Monday, 8 July 2013

A Clockwork Orange(1971)-அதிவன்முறை சமூகத்தை எதிர்கொள்ளுதல்



         குப்ரிக்கின் படங்களை இரண்டு பத்திகள் மூலம் எழுதி விளக்கிவிடவே முடியாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.அது உண்மையும் கூட.எனவே இந்த படத்தை பார்த்தபோது எனக்கு தோன்றிய வெகு சில விஷயங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.மற்றபடி ஒலக சினிமா வெமர்சகன் என்று எனக்கு நானே பெயரிட்டு கொண்டு முதல் பத்தியில் படத்தின் கதையை எழுதி இரண்டாம் பத்தியில் நடிகர்கள் இயக்குனர் இசையமைப்பாளர் ஆகியோர் பற்றி இரண்டிரண்டு வரிகள் எழுதி முடித்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
*********************************************************************************
          நாமே இதை வாழ்வில் உணர்ந்திருப்போம்..ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சினிமா அல்லது குறிப்பிட்ட சினிமாவில் வரும் ஒரு குறிப்பிட்ட பாடல் நம் வாழ்வின் ஒரு முக்கியமான(மகிழ்ச்சி தருவதோ அல்லது அதீத வேதனை தருவதோ அல்லது அதீத தன்னம்பிக்கையோடு நாம் செயல்பட்ட  ) சம்பவத்தோடு நம் விருப்பம் இல்லாமலேயே பிணைக்கபட்டிருக்கும்.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட காதல் பாடல் ஒரு நபரின் பிரிந்து போன காதலியை/காதலனை நினைவூட்டலாம்.அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் தான் காதலித்த நபரோடு பேசிய பழகிய நாட்கள் கண் முன் வந்து போவதை உணர்ந்திருக்கலாம்.இதுபோல ஒரு நண்பனையோ அல்லது நெருக்கமான உறவினரையோ நினைவுபடுத்தவும் கூடும்.அந்தந்த நபர் பொறுத்து.இது போல பீத்தோவனின்  சிம்பனிகளுக்கு (ஒன்பதாவது சிம்பனி அதிலும் குறிப்பாக Molto Vivace) எதிராக அலெக்ஸ் பழக்கபடுத்தபடுகிறான்.Ludovico technique க்கு முன்பு அந்த இசையை அவன் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அவன் இன்பத்தின் உச்சத்தை அடைகிறான்.பல்வேறு அழகிய பெண்களுடன் உல்லாசமாக அவன் இருப்பதாக  அவனது மனக்கண் முன்பு தோன்றுகிறது .அந்த காட்சியை கீழே நீங்கள்  கீழே பார்க்கலாம் .
            இப்படி பீத்தோவனை கேட்கும் போதெல்லாம் இன்பத்தின் உச்சநிலையை அடையும் அலெக்ஸ் அந்த லுடோவிக்கோ முறைக்கு உட்பட்ட பிறகு ஒவ்வொரு முறை பீத்தோவனை கேட்கும்போதும் அவனுக்கு தான் பார்த்த அந்த நாஸி வீடியோக்கள் மற்றும் பிற அதிவன்முறை காட்சிகளே நினைவுக்கு வந்து கிட்டத்தட்ட மூச்சே நின்றுவிடும் அளவுக்கு மூச்சு திணறல் வாந்தி அதன்பின் மயக்கம் என்றாகிப்போகிறது.
           க்ளைமாக்ஸில் அதே பீத்தோவன் இசை ஒலிக்கிறது.ஆனால் இந்த முறை வாந்தியோ மயக்கமோ மூச்சுதிணறலோ ஏற்படவில்லை.அதற்கு மாறாக அவன் முன்பு உணர்ந்து இன்பத்தின் உச்ச நிலையில் பெண்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை அவன் மனக்கண் முன்பு தோன்றுகிறது.இந்த மாறுதலுக்கு காரணம் எதிர்கட்சிகள் மருத்துவர் உதவியால் ஏதேனும்  memory Reversal பாணி அறுவை சிகிச்சை செய்தனரா அல்லது அலெக்ஸ் மேல்மாடியில் இருந்து விழுந்த அதிர்ச்சியில் லுடோவிக்கோ டெக்னிக் டம்மியாகி போனதா என்பது நமக்கு சொல்லப்படுவதில்லை.ஆனால் ஒன்றை நாம் உணர்கிறோம்.இந்த டெக்னிக்கால் நிரந்தரமாக ஒருவரை குற்றம் செய்யாமல் தடுத்துவிட  முடியாது என்பதுதான் அது.
                                           

