“I have made both kinds of films — those dealing with contemporary problems, and I have also gone back to the past, to the nineteenth century, and made films on the stories of Tagore and other writers. There, one could think of a noble and heroic character, but no longer today — people have become diminished in stature, I feel.”-Satyajit Ray
மக்களின் பேச்சுவழக்கில் பொதுவாக
குறிப்பிடப்படுவது அரசியல் கட்சிகளின்-அரசியல்வாதிகளின் தரமற்ற,சந்தர்ப்பவாத-அறம் பிறழ்ன்ற செய்கைகள் பற்றியே!உண்மையில் சாமானிய மக்களுமே
அப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகள்தான்(அந்த சாமானியர்களில் இருந்து வருபவர்கள்தானே அரசியல்வாதிகளும்!)- தன் குடும்பம் அல்லது மிகநெருக்கடியான கால
கட்டங்களில் தான் மட்டும் வாழ்ந்தா போதும் என்ற பொதுபுத்தியே இங்க அதிகமா இருக்கு.
இப்படம் சத்யஜித்ராய்
இயக்கிய படங்களிலேயே மிகவும் இருண்மையான ஸினிக்கலான படமென்று அறியப்படுவது.இதை வேறொரு வகையில்
குறிப்பிடலாமென்றால் இது மேல்பூச்சற்ற பாசாங்கில்லாத அப்பட்டமாக சமூகத்தை காட்டும்
ஒரு திரைப்படம்.
படம் வந்த எழுபதுகளில்
நிலவிய வேலையில்லா திண்டாட்டம்-கடும் வறுமை- கடும் மின்வெட்டு- அதனால் பல்வேறு
தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் வேலையிழந்தோர் இதனால் எழுந்த நக்சல்வாதம்(இது
குறிப்பாக வங்காளத்தை அதிகம் பாதித்தது) இதெல்லாம் போதாதென்று 'அம்மையார்' அமல்படுத்திய அவசரநிலை என்று
தொடர்ந்து மக்களின் மென்னியை மூச்சுத்திணற அழுத்தி பிடித்திருந்த காலம்.
படத்தின் துவக்க
காட்சியிலேயே ஒரு பரீட்சை நடக்கும் அறை காட்டப்படுகிறது.சகட்டு மேனிக்கு பிட்
அடித்தும் காப்பியடித்தும் மாணவர்கள் பரீட்சை
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.ஆசிரியரின் மேற்பார்வையில்!!!(இப்போதும் பல வட மாநிலங்களில் இவை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது)
சுகுமார் |
பிறகு பரீட்சை பேப்பர்
திருத்தும் ஆசிரியரின் வீடு
காட்டப்படுகிறது. தன் அறையில் அமர்ந்து பேப்பர் திருத்துகிறார்.ஒரு மாணவன்
பொடி எழுத்தாக விடைகள் எழுதியிருக்க தன் அண்டை வீட்டு நண்பரிடம் கண் கண்ணாடி
வாங்கி வர சொல்கிறார்(தன் கண்ணாடி பவரின் போதாமை).அவர் எங்கோ வெளியே
சென்றுவிட்டதாக சொல்ல ஏதோ கண் தெரிந்தவரை திருத்துகிறார்.அதிக மார்க் பெற வேண்டிய அந்த
மாணவன் ஏதோ ஒரு மார்க் எடுத்து சுமாராக பாஸ் ஆகிறான்.அவன்தான் சோம்நாத்.அந்த
பரீட்சை பேப்பரில் பொடி எழுத்தாக எழுதியவன் சோம்நாத்தான் என்பதை பிறகொரு
காட்சியில் உணர்த்தியிருப்பார் இயக்குனர்!*
சோம்நாத்தின் தந்தை ”மறு மதிப்பீட்டுக்கு
விடைத்தாளை அனுப்பலாம்” என்கிறார் அவர்.சோம்நாத் மறுக்கிறான்.அப்படியே கோல்ட்
மெடல் வாங்கினாலும் என்ன பயன் என்று நினைத்திருக்கலாம்!பிறகு வேலை தேடல்!
