Sunday, 6 August 2017

Caché (2005)

மைக்கேல் ஹேன்கி இயக்கிய Funny Games(1997) பார்த்து கடுப்பான நினைவுகளோடு கொஞ்சம் எச்சரிக்கையாகவே இப்படத்தை பார்த்தேன்.
    இப்படம் ஜாலியாக பாப்கார்ன் கொறித்துக்கொண்டு சோபாவில் சாய்ந்தபடியோ படுத்தபடியோ பார்க்க முடிகிற படமல்ல!அவ்வளவு ஈசியாக எல்லாம் தனது பார்வையாளனை உணர அனுமதிப்பதில்லை ஹேன்கி.
         பொதுவாக  ஒரு சினிமாவில் ஒரு கதாபாத்திரம்/குடும்பம் கடும் நெருக்கடியில் இருப்பதாக காட்டினால் உடனே சற்று ஆசுவாசப்படுத்தும்படியான காட்சி அதை தொடரும்.நமது இந்திய சினிமாக்களில் நகைச்சுவை ட்ராக் வரும்.ஹாலிவுட் படங்களில் வேறு வகையான திருப்பம் வரும்.இவ்விரண்டுமே ஹேன்கியின் படங்களில் காணமுடியாது!

Michael Haneke


        மிகக்கடுமையான உளவியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் கதாபாத்திரத்தை டைட் போகஸில் அப்படியே விட்டுவிடுவார்!பார்வையாளன் வேறு எந்த வகையிலும் தப்ப முடியாது!அந்த கதாபாத்திரத்தின் ஐம்பது  விழுக்காட்டு வேதனையாவது/உளவியல் நெருக்கடியாவது  பார்வையாளனுக்கு கடத்தப்படும். மெல்லிய மனம் கொண்டோர் அவர் படங்களை பார்க்காமல் இருப்பது நல்லது!
           இப்படத்தில் ஜார்ஜ்ஸ் அவரது மனைவி ஆன், மகன் பியர்ரே  ஒரு பிளாட்டில் வசிக்கிறார்கள்.தொடர்ந்து அவர்கள் வீட்டு முகப்பை படம் பிடித்து ஒரு வீடியோ கேசட் அவர்களுக்கு அனுப்பபடுகிறது.இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய கேசட்டை பாஸ்ட் பார்வர்ட் செய்து பார்க்கும்போது ஜார்ஜ்ஸ் வீட்டுக்குள் வருவது வீட்டிலிருந்து தெருவுக்கு வந்து காரை கிளப்பி அலுவலகம் செல்வது போன்ற  காட்சிகள்.

            இந்த தொடர் கேசட்டோடு சில கிறுக்கல் ஓவியங்கள்.ஒரு சிறுவனின் வாயில் இருந்து ரத்தம் வருவது,கோழியின் கழுத்து அறுபட்டு ரத்தம் தெறிப்பது என்பதாக....
             ஜார்ஜ்ஸ் இதை ஒரு prank என்பதாகவே கருதுகிறான்.இதை யாரிடமும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் அவன் மனைவியோ நண்பர் குடும்பத்தோடு உணவருந்தும்போது அவர்களிடம் சொல்லிவிடுகிறாள்.அப்போதுதான் காலிங் பெல் அடித்து ஜார்ஜ்ஸ் எழுந்துசென்று கதவருகே கேசட்டை கண்டு விருந்தினர்களுக்கு தெரியாமல் கோட்டில் கேசட்டை வைத்துவிட்டு அமர்கிறான்.ஆன் "யார் வாசலில்?" என்று கேட்க 'யாருமில்லை!' என்று மழுப்ப மேற்சொன்னவாறு கேசட் விவகாரத்தை அவள் நண்பர் குடும்பத்திடம் அம்பலப்படுதிவிடுகிறாள்.
            கடுப்பான ஜார்ஜ்ஸ் அந்த கேசட்டை போட்டு காட்டுகிறான்.போலீசுக்கு செல்லுமாறு நண்பர் சொல்கிறார். போலீசு இதை பெரிதாக பொருட்படுத்தாமல் உங்கள் குடும்பத்தின் மீது யாராவது தாக்க முயன்றாலோ தாக்கினாலோதான் தங்களால் எதுவும் செய்யமுடியும் என்று கைவிரித்ததை ஆன் சொல்கிறாள்.
           இதற்குப்பின் முழுக்க முழுக்க நாம் ஜார்ஜ்ஸ் -உடன் பயணபடுத்தப்படுகிறோம்.
               'தனியார் துப்பறியும் நிபுணரை நியமிக்கலாமே' என்று ஆன் கேட்க அதை மறுக்கிறான் ஜார்ஜ்ஸ்.காரணம் இப்போது ஜார்ஜ்ஸ்க்கு பிரச்சனை யாரோ கேசட் அனுப்புகிறார்கள் என்பதைக்காட்டிலும் அதிலுள்ள காட்சிகள் தன்னில் உண்டாக்கும் பாதிப்பையே பெரிதாக நினைக்கிறான்.
             9/11 தாக்குதல் நிகழ்ந்த பிறகு  ஒரு விஷயம் சொன்னார்-"பின் லேடன் விரித்திருப்பது ஒரு diabolical trap.நாம்(அமெரிக்கா)உணர்ச்சிவசப்பட்டு போர்தொடுப்போம்;அதனால் பேரழிவு உண்டாகும்;
அந்த பேரழிவை காரணம் காட்டி மேலும் தனது இயக்கத்தை வலுப்படுத்தவும்,
இயக்கத்திற்கு ஆதரவாக பலப்பல நாடுகளும் தன்னுடன் இணையும் என்பதே லேடனின் திட்டம்".அதற்காக விரித்த வலையில் அமேரிக்கா மட்டுமல்லாது பிற நேட்டோ நாடுகளும் சிக்கிக்கொண்டு இன்றுவரை அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
           அதுபோல தினம் ஒரு கேசட்&கிறுக்கல் ஓவியங்கள் அனுப்பப்படுவதும் ஒருவித trap தான்.அதில் ஜார்ஜ்ஸ் சிக்கவேண்டும்.அதனால் அவனுக்கு கடும் உளவியல் நெருக்கடி&குற்ற உணர்வை உண்டாக்கி அதன்மூலம் குடும்பத்தில் சரிசெய்ய முடியாது  விரிசல் உண்டாக்குவது என்பதே இதை அனுப்பியவனின் நோக்கம்.            தான் சிறுவயதில் வளர்ந்த வீடு கேசட்டில் காட்டப்பட தனியாக வசிக்கும் வயோதிக தாயை வெகுகாலம் கழித்து சந்திக்கிறான்!தாய் ஆச்சரியப்படுகிறாள்.அவளிடம் 'மஜீதை நினைவிருக்கா?நீங்கள் கூட அவனை தத்தெடுக்க நினைத்தீர்களே?' என்று கேட்க "அதெல்லாம் நினைவில்லை!" என்கிறாள்.
            மஜீத்!ஒரு அல்ஜீரிய குடும்பத்தை சேர்ந்தவன்.அவனது பெற்றோர்கள் ஜார்ஜ்ஸ்ன் குடும்பத்திற்காக பணிபுரிபவர்கள்.பாரிஸ்ல் அல்ஜீரிய விடுதலை அமைப்பை சார்ந்தவர்கள் கொன்றிழக்கப்பட்ட பேரழிவில் அவர்கள் இருவரும் மரிக்கிறார்கள்.மஜீத் தனித்து விடப்பட, ஜார்ஜ்ஸ்ன் தந்தையும் தாயும் அவனை தத்தெடுக்க முடிவெடுக்கிறார்கள்.மஜீத்துக்கு தனி அறை அதை ஜார்ஜ்ஸ்ம் பகிர்ந்துகொள்ள வேண்டும்!ஆறுவயது சிறுவனுக்கு இதெல்லாம் கடும் எரிச்சலை உண்டாக்குகிறது.சிறுவன் ஜார்ஜ்ஸ் ,மஜீதிடம் கோழியின் தலையை வெட்ட சொல்லி, பிறகு தனது பெற்றோரிடம்  தன்னை பயமுறுத்தவே இதை அவன் செய்தான் என்று இட்டுகட்டி அவனை வீட்டை விட்டே துரத்தும்படி செய்கிறான்.அனாதை இல்லத்தில் கடுமையான சூழலில் வளர வேண்டிய கட்டாயத்தில் மஜீத்.ஜார்ஜ்ஸ்க்கு கிடைத்த உயர்தர கல்வி உயர்குடி வாழ்க்கை எதுவும் மஜீத்துக்கு கிடைக்காமலே போக ஜார்ஜ்ஸ் காரணம்.
         சிறுவன் ஜார்ஜ்ஸ் சொல்லும் இத்தகைய சிறு புகார்களை அப்படியே நம்பிய ஜார்ஜ்ஸ்ன் பெற்றோர்கள் எத்தகையவர்கள்?அல்ஜீரியர்களுக்கு எதிரான முன்முடிவு கொண்டவர்களா?அவர்கள் வன்முறை ஆசாமிகள் என்பது மனதில் ஆழ பதிந்தவர்களா?இல்லாவிட்டால் எப்படி ஒரு சிறுவன் சொன்ன புகாரை நம்பி மஜீதை அவர்கள் அனாதை இல்லத்தில் சேர்க்க முடிவெடுத்தார்கள்? என்று இங்கேயும் பல கேள்விகள்!
           மஜீதை ஜார்ஜ்ஸ்ன் வீட்டில் இருந்து அனாதை இல்ல நிர்வாகிகள் அழைத்து செல்லும் காட்சி தூரக்காட்சியாக எவ்வித ஓசையும் இல்லாது மவுனமாக காட்டப்படுகிறது.மஜீதின் போராட்டம்.அடம் பிடிக்கும் மஜீதை அமுக்கிபிடித்து வண்டியில் ஏற்றும் அனாதை இல்ல நிர்வாகி என்பதாக அக்காட்சி பார்வையாளனை சலனப்படுத்துகிறது.எதையும் செய்யாமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளனாகிய நம்மை ஒருவித குற்ற உணர்விற்கு உள்ளாக்குகிறது(நான் முதலில் சொன்னபடியே ஹேன்கியின் ஸ்டைல் இதுதான்!)