          நம் சமூகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போவதை நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்கும்போதோ/டிவியில் செய்திகள் பார்க்கும்போதோ  உணர்திருக்கலாம்.
எதிர்கட்சி ஆளும்கட்சியை விமர்சிக்க ஒரு வருடத்தின் குற்ற எண்ணிக்கையை பட்டியலிட்டு தாங்கள் ஆட்சியில் இருந்தபோது இருந்த குற்ற எண்ணிக்கையை காட்டிலும் இவ்வளவு விழுக்காடு உயர்ந்துள்ளது அதனால் மக்களுக்கு பாதுகாப்பில்லை... அது... இது... என அளப்பார்கள்.
                                         
        ஆனால் பெருகி வரும் குற்றங்கள் அனைத்தயும் ஒரு அரசு தவிர்த்துவிட/குறைத்துவிட முடியுமா? என்றால் இல்லை என்ற பதில்தான் நிதர்சன உண்மையான பதிலாக இருக்கமுடியும்.
சில குற்றங்களை அரசு தடுப்பது அரசின்  கடமையாக  உள்ளது.உதாரணமாக தீவிரவாதிகள் தாக்குதல் ,வெடிகுண்டு வைத்தல்,ஒரு அரசியல்/சமூக பிரபலத்தை கொலை செய்ய நடத்தப்படும் முயற்சி போன்றவை தவிர்க்க கூடியது.தவிர்க்க வேண்டியது அரசின் கடமையும் கூட..ஆனால் சில குற்றங்களை அடிப்படை சமூக புரிதல்கள் மீதான மாற்றம் நிகழும்வரை தவிர்க்கவோ குறைக்கவோ முடியாது.
உதாரணமாக குடிக்க காசு தர மறுக்கும் தாயை மகன் வெட்டி கொல்லுதல்/அல்லது கணவன் மனைவியை கொலை செய்தல்,கள்ளக்காதல் கொலைகள் etc..etc., போன்றவைகளை எல்லாம் அரசு தடுக்க முடியாது.ஆனால் தடுப்பதற்கான சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் சிலவற்றை செய்யலாம்.
                                       அப்படி ஒரு மனிதனின் குற்றம் செய்யும் எண்ணத்தை/மனோபாவத்தை முற்றிலுமாக அழித்தல் மூலம் குற்றம் என்பதே நிகழாது என நம்பும் ஒரு அரசு Ludovico Technique என்னும் தொழில்நுட்பத்தை குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது பரிசோதனை செய்துபார்த்து அதில் வெற்றியும் கண்டாகி விட்டோம் என்றுவேறு அலம்பல் செய்கிறது.எதிர்கட்சி இந்த எண்ணமாற்றங்கள்  செய்யும் தொழில்நுட்பம் மனித உரிமைக்கு எதிரானது.மேலும் ஒருகட்சி சர்வாதிகார  ஆட்சி நடக்கும்  (Totalitarian)சமூகத்தை நோக்கியே இது நம்மை இட்டு செல்லும் என பல எதிர்ப்புகள் கிளம்புகிறது.
                            
