Sunday, 20 November 2016

Crimes and misdemeanors(1989)

                  சமூகத்தில் குற்றம்  இழைப்பவர்கள் அது  எத்தகைய  குற்றமாக  இருந்தாலும் சரி.அந்தந்த  குற்றத்தின்  தீவிரத்திற்கு  தகுந்தாற்போல தண்டனை  வழங்கப்படும்.ஒவ்வொரு  நாட்டிற்கும்  தண்டனைகள்  சட்டதிட்டங்கள்  மாறலாம்.ஆனால்  தண்டனை என்பது உண்டு.
               ஆனால்  இந்த  தண்டனை என்பது உண்மையில் குற்றவாளியை சீராக்கவா இல்லை  பெயரளவு  தண்டனையா  என்பது  விவாதத்திற்குரியது. அந்த  குற்றவாளி  அதை  தண்டனையாக  பார்க்கும்வரையே  இந்த  தண்டனை முறைகளுக்கு வெற்றி எனக்கூறலாம்.பல  நேரங்களில் குற்றவாளி தனக்களிக்கப்பட்ட  தண்டனையையே ஜாலியாக எதார்த்தமாக எடுத்துக்கொண்டால் அந்த  தண்டிக்கும் முறையே கேள்விக்குள்ளாக்கப்படும்.
             மேலும் சட்ட ரீதியான  தண்டனையில் இருந்து தப்பித்த  பலரும்  மனசாட்சி உறுத்தாமல் ஜாலியாக  எவ்வித  மனபாரமும் இன்றி வாழ்வதையும்  காண்கிறோம்!
               யூதா ரோஸந்தால் என்ற  பிரபல  கண் மருத்துவர் மனைவிக்கு  தெரியாமல் ஒரு  விமான  பணிப்பெண்ணோடு(டொலோரஸ்) இரு வருடங்களாக  உறவில் உள்ளார் .ஒருகட்டத்தில்  டொலோரஸ்  இந்த  விஷயத்தை யூதாவின்  மனைவி  மிரியத்திடம் சொல்லிவிடுவேன்  என  மிரட்டுகிறாள்.
யூதா 

            யூதாவை  பொறுத்தளவில்  சிறுவயதில்  தீவிர  மத(யூதம்)  நம்பிக்கை உள்ளவராக  மத  சடங்குகளை  தீவிரமாக  பின்பற்றுபவராக வளர்க்கப்பட்டவர்.ஹீப்ரூவில் இறைவணக்கம்  செய்யும்  ஒரு  குடும்பமது.
             ஆனால் பெரியவனாக  வளர்ந்தபின்   ஒருகட்டத்தில் இறைநம்பிக்கையை இழக்கிறார்.முழுமையாக  அல்ல.அந்த  கங்கு உள்ளே மிகச்சிறியதாக  இருந்தாலும்  உயிர்ப்புடனேயே  இருக்கிறது.அதனால்தான்  தான்  சிறுவயதில்  வளர்ந்த  வீட்டினை அதன் முதலாளி  அனுமதியோடு  மீண்டும்  சுற்றிப்பார்க்கும்போது  அந்த  இறைநம்பிக்கை மீண்டும் விஸ்வரூபம்  எடுக்கிறது.அவரது  தந்தை  அடக்கடி  சொல்லும் "The eyes of God are on us always." என்ற  வாசகம்  மீண்டும் நினைவுக்கு வருகிறது!
யூதாவின் தந்தை 