                  மீண்டும் இன்னொரு கேசட்.அதில் ரோடில் காரின் ஊடே ஒரு கேமரா படம் பிடித்தபடியே சென்று மலிவான ஒரு குடியிருப்பில் குறிப்பிட்ட எண் வீட்டில் கதவில் போய் முடிகிறது.அங்கே சென்று ஜார்ஜ்ஸ் பார்க்கிறான்.அங்கெ மஜீத்!மஜீத் பழைய சம்பவங்கள் எதனாலும் பாதிக்கப்படாத பழையவன்மங்கள் எதுவுமே இல்லாத ஒரு நபராகத்தான் காட்டப்படுகிறார்.ஜார்ஜ்ஸ்-ஐ அன்போடும் ஆச்சரியத்தோடும் வரவேற்கிறார்.ஆனால் ஜார்ஜ்ஸ் கடும் வன்மத்தோடு மஜீத்தை வார்த்தைகளால் புண்படுத்திவிட்டு செல்கிறான்.அடுத்தநாள் கேசட்டில் இந்த உரையாடலும் ஜார்ஜ்ஸ் சென்றபின் மஜீத் கதறி அழுவதாகவும் கட்சிகள் ஓடுகிறது.மஜீதின் வீட்டுக்குள்ளேயே எங்கோ ஒரு இடத்தில் மறைவாக வைக்கப்பட்ட கேமரா மூலம் படமாக்கப்பட்ட காட்சிகள் அவை.
மஜீத்

              அப்போ மஜீத் நடித்தாரா?உண்மையில் படம் பிடித்து அனுப்பியது அவரா?அவரது மகனா? என்ற கேள்விகளெல்லாம் இறுதிவரை தொக்கி நிற்கிறது.ஜார்ஜ்ஸ் இருவரையும் போலீசில் மாட்டிவிடுகிறான்.எந்த காத்திரமான ஆதாரங்களும் அவர்களுக்கெதிராக இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
             பிறகு மஜீதின் மகன் ஜார்ஜ்ஸ்ன் அலுவலகத்தில் வந்து பேச முயல்கிறான்.அவனையும் கடுமையாக வசைபாடி துரத்துகிறார் ஜார்ஜ்ஸ்.
பிறகு மீண்டும் மஜீத் தன் இல்லத்திற்கு ஜார்ஜ்ஸ்-ஐ அழைக்கிறார்.கடுமையான எரிச்சலில் இருக்கும் ஜார்ஜ்ஸ் பேச முயல திடீரென்று மஜீத் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்தம் பீய்ச்சியடிக்க இறக்கிறார்.
             உண்மையில் இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும்.வன்முறை காட்சிகள் என்றால் நொடிக்கு நொடி மிசின் கன் சுடுவது,குண்டுகள் எறிவது,அரிவாள் வெட்டு,கத்திக்குத்து என்பவை மட்டுமல்ல.அதைவிட வலுவான அதிரவைக்கும் வன்முறை காட்சி உண்டு.படம் முழுக்க எல்லாருமே மிக மெல்லிய தொனியில் பேசிக்கொண்டிருக்க ஒரே ஒருவரி வசனத்தை ஒருவன் சத்தமாக பேசினால் அதுவும் வன்முறைதான்!அதுபோல இப்படத்தில் எவ்வித அதிரடி கேமரா நகர்வுகள் ஆக்ஷன் காட்சிகள் இல்லாத நிலையில் திடீரென்று மஜீத் கழுத்தை அறுத்துக்கொண்டு இறப்பது மிகக்கடுமையான வன்முறையை பார்வையாளனுக்கு கடத்துகிறது.
ஜார்ஜ்ஸ்

        மஜீத் கழுத்தை அறுத்துக்கொன்டதும் உடனே வழமையாக கேமரா ஜார்ஜ்ஸ்ன் முகத்திற்கு க்ளோசப் செல்லவில்லை.மஜீத்தையே அசையாமல் காட்டிக்கொண்டிருக்கிறது.நாமும் மவுன சாட்சியாக அதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.தனது மரணத்திற்கு ஒரே சாட்சியாக ஜார்ஜ்ஸ்ஐ இருக்க வைப்பதன்மூலம்(அங்கே கதவை தாழித்துவிட்டு அங்கேயே சரிந்து மரிக்கிறார் மஜீத்.அந்த உடலை தாண்டி செல்லாமல் ஜார்ஜ்ஸ்-ஆல் வெளியே செல்ல முடியாது) மஜீத் சொல்லவருவது என்ன?
           "எனக்கு கிடைக்கவேண்டிய உயர்குடி வாழ்க்கையை தட்டிப்பறித்த உன் கண் முன்னேயே என் உயிரை விடுகிறேன்.இந்த மரணத்தின் குற்ற உணர்வு உன் வாழ்நாள் முழுவதும் உன்னையே சுற்றிக்கொண்டிருக்கும்" என்று மஜீத் சொல்லாமல் சொல்கிறாரா?ரகசிய கேமரா கொண்டு படம் பிடித்து கேசட் அனுப்பியது மஜீதின் மகனா?அப்போது மஜீத் சிறுவயதில் துரத்தப்பட்டது அவர் மகனுக்கு தெரியுமா?இப்படி பல கேள்விகள் பார்வையாளனை நோக்கி கேட்கப்படுகின்றன.
            இடையில் ஜார்ஜ்ஸ்ன் மகன் பதின்ம வயதினருக்கே உரிய ஒருவித விரக்திநிலை,பெற்றோரை கண்டாலே எரிச்சல்,பெற்றோரின் கேள்விகள் அக்கறைகள் மீதான ஒவ்வாமை இவை தாங்காமல் நண்பன் வீட்டில் ஓரிரவு பெற்றோரிடம் சொல்லாமல் தங்குகிறான்.பதட்டமடையும் ஜார்ஜ்ஸ் மற்றும் ஆன் எங்கு தேடியும் பிள்ளை கிடைக்காததால் மீண்டும் மஜீத் மற்றும் அவரது மகன் மீதே சந்தேகப்படுகின்றனர்.அடுத்தநாள் கூலாக வீட்டிற்கு வந்துவிடுகிறான் பியர்ரே.அவனுக்கு தனது பெற்றோரை ஓரிரவு முழுக்க  பதட்டமடைய செய்ததன் மூலம் தான் அனுபவிக்கும் விரக்திநிலைக்கான சிறு ஆசுவாசமாய் சிறு மருந்தாய் அதை  அவன் உணர்கிறான்!இது சாடிசமா என்றால் ஆம் இல்லை என்று தெளிவாக சொல்லிவிட முடியாத ஒரு கேள்வி.
பியர்ரே

             அவிழ்க்கப்படாத முடிச்சுகள்; தீர்க்கப்படாத மர்மங்கள்; தண்டிக்கப்படாத குற்றங்கள் எதுவும் மிச்சமிருந்து பார்வையாளனை குழப்பி விடவேகூடாது என்று உறுதியாக  இருக்கும் ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில் பல்வேறு கேள்விகள்,சந்தேகங்கள்,தீர்க்கப்படாத மர்மங்களோடு படத்தை முடிப்பார் ஹேன்கி.மேற்சொன்னவாறு  எல்லா குழப்பங்களையும் தீர்ப்பதாக  முடித்தால் படம்  முடிந்ததுமே பார்வையாளன் அந்த சினிமாவை மறந்துவிடுவான்.இந்தமாதிரி தொக்கி நிற்பது போலவும்; பல்வேறு அணுகுமுறைகள் கொண்டதாக  (ambigious) முடிப்பதன் மூலம் பார்வையாளன் படத்தை மறக்காது இருப்பான்  என்பது  அவர்  வாதம்!
        மேலும் படம் டிஜிட்டல் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது.சினிமா என்று தெரியாது நிஜத்தில் ஜார்ஜ்ஸ்ன் குடும்பத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம்!மேலும் ஜார்ஜ்ஸ்ன் குடும்ப நடவடிக்கைகளை படமாக்கி அனுப்பப்பட்ட கேசட்டுகளை பார்க்கும்போது எப்படி காட்சியமைப்பு உள்ளதோ அதேபோலத்தான் படம் முழுவதும் உள்ளது.அதற்காகவே டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தியிருக்கிறார்.அதாவது நாமே ஜார்ஜ்ஸ்ன் வாழ்வை ஒளிந்திருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்துதல்.
                 படம் முடியும் காட்சியில் நமக்கு யாரென்றே தெரியாத இருவர் பேசிக்கொண்டிருப்பதாக முடிகிறது.அப்படி பார்த்தால் ஜார்ஜ்ஸ் ஆன்ஆகியோருமே நமக்கு யாரென்று தெரியாதவர்கள்தான்!அவர்களின்  எந்த பரிமாணத்தை இயக்குனர்  நமக்கு காட்டினாரோ  அந்தளவே அவர்கள் பற்றி தெரியும்!அவர்களுமே  நமக்கு  அன்னியர்கள்தான்!
          
           
            
           

Saturday, 15 July 2017

Strangers on a Train 1950

"உனக்கு இடையூறா இருக்கும் மனைவியை நான் கொல்றேன்.எனக்கு இடையூறா இருக்கும் எனது தந்தையை நீ கொன்றுவிடு!"
                   என்று ப்ரூனோ (Bruno) கய் ஹெய்ன்ஸ்(Guy Haynes) -இடம் கேட்பதுதான் கதையின்  மையக்கரு என்று பலர் எழுதியுள்ளதை பார்த்தேன்.
கதையின் மையக்கரு அதுவல்ல!இது பல சிக்கலான முடிச்சுகளை கொண்டது.உதாரணமாக Guy க்கும் ப்ரூனோவுக்குமான உறவு ஒருபாலின சேர்க்கையின் கீற்றை கொண்டது.அப்போதிருந்த சமூக கட்டுப்பாடுகளால் (திரைப்படத்தில் production code கட்டுப்பாட்டால்)கதையில் அது விரிவாக சொல்லப்படவில்லை என்றாலும் அதை புரிந்துகொள்ளமுடிகிறது!

               கய் ஒரு வளர்ந்துவரும் ஆர்கிடெக்ட்.பால்மைரா ப்ராஜெக்ட், சிறுநகர ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ப்ராஜெக்ட் என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருபவன்!நல்ல திறமைசாலி!மனைவி மிரியம் வேறு சில ஆண்களோடு உறவுகொன்டதை தெரிந்துகொண்டு விவாகரத்து பெற நினைக்கிறான்.இப்போது அவள் கர்ப்பம்!காரணம் அவனல்ல!
               மேலும் மிரியம் தனது கரியருக்கு இடையூறாகவும், விவாகரத்து பெறுவதில் பெரும் தடைக்கல்லாகவும் இருப்பதாகவும் Guy நினைக்கிறான்.அதை ரயிலில் தன்னுடன் வலிந்து பேசிக்கொண்டிருக்கும் ப்ரூனோவிடம் எதேர்ச்சையாக சொல்கிறான்.அப்போதுதான் முதல் வரியில் இருக்கும் வரிகளை ப்ரூனோ சொல்கிறான்.
              இப்ப ப்ரூனோ அவளைக்கொன்றும் விடுகிறான்.இப்போது மொத்த  நெருக்கடியும் கய்யின் மேல்!இப்போது அவன் மிரியம் கொலை தொடர்பாக  தன்னிடம் விசாரிக்கும் போலீசிடம்(முதல் சந்தேகத்திற்குரிய நபர் கைதான்) ப்ரூனோவை காட்டிக்கொடுத்திருக்கலாம்!"நான் எதேர்ச்சையாகத்தான் மிரியம் பற்றி சொன்னேன்.அதை ப்ரூனோ தீவிரமாக எடுத்துக்கொண்டு அவளைக்கொன்றுவிட்டான் பாவி" என்று தன்னை புனிதனாக்கிக்கொண்டு ப்ரூனோவை சிக்க வைத்திருந்தாலேபோதும்!
             அவன் நிம்மதியாக(!!??) வாழ்வை தொடர்ந்திருக்க முடியும்!தான் விரும்பும் ஆன்(Anne) னோடு சந்தோசமாக வாழ்திருக்கலாம்!ஆனால் அவன் அதை செய்யவில்லை!காரணம் ப்ரூனோ செய்த கொலையில் தனக்கும் பங்கிருப்பதாகவும் ப்ரூனோ தண்டனைக்குறியவன் என்றால் தானும் அவ்வாறே என்றும் எண்ணுகிறான்!

