Sunday, 24 November 2024

G.W.e

 
தள்ளுமாலா :

     படம் முழுக்க அதிரடி சண்டைகள் கொண்ட கேப்புடன் படங்களை விடாது தியேட்டரில் பார்த்ததுண்டு.அது போதாமல் போய் மீண்டும் வீட்டில் வீடியோ கேசட்டில் அதே படத்தை பார்ப்போம்.
 
          குறிப்பாக சண்டைக்காட்சிகளில் கேப்புடனோ அல்லது வில்லன் கோஷ்டியோ சண்டையில் காற்றில் சுழன்று விழும் காட்சிகளை pause செய்து பிறகு Still Adv என்ற சிறப்பு பட்டனை அமுக்கினால் ஒவ்வொரு ஃபிரேமாக காட்சி முன்னகரும்.
 

ஆகாயத்தில் இருக்கும் நபர் அப்படியே மெதுவாக காற்றில் சுழன்று சுழன்று  தரையில் விழுவதை பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி!  பிற நடிகர்கள் பிற மொழியில் வந்த சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களையும் ரசித்ததுண்டு.ஆனால் அவற்றில் சண்டை என்பது எதோ ஒரு நியாயத்தை நிறுவுவதற்காக/தீயவர்களை அழிப்பதற்காக/நல்லவர்களை காப்பதற்காக...etc...etc... என்று எதேனும் ஒரு காரணம் சொல்லப்படும்.

    ஆனால் அடிதடி செய்யணும் என்பதற்காகவே அடிதடி பண்றோம் என்று ரணகளம் செய்த படங்கள் மிக குறைவு!ஃபைட் கிளப் சொல்லலாம்.கில் பில் படத்தில் கூட ஒரு காரணத்திற்காகவே உமா துர்மேன் ரத்தக்களரி செய்வார்!

      எந்த காரணமும் இல்லாமல் அல்லது எதேனும் சல்லித்தனமான காரணத்திற்காக இவ்வளவு அடி உதை குத்து என்பது மிக மிக ரசனையான விஷயம்.இளவயதில்(அதாவது 290 வருடங்களுக்கு முன்பு என்று படிக்கவும் - கும்மாங்கோ)  போட்ட 'தள்ளு மாலை'கள் நினைவுக்கு வந்தது.

 

      சேறு நிறைந்த ஜில்லென்ற பரப்பில்/உச்சி வெயிலில் ஒவ்வொரு மணல் துகளும் ஒரு நெருப்பு கங்கு மாதிரி சுடும் பரப்பில்/சிமெண்ட் தரையில்/காய்ந்த சேறு மேடும் பள்ளமுமாக மிக கூரான பரப்புடன் இருக்கும் தளத்தில் என்று கண்மன் தெரியாமல் அடித்து ,பரஸ்பரம் அடிவாங்கி முடித்து எழுந்தால் சற்று நேரத்திற்கு எதற்காக சண்டை போட்டோம் என்பதே நினைவுக்கு வராத அந்தக்கணத்தில் வாயில் வெது வெதுப்பாக சற்று  புளிப்பாக இரத்தம் வரும் அந்த தருணத்தை  அப்படியே மீண்டும் உடல் முழுவதும் உணர வைத்தது இப்படம்!ஒருமாதிரி ஜிவ்வென்று முதுகுத்தண்டில் ஏறி 'எவன் கூடவாவது இப்ப உரண்டை இழுத்தால் என்ன?' என்ற பரபரப்பு அடங்க வெகுநேரம் ஆனது! :D

    ஏற்கெனவே பிரேமம் படத்தில் வரும் களிப்பு பாடலை (முரளி கோபியின் எனர்ஜி லெவல்+ ராஜேஷ் முருகேசனின் அதிரடி பீட்ஸ்+ அல்போன்ஸ் புத்திரன் பாடலை படமாக்கியிருந்த விதம்!!!!🔥🔥🔥) பார்த்த போதும் இதே உணர்வு! :D

 
 

   அவ்வகையில் படத்தின் இயக்குனருக்கு இது பெருவெற்றி தான். குறிப்பாக ஷைன் டாம் சாக்கோவும் டோவினோவும் மோதும் அந்த சண்டைக்காட்சி அட்டகாசம்! ரோப் ஷாட் கிரீன் மேட் என்றெல்லாம் படுத்தாமல் எடுத்ததற்கு நன்றி.(ஸ்டண்ட் மாஸ்டர் : சுப்ரீம் சுந்தர்)
எல்லாருக்கும் இப்படம் புடிக்காது.நாம் சொன்னதுபோல நிஜ தள்ளு மாலைகள் போட்டோர் படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் அப்படி ரசித்து பார்க்கலாம்! எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்.யாரையாவது வெளுக்க வேண்டும் என்ற வெறியை கண்டிப்பாக படம் ஏற்றி விடும்!
*************************************************
     பிரேமலு:
 கதை ஹைதராபாத்தில் நடப்பதால் இப்படியொரு தலைப்பு!பிரேமம் படம் தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் அளவுக்கு இப்படமும் உண்டாக்கியுள்ளது.

      ஒரு சாதாரண கதை/சிறிய சம்பவத்தை வைத்தே இரண்டு மணி நேரம் சுவாரஸ்யமாக கட்டிப்பொடுவதில் மலையாள சினிமா உச்சம் தொட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

 

இப்படம் முழுக்க கொண்டாட்டம் தான்!முனியாண்டி சொல்லும் ஹெடோனிசம் மாதிரியான வகைப்பாட்டில் இது வருமா என்று நமக்குத்தெரியவில்லை!ஆனால் வாழ்வை அதன் எல்லைவரையில் கொண்டாடி உள்ளார்கள்!இந்தளவு எனர்ஜி லெவல் எப்படித்தான் மலையாள காமெடிப்படங்களுக்கு  அற்புதமாக வாய்க்கிறது என்ற ரகசியம் நமக்கு விளங்கவேயில்லை!

