Thursday 15 September 2016

ஹம்மிங்பர்ட் (2013)

                                  பொதுவாக ஜேசன்  ஸ்டேதம்  படங்கள்  என்றாலே  கண்டிப்பாக  அதிரடி  சேஸிங்  ,சண்டைக்காட்சிகள்,விறுவிறுப்பான  காட்சியமைப்புகள்  என்றிருக்கும்.அதிலிருந்து  விலகி  அவர்  நடித்திருக்கும்  படமிது.இப்படத்தில்  அடிநாதமாக  இருப்பது  குற்ற  உணர்வும்  அதற்கான  பிராயச்சித்த  தேடலும்தான்..அதை  சரியாக  சொல்லியிருக்கிறார்களா  இல்லையா  என்பதைத்தாண்டி  இப்படம்  எனக்கு  பிடித்திருந்தது..குறைகள்  உண்டு  என்றாலும்கூட..

                      ஷெர்லாக்  ஹோம்ஸ்  நாவல்  எழுதப்பட்ட  19 ஆம்  நூற்றாண்டில் டாக்டர்  வாட்சன்  கதாபாத்திரம்  ஆப்கன்  போரில்  காயம்பட்டு  நாடு  திரும்பியவராக  சித்தரிக்கப்பட்டிருப்பார்.பிறகு  நூறாண்டுகள் கழித்து  ஷெர்லாக்  தொடர்  2010 ஆம்  ஆண்டு  நவீன  காலகட்டத்தின்  பின்னணியில்  டிவி  தொடராக  எடுக்கப்பட்டது.அப்போதும்  வாட்சன்  கதாபாத்திரம்  ஆப்கன்  போரில்  காயம்பட்டு  நாடு  திரும்பியவராக காட்டமுடிந்தது  நகைமுரண்.அப்போதும்  ஆப்கனுடனான  சண்டை  இருந்தது.நூறாண்டுகள்  முன்பும்  ஆப்கனுடன்  போர்  புரிந்துள்ளது  பிரிட்டன்.இதைசொல்ல  காரணம்  போரின்,  சண்டைகளின்  அர்த்தமற்ற  தன்மையை  மேற்கோள்  காட்டுவதற்காகவே.
                         இப்படத்திலும்  ஜோசப்  ஸ்மித்/ஜோயி(ஸ்டேதம்) ஆப்கன்  போரில்  நடந்த  பிழையான  சில விஷயங்களுக்குப்பிறகு நாடற்றவராக  வாழ்ந்து  வருகிறார்.அவருடன்  இசபெல்  என்ற  மற்றொரு  வீடற்ற  தோழி  தங்கியிருக்கிறார்.இருவரும்  தாக்கப்பட  ஜோசப்  ஓடி புகைப்படக்காரர்  வீட்டில்   ஒளிந்துகொள்கிறான்.அமெரிக்கா  சென்றுள்ள  புகைப்படக்காரர்  திரும்ப  வர  பல  மாதங்கள்  ஆகும்  என்ற  நிலையில்  வசதியான  அந்த  அபார்ட்மெண்டில்  சகல  வசதிகளையும்  அனுபவித்து  வாழ்கிறார்  ஸ்மித்.அண்டை  வீட்டார்  விசாரிக்கும்போது  அந்த  புகைப்படக்காரரின்  பாய்ஃபிரன்ட் என  சொல்லி  தப்பிக்கிறார்.

