நட்பை மையமாக கொண்டு
எத்தனையோ கதைகள் சினிமாவிலும் பிற வகையிலும் வந்துள்ளன.அவற்றில் பெரும்பாலான
கதைகள் மிகையுணர்ச்சி நிரம்பித்தளும்புவதாகவே இருக்கும்.அதிலும் தமிழ் சினிமா
என்றால் கேட்கவே வேண்டாம்!”குத்துனது நண்பனா இருந்தா செத்தாலும் சொல்ல கூடாது”
மாதிரியான அதீத உணர்ச்சிப்பெருக்கில் எழுதப்பட்ட வசனங்களே படம் நெடுக விரவி
கிடக்கும்!
அவ்வகையான மிகையுணர்ச்சி சுழல் எதிலும் சிக்காத ஒரு கதையாக இதை
கூறலாம்.வழக்கமாகவே அசோகமித்திரன் கதைகள் என்றாலே விலகல் தொனி என்பதே
பிரதானம்.
இது சத்யன்குமார் என்ற ஒரு ஹிந்தி ஸ்டாருக்கும் கோபாலன் என்ற கதை இலாகாவில் பணிபுரியும் ஒரு
சாமானியனுக்குமான நட்பை பற்றியது!எந்தவொரு அசோகமித்திரன் கதையிலும் அவரே ஒரு
கதாபாத்திரத்தில் தனது தன்மைகளை வெளிப்படுத்துவதுண்டு.அவ்வகையில் இதில் கோபாலின்
கேரக்டரில் அவரை காணலாம்.அதற்காக தனது தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இந்த
கதாபாத்திரத்தை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை(இந்தக்கதை என்றல்ல.அவரின் மற்ற
கதைகளிலும் அப்படித்தான்).
இந்த இருவரையும் நட்பு என்ற
புள்ளியில் இணைக்கும் இரு புள்ளிகளாக
மெஹர் பாபா மற்றும் சித்தர்
கதாபாத்திரங்களை கூறலாம்.சத்யன் குமார் கோபாலை நோக்கி நட்பு ரீதியாக
ஈர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாக
மெஹர் பாபா இருக்கிறார்.அவரை போலவே
சலனமற்ற அந்த கண்கள் கோபாலுக்கும் இருப்பதாக சத்யன் உணரும் தருணத்தில் அந்த நட்பு
உருவாகிறது.
கோபாலை பொறுத்தளவில் சத்யன்
அளவு நட்பில் ஆழ்ந்து திளைக்கும் நபராக இல்லை.உண்மையில் அவன் சத்யனை மதித்து
பேசிக்கொண்டிருப்பதற்கு காரணம் சத்யன் பெரிய ஸ்டார் என்பதால் அல்ல.அதிலும் கொஞ்சம்
தன்னலமுண்டு.கோபாலுக்கு அவனது முதலாளி மூன்றுமாத சம்பள பாக்கி வைத்துள்ளார்(தமிழ்
சினிமா என்றாலே கதை இலாக்கா நபர்கள்/ரைட்டர்கள் எவ்வளவு மதிப்பும் மரியாதையுமாக
நடத்தப்படுவார்கள் என்பதை நான் தனியாக சொல்ல வேண்டியதில்லை).உண்மையில்
தயாரிப்பாளர் கோபாலை வேலையை விட்டே தூக்க
நினைத்த அந்த சமயத்தில்தான் சென்னைக்கு
படப்பிடிப்பிற்காக வரும் சத்யனுடனான நட்பு துவங்குகிறது.பட தயாரிப்பாளரிடம்
“கோபால்ஜி எங்கே?” என்று கேட்டுக்கொண்டே இருப்பதால் முதலாளியும் வேறு வழியின்றி
கோபாலை வேலையில் இருந்து நீக்காமல் விட்டுவைக்கிறார்.
உண்மையில் கோபால் கதை
இலாக்காவில் தவிர்க்க முடியாத ஆளுமை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.தமிழ்
சினிமாவில் எவருமே அப்படி இல்லை!ஒருவர் இல்லாவிட்டால் வேறு ஒருவரை வைத்து
ஒப்பேற்றுவார்கள்.எதுவுமே இல்லாவிட்டாலும் வாய்ப்பு கேட்டு வரும் உதவி இயக்குனரின்
கதைகளை களவாண்டு ஒருமாதிரி படத்தை எடுத்துவிடுவார்கள்!