    ஒரு இயக்குனரின் கற்பனையில் அவ்வளவு உற்சாகம் மிகுந்த காட்சிகள் தோன்றலாம்.ஆனால் அதை சரியான முறையில் படக்குழுவுக்கு விளங்க வைத்து அதை அப்படியே திரையில் கொண்டு வருவது என்பது தலைகீழாக மலையில் ஏறுவதற்கு சமம்!அதை இயக்குனர் செவ்வனே செய்துள்ளார்!

    ஆனால் ஒரே தயக்கம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக ஒரு செய்தி!இந்த இரண்டாம் பாகம் என்ற மாய சுழலில் சிக்காமல் இருப்பது தனிப்பட்ட சினிமாவுக்கு மட்டுமல்லாமல் மொத்த திரை உலகுக்கே நலம் பயக்கும்!தமிழ் சினிமாவில் இப்படித்தான் நான்கு ஐந்து என்று போய் டார்ச்சர் செய்கிறார்கள்!அது தேவையில்லை.திரும்ப அந்த மேஜிக்கை நிகழ்த்த முடியாது!
      
       ஒருபக்கம் தீவிரமான படங்களும் வருகிறது இன்னொரு பக்கம் இடைநிலை என்று சொல்லும் படங்களும் வருகிறது.மற்றொரு பக்கம் தள்ளுமாலா,பிரேமலு மாதிரியான படங்களும் வருகிறது.அனைத்துமே ரசிக்கும்படி உள்ளது.
   ஆனால் தமிழ் சினிமாவில்????உருப்படியான ஒரு மசாலா படம் கடைசியாக எப்போது வந்தது?நமக்கு தெரியவில்லை!இடைநிலைப்படங்கள் தீவிர படங்கள் என்று எடுக்கப்பட்ட படங்கள் எந்தளவு அரைவேக்காட்டுத்தனமாக இருக்கிறது என்று சில நியாயமான விமர்சகர்கள் புலம்புவதை பார்க்க முடிகிறது.முன்ன போனா முட்டுது!பின்ன போனால் உதைக்குது என்ற நிலையில் தமிழ் சினிமா இருக்கு!
***************************************************
மேலே குறிப்பிட்ட இரு படங்களின் எனர்ஜி லெவல் அந்தளவு மேலே சென்றதற்கு மற்றொரு காரணம் இசை!Western beats ஐ எப்படி அட்டகாசமாக பயன்படுத்தி உள்ளார்கள் என்று வியக்க வைத்துவிட்டார்கள்(ஆவேஷம் படத்தையும் இதில் சேர்க்கலாம்)!நல்ல சுவாரஸ்யமான rythmic வெஸ்டர்ன் பீட்ஸ்களை கேட்டாலே நமக்கு அளவுகடந்த உற்சாகம் பீறிட்டு எழுந்துவிடும்!இப்படங்களில் அவற்றை கேட்க முடிந்தது.
     இந்த பீட்ஸ்களை கேட்கும்போது நினைவுக்கு வந்தவர் யுவன்!ஒருகாலத்தில்(ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்று கூறலாம்) வெஸ்டர்ன் பீட்ஸ்களை எந்தளவு அற்புதமாக அவர் பயன்படுத்தினார் என்று நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
வெண்ணிலா வெளியே வருவாயா
தீப்பிடிக்க தீப்பிடிக்க
நீ இல்லை என்றால்
Boom boom

...etc..etc...போன்ற பாடல்களில் அந்த பாடல் முழுக்க பயணிக்கும் பீட்ஸ் தான் முதுகெலும்பு! கேட்ட முதல் முறையே மனதில் ஒட்டிக்கொண்டு விடும்!
 

ஆனால் கடந்த சில வருடங்களாக மண் சார்ந்த இசை,பிர்லா ஒயிட் சார்ந்த இசை என்று யாரோ இவரை உசுப்பிவிட இவரும் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்."இது யுவன் போட்ட இசை" என்று யாராவது சொல்லித் தெரியும் அளவுக்குத்தான் அவரின் தற்கால பாடல்கள் உள்ளது!பீட்ஸ் கொண்ட பாடல்களை அவர் சமீபத்தில் போட்டிருந்தாலும்(ஸ்டார்) அதில் ரிதமை காணோம். முதல்முறையே பாடலின் பீட்ஸ் மனதில் ஒட்டிக்கொள்ளும் யுவனின் திறன் காற்றோடு போய் விட்டதோ!

***********************************************

பதிவின் தலைப்பு கிகாவாட் எலக்ட்ரிக்கல் என்பதை குறிக்கும்.சில படங்களை பார்க்கும்போதே அதிலிருந்து அசாத்தியமான எனர்ஜி அப்படியே நமது உடல் நோக்கி பாயும் உணர்வை  உணர முடியும்(மற்றவர்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுமா என்று தெரியாது).
 

உதாரணமாக நோலன் இயக்கிய Batman Trilogy படங்களை பார்க்கும் போது புல்லரிப்புடன் கிகாவாட் கணக்கில் எனர்ஜி உடலில் பாய்ந்து கொண்டே இருப்பதாக நமக்கு தோன்றும்.அத்தகைய உணர்வை மேற்சொன்ன இரண்டு படங்களும் கொடுத்தது!(இப்படி வெவ்வேறு இடங்களில் எனர்ஜியை திருடித்தான் வண்டி ஓடுது!- கும்மாங்கோ)

 

Sunday, 17 November 2024

Ulidavaru Kandanthe (2014)

 சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி ஒருவர் ஒரு சூழலில் எதற்காக இப்படி நடந்து கொண்டார் என்பது சில நேரங்களில் பெரும் புதிராக இருக்கும்.சில நேரத்தில் ஒருவரது சொந்த நடவடிக்கையே அப்படியான கேள்விகளை எழுப்பும்.பதில் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்.

