மிஸ்கினின்
யுத்தம் செய் படத்தை இரண்டாவது முறை பார்த்ததால் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தை கண்டுகொண்டேன் என்றே சொல்லவேண்டும்.பொதுவாகவே எந்த சினிமா பார்த்தாலும் அதில்வரும் கதாபாத்திரங்கள் புத்தகங்கள் பற்றியோ எழுத்தார்களை பற்றியோ பேசும்போது அதை குறிப்பெடுத்து கொள்வதுண்டு.உதாரணமாக
காதல் வைரஸ் படத்தில் நாயகி
"Somerset Maugham -ன் எழுத்து பிடிக்கும்" என்பார்.
கஜினி படத்தில் அஸின் மரியோ புட்சோவின்
காட்ஃபாதர் படித்து(படிப்பது போல நடித்து??) கொண்டிருப்பார்.
மந்திரப்புன்னகை படத்தில் நாயகனின் அறை மேஜையில்
எஸ்.ரா எழுதிய விழித்திருப்பவனின் இரவு புத்தகம் இருக்கும்.இது போல பல உதாரணங்களை சொல்ல முடியும்.இந்த தேடலுக்கான காரணம் நல்ல புத்தகங்களை தவறவிட்டுவிட கூடாது(அதற்காக சினிமாக்களில் காட்டப்படும் எல்லா புத்தகங்களும் அற்புதமானவை என்று சொல்ல மாட்டேன்.சில இயக்குனர்கள் சும்மா நாயகி கையில் புக்கு இருக்கணும் என்பதற்காக மூர் மார்கெட்டில் வாங்கிய ஏதேனும் சுய சொறிதல் புக்கை கையில் கொடுத்துவிடும் அபத்தங்களும் இதில் உள்ளன).அத்தகைய புத்தகங்களுக்கான சுய தேடல் என்பது தனியே இருந்தாலும் வேறொரு மனிதரின் கண்ணோட்டத்தில் சில புத்தகங்கள் கண்ணில் படும் போது அதைத்தவரவிட மனமில்லை.
அப்படிப்பட்ட தேடலில் கண்ணில் பட்டதுதான் Viktor.E.Frankl எழுதிய Man's Search For Meaning என்ற புத்தகம்.யுத்தம் செய் க்ளைமாக்ஸில் ஒய்.ஜி.மகேந்திரன் கதாபாத்திரத்தின் மகன் நிஷாந்த்துக்கு(அந்த நிஷாந்த் கதாபாத்திரம் மிகப்பெரிய மன அதிர்ச்சியில் இருக்கும்) சேரன் இந்த புத்தகத்தை வழங்குவதாக காட்சி வரும்.அங்கே ப்ரீஸ் செய்து கண்டுபிடித்ததே இப்புத்தகம்.இதை புத்தகம் என்பதைவிட ஒரு ஆசான் என்றே சொல்வேன்.
பொதுவாகவே வாழ்வில் சோதனைகள் பிரச்சனைகள் வரும்போது "ஐயோ கடவுளே நீ இருக்கியா இல்லையா" என்று ஆண்டவனுக்கே ஜெர்க் கொடுக்கும் சோக பட்சிகள் இவ்வுலகில் பலப்பல... சுய தேடல், சுய பரிசோதனை போன்றவைகளின் மூலம் இந்த சிறுபிள்ளைத்தனமான(கடவுளை வணங்குதல் சிறுபிள்ளைத்தனம் இல்லை.இதைக்கொடு, அதைக்கொடு என்று கேட்பதை சி.பி.தனம் என்கிறேன்) எண்ணங்களில் இருந்து வெளிவர முடியும் .ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயமாக இல்லை என்பது என் அனுபவம்.
இப்புத்தக ஆசிரியர் ஒரு சைக்கியாட்ரிஸ்ட். யூதர் என்பதால் நாட்ஸி கேம்பில் அடைக்கப்படுகிறார்.அங்கே அவர் கண்ட விஷயங்கள் தான் சுயமாக உணர்ந்த அனுபவங்கள் போன்றவைகளை வெறும் உணர்ச்சிவயப்பட்ட நோக்கில் அல்லாமல் சிந்தனை நோக்கில் அலசி ஆராய்ந்து பல்வேறு விஷயங்களை சொல்கிறார்.