                                             இந்த இடத்தில் நாம் ஒரு நாவலை நினைத்துப்பார்க்க வேண்டும்.George Orwell எழுதிய 1984 என்னும் நாவல்தான் அது.இந்த நாவல் பற்றி அடியேன் ஏற்கெனவே  அப்போதிருந்த ஸ்டாலினிய சோவியத் யூனியன் பற்றிய நாவல் என ஒரு சிறு வட்டத்திற்குள் இதை அடைத்துவிட முடியாது.அப்போது இரண்டாம் உலகப்போர் காரணமாக பொருளாதார சேதாரம் அடைந்திருந்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்க பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.இப்போது கூட அமெரிக்கா உலகின் அனைத்து இணைய பயன்பாட்டு தகவல்ககளியும் கண்காணிக்கிறது என்ற உண்மையை உலகிற்கு தெரிவித்த எட்வர்ட் ஸ்னோடேனை நாடு நாடாக துரத்தி அடித்து எப்படியாவது உள்ளே தள்ளிவிட அமெரிக்கா முயற்சிப்பதை நாம் அறிவோம்.இதெல்லாம் நமக்கு உணர்த்துவது ஒன்றையே..அமெரிக்காவும் கிட்டத்தட்ட எதிர்ப்பில்லாத/இடைவிடாத கண்காணிப்பை மேற்கொள்ள விரும்பும் ஒரு அரசு நீடிப்பதையே விரும்புகிறது.அத்தகைய முயற்சி நோக்கி செல்லும் போது தடைகற்களாக இருப்பவர்களை சுவடில்லாமல் செய்ய பார்க்கிறது.
              1984 நாவலில் கூட வின்ஸ்டன் ஸ்மித் எனும் அரசு ஊழியன் totalitarian ஆட்சிக்கெதிராக முயல்வதை கண்டுகொள்ளும் அரசு அவனை ஒரு சிறை போன்ற இடத்தில் அடைத்துவைத்து சில வழிமுறைகள் மூலம்  அவன் மனதின் அடிஆழம் வரை ஊடுருவி செல்கிறது.அந்த அடிஆழத்தில் உள்ள அரசுக்கெதிரான ஒரு சிறு கருத்து எண்ணம் கூட மிச்சம் இல்லாத வரை ஸ்மித்தை டார்ச்சர்(உடல் ரீதியாக மட்டுமல்ல) செய்து அழித்துவிடுகிறது.அதன்பின் அவன் கிட்டத்தட்ட ஒரு நடைபிணம் போலத்தான் இருக்க வேண்டும்.அரசுக்கெதிராக கலகம் செய்ய நினைக்ககூட திராணியற்ற ஒரு மனிதனாக அவன் இருப்பதாக அந்த நாவல் முடியும்.
                         

             கிட்டத்தட்ட அதேபோலத்தான் இந்த Ludovico Technique ம்.(இந்த நாவலை எழுதிய Anthony Burgess 1984 நாவலின் பாதிப்பால் 1985 என்ற நாவல் கூட எழுதியுள்ளார்.).நான் மேற்சொன்ன அரசால் தடுக்க முடியாத குற்றங்கள் நிகழ்வதற்கு மிக முக்கிய காரணம் நொடி நேர உணர்ச்சிவயப்படுதல்.அந்த நொடியில் உணர்ச்சியின் வேகத்தில் எதிராளியை கொலை செய்தல்.காரணம் ஒவ்வொருவர் மனத்திலும் வன்முறை காமம் குரோதம் போன்றவை கிட்டத்தட்ட மனிதனின் இயல்பாகவே காலம் காலமாக  தொடர்ந்து வருகிறது.இந்த எண்ணங்களின் விழுக்காடு ஆளுக்காள் மாறுபடலாமே ஒழிய இவை அனைத்தும் நிச்சயம் அனைவர் மனிதலும் சிறிதளவாவது இருக்கும்.இந்த டெக்னிக் என்பது ஒருவன் எந்த வகையில் குற்றம் செய்தானோ அந்த குற்றம் செய்ய அவனை தூண்டியது எதுவோ அந்த விஷயமே அவனுக்கு வெறுத்துபோகும்படி செய்தல்.அலெக்ஸ் விவகாரத்தில்  வன்முறை என்பதே அவனுக்கு வெறுப்பூட்டுவதாக மயக்கம் வரசெய்வதாக மாற்றப்படுகிறான்.
                               