             அதனால் இன்னும் நெருக்கடிக்கு உள்ளாகிறான்.இப்போது அவன் ப்ரூனோவின் தந்தையை கொல்லவேண்டும்!ப்ரூனோ விடுவதாக இல்லை.சுத்திசுத்தி வருகிறான்!கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறான் கை.ஆன் அதை பற்றி கேக்கும்போது "வேலைப்பளு!"என்று சமாளிக்கிறான் கய்.
                தன் வீட்டின் ப்ளான்,தெருவின் ப்ளான்,எந்த நேரத்தில் வீட்டில் யார் இருப்பார்கள் என்ற அட்டவணை,தந்தையை கொன்றுவிட்டு எந்தவழியே குதித்து வெளியேறி ரயிலேற வேண்டும் என்பதுவரை மிகத்துல்லியமாக  வரைபடங்களோடு கைக்கு ப்ரூனோ கடிதம் அனுப்புகிறான்.திரும்பத்திரும்ப அதைப்பார்த்து பார்த்து கய்க்கே ப்ரூனோவின் வீட்டில் பலகாலம் வாழ்ந்துவிட்ட உணர்வு!தந்தையை கொல்ல செல்கிறான்!"ஏற்கெனவே பலமுறை ப்ரூனோவின் தந்தையை கொன்றதுபோலவும் இது அதில் ஒரு தடவை" என்பதாக அவனுக்கு தோன்றுகிறது.சுடுகிறான்.தப்புகிறான்.ப்ரூனோ பிளான்படி அல்லாது வேறுவழியில்!காட்டுசெடிகள் கிழிபட்டு மண்டையில் அடிபட்டு வீடு வந்து சேர்கிறான்.
               ஆன் காயம் பற்றி கேக்கும்போது சமாளிக்கிறான்.ப்ரூனோவின் தந்தையின் ஆஸ்தான டிடெக்டிவ் ஜெரார்ட் துப்பறிய ஆரம்பிக்கிறார்!போலீசு மிரியம்&ப்ரூனோவின் தந்தை இருவரையும் கொன்றது யார் என்பது தெரியவில்லை என்று ஃப்ரீயாவிட ஜெரார்டோ மிகத்தீவிரமாக துப்பறிகிறார்
         ஜெரார்ட் துப்பரிவதை பிறகு பார்ப்போம்.இப்போது மிரியத்தை ப்ரூனோவும்,ப்ரூனோவின் தந்தையை கையும் கொன்றாகிவிட்டது!போலீசும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை!இப்ப இவர்கள் இருவரும் ஜாலியாக வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்களே? என்று கேட்டால் இல்லை!
Patricia Highsmith

         ப்ரூனோவுக்கு என்ன பிரச்சனை?தந்தை மேல போயாச்சு!ஜாலியா சொத்துக்களை குடித்தே அழிக்க தடைகள் ஏதுமில்லை(அவனது தாய் இவைகளை கண்டுகொள்வதில்லை) மஜாவா  இருந்துட்டு போகலாமே!ஆனால் அவனால் அப்படி இருக்கமுடியவில்லை!Guy மீதான ஒரு ஈர்ப்பு(ஒருபாலின ஈர்ப்பாகவே நாம் இதை புரிந்துகொள்ள வேண்டும்) அதையும்தாண்டி Guy தனிப்பட்ட வாழ்விலும்,கரியரிலும்,பொதுவாக சமூகத்திலும் மிகவும் மதிக்கப்படும் ஒரு நபராக இருப்பதை ப்ரூனோ பார்க்கிறான்.
               ப்ரூனோவால்  எதுவாக இருக்கவே முடியாதோ அதுவாகவெல்லாம் கய் இருப்பதே அவன் மீதான ஈர்ப்புக்கு மற்றுமொரு காரணம்.திரைப்படத்தில்கூட
"Oh,i certainly admire people who do things";
" You know it must be pretty exciting to be so important"
என்று கய்யிடம் ப்ரூனோ சொல்வதாக வசனம் வரும்.
                 ப்ரூனோவுக்கு தனிப்பட்ட தொழிலோ வேலையோ இல்லை!அவன் ஒரு ப்ளேபாய்!குடி குடி குடி&சாகசங்கள்(கண்களை கட்டிக்கொண்டு காரை நூறு மைல் வேகத்தில் செலுத்தியிருக்கிறான்) தான்!எந்தளவுக்கு என்றால் குடித்தால்தான் அவன் ஸ்டெடியா இருப்பான் எனுமளவு குடி!தந்தை இருந்தவரையில் பணம் கொடுக்காமல் மிக கண்டிப்பாக இருந்தார்!
                  Guyன் மனநிலை இந்தளவு எளிதாக விளக்கிவிடக்கூடியதாக இல்லை!முதலில் ப்ரூனோவை போலீசிடம் காட்டிக்கொடுக்காமல் இருந்தது,பிறகு அவனின் நெருக்கடிக்கு பணிந்து தந்தையை கொல்வது,பிறகும் விடாமல் ப்ரூனோ தன்னைச்சுற்றியே வரும்போது எரிச்சலோடு ஒருவித ஈர்ப்பையும் உணர்வது,மனைவி ஆனிடம் ப்ரூனோ பற்றி சொல்லும்போதுகூட அவன் தடுமாறுகிறான்.ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு கதை சொல்கிறான்!ப்ரூனோகடலில் வீழ்ந்து மரித்தபோது "எங்கே என் சகோதரன்" என்கிறான்!
               ப்ரூனோவின் தந்தையை கொன்ற சிலகாலம்வரையில்  பெரிதாக கவலைப்படாத கய் போகப்போக தான் இரு நபர்களாக உடைபட்டுநிற்பதை உணருகிறான்.
ஒருவன் கொலைகாரன்
இன்னொருவன் ஆன்-ஐ திருமணம் முடிக்கவிருக்கும் ஒரு ஆர்கிடெக்ட்.
இந்தப்பிளவு போகப்போக அதிர்கரித்துக்கொண்டே போவதை கய் உணர்கிறான்.
               ஜெரார்ட் ப்ரூனோவுக்கும் கய்க்குமான ரயில்சிநேகத்தை கண்டுபிடிக்கிறார்!போலீசிடம் அதைப்பற்றி சொல்கிறார்(கொலைகளை பரிமாறிக்கொண்டது பற்றி).போலீசு "நீங்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்பே ரிட்டையர் ஆகியிருக்க வேண்டியவர்!ஓய்வெடுங்கள்" என்று பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.
             ஜெரார்டுக்கு தெரியும்!சட்டம் இருவரையும் தண்டிக்காவிடினும் அவர்களது குற்ற உணர்ச்சியே அவர்களை தண்டிக்கும் என நம்புகிறார்!உறுமீன் வரும்வரையில் காத்திருக்கிறார்!வழக்கை விசாரித்து முடித்ததாக போலியாக தகவல் பரப்புகிறார்!
           இந்த நேரத்தில் ப்ரூனோ சொகுசு படகிலிருந்து கடலில் குதித்து இறக்கிறான்!
           ஏற்கெனவே குற்ற உணர்ச்சியால் இரண்டாக பிளவுற்றிருந்த கய் இப்போது மேலும்  அதிக நெருக்கடிக்கு ஆளாகிறான்.இருகொலைகளின் பாரத்தையும் தான் தனியொருவனாக சுமக்கவேண்டிய கட்டாயம் மூச்சு திணற வைப்பதை உணர்கிறான்.
          இந்த பாரத்தை இந்த குற்ற உணர்ச்சியை யாரிடமாவது சொல்வதன்மூலம் குறைத்துவிட எத்தனித்து மிரியம் கொலையுண்டதால் அதிகம் பாதிக்கப்பட்ட அதிகவருத்தத்தில் இருக்கும் நபர் யாரென யோசிக்கும்போது அதிர்கிறான்!மிரியத்தின் சகோதரன் அதைப்பற்றி எந்தவித எண்ணங்களுமே இல்லாதவனாக இருக்கிறான்.மிரியத்தின் தாயும் அவ்வாறே!மிரியத்தை திருமணம் செய்வதாக இருந்த ஓவன்(Owen) நினைவுக்கு வருகிறான்.அவனின் பிள்ளையத்தான் மிரியம் சுமந்துகொண்டிருந்தாள்! 

            ஓவனை தனி ஓட்டல் அறைக்கு அழைத்து அனைத்தையும் சொல்கிறான்!அனைத்தையும்!இப்படி அனைத்து  உண்மைகளையும் யாரிடமாவது சொல்லிவிட்டால் தனது மனப்பாரம் அகன்றுவிடும் என்பது வெறும் கற்பனை என்பதை உணர்கிறான்.அனைத்தையும் சொன்னபின்பும் கடுமையான குற்ற உணர்ச்சியை உணர்கிறான்.
            தான் சொன்ன எதையுமே தான் நினைத்த ரியாக்சனோடு உள்வாங்காது indifferent ஆக இருக்கும் ஓவனை பார்த்து கத்துகிறான்!அப்போதும் ஓவன் அசையாது ஸ்காட்ச் அடித்துக்கொண்டிருக்கிறான்.சமூகம்-சட்டம்-தனி மனிதன் போன்ற விஷயங்களை பற்றி லெக்சர் கொடுக்கிறான் கய்.ஓவன் எதையும் கண்டுகொள்ளவில்லை!
       ஆனால் அனைத்தையும் சரியாக வைக்கப்படாத தொலைபேசி(இது ஜெரார்டின் திட்டம்) மூலம் ஜெரார்ட் கேட்டுவிட்டு அறைக்கதவை தட்டியவுடன் திறந்து "என்னை கைது செய்யுங்கள்" என்கிறான் கய்! 


              இதில் முக்கியமாக எழுப்பப்படும் கேள்வி ஒருவரை கொலை செய்தால்; அந்த நபரின் இழப்பை யாருமே பொருட்படுத்தவில்லை என்றால் அந்தக்கொலை குற்றமாகாதா?இதில் மிரியம் கொலையுண்டதாலோ ப்ரூனோவின் தந்தை கொலையுண்டதாலோ யாரும் எதையும் இழக்கவில்லை!அதை யாருமே பொருட்படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும்!இருந்தாலும் கய்யின் மனதில் ஆட்டிப்படைக்கும் குற்ற உணர்ச்சி அவனை சரணடைய வைக்கிறது! 

                  இப்போது இதை மையமாக வைத்து ஹிச்காக் எடுத்த படத்தைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் இந்த நாவலின் மையக்கருவாக பலராலும் கருதப்படும் நான் மேற்குறிப்பிட்ட அந்த இரண்டுவரிகளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கும்!

