மிஸ்கின் இயக்கத்தில் விஷால்
என்றவுடன் படத்தை பார்க்க கொஞ்சம் தயக்கமாக, ஏன் பயமாகவே இருந்தது.காரணம் தனுசு
படங்களை பார்ப்பதை பல வருடங்கள் முன்பு நிப்பாட்டியதைப்போல விசால் படங்களை
தவிர்ப்பது உசுருக்கு சேதாரமில்லாம இருக்கும்(குறிப்பாக கழுத்தை ஒரு பக்கமாக
வெட்டி வெட்டி பன்ச் வசனம் பேசும் அந்தக்கொடுமை!) என்பதால்!
அதையும் மீறி இப்படத்தை பார்க்க ஒரே
காரணம் மிஸ்கின்.மிஸ்கினோடு ரசனை/மனநிலை ரீதியில் உடன்படும் புள்ளிகள் பிற தமிழ் இயக்குனர்களைக்காட்டிலும்
அதிகம் (பித்தநிலை-புத்தகங்கள்-கால்கள் -வயலின்,வயலின்-வயலின்-கதாபாத்திரங்களின்
idiosyncrasies). மேலும் தனது படங்கள் மூலம் அட்வைஸ் எல்லாம் பண்ணாமல், க்ளீஷே
தருணங்கள் வரும் நேரத்தில் பார்வையாளனே எதிர்பாராத விதமாக கதாபாத்திரங்கள்
நடந்துகொள்ளுதல்(இதைப்பற்றி பிற்பகுதியில் சொல்கிறேன்),புதுமையான சண்டைக்காட்சிகள்(பிசாசு
சப்வே,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ரயில்வே ஸ்டேஷன்) என்று அவரின் படங்கள் எனது அபிமான தமிழ்ப்படங்கள் பட்டியலில் தவறாது இடம்பெறும்.
ஆர்தர் கொனன் டாயில் படைத்த ஷெர்லாக்-வாட்சன்
கதாபாத்திரங்களை பின்பற்றி தமிழிலேயே பல இருநபர்-டீம் கதாபாத்திரங்கள் வந்துவிட்டன.கணேஷ்-வசந்த்,விவேக்-விஷ்ணு
என்று குறிப்பிடலாம்.ஒரு கேரக்டர் அசாத்திய புத்திசாலித்தனமாகவும் இன்னொரு
கேரக்டர்(side kick) கொஞ்சம் மந்தமாக ,சில வேளைகளில் ஜொள்ளு பார்டிகளாகவும்(வசந்த்&விஷ்ணு),இக்கட்டான
நேரத்தில் உதவுபவர்களாகவும் படைக்கப்பட்டதுண்டு.
இதில் துப்பறிவாளன் கணியன்
பூங்குன்றன் ஷெர்லாக் ஹோம்ஸின் தன்மைகளின் சாயல் கொண்டவர்.(படத்தின் கதையே இரவில் கொல்லப்பட்ட நாயில் இருந்துதான் துவங்குகிறது.The curious incident of the dog in the nighttime!) வீட்டிற்குள் யார்
வந்திருக்கிறார்?அவர் எப்படிப்பட்டவர்?எதற்காக வந்திருக்கிறார்?தொலைந்து போன கணவன்
மாலைக்குள் வருவான் என்றெல்லாம் விசாரிக்காமலேயே கண்டறியும் வல்லமை கொண்டவர்.ஆனால்
ஷெர்லாக் –கணியன் வேறுபாடும் மிகமுக்கிய புள்ளி ஒன்று உண்டு.