ஹிந்தி சினிமாவில்
கொடிகட்டி பறந்தவர் பலர் சென்னையில் தயாரிக்கப்படும் ஹிந்தி படத்தில் பணத்திற்காக
நடிக்க ஆசைப்பட்டு பிறகு ஹிந்தியில் மார்க்கெட் போன பல உதாரணங்கள்
சொல்லப்படுகின்றன.சத்யன் எந்த துணிச்சலில் அது தெரிந்தும் இங்கே படத்தில் நடிக்க
வருகிறான் என்பதை ஓரளவிற்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.
சத்யன் பிரிவினைக்கு
முந்தைய இந்தியாவில் பெஷாவரில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவன்.குடும்பத்தை
விட்டு தனியே மும்பைக்கு வந்து போராடி ஸ்டார் ஆனவன்.பெரும் பேரும் புகழும்
இருந்தாலும் வேர்களை தொலைத்து, உறவுகளைத்தொலைத்து அல்லாடும் கதாபாத்திரம்.தனது பேர்
புகழ் போய்விட கூடாது என்று மெனக்கெடும் ஆளல்ல.பத்திரிக்கையாளர்களிடம் கடுமையாக
நடந்துகொள்கிறான்.அவர்கள் இவனைப்பற்றி இல்லாததும் பொல்லாததும்
எழுதுகின்றனர்.ஒருவகையில் அவன் சென்னையில் தயாரிக்கப்படும் படத்தில் நடிக்க வந்ததே
மும்பையில் அந்த வெறுப்பு சூழலில் இருந்து தப்பிக்கத்தான் என்று புரிகிறது.
ஆனால் கோபால் இதற்கு நேர்எதிர்! குடும்பம், உறவினர் என்று இருந்தாலும்
அவற்றில் இருந்து தள்ளியே இருக்கிறான்!ஒரு ரயில் பயணத்தில் தன் மனைவி மற்றும் மகனை ரயிலில் வேண்டிய
தின்பண்டம் வாங்கிகொடுத்து சந்தோஷமாக என்றைக்குமே அழைத்து சென்றதில்லை என்பதை உணர்கிறான்.
வேர்களை தேடிக்கொண்டிருக்கும் சத்யனுக்கு நேர்மாறாய் தன் ஊர் ஆசாமிகள்
பார்வையில் படாமல் இருக்கவே விரும்புகிறான் கோபால்!அப்படியே யாரேனும் இவனை
அடையாளம் கண்டுகொண்டாலும் அவர் என்ன பேசினாலும் அதை உள்வாங்காது ஒப்புக்கு பதில்
சொல்லிவிட்டு நழுவுகிறான்.
“அவர்கள் சொல்கிறார்கள் இவர்கள் பேசுகிறார்கள் அவர்களுக்கு கோபம் இவர்களுக்கு வருத்தம் என்ற கட்டுகள் இல்லாமல் ஒருவன் தன் பிறந்த ஊரில் வசிக்க முடியுமா?இதுதான் காரணமோ விடுதலையை தேடி போனவர்கள் அனைவரும் தம் ஊர் தம் சுற்றுப்புறத்திலிருந்து வெகுதூரம் சென்று அனாமதேயர்களாக இருக்க முயன்றது?”
கதையில் நிஜ வாழ்வின்
கதாபாத்திரங்களும் வருகின்றன.சத்யன் குமாரின் அசல் பெயர் யூசுப்.நடிகர் திலீப்
குமாரின் அசல் பெயரும் அதுவே!தேவதாஸ் மாதிரியான ஒரு படத்தில் சத்யன் நடித்தது குறித்தும் கதையில் வருகிறது!அதுபோல நௌஷாத்தும் வருகிறார்.சத்யன் தனது மனைவியோடு வந்து அழைத்தால்தான் அவனது இல்லத்திற்கு வருவேன் என்கிறார்.