            நாவல் அகவயமானது என்றால் ஹிச்காக்கின் படம் புறவயமானது!நாவலில்  கய் ஒரு ஆர்கிடெக்ட்!சினிமாவில் டென்னிஸ் வீரன்.அந்த டென்னிஸ் மேட்சையே வைத்து நகம் கடிக்கும் த்ரில்லை கொடுத்திருப்பார் ஹிச்காக்!சினிமாவில் கய் நல்லவன்-ப்ரூனோ கெட்டவன்!
     நாவலில் அந்தவேறுபாடு போகப்போக அழிந்துவிடும்!கய் நாவலில் கொல்கிறான்.சினிமாவில் கொல்வதில்லை!சினிமா ஒரு பரபரப்பான சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கவைக்கும் டிபிகல் ஹிச்காக் படம்!நாவலோ முழுக்கமுழுக்க உளவியல் சார்ந்தது!அதற்காக படம் மோசமானது என்று சொல்லவில்லை.standalone திரைப்படமாக அது ஹிச்காக்கின் மற்றுமொரு மகுடம்!

          பல intense ஆனா தருணங்கள் நாவலில் உண்டு.உதாரணமாக ப்ரூனோவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு தனது உடைகளை அனைத்தையும் கிழித்தெறிந்துவிட்டு மெத்தையில் மயங்கி சரிவதாகவும் மருத்துவர் ஊசி போட்ட உடனேயே அந்த asphyxiating உணர்வு நீங்கியதாகவும் வரும்!கய் ப்ரூனோவின் தந்தையை கொன்றபின் எந்த குற்ற உணர்வுமே இல்லாததைக்கண்டு தன்னைத்தானே வியக்கிறான்.பிறகு அவனே அந்த குற்ற உணர்வின் பாரத்தால் மூச்சுத்திணற வைக்கும் அந்த பிடியால் வீழ்கிறான்!

Tuesday, 13 June 2017

ஆளவந்தான் (2001)


 முன்பு ராமன் ராகவ் பற்றிய பதிவில் குறிப்பிட்டதை மேற்கோளுடன் துவக்கலாம்.
ஆளவந்தான்  நந்து  கேரக்டர்  உங்களுக்கு  நினைவில்  இருக்கலாம் ."பூ  விழாம  தல  விழுந்திருந்தா  நீ  இந்தப்பக்கம்  நா  அந்தப்பக்கம்"  என்று  நந்து  விஜயிடம்  சொல்வதாக  ஒரு  வசனம்  இருக்கும்.நந்து  சித்தியிடம்  வளராமல்  மாமாவிடம்  வளர்ந்திருந்தாலும்  இதே  மாதிரிதான்  ஆகியிருப்பார்.The  inherent desire to sin  என்பது  சிறுவயதிலேயே   நந்துவின்  மனதில்  இருந்த  விஷயம்.அதை  சித்தி  ஊதி  பெருக்கிவிட்டாள்  என்று  வேண்டுமானால்  சொல்லலாம்.

படம் ஆகா!என்றோ சூரமொக்கை என்றோ பைனரியில் மேம்போக்காக கடந்துபோக விரும்பவில்லை.படம் பற்றிய எனது கருத்துக்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்!pros and cons என்றெல்லாம் தனித்தனியாக பத்தாப்பு பிள்ளை எக்ஸாம் எழுதுவதுபோல எழுதாமல் random ஆக சில விஷயங்கள்.
.
ஆளவந்தான் படம் பற்றிய விளம்பரங்களை மறக்க முடியாது!அப்போதெல்லாம் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு வெப்சைட் உருவாக்குவார்கள்.படம் வெளிவந்தும் ஒரு நான்கைந்து மாதங்கள் உயிரோடு இருக்கும்.பிறகு டொமைன் நேமுக்கு காசு கட்டாமல் விட்டுவிடுவார்கள்.அதுபோல நான் பார்த்தது ஏப்ரல் 2001 ல்.சைட் dark theme பின்னணியில் Cast&Crew,Synopsis என்றெல்லாம் தமிழ் சினிமா கண்டிராத புதுப்புது வார்த்தைகளை அதில் காண முடிந்தது!

         பரபரப்பாக பேசப்பட்ட(!!??) கமல் நிர்வாணமாக இருக்கும் போட்டோ ,ரியாஸ் கான் இருண்ட பின்னணியில் எடுக்கப்பட்ட போட்டோ என்று அப்போது வந்த மற்ற படங்களின் வெப்சைட்டுகளை காட்டிலும் முற்றிலும் வேறாக இது இருந்தது.(சமகால ரிஷிtheமூவி.காம் பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை :D )

        பிறகு டிரைலர்!டிரைலரின் பின்னணியில் கமல் அமெரிக்கன் ஆங்கில  அக்சென்டில் deep bass  ல் வாய்ஸ் ஓவர் போல பேசியிருந்தார்!உண்மையிலேயே மிரட்டலாக இருந்தது என்பதை மறுக்க முடியாது!இப்போது அந்தமாதிரி பாணி என்பது தேய்வழக்காகி போய்விட்டதையும் சொல்லவேண்டும்(குறிப்பாக இங்குலீஸ் பண்டிட்டு கவுதம் மேனன் அதை தேவைக்கும் அதிகமாய் பயன்படுத்தி கடுப்பேற்றிவிட்டார்).
        விஜய் கேரகடருக்காக கமல் ராணுவத்தில் பயிற்சி பெற்ற வீடியோவெல்லாம் வந்தது!"அடியாத்தீ என் மகன் என்னமா நடிச்சிருக்கான்" என்று உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் விட்டார் காந்திமதி.
         அப்புறம்  விஜயும் நந்துவும் arm wrestle பண்ணும் அந்த அதகள ஸ்டில் பெரிய்ய்ய பேனராக மவுன்ட் ரோடில் வைத்திருந்தார்கள்!அருகில் பார்த்தாலே பரவசம் பேனர் பரிதாமாக தெரிந்ததையும் சொல்லவேண்டும்!

         காஷ்மீர் காட்சிகளை இங்கேயே செயற்கை  செட் போட்டு பனியின் பின்னணியில் காட்சி எடுத்ததாக பரப்பரப்பான பேச்சிருந்தது(ஒப்பனிங் காட்சி).25 கோடி செலவானதாக அங்கலாய்த்தார்கள்.ஆனால் 1997 ல் வந்த ரட்சகனுக்கே அவ்வளவு செலவானது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
         இப்ப ஆளவந்தான் படம் என்பதே முழுக்கமுழுக்க நந்து கேரக்டரை சுற்றியே பின்னப்பட்டது. குணா பட குணாவுக்கும் நந்துவுக்கும் ஒற்றுமை என்று பார்த்தால் பெண்!வேற்றுமை என்று பார்த்தால் அதே பெண்!
        குணாவுக்கு அபிராமி வேண்டும்!அபிராமி வந்தால் எல்லாம் மாறிடும்!உலகமே utopia வாகிவிடும்!நந்துவுக்கு உலகில் உள்ள பெண்கள் எல்லாருமே அவன் சித்தியை நினைவுபடுத்துபவர்கள்(தாய் தவிர்த்து).அவர்களை கொல்வதே உலகை காக்கும் அல்லது குறிப்பாக  தனது சகோதரனை காக்கும்  வழி.பெண்களை (misogynist) அடியோடு வெறுப்பவன்.

         நந்து நெனச்சிருந்தா கவிஞனாகவோ விஞ்ஞானியாவோ வந்திருக்கலாம் என்று டாக்டர் சொல்வதாக காட்சி வரும்.முன்பு குறிப்பிட்டது போல அவன் சிறுவயது குரூரங்களிளிருந்து வெளியே வந்திருக்கலாம்!அவன் வெளியே வர விரும்பவில்லை!தன்னைத்தானே victimise  செய்துகொண்டான்.

       அப்படி தன்னை பாதிகப்பட்டவனாகவே காட்டிக்கொள்வதன் மூலம் தனது சகோதரனுக்கு தன தியாகத்தின் தீவிரத்தை விளங்கவைத்துக்கொண்டே இருக்கமுடியும் என நம்புகிறான்.
          குணா உள்ளூர ஒரு பயணம் என்றால் ஆளவந்தான் வெளிநோக்கிய பயணமாக கொள்ளலாம்.இதில்ஒருபிரச்சனை.உளவியல் ரீதியாக நந்துவை சுற்றியே கதையை நகர்த்தாமல் படத்தைதிசைமாற்றியது!கமல் படமாக கொண்டுபோகாமல் நடுவில் ரசினி படமாக்க முயன்றது.உதாரணமாக நந்து என்பீல்ட் பைக் துவங்கி லாரி வரை சகஜமாக ஓட்டுவது,சாகசங்கள் செய்வது,மேலே பறந்துகொண்டிருக்கும்(Gold winner)பலூனில் பறந்துபோய் விழுவது(இதேமாதிரி காட்சியை லிங்கா படத்தில் ரசினிக்கு வைத்தபோதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன) இதுமாதிரி திசை திருப்பியது எடுபடவில்லை என்றே சொல்லவேண்டும்!

         அதென்ன ரசினி படம்?அப்போ கமல் படம் என்று சொல்வதற்கான காட்சிகள் உண்டா? என்று கேட்டால் உண்டு!மனீஷாவுடன் நந்து உரையாடும் அந்த ஹோட்டல் அறை காட்சியை சொல்லலாம்!கிளுகிளுப்பாக ஆரம்பித்து மனீஷா திறந்த பாத்ரூமில் சிறுநீர் கழிப்பதாக fetish ஆக மாறும் அந்தக்காட்சிக்கு இணையா இன்றுவரை தமிழில் வரவில்லை!
              அதுவரை வந்த தமிழ்படங்களில் மனநலம் பாதிக்கப்பதேன்றால் மெண்டல் அல்லது நெற்றிபொட்டிற்கு அருகே விரலை வைத்து சுத்தும் சைகை அதிகபட்சம் அம்னீசியா என்பார்கள்!இதில் வித்தியாசமான நோய் .
He is a schizophrenic with paranoid illusions.இதன்பின்னர் வந்த கஜினி போன்ற படங்களில் பல்வேறு புது நோய்களை மேற்கோள் காட்டியிருப்பார்கள்!
மேலும் இப்படத்தில் வரும் 2D அனிமேஷன் காட்சிகளை பார்த்துத்தான் டரண்டினோ Kill bill படத்தில் அதுமாதிரி வைத்தாரா?என்ற சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை!ஆனால் இப்படத்தில் வரும் 2D அனிமேஷன் காட்சிகள் ரணகளம்!

           இப்ப மனநல காப்பகத்தில் நந்துவும் சுல்தான்(ரியாஸ் கான்) சம்மந்தப்பட்ட காட்சிகள் பற்றி சொல்லும்போது கண்டிப்பா Twelve Monkeys(1995) படத்தை குறிப்பிட்டாக வேண்டும்.மனநல காப்பகத்தில் இருக்கும் பிராட் பிட்.டைம் டிராவலில் தவறாக அங்கு சிக்கிக்கொள்ளும் ப்ரூஸ் வில்லிஸ்.ப்ரூஸ் அதிகமாக பேசாமல் அமைதியாக இருப்பார்.பிராட் பிட்டோ அவரிடம் தொணதொணவென்று பேசிக்கொண்டும் குதித்துக்கொண்டும் சேட்டைகள் செய்துகொண்டும் இருப்பார்!அதை அப்படியே இங்கே பயன்படுத்தியிருப்பார்.சுல்தான் பிராட் பிட் போல சேஷ்டைகள் செய்வதும் நந்து அதிகம் பேசாது அமைதியாக இருப்பதும்!