அன்பு கருணை இரக்கம் எதுவுமில்லாத பாலவனைமான உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு
துளி மனிதம் மீதம் இருப்பதை காட்டுவது மிஸ்கினின் ட்ரேட்மார்க் பாணி. ஷெர்லாக் ஒரு sociopath.ஆனால் இதில்
மேற்சொன்ன அந்த ஒரு துளி மனிதம் நிரம்பிய மனிதராகவே கணியன் உருவாக்கப்பட்டுள்ளார் .குறிப்பாக
அனு இம்மானுவேல் கதாபாத்திரம் சம்மந்தப்பட்ட காட்சிகளில் கணியன்
உணர்ச்சிவயப்படக்கூடியவராக;இரக்க உணர்வு கொண்டவராக;பிறர் நலனில்(அதாவது வழக்கு
சாராத நபர்கள்) அக்கறை செலுத்துபவராக காட்டப்படுகிறார்.ஆனால் ஷெர்லாக்
இப்படிப்பட்டவர் அல்ல!சொந்த அண்ணனையே கண்டுக்காம போகக்கூடியவர்.
[Spoiler Alert]
ஆனால் இந்த கணியன் கேரக்டரின் அந்த துப்பறியும் தன்மை எந்நேரமும் இருக்கா?
என்றால் இல்லை என்பதே பதில்.உதாரணமாக அபிஷேக்&ஷாஜி வீட்டுக்குள்
வரும்போது விசால் கண்ணைக்கட்டிக்கொண்டிருக்கும் நிலையிலேயே யார் யார்
வந்துள்ளார்கள் என்பதை சொல்கிறார்.ஆனால் ஹோட்டல் அறையில் ஜான் விஜய்
கொல்லப்பட்டதும் ஃபயர் எக்ஸிட் வழியே கொலையாளியை பிடிக்க செல்பவர் ஒரு அறை வாசலில்
ஆண்ட்ரியா நிற்பதை பார்க்காமலேயே வேறு திசையில் செல்வதாக காட்டியது
கதாபாத்திரத்தின் திறன் consistent ஆக தொடராமல் போன உணர்வை கொடுக்கிறது.
நான் கவனித்த –ஒலக விமர்சகர்கள் சிலர்
வைத்த குற்றச்சாட்டு- எல்லா கதாபாத்திரங்களும் மிஸ்கின் போலவே நடிப்பதாக குறை
கூறியிருந்தார்கள்.இதற்கு முன்னர் வந்த மிஸ்கின் படங்களில்(பிசாசில் கொஞ்சம்
ஜாஸ்தி) இருந்ததை நான் மறுக்கவில்லை.ஆனால் இப்படத்தில் அப்படி அதிகமாக
துருத்திக்கொண்டு தெரியவில்லை என்பதே என் எண்ணம்.விசால் தன் பாணியில் நடிக்காமல் மிஸ்கின்
பாணியில் நடித்தது பெரிய ஆறுதல்.இல்லாட்டி
தனது ட்ரேட்மார்க்-நானும்-மதுரக்காரன்தாண்டா அங்க சேஷ்டைகள்
செய்திருப்பார்.ஆனால் பிற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அவர்கள் சொந்த பாணியில்தான் நடித்துள்ளார்கள்.உம்.,பிரசன்னா.
இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம்
விசால் அனுவிடம் எரிந்து விழுவது.இது அவன் இவன் படத்தில் ஆர்யா, மது
ஷாலினியை மிரட்டி தலையில் குட்டி பாலத்தில் குட்டிக்கரணம் போடவைத்த காட்சியை
நினைவுபடுத்தியது! “பாலாத்தனமாக” இருந்தது.பாலா க்ளீஷே வட்டத்தில் மீளமுடியாது
சிக்கிக்கொண்டதை கண்டபின்னரும அவரை பாலோ பண்ண நினைக்கலாமா
மிஸ்கின்?
அப்புறம் மிஸ்கின்
படங்களுக்கே உரிய ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தனித்தன்மை.ஜான் விஜய் கேரக்டரின் fetishism
சென்சார் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அரசல் புரசலாக காட்டப்படுகிறது (ஆண்ட்ரியா
வாஷ் ரூமில் இருக்கும்போது வெளியில் நின்றபடி “கேட்பது”),வினய் கேரக்டர் ஒவ்வொரு
மரணம் நிகழும் முன்போ-பின்போ காபி குடிப்பது,தான் இறக்கும் வேளையிலும் நடைபிணமாக
இருக்கும் தனது மனைவியை தலையணையால் அழுத்தி கொல்லும் பாக்யராஜ் என்று கதாபாத்திரங்கள் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை
பாராட்டலாம்.