    அப்படியான ஒரு சம்பவத்தை மையமாக கொண்டதே இப்படம். படத்தின் தலைப்பே அதுதான்( As Seen by the Rest)! Rashomon பாணியில் ஒரே சம்பவத்தை பலர் பலவிதமாக சொல்வதாக காட்டினாலும் அதை ஆய்த எழுத்து மாதிரி விடலைத்தனமாக இல்லாமல் முதிர்ச்சியான தொனியில் எடுத்துள்ளார் ரக்ஷித் ஷெட்டி.

 

      கதையை நேர்கோடாக ஒருவர் சொல்வதாகவோ அல்லது இயக்குனரின் ஒற்றைக்கோணத்தில் மட்டும் கதை செல்வதாகவோ காட்டியிருந்தால் இவ்வளவு மர்மம் இவ்வளவு கிளைக்கதைகள் இவ்வளவு உணர்ச்சிகள் திரையில் காட்டியிருக்க முடியாது.
       மேலும் படத்தின் பலங்கள் என்று சொன்னால் பலவற்றை கூறலாம்.
    முக்கியமாக கதை நடக்கும் மால்பே என்ற கடற்கரை கிராமம்.மீனவர்கள் மீன்பிடி படகுகள் மீன் விற்கும் பெண்கள் பல்வேறு படகுகளை மீன்பிடிக்கு பயன்படுத்தி பெரும்புள்ளியான ஒரு பிரபலம்,அவருக்கு இருக்கும் அடியாட்கள்,அந்த அடியாட்கள் செய்யும் பல்வேறு அடிதடி கொலைகளால் கிராமத்தின் சமநிலையில் ஏற்படும் கடும் அதிர்வுகள் அதனால் வரும் எதிர்வினைகள் என்று cascading effect என்பார்களே! அந்தமாதிரியான ஒரு விஷயத்தை அற்புதமாக பயன்படுத்தியுள்ளார் ரக்ஷித் ஷெட்டி.

    சப்த சாகரதாச்சே யெல்லோ படத்தில் கடற்கரை என்பது கதையின் போக்கில் உயிர்நாடியாக இருந்தது போல இப்படத்திலும் அப்படியே! முன்னா(கிஷோர்) வரும் கடற்கரையோர காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அத்தனை இயல்பாக இருந்தது!

 

    மற்றொன்று புலிக்கலைஞர்களின் வாழ்க்கை காட்டப்பட்ட விதம்.அசோகமித்திரன் எழுதிய புலிக்கலைஞன் சிறுகதையை நினைவுபடுத்தியது.அந்த சிறுகதையை கடுகு என்ற படத்தில் கொத்து புரோட்டா போட்டிருந்த கொடுமையும் நினைவுக்கு வந்தது .
      படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை(Ajaneesh Loknath)மற்றொரு பலம்.ஒருகாலத்தில் மற்ற மொழி சினிமாக்களுக்கு முன்னோடியாக தமிழ் படத்தின் கதையோட்டத்திற்கு பெரும்பலமாக பாடல்களையும் பின்னணி இசையையும் ஒரு மொட்டை விடாமல் கொடுத்து கொண்டிருந்தார்.பின் அறிமுகமான எந்த இசையமைப்பாளரும் அதை இப்போதுவரை செய்ய முடியவில்லை/தெரியவில்லை என்பது பெரும் அவலம்!



         குறிப்பாக அந்த சிறுவர்கள் பாடும் "மெடிசின் பேப்பர்"  பாடல் ஒருபுறம் உற்சாகமாக இருந்தாலும் மற்றொருபுறம்  கதையின் போக்கில் சில தீவிர நகர்வுகள் பாடலின் இடையே காட்டப்படுகிறது.

     ரிஷப் ஷெட்டி, ரக்ஷித் ஷெட்டி இருவரும் நடித்துள்ளார்கள். நாந்தாண்டா டைரக்டர் எல்லா க்ளோசப் ஷாட்டும் எனக்கே வைங்கடா என்பதான எந்த அலட்டல்களும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் ரிச்சி கதாபாத்திரத்தை விடவும் அதிக காட்சிகள்,கனமான காட்சிகள் கொண்ட கதாபாத்திரங்கள் படத்தில் அதிகம்.(காசர் தாக்கப்பட்டார் - கும்மாங்கோ)

         இதில் நடிப்பில் அசத்தியவர்கள் இருவர். டெமாக்ரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் மாஸ்டர் சோஹன்-  வெகு இயல்பாக வசனம் பேசி நடித்துள்ளான்."ரெண்டு கூலிங் கிளாஸ் வச்சிருக்க .ஒன்னு எனக்கு குடேன்" என்று முன்னாவை கேட்பதாக இருக்கட்டும் படகுக்கு அடியில் என்ஜினில் வேலை செய்யும் போது முன்னா இடையில் மேலே ஏறி வந்ததும் "ஒரு சின்ன பையனை இருட்டுல விட்டுட்டு வர்றியே" என்று கோபமாக பேசுவதாக இருக்கட்டும் அட்டகாசம்!மற்றொருவர் அச்யுத் குமார் .