                       சிஸ்டர்  கிறிஸ்டினாவுடன்  நட்பில்  இருக்கும்  ஸ்மித் அவ்வப்போது  அவரை  சந்திக்கிறான்.அவருக்கு  ஸ்மித்  வேறொருவரின்  வீட்டில்  தங்கியிருப்பது  தெரிந்து  கண்டிக்கிறார்.பிறகு  ஸ்மித்  சீன உணவகத்தில்  வேலை  செய்து  சொந்த  சம்பாத்தியத்தில்  வாழ்கிறான்.அங்கு நடக்கும்  அடிதடிமூலம்  சீன  அண்டர்கிரவுண்ட்  கும்பலோடு  தொடர்பு-அடியாள்  வேலை  என்று  நாள்  கழிகிறது.பிறகு  கிறிஸ்டினா  மூலம்  இசபெல்  கொல்லப்பட்டதை  அறிகிறான்.அவனை  பழிவாங்குகிறான்.அதன்பின்னராவது  அவனுக்கு  மன  நிம்மதி  கிடைத்ததா?
                     இப்படத்தின்  மிகப்பெரும்  பலமாக  நான்  கருதுவது  கிறிஸ்டினா  கதாபாத்திரம்தான்.சிறுமியாக  இருந்தபோது  பேலே (Ballet)  நடமங்கையாக  ஆசைப்பட்டு  தந்தையின்  வற்புறுத்தலால்  ஜிம்னாஸ்டிக்ஸ்ல்   சேர்கிறாள்.அங்கே    தன்னை  பலமுறை  பாலியல்  பலாத்காரம்  செய்த  ஜிம்னாஸ்டிக்ஸ்  பயிற்சியாளனை  கொன்றுவிட்டு      சீர்திருத்தப்பள்ளி  எல்லாம்  கடந்து  nun  ஆகிவிடுகிறாள்.

                  ஸ்மித்  அடிதடி  மூலம்  சேர்க்கும்  காசை அவ்வப்போது  கிறிஸ்டினாவிடம்  கொடுக்கிறான்.கிறிஸ்டினா  அதை  மதரிடம்  கொடுக்கிறார்.இந்தப்பணத்தை  வாங்கிக்கொள்வதில்  மதருக்கு  தயக்கமில்லை.தவறான  முறையில்  சம்பாத்திததென்று  போலீசிடம்  கொடுத்தால்  அவர்கள்  பப்புக்கு  சென்று  குடித்து காலி  செய்யப்போகிறார்கள்  என்கிறார்.ஆனாலும்  கிறிஸ்டினாவுக்கு  ஒரு  தயக்கம்.இந்தப்பணத்தில்  தனக்கொரு  பொருள்  வாங்கிக்கொள்ளுமாறு  ஸ்மித்  கூறினான்  என்கிறார்.இந்தக்காட்சியில்  கிறிஸ்டினாவின்  dilemma மிகத்தெளிவாக  காட்டப்படுகிறது.தவறான  முறையில்  வந்த இப்பணத்தை  வீடற்றவர்களுக்கு  செலவழிக்க  தயங்குகிறார்.அதேநேரத்தில்  அப்பணத்தில்  தனக்கு  பிடித்த  ஒரு  பொருளை  வாங்கிக்கொள்வதில்  அவருக்கு  தயக்கம்  இருக்கவில்லை.
                       அப்பணத்தில்  Maria  Zielinska வின் கடைசி  பேலே  நட  நிகழ்ச்சிக்கு  பாக்ஸ்  டிக்கட்  வாங்கிக்கொள்கிறார் .தான்  யாராக  ஆக வேண்டும்  என்று  விரும்பி  ஆனால்  ஆகமுடியாமல்  போனதோ  அவர்தான்  மரியா.நாற்பதை  தாண்டிவிட்டவர்.அவரின்  ஃபேர்வெல்  நடன  நிகழ்ச்சிக்குத்தான்  500  பவுண்டில்  டிக்கட்  எடுக்கிறார்  கிறிஸ்டினா.தான்  அடைய  விரும்பிய  ஒரு  இடத்தை  அடைந்திருக்கும்  மற்றொருவரை  பார்த்து  மகிழும்  அந்த  உணர்வை  மிக  அற்புதமாக  வெளிப்படுத்திருக்கிறார்  கிறிஸ்டினாவாக  நடித்திருக்கும்  Agata Buzek  .இவர்பற்றி  மேலும்  தேடியபோது  இவர்  வேறுசில  படங்களில்  nun  ஆக  typecast செய்யப்பட்டிருப்பதை  காணமுடிந்தது.இருந்தாலும்  அவர்  இப்படத்தில்  மிக  அற்புதமாக  நடித்திருக்கிறார்.nun  ஆகிவிட்டபோதும்  அவ்வப்போது  எழும்  சாமானிய  பெண்ணின்  ஆசைகள்,  நிறைவேறாமலேயே  கானலாகிவிட்ட  தனது  பேலே  நடன கனவு ,அற்புதமான  உடைகள்  மீதான  ஆசை  என்று  அந்தப்பக்கம்-இந்தப்பக்கம்  என  மாறி  மாறி  வாழ்ந்துகொண்டிருக்கும்  ஒரு  பெண்  கதாபாத்திரத்தை  அப்படியே  கண்முன்  கொண்டுவந்துள்ளார்.