     
மேலும் நந்து கேரக்டர் என்பது Bane ன் சாயலும் கொண்டது!
இன்னொரு பிரச்சனை இரட்டை வேடம்!முதலில் என்எஸ்ஜி வீரனாக விஜய் கேரக்டரில் நடித்த கமல் பிறகு தினம் நாற்பது முட்டையின்  வெள்ளைக்கருவெல்லாம் தின்று பயங்கரமாக உடலை ஏற்றி நடித்திருப்பார்.ஆனால் துவக்கத்தில் வரும் காஷ்மீர் மிஷன் காட்சியில் பேருக்குத்தான் விஜய்!உடலளவில் நந்து!தடியான ஒட்டுமீசை மொட்டைத்தலையை மறைக்கும் குளிர்கால தொப்பி என்று ஒருமாதிரி சமாளித்திருப்பார்கள்(இதேமாதிரி உத்தமவில்லனில் மீசையில்லாதும் பாபநாசத்தில் விஜய் போலவே தடியான "ஒட்டாத" ஒட்டுமீசை வைத்தும் நடித்திருப்பார்).அதேபோல இரு கமல்களும் மோதும் அந்த மொட்டைமாடி காட்சியிலும் உடையளவில்  விஜய் -உடலளவில் நந்து என்றுதான் இருக்கும்(அங்கே மொட்டைத்தலையை மறைக்க புல்லட் ப்ரூப் ஹெல்மட்!).இவை படத்தில் கொஞ்சம் தனித்து தெரிந்தன.தொழில்நுட்ப குறைபாட்டால் வேறு வழியில்லாமல் அப்படிஎடுத்திருப்பதாகநினைக்கிறேன்.
ஒட்டுமீசை!மொட்டையை மறைக்க தொப்பி!

             அப்புறம் சிறுவயதில் இருந்தே நந்து மனநல காப்பகத்தில்தான் வளர்ந்தவன்.தொடர்ச்சியாக schizophrenia வுக்கு மருந்துகள் சாப்பிட்டுவன்தவர் திடீரென்று காப்பகத்தில் இருந்து தப்பித்ததும் வெறும் போதை ஊசியை போட்டுக்கொண்டு(அது எங்க விக்குது என்பதுகூட அவருக்கு தெரிந்திருக்காம்!)  மாத்திரைகள் உண்டாக்கும் மிகக்கடுமையான  withdrawal effect ஐ கடந்து சென்றார் என்பது பக்கா ரசினி ஸ்டைல் :D

            கடுமையான schizoprenia இருந்தும் பட இறுதியில் "அந்த பொண்ணுகிட்ட சாரி சொல்லிடு"ன்னு விஜயிடம்  சொல்லும் காட்சி அபத்தத்தின் உச்சம்!இப்படியா நந்து கேரக்டரை பில்டப் செய்து ஒரேடியா போட்டு உடைப்பார்கள்?இது டிபிகல் தமிழ் சினிமா பாணி!அதாவது பட துவக்கத்தில் ஒரு கேரக்டருக்கு செமத்திய பில்டப் கொடுப்பதும் இறுதியில் திருந்தி வருந்துவதாகவோ(தனி ஒருவன் அரவிந்த்சாமி!) மன்னிப்பு கேட்பதாகவோ காட்டி அந்த கேரக்டரை மொத்தமா சாகடிப்பது! அதிலும் அந்த கேஸ் சிலிண்டர்களை நந்து பிளக்கும் காட்சி இன்னொரு அபத்தம்!


 
           மனநல காப்பகத்தில் இருபத்தஞ்சு வருஷம் இருந்தவர் தொடர்ந்து மனநல மருந்துகளை(கண்டிப்பா அதில் muscle relaxant இருக்கும்) உட்கொண்டவர் இப்படி அதீத பலசாலியாக மாறுவது எப்படி என்பது யாருக்குமே புரியவில்லை(நந்து ஒரு battalion க்கு சமம் என்று ஒரு வசனம் வேறு வருகிறது).அவ்வளவு psyche மருந்துகளை சாப்பிட்டவன் ஒரு கிளாசைக்கூட  இறுகப்பிடிக்க கூட முடியாது என்பதுதான் நிஜம்!இங்கும் ரசினி ஸ்டைல் போல!
                       மேலும் மனநல பிறழ்வு கதாபாத்திரங்கள் அவ்வப்போது hallucinate ஆகும்!அதை ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு ஸ்டைலில் காட்டியிருப்பார்கள்!உதாரணமாக The Dark Knight படத்தில் ஜோக்கர் ஹாலுசிநேட் ஆகும் அந்த கார் காட்சி ரொம்ப subtle ஆ இருக்கும்.
Joker's hallucination
இப்படத்தில் நந்துவின் hallucination கொஞ்சம் flashy ஆக இருக்கும்!
நந்துவின் hallucination

          வணிக சினிமா என்ற ஒற்றை வார்த்தையில் மேற்கண்ட குறைகளை மொத்தமா மூடி மறைத்துவிடலாம்தான்!ஆனாலும் நந்து என்ற அற்புதமான கேரக்டரை மிக மோசமாக பயன்படுத்திக்கொண்டதை விமர்சிக்காமல் இருக்கமுடியாது.
          Shankar-Ehsaan-Loy ன் இசை என்றாலே bass heavy யாத்தான் இருக்கும்(டான்-2,Zingadi na milegi dobara,விஸ்வரூபம்..! etc..etc..) இப்பட பாடல்கள் இன்றும் அபிமானதாக உள்ளன.பின்னணி இசை மறைந்த இசையமைப்பாளர் மகேஷ்.பாடலின் bass hevy தன்மை பின்னணி இசையில் இல்லாமல் போனது!

          திசைமாறாமல் முழுக்கமுழுக்க  நந்துவின் உளவியல் ரீதியான  பயணத்தை மட்டும் தொடர்ந்திருந்தால் படம் அற்புதமாக வந்திருக்கும் என்பது என் எண்ணம்!இருந்தாலும் இன்றும் படத்தை என்னால் ரசிக்க முடிவதற்கு காரணம் நந்து!
    

Friday, 14 April 2017

The Big Lebowski(1998) மற்றும் பிலிப் மார்லோ


                பெரும்பாலும்  படங்கள் எவ்வித prerequisite(வரலாற்றுப்பரிச்சயம் இருக்க வேண்டும்/ஒரு குறிப்பிட்ட நாவலை வாசித்திருக்க வேண்டும்/இசைத்தொகுப்பை கேட்டிருக்க வேண்டும் என்பது போல) ம் இல்லாது தனித்தே ரசிக்கக்கூடியதாக இருக்கும்.ஆனால் சில படங்கள் நாம் அதை பார்ப்பதற்கு தயார்படுத்திக்கொண்டாலே அன்றி அதை ரசிக்கவோ உள்வாங்கவோ முடியாது.கோயன் சகோதரர்களின் The Big Lebowski(1998) அப்படிப்பட்ட ஒரு படம்.                     சில வருடங்களுக்கு மின்னாடி படத்த பாத்தப்போ பெரிதாக ஈர்க்கவில்லை!
சம்மந்தமே இல்லாமல் காட்சிகள் போகிறதே!
பணக்கார  லெபோவ்ஸ்கிக்கும் பராரியாக வாழும் லெபோவ்ஸ்கிக்கும்...சாரி...dude க்கும் வித்தியாசம் தெரியாமல் இப்படி நீட்டி முழக்கியிருக்கிறார்களே(நீ அம்பூட்டு அப்பாவியா இருந்திருக்க-கும்மாங்கோ)
 என்ற ஒருவித சலிப்பே மேலோங்கியது!ஆனால் அப்போதும் பல காட்சிகள் சிரிப்பை வரவழைக்க தவறவில்லை.உதாரணமாக யார் யாரோ தனது வீட்டிற்குள் வந்து தன்னை பலவகையில் டார்ச்சர் செய்வதைக்கண்டு அதை தடுக்கும் வகையில் வீட்டு வாசற்கதவை முழுமையாக திறக்க இயலாதபடி தரையில் கட்டையை வைத்து ஆணி அடித்து முடித்ததுதான் தாமதம்!கதவை திறந்துகொண்டு இரண்டு தடியர்கள் வருவார்கள்!அது வெளிப்புறமாக திறக்கும் கதவு!dude ஓ கதவின் உட்புறமாக கட்டையை அடித்துவைத்திருப்பார்!
        
 அப்புறம் இடையில் அப்படத்தின் பக்கமே போகவில்லை!
பிறகு ரேமன்ட் ஷான்ட்லரின்(Raymond Chandler)   பிலிப் மார்லோ(Philip Marlowe) நாவல் வரிசைகள் பரிச்சயமானபின்   படத்தை செமத்தியா என்சாய் பண்ண முடிந்தது!
   
Raymond Chandler
                    மார்லோ சீரிஸ் நாவல்களில் ஒரு குற்றம் நடந்திருக்கும்.அதை விசாரிக்க தனியார் துப்பறியும் நிபுணரான மார்லோ நியமிக்கப்படுவார்.
        உடனே பரபரப்பாக ஆரம்பம்-தொடக்கம்- முடிவில் "எப்படி அவனை(ளை) பிடித்தேன்" என்று நாப்பது பக்க விளக்கம் எதுவும் இருக்காது.
ஏதேதோ குற்றங்கள் நடந்துகொண்டே இருக்கும்!மார்லோவுக்கு போதை பொருள் கொடுத்து ரோட்டில் வீசிவிடுவார்கள்!அல்லது பின் மண்டையில் தாக்கப்பட்டு ப்ளாக்கவுட் ஆகி கண் விழித்தபின் பார்த்தால் பக்கத்தில் ஒரு பிணம் கிடக்கும்!
ஒரு குறிப்பிட்ட நபரை காரில் பின்தொடர்ந்து செல்வார் .திடீரென்று போலீசு வழிமறித்து விஸ்கி பாட்டிலை கையில் பிடிக்கச்செய்து வயிற்றில் குத்தும்.மேலெல்லாம் சிதறிய விஸ்கி!drunken drive!போடு உள்ளே!
மார்லோ என்றாலே நினைவுக்கு வருபவர் பொகார்ட்!

                                       இதுமாதிரி தொடர்ந்து மார்லோ ஒரு வழக்கை விசாரித்து முடிப்பதற்குள் படாத பாடு படுவார்! ஆனால் இதற்கெல்லாம் கொஞ்சமும் அசரமாட்டார் மார்லோ!என்ன வாழ்க்கடா இது!என்ற புலம்பல்களெல்லாம் கிடையாது!The hell with it என விசாரணையை தொடர்வார்!
            மார்லோ தனித்து வாழ்பவர்.மனைவி ,கேர்ள் பிரண்ட் ,லொட்டு லொசுக்குகள் இல்லை!அவர் அதன்மீது எந்த ஈடுபாடும் கொண்டவரில்லை!cynic!தான் விசாரிக்கும் வழக்குகளிலும் கூட உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டு கண்ணீர் வடிப்பது உச்சு கொட்டுவது கிடையாது!cold and distant!
              பிக் லெபோவ்ஸ்கியில் வரும் Dude பல விஷயங்களில் மார்லோவின் சாயலை கொண்டவர்!டூட் மார்லோ போல ஸினிக் இல்லாட்டியும்(ஆனால் வால்டர், ஜீசஸ், மௌட் என பல  ஸினிக்குகள் படத்தில் உண்டு).தனித்து வாழ்பவர்!கேர்ள் பிரண்ட் மனைவி குழந்தைகள் என்ற கமிட்மெண்டுகள் அவரை மிரள வைக்கும்.அதில் எவ்வித ஈடுபாடும் இல்லாதவர்.