                 டொலோரஸ் மிரியத்திடம்  உண்மையை  சொல்ல  அனுமதிக்கக்கூடாது  என்பதே  யூதாவின்  எண்ணம்.காரணம்  என்ன?
        -   மிரியம்  அதை  தாங்கிக்கொள்ள மாட்டாள்;-மிரியத்தை  டைவர்ஸ்  செய்துவிட்டு டொலோரசை மணக்க தன்னால்  முடியாது;-  மிரியத்துடனான  ரகசிய  உறவைப்பற்றி  மனைவியிடம் ஒப்புக்கொள்ளவும்  தைரியமில்லை!
            இதெல்லாம்  காரணமாக  யூதா  சொன்னாலும் அதைவிட  முக்கியமாக  அவன் நினைப்பது  அவனது  இமேஜை.சமூகத்தில்  அவனுக்கிருக்கும்  அந்த  மரியாதையில்  சிறுகீறல்  விழுவதையும்  அவன் அனுமதிக்க தயாரில்லை.
           மிரியத்தை ஆள்வைத்து கொன்றுவிடுகிறான் யூதா.அதன்பிறகு மூன்று  மாதங்கள் கடுமையான  குற்ற  உணர்வும்  மன உளைச்சலுமாக நகர்கிறது.Rabbi யாக  இருக்கும்  தனது  நோயாளிகளில்  ஒருவரான  Ben னிடம்  இதைப்பற்றி  மேம்போக்காக  விவாதிக்கிறான்.
          மூன்று  மாதங்கள்  கழிகிறது.அதன்பின்  அவனே  ஆச்சரியப்படும்  வகையில்  மிரியத்தை  கொன்ற   அந்த  குற்றஉணர்ச்சி  முற்றிலும் விலகிவிட்டதாக சொல்கிறான்.
          இங்கேதான்  வுடி ஆலனின் திறன்  வெளிப்படுகிறது.
"கடவுளின்  கண்கள்  தொடர்ந்து எனது  செயல்களை  கவனிக்கிறதுதானே?அப்போ  நான்  செய்த  கொலையையும் அவர்  கவனித்திருப்பார்தானே?இந்த  மூன்று  மாதங்களில் அதற்கான  தண்டனை  எதுவும் எனக்கு  கிடைக்கவில்லையே!அப்போது  கடவுள் இதையெல்லாம்  பார்த்தாலும்  பெரிதாக  எடுத்துக்கொள்வதில்லை என்றுதானே  அர்த்தம் !" என்கிறான்.

        இங்கே  மற்றொரு  காட்சியைப்பற்றியும்  சொல்லவேண்டும்.யூதா  தான்  சிறுவயதில்  வாழ்ந்த  வீட்டிற்கு  மீண்டும் செல்கிறான்.அங்கே டைனிங்  டேபிளில் அவன்,அவன்  சகோதரன்,தாய்  தந்தை  அத்தை எல்லாரும்  உள்ளார்கள்.அங்கே  ஒரு  விவாதம்.
          தீவிர  யூத நம்பிக்கையாளரான யூதாவின்  தந்தை "கடவுள்  எல்லாவற்றையும்  பார்த்துக்கொண்டிருக்கிறார்"  என்றுசொல்ல  அவரது  சகோதரி "ஆறு  மில்லியன்  யூதர்கள் நாஜிக்களால்  கொன்றொழிக்கப்பட்டார்கள்!அதையும்  கடவுள்  பார்த்துக்கொண்டுதானிருந்தார்"  என்றுசொல்ல "நீ  ஒரு cynic,nihilist.நீ  ரஷ்யாவில்  இருக்கவேண்டியவள்"  என்கிறார்  யூதாவின்  தந்தை 
 Do you not find human impulse is basically decent? என்ற கேள்விக்கு 
        It's basically nothing  என்கிறாள்  யூதாவின்  அத்தை.
                 "குற்றமிழைக்கும் ஒருவன் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பமுடிந்தால்,தார்மீக நெறிமுறைகளை பொருட்படுத்தாதவனாயிருந்தால் அவன்  சுதந்திர மனிதன்தான்" என்கிறாள் அவள் .


            இங்கே  மற்றுமொரு  ட்ராக்-  வுடி  ஆலன்  வரும்பகுதி.யூதாவின் செக்மண்டைப்போல  ரொம்ப   இருண்மையாக  அல்லாமல்  கொஞ்சம்  ஜாலியாக  இருந்தாலும்  அதுவும்  முடிவில் கிளிப் ஸ்டேர்ன்(வுடி) perennial சுமையோடு எழுந்து  செல்வதாக காட்டப்பட்டுள்ளது.
க்ளிப்

       வெறுமனே உயர்ந்த  கனவுகள் மட்டும்  ஒருவனை  உயர்த்தாது  என கிளிப்  விமர்சிக்கப்படுகிறார்.தரமான டாக்குமெண்டரி எடுப்பதே  அவர்  லட்சியம்(அந்த  ப்ரொபசர் வரும்  காட்சிகள்  அற்புதம்).அதனாலேயே  கையில்  பைசா  காசில்லை!சகலை  லெஸ்டர் தன்னைப்பற்றி  ஒரு டாக்குமெண்டரி எடுக்க கிளிப்பை நியமிக்கிறான்.ரொம்ப மேம்போக்கான  மொண்ணையான ஜிகினா ஆசாமி  லெஸ்டர்.லெஸ்டர் மேலுள்ள  கடுப்பில் கிளிப்  அந்தக்குறும்படத்தை காமெடியாக  எடிட்  செய்துவிடுகிறார்(இதான்  ஜிகிர்தண்டா  என  தனிப்படமாக  வந்தது!!) கிளிப்பை வெளியே  துரத்துகிறான் லெஸ்டர்.