               
                  சினிமாவிலும்  சரி  நாவல்களிலும்  சரி  சில  கதாபாத்திரங்கள்  நமக்கு  மிகவும்  comforting  ஆக  இருப்பதை  உணரமுடியும். குறைந்தபட்சம்  சினிமாவிலும்  நாவல்களிலுமாவது  அப்படியானவர்களை காண  முடிவதில்  மகிழ்ச்சி! கிறிஸ்டினா  அப்படியான  ஒரு  கதாபாத்திரம்தான் .
                      Crime and Punishment நாவலில்  வரும்  Sonya கதாபாத்திரத்தின்  தன்மைகள்  சிலவற்றை  கிறிஸ்டினாவிடம்  காணமுடிகிறது.
                   ஸ்மித்  கதாபாத்திரத்திற்கு  வலுசேர்க்க  சில ஆப்கன் போர்க்கள  காட்சிகள்    காட்டப்படுகின்றன.தனது  சக போர்  வீரர்கள்  ஐந்து  பேரை  ஆப்கன்  தீவிரவாதிகள்  கொன்றதற்கு  பழிவாங்க  தன் கண்ணில்படும்  முதல்  ஐந்து  பேரை  கொன்றுவிட்டதாக (அவர்களில்  சாமானியர்களும்  உண்டு)கதறுகிறார்.ஆனால்  அந்த  போர்க்கள  காட்சிகள்  மனதில்  பதியவில்லை.ஏனோதானோவென்று  இருப்பதாக  எனக்கு  தோன்றியது.மேலும்  தனது தோழியான  இசபெல்லை  உடனே  தேடாமல் கிறிஸ்டினாவாக  வந்து  அவள்  கொல்லப்பட்டதை  சொன்னதும்தான்  அவளின்  நினைப்பு  ஸ்மித்திற்கு  வருகிறதா?? இதுமாதிரி    சறுக்கல்கள்  இருந்தாலும்  படம்  நிறைவைத்தந்தது.