          மௌட்(Maude) டூடோடு உடலுறவு கொண்டபின் ஏதோ காலை மடக்கி யோகா போல செய்வார்.எதுக்கு இது?ன்னு டூட் கேட்டதும் "அப்போதான் கன்சீவ் ஆக முடியும்" என்றதும் டூட் மிரண்டுவிடுவார்!மௌட் அவரை சமாதானப்படுத்தி "எனக்கும் கணவன் உறவெல்லாம் வேண்டாம்.பிள்ளைக்கும் உரிமை எடுத்துக்கொள்ளாத ஒரு ஆண் தேவை!அதுக்குத்தான் உன்னோடு..."
        டூட் பெரிதாக எதற்கும் அலட்டிக்கொல்லாதவர்.திடீரென்று பலர் வீட்டினுள் நுழைந்து அவரை மிரட்டி,சாமான்களை உடைத்து,வினோத விலங்கை பாத்டப்பில் குளிக்கும் டூடின் "ஜான்சனில்" மேய விட்டு,மண்டையில் அடித்து மயக்கமடைய வைத்து,போதைப்பொருள் கொடுக்கப்பட்டு போலீசில் அடிவாங்குவது என்று எதற்கும் அவர் கலங்குவதில்லை!மார்லோ போல வரிசையாக தனக்கு நடந்த நிகழ்வுகளையும் அவர் நினைவில் வைத்துக்கொள்வதில்லை!
              ஆனால் அவரின் நண்பர் வால்டர் அப்படியல்ல.யூத பெண்ணை திருமணம் செய்வதற்காக யூதராக மாறி பிறகு மனைவி பிரிந்தும் தீவிர யூதனாகவே இருந்து(அதற்கு அவர் சொல்லும் விளக்கம் அதகளம்) சாப்பத் தினமான சனிக்கிழமை எதையுமே செய்யாது இருப்பது,திடீர்னு டன்சன் ஆகி சுற்றுப்புறம் பற்றி கவலைப்படாது வசை பாடுதல்; கை நீட்டுதல்..என்று வால்டராக John Goodman ரணகளம் செய்திருக்கிறார்!
             மாற்றுத்திரனாளியாக இருக்கும் பணக்கார லெபோவ்ஸ்கி வீல் சேரில் அமர்ந்திருப்பார்."நா எவ்வளவோ 'ஸ்பைனல்' கேஸ்களை பாத்திருக்கேன்.இது டுபாக்கூர்" என்று வால்டர் லெபோவ்ஸ்கியை வீல் சேரில் இருந்து தூக்கி வெளியே நிற்க வைக்க முயல அவர் கீழே விழ இது  அபத்த நகைச்சுவைக்கு ஒரு சான்று!


            மற்றொரு நண்பர் டான்னி(Donny) தனிப்பட்ட ஆளுமை எதுவும் இல்லாதவர்.டூட் மற்றும் வால்டரின் மகா சைஸ் ஆளுமைகளின் விளிம்பில் வாழ்வதே அவருக்கு போதுமானது.அவர் எதைப்பற்றி பேச வாய் திறந்தாலும் ஷட் த ஃபக் அப் என வால்டர் அதட்டுவது,நண்பர்கள் எதைப்பற்றியோ சீரியஸாக பேசிக்கொண்டிருக்கும்போது அதன் தீவிரம் புரியாமல் இடைமறித்து ஏதாவது வெகுளித்தனமாக கேட்பது,மூணு டம்மி பீசு (நிஹிலிஸ்டாம்!) இவர்களை மிரட்டும்போது பயந்துபோய்  மாரடைப்பு வந்து இறப்பது என Steve Buscemi டானியாக ...

           டூட்,வால்டர்,டான்னி மூவருக்குமே வாழ்வில் பெரிதாக செண்டிமெண்டல் பிடிப்பு கிடையாது!அவர்களுக்கு இருக்கும் இரண்டே இரண்டு ஈடுபாடான விஷயங்கள்
-தங்களுக்குள்ளான நட்பு
-பௌலிங்
அவர்களுக்கென தனிப்பட்ட குடும்பம் இல்லை.இந்த நட்பின் மூலமாகவும், பௌலிங் பிளேசில் நேரத்தை கழிப்பதன் மூலமே அவர்கள் இந்த உப்புசப்பற்ற வாழ்வை கடக்க முயல்கிறார்கள்!


                 பிக் ஸ்லீப் கதையை படமாக்கியபோது அதில் மார்லோவாக நடித்த பொகார்டுக்கு திடீர் சந்தேகம் "டெய்லரை கொலைசெய்தது யார்?".படக்குழு பரபரப்பாகி ஷான்ட்லரிடமே போன் செய்து கேட்க "எனக்கும்கூட தெரியாது" என்றார்!

அதான் அவர் ஸ்டைல்!இப்படமும் அவ்வாரே!
ஏன் இப்படி நடக்கிறது?
இவர்கள் யார்?
இவர்கள் ஏன் டூடை சம்மந்தமில்லாமல் மிரட்டுகிறார்கள்?
என்றெல்லாம் படம் நெடுக பல ? கள் தொக்கி நிற்கும்!சம்பவங்களின் போக்கு முக்கியமல்ல!அது சொல்லப்படும் விதமே இதில் முக்கியமாக பார்க்கப்படவேண்டும்!அதுவே ஷான்ட்லருக்கு கோயன் சகோதரர்கள் செய்த ஹோமேஜ்!

Wednesday, 22 March 2017

கோலிவுட் ரவுண்டப்!

கோலிவுட்டில் இப்போது என்னென்ன படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள ஸ்டுடியோக்களை ஒரு ரவுண்டு வந்தோம்!அதில் கண்டவை கீழே...

Friday, 10 March 2017

கூகுள்,மோட்டோ மற்றும் Android one

கூகுள் நிறுவனம் Nexus க்கு மூடுவிழா நடத்திவிட்டு பிக்ஸல்  வெளியிட்டு  பிரபலமாகி கலந்துபட்ட விமர்சனங்கள்(ஆப்பிள் போல கூகுள் மாறுவது ஏன்?என்று சிலரும் மிக நல்ல முயற்சி என்று வேறு சிலருமாக!)வந்துவிட்ட நிலையில்(பிக்ஸல் 2 வே வரப்போகுது..இப்ப போய்-கும்மாங்கோ) இப்போது பேசவேண்டியது Android one பற்றி.ஆண்ட்ராய்ட் மார்ஸ்மெல்லோ நோகா தெரியும்!அதென்னாது ஆண்ட்ராய்ட் ஒன்?என்று கேட்டால் அது கூகுளின் பலவித ப்ராஜக்ட்களுள் ஒன்று.
         அதாவது பல மொபைல் உற்பத்தி கம்பெனிகள் கூகுளோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு மொபைல் தயாரித்தல்.அந்த மொபைலின் உட்புற ஹார்ட்வேர் சமாச்சாரங்கள் அதன் வடிவமைப்புகள் எல்லாம் கூகுள் வகுத்துக்கொடுக்கும்.மென்பொருள்(அதான் ஆண்ட்ராய்ட் ஓஎஸ்) எவ்வித skin ம் இல்லாத pure stock android.
           அதாவது சேம்சங் நிறுவனத்தின் எந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கினாலும் அதில் touchwiz UI காணலாம்!அதாவது அதில் உள்ள ஓஎஸ்ம் ஆண்ட்ராய்ட்தான்.ஆனால் மேற்புற ஸ்கின் டச்விஸ்.அதில் எனக்கு என்றுமே ஈடுபாடு இருந்ததில்லை.முதலில் ரொம்ப ஹெவியா ரேமை கபளீகரம் செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மிக லைட்டான டச்விஸ் உருவாக்கப்பட்டது.இப்போதுள்ள சேம்சங் மாடல்களில் அந்த light  டச்விஸ் ஐ காண முடியும்.
Old Vs New Touchwiz UI

          அதுமாதிரி லயீகோ(LeEco) மாடல் போன்களில் E UI,ஷவ்மீ(Xiaomi) மாடல்களில் MIUI ....etc...etc..,
         ஆனால் மேற்சொன்ன அந்த ஆண்ட்ராய்ட் ஒன் திட்டத்தில் கூகுளோடு ஒப்பந்தம் போடும் நிறுவனங்கள் ஸ்டாக் ஆண்ட்ராய்ட்(எவ்வித ஸ்கின்னும் ஜிகினா வேலைகளும் இல்லாத)யே வழங்கும்.தவிர மிக முக்கியமான ஒரு விஷயம் அந்த ஆண்ட்ராய்ட் ஒன் மாடல்களுக்கு இரண்டு வருட ஆண்ட்ராய்ட் அப்டேட்டுகள் உத்தரவாதம்!அவற்றை கூகுளே அனுப்பி வைக்கும்(OTA).
            நல்லாத்தான இருக்கு?ஏன் இது வெற்றி பெறவில்லை?என்று கேட்டால் அது கூகுளின் பிழை என்று மொத்தமாக சொல்லிவிட முடியாது!இப்போது கைபேசி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சேம்சங், சோனி,எல்ஜி,ஷவ்மீ, ஹுவாவே(Huawei) போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்ட்ராய்ட் ஒன் திட்டத்தில் சேர விரும்பவில்லை.காரணம் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி UI skin களை உருவாக்குவதற்கும் அவற்றை தொடர்ந்து  மேம்படுத்துவதற்கும்   பல கோடி முதலீடு செய்திருப்பதால்!
           அவர்கள் அனைவரும் இந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டை பயன்படுத்தினால் அவர்களுக்குள் வேறுபாடு என்பது இருக்காது!விளம்பரங்களில் தனித்துசொல்ல ஜிகினா features(shake to activate camera,gesture support போன்றவைகளை சொல்லலாம்) இருக்காது.