           கிளிப் லெஸ்டரிடம்  பணியாற்றும்  ஹேலியை  விரும்புகிறார்.அவளும்  இவரை  விரும்புகிறாள்.மனைவியை விவாகரத்து  செய்து  ஹெலியை  மணமுடிக்க நினைக்கிறான்.ஆனால்  லெஸ்டர்  ஹேலியின்  மனத்தை  கவர்கிறான்.
             விடிய  விடிய  மலர்  கொடுத்து  ஹேலியை கவர்ந்ததாக  லெஸ்டர்  பெருமையடிக்கிறான்.இதை  காண  சகிக்காமல்(Remember great depth and smoldering sensuality  does not always win)  கிளிப் தனியே  அமர்ந்திருக்கும்போதுதான்  யூதாவுடனான  உரையாடல் நிகழ்கிறது.அது படத்தின் மிக முக்கிய காட்சி.
காலம்  செல்லச்செல்ல எந்த  ஒரு  நெருக்கடியும் கடந்துவிடும்  என்கிறான் யூதா.ஆனால்  அதற்குபதில் நாம்  செய்த  குற்றங்களும்,சில்லறை தவறுகளும் உண்டாக்கும் பாரத்தை காலம்  முழுக்க  சுமக்கவேண்டியிருக்கும் என  நினைக்கிறான் கிளிப்! 


படத்தின் ஒளிப்பதிவாளர் பெர்மானின் ஆஸ்தான  ஒளிப்பதிவாளரான
Sven Nykvist
 படத்தின்  இருண்மையை பார்ப்பவர்களுக்கும் உணர்த்திவிடும்  அற்புதமான  ஒளிப்பதிவு!

Monday, 7 November 2016

அப்பா(2016) மற்றும் மரியாதை (2008)

                          தமிழ்சினிமாவில்  அப்பா  கேரக்டர்னாலே முறுக்கு மீசை,  டிராக்டர்  செருப்பு, கைல  பெரிய்ய்ய  காப்பு  போட்டுக்கிட்டு  "எலே  பசுபதி"ன்னு  கர்ஜித்தவுடன் கக்கத்தில்  கையை அதக்கியபடி "சொல்லுங்கைய்யா" என்று  மகன்  வந்து  நிற்பது பலகாலமா  இருந்தது.நேரடியா  தந்தையிடம்  பேச  பயந்துகொண்டு  தாயோடுதான்  எல்லா பேச்சுவார்த்தை ,காதலிக்கும்  பெண்  பற்றிய  பகிர்வுகள் எல்லாம்.
             அவ்வப்போது  சில  விதிவிலக்குகள் இருந்தாலும்  தந்தை  கேரக்டரை சாதாரணமாக மென்மையாக  காட்டியது  விக்ரமன்(சேரன்  என்று  சொல்வேன்  என  நினைத்தீர்களா?அது  அப்புறம்).எதையுமே  நேர்மறையாக  அணுகும்  விக்ரமன்  படங்களில்    தந்தை மட்டுமல்லாமல்  பொதுவாக  ஆண்களே  மென்மையானவர்களாக  காட்டபட்டனர்.வானத்தைப்போல படத்தில்  "சாதா  சிகரெட்டு  குடிச்சா  உடம்புக்கு  ஆவாது.பஞ்சு  வெச்ச  சிகரெட்டு  குடிக்கசொல்லு" என  அண்ணன்(கேப்புடன்) மீனாவிடம்  பேசும்  காட்சி  பிரபலமானது.  சேரன்  ஆட்டோகிராப்  படத்தில்  பிள்ளையை  நண்பனாக  பார்க்கும்  தந்தை(ராஜேஷ்)காட்டினார்.பிறகு  தவமாய்  தவமிருந்து.போச்சு!அதன்பின்  பலநூறு படங்கள் தந்தை  கேரக்டரை மகன்/ளின் நண்பராய்   சித்தரித்து  பல  படங்கள்  வந்துவிட்டது.அது  ஒரு  டெம்ப்ளேட்ஆகவே  மாறிப்போனது!