சாதாரணமாக வூட்ல குழாய் அடைப்பு என்றாலே தற்கொலை செய்துகொள்ளும் வீராதி வீரர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.இதில் வாழ்வில் வரும் கடுமையான சோதனைகள் என்பது வாழ்க்கை நம்மை சோதிக்கிறது என்பதற்கான அடையாளம்.சோதனைகள் பிரச்சனைகள் போன்றவற்றின் மூல காரணத்தை நாம் ஆராய வேண்டும்.அதை நம்மால் தீர்க்க முடியும்/நீக்க முடியும் என்றால் அதை கண்டிப்பாக முயன்று செய்ய வேண்டும்.அப்படி எதுவும் செய்ய முடியாது.பிரச்சனையின் மூல காரணத்தை எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது அந்த பிரச்னையை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
உதாரணம் 1: உங்களுக்கு தொடர் தலைவலி வருகிறது என்று வைத்துகொள்வோம்.நாள் தவறாமல் வந்துவிடுகிறது.நீங்கள் என்ன செய்ய வேண்டும்?."வாழ்க்கை என்னை சோதிக்கிறது.நான் அதை ஏற்றுகொள்கிறேன்" என்று சொல்லகூடாது என்கிறார் ஆசிரியர்.அப்படி சொல்வது Masochism.அப்படி அல்லாமல் அந்த தலைவலிக்கு என்ன காரணம் என்பதை தகுந்த மருத்துவ சோதனை மூலம் ஆராய்ந்து கண் கண்ணாடி அணிய வேண்டுமென்றால் அணிய வேண்டும்.அல்லது வேறு பிரச்சனை என்றால் அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
உதாரணம் 2: ஒருவருக்கு தலையில் டியூமர்.கடுமையான தலைவலியால் துடிக்கிறார்.மருத்துவ சோதனைக்கு பிறகு இதை ஒன்றும் செய்ய முடியாது.இவர் வாழப்போவது கொஞ்ச நாள்.ஆனால் மருந்துகள் மூலம் வலியை மட்டுப்படுத்தலாம் என்றால் இப்போது வேறு வழியில்லை.வாழ்வின் சோதனையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
அதாவது வாழ்வில் தீர்க்க முடிந்த பிரச்சனைகளை முயன்று தீர்க்க வேண்டும்.தீர்க்க முடியாத பிரச்சனைகள், சோதனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடுத்து வாழ்க்கை நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை சிந்திக்க வேண்டும்.ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணிநேரமும் வாழ்க்கை நமக்கு சவால்களை விடுத்துக்கொண்டே இருக்கிறது.அய்யய்யோ!!! என்று ஓடாமல் அவைகளை நமது பொறுப்புகளாக ஏற்றுகொள்ள வேண்டும்.
மேலும் மனிதனுக்கு என்று சில எல்லைகளை மருத்துவம் நிர்ணயித்துள்ளது.இத்தனை நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் செத்து விடுவான்.இவ்வளவு நீர் ஒவ்வொரு நாளும் தேவை.தினம் பல் விளக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த concetration camp ல் எப்படி பொய்யாகி போனது என்பதை விளக்குகிறார்.உதாரணமாக "நாள்தோறும் நான் பல் துலக்கும் போது இருந்ததைவிட இப்போது பல்லே துலக்காமல் இருக்கும் போது ஈறுகள் இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறது" என்கிறார்.அதற்காக பல்லே துலக்க கூடாது என்று அர்த்தம் செய்துகொள்ள கூடாது.மனிதனுக்கு இதுதான் எல்லை என்று செய்யப்பட்ட நிர்ணயங்களின் போலித்தன்மையை விளக்கவே இந்த உதாரணத்தை சொல்கிறார் ஆசிரியர்.மிகச்சிறிய சத்தம் கேட்டாலும் தூக்கத்தில் இருந்து எழுந்துவிடும் ஒரு நபர் பல்வேறு இரைச்சல்களுக்கிடையில் நிம்மதியாக தூங்கியதை அவர் மேற்கோள் காட்டுகிறார்.