           ஆகவே முன்னணி கைபேசி நிறுவனங்கள் இந்த ஆண்ட்ராய்ட் ஒன் திட்டத்தில் சேர விரும்பவில்லை!வந்தவைகள் எல்லாம் டம்மி பீசுங்கதான்!
மைக்ரோமேக்ஸ்,கார்பன்,ஸ்பைஸ் இம்மூன்றும் திட்டத்தில் சேர்ந்தது.Dream Uno,Canvas A1,Sparkle V போன்ற பெயர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?இந்த மூன்று மாடல்களும் கூகுள் வரையறுத்த  ஹார்ட்வேர்  டிசைன் படி தயாரிக்கப்பட்ட மாடல்கள்.மூன்றுக்கும் இரண்டு வருட ஆண்ட்ராய்ட் அப்டேட்டுகள் உண்டு.இன்னும் சொல்லப்போனால் சில நேரத்தில் நெக்ஸஸ் மாடல்களுக்கு முன்பே இந்த ஆண்ட்ராய்ட் ஒன் மாடல்களுக்கு அப்டேட் வந்த கதையெல்லாம் உண்டு.ஆனாலும் இவை வரவேற்பை பெறவில்லை!குறைந்த விலை என்ற ஒற்றைக்குறிக்கோளை அடிப்படையாக வைத்தே அந்த ஹார்ட்வேர் ஸ்பெக்ஸ் வரையறுக்கப்பட்டிருந்ததால் மிக மோசமான specs ஐ அவை கொண்டிருந்தது.அதனால் எடுபடவில்லை(ஒட்டுமொத்த மென்பொருள்  அனுபவம் என்பது நல்லா இருந்தும்கூட).
           இதற்குமுன் 2012ல் கூகுள் மோட்டோரோலாவை வாங்கியது.டம்மியா கிடந்த மோட்டோரோலா நிறுவனம் புத்துணர்ச்சி பெற்றது.மேற்சொன்ன ஆண்ட்ராய்ட் ஒன் பார்முலா அதற்குமுன் மோட்டோரோலா மாடல்களில் தான் அமல்படுத்தப்பட்டிருந்தது.stock android,இரண்டு வருட உத்திரவாத அப்டேட்டுகள்,மற்றும் டிசைன்&ஹார்ட்வேர் எல்லாம் கூகுளின் விருப்பம்.உண்மையில் அட்டகாசமாக இருந்தது.மூன்றே மூன்றுமாடல்கள்.
Moto E,G,X(விலை வரிசைப்படி).
ராஜாதி ராஜா!Moto X 2014

               ஆண்ட்ராய்டின் முழுஅனுபவத்தை பெற விலையுயர்ந்த Nexus போன்கள் மட்டுமே வழி என்பதை இது மாற்றியது.poor man's nexus என்றுகூட இது சொல்லப்பட்டது.நெக்ஸஸ் அனுபவம் நெக்ஸஸ் போன்களின் பாதி,கால் பங்கு விலையில் கிடைத்தது!அப்புறம் பல்வேறு சர்ச்சைகள் .லாபத்தை கணக்கில் கொள்ளாமல் குறைந்த விலையில் விற்றதால் இழப்பு அது இதுவென்று 12 பில்லியன் டாலருக்கு வாங்கிய நிறுவனத்தை லேனோவோவுக்கு வெறும் மூன்று பில்லியன் டாலருக்கு விற்றார்கள்!
    லெனோவோ மோட்டோரோலாவை வாங்கியதற்கு  நாய் பெற்ற தெங்கம்பழம் உதாரணம் ஏகப்பொருத்தம்!மோட்டோரோலாவும் பெரிதாக வளரக்கூடாது(வளர்ந்தால் தாய் கம்பெனி லெனோவோ பாதிக்கப்படுமாம்),அதேநேரம் மோட்டோரோலா காலம் காலமாய் ( 90 களிலேயே மோட்டோரோலா மொபைல்கள் பிரபலம்) மோட்டோரோலா வைத்திருக்கும் பல்வேறு patent களும் வேறு யார் கைக்கும் போய்விடக்கூடாது என்று குட்டையை குழப்பிய கதையாய் மோட்டோவை வைத்திருந்தது லெனோவோ!
          பெயரளவுக்கு மோட்டோ மொபைல்களை வெளியிட்டது.2014 ல் வந்த மோட்டோவுக்கும் இப்போது கிடைக்கும் மோட்டோ மாடல்களுக்குமான வித்தியாசம் அப்பட்டமாக தெரியும்!மேலும் மோட்டோவின் மிக முக்கிய பலமான இரண்டு வருட ஆண்ட்ராய்ட்அப்டேட்டுகள் மீதும் கைவைத்தது லெனோவோ.
        இப்போது ஆண்ட்ராய்ட்நோகா(Nougat) அப்டேட் சென்ற வருடம் வந்த Moto G4,G4 plus,Play மற்றும் எக்ஸ்  மாடல்களுக்குத்தான் .ஆனால் அதற்கு முன்னர் 2015 ல் வந்த Moto G Turbo வுக்கு அப்டேட் கிடையாது!இதில் என்ன காமெடின்னா மோட்டோ ஜி டர்போவோடு ஒப்பிட்டால் மோட்டோ ஜி ப்ளே குப்பையான SoC!ஆனால் அதற்கு அப்டேட் உண்டு!அதைவிட வலுவான SoC கொண்ட டர்போவுக்கு நோகா கெடியாது!தவிர Moto E,G,X என்று மூன்றே மூன்று மாடல்கள் என்பதையும் மீறி தாறுமாறாக ப்ளஸ், ப்ளே,டர்போ  என்று எண்ணிலடங்கா மோட்டோ  மாடல்களை விடுகிறது .இப்படி விடுவதால் எல்லா மாடல்களுக்குமான சப்போர்ட் என்பது கழுதை பட்ட பாடுதான்!

            மோட்டோரோலா என்று அல்லாமல் Moto by Lenovo என்றுதான் போடுவோம் என்று இடையில் காமெடி செய்தது லெனோவோ!இப்ப பேக் அடிச்சி "தப்பா சொல்லிட்டோம்!இனி அந்த மாடல்களை மோட்டோரோலா என்றே அழைப்போம்" என்று சொல்லியுள்ளது லெனோவோ!
        லெனோவோ ஒரு குப்பை கம்பெனி என்பதை இப்போதாவது உணர்ந்தால் சரி!ஆனால் அது திருந்துகிற மாதிரி தெரியல.இரண்டு வருட அப்டேட் இனிமேலாவது கிடைக்கும் என்றெல்லாம் நம்ப நான் தயாரில்லை!
       இப்போது திடீர் காமெடியாய் கூகுள் தனது  ஆண்ட்ராய்ட் ஒன் திட்டத்தை தூசு தட்டியுள்ளது.துருக்கி கம்பெனி ஜெனெரல் மொபைல்ஸ் GM5 GM5 plus என்று இரு ஆண்ட்ராய்ட் ஒன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்தி வந்துள்ளது.அது என்னை ஈர்க்கவில்லை.இது பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என நான் நம்பவில்லை.
GM5

        கூகுள் மோட்டோரோலாவை வாங்கியபின் "நாங்கள் மற்ற ஆண்ட்ராய்ட் போன் கம்பெனிகளுக்கு
போட்டியல்ல!மோட்டோ தனி" என்றெல்லாம் சப்பைகட்டுகட்டியது!ஆனா இப்போ கூகுளே பிக்ஸல் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது!இதுமட்டும் மற்ற கம்பெனிகளுக்கு போட்டி என்றாகாதா?ஆகமொத்தம் கூகுள் லெனோவோ இரண்டும் சேர்ந்து குறைந்த விலையில் nexus அனுபவம் என்ற விஷயத்திற்கு சங்கூதியதுதான் மிச்சம்!

