சாதாரண நகைச்சுவை படங்கள் சிரிக்க வைக்கும்.ஆனால் அவல & அபத்த நகைச்சுவை படங்கள் சிந்திக்க......இது அரதப்பழசான வாக்கியம்......இல்லை....அவல நகைச்சுவை படங்கள் அன்றாட வாழ்வின் குரூரத்தை,அடுத்தவர்களை ஏமாற்ற பயன்படும் குறுக்கு வழிகளை, தில்லாலங்கடி வேலைகளை அப்பட்டமாக சமரசமின்றி காட்டும்.
இப்படமும் அப்படித்தான்.Nightcrawler படத்தின் தழுவல் தான்.அப்படத்தில் ஊடக நிறுவனத்தில் "செய்திகளை முந்தித்தரும்" போட்டியில் இருக்கும் பணம் பண்ணும் ஒரு மகத்தான வாய்ப்பை நாயகன் காண்கிறான்.அதை நடைமுறைப்படுத்தி குறுகிய காலத்திலேயே கோடீஸ்வரன்.... இல்லை.... மில்லியனர் ஆகிறான்.
இதில் இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக் அப்படத்தின் சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதை அப்படியே மருத்துவ காப்பீட்டில் நடக்கும் மோசடிகளை கதையின் களமாக மாற்றியதில் அவரது சாமர்த்தியம் பளிச்சிடுகிறது!
அதைவிடவும் சாமர்த்தியம் வாய்ந்த ஒரு காட்சிப்படுத்தல் என்றால் அது படத்தின் aspect ratio!
முகுந்தன் உன்னி அன்றாட வாழ்க்கைக்கே போராடும் ஒரு சாதாரண ஜூனியராக இருந்து பிறகு அந்த வேலையும் போய் அடுத்து என்ன செய்யலாம் என்று போராடும் வரையில் படம் பழங்கால letterbox format ல் காட்டப்படுகிறது.பிறகு கால் உடைந்த நபரின் மனைவி மூலமாக வழக்கில் வெற்றி பெற்று அந்த பெண்ணுக்கு 45000 ஜி பே செய்யும் அந்த தருணத்தில் மிகச்சரியாக காட்சி விரிந்து முழு திரையை ஆக்கிரமிக்கிறது!Wow!இதை நாம் எதிர்பார்க்கவில்லை.படம் பார்க்க துவங்கியதில் இருந்தே ' ஏன் 4:3?' என்ற குழப்பம் இருந்துகொண்டே வந்தது!பிறகு மேற்சொன்ன காட்சி!
மற்றொரு பிடித்த விஷயம் வாய்ஸ் ஓவரில் நாயகன் தான் சந்திக்கும் மனிதர்களை தான் எடை போடும் விதம்,தான் எடுத்த முடிவுகள்,அதில் உள்ள பிழைகளால் வரும் பின்விளைவுகள்,எடுக்கப்போகும் முடிவுகள்,தான் வாழ்வில் பொருளாதார உச்சத்தை அடைய டிஸ்யூ பேப்பர் போல சக மனிதர்களை பயன்படுத்தி தூக்கி எறியப்போகும் விதம் போன்றவற்றை சொல்லிக்கொண்டே வருகிறார்.
குறிப்பாக தன்னிடம் உதவியாளராக இருக்கும் ராபின் தாடி- கலைந்த தலை- செருப்பு- கசங்கிய பேண்ட் சட்டை என்று வருவதை கண்டிப்பதாக ஒரு காட்சி .பிறகு வேறொரு தருணத்தில் வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் பளபள ஷூ க்ளீன் ஷேவ் தலையில் ஹேர் ஜெல் என்று வந்து நிக்கும்போது ஹீரோ "இவன் நம்மை விட ஸ்மார்ட்டாக இருக்கானே" என்று பொறாமைப்படும் காட்சியில் பேட்ரிக் பேட்மேன் விசிட்டிங் கார்டை பார்த்து கொதிக்கும் காட்சியை காண முடிந்தது.இதை காப்பி என்று சொல்ல முடியாது.ஆனால் அந்த கேரக்டரின் தன்மையை முகுந்தன் உன்னியில் காண முடிந்தது.
பேட்ரிக் பேட்மேன் பணத்துக்காக எதையும் செய்வதில்லை!அவனிடம் இல்லாத பணமில்லை!அதனாலேயே எதோ ஒரு பிராயத்தில் தடம் புரண்டதால் அப்படி நடந்து கொள்கிறான்.ஆனால் முகுந்தன் உண்ணி அப்படியல்ல.
ஒன்று தான் ஜெயிக்க வேண்டும்.இல்லாவிட்டால் மரணிக்க வேண்டும் என்று இரு எதிரெதிர் முடிவுகளை மட்டுமே வைத்துக்கொண்டு முன்னகர்பவன். வெகுகாலமாக ஒரு வழக்கறிஞரிடம் டம்மியான அல்லைக்கை போல இருந்து இருந்து அவனுக்கு அந்தமாதிரியான நிலையில் இனி என்றுமே இருக்க கூடாது என்ற வெறி வந்துவிட்டது.அதற்காக எதையும் செய்யலாம்!யாரையும் மிதிக்கலாம் என்று பயணிக்கிறான்!
இதில் குறிப்பிட வேண்டிய மற்ற கதாபாத்திரங்களில் அந்த பெண் எம்.எல். ஏ கேரக்டர்.அதுசரி 'அரசியல்வாதிகள் என்றாலே தியாகிகள் தானே!' என்பதால் அவரை விட்டுவிடுவோம்.மற்றொரு கேரக்டர் மீனாட்சி!