அந்த  வரிசையில்  விக்ரமன்  இயக்கி 2008 ல்  வந்த  மரியாதை  படத்தின்  கதையை  பார்ப்போம்:

             கேப்புடனுக்கொரு  மகன்.அவர் நண்பர்  தலைவாசல்  விஜய்க்கு  ஒரு  மகன்.கேப்புடன்  ரொம்ப  லீனியன்ட்.நாளைக்கு  பரிட்சை.இன்னிக்கி  மகன்  படிக்காமல்  இன்றே  கடைசி சினிமாவை  நினைத்து படிக்காமல்  சும்மா  படிப்பது  போல  பாவ்லா  செய்கிறான்.காசு  குடுத்து  சினிமா  பார்த்துட்டு  வா  என  அனுப்புகிறார்.மனைவி(அம்பிகா)கடிந்துகொள்ள   "  சினிமா  பார்த்துட்டு  வரட்டும்.பார்த்துட்டோம்கிற திருப்தியில்  நல்லா படிப்பான்"  என்று  சொல்பவர்.மகனும்  அவ்வாறே படிக்கிறான்.                

                                தலைவாசல்  விஜய் நேர்மார்.புள்ள
எங்க  படிக்கணும்
எப்படி  படிக்கணும்..
படிச்சிட்டு  வேலைக்கு  எந்த நாட்டுக்கு  போகனும்
யாரை  கட்டிக்கணும் 
                                                  என்பதுவரை ப்ளான் செய்தவர். பிள்ளைகள்  வளர்கிறார்கள்.கேப்புடன்  மகன் (அதுவும்  கேப்புடன்) அக்ரி படிப்பில் கோல்ட் மெடல்.ஏதோ  பூக்கள்  ஆராய்ச்சி மையம் வைத்து  உலகப்புகழ் விருது பெறுகிறார்.தலைவாசல் விஜய் மகன் ஃபாரீன்  போறான்.ஆனா  தாய்  தந்தையைரை துரத்திவிட்டுடுறான்.

                    "நீ  புள்ளைய  சரியா வளக்கல..நான்தான்  புள்ளைய  நல்லா  வளக்குறேன்னு  கர்வமா  இருந்தேன்.ஆனா  இப்பத்தாம்பா  தெரியுது.நீதான் புள்ளைய  நல்லவனா  மனுசனா  வளர்த்திருக்க!"என்று  கண்ணீருடன்  சொல்கிறார்.


                      இதைத்தான்  சமுத்திரக்கனி  அப்பாவாக ரீமேக்  செய்துள்ளார்.
இதில்  வித்தியாசம்  என்னன்னா  தலைவாசல்  விஜய்  மகன்-  தம்பி  ராமைய்யா  மகன்  போல  சாவதில்லை.விக்ரமன்   சமுத்திரக்கனியைவிட டபுள்  பாஸிட்டிவ்வாக  சிந்திப்பவர்  என்பதால் அப்படி!(ஓவர் செண்டிமெண்ட்  உடும்புக்கு  ஆவது  உதயா-கும்மாங்கோ)

     
சமுத்திரக்கனியை   குறைசொல்ல  மாட்டேன்.அவர்  சூழ்நிலைக்கைதி.சமுத்திரக்கனி  என்றாலே சாக்பீஸ்  டஸ்டர்  சகிதம் நின்னாத்தான்  நம்மாளு  ஒத்துக்கிறான்.அவுரு  என்ன  பண்ணுவாரு!

Saturday, 5 November 2016

அப்ஸரா-சுஜாதா

My only certainty in life is that one day i shall die இது ராஜா,  மணியிடம்  சொன்னது.

                         யாராவது  கொஞ்சம்  அநாகரீகமாகவோ  எல்லைமீறியோ  நடந்துகொண்டால்/நடக்க்முற்பட்டால்  உடனே  நாம்  சொல்வது  "படிச்சவன்தான  நீ?".இது  எதுக்கு  சொல்றாங்கன்னு  எனக்கு  இன்றுவரை  விளங்கியதில்லை.இங்கே  கல்வி  என்றபேரில்  என்ன  சொல்லித்தரப்படுகிறது?மனனம்  செய்து பரிட்சையில்  வாந்தி  எடுப்பதைத்தாண்டி?அப்படிப்பட்ட  குமாஸ்தா  கல்வியை  படிச்சவன் ,படிக்காதவனிடமிருந்து எதில்  வேறுபடுவான்?
              ஒருவனின்  நடத்தையை ,எண்ண ஓட்டங்களை ,செயல்களை  தீர்மானிப்பது பெரும்பாலும்  அவன்  வளரும் சூழல்,நண்பர்கள்,பணிச்சூழல் ஆகியவைதான்.
            வாத்தியாரின்  இந்தக்கதை சாதாரணமாக  ஒன்றாக  தெரியலாம்.மனம்  பிரழ்ன்ற ஒருவன்  செய்யும்  தொடர்கொலைகள்.ஆனால்  அதில் வரும்  சிறு சிறு கதாபாத்திரங்கள்கூட  தனித்தன்மையோடு ஆசை  கனவுகளோடு இருப்பதாக வரும்.அதான்  வாத்தியார்  ஸ்டைல்.குற்றம்  செய்பவனின் பார்வையில்  திரைப்படங்கள்  எடுப்பது தமிழில்  இப்போது  பிரளமானதாக  இருக்கலாம்!  ஆனால்  அதை  கதைகளில் முன்பே  காட்டியவர் அவரே!