இவை சொல்பவை ஒரு விஷயத்தை.மனித மனத்தின் எல்லைகளை வரையறுப்பது என்பது இயலாத காரியம்.மேலே சொன்ன உதாரணங்கள் உடல் சம்மந்தப்பட்டவைதானே?என்று கேட்கலாம்.ஆனால் உடல் மனம் என்பது பிண்ணி பிணையப்பட்ட ஒரு விஷயம்.இரண்டையும் பிரித்து பார்ப்பது என்பது முட்டாள்தனம்.இது என் கருத்து
மேலும் concentration camp ல் இருந்து வெளிவந்த மனிதர்கள் பிறகு பொது வெளியில் நடந்துகொள்ளும் விதம் பற்றி சொல்கிறார் ஆசிரியர்.இவரோடு கேம்பில் இருந்த ஒரு நண்பர் பூங்காவில் நடக்கும் போது செடிகளை சேதாரப்படுத்துதல், பொது சொத்துக்களை அடித்து உடைத்தல் போன்றவற்றை செய்து கொண்டிருந்ததாகவும்
"ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று இவர் கேட்டபோது "என்னை கேம்பில் கொடுமைப்படுத்திய இந்த சமூகத்தை இப்படித்தான் பழிவாங்க வேண்டும்" என்பதுபோல (சாரத்தை மட்டும் சொல்கிறேன்) சொல்கிறார்.
அதற்கு ஆசிரியர் "பிறர் உங்களுக்கு தீமை செய்தார், அல்லது சமூகம் உங்களுக்கு தீங்கு செய்தது என்பதற்காக நீங்களும் அதையே திருப்பி செய்ய வேண்டியதில்லை.அது தவறான விஷயம்" என்கிறார்."சுதந்திரம் என்பது மட்டும் முக்கியமில்லை.அதைவிட முக்கியம் பொறுப்புணர்ச்சி.சுதந்திர தேவிக்கு சிலை உள்ளதுபோல பொறுப்புணர்ச்சியை உணர்த்தும் சிலை ஒன்றையும் அமெரிக்காவில் நிறுவ வேண்டும்.அதுதான் உண்மையான சமநிலை." என்கிறார்.
மேலும் pyschiatry/psychology போன்றவை மேற்க்கத்திய சிந்தனைகளின் அடிப்படையில் உருவானவை.அதாவது வாழ்வில் மகிழ்ச்சியை மட்டும் தேடு..துன்பம் வந்தால் அது ஏதோ தெய்வ குத்தம் என்பது போலவும் துன்பப்படுபவன் அதை ஏதோ அவமானகரமான விஷயமாக கருத வேண்டும் என்பது போன்ற சிந்தனைகளை கொண்டவை.அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டதே logotherapy.கண்ணீர் சிந்துதல் என்பதும் ஒருவன் துன்பத்தை தாண்டி வந்திருக்கிறான் என்பதிலும் எவ்வித அவமானமும் இல்லை.மாறாக அவனின் துயரம் தாங்கும் வலிமையை பாராட்ட வேண்டும்..
புத்தகத்தில் சில அற்புதமான வரிகள்:
- “Those who have a 'why' to live, can bear with almost any 'how'.”
- “When we are no longer able to change a situation, we are challenged to change ourselves.”
- But there was no need to be ashamed of tears, for tears bore witness
that a man had the greatest of courage, the courage to suffer
இதுபோல பல அற்புதமான விஷயங்களை இப்புத்தகம் சொல்கிறது.கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.குறிப்பாக வளர் இளம் பருவத்தினர் இதை வாசிக்க வேண்டும்.இதை பள்ளியில் பாடமாக கூட வைக்கலாம்.இதை அறிமுகம் செய்த இயக்குனர் மிஸ்கினுக்கு நன்றி.
"இப்புத்தகத்தை திரைப்படத்தில் காட்டியது திணிப்பு".."இது வெறும் intellectual muscle flexing" என்கிற ரீதியில் சில ஒலக விமர்சகர்கள் சொல்லலாம்.என்னை பொறுத்தளவில் மிஸ்கின் தனது ஒவ்வொரு படத்திலும் இது போல பல புத்தகங்களை அறிமுக செய்ய வேண்டும்.ஒலக விமர்சகர்கள் திண்ணைக்கிழவி போல எதையாவது சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்.
ஏனய்யா ஒலக விமர்சகர்களே நீங்கள் இதுபோல ஏதேனும் உருப்படியாக புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்ததுண்டா?