நேருவின் மரணம் கதையின் ஒருபகுதியில் வருகிறது.நேருவின் மரண செய்தி நாடு முழுக்க தெரிந்த நிலையில் சென்னை சாலையில் செல்லும் ஒரு சவ ஊர்வலத்தில் சென்றுகொண்டிருக்கும் ராமச்சந்திரனை துரத்தி பிடித்து சத்யன் “கோபால் எங்கே?” என்று வினவுகிறார்.”நானே ஹோட்டலுக்கு வந்து சொல்கிறேன்” என்கிறான் ராமச்சந்திரன்.காரில் ஏறி சவ ஊர்வலத்தின் ஊடே புகுந்து முன்செல்வது குறித்து வெட்கப்படுகிறான் சத்யன்.
நேருவின் மரணம் கதையின் ஒருபகுதியில் வருகிறது.நேருவின் மரண செய்தி நாடு முழுக்க தெரிந்த நிலையில் சென்னை சாலையில் செல்லும் ஒரு சவ ஊர்வலத்தில் சென்றுகொண்டிருக்கும் ராமச்சந்திரனை துரத்தி பிடித்து சத்யன் “கோபால் எங்கே?” என்று வினவுகிறார்.”நானே ஹோட்டலுக்கு வந்து சொல்கிறேன்” என்கிறான் ராமச்சந்திரன்.காரில் ஏறி சவ ஊர்வலத்தின் ஊடே புகுந்து முன்செல்வது குறித்து வெட்கப்படுகிறான் சத்யன்.
திலீப் குமார் |
கதைக்கு முக்கியத்துவமற்ற
சிறு சிறு சம்பவங்கள் கதையில் விளக்கமாக சொல்லப்படுகிறது.அதன்மூலம் வாழ்வின்
அபத்தத்தை உணர்த்துகிறார் அசோகமித்திரன்.உதாரணமாக காரில் கோபாலை தேடிக்கொண்டிருக்கும்
சத்யன் சட்டென்று டிரைவரிடம் ஒரு பார்க்கில் நிறுத்துமாறு சொல்கிறான்.ஆள் அரவமற்ற
பார்க்.தரையெங்கும் காய்ந்த சருகுகள்.அங்கெ ஒரு மேடையில் அமர்ந்து புகைக்கும்
சத்யன் சிகரெட்டை அணைக்காமல் சருகுக்குவியலில் போட்டுவிடுகிறான்.பிறகு திடீரென்று
இதனால் பெரும் காட்டுத்தீ போல பரவிவிடுமோ என்ற கவலையில் அந்த சிகரெட் துண்டை
தேடுகிறான்.டிரைவர் வந்து கேட்கும்போது வெள்ளி மோதிரம் விழுந்துவிட்டதாக
பொய்சொல்கிறான்.டிரைவரும் தீவிரமாக தேடி வேறு ஏதோ ஒரு மோதிரத்தை காட்டி "இதுவா சார்?"
என்று கேட்க ஆமாம் என்றபடி யார் மோதிரத்தையோ அணிந்துகொண்டு காரில் ஏறி செல்கிறான்.
சத்யன் படப்பிடிப்பு இடைவெளியில் சினிமாவில் வரும் அபத்தக்காட்சிகள்
பற்றி நினைப்பதாக பல இடங்கள் வருகிறது.உதாரணமாக...
“இன்றும் நான் கதாநாயகியை சந்திக்கும் காட்சிதான்.அந்தக்காட்சியில் என் வயது ஐம்பத்தாறுதான் இருக்க வேண்டும்.ஆனால் சினிமாக்காரர்களுக்கு கதாநாயகனை கிழவனாக காட்ட வேண்டும் என்றால் அவனைப் படுகிழவனாகத்தான் காட்டுவார்கள்.தலையும் மீசையும் தாடியும் காட்டேரி போல இருக்க வேண்டும்.அது எப்படி சினிமா கதாநாயகர்களுக்கு என்ன வயதானாலும் தலை வழுக்கை விழுவதில்லை?”