 
     மீன் பிடிக்கும்போது கிடைத்த வினோத மரத்துண்டு கிடைத்தது துவங்கி தனக்கு ' சனி பிடித்துவிட்டதாக ' பயப்படுவது துவங்கி,பிறகு அந்த மரத்துண்டு உடைபட்டதும் உண்மையில் அது என்ன என்று தெரிந்து மகிழ்வதும்,அதை அதிக விலைக்கு விற்க முற்பட்டு ஏமாந்து போனதும்,பிறகு கொஞ்சம் கொஞ்சமாக schizophrenia வுக்குள் வீழத்துவங்கி எந்நேரமும் காகம் கரையும் சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதை பொறுக்காமல் சுருண்டு அழுவதும் என்று பிரமாதமாக நடித்துள்ளார்.இடையில் புலிவேஷம் போட்டு ஆடியபடி வரும்போது மிரட்சியோடு மரத்தை அண்ணாந்து பார்த்தபடி செல்லும் காட்சி உச்சம்!


 
       மற்றொரு பிடித்த விஷயம் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம்.Sin City படம் முழுக்க படமாக்கப்பட்ட விதம் தெரிந்ததே! அந்தப்பாணியில் சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளனர் . ரகு (ரிஷப் ஷெட்டி) மும்பையில் இருந்து அந்த சிகப்பு பையுடன் மால்பேவுக்கு தப்பிவரும் காட்சிகள்,     மீன் பிடிக்கும்போது மரத்துண்டு கிடைக்கும் காட்சியில் ஒரு காகம் அதையெல்லாம் பார்ப்பதாக காகத்தின் பின்னிருந்து படமாக்கியது போன்ற  ஒரு காட்சி இவைகள் புதுமையாக இருந்தது.கடற்கரையோர காட்சிகள் நாமே அங்கு அமர்ந்திருக்கும் உணர்வை தந்தது!


      மேலும் ரிச்சி ரகுவிடம் சொல்லும் அந்தக்கதை!Cuban kid , மாண்ட்வா kid என்று டோனி மோண்டானா (Scarface) மற்றும் விஜய் (அக்னீபத்) கதாபாத்திரங்களின் கதையை சொல்லியது ரணகளம்!
      "ரிஷப் ஷெட்டி, ரஷித் ஷெட்டி, ராஜ் ஷெட்டி ஆகியோர் கன்னட சினிமாவை வேறொரு உயரத்திற்கு கொண்டுபோக போகிறார்கள்" என்று ஹரன் பிரசன்னா    ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.மற்ற இரண்டு ஷெட்டிகள் பற்றி நமக்கு தெரியாது(இப்பத்தானே கன்னட படங்களையே பார்க்க ஆரம்பித்துள்ளோம்). ரஷித் ஷெட்டி நம்பிக்கை அளிக்கிறார்!
 

 
     
     

Wednesday, 13 November 2024

Shakahaari

 ஷாகாஹாரி (சைவம்).படத்தின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ஒரு (சைவ) மெஸ்ஸில் தான் நடைபெறுகிறது.அவ்வகையில் யோசித்துப்பார்த்தால் ஒருவகையான அவல நகைச்சுவையாகவே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது!

       படத்தின் மைய இழை என்பது இருவர் தங்களின் நெருங்கியவர்கள் நன்மைக்காக செய்யும் இரு செயல்கள் ஏற்படுத்தும் எதிர்பாரா விளைவுகள் தான்.

 

       அனாதை இல்லத்தில் தன்னுடன் வளர்ந்த ஆருயிர் நண்பன் விஜய்க்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறான் ஹர்ஷா.இது நிதானமாக முடிவெடுத்து செய்த ஒரு செயல்.
     ஏற்கெனவே ஒருமுறை கருக்கலைப்பு நடந்ததில் சோர்ந்து போன மனைவி கிராமத்திற்கு மாறுதலாகி வந்த கணவனுடன் இருக்கையில் அந்த சூழல்  ஒப்புக்கொள்ளாமல் மூச்சுத்திணறல் வலிப்பு என்று படுத்து விட்டார்.அவருக்காகவே வேறொரு இடத்திற்கு மாறுதல் கேட்கிறார் மல்லிகார்ஜுன்.மாறுதல் கூடிவரும் வேளையில் ஒரு வழக்கு.ஒருபுறம் மனைவியை கவனித்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி .மற்றொரு புறம் வழக்கை முடித்த பிறகுதான் பணியிட மாறுதல் என்ற துறைசார் நெருக்கடி!வழக்கை விரைந்து முடிக்க எண்ணி எடுத்த ஒரு முடிவு .இது அவசர கதியில் எடுத்த முடிவு.
      இந்த இரண்டு செயல்களும் அந்தந்த முடிவுகளுடன் சம்மந்தப்பட்டவர்கள்/படாதவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் சலனங்கள் சுனாமிக்கள் தான் படம்.
       

    அதே கிராமத்தில் மெஸ் நடத்திவரும் சுப்பண்ணா.தலைமுறை தலைமுறையாக உணவகம் நடத்திவரும் குடும்பத்தைச்சேர்ந்தவர் இளவயதில் இணைந்து வாழ முடியாத காதலி தனது சொந்தத்தில் ஒருவரை திருமணம் முடித்து அவனும் சில வருடங்களில் இறந்து போக ,இப்போது அவளோடு வாழ நினைக்கிறார்.