Sunday 11 September 2016

ஜியோ- எனது புரிதல்

                           நீங்கள்  கவனித்திருக்கலாம்..4G  நெட்வொர்க்கில்  இருக்கும்  ஒரு  மொபைலுக்கு  தொலைபேசி  அழைப்பு  வரும்போது  2G க்கோ  3G  க்கோ  மாறிவிடும்.காரணம்  4G  யில்  செல்லுலர்  அழைப்பு  சாத்தியமில்லை.அதில்  அனைத்துமே  டேட்டாதான்!
                  இப்போது  வந்திருக்கும் ஜியோவைப்பொறுத்தளவில் 2G 3G  எல்லாம்  கிடையாது  .முழுக்க  முழுக்க  4G  மட்டுமே.தொலைபேசி  அழைப்புகளும்  டேட்டாவாக  மாற்றப்பட்டே  பரிமாறப்படும்.ஒருவேளை  உங்கள்  ஏரியாவில்  ஜியோ (4G)  சிக்னல்  இல்லையெனில்  ஃப்ளைட்  மோட்  போலத்தான்!
                 இன்னொரு  விஷயம்  தொலைபேசி  அழைப்பின்  தரம்..ஏன்  தொலைபேசி  அழைப்புகளை  டேட்டாவாக  மாற்றி  அனுப்ப  வேண்டும்??
              தொலைபேசி  அழைப்பின் தரம்  உயர்ந்ததாக  இருக்க  அது  உதவும்.ஆனால்  அதிலும்  ஒரு  ஃ உள்ளது.
           உங்கள் கைபேசியில்   VoLTE  ரேடியோ  இருக்க  வேண்டும்.மேலும்  கைபேசியின்  OS  ம்  VoLTE  அழைப்பு  செய்ய  வசதி  பெற்றிருக்க  வேண்டும்..சில  கைபேசிகளில்  அந்த  VoLTE  ஹார்ட்வேர்  இருக்கும்..ஆனால்  OS  ல்  அது  எனேபிள்  செய்யப்பட்டிருக்காது.அந்த  நிலையில்  அந்த  கைபேசி  நிறுவனம்  OTA(over the air) அப்டேட்  மூலம்  அதை  எனேபிள்  செய்ய முடியும்.ஆனால்  உங்கள்  கைபேசியில்  VoLTE  ஹார்ட்வேர்  இல்லையெனில்  அதற்கு  வேறு  வழி  உள்ளது.அதை  பிறகு  பார்ப்போம்.
                 இப்ப  உங்களிடம்  VoLTE  ஹார்ட்வேர்  சாஃப்ட்வேர்  இரண்டுமே  உள்ளது..ஜியோ  (தற்போதைக்கு  வோல்டியி  வசதி  ஜியோவில்  மட்டும்) சிம்மும்  போட்டிருக்கிறீர்கள்..நீங்கள்  உங்கள்  நண்பருக்கு  போன்  செய்து  பேசுகிறீர்கள்.."என்னைய்யா  என்னமோ  FM  ரேடியோ  போல  குரல் தெளிவா  கேக்கும்னு  சொன்னாங்கே..இங்க  ஒரே  கரகரப்பிரியாவா  இருக்கே?"  என்பது  பலரின்  கேள்வி..

                 நீங்கள்  வோல்டியி  எனேபில்ட்  போன்+சிம் வச்சிருந்தா  போதாது..உங்கள்  நண்பரும்  அதேபோன்று  வோல்டியி  எனேபில்ட்  போன்+சிம் வச்சிருந்தா  மட்டுமே  அந்த  HD  voice  ல்  பேசமுடியும்.நீங்கள் வோல்டியி  எனேபில்ட்  போன்+சிம் வைத்திருந்து  நண்பர்  சாதா  ஸ்மார்ட்போனோ  அல்லது  வோல்டியி  ஸ்மார்ட்போன்ல  வேறு  சிம்மை  பயன்படுத்தினால்  அதே   muddy  call  clarity தான்  கிடைக்கும்.
                நீங்கள்  ஜியோ  சிம்மை  வோல்டியி  வசதி  இல்லாத  ஸ்மார்ட்போனில்  பயன்படுத்தினால்  அப்போது  எப்படி  கால்  செய்யமுடியும்?அதற்கு  மை  ஜியோ  ஆப்  இன்ஸ்டால்  செய்திருக்கவேண்டும்.மேலும்  டேட்டா  ON  ல்  இருக்கவேண்டும்.அந்த  டேட்டா   மூலமாக  பேசலாம்.வோல்டியி  எனேபில்ட்  மொபைல்  வைத்திருந்தால்  டேட்டா  ஆன்  செய்திருக்க வேண்டும்  என்ற அவசியமில்லை!

