சிறந்த நடிக நடிகைகள் என்று அறியப்படுவோர் நடிக்கும் படத்தில் அவர்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவது ஒருவகை.அது நாம் ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்று.நமது எதிர்பார்ப்பை தாண்டியும் நடிக்கலாம் அல்லது எதிர்பார்த்த அளவுக்கு கீழேயும் போகலாம்.
ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது இப்படி ஒரு நடிகனோ நடிகையோ இருப்பதே தெரியாமல் ஒரு படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் அவர்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் அந்த தருணம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.
பல்வேறு படங்களில் பலரை சொல்லலாம்.நாம் சமீபத்தில் பார்த்த படங்களில் கண்ட நல்ல நடிப்பை மட்டும் குறிப்பிடுகிறோம்.
*******
தங்கம் படத்தில் மராட்டிய காவல் அதிகாரியாக வரும் அந்த நடிகர் கிரீஷ் குல்கர்னி.இவர் ஏற்கெனவே தேசிய விருது பெற்றவர் என்பதெல்லாம் நமக்கு தெரியாது.வழக்கமாக ஒரு மொழி படத்தில் வேற்றுமொழி ஆசாமிகளை டம்மியாக, கோமாளியாக அல்லது தத்தியாக காட்டுவதே வழக்கம்.இவரையும் அப்படித்தான் சுற்றலில் விடப்போகிறார்கள் என்று நினைத்தால் இன்ப அதிர்ச்சி .
மனிதர் அட்டகாசமாக நடித்து மொத்த படத்தையும் கபளீகரம் செய்துவிட்டார்.கடைசியில் பிஜு மேனன் அலட்சியமாக Get lost என்பது மாதிரியான அர்த்தத்தில் மலையாளத்தில் சொல்ல சிறிது தூரம் சென்றுவிட்டு திரும்ப வந்து அதையே சொல்லிவிட்டு செல்லும் காட்சியாகட்டும் அல்லது முத்துப்பேட்டையில் உள்ள தமிழக மேலதிகாரி "உன் மேலதிகாரியை பேச சொல். அப்ப கைதியை விசாரிக்கும் உரிமையை தருகிறேன்" என்று சொன்னதும் அந்த தங்க செயினை அடிமட்ட காவல் அதிகாரி லஞ்சமாக வாங்கியதை மறைமுகமாக குறிப்பிட்டு அவரிடம் கைதியை விசாரிக்க சம்மதம் பெறும் காட்சியையும் கூறலாம்.
இதே படத்தில் ஹசீனா கேரக்டரில் நடித்த தீபிகா ராஜா பற்றியும் கூற வேண்டும் .அந்த விசாரணை காட்சியில் கொஞ்சமும் அசராமல் கல்நெஞ்சமாக அமர்ந்திருக்கும் அந்த காட்சியில் அவரது நடிப்பு அற்புதம் . ஆனால் அடுத்து வந்த தியேட்டர் காட்சியில் தீவிரத்தை காணோம்.அந்த தீவிரத்தை தான் வரும் அத்தனை காட்சிகளிலும் தக்க வைப்பதே ஒரு சிறந்த நடிகன்/நடிகையின் அடையாளம்.தவிர இதில் அவர் வியக்க வைத்து விஷயம் உண்டு.
தமிழில் நடிக்கும் நடிக நடிகைகள் தங்களுக்கு ஹிந்தி தெரிந்தாலும் "அதெல்லாம் எனக்கு ஒரு வார்த்தை கூட தெரியாது" என்பதாக கேமராவுக்கு முன்பும் பின்பும் நடிப்பார்கள்.(அப்படி நடித்தால் தான் அடுத்த பட வாய்ப்பு வருமோ?- கும்மாங்கோ).படத்தில் ஒரு கேரக்டர் வட மாநிலத்திலேயே வாழ்வதாக காட்டினாலும் ஒரு வார்த்தை ஹிந்தி தெரியாது என்பதாகத்தான் காட்டுவார்கள்/காட்டிக்கொள்வார்கள்!ஆனால் இவர் சரளமாக ஹிந்தி பேசி பிறகு தமிழும் பேசியது வியப்பு!சென்ற பதிவில் குறிப்பிட்ட ' மணிரத்ன நாடகம் ' பற்றி எதுவும் அறியாதவர் போலும்!
அடுத்தது குறுக்கன் படம். ஶ்ரீநிவாசன் & வினீத் ஶ்ரீநிவாசன் ஆகியோர் நடிக்கிறார்கள் என்றதுமே உற்சாகம் தொற்றியது.ஆனால் அவர்கள் இருவரையும் வீணடித்துள்ளார்கள் .சில நல்ல நகைச்சுவை தருணங்கள் உண்டென்றாலும் அவர்கள் ஏற்கெனவே நகைச்சுவையில் அடைந்த உயரத்தை ஒப்பிடும் போது ஒன்றுமில்லை!
ஆனால் இப்படத்தில் வியக்க வைத்தது ஸ்ருதி ஜெயன். வடிவேலு பாணி உடல்மொழி காமெடி அசால்ட்டாக செய்யக்கூடிய திறன் இவரிடம் காண முடிந்தது.இவர் ஒரு தொழில்முறை நாட்டிய கலைஞர் என்பதால் அது கூடுதலாக உதவி உள்ளது.
ஆனால் வழமை போலவே திறமைசாலிகளுக்கு பெரிய வாய்ப்பு தராமல் வீணடிக்கும் போக்கை இவர் நடித்த படங்களின் பட்டியலை கண்டபோது மீண்டும் காண முடிந்தது!
*****************
இதுவரை அறிமுகமில்லாத நடிக நடிகைகள் வியப்பை உண்டாக்கியதை பார்த்த வேளையில் மிகவும் தெரிந்த ஒரு நடிகர் பற்றியும் குறிப்பிட வேண்டும். இளவரசு! இவர் 2000&2010 களில் நடித்த அத்தனை முக்கிய படங்களையும் பெரும்பாலும் தியேட்டரில் நாம் கண்டுள்ளோம்.அவர் நடித்தார் என்பதற்காக என்று கூறவில்லை.அத்தனை முன்னணி படங்களிலும் அவர் இருந்தார்.
ஆனால் அத்தனை படங்களில் கண்ட இளவரசுவை மாயநதி படத்தில் காண முடியவில்லை!வேறொரு நபராக மாறி இருந்தார்!இந்த பாராட்டின் பாதி பங்கு படத்தின் இயக்குனருக்கு(ஆஷிக் அபு) செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.ஏனெனில் இளவரசுவை இப்படியொரு கோணத்தில் வேறு தமிழ் இயக்குனர்கள் யோசிக்கவில்லை.இத்தனைக்கும் தமிழிலும் வில்லத்தனமான கேரக்டர்கள் செய்துள்ளார்!ஆனால் இது வேறு! இளம் வயதில் மனைவி ஒடிப்போனதில் அத்தனை பெண்கள் மீதான வெறுப்பாக கசப்பாக மாறி அந்த கசப்பே ஒரு உருவமாக நிற்பதாக அவரது கேரக்டர் இருந்தது.மாயநதி படத்தின் விருது பட்டியல் எதிலும் இவர் பெயரை காணோம் என்பது நிம்மதியை தந்தது! விருதுகளின் மதிப்பு அந்த லட்சணத்தில் உள்ளது!
No comments:
Post a Comment