Monday, 27 February 2017

தமிழக அரசியல் சூழலை கண்டித்து நடிகர்கள் உண்ணாவிரதம்

 மேடையில் நடிகர்கள் வரிசையாக அமர்ந்திருக்க மைக்குக்கு அருகே வழக்கம்போல counter அடிக்க கவுண்டர் உண்டு!
.
கித்தார்த் வருகிறார்....வரும்போதே பாடிக்கொண்டு வர்றார் ..
ஷூட் த குருவி ஷூட் த குருவி 
டவுசர் உருவி டவுசர் உருவி....
உடனே பின்னாடியே "எங்க டவுசர் உருவுறாங்க?எங்க டவுசர் உருவுறாங்க?எங்க டவுசர் உருவுறாங்க?" என்று கேட்டபடியே கிஸ்.ஜே.சூர்யா ஓடிவருகிறார்.
கவுண்டர்: டேய் டேய் பாரு!உச்சு உச்சுன்னு கூப்பிட்டா நாய் வர்றா மாதிரி 'டவுசர் உருவி'ன்னு நீ பாடுனதும்இவன் வந்துட்டான்!..டேய் போடா .உன்ன அப்புறம் கூப்பிடுவாங்க என்று கிஸ்ஜே.சூர்யாவை விரட்டுகிறார்.
கித்தார்த்: ஹாய் எவ்ரி ஒன்...ஹோப் எவ்ரிபடி இஸ் இர்ரிடேடட் லைக் மீ ரிகார்டிங் டமில்நாட் பாலிடிக்ஸ் ...
கவுண்டர்: டேய் டேய் ஃபேஸ்டைம்ல கடலை போடுறாமாதிரியே பேசாத மகனே!புரியுறா மாதிரி பேசு!
கித்தார்த்:நா என்ன சொல்றன்னா....
கவுண்டர்: இவன் என்ன கஜினிகாந்த் மாதிரி இழுக்குறான்?சொல்ல வேண்டியத சொல்றா!
கித்தார்த்:தமிழர்கள் இனிமே சோத்துல உப்பு அதிகமா போட்டு சாப்பிடணும்!
கவுண்டர்: ஆமா ஏற்கெனவே அவனுங்கள்ல முக்காவாசி பேருக்கு ரத்தக்கொதிப்பு இருக்கு!இன்னும் உப்ப அதிகமா போட்டா ஒரேடியா மேல போக வேண்டியதுதான்!
.
உடனே மேடையில் அமர்ந்திருக்கும் கீமான் முஷ்டியை உயர்த்தி கொந்தளித்தபடி கித்தார்த்தை ஏதோ திட்டுகிறார்!
கவுண்டர்: பாரு!சொல்லி முடிக்கல!அதுக்குள்ள!யப்பா கித்தார்த்து பேசுனது போதும் கெளம்பு!
.
அடுத்து ...அடுத்து....கர்ர்ர்...புர்ர்ர்...கர்ர்ர்....கொலபசியோட வந்திருக்கேன்....என்று உறுமல் சத்தம் எங்கிருந்தோ கேக்கிறது
கவுண்டர்: டேய் யாரங்க?தம்பிக்கு ஒரு பிரியாணி பொட்டலம் பார்சல்!
கூட்டத்திலிருந்து கூர்யா கொந்தளித்தபடி மேடையை நோக்கி பறந்து வருகிறார்!
கூர்யா: ஓங்கி கடிச்சா ஒன்ற டன் சத வரும் பாக்குறியா?பாக்குறியா?பாக்குறியா?
கவுண்டர் மேடைக்கு பின்னே ஒளிந்துகொண்டு : ஐயோ!என்னடா இது!ஜூவுல இருக்க வேண்டியதெல்லாம் வெளிய சுத்துது!
கூர்யா:  நிச்சயமா.....சத்தியமா....
கவுண்டர் நைசா வெளிய வந்து:க்கும்.எத பேசுனாலும் இப்படித்தான் ஆரம்பிப்பியா?மேட்டருக்கு வா!
கூர்யா: இத்தன நாளா...நாமதான் மிச்சர் சாப்பிட்டுகிட்டு இருந்திருக்கோம்!
கவுண்டர்:தம்பி கொலபசியோட இருக்கேன்னு சொல்லும்போதே நா டவுட் ஆனேன்!சரி.சரி.நிகழ்ச்சி முடிஞ்சதும் ஒரு கிலோ மிச்சர் வாங்கிட்டு போ!கெளம்பு!
.
அடுத்து
பீர்ஜே பாலாஜி வருகிறார்...
என்னாமச்சிஎல்லாரும்நல்லஇருக்கீங்களா?நாபீர்ஜேபாலாஜி89.9 லேர்ந்துடெல்லிலடெங்குஹைத்ராபாத்துலஹைட்டா....
கவுண்டர்: டேய் மூச்சு விட கொஞ்சம் நேரம் ஒதுக்குடா!ஒரேடியா வார்த்தைகள வாந்தி எடுக்காத!போ நிறுத்தி நிதானமா பேச கத்துகிட்டு வா!
.
கஜீத் வருகிறார்..
கவுண்டர்: ஹ்ம்ம்..இன்னிக்கி யார மாட்டிவிடப்போறாரோ!
கஜீத்:அய்யா மெரட்றாங்கய்யா...
கவுண்டர்: ஆரம்பிச்சிட்டாரு!
கஜீத்: சாரிண்ணே!போன டைம் பேசுறதுக்காக ஒரு டாமில் டீச்சர்கிட்ட எளுதி வாங்கி வந்தத திரும்பவும் படிச்சிட்டேன்...திடீரென்று பேட்டி கொடுக்கும் நினைப்பில்...... ஹேய் ஐ ஆம் கமிங் ஸ்டரைட் ஃபரம் பல்கேரியா.வீ ஆர் ஷூட்டிங் எ பைக் ரேஸ் ஓவர் தேர்!
கவுண்டர்: அது என்னங்கண்ணா எல்லா படத்துலயும் பைக்கை ஒத்த வீல்லையே ஓட்டுறீங்க?இன்னொரு வில் தேவையில்லன்னா அத மொத்தமா கழட்டிவச்சிட வேண்டியதுதான?
கஜீத்: அண்ணே கிண்டல் பன்னாதீங்கண்னே!
கவுண்டர்: சரி பேசுப்பா!
கஜீத் :ஐ ஹேவ் லாட்ஸ் அப் ரெஸ்பெக்ட் பார் ஆர் பார்மர் சிஎம்.பட நவ் ஐ பீல் வெரி சேட் ரிகார்டிங் கரண்ட் பொலிடிகல் சிட்டுவேஷன்..வாட் ஐ தின்க் இஸ்..
கவுண்டர்: அண்ணா கொஞ்சம் அப்பப்போ தமிழ்லையும் பேச டிரை பண்ணுங்க
கஜீத்:அண்ணே நா என்ன வச்சிகிட்டா வஞ்சன பண்றேன்?தவிர பல தவுசண்ட்ஸ் ஸ்பென்ட் பண்ணி ரெபிடெக்ஸ் கோர்ஸ் எடுத்ததை காட்டிக்க வேண்டாமாண்னே?
கவுண்டர்: க்கும்.இங்குலீசு தப்பில்லாம பேசணுமாம்!ஆனா இவங்க தமிழை மட்டும் கொத்து புரோட்டா போடுவாங்களாம்!ஏன் அதையும் ஒரு தமிழ் வாத்தியார் வச்சு கத்துக்க வேண்டியதுதான!இவுருன்னு இல்ல!சாமியார் வேஷம் போடுற டுபாக்கூருங்க வரைக்கும் இதேதான்!
கஜீத்: ஐ டோன்ட் லைக் பப்ளிசிட்டி!
கவுண்டர்: க்கும்!நடுராத்திரி பிளைட்டை பிடிச்சி சமாதி மாறி பம்ஜியார் சமாதி மேல தட்டி தட்டி அழுத மாதிரியா?
கஜீத்: அண்ணே மேடம் மேல எனக்கு நெறைய ரெஸ்பெக்ட் உண்டு!
கவுண்டர்: ஆமாமா!ஊழல் வழக்குல குற்றவாளின்னு அறிவிக்கப்பட்டவங்களாச்சே!
கஜீத் மைன்ட் வாய்ஸ்: என்ன சொன்னாலும் எதிரா பேசிகிட்டு இருக்காரு!இப்படியே முடிச்சிக்க வேண்டியதுதான்....வித் திஸ் ஐ கம்ப்ளீட் மை ஸ்பீச்!.
.
இவுரு வந்தா அண்ணாவும் வந்திருக்கணுமே!
வர்லாம் வா ...வர்லாம் வா..வர்லாம் வா....வர்லாம் வா 
என்று நாளா திசைகளிலும் எதிரொலிக்க சைக்கிளில் புறாவுக்கு பெல் அடித்தபடி அண்ணா வருகிறார்!
.
அதான் வந்துட்டாரில்ல!வர்லாம் வா'வ நிப்பாட்டுங்கடா!
அண்ணா: ண்ணா ....இப்பத்தான் பட்லி பட ஷூட்டிங்லேர்ந்து வரேன்
கவுண்டர்: எது?இந்த பழைய படத்தையெல்லாம் புதுசா கல்லுல போட்டு சுட்டு குடுப்பானே அவந்தான பட்லி?
அண்ணா: ண்ணா....ரசிகர்கள் அதத்தான் விரும்புறாங்க
கவுண்டர்: க்கும்!ஆடுங்க தங்களை ஆடுகள் என்று உணராதவரை.....
அண்ணா:கொலைவா படத்துல time to leadனு டேக்லைன் போட்டதுக்கு அந்த ஓட்டு ஓட்டுனாங்க
கவுண்டர்: புலம்ப ஆரம்பிச்சிட்டான்!
அண்ணா: ண்ணா...ஆனா இப்ப வர்லாம் வா'ன்னு வச்சதுக்கு எவனுமே கேக்கல!இனி படத்துல அரசியல் வசனம் தூக்கலா இருக்கும்!
உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்...உய்... என்று கூட்டத்திலிருந்து மிகச்சத்தமாக விசில்!

கவுண்டர்:ஆத்தா இருந்திருந்தா இதையெல்லாம் நடக்க விட்டிருக்குமா?
அண்ணா:ண்ணா ...அதான் இல்லையே!இப்ப என்ன பண்ணுவீங்க?
கவுண்டர்: என்ன பண்ண முடியும்?பேசாம பொத்திகிட்டு இருக்க வேண்டியதுதான்!
அண்ணா: அப்பாகூட பேசிகிட்டு இருந்தேன்!பேரவை கொடில அணில் போட்டோவ போடலாமா?ன்னு கேட்டாரு..வேண்டாம்னுட்டேன்!போன தேர்தல்ல ஊதிமுகவுக்கு அணிலா உதவி அவுங்க பின்னாடி அடிச்ச ஆப்பை நியாபகப்படுத்துது!அதனால Bi ரவா ன்னு ரெண்டு ரவா பாக்கெட்டை சின்னமா போடலாம்னு சொல்லிட்டேன்!
கவுண்டர்: ஐயோ...பேசியே கொல்றாரே!அண்ணா போதுங்ணா ...தலைப்புக்கு சம்மந்தமில்லாம பேசிட்டு இருக்கீங்க!
அண்ணா:தலைப்புக்கு சம்மந்தமா பேசுறத விட சம்மந்தமில்லாம பேசுனாத்தான் அல்லு தெறிக்கும்!
கவுண்டர்: ண்ணா ...பட்லி ஷூட்டிங்குக்கு கூப்பிடுறாரு!போய் செயின் சுத்துங்க!
கிளம்புகிறார் அண்ணா...
.
திடீரென்று கூட்டத்திற்கு மேலிருந்து ஒரு சுமோ பறந்து வருகிறது....விசில் சத்தம் போல நாலுபக்கமும் ஸ்பீக்கர் செட்டப்பில் கேட்கிறது.ஏர்ல இருக்கும் சுமோவிலிருந்து அப்படியே முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு மேடையில் தாவுகிறார் குஷால்.
கவுண்டர்: ஐயோ இவனா?கழுத்த சிலுப்பி சிலுப்பியே சாகடிப்பானே!
குஷால்: டேய்...நானும் மதுரக்காரன்தாண்டா!
கவுண்டர் குஷாலின் தலையை பிடித்து உலுக்கியபடியே...ஏண்டா நீ மதுரக்காரன்னா?நாங்கல்லாம் குண்டூர்காரங்களா?ஒழுங்கா தலைப்புக்கு சம்மந்தமா பேசுடா!
குஷால்: கடிகர் சங்க கட்டிடத்துலதான் என்னோட கல்யாணம் நடக்கும்!
கவுண்டர்: ஆண்டவா!அந்த கட்டிடமே வரக்கூடாது!
குஷால்: நடிகர் சங்கத்தில் புரட்சி பண்ணி முடிச்சிட்டேன்!அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் புரட்சி பண்ண வேண்டியிருக்கு..
கவுண்டர்: புரட்சி தளபதின்னு எவனோ கொளுத்தி போட்டான்!இவன் இம்ச தாங்கல!
குஷால்: தயாரிப்பாளர் சங்கத்தில் புரட்சி முடிஞ்சதும்.....(கேப் விடுகிறார்)...சில விசிலடிச்சான்  குஞ்சுங்க தலைவாஆஆ என்று கொக்கரிக்கிறார்கள்!
கவுண்டர்: அதென்ன..கூட்டத்துல சொல்லி வச்சாப்ல நாலு பேரு மட்டும் கத்துறான்..
குஷால்:  ண்ணா அதெல்லாம் செட்டப்பு.கண்டுக்காதீங்க!
கவுண்டர்: ஓ இதுவும் புரட்சிதானா?சரி விடு!
குஷால்: கரத்குமார்,கோதாரவி ரெண்டு பேர் மேலையும் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடுப்பேன்!
கவுண்டர்: போதும்டா டேய்..சம்மந்தமில்லாம பேசுனது!கெளம்பு!
.
மொட்ட கிவா கெட்ட கிவாடா.....என்று எதிரொலிக்க ..

கோரன்ஸ் கழுத்து பட்டை அணிந்துகொண்டு தரையில் படுத்தும் படுக்காமல் அப்படியே ஆடியபடி வருகிறார்!
கவுண்டர்: ஆமா!இப்படி ஆடி ஆடித்தான் கழுத்து நரம்பு கட்டாகியிருக்கு இனியாவது இதை நிப்பாட்டுடா!எந்திரி...

மைக்கின் முன் நின்று பேச முயன்று பேசமுடியாமல் ஒரு கிளாஸ் தண்ணி குடித்துவிட்டு மெல்லிய குரலில் "நா இந்த உண்ணாவிரதத்திற்கான சாப்பாட்டு செலவுக்கு ஒரு கோடி கொடுத்தேன்" என்று சொல்லிமுடிப்பதற்குள் மேடையில் இருந்த கீமான் முஷ்டியை உயர்த்தியபடி "டேய் ஒரு கோடி எங்கடா கொடுத்த?காசோலை ரசீது இருக்கா?தலப்பாக்கட்டி பிரியாணி வாங்குன காலி கைச்சாப்பாடு பெட்டி இருக்கா ?வரைவோலை எடுத்தியா?மின்னணு முறையில் அனுப்புனீயா?எங்கடா ஒரு கோடி?" என்றபடி காரன்ஸ் மேல் பாய திரை விழுகிறது!
கவுண்டர்: ஆகமொத்தம் ஒருபயலும் தமிழக அரசியல் சூழல் பத்தி பேசல!நல்லா இருக்குடா உங்க போராட்டம் !விமலகாசன் டுவிட்டர்லையே புரட்சி பண்ணிக்கிறேன் என்று சொன்னதாலும்  கஜினிகாந்த் முன்னூறு கோடி படத்தின் ரிலீஸ் பாதிக்கப்படக்கூடாது என்பதாலும்   ரெண்டு பெரும் வரலியாம்!