“எனக்கு முகமெல்லாம் மயிர்.கண்ணுக்கு கீழ் சுருக்கங்களுக்கு பதில் கருப்பு கோடுகள்.நெற்றியிலும் அவ்வாரே.கிழிந்து போல கொட்டு பாண்ட்.எல்லாப்பணமும் போய் பிச்சைக்காரனாக வாழும் கதாநாயகனுக்கு இப்படிக்கோட்டும் பாண்ட்டும் எங்கு கிடைத்தது?”
பத்தடி உயரத்தில் நின்று ஒளிப்பதிவு செய்பவன் தன் கண் பார்வையில் இருக்கும்போது மேலே இருந்து
விழுந்து விட கூடாது என்று பயந்து முகத்தை
வேறுபக்கம் திருப்பிக்கொள்கிறான்.ஏற்கெனவே அதுபோன்ற ஒரு சமயத்தில் ஒருவர் மேலிருந்து விழுந்து முறிந்த எலும்புகளோடு அதிர்ஷ்டவசமாக பிழைத்த சம்பவத்தையும் குறிப்பிடுகிறான்.
இன்று இரவு இந்த குட்டிச்சுவர் காட்சிகளை முடித்துவிட வேண்டும்.இது படம் பார்க்க வருபவர்களை தொண்டையடைய செய்யும் கட்டம்.படம் முடியும் பொது எல்லாரும் அழுதுகொண்டு வீட்டுக்கு கிளம்பு வேண்டும்.என்னுடைய இந்த சீன்கள் பிரபலமானவை.படத்தின் ஆரம்பத்தில் மூச்சு விடுவதெல்லாம் காதல்.இடைவெளியின்போது காதல் பறிபோதல் அல்லாது நான் தியாகம் செய்துவிடுவேன்.படத்தில் முடிவில் நான் என் காதலிக்கு நேரும் மிகப்பெரிய இக்கட்டை தீர்ப்பேன்.சில படங்களில் உயிரையும் விட்டுவிடுவேன்.நான் உயிர் விடும்போது திணறித்திணறி பொன்மொழிகளாக உதிர்ப்பேன்.அதை கதாநாயகியும் அவளுடைய கணவனும் அவர்களுடைய பிள்ளை பெண் மாப்பிள்ளை பேரக்குழந்தைகள் கிராமத்தை சேர்ந்த எல்லாருமாக கேட்டுக்கொண்டு கண்ணீர்விடுவார்கள்.அவர்களுடைய கண்ணீர் வெள்ளத்தில் கொப்புளித்து கொண்டு என் உயிர் சொர்க்கத்துக்கு செல்லும்.
சினிமாவுக்கு எழுதும் வேலையை விட்டால் வேறு வேலை கோபாலுக்கு கிடைப்பது
சிரமம் என்பதை உணர்கிறான்.சினிமாவுக்கு எழுதி எழுதி பழகிவிட்டதால்
பத்திரிக்கைகளிடம் முன்பணம் வாங்கியும் ஒருவரி எழுத முடியவில்லை.தமிழில் நூறு
பக்கங்களை ஒரே மூச்சில் படிக்க முடிவதும் ஆங்கிலத்தில் பத்திருபது பக்கங்கள்
படித்தாலும் எதுவும் மனதில் தங்காமல் போவதை உணர்கிறான்.