             உதாரணமாக  சரஸ்வதி பாயின்(பாய்  என்ன பாய்?-ராஜா)  இரண்டு  மகள்கள்.பத்து  வயதிருக்கும்.ராகினி  தாரிணி.அவர்கள்  செய்தித்தாளில் வந்துள்ள  புரியாத   தமிழ் படக்கதை(அவர்கள்  படிப்பது  பெங்களூரு கான்வென்டில் என்பதால்  தமிழ்  வாசிக்க முடியாது!)யை  தாயிடம்காட்டி  விளக்கம்  கேட்பதாக  ஒரு  இடம்  வரும்.
மேலும் ரிஷி கபூரின்  வெறியையாக  வரும்  பிரேமா(Rishi is fab yaar-பிரேமா),பார்க்கில்  உள்ள மன்னனின்  சிலையை  பார்த்து  "Hello King" சொல்லும்  அருணா  என அந்தளவு  நுட்பமாக கதாபாத்திரங்களின்  மன ஓட்டங்களை  ரசனைகளை  எண்ணங்களை  பதிவு  செய்திருப்பார்!

              அதேபோல  சகோதரிகளான  சகுந்தலா  அருணா.சகுந்தலா  கருப்பாக  ஒல்லியாக  அழகற்று இருக்கிறாள்.அருணாவோ அனைவரையும்  திரும்பி பார்க்கவைக்கும்  அழகு.சகுந்தலாவை  பெண்  பார்க்க  வந்த  பலர்  அருணாவை கேட்பதால் அவளை  லைப்ரரிக்கு  அனுப்புகிறாள்  அவர்களது  தாய்.அப்போதுதான்  பார்க்கில்  அவள்  கொல்லப்படுகிறாள்.
               இறந்துகொண்டிருக்கும் அருணாவின்  கடைசி  நிமிடங்கள் விவரிக்கப்படும்  இடம் மறக்க முடியாத  ஒன்று.
                அதற்குள்  தன்னை எது  எந்த  திசையில்  இருந்து  தாக்கியது  என  அருணாவுக்கு  தெரியவில்லை.அந்த  கூர்மையான  ஆயுதம் வலப்பக்கத் தோள் எழும்பருகில்  நுழைந்து  பற்பல  ரத்த  குழாய்களையும்  நரம்புகளையும்  துண்டித்து அங்குலக்கனக்கில்  உள்ளே  இறங்க  குபுக்  என்று  ரத்தம் போங்க அருணா  வாய்  திறந்து  காற்று  காற்று  என  திணறினாள்......அப்படியே  வாய்  திறந்துகொண்டு  விழுந்தாள்.அவள்  கைகள்  அவன்  சட்டையை  பற்றின,துவண்டன.அவன்  மேல்  சரிந்து  கீழே விழுந்தாள்.அவன்  பூட்ஸ்  தெரிந்தது.செகண்டுகள் ஜென்ம  ஜென்மங்களாக  விரிவடைந்தன-அருணாவுக்கு.ஏதோ  சொல்ல  வாயெடுக்க  ரத்தம்தான் வாயிலிருந்து   வந்தது.மெதுவாக  அந்த  சிவப்பு  ஓடை மண்ணில்  வழிவதையும்  வழிந்த  சுருக்கில் அது  உறிஞ்சப்படுவதையும் ஆர்வத்துடன்  பார்த்தாள்.தன் புடவை  மேல்  ரத்தத்தை  பார்த்தாள்..
.
.
பார்பராவின்  புத்தகத்திலிருந்து அந்த  செபாஸ்டியன்  என்ற  இளைஞன் ,'பார்த்துவா  லூசிந்தா!பார்த்துவா" என்று  அவளை  அணைத்து(வெட்கமாக இருந்தது) என் பெயர்  லூசிந்தா  இல்லை ,அருணா....அழைத்து  செல்ல  வந்தவன் அவளை  ஆக்கிரமித்துக்கொள்ள,இத்தனை  நாழிக்கு அவா  எல்லாரும்  பஜ்ஜி  சாப்பிட்டிடுண்டு  இருப்பா .பஜ்ஜிக்கு  உப்பு  போட்டேனா?நியாபகம் இல்லையே.புடவையில்  எவ்வளவு ரத்தம்?நாளைக்கு  ஸர்ஃபிலே போட்டு  ரெண்டு  மணி  நேரம்  ஊற வெச்சா  ரத்தக்கறை  எல்லாம்  போய்விடும் !எல்லாம்...எல்ல்ல்ல்ல்ல்...லாம். 
              தனக்கு  ஒழுக்கத்தை  போதித்த  தந்தை(கூன் போடாதே!பளார்) வீட்டு திண்ணையில்  மூணு  சீட்டு  விளையாடியதும்;  தாய்  வேறு  ஆண்களோடு  உறவு கொண்டு  அந்தக்காசில்  இவனை  படிக்கவைத்ததும்  ராஜாவின்  ஆழ்மனதில்  தனியா  வெறுப்பை ,சமூகத்தோடு  ஒன்ற மறுக்கும்  ஒரு  மனநிலையை கொடுத்துவிடுகிறது.அந்த  வெறியிலேயே  அவன்  படித்து  பெரிய  ப்ரோக்ராமர்  ஆகிறான்.