உண்மையில் இந்த வேலை
தேடல் காட்சி மிக intense ஆக காட்டப்படுகிறது.நாட்கள்-மாதங்கள் நகர்வதை வேலை
வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கும் காட்சியாக திரும்ப திரும்ப
காட்டப்படுகிறது.கடும் வெயில்!கூட்ட நெரிசல்!வேலை இல்லை!அப்படியே நேர்முகத்திற்கு
சென்றாலும் செய்யப்போகும் வேலைக்கு சம்மந்தமில்லாத கேள்விகள் சோம்நாத்தை
எரிச்சலூட்டுகின்றன.
பிறகு தனக்கு தெரிந்த பிஷு
என்பவர் உதவியோடு ஒரு ஏஜன்ட் போல செயல்பட ஆரம்பிக்கிறான். அப்படி ஒருமுறை ஆர்டர்
விலையை quote செய்து எழுதி காட்டும்போது அலுவலர் “என்ன எழுத்து இவ்வளவு சின்னதா
இருக்கு” என்கிறார்*
பிஷு |
ஒரு அலுவலகத்திற்கு
தேவையான பேப்பர் கார்பன் பேப்பர் டைப் ரைட்டர் ரிப்பன் மாதிரியான ஸ்டேஷனரி
பொருட்களை இவன் கடையில் வாங்கி அவர்களுக்கு தருவது!இடையில் இவனுக்கு கமிஷன்
கிடைக்கும்.அலுவலகத்தில் இந்த ஆர்டர் எடுக்கும் நபருக்கும் கமிஷன்
கிடைக்கும்.ஒருமுறை இப்படி பேப்பர் வாங்கும் கடையில் தனக்கு இந்த ஆபீசில் ஆர்டர்
கிடைத்திருப்பதாக ஆபீஸ் பெயரை அந்த ஸ்டேஷனரி முதலாளியிடம் சொல்ல அவர் இவனை
ஓவர்டேக் செய்து நேரடியாக அந்த அலுவலகத்தில் ஆர்டர் பெற்று இவரே சப்ளை
செய்துவிடுகிறார்.
உண்மையில்
இது சோம்நாத்துக்கு பிறகுதான் தெரிய வருகிறது.பிஷு “நான் ராக்கெட்டை லான்ச்
மட்டும்தான் செய்யமுடியும்.மேலே செல்வது உன்பாடு” என்று அத்தோடு அவன் போக்கில்
விட்டுவிடுகிறார்.
சோம்நாத் ஆரம்பத்தில் மிக
வெள்ளந்தி போலவே இருக்கிறான்.பிரிட்டிஷ் கால வீடு ஒன்று தரைமட்டமாக்கப்படும் தகவலை
ஒரு ப்ரோக்கரிடம்(அவர் இடிக்கப்படும் வீட்டின் சாமான்களை பெற்று ஏலமிட்டு
சம்பாதிப்பவர்) சொல்ல அவர் அந்த தகவலுக்கு பணம் தருகிறார்.சோம்நாத் அதை எண்ணாமல்
வாங்கி பையில் வைக்க “பணம் வாங்கும் போதும் குடுக்கும் போதும் சரியாக உள்ளதா என
எண்ணி பாக்கணும்.இப்ப ரூபா குறைஞ்சதை நாளைக்கு கண்டுபிடிச்சா நீ என்கிட்டே வந்து
எப்படி கேப்ப?” என்கிறார்.
சோம்நாத் |
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக
சூதுவாது புரிய ஆரம்பிக்கிறது.அறவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக
மழுங்கடிக்கப்படுகிறது.அப்போதும் அவன் தன் இயல்பான இளைஞர்களுக்கே உரிய விளையாட்டு
தன்மையோடே இருக்கிறான்.
பிறகு ஒரு டெக்ஸ்டைல்
கம்பனியில் துணிகளை வெண்மையாக்கும் ஒரு ஒய்ட்டனர் ஆர்டரை பெற அவன் தன்னிடம்
மிச்சமிருக்கும் கொஞ்சநஞ்ச அறவுணர்வையும் மொத்தமாக இழக்கிறான்.
சோம்நாத் காதலித்த பெண்
நல்ல வேலையில் இருக்கும் ஒருவனை திருமணம் செய்துகொள்வது ஒருபுறம்; இன்னொரு புறம்
அவனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கும் முனைப்போடு அவன் தந்தையோடு ஒருவர் பேசுவது
போன்றவை அவன் மனதில் பாதிப்பை உண்டாக்குகிறது.
