது.நாம் சொன்னதுபோல நிஜ தள்ளு மாலைகள் போட்டோர் படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் அப்படி ரசித்து பார்க்கலாம்! எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்.யாரையாவது வெளுக்க வேண்டும் என்ற வெறியை கண்டிப்பாக படம் ஏற்றி விடும்!
*************************************************
பிரேமலு:
கதை ஹைதராபாத்தில் நடப்பதால் இப்படியொரு தலைப்பு!பிரேமம் படம் தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் அளவுக்கு இப்படமும் உண்டாக்கியுள்ளது.
இப்படம் முழுக்க கொண்டாட்டம் தான்!முனியாண்டி சொல்லும் ஹெடோனிசம் மாதிரியான வகைப்பாட்டில் இது வருமா என்று நமக்குத்தெரியவில்லை!ஆனால் வாழ்வை அதன் எல்லைவரையில் கொண்டாடி உள்ளார்கள்!இந்தளவு எனர்ஜி லெவல் எப்படித்தான் மலையாள காமெடிப்படங்களுக்கு அற்புதமாக வாய்க்கிறது என்ற ரகசியம் நமக்கு விளங்கவேயில்லை!
ஆனால் ஒரே தயக்கம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக ஒரு செய்தி!இந்த இரண்டாம் பாகம் என்ற மாய சுழலில் சிக்காமல் இருப்பது தனிப்பட்ட சினிமாவுக்கு மட்டுமல்லாமல் மொத்த திரை உலகுக்கே நலம் பயக்கும்!தமிழ் சினிமாவில் இப்படித்தான் நான்கு ஐந்து என்று போய் டார்ச்சர் செய்கிறார்கள்!அது தேவையில்லை.திரும்ப அந்த மேஜிக்கை நிகழ்த்த முடியாது!
ஒருபக்கம் தீவிரமான படங்களும் வருகிறது இன்னொரு பக்கம் இடைநிலை என்று சொல்லும் படங்களும் வருகிறது.மற்றொரு பக்கம் தள்ளுமாலா,பிரேமலு மாதிரியான படங்களும் வருகிறது.அனைத்துமே ரசிக்கும்படி உள்ளது.
ஆனால் தமிழ் சினிமாவில்????உருப்படியான ஒரு மசாலா படம் கடைசியாக எப்போது வந்தது?நமக்கு தெரியவில்லை!இடைநிலைப்படங்கள் தீவிர படங்கள் என்று எடுக்கப்பட்ட படங்கள் எந்தளவு அரைவேக்காட்டுத்தனமாக இருக்கிறது என்று சில நியாயமான விமர்சகர்கள் புலம்புவதை பார்க்க முடிகிறது.முன்ன போனா முட்டுது!பின்ன போனால் உதைக்குது என்ற நிலையில் தமிழ் சினிமா இருக்கு!
***************************************************
மேலே குறிப்பிட்ட இரு படங்களின் எனர்ஜி லெவல் அந்தளவு மேலே சென்றதற்கு மற்றொரு காரணம் இசை!Western beats ஐ எப்படி அட்டகாசமாக பயன்படுத்தி உள்ளார்கள் என்று வியக்க வைத்துவிட்டார்கள்(ஆவேஷம் படத்தையும் இதில் சேர்க்கலாம்)!நல்ல சுவாரஸ்யமான rythmic வெஸ்டர்ன் பீட்ஸ்களை கேட்டாலே நமக்கு அளவுகடந்த உற்சாகம் பீறிட்டு எழுந்துவிடும்!இப்படங்களில் அவற்றை கேட்க முடிந்தது.
இந்த பீட்ஸ்களை கேட்கும்போது நினைவுக்கு வந்தவர் யுவன்!ஒருகாலத்தில்(ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்று கூறலாம்) வெஸ்டர்ன் பீட்ஸ்களை எந்தளவு அற்புதமாக அவர் பயன்படுத்தினார் என்று நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
வெண்ணிலா வெளியே வருவாயா
தீப்பிடிக்க தீப்பிடிக்க
நீ இல்லை என்றால்
Boom boom
***********************************************