தான் எழுதத்தொடங்கிய நாட்களை
நினைத்துப்பார்க்கும் கோபால் அந்த கடுமையான நெருக்கடி மனநிலையிலும் கிண்டலாக தமிழ்
சினிமா வசனங்களை கிண்டல் செய்கிறான்:
“தஞ்சாவூர் ஜில்லாவில் அனேகமாக மின்சாரமே கிடையாது எனலாம்.ஆனால் நாங்கள் எங்கள் கதைகளில் மின்சாரத்தை தாராளமாகவே பயன்படுத்துவோம்.”அவளுடைய தாவணி நுனி ஒரு வினாடி அவன் மேல் பட்டது;அவனுக்கு உடலெல்லாம் ஷாக் அடித்தது””அவன் விரல்நுனி அவளுடைய கையை தீண்டியபோது அவனுக்கு தலையிலிருந்து கால்வரை மின்சாரம் பாய்வது போல இருந்தது”
சித்தர் ஒரு வினோத
பிறவி.கோபால் கடும் மன நெருக்கடியில் நள்ளிரவில் தெருவில் சுற்றிக்கொண்டிருக்க
திடீரென்று ஒரு சந்திலிருந்து வெளிப்படும் சித்தர் “புகையிலை இருக்கா?” என்று
கேட்கிறார்.இவர் "இல்லை" என்று சொல்ல ஒரு கடையை சொல்லி அங்கு வாங்கிவர
சொல்கிறார்.இந்நேரத்தில் எவன் கடையை திறந்து வைத்திருப்பான்? என்ற சந்தேகத்தில்
செல்லும் கோபால் அங்கு சித்தர் சொன்ன கடை திறந்திருப்பதை கண்டு
துணுக்குறுகிறான்.அங்கு அவர் புகையிலை வாங்கியதுமே கடையை அடைத்துவிட்டு கடைக்காரன்
சென்றுவிடுகிறான்.இப்படியாக பல வினோத சம்பவங்கள்.
கல்லீரலில் ரத்தக்கசிவு
இருந்தாலும்(தேசிய ஊடகங்கள் சத்யனுக்கு குஷ்டரோகம் என்கிறது) கோபாலை பார்த்தே தீர
வேண்டும் என்ற எண்ணத்தில் மும்பையில் இருந்து காரில் சென்னை வருகிறான்
சத்யன்.நடுவில் கார் ப்ரேக் டவுன் ஆகி நின்றுவிட அங்கு சுகந்த மணம் வீச சித்தர்
அங்கு காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய உதவுகிறார்.
பிறகு வேறொரு இடத்தில் சத்யன் மயக்கமடைந்து கண் திறந்து
பார்க்கும்போது ஒரு அறையில் படுத்திருக்க அங்கு சுகந்த மணம் வீசுகிறது.சித்தர்
திரும்பவும் அவனை பார்க்கிறார்.கதையின் இறுதியில் அவன் சித்தரை சந்திக்கும் போது
"உனக்கு நீண்ட ஆயுள் உண்டு.மும்பைக்கு போ" என்கிறார்.
விஞ்ஞானத்தின் போதாத தன்மை குறித்து சத்யன் சிந்திப்பதாக கதையில் வருகிறது.
“விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது.என்னுடைய வாழ்நாளிலேயே எத்தனை மாறுதல்களை கண்டுவிட்டேன்!.....பத்தாண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாததெல்லாம் இப்போது சாத்தியமாகிறது.இதோ இந்த பால் பாயின்ட் பேனா!ஒரு பந்தை உருளவைத்து எழுத முடியும் என்று என் அப்பா நினைத்துப்பாத்திருக்க முடியுமா?ஆனால் மனிதன் தலையில் எதை வைத்து எழுதியிருக்கிறது?என் தலையில் என்ன எழுதியிருக்கிறது?”
கோபாலின் மகளை பதினேழு வயதிலேயே ஜம்பகத்தின் நிர்பந்தத்தின் பேரில்
திருமணம் செய்துகொடுக்கிறான் கோபால்.ஆனால் அவளது வாழ்க்கை அப்படியொன்றும்
சுகமில்லை.ஒருநாள் தன் வீட்டிற்கு வரும் மகளைக்கண்டு
“பேய் பிசாசுகளை விட பீதி விளைவிக்கும்படி மனிதர்களால் நடந்துகொள்ள
முடியும் என்பதை நான் அறிந்திருந்தேன்” என்கிறான் கோபால்.