         இப்படி  சிறுவயது மனப்பிறழ்வை ஒருபுறம்   நல்வழிக்கு  பயன்படுத்தினாலும்  இன்னொருபுறம் அதே  அறிவை கொல்வதற்கும்   பயன்படுத்துகிறான்(நீட்ஷேவின் Thus Spake Zarathushtra புத்தகம் ராஜாவின்  ஆபீஸ்  ட்ராவில்  இருப்பதாக கதையில்  வருகிறது)
              மனப்பிறழ்வு  கொண்டவர்கள் கொலை  செய்யும்போது  முழு   பிரக்ஞையோடு கொல்திவதில்லை. 'கொல்வது   தாந்தான்'  என்ற  எண்ணமே  அவர்களுக்கு  இருப்பதில்லை.மேலும்  யாரை  கொல்லவேண்டும்  என்று அவர்களாக  தீர்மானிப்பதில்லை.They  leave it to chance!இதிலும்  அப்ஸரா  என்ற  கம்பெனி  நியான் பார்த்துத்தான்  அவனுக்கொரு  ஐடியா.அதன்படி  ப்ரோக்ராம்  எழுதுகிறான்.
                          அதாவது  கொலை  செய்வதும்  தானில்லை.யாரை  கொலை  செய்வது  என  தீர்மானிப்பதும் தானில்லை  என்ற  உணர்வே  அவர்களிடம் மிதமிஞ்சி  இருப்பதால் கொலை  செய்யும்போது   எவ்வித  பதட்டமும்  இருப்பதில்லை.கொன்றுவிட்டு  நிதானமாக  பார்க்கைவிட்டு  வெளியேற  முடிகிறது."இருட்டில் பந்துவிளையாட  வைக்காதீங்க  குழந்தையை"என்று  ஒரு  தாய்க்கு  அட்வைஸ்  பண்ணமுடிகிறது!அதே போல  கொன்றுவிட்டோமே என்ற குற்ற உணர்வும்  அவர்களுக்கு  இருப்பதில்லை!"ஏன்  விபத்தில் பலர்  இறக்கிறார்களே?அதுபோலத்தானே  இதுவும்?"-இது  அவர்கள்  வாதம்!
           முதலில்  சொன்னதுபோல கதை  என்பது  வழக்கமான  ஒன்றுதான்.ஆனால்  அதை  சொல்லும்விதம்,அதில்தான்  இக்கதை மிளிர்கிறது.
            

Tuesday, 1 November 2016

The Man who wasn't There(2001)

                         கோயன் சகோதரர்கள்(Coen Brothers)  படங்கள்  பலவற்றில்  ஒரு  ஒற்றுமையை  காண  முடியும்.Hopeless ஆக  வாழ்வின்  எல்லைக்கே  தள்ளப்பட்ட  ஒரு  ஆண்.அந்த புதைகுழியில்  இருந்து  வெளியே வர  அவன்  எடுக்கும்  முயற்சி.அதனால்  ஏற்படும்  தொடர்  விரும்பத்தகாத  நிகழ்வுகள்  கடைசியில்  அவனுக்கே  பாதகமாய்  முடிவது.சாதரணமாக  நம்  வாழ்விலேயே  நாம்  ஏதோ  ஒரு  விஷயத்தை  செய்யப்போய்  அது  வேறு  வகையாக  (சில  நேரங்களில்  நமக்கு  எதிராகவே)முடிவதை கையறு  நிலையில்  செய்வதறியாது  நாம்  பார்த்துக்கொண்டிருந்திருப்போம்.அத்தகைய விஷயத்தைத்தான்  கோயன்  சகோதரர்கள்  ஒருமாதிரி  கருப்பு  நகைச்சுவையாக  சொல்லிவிடுவார்கள்.
               இந்தப்படத்திலும்  அப்படியான  ஒரு  ஆளின்  வாழ்க்கைதான்  சொல்லப்படுகிறது.1940 களின்  பிற்பகுதியில்  கதை  நடப்பதாக  காட்டப்படுகிறது.அந்த  காலகட்டத்தில்  வந்த  நுவா(Noir) படங்களின்  பாணியிலேயே  இப்படத்தின்  ஒளிப்பதிவும்  செய்யப்பட்டுள்ளது.
 