                மே  மாசம்  துவங்கி  ஃப்ளேம்  மொபைலில்  மூன்று  மாதம்  அன்லிமிடட்  டேட்டா_காலிங்  கொடுத்திருந்தபோது  நாள்  முழுவதும்  ஓரளவு  4G  ஸ்பீட்  வந்தது.ஆனால்  இப்போது  அனைவருமே  சிம்மை  வாங்கி  பயன்படுத்தலாம்  என்று  அறிவிக்கப்பட்டதும்  ஒருநாளைக்கு  4G  டேட்டா  மட்டும்  4G  ஸ்பீடில்  கிடைக்கும்  என  அறிவிக்கப்பட்டதும்  போச்சு!இணைய  பிரவுசிங்  பண்ணும்போது  பிரச்சனையில்லை.ஸ்பீட்  இருக்கு.ஆனா  ஆப்  ஸ்டோரிலோ   டொராண்டிலோ  யூட்யூபிலோ  எதாச்சும்  டவுன்லோட்  போட்டா  முதல்  ஐந்து  நிமிடம்  நல்ல  ஸ்பீட்  அதன்  பின்  1Mbps க்கு  த்ராட்டில்  செய்யப்படுகிறது.அதை  நிறுத்திவிட்டு  மீண்டும்  ஒருமணி நேரம்  கழித்து  அதே  டவுன்லோடை  ரெஸ்யூம்  செய்தால்  அதேபோல  முதல்  ஐந்து  நிமிடங்கள்  ஸ்பீட்  பிறகு  த்ராட்டில்..
              மேலும்  இந்த  நைட்  அன்லிமிடட்  என்ற  கேலிக்கூத்து.2-5 AM  ஆம்!
              இந்த  டைம்  ஸ்லாட்டை  இருவகையினர்  பயன்படுத்திகொள்ளலாம்!
1. ஏ.ஆர்.ரகுமான்
2.  நள்ளிரவு (உனக்குத்தான்  அது  நள்ளிரவு.மத்தவங்களுக்கு  அது  விடிகாலை  உதயா-கும்மாங்கோ) நாலு  மணிக்கே  கண்விழிப்பவர்கள்  ஒருமணி நேரம்  யூஸ்  பண்ணலாம்..
  என்ன  அபத்தமான  டைமிங்  இது?  12-5AM  அல்லது  12-4AM  னு  வச்சாலும்  ஒரு  நியாயம்  இருக்கும்.
                 மேலும்  ஒவ்வொரு  பிளானோடு  வழங்கப்படும்  wifi  hotspot  data.அதிலும்  ஒரு  ஃ  இருக்கு.உங்க  ஏரியாவில்  ஜியோ  வை ஃ பை  சிக்னல்  இருந்தால்  மட்டுமே  அது  பயனுள்ளது.இல்லாட்டி  ஜியோ  வை ஃ பை  வசதி  உள்ள  ரயில்  நிலையம்  போன்று  எங்கனா  போய்  பயன்படுத்திக்கலாம்.

                   1 GB  50  ரூபாய்  என்பதும்  கல்தா தான்!அதாவது  4999 க்கு  ரீசார்ஜ்  செய்தால்  75GB  என்று  66 ஓவாக்கி  ஓரளவு  நெருங்கி  வருது.மற்றபடி  149  க்கு  300 MB  _700MB wifi என்பது  யானை  பசிக்கு  சோளப்பொறி தான்.
                  "மதியத்துக்கு  கொடல்  கொழம்பு  வச்சிடு..வஞ்சிரத்த  வறுத்துடு.." போன்ற அதிமுக்கிய   குடும்பஇஸ்திரி  உரையாடல்களுக்கு     "ஹா!ஹூ..யா..ம்..ஹாஹா"  என்ற மாதக்கணக்கில்  நீளும்   லவ்வர்  பாய்  உரையாடல்களுக்கு  மிகவும்  ஏற்றது.அன்லிமிடட்  கால்ஸ்  ஆச்சே!
                   இதுக்குமேல  இதில்  உள்ள  ஃ  ன்னாக்கள்  கமர்ஷியல்  லான்ச்க்கு  பிறகே  தெரியவரும்.ஜியோ  டு  ஜியோ  இணைப்பு  உடனே  கிடைக்கிறது.ஆனால்  பிற  மொபைல்  சேவை  நம்பர்களை  ஐந்தாறு  முறை  டயல்  செய்தால்தான்  லைன்  கிடைக்கிறது.இந்த  இன்டர்கனக்ட்  பிரச்சனை  இன்னும்  தீர்க்கப்படவில்லை.ஏர்டல்  உள்ளிட்ட  பகல்  கொள்ளையர்கள்  இந்த  இன்டர் கனக்ட்  கால்கள்  ஒவ்வொன்றுக்கும்  கட்டணம்  நிர்ணயிக்க  வேண்டும்  என  டிராயிடம்  புகார்  கொடுத்துள்ளன..அதில்  வரும்  தீர்ப்புக்கு  பிறகே  அந்த  பிரச்சனை  சரியாக  வாய்ப்புள்ளது.