 

      படத்தின் முக்கிய மற்ற இரு கதாபாத்திரங்கள் கதை நடக்கும் அந்த கிராமம் மற்றும் மெஸ்!மலையாள படங்களில் ஒரு கிராமம் அல்லது சிறு நகரம் கதையின் ஆணிவேராக இருக்கும். கும்பளங்கி நைட்ஸ்,மகேஷின்டே பிரதிகாரம்,அங்கமாலி டைரீஸ் என்று பல படங்களை சொல்லலாம்.அதுபோன்று இப்படத்தின் ஆணிவேர் கதை நடக்கும் கிராமம்.ரகஷித் ஷெட்டி படங்களில் கடலோர கர்நாடக நிலப்பரப்பு கதையின் போக்கில் பெரும் பங்காற்றியது போல இதில் ஒரு மலைசூழ் கிராமம்.
       Naked(1993) படத்தில் ஜானிக்கும் எதோவோரு நிறுவனத்தின் காவலாளிக்கும் நடக்கும் உரையாடல் மிகுந்த நெகிழ்வைத்தரும் ஒன்றாக இருக்கும்.
குண்டடி பட்ட விஜய்க்கும் சுப்பண்ணாவுக்கும் மெஸ்ஸில் நடக்கும் அந்த உரையாடல் அத்தகைய உணர்வைத்தந்தது.
.
விஜய் : நான் உங்களை எல்லாம் காப்பாத்த வேண்டியது(BSF பயிற்சியில் இருக்கும் விஜய் ஒரு காரணத்திற்காக கிராமத்திற்கு வருகிறான்).ஆனா நீங்க என்னை காப்பாத்தி இருக்கீங்க.உண்மையில் நீங்கதான் வீரன்.
.

சுப்பண்ணா : இரவு அரைச்ச மாவு காலையில சரியான பதத்துக்கு புளிச்சிருக்கா? என்று பாக்குறது மட்டும்தான் என் வேலை .அந்தவகையில் நான் மாவைத்தான் பாதுகாக்கிறேன்!நாட்டை பாதுகாக்கும் வீரர்கள் மாதிரியெல்லாம் வர முடியாது.

.
இது உரையாடலின் சிறு பகுதி மட்டுமே!
ஆங்!படத்தில் விஜய் கதாபாத்திரம் விருப்பத்தின் பேரிலேயே எல்லை பாதுகாப்பு படையில் சேர்கிறான்.வெட்டியாக ஊரை சுற்றிவிட்டு...... "திடீரென்று பொறுப்பு வந்த டெம்ப்ளேட்" இதில் இல்லை!நன்று!
  "கல் உடைந்தால் மண்ணாகும்.மனம் உடைந்தால் இதயமே கருங்கல்லாக மாறிவிடும்" என்று பட்டர் சொல்லும் மற்றொரு வசனத்தையும் குறிப்பிடலாம் .
         படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் எளிமையான ஆசைகள் கனவுகள்.ஆனால் விளையாட்டுக்காக கட்டிவைத்த சீட்டுக்கட்டு மாளிகை கண்ணெதிரே கலைந்து விழுவதை  பார்ப்பதைப்போல் அவரவர் வாழ்க்கை கண்ணெதிரே சிதைந்து நொறுங்குவதை கதையின் கதாபாத்திரங்கள் கையறு நிலையில் செய்வதறியாது காண்கிறார்கள்!

       கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே நகைச்சுவை கதாபாத்திரங்கள் செய்து பார்த்துள்ளோம்.Happy Birthday to Me படத்தில் ரணகளம் செய்திருப்பார்.அவனே ஶ்ரீமன் நாராயணா படத்தில் பேண்ட் மாஸ்டர் கேரக்டரிலும் அசத்தி இருப்பார்.அப்படத்தில் அவர் அடிக்கடி சொல்லும் "Rama Rama, thusu daksha rutha jaaripa" என்ற வாசகம் தான் படத்தின் திருப்புமுனையாக இருக்கும்!இது ஒரு  சீரியசான கேரக்டர்.மிகச்சரியாக செய்துள்ளார்.

 
    படத்தில் ரங்காயன ரகுவுக்குத்தான் அதிக காட்சிகள்.  இயல்பாக அலட்டல், மிகைநடிப்பு எதுவுமில்லாமல் நடித்துள்ளார்!தோற்றத்தில் அப்படியே ஜோஜு ஜார்ஜ் போல உள்ளார். இவர் ஏற்கெனவே குப்பி படத்தில்  பெங்களூர் ரங்கநாத் கேரக்டரை செய்தவர் என்பது நமக்கு சுத்தமாக நினைவுக்கு வரவில்லை.தற்செயலாக இவர் நடித்த படங்கள் குறித்து பார்த்த போது அது Cyanide (தமிழில் குப்பி) படமும் இருந்தது வியப்பளித்தது.அதில் கொஞ்சம் இயக்குனர் மிஷ்கின் மாதிரியான தோற்றத்தில் இருப்பார் .

 

       பெங்களூர் ரங்கநாத் 'கண்ணிவெடி கார்த்திகேயன் " மீது  சொன்ன அந்த "வெயிட்"டான குற்றசாட்டு பலருக்கும் மறந்திருக்காது!அந்த படத்தில் பயந்த சுபாவமுள்ள அதே நேரத்தில் வில்லங்க வேலைகள் செய்யும்  ஒரு நடுத்தர குடும்பஸ்தன் கேரக்டரை செய்தவர் இதில் முற்றிலும் வேறான ஒரு கதாபாத்திரத்தை செய்துள்ளார்!குப்பி படத்தில் ஒற்றைக்கண் சிவராசன் கேரக்டரில் ரவி காலே அட்டகாசமாக நடித்ததையும் மறக்க முடியாது!
     அந்த வழக்கறிஞர் கதாபாத்திரம் மிக விநோதமான தன்மைகளுடன் காட்டப்பட்டாலும் அவர் சட்டென்று காணாமல் போகிறார்!அந்த கதாபாத்திரம் பெரிதாக எதோ செய்யப்போவது போல பில்டப் கொடுத்தது அனாவசியம்!