                 ஒரு  சலூனில்   வேலை  செய்கிறான் எட்.அதிகம்  பேச விரும்பாதவன்.அதனால்  ஈர்க்கப்பட்டே  டோரிஸ் அவனை  திருமணம்  செய்துகொள்ள  விரும்புகிறாள்."என்னை  இன்னும்  நீ  புரிந்துகொள்ள வேண்டாமா?"  என்று  எட்  கேட்க  "ஏன்  இதற்குமேல் உன்னைப்பற்றி  சொல்ல  நல்ல  விசயங்கள்  உள்ளனவா?"  என்று  கேட்கிறாள்.திருமணம்  செய்தபிறகும்  மணவாழ்க்கை  இனிக்கவில்லை.

           பத்தாண்டு  மண  வாழ்வில்  ஒன்பதாண்டுகள்  உடலுறவு  கொள்ளாமல்  ஏதோ  கடமைக்கு  சேர்ந்து வாழ்கின்றனர்.டோரிஸ்  தான்  வேலை  பார்க்கும்   கடை  முதலாளி  டேவ்  உடன் தகாத  உறவு  வைத்துள்ளாள்.
        தனது  கடைக்கு  வரும்  ஒரு  கஸ்டமர்(டோல்லிவர்) டிரை க்ளீனிங்  பிசினஸ்  பற்றி  சொல்ல  எட்  டேவை மறைமுகமாக  பிளாக்மெயில்  செய்து   10000$  வாங்கி டோல்லிவரிடம்  தருகிறான்.அவன் எஸ்கேப்.டேவ்   அவனை  அடித்துக்கொன்று எட்'தான்  தன்னை  மிரட்டியது  என்று  தெரிந்துகொண்டு  அவனை  தனியே  வரசொல்லி  கொல்ல  முயற்சிக்கிறான்.கடைசியில்  எட்  டேவை  கொன்றுவிடுகிறான்.
டோல்லிவர்

            இந்த  காட்சி பற்றி  ஒரு  விஷயம்  சொல்ல வேண்டும்.வன்முறை  கொலைகள்  போன்றவை  சமூகத்தில்  எப்படி  மிக  எளிமையாக  கடந்துபோய்விடக்கூடிய  ஒன்றாக  மாறிவிட்டது  என்பதை  கோயன்  படங்களில்  ஒரு  பகடியாகவே  காட்டியிருப்பார்கள்.
             Blood Simple(1980) படத்திலும்  மனைவியின்  கள்ளக்காதலனை  கொல்ல  கணவன்   ஒரு  டிடெக்டிவ்வை  அனுப்புகிறான்.அவன்  double cross செய்து  கணவனையே  கொன்றுவிடுகிறான்.அந்தக்காட்சி  அப்படியே  சுட்டுவிட்டு  அவன்  எழுந்துபோய்விடுவதாக  முடியாது.மிக  மெதுவாக  நிறுத்தி  நிதானமாக  கொலை  நிகழ்வதாகவும்  சுடப்பட்டவுடன்  ரத்தம்  மிக  மிக  மெதுவாக  உடலில்  இருந்து  வழிதல்,மிக  மெதுவாக  சுழலும் அந்த   சீலிங்  ஃபேன் சத்தம்  தவிர  வேறு  சத்தமோ  பின்னணி  இசையோ  இருக்காது.அதுதான்  கோயன்  ஸ்டைல்!
            இதிலும்  டேவ் இறக்கும்  காட்சி  அவ்வாறே  மிக  மெதுவாக  காட்டப்படும்..அந்தக்கொலைக்காவும்  போலி  கணக்கு  எழுதியதற்காகவும்  எட்டின்  மனைவி  கைது  செய்யப்படுகிறாள்.அவள்  சிறையிலேயே  தூக்குமாட்டி  தற்கொலை  செய்துவிடுகிறாள்!மொத்தமாக  உடைகிறான்  எட்.
             எவ்வித  சுவாரஸ்யமும்  முன்னேற்றமும்  இல்லாத  ஒரு  வாழ்வில் எட்  எடுத்த  அந்த  தொழில்  முயற்சியும் (டிரை க்ளீனிங்)  இப்படி கேலிக்கூத்தாக   முடிகிறது .
            எவ்வித  சுவாரஸ்யமற்ற  ஒரு  வாழ்வில்  நாம்  அனைவருமே  ஏதோ  ஒரு  விதமான  escapism  த்தை  நாடுகிறோம்.சிலருக்கு  சினிமா..சிலருக்கு  இசை..சிலருக்கு  புத்தகங்கள்..