Friday 9 September 2016

ட்வின் பீக்ஸ் சீஸன் 1(1990-91)



         
               தொலைகாட்சி  சீரிஸ்களுக்கும்  திரைப்படங்களுக்குமான  வேறுபாடுகள்  பல  உண்டென்றாலும்  மிக  முக்கியமானதாக  நான்  கருதுவது  character establishment.2.30-3 மணி  நேர  திரைப்படத்தில்  கதையோடு  தொடர்புள்ள  அனைத்து  கதாபாத்திரங்களையும் அவர்களின்  குணாதிசயங்களையும்   பார்வையாளனுக்கு  அறிமுகம்  செய்துவைத்து  அவர்களுக்குள்ளான  உறவு  போன்றவைகளையும்  சொல்லிவிட  வேண்டும்(சில திரைப்படங்கள்  அப்படி  சொல்லாமலும்  இருப்பதுண்டு).
         தொலைக்காட்சி  சீரிஸ்களில்  அந்த  நெருக்கடியில்லை.நிதானமாக  போகிற  போக்கில் ஒவ்வொரு  கதாபாத்திரமாக  அறிமுகம்  செய்துவைத்து  அவர்களின் தன்மைகளை  மேலோட்டமாக  அல்லாமல்  ஆழமாக  பதிவு  செய்யமுடியும்.
          லோரா  பால்மர்  என்ற  பெண்  கொல்லப்படுகிறாள்.அதைத்தொடர்ந்து  நடக்கும்  விசாரணையும்  அதையொட்டிய  சம்பவங்களுமே  ட்வின் பீக்ஸ்.
         சாதாரணமாக  ஒரு  கொலை  அதைத்தொடர்ந்த  விசாரணை  துப்பறியும்  வேலைகள்  போன்ற  கதைகளில்  கொலை,வாக்  த க்ரிட்,அட்டாப்சி,டெண்ட்டல்,டி என் ஏ  அது  இதுவென்று  பரபரப்பாக  அடுத்தடுத்த  காட்சிகள்  அமையும் .இதில்  அப்படியில்லை.
          கொலை  அதை ஒட்டிய  விசாரணை  என்பது  காட்டப்பட்டாலும்  அதைத்தாண்டி  ட்வின்  பீக்ஸ்  எனும்  சிறு  நகரத்தில்  வசிக்கும்  மக்கள்;அவர்களின்  வினோதங்கள்  மிக  சுவாரஸ்யமாக  படமாக்கப்பட்டுள்ளது.
           Mindful (ஜென்  நிலை  என்ற  வார்த்தையை  தமிழ் இணையபோராளிகள் க்ளீஷே ஆக்கிவிட்டதால் பயன்படுத்தவில்லை) ஆன  எஃப்.பி.ஐ அதிகாரி டேல் கூப்பர் அற்புதமான பாத்திரப்படைப்பு.டயான்  என்ற  கற்பனை(??!!)  கேரக்டரோடு  தனது  வாய்ஸ்  ரெகார்டரில்  அவ்வப்போது நடக்கும்  நிகழ்வுகளை  பதிவுசெய்துகொண்டே  வருவது;பிளாக்  காஃபி மீதான  அலாதி  அலாதி  பிரியம்;உண்ணும்போது  ஒவ்வொரு வாய்  உணவையும்  அலாதியாக  ரசித்து  உண்பது.எந்தவொரு  நெருக்கடியிலும்  டென்சன்  ஆவதோ  கத்துவதோ  அல்லாமல்  மெல்லிய  சிரிப்புடனேயே  பிரச்னையை  அணுகுவது;கொலை  வழக்கை  விசாரிக்க  வந்த  இடத்திலும்  சுற்றுசூழலை  ரசிப்பது;
     அது  என்ன  மரம்??