கண்களை இமைக்கவிடாமல் வன்முறை காட்சிகளை பார்க்க செய்யும் லுடோவிக்கோ டெக்னிக்

                    பரபரப்பான சமூக தொடர்பை அறுத்தெறிந்து Spring summer fall winter and spring படத்தில் ஒரு புத்த துறவியின் சீடனாக கிம் கி டுக் கதாபாத்திரம் இருக்கும்போது கூட அவனின் மனித இயல்புகள் மேலோங்கி ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான்.பிறகு  தனது மனைவி வேறொருவனுடன் உறவு வைத்திருந்தது தெரிந்து அவளை கொன்றுவிடுகிறான்.எனவே எந்த சூழலில் சமூக தொடர்பற்று இருந்தாலும் இந்த அடிப்படை மனித இயல்பான காமம் குரோதம் வன்முறை போன்றவைகளை முழுமையாக அழித்தல் சாத்தியமற்றது(One flew over cuckoos nest போல Lobotomy செய்யாதவரை).
            இப்படி ஒரு வழிமுறையை அனைத்து குற்றவாளிகள் மீதும் செய்து பார்ப்பதற்கு முன் ஒருவரை இதற்கு உடன்படுத்தி அதன் முடிவுகளை வெளியுலகிற்கு propaganda செய்தால் அனைவரையும் இத்தகைய procedure க்கு உடன்படுத்துதல் சாத்தியமாகும் என அரசு நம்புகிறது.இந்த வழிமுறைக்கு உடன்படும் குற்றவாளி இரண்டு வாரத்தில் விடுவிக்கபடுவான்.அதன்பின் அவன் சாதாரண வாழ்வை வாழலாம் என சொல்வதை நம்பி அலெக்ஸ் டி லார்ஜ் இதற்கு வாலண்டியராக உடன்படுகிறான்.
                        (Alexander The large என்பதை பகடியாக Alexander De Large என வைத்தது டிபிகல் குப்ரிக் ஸ்டைல்.இதேபோல் முன்னர் வெளியான Dr.Strange love படத்தில் Jack The ripper என்ற பெயரை Jack.D.Ripper என்று வைத்திருப்பார்.)
தல.....

        இதற்கு சிறையில் ஆன்மீக வகுப்புகள் எடுக்கும் ஒருவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்.நல்லது கெட்டது என்ற Choice இல்லாமல் ஒருவரை செய்துவிடுவது நற்பண்புகளுக்கே எதிரானது.இத்தகைய மாற்றப்பட்ட "நல்லவர்களால்" சமூகத்துக்கு பெருமை சேராது என்கிறார்.ஆனால் அவரது பேச்சு காற்றில் கரைகிறது.

                          
அடியேனுக்கு பிடித்த காட்சி..அட்டகாசமான ஸ்லோமோஷன்  ஒளிப்பதிவில் பின்னி இருப்பார்கள்

 சில முக்கிய குறியீடுகள் பற்றிய எனது சிறு புரிதல்:


  •  அந்த அதிகமான பூனைகளுடன் வாழும் பெண்மணி(அலெக்ஸ் இவளை கொலை செய்வதால்தான் சிறைக்கு செல்கிறான்)யின் ரசனை கிட்டத்தட்ட அலெக்சின் ரசனையுடன் ஒத்துபோவதாகவே உள்ளது.இதற்கு ஆதாரமாக அந்த பெண்மணி தனது வீட்டு சுவற்றில் மாட்டி இருக்கும் காமம்/உடல் சார்ந்த படங்கள்.இதே போன்ற படங்களைத்தான் அலெக்சும் தனது வீட்டு அறையில் மாட்டி வைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.இதை  ஒருவகையான interpretation செய்யலாம்.அதற்கு முன் அந்த முதல் காட்சிக்கான விளக்கத்தை பார்த்துவிடுவது நல்லது.
  •  முதல் காட்சியில் காட்டப்படுவது என்ன?அலெக்சின் கண்களில் இருந்து கேமரா பின்னே நோக்கி செல்கிறது.அப்படி செல்ல செல்ல அந்த அறையின் பரிணாமங்களை புரிந்து கொள்ளலாம்.நிர்வாணமாக பல பெண் சிலைகள் பல்வேறு காமம் சார்ந்த போஸ்களில் ஆங்காங்கே இருக்கிறது.அது ஒரு milk bar என அடையாளம் காட்டபடுகிறது.ஆனால் அங்கு விற்கப்படுவது எந்த வகையான பால் என்பதை மறைமுகமாக சொல்கிறார்கள்.Milk plus என்று சொல்லபடுகிறது.அது ஒருவகையான காம வெறியை  தூண்டும் ஒருவித போதை வஸ்துவாகத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இப்போது இதை விளக்க வேறொரு விஷயத்தை விளக்கியாக வேண்டி உள்ளது.
  • ஏன் அங்கு போதையூட்டகூடிய பால் விற்க்கபடுகிறது?அரசு அதை தடுக்கவில்லையா?என்ற கேள்வி எழலாம்.ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி தனது ஆட்சிக்கு எந்தவித ஊறும் விளைந்துவிடக்கூடாது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதை நாம் அறிவோம்.அதுபோல தனது குடிமக்களை ஏதேனும் ஒருவித போதையிலேயே (குடி மட்டுமல்ல ..காமம்,வன்முறை,மதம்,சாதி..etc..etc.,)தொடர்ந்து இருக்க செய்துவிட்டால் தனது தவறுகள் கண்டுகொள்ளப்படாது என்பதை நம்புகிறது.அதன் விளைவாகவே அரசு இந்த போதை/காம வெறியை ஊட்டக்கூடிய வஸ்துவை விற்பதாக எடுத்து கொள்ளலாம்.
  • இப்போது சமூகம் முழுவதும் காமவெறியை தூண்டும்  மில்க் ப்ளஸ் புழக்கத்தில் உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவே அந்த பூனைகளை வைத்திருக்கும் பெண்மணியின் காமம் சார்ந்த ரசனைக்கும் அலெக்சின் அதே வகையான ரசனைக்கும் ஒத்துபோவதை நாம் உணரலாம்(முதல் புல்லட்டிர்கான புரிதலாக இதை எடுத்து கொள்ளலாம்).இதே போல அலெக்ஸ் ஹாஸ்பிடலில்  கோமாவில் இருந்து மீண்டு முனகும் பொது மிக நீண்ட நேரம் கழித்தே நர்ஸ் அவனை கவனிக்க வருகிறார்.காரணம் நர்ஸும் டாக்டரும் உடலுறவு செய்து கொண்டிருப்பதாக காட்டுவதையும் நாம் இங்கே சேர்த்து கொள்ளலாம்.
  • மேலும் அந்த பூனை பெண்மணி ஒரு போர்ஸலீன்  ஆண் குறி சிலையை வைத்துள்ளார்.அதே போல அலெக்ஸ் தனது வலது கண்ணில் பெண்கள் அணியும் Fake eyelashes அணிகிறான்.அதாவது காம எண்ணங்கள் அதிகமாக தூண்டப்பட்ட ஒரு சமூகமாக அது இருப்பதால் எதிர் பாலினத்தின் மீதான ஈடுபாட்டையே அலெக்ஸ் ஐ லேஷஸ் மூலமும் அந்த பெண்மணி ஆண் குறி சிலை மூலமும் காட்டுவதாக புரிந்து கொள்ளலாம்.