                     தனது  சலூனுக்கு  வாடிக்கையாக  வரும்  அபண்டாஸ்ன்  பதின்ம  வயது  மகள் ரேச்சல்  பியானோ  வாசிப்பதை  ரசிப்பதில்  ஒருவித  escapism ஆக   உணர்கிறான் எட் .
             தனது  வாழ்க்கை  கானல்  நீராகிப்போன  நிலையில்  அபண்டாசின்  மகள்  ரேச்சல் -ன் இசைத் திறமையை  சரியான  வகையில்  ஊக்குவித்தால்  அவள்  மிகப்பெரும்  உயரத்தை  அடைவாள்.அவளது  மேனேஜராக  பணியாற்றலாம்  என்று  அடுத்த  முயற்சியை  எடுக்கிறான்.அதுவும்  வேறுமாதிரி  கார்  விபத்தில்  முடிகிறது.மருத்துவமனையில்  இருப்பவனை  போலீஸ்  கைது  செய்கிறது.டேவ்வை  கொலை  செய்ததற்காக  அல்ல!டோல்லிவரை  கொலை  செய்ததற்காக!
ரேச்சல் 

             இடையில்  டேவ்'ன்   மனைவி  வேற்றுகிரக  விண்கலத்தை  தானும்  டேவும்  பார்த்ததை  எட்டிடம்  சொல்கிறாள்.நம்ப  மறுக்கிறான்.ஆனால்  அவன்  சிறையில்  இருக்கும்போது  சிறைக்கதவுகள்  தானாக திறந்துகொள்கிறது.வானில்  விண்கலன்! (இது சரியா  என  தெரியவில்லை.ஆனால்  இங்கே  எனக்கு  தோன்றியது  David Lych meets Coen Brothers!)


                வாழ விருப்பமே  இல்லாதவன்/வாழ்வில்  அனைத்துவித  பிடிப்புகளும்  கைவிட்டநிலையில்   இருப்பவன்   சிறையில்  இருந்து தப்பிக்கவா  போகிறான்?மீண்டும்  தனது  சிறை  அறைக்கே  வந்துவிடுகிறான்.மின்சார  சேரில்  மரண  தண்டனை  நிறைவேற்றப்படுகிறது!

         அப்போது  கூட  ஒருவித  கருப்பு  நகைச்சுவையாக  எட்  மின்சார  சேரில்  உட்கார்ந்துகொண்டு  சுற்றிலும்  பார்க்கிறான்.பார்வையாளர்கள்  ஒவ்வொரு  விதமான  சிகை  அலங்காரமும்  க்ளோசப்பில்  காட்டப்படுகிறது.வாழும்போது  புரிந்துகொள்ளவே  முடியாத  ஒரு  வாழ்க்கை  மரணத்திற்கு  பிறகாவது  புரியும்  என்று  நம்புகிறான்!
              படத்தின்  மிகப்பெரிய பலம்  Billy Bob Thornton .அதிகம்  பேசாத,  வாழ்வில்  எந்த  ஒரு  விஷயத்திலும்  பெரிதாக  ஈடுபாடு இல்லாத,எந்நேரமும்  ஒரு  வெற்றுப்பார்வை  பார்க்கிற  எட்  கேரக்டரை  அப்படியே  கண்முன்  கொண்டுவருகிறார்.அட்டகாசம்!
எட்

கோயன்  படங்களில்  வழக்கமாக  நடிக்கும்  Frances McDormand (ஜோயல்  கோயனின்  மனைவி) ம்  நன்றாக  நடித்துள்ளார்.டுபாக்கூர்  வக்கீலாக  வந்து  காசு  கறக்கும்  Tony Shalhoub ம் கேரக்டரில்  சரியாக  பொருந்துகிறார்.