        படத்தின் முதுகெலும்பு என்றால் அந்த மெஸ்!சுவற்றின் ஓரத்தில் அந்தப்பலகை மேல் வைக்கப்பட்ட டேப் ரெக்கார்டர், மிக முக்கியமாக அறைகளின் வாயிலில் தொங்கும் திரைச்சீலைகள்,மேஜை அமைப்புகள், தோசைக்கல் மேடை,படுக்கை அறை, மெஸ்ஸின் பின்புற திடலை திறந்தால் சாலை - இதெல்லாம் நேரில் கண்டுணர்ந்த ஒரு உணர்வை உண்டாக்கியதில் இயக்குனர் சந்தீப் சுன்கடுக்கு வெற்றி!இது அவருக்கு முதல் படமாம்! சில பிழைகள் இருந்தாலும் படம் பார்வையாளனை நெளிய வைக்கவோ கொட்டாவி விடவோ வைக்கவில்லை!

Wednesday, 6 November 2024

வடக்குபட்டி பஸ் ஸ்டாப்

 பாவாட:

 கேரளத்தின் இரு பெரும் பிரச்சினைகளாக இருந்தது குடிப்பழக்கம் மற்றும் நீலப்பட பித்து!இரண்டாவது சமாச்சாரம் இப்போது வெளிப்படையாக இல்லை.அதாவது ஒரு காலத்தில் ஷகிலா படங்களின் வசூல் மம்மூட்டி மோகன்லால் படங்களுக்கே சவாலாக இருந்ததை மறுக்க முடியாது.அந்த நிலை இப்போது இல்லை.அவர்கள் வேறு வழியில் படங்களை பார்க்க கூடும்.ஆனால் தியேட்டரில் இல்லை.

 

         
    உண்மையில் அது நீலப்படமாக ஆரம்பிக்கப்பட வில்லை.தீவண்டிப்பாத(Railway track) எனும் கலைப்படமாகத்தான் அது ஆரம்பிக்கப்படுகிறது.தீவிர கலைத்தாகம் கொண்ட ஒரு இயக்குனர் (முரளி கோபி) நீலப்படங்களில் பிரபலமான நடிகைகளை புறந்தள்ளி ஒரு மகனுக்கு தாயாக இருக்கும் ஒருவரை (ஆஷா சரத்) தேர்ந்தெடுக்கிறார்.படம் வளர்ந்து வரும் வேளையில் ஏகப்பட்ட சிக்கல்.இயக்குனரும் மரித்துப்போக பிறகு கடன்காரனுக்கு பயந்து அதை வேறொரு நடிகையை வைத்து நீலப்படமாக எடுத்து வெளியிடுகின்றனர்.
      இதனால் மனமுடைந்து தயாரிப்பாளரான ஆங்கில பேராசிரியர் (அனூப் மேனன்)மொடாக்குடியனாக மாறுகிறார்.அந்த நடிகையின் மகனும் வேறொரு சூழலில் அவ்வாறே இருக்கிறான்!இருவரும் என்ன செய்தனர் என்பதே கதை.
   ஒன்று குடிப்பழக்கம் தொடர்பான தீமைகளை எடுத்துரைக்கும் படமாக இருந்திருக்க வேண்டும்.அல்லது நீலப்படங்களில் நடிக்கும் நடிகைகள் சமூகத்தில் சந்திக்கும் அவமானங்கள், அவப்பெயர், வெளியில் தலைகாட்ட முடியாத நிலை,அந்தரங்க காட்சிகளில் ஒரு நடிகை நடிக்க மறுத்தால் வேறொரு நடிகையை body double ஆக பயன்படுத்தி படத்தை வெளியிடுதல்(இப்படத்திலும் ஆஷா சரத் கதாபாத்திரம் நடித்தது ஒரு சாதாரண படத்தில் தான்.அதனிடையே வேறொரு நடிகையை வைத்து அந்தரங்க காட்சிகளை படமாக்கி இணைந்ததாக கதை செல்லும்) போன்றவற்றை சுட்டும் படமாக இருந்திருக்க வேண்டும்.இரண்டுமே இல்லாமல் அந்தரத்தில் ஊசலாடுகிறது!
      படத்தின் முதல் பாதி குடி இரண்டாம் பாதி நீலப்பட பாதிப்பு என்று குழப்பி அடித்துவிட்டார்கள்!நீதிமன்ற காட்சிகள் இழுவை!படத்தில் உருப்படியான ஒரே விஷயம் மேக்கப்.மொடாக்குடி பேர்வழிகள் எப்படி இருப்பார்களோ அச்சு அசல் அது போலவே பிரித்விராஜ் மற்றும் அனூப் மேனன் ஆகியோர் தோற்றமளித்தார்கள்!

    இதில் அநியாயமாக முரளி கோபி எனும் திறமைசாலி கருவேப்பிலை கணக்காக வீணடிக்கப்பட்டுள்ளார்!

 

     இப்படத்தை பார்க்க ஒரே காரணம் படத்தில் பிரித்விராஜ் கேரக்டர் ஒரு தீவிர அண்ணா ரசிகர் என்றும் புலி படத்தை முதல் நாளே பார்த்து ஃபயர் விடும் காட்சிகள் எல்லாம் படத்தில் உள்ளதாகவும் படம் வெளியான நேரத்தில் கசிந்த வதந்தியால் தான்!அந்த வதந்தியை படத்தின் தயாரிப்பாளரே பரப்பி விட்டிருக்க கூடும் .காரணம் கேரளத்தில் அண்ணா ரசிகர்கள் அதிகம்.அவர்களை வைத்தே படத்தை ஓட்ட நினைத்துள்ளார் போல!ஆனால் படத்தில் அப்படி எதுவும் இல்லை.அண்ணாவின் படம் ஓடும் தியேட்டரில்(துப்பாக்கிடா!) இடையில் பிளாக் டிக்கெட் விற்க முயன்று(வேறு எதுக்கு?குடிக்காசுக்கு தான்) அண்ணா ரசிகர் மன்றத்தினருடன் அடிதடி செய்து பிரித்விராஜ் உள்ளே செல்லும் காட்சிதான் இருக்கு! அண்ணாயியன்ஸ் ஷ்ரத்தயோடே!