இருந்தாலும் சோம்நாத் தனது
அண்ணியிடம் ஒரு நல்ல நட்பில் இருக்கிறான்.வழக்கமாக திரைப்படங்களில் அண்ணியை தாய்
என்று ஒருபுறம் சொல்லிட்டு இன்னொருபுறம் தான் காதலிக்கும் பெண்ணை கவர அவரிடமே
ஐடியா கேட்பது மாதிரியான அபத்தங்கள் இப்படத்தில் இல்லை.
அண்ணியிடம் எருமை வயசாகும்
ஹீரோ “சீ போங்கண்ணி” என்று தனது காதலி பற்றியோ திருமணம் பற்றியோ கேட்கப்படும்போது
குழந்தை லெவலுக்கு மாறி செய்யும் அபத்த கூத்துக்கள் இதில் இல்லை.ஒரு அற்புதமான இயல்பான நட்பு இருக்கிறது.
.
சுதந்திர போராட்ட தியாகியாக
இருக்கும் சோம்நாத்தின் தந்தை, சோம்நாத் மற்றும் அவனது அண்ணன் போம்போல் ஆகியோர் சமூகத்தில்
பரவலாக இயல்பான விஷயமாகிவிட்ட லஞ்சம் பற்றி பேசும் போது அதிர்ந்து போகிறார்.அவரால்
இதையெல்லாம் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை!ஒரு வேலைக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பிப்பதை அவரால் கற்பனை செய்ய முடியவில்லை!அவர் காலம் என்பது வேறு!
சுதந்திர போராட்ட காலத்தில் எதிரி வெளியில்!இப்போதோ உள்ளே!மேலும் நக்சலைட்டுகளாக மாறி உயிரை விடுவதையும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.'ஏதேனும் வலுவான கொள்கை இல்லாமலேயே எப்படி இவர்களால் சாக முடிகிறது?' என்று வியக்கிறார்.
சோம்நாத்தின் தந்தை |
ஆனால் சோம்நாத்தின் அண்ணி கமலா இவை அனைத்தும் புரிந்தவராகவே இருக்கிறார்.தான் ஒரு மிடில் மேன் ஆகிவிட்டதை
அண்ணியிடம் விரக்தியாக சொல்ல அப்போதும் அவர் சோம்நாத்திடம் “இதில் தவறு எதுவும்
இல்லை” என்றே சொல்கிறார்.
சோம்நாத்தின் நண்பன் சுகுமாரின் குடும்பம் வறுமையில் உழல்கிறது.சுகுமாரின் தங்கை கௌனா நாடகத்தில் நடித்து சம்பாதிப்பதாக சொல்லி
வைத்திருக்கிறாள்.சோம்நாத்தின் நண்பன் வைரஸ் காய்ச்சலால் படுத்த படுக்கையாக
இருக்கிறான்(அவனுக்கும் வேலையில்லை).தான் உடை மாற்றும்போது தெரு ஜன்னல்
திறந்திருப்பதையோ அதுவழியாக சில இளைஞர்கள் பார்ப்பது பற்றிய பிரக்ஞை கூட
இல்லாதவளாக கௌனா இருப்பது சுகுமாருக்கு அதிர்ச்சியை உண்டாக்குகிறது.
உண்மையில் அந்த துணி
ஒய்ட்டனர் ஆர்டர் பெற அந்த முதலாளியை “சந்தோஷப்படுத்த” வேண்டும்.அதற்காக சோம்நாத்
தனக்கு பரிச்சயமான ஒரு ஆசாமி(டிடக்டிவ் வேலை செய்வதாக சொல்லும் பிம்ப்) யோடு
ஒவ்வொரு பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கும் செல்வதாக காட்சிகள் வருகிறது.
