Sunday, 5 May 2024

Blow Out மற்றும் சில மர்ம வழக்குகள்!

 பொதுவாக இந்த பிரபல படுகொலை வழக்குகள்,மர்ம மரணங்கள் ஆகியவைகளுக்கு இடையே ஒருவித ஒற்றுமை உண்டு. இரண்டுவகையான வழக்குகள் குறித்த பேச்சுக்கள் விவாதங்கள் எல்லாம் அந்த சம்பவம் நடந்தவுடனே சுனாமி போல எழும்.பிறகு அதிகபட்சம் சில மாதங்கள்; ரொம்ப பிரபலமாக இருந்தால் சில ஆண்டுகள் அதைப்பற்றி பேச்சு ; அந்த வழக்கு என்னவானது என்ற கேள்வி போன்றவைகள் இருக்கும்.பிறகு? நிசப்தம்!

    Brian De Palma  இயக்கிய Blowout படம் அந்தவகையில் நமக்கு மிக மிக பிடித்த படம்.படம் எடுக்கப்பட்ட விதம் என்பது ஒருபக்கம் இருந்தாலும் படத்தில் நம்மை ஈர்த்தது அந்த நேர்மை.யதார்த்தத்தை நேர்மையாக காட்டிய படமது.



     அமெரிக்க ஜனாதிபதிக்கான பிரைமரி போட்டியில் முன்னணியில் இருக்கும் ஒருவர்,நிச்சயமாக அவர்தான் அடுத்த ஜனாதிபதி என்று அனைவருமே நம்பும் ஒருவர் காரோடு நீர் நிலையில் விழுந்து இறக்கிறார் .
       அந்த இடத்திற்கு அருகே தனது திரைப்பட ஒலி தொகுப்பிற்காக இயற்கை ஒலிகளை பதிவு செய்துகொண்டிருக்கும் நாயகன் அந்த கார் விழும் ஒலியையும் பதிவு செய்கிறான்.அந்த பிரபலம் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருப்பதை ரகசியமாக போட்டோக்கள் எடுக்கிறார் இன்னொருவர்.அவைகளை பிறகு இணைத்து ஒரு வீடியோவாக ஆக்கி பார்த்தால் காரின் டயர் சுடப்பட்டு அதனாலேயே நிலை தடுமாறி கார் நீரில் விழுந்தது என்பதை கண்டுபிடிக்கிறார் நாயகன்.
     பிறகு அதை அம்பலப்படுத்த எடுக்கும் முயற்சி கடைசியில் மொத்தமாக சின்னாபின்னமாகி விடுகிறது .தனது காதலியையும் இழக்கிறான்.படம் அத்தகைய வெறுமையில் தான் முடிகிறது.
     நிஜ வாழ்வில் ஜான் எஃப் கென்னடி அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி ஆகியோரின் படுகொலை வழக்குகளை சில ஆண்டுகளுக்கு முன் டாப் டூ பாட்டம் படித்ததில் தலை சுற்றியதுதான் மிச்சம்.அவ்வளவு குளறுபடிகள் குழப்பங்கள் வினோத திசை திருப்பல்கள்.வாரன் கமிஷன் அறிக்கை என்பது ஒரு கட்டுக்கதை என்பது கென்னடி இருந்த ஜனநாயக் கட்சிக்கும் தெரியும்.அமெரிக்க மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும்.இருந்தாலும் என்ன செய்ய முடிந்தது??நிசப்தம்!




     ராஜீவ் படுகொலை நிகழ்ந்த அடுத்த நாள் தொடங்கி ஜெயின் கமிஷன் அறிக்கை வரை தொடர்ந்து விடாமல் நாள்தோறும் செய்தித்தாளில் அந்த செய்தியை வாசிப்பது நமது வழக்கமாக இருந்தது.ராஜேஷ் குமார் நாவலில் வருவது போல " முதல் பக்கம் எட்டு பத்திக்கு இருந்த செய்தி கடைசி பக்கத்தில் கால் பத்தியாக .." மாறும் வரையில் வாசித்தோம்.
     ஏகப்பட்ட குழப்பங்கள் ஓட்டைகள் பல்டிக்கள்....பிறகு bigger conspiracy ஐ கண்டுபிடிக்க 1999 இல் பல்நோக்கு விசாரணை குழுமம் அமைக்கப்பட்டது.சில ஆண்டுகளுக்கு முன்னர் அதன் ஆயுளும் முடித்து வைக்கப்பட்டது.சரி இத்தனை ஆண்டுகள் செயல்பட்ட அந்த குழுமத்தின் கண்டுபிடிப்புகள் என்ன?யாரையெல்லாம் விசாரித்தார்கள்?இத்தனை ஆண்டுகள் என்னதான் செய்தார்கள்???நிசப்தம்!
     சில ஆண்டுகளுக்கு முன் மீடியாவை உலுக்கிய சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம்.அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவரது மேனேஜர் திஷா சாலியான் மர்ம மரணம் .இருவர் மரணமும் "தற்கொலை" என்றார்கள்.



    சமீபத்தில் சுஷாந்த் உடலை பிரேத பரிசோதனை செய்த மார்ச்சுரி காவலாளி சுஷாந்த் உடலில் ஏகப்பட்ட காயங்கள் இருந்ததாகவும் இது குறித்து மருத்துவர்களிடம் கூறிய போது அமைதியாக இருக்கும்படி அவர்கள் கூறியதாக சொன்னார் .இவரே வழக்கு நடக்கும்போது இதை பேசவில்லை.

திஷா சாலியான்


    மேலும் திஷாவின் மர்ம மரணத்தில் சம்மந்தப்பட்ட அந்த இரு பெரும் மராட்டிய  புள்ளிகள் சுஷாந்த் வழக்கிலும் சம்பந்தப்பட்டதாக பேச்சுக்கள் எழுந்தன. சுஷாந்த் நடிகர் மட்டுமல்லாது தீவிர அறிவியல் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.அவர் மிக குறைந்த செலவில் படம் தயாரிக்கும் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.அதற்கும் அவரது மர்ம மரணத்துக்கும் சம்மந்தம் உண்டா?அவரோடு தொடர்புடைய நான்கைந்து நண்பர்கள் மர்மமாக இறந்தது/காணாமல் போனது என்று ஏகப்பட்ட குழப்பங்கள்.சி. பி.ஐ விசாரணைக்கு எடுத்து நான்காண்டுகள் ஆகிறது.வழக்கில் என்ன முன்னேற்றம்??நிசப்தம்.
     இதேபோல ஜியா கான் மரணம்,(காதலர் தினம்) குணால் மும்பையில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகள் என்னாவாகின?சுனந்தா புஷ்கர் மரணம் நிகழ்ந்து பத்தாண்டுகள் ஆகிறது.அந்த வழக்கின் நிலை என்ன???நிசப்தம்!
     இப்போது பதிவின் ஆரம்பத்தில் பகிரப்பட்ட Blowout போஸ்டரில் ஜான் டிரவோல்ட்டாவின் முகபாவத்தை பாருங்கள்.தொடர்ந்து இந்த மர்மமான குழப்பங்கள் நிறைந்த வழக்குகளை பின் தொடர்ந்த ஒரு நபரின் முகபாவம் அப்படித்தான் இருக்கும்!
     





No comments:

Post a Comment