[Spoiler] அப்புறம் இரண்டாம் பத்தியில் சொன்ன “க்ளீஷே தருணங்கள் வரும் நேரத்தில் பார்வையாளனே எதிர்பாராத விதமாக
கதாபாத்திரங்கள் நடந்துகொள்ளுதல்”----- இதில் அப்படி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆண்ட்ரியாவும் அந்த
மொட்டையும் போலீசால் சுற்றி வளைக்கப்பட்டதும் அந்த மொட்டை முட்டி போட்டுக்கொண்டு
தனது டி ஷர்டை கழட்டிவிட்டு ஹராகிரி(Harakiri) செய்துகொள்வது,முதல்
காட்சியிலேயே இருவர் மீது விழும் “மின்னல்”.
படத்தின் இரண்டாம் பாதியில்
குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் வரும் அந்த மவுத்ஆர்கன்-பிரசன்னா-கத்தி - விஷயம்
முருகதாஸ்-விஜய் படங்களில் வரவேண்டிய காட்சி.தயாரிப்பாளர் விசால் என்பதாலோ என்னவோ
மிஸ்கினுக்கு சில நெருக்கடிகள் இருந்திருக்கலாம்.அதனால் வலிந்து வைக்கப்பட்ட
காட்சியாகவே அது எனக்கு தோன்றியது.
அந்த
சைனீஸ் உணவகத்தில் வரும் சண்டை நன்றாக இருந்தது என்றாலும் அடிக்க வருபவர்கள்
“யாய்ய்” என்று கத்தியபடியே வருவது மிஸ்கின் படங்களில் இல்லாத ஒன்று.துளிகூட ஓசை
எழுப்பாமல் தாக்குவதே அவர் படங்களில் இருந்துவந்துள்ளது.விசால் அனுவிடம் “நின்ன
எடத்துலையே குழி தோண்டி புதைச்சிடுவேன்” என்று
வ(ப)ழமையான வசனத்தில் மிரட்டுவது,கடைசியில் ஈரோவை கட்டிப்போட்டுவிட்டு
கொல்லாமல் விட்டுவிட்டு தப்பிக்க முயலும் வில்லன் என்று விசாலுக்காகவே இவை வலிந்து
வைக்கப்பட்டதாக கருதுகிறேன்.
அரோல் கொரேலி மிஸ்கினோடு நல்லதொரு புரிதலில் இருப்பது பின்னணி
இசையில் காண முடிகிறது.மிஸ்கின் படங்களில் அடிநாதமாக வரும் வயலின் மட்டுமல்லாது
இப்படத்தில் Grand Piano வையும் அற்புதமாக பயன்படுத்தியுள்ளார் அரோல்.இக்கூட்டணி
தொடரட்டும்.
Jeremy Brett |
சும்மா பேய்கதை-மொக்க காமெடி-காதல் கதை-அட்வைஸ் கதைன்னு தமிழ் திரையுலகில் டார்ச்சர்கள் தொடரும் நிலையில் ஷெர்லாக் கதாபாத்திரத்தை
மிஸ்கின் தன்மையோடு கொடுக்கும் முயற்சியை கண்டிப்பாக பாராட்டலாம்.அதேநேரம் ஷெர்லாக் டிவி சீரிஸ்கள் சாதரணமாக முக்கால் மணிநேரம்(ஜெரமி ப்ரெட்ட் சீரிஸ்) வரும்.The Hound of Baskerville போன்ற பெரிய கதைகளே ஒன்றரை மணி நேரத்தில் சொல்லி முடிக்கப்படும் என்பதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொண்டிருக்கலாம்! (Typical Sherlock ஆன –“Mercurial” Jeremy Brett ஐ குறிப்பிட்டதற்கு
நன்றி மிஸ்கின்!)
4 comments:
wow wow
Super, Ungalukku fan ayidalam pola....
மிக்க நன்றி.
நன்றி சார்
Post a Comment