கோபாலின் மனைவி ஜம்பகம் முதலில் சிறிதளவு மனப்பிறழ்வு கொண்டவாளாக
காட்டப்பட்டு பிறகு ஒரு நிலையில் மகனையே தலையணை அமுக்கி கொல்லும் நிலைக்கு
செல்கிறாள்.அந்தப்பகுதி நேரடியாக விளக்கப்படாமல் அசோகமித்திரனுக்கே உரிய
மொழிநடையில் சொல்லப்படுகிறது.அதாவது “மனைவி மகனை கொன்றுவிட்டு நிர்வாணமாக நின்றபடி
கத்தினால்.அதை தெரு மக்கள் வேடிக்கை
பார்த்தனர்” என்று எழுதாமல்- எழுதப்படாமல் விட்ட பகுதிகளை வைத்து வாசகன அதை உணரும்
வண்ணம் சொல்லியுள்ளார். சத்யன் ஏன் கோபாலை அத்தனை பிரச்சனைகள், உடல் உபாதைகளை
தாண்டி சந்திக்க விரும்பினான் என்பதுகூட மேற்சொன்ன சொல்லாமல் விளங்கவைத்தல்
பாணியில் கதையின் முடிவில்
சொல்லப்படுகிறது.
சத்யன் குமார் கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையிலும் கோபாலை
சந்திக்க காரணம் அவன் மனைவி இவன் கையை பிடித்து இழுத்தது."பாபி வேண்டாம்!!!" என்று
கெஞ்சியதாக கதறுகிறான் சத்யன்.ஆனால் கோபால் அந்த லௌகீக எல்லைகளை தாண்டி வேறொரு நிலைக்கு சென்று விட்டான்.
“இந்தப்பக்கம் பத்து மைல் போனால் என் பெண்ணின் கணவரின்
கிராமம்.எதிர்ப்பக்கம் இருபது மைல் போனால் என் மாமியார் மாமனார் இருக்கும்
ஊர்.ஆனால் நானும் போகவில்லை .அவர்களும் வரவில்லை” என்கிறான் கோபால்.
“இந்த சாயபுவை இங்கே குளிச்சிட்டு போகச்சொல்லு.இதுதான் அவனுக்கு
கிடைக்கக்கூடிய மானசரோவர்னு சொல்லு” என்றபடி சித்தர் சென்றுவிடுகிறார்.
அது என்ன மானசரோவர் என்று சத்யன் கேட்க "வடக்கே பனி சூழ்ந்த ஹிமாலய
மலைகளுக்கு நடுவே ஓர் ஏரி.அங்கே குளித்து வந்தால் மனம் சுத்தமாகிவிடும்.மனம்
சுத்தமானால் யோகம் சித்திக்கும்.யோகமெல்லாம் நமக்கெதற்கு?மனம் கொஞ்சமாவது
சுத்தமானால் போதாதா?” என்கிறான் கோபால்.
நவீன வாழ்க்கை -இருபத்தியோராம் நூற்றாண்டு என்கிறோம்!அதிநவீன தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாலும் இந்த நவீன வாழ்வு உருவாக்கித்தரும் சிக்கல்களை அதே நவீன அணுகுமுறை கொண்டு தீர்க்க முடியாமல் போவதை பல தருணங்களில் காண்கிறோம்!("ஏண்டா பாபு,காலத்திலே அந்தக்காலம் இந்தக்காலம்னு ரண்டு உண்டா?காலம் ஒரே காலம்தான்" -வைத்தி,மோகமுள்) கோபால் அத்தகைய நவீன வாழ்விற்கு வெளியே அத்தகைய ஒரு தீர்வை கண்டடைகிறான்.சத்யன் நவீன வாழ்வினுள்ளேயே சிக்கி தவிக்கிறான்.
நவீன வாழ்க்கை -இருபத்தியோராம் நூற்றாண்டு என்கிறோம்!அதிநவீன தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாலும் இந்த நவீன வாழ்வு உருவாக்கித்தரும் சிக்கல்களை அதே நவீன அணுகுமுறை கொண்டு தீர்க்க முடியாமல் போவதை பல தருணங்களில் காண்கிறோம்!("ஏண்டா பாபு,காலத்திலே அந்தக்காலம் இந்தக்காலம்னு ரண்டு உண்டா?காலம் ஒரே காலம்தான்" -வைத்தி,மோகமுள்) கோபால் அத்தகைய நவீன வாழ்விற்கு வெளியே அத்தகைய ஒரு தீர்வை கண்டடைகிறான்.சத்யன் நவீன வாழ்வினுள்ளேயே சிக்கி தவிக்கிறான்.
No comments:
Post a Comment