***************************************************
Streaming தளங்களில் இசை என்பது பெரும்பாலும் 320kbps உடன் முடிந்துவிடும்.இதில் விதிவிலக்காக சொல்லப்பட்டது ஆப்பிள் மியூசிக் app.இதில் சிடி தரத்திலும் கேட்கலாம் அதற்கு மேல் Hi-Res தரத்திலும் கேட்கலாம் என்பதால் இதில் பதிவு செய்ய முடிவெடுத்தோம்.இதே போல Hi-Res பாடல்களை தரும் Tidal மற்றும் Qobuz  யானை விலை subscription என்பதால் இதுவே மேல் என்ற முடிவுக்கு வந்தோம்.
    ஆனால் ஆண்ட்ராய்ட் தளத்தில் இருந்து ஆப்பிள் ம்யூசிக் app-ல் பதிவு செய்வது அவ்வளவு எளிதாக இல்லை."ஆண்ட்ராய்ட் ஆசாமி எவனும் இந்தப்பக்கம் வந்துட கூடாதுடா" என்று சொல்லி வைத்து app ஐ வடிவமைத்து இருப்பார்கள் போல.காரணங்கள் புரிந்துகொள்ள கூடியதே! ஐபோன் , மேக் அல்லது ஐபேட் வாங்க வைக்க இப்படியொரு வழி.

  சிடி தரத்தில் கேட்க இருக்கும் ஹெட்போன்கள் போதும்.ஆனால் அதற்குமேல் Hi-Res தரத்தில் கேட்க வேண்டுமென்றால் தனி DAC மற்றும் தரமான ஹெட்போன் தேவைப்படும்!ஆனால் சிடி தரத்திலிருந்து Hi Res தரத்தை வேறுபடுத்தி கேட்கும் திறன் பலருக்கும் கிடையாது.அதனால் பெரும்பாலான ஒலித்தர பித்தர்களுக்கு சிடி தரமே போதுமானது.குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் ஹாரிஸ் ஆகியோரின் பாடல்களிலேயே இந்த வித்தியாசங்களை கேட்க முடியும்!அயலக ஆல்பங்கள் குறித்து நமக்கு பரிச்சயம் இல்லை

    
Apple நிறுவனம் : ஏன்டா தப்பித்தவறி கூட ஆண்ட்ராய்ட் ஆசாமி இந்தப்பக்கம் வரவே கூடாதுன்னு தான் அவ்வளவு தடையை போட்டு வச்சிருந்தேன்.அப்புறம் எப்படிடா உள்ள வந்த?
.
உதயா : Uncompressed தரத்தில் பாட்டு கேக்கணும்னு ஒரு வெறி!அதான் ரெண்டு மணிநேரம் போராடி பதிவு பண்ணி உள்ள வந்துட்டேன்



***************************************************
Lakshya:

 சில வருடங்களுக்கு முன்பு இப்படத்தை பார்க்க முயன்று பத்து நிமிடத்திலேயே நிறுத்தி விட்டோம்.சமீபத்தில் மீண்டும் முயன்று பார்க்கலாம் என்று நினைத்து.... ம்.. ஹூம்...வேலைவெட்டி,இலக்கு எதுவுமே இல்லாத கதாநாயகன் என்றாலே அவன் கண்டிப்பாக ராணுவத்தில் சேர்வதாக காட்டுவதுதான் சினிமா ஃபார்முலா!ஏனய்யா எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல்,அடுத்து என்ன செய்வது என்ற குழப்பங்கள் இல்லாது  ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற இலக்கு  கொண்ட எவரும் உங்கள் கண்ணில் படமாட்டார்களா??துள்ளுவதோ இளமை வாரணம் ஆயிரம் ,இந்தப்படம் எல்லாம் ஒரே டெம்ப்ளேட்!

 
       நார்னியா மாதிரியான படங்களில் நிஜத்தில் காண முடியாத ஒற்றைக்கொம்பு யுனிகார்ன்,பறக்கும் குதிரை போன்று இந்தப்படத்தில் பிரீத்தி ஸிந்தா ஒரு லட்சியவாத (ஆமா படத்துக்கு லக்ஷயா என்று பெயர் வச்சிட்டு ரெண்டு கேரக்டராச்சும் லட்சியத்தோடு காட்டாவிட்டால் எப்படி?) நேர்மையான எதற்கும் வளையாத ஒரு பத்திரிக்கையாளர்!!!!!!!!!!கொட்டாவி வந்துவிட்டது!

 

    சரி வந்தது வந்தோம் என்று "மே ஏசா க்யூ(ன்)" பாட்டை ரசித்துவிட்டு படத்தை நிறுத்தி விட்டோம்.இப்பாடலில் நடுவில் பீட்ஸ் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு திடீரென்று குழுவாக வயலின் ஒலிக்கும் அந்த மாயத்தருணம்!! 🤌
   படத்தில் நமதபிமான மற்றொரு பாடல் "அகர் மே கஹு".அதில் மௌத் ஆர்கன் பயன்படுத்தப்பட்ட விதம் அட்டகாசமாக இருக்கும்.சினிமாவில் பட்டிக்காட்டான் கேரக்டர் என்றாலே ஹீரோவுக்கு புல்லுக்கட்டு  விக்கை தலையில் மாட்டிவிடுவார்கள்!அந்தமாதிரி தான் ஹிரித்திக் ரோஷன் சிகையலங்காரம் இருந்தது!இந்த யோசனையை கொடுத்த அறிவாளிக்கு ஒப்பனைக்கான razzie அவார்ட் கொடுக்க வேண்டும்!