மருத்துவமனை போர்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் டாக்டர் வின்சென்ட் தன்னை ஒருதலையாக காதலிக்கும் போது கூட எந்தவித சம்மதமும் தராமல் வேறொரு பெரிய "கை"க்காக காத்திருக்கிறார்.அப்போதுதான் முகுந்தன் உண்ணியை சந்திக்கிறார்.
இதில் மிகவும் பிடித்த விஷயம் மீனாட்சியின் பாத்திரப்படைப்பு!தற்கால படங்கள் பலவற்றில் காட்டப்படும் "independent ,goal oriented ,நிறைய படிக்கணும், career ல் உச்சம் தொட வேண்டும்,ஆண்களை விட பெண்கள் மேல்" அப்படி இப்படியென்று எந்தவித template க்குள்ளும் சிக்காத ஒரு பாத்திரப்படைப்பு.
வசதியான ஒருவனை திருமணம் செய்துகொள்ள வேண்டும்.படிப்பு வேலை எந்த பிடுங்கலும் இல்லாமல் chillout செய்ய வேண்டும் என்பதே இவர் ஆசை.
நம்மிடம் கூடுதல் பணமிருந்தால் அதை வங்கி வைப்பு நிதியில் போட்டால் அதிக லாபம் வருமா?தங்கத்தில் போடலாமா?etc..etc.. என்று சிந்திப்பது போல இவர் யாரை திருமணம் செய்தால் அதிக return of investment கிடைக்கும் என்பதாக கணக்கு போட்டு வின்சென்ட்டை ஏற்க மறுத்து முகுந்தன் உண்ணியை திருமணம் செய்கிறார்.
தற்கால திருமணங்கள் 90% இப்படி Return of investment என்ற கணக்குப்படி தான் நடக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.மேலும் முகுந்தன் உன்னிக்கு சகல விதத்திலும் மருத்துவமனை ஊழியராக உதவுவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது சாமர்த்தியமான யோசனைகளையும் கொடுக்கிறார்.அவ்வகையில் இறந்து போன வேணு வக்கீல்(சூரஜ்) கொடுக்கும் யோசனைகளை விடவும் இவை நன்றாக இருக்கிறது.ஒருவகையில் முகுந்தன் மீனாட்சியை திருமணம் செய்ததே இந்த சாமர்த்தியம் மிகுந்த குணத்தினால் தான் என்பதையும் மறுக்க முடியாது!
வினீத் ஶ்ரீநிவாசன் நடித்த காமெடி படங்களை பார்த்துள்ளோம்.இவ்வளவு தீவிரமான கேரக்டரில் அவர் நடிப்பதை பார்த்து இதுவே முதல்முறை.எதற்கும் பெரிதாக ஜெர்க் ஆகாமல் மிகத்துல்லியமாக கணக்கிட்டு காய் நகர்த்தும் கேரக்டரை கச்சிதமாக செய்துள்ளார்.சூரஜுக்கு இதில் பெரிய வேலையில்லை!அந்த கார் பள்ளத்தில் விழும் காட்சியில் அதீத மன திருப்தியுடன் "ஒரு கவிதை போல" என்று முகுந்தன் உன்னி சொல்லும் காட்சி ரணகளம்!
மீனாட்சியாக நடித்த ஆர்ஷா சாந்தினி பைஜு தனது சொந்த திட்டத்தின்படி முன்னகரும் ஒரு கேரக்டரில் நன்றாக பொருந்துகிறார்.குறிப்பாக பார்க்க படு வெள்ளந்தியாக தோற்றமளித்தாலும் உள்ளே அவரின் சாமர்த்தியமான காய் நகர்த்தல் திட்டங்கள் ரசிக்க வைத்தது!
குறிப்பாக படத்தின் இறுதியில் ஜோதியுடன் அவர் நடத்தும் உரையாடல்!வாழ்வில் பெரிய உச்சம் தொட்டவர்கள் எப்படி அந்த இடத்துக்கு வந்தார்கள் என்பதாக நடக்கும் உரையாடல் அற்புதம்!
பணத்தையே பிரதானமாகக்கொண்டு சக மனிதர்களை எடைபோடும் தற்கால உலகில் 'உழைப்புடா!நீதிடா! நேர்மைடா!' என்று சொல்லித்திரியும் மற்றொரு டால்டாவாகவே ஜோதிலக்ஷ்மி உள்ளார்!
ஒருவேளை மீனாட்சி அவர் இடத்தில் இருந்திருந்தால் இந்நேரம் லட்சங்களை ஃபீஸாகப்பெறும் வக்கீலாகி இருப்பார்!
ராபினாக வருபவர் தாடியுடன் வரும் காட்சிகளில் பாலகிருஷ்ணாவை(தோற்றத்தில்) நினைவுபடுத்துகிறார்!
படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக கேள்விப்பட்டோம்.இரண்டாம் பாகம் என்றாலே கொஞ்சம் தயக்கம் தான்!பார்க்கலாம்!
இதே மாதிரி ஈவிரக்கமின்றி சக மனிதர்கள் மேல் காலை வைத்து ஏறி உச்சம் தொடும் மற்றொரு கேரக்டர் என்றால் அது நமதபிமான மற்றொரு படமான சரண் இயக்கிய(கடைசி உருப்படியான படமான) வட்டாரம் படத்தின் பர்மாவை சொல்லலாம்.(நா என்ன மடையனா?மாங்காயா??)
அடங்கப்பா!நமக்கு பிடித்த ஒரு தமிழ்ப்படத்தை சொல்ல வேண்டுமென்றால் பதினெட்டு வருஷம் back ல போக வேண்டியிருக்கு!
வாழ்க தற்கால போராளி தமிழ் இயக்குனர்கள் & அவர்களுக்கு முட்டு கொடுக்கும் ஒலக விமர்சகர்கள்!
No comments:
Post a Comment