ஒரு பெண்ணின் கணவன்
குடிகாரன்.அவனே மனைவியை தொழிலுக்கு அனுப்புகிறான்.ஒரு தாய் தனது மகள்களை வைத்து
தொழில் செய்கிறாள்.இறுதியாக இந்த நாடக கம்பனி போர்வையில் விபச்சாரம்.அதில்தான் சுகுமாரின் தங்கை கௌனா ஜூதிகா என்ற பேரில் இருக்கிறாள்.பணம் தந்துவிடுகிறேன்.நீ போய்விடு என்கிறான் சோம்நாத்.ஆனால் வெறுமனே பணம் வாங்க முடியாது.என்னை ஹோட்டலில் கொண்டு விடு என்கிறாள் அவள்.அவளிடம் எந்த தடுமாற்றமும் இல்லை.இந்தமாதிரியான அறநெறி ஊசலாட்டங்களை எப்போதோ அவள் அழித்துவிட்டாள்.ஆனால் சோம்நாத் அப்படியல்ல.கடும் தடுமாற்றத்திற்கு பிறகு அவளை கம்பனி
முதலாளி இருக்கும் ஹோட்டல் அறையில் விட்டுவிட்டு வெளியே செல்கிறான்.
கௌனா |
பிறகு வீட்டுக்கு செல்லும்
அவன் ஆர்டர் கிடைச்சிடுச்சு என்கிறான்! கமலாவுக்கு இதன் தீவிரம் விளங்குவதாக(சோம்நாத்திடமிருந்து பல ஆயிரம் மைல் விலகி
செல்வதாக அவர் முகபாவம் காட்டப்படுகிறது)
கமலா |
படம் முடிகிறது.உண்மையில் சோம்நாத் இந்த
ஆர்டர் கிடைத்ததால் மகிழ்ச்சி பெற்றவனாக இல்லை.குற்றவுணர்ச்சி கொண்டவனாகவே
இருக்கிறான்.ஆனால் அந்த குற்றவுணர்வு எத்தனை காலம் நீடிக்கும்?சமூகம் அதை
அவனிடத்தில் இருக்க அனுமதிக்குமா?அந்த குற்றவுணர்வை அவன் நீடிக்க செய்தால் அந்த
ப்ரோக்கர் பணியையே விட வேண்டியிருக்கும்.அதுமட்டுமல்ல வேறு எந்த பணிக்குமே செல்லவிடாமல் தடுக்கும்!
அறவுணர்ச்சி-நேர்மை-ஒழுக்கம் etc..etc.. வழக்கொழிந்த சமூகத்தில் தான் மட்டும் இவற்றை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க முடியுமா?அவனது தந்தை வாழ்ந்த ஒரு வாழ்வை இவனால் வாழமுடியுமா?
உண்மையில் சோம்நாத் இனி
இதுபோல பல ஆர்டர்களை பெற முடியும்.திருமணம் செய்துகொள்ள முடியும்.பிள்ளைகள்
பெற்றுக்கொள்ள முடியும்.அவர்களை இருப்பதிலேயே சிறந்த பள்ளி-கல்லூரிக்கு அனுப்ப முடியும்!அந்த பிள்ளைகளுக்கு அறவுணர்ச்சி “தொல்லை”
மட்டும் இல்லாமல் பார்த்துக்கொண்டால்
போதும்(பரிணாம வளர்ச்சியில் அவர்கள் அதுமாதிரியான எக்ஸ்ட்ரா பிட்டிங் எதுவுமே இல்லாமல் பிறப்பார்கள் என்பது வேறு விஷயம்).அவர்களும் சமூகத்தில் “கவுரவ” வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்!
இன்றைய சூழலில் எழுபதுகளில் வந்த இப்படத்தை பார்க்கையில் அப்போது
சோம்நாத்த்துக்கு குறைந்தபட்ச நன்னெறிகளாவது ஆரம்பத்தில் மிஞ்சியிருப்பது வியப்பளிக்கிறது!இப்படம் வந்த காலகட்டத்தை காட்டிலும் இப்போது இது கூடுதல் relevant ஆக உள்ளது! "இந்த பிரச்சனைக்கு எல்லாம் என்ன தீர்வுன்னா..." என்று ப்ளேடு போடாததே அதற்கு காரணம்!அத்தகைய தீர்வுகள் எத்தகைய பெரும் படைப்பையும் மலினமாக்கிவிடும்(சினிமாவிலும் சரி இலக்கியத்திலும் சரி)!காலம் செல்ல செல்ல இப்படத்தின் relevance அதிகரிக்கவே செய்யும்!
No comments:
Post a Comment