என்னவொரு  காற்று?

என  செம  ரகளையான  பாத்திரப்படைப்பு.நடித்த Kyle MacLachlan  ம்  பட்டையை  கிளப்பியிருக்கிறார்.இவர் ஏற்கெனவே டேவிட்  லின்ச் இயக்கிய  Blue Velvet  படத்தில்  நடித்திருப்பது  தெரிந்திருக்கும்.


டேவிட்  லின்ச்  எழுபதுகள் துவங்கி  சில  தியான  முறைகளை  பழகி  வந்ததாக  கேள்விப்பட்டேன்..அதாவது  ஆழ்மனம்  என்பது  கடல்  போலவும்  அதில்  வரும்  ஐடியாக்கள்  மீன்கள்  போலவும்  அவர்  சொல்வதுண்டு..ஆழமான  தியானம்  மூலம்  அந்த  மீன்களை  பிடிப்பதாக  சொல்வார்..

அவ்வப்போது  அவருக்கு வரும் வினோதமான   கனவுகள்(டேவிட்  லின்ச்  படைப்பில்  கனவுகள்  இல்லாமலா!) தனிரகம்.
           அனைத்து  எபிசொடுமே  நன்றாக  இருந்ததென்றாலும் குறிப்பாக  Zen, or the Skill to Catch a Killer எபிஸோடில், யார் குற்றவாளி என்பதை டேல் கூப்பர் கண்டுபிடிக்கும் முறை-"weird"! தொலைவில் ஒரு  பியர் பாட்டிலை  ஒரு  பாறைமீது வைத்துவிட்டு போர்டில் சந்தேக  நபர்களின் பெயர்களை  வரிசையாக  எழுதி ஒவ்வொரு  பெயராக  சத்தமாக  படிக்க   சொல்கிறார்.ஒவ்வொரு  பெயர் வாசிக்கப்ப்படும்போதும்   ஒவ்வொரு  கல்லாக  எடுத்து   அந்த பாட்டிலின்  மீது  வீசுகிறார்.எந்த  பெயர்  சொல்லப்படும்போது கல்  பாட்டிலின் மீது  படுகிறதோ அவர்தான் குற்றவாளி என்பதாக அவர்  நம்புகிறார்!


              பொதுவாகவே  ஒரு  ஆண்  கொல்லப்பட்டால்  அவ்வளவு  பரபரப்பு  உண்டாவதில்லை.அதே  ஒரு  பெண்,  அதிலும்  இளம்பெண்  கொல்லப்பட்டால்  வதந்திகளுக்கும் கதையாடல்களுக்கும் யூகங்களுக்கும்   முடிவே  இருக்காது .இதிலும்  லோரா  பால்மர்  என்ற  மாணவி  கொல்லப்பட்டதும்  பல  யூகங்கள்  கிளம்புகிறது.அந்த  யூகங்களும்  அதையொட்டிய  மர்மங்களும்தான்  கதையை  முன்னகர்த்துகின்றன.