Saturday, 2 November 2024

Bong Bong!



ம்ருணாள் சென் இயக்கியதாலோ என்னவோ நமதபிமான சௌமித்ரா நடித்த படம் என்றாலும் Akash Kusum படத்தை பார்க்காமல் தள்ளிப்போட்டு வந்தோம்.கம்யூனிசம் அது இதுவென்று சவட்டி விடுவாரோ என்ற பயம் தான் .

     ஆனால் படத்தில் பொருளாதார வேறுபாடுகள் காட்டப்பட்டாலும் அதைவைத்து பெரிய லெக்சர் கொடுக்காதது ஆறுதல்!

     இந்தப்படமும் இதற்கு முன் சத்யஜித் ரே இயக்கி சௌமித்ரா நடித்த Ka Purush படமும் ஒருவகையில் ஒற்றுமையானவை. இரு படங்களிலும் வரும் பிரதான கதாபாத்திரங்களும் சில விஷயங்களில் ஒரே தன்மை கொண்டவர்கள்.

 

     அவனுக்கு ஆபீஸ் போய் வருவது போல தினம் காதலியோடு ஜாலியாக சுற்ற வேண்டும்.சாப்பிட வேண்டும்.பேச வேண்டும்.அவ்வளவே.அதைத்தாண்டி திருமணம் சம்பாத்தியம் குடும்ப பொறுப்பு இதெல்லாம் எட்டிக்காய்கள்!

     Ka Purush படத்தில் காதலி வீட்டை விட்டே வெளியில் வந்து தன்னை அடைக்கலம் புகுந்த சமயத்தில் அந்த பொறுப்பை தட்டிக்கழிக்கிறான் அமிதாபா ராய்     .பிற்காலத்தில் முன்னாள் காதலி வேறொரு வசதியான ஆசாமியை திருமணம் செய்து கடமைக்கு வாழ்ந்து வருவதை கண்டு குற்ற உணர்ச்சி கொள்கிறான்.தனது வாழ்வை மட்டுமல்லாது அந்த பெண்ணின்  வாழ்வையும் நரகமாக்கியது குறித்து வேதனைப்படுகிறான்.

 

     உண்மையில் அன்றாட வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு காதலியோடு குடும்பம் நடத்துவதை விடவும் இப்படி விட்டத்தை பார்த்து வேதனைப்படுவது அவனுக்கு சுலபமான ஒன்றாக இருக்கிறது.அந்த வேதனைகளை அப்படியே தனது படைப்பிற்கான கச்சாப்பொருளாக மாற்றவும் அவன் தயங்கப்போவதில்லை!



    Akash Kusum படத்தில் அஜய் ஒரு பணக்கார பெண்ணை தான் ஒரு லட்சாதிபதி என்று பொய் சொல்லி காதலிக்கிறான்.ஆனால் கா புருஷ் படத்தை போல வெறுமனே கனவு காணாமல் எதோ பழைய வோல்ட்மீட்டர் அம்மீட்டர் கேல்வனோ மீட்டர் போன்றவற்றை சரி செய்து செகண்ட் ஹேன்ட் பொருட்களாக விற்க நினைக்கிறான்.
 

    அதில் பெரும் சறுக்கல்.இவன் பணக்காரனாக நடிக்க தனது கார் வீடு பணம்  போன்றவற்றை கொடுத்து உதவிய நண்பனுக்கும் இவன் மேல் கடும் கசப்புணர்வு.
      கடைசியில் பெண்ணின் தந்தைக்கு உண்மை தெரியவர இவனின் உறவை அவள் கத்தரிக்கிறாள்.இதிலும் அந்த பெண்ணிற்கு  கடும் கசப்பு  நிறைந்த நினைவுகளை விட்டு செல்லும் மற்றொரு (கா புருஷ்)கோழை தான் இவன்.
*************************************************

உத்தம் குமார் நடித்த Deya Neya ஒரு ஜாலியான மசாலா படம்.பணக்கார குடும்பத்தில் பிறந்து இசையில் சாதிக்க எண்ணி தந்தையை முறைத்துக்கொண்டு வீட்டை விட்டே வெளியேறும் எம்ஜியார்த்தனமான ஒரு கேரக்டர்!

 

       தனது உண்மை அடையாளத்தை மறைத்து வாழ்கிறான்.புனைப்பெயரில் பாடுகிறான்.அந்த குரலுக்கோ ஏகப்பட்ட ரசிக ரசிகைகள்!நாயகியின் வீட்டிலேயே டிரைவர் வேலை பார்க்கிறான்.பாடகணின் உண்மை அடையாளத்தை தெரிந்துகொள்ளத்துடிக்கும் நாயகி(தனுஜா).கடைசியில் எல்லாம் சுபம்! உத்தம் குமாரின் ஸ்கிரீன்  presence படத்தின் பெரும் பலம்.மற்றொன்று இசை.

   படத்தில் அத்தனை பாடல்களும் அற்புதம்.இதில் நாம் கண்டுகொண்ட ஒரு புதிய குரல்(நமக்கு புதிய குரல் தானே!) ஷ்யாமால் மித்ரா.ரஃபியின் குரலை விடவும் மென்மையான ஒரு குரல்.

 

படத்தின் இசையமைப்பாளர் அவரே.தயாரிப்பும் கூட !
படம் பார்த்து முடித்ததும் சரிகமா யூ ட்யூப் சேனலில் இவரது பாடல்கள் அடங்கிய தொகுப்பை கேட்டு ரசித்தோம்.