                                                   

      
  • அந்த எழுத்தாளர் தனது மனைவி இறந்த பின்னர் தனது பாதுகாப்புக்காக ஒரு பாடிகார்டை வைத்துகொள்கிறார்.எழுத்தாளர் தனது மனைவி அலெக்ஸ் மற்றும் குழுவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அந்த அதிர்ச்சி காரணமாக கால்கள் செயலிழந்து போய் வீல் சேரிலேயே நடமாடுகிறார்.அந்த வீல் சேரை அலேக்காக தூக்கி வேறொரு இடத்தில் அவரது பாடிகார்ட் வைக்கிறார்.அவ்வளவு வலுவானவராக அவர் உள்ளார்.ஆனால் ஏன் அவ்வளவு வலுவான கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட அவர் ஒரு சோடாபுட்டி கண்ணாடி போட்டிருப்பதாக காட்டியுள்ளார் குப்ரிக்? அவர் படிப்பில் சிறந்தவராக இருந்தும் எந்தவித வேலையும் கிடைக்காததால்(அப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் தான் இந்த முழு கதையும் நடப்பதாக காட்டபடுகிறது) தனது உடலை பராமரித்து பிழைப்புக்காக அடியாள் வேலை செய்கிறார் என்பதாக எடுத்துகொள்ளலாம்.
  • இந்த கதையின் பின்னணி நடக்கும் சமூகம் கம்யூனிச சோவியத் யூனியனை குறிக்கிறதா? என்ற கேள்விக்கு குப்ரிக் சொன்ன பதில் இல்லை..வலது இடது இரண்டிற்கும் வேறுபாடு இல்லை.இடதுசாரி எழுத்தாளர் அலெக்சை ரூமில் பூட்டி அதிகபட்ச ஒலியில் பீத்தோவனை ஒலிக்க வைத்து சித்ரவதை செய்து இன்புறுகிறார்.வலது சாரி ஆளும் அரசு அதிவன்முறை காட்சிகளை வலுகட்டாயமாக அலெக்சை பார்க்க செய்து அதன்மூலம் அவன் சித்ரவதைக்கு உள்ளாவதை வேடிக்கை பார்க்கிறது.இதில் இரண்டிற்கும் வேறுபாடு எங்கே உள்ளது?
  •  அந்த எழுத்தாளர் கதாபாத்திரம்(நடிகரை சொல்லவில்லை..நிஜத்தில் சொல்கிறேன்) Anthony Burgess தான்.அவரும் அவர் மனைவியும் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு வன்முறை கும்பல் அவளை சீரழிக்கிறது.அந்த அதிர்ச்சியில் இருந்து மீள ஆண்டனியின் மனைவி குடிபழகத்துக்கு அடிமையாகி கல்லீரல் செயலிழந்து இறந்து போகிறார்.அந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பையே ஆண்டனி நாவலாக எழுதினார்.
  • Clockwork Orange என்பதை எப்படி புரிந்து கொளவது??   Clockwork(சேர்த்தே சொல்லவேண்டும்) என்பது குறிப்பிட்ட செயல்களை கட்டளைகளை திரும்ப திரும்ப சலிப்பற்று எதிர் கேள்வி கேட்காமல் செய்வதை குறிக்கும்.அதாவது ஒரு எந்திரம்...ஏன் ஒரு கடிகாரம் என்றுகூட எடுத்துகொள்ளலாம்.கடிகாரம் தினம் தினம் ஒரே மாதிரியாகத்தான் நேரம் காட்டுகிறது.எனக்கு போர் அடிக்குது நான் ஓட மாட்டேன் என்று சொல்வதில்லை.Orange என்பது ஒரு உயிரி பொருளை/உயிரினத்தை(அதாவது மனிதனை)குறிக்கும். Clockwork Orange என்பது ஒரு உயிருள்ள மனிதனை எந்திரம் போல ஆக்குவது அதன் மூலம் சமூக குற்றங்களை இல்லாமல் செய்வது என்பதை குறிக்கும்.