Laura Palmer

                லோரா பால்மர்  சீரிஸ்(சீசன்1)  முழுவதுமே  காட்டப்படுவதில்லை.அவர்  எப்படிப்பட்டவர்?எப்படி  பேசுவார்?எப்படி  நடப்பார்  என்பதெல்லாம்  நமக்கு  தெரிவதில்லை(பிற்சமயத்தில் வேறொரு  டபுள்  அவரைப்போல  உடையணிந்து வந்தாலும்).தொடக்கத்திலேயே  அவர்  பிணம்தான்  காட்டப்படுகிறது. அவர்  எப்படிப்பட்டவர்,அவரின்  ஆளுமை  எத்தகையது  என்பது  அவரின்  நெருங்கிய  நண்பர்களுக்கும்  பெற்றோருக்கும்  ஏன் காதலனுக்குமே (லோரா இறந்தபிறகு அவரது  தோழியிடம் "எனக்கே   தெரியாமல் உன்னைத்தான்  நான்  காதலித்திருக்கிறேன்"..  என்கிறான்) தெரியவில்லை.லோராவை  சுற்றியுள்ள  அந்தவொரு  மர்ம  பிம்பம் அதுதான்  இந்த  மொத்த  கதையின்  அடிநாதமாக  நான்  பார்க்கிறேன்.பல்வேறு  layer  களை  கொண்ட  ஒரு  பெண்ணாகவே  அவர்(அதாவது  அவர்  பிம்பம்)  காட்டப்படுகிறார்.   

 
                அதைத்தவிர்த்து  பல  விசித்திரமான  மக்கள்.இதில்  மிகவும்  ஈர்த்தது  Lucy Moran  தான்.வினோதமான  குரல்,ஹேர்  ஸ்டைல் ஒவ்வொருமுறையும்  ஒரு  அரையோ  பொருளோ  எங்கிருக்கிறது  என்பதை  சளைக்காமல்  விவரிக்கும் விதம்  என  நன்றாக  நடித்துள்ளார்..

Lucy Moran



             Drapes  வடிவமைப்பில்  ஏதாவது  புதிதாக  கண்டுபிடித்துவிட  வேண்டும்  எனத்துடிக்கும்  eccentric ஆன ஒரு மனைவி  கேரக்டர் ;
மகளின்  சவப்பெட்டி  மேல்  படுத்துக்கொண்டு  எழுதுகொள்ள  மறுத்து  கதறுவதும்   பிறகு  புத்தி  கலங்கி பார்ட்டிகளில்  வந்து  சம்மந்தமில்லாமல்  கற்பனையாக  லோராவோடு  டான்ஸ்  ஆடும்  லோராவின்  தந்தை  லீலன்ட்  பால்மர் ;லோராவின்  காதலனாக  அறியப்பட்ட  ஜேம்ஸ்  லோராவின்  mutual  தோழியான  டோன்னாவை  காதலிப்பது ;கையில்  இருக்கும்  மரத்துண்டை  உயிருள்ள  பொருளாக  கருதும்  log lady என்று  ரொம்ப  diversified கதாபாத்திரங்கள்.
     சீரிஸின் மிகப்பெரும் பலம் Angelo Badalamenti ன் இசைதான்.எனக்கு மிகமிக  பிடித்தது  டைட்டில்  இசை..அதனோடு  காட்டப்படும்  சில  (சர்ரியலிச??)காட்சிகள்..பழைய இசை/பாடல்கள் பழங்காலத்து நினைவுகளை  கண்முன்  கொண்டுவருவதும்..புது  பாடல்கள்  சமீபத்திய  நினைவுகளை  ஞாபகப்படுத்துவதும்  இயல்பு.ஆனால்  இந்த  இசை  சமீபத்திய  ஒரு  நிகழ்வினை  தொடர்ந்து  நினைவுபடுத்துகிறது..    
 
            ஜோஸியின் மில்  தீவைக்கப்படுவது;  ஏஜென்ட் கூப்பர்  மர்ம  மனிதனால்  சுடப்படுவது;  
தப்பிக்க  முயலும் ____ கைது  செய்யப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிப்படுவது..மகளை கொன்ற _____ ஐ  தன்  கையாலேயே  கொல்லும்  லோராவின் தந்தை  என பல   திருப்பங்களோடு சீசன் 1 முடிகிறது.