சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி ஒருவர் ஒரு சூழலில் எதற்காக இப்படி நடந்து கொண்டார் என்பது சில நேரங்களில் பெரும் புதிராக இருக்கும்.சில நேரத்தில் ஒருவரது சொந்த நடவடிக்கையே அப்படியான கேள்விகளை எழுப்பும்.பதில் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்.
அப்படியான ஒரு சம்பவத்தை மையமாக கொண்டதே இப்படம். படத்தின் தலைப்பே அதுதான்( As Seen by the Rest)! Rashomon பாணியில் ஒரே சம்பவத்தை பலர் பலவிதமாக சொல்வதாக காட்டினாலும் அதை ஆய்த எழுத்து மாதிரி விடலைத்தனமாக இல்லாமல் முதிர்ச்சியான தொனியில் எடுத்துள்ளார் ரக்ஷித் ஷெட்டி.
கதையை நேர்கோடாக ஒருவர் சொல்வதாகவோ அல்லது இயக்குனரின் ஒற்றைக்கோணத்தில் மட்டும் கதை செல்வதாகவோ காட்டியிருந்தால் இவ்வளவு மர்மம் இவ்வளவு கிளைக்கதைகள் இவ்வளவு உணர்ச்சிகள் திரையில் காட்டியிருக்க முடியாது.
மேலும் படத்தின் பலங்கள் என்று சொன்னால் பலவற்றை கூறலாம்.
முக்கியமாக கதை நடக்கும் மால்பே என்ற கடற்கரை கிராமம்.மீனவர்கள் மீன்பிடி படகுகள் மீன் விற்கும் பெண்கள் பல்வேறு படகுகளை மீன்பிடிக்கு பயன்படுத்தி பெரும்புள்ளியான ஒரு பிரபலம்,அவருக்கு இருக்கும் அடியாட்கள்,அந்த அடியாட்கள் செய்யும் பல்வேறு அடிதடி கொலைகளால் கிராமத்தின் சமநிலையில் ஏற்படும் கடும் அதிர்வுகள் அதனால் வரும் எதிர்வினைகள் என்று cascading effect என்பார்களே! அந்தமாதிரியான ஒரு விஷயத்தை அற்புதமாக பயன்படுத்தியுள்ளார் ரக்ஷித் ஷெட்டி.
சப்த சாகரதாச்சே யெல்லோ படத்தில் கடற்கரை என்பது கதையின் போக்கில் உயிர்நாடியாக இருந்தது போல இப்படத்திலும் அப்படியே! முன்னா(கிஷோர்) வரும் கடற்கரையோர காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அத்தனை இயல்பாக இருந்தது!
மற்றொன்று புலிக்கலைஞர்களின் வாழ்க்கை காட்டப்பட்ட விதம்.அசோகமித்திரன் எழுதிய புலிக்கலைஞன் சிறுகதையை நினைவுபடுத்தியது.அந்த சிறுகதையை கடுகு என்ற படத்தில் கொத்து புரோட்டா போட்டிருந்த கொடுமையும் நினைவுக்கு வந்தது .
படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை(Ajaneesh Loknath)மற்றொரு பலம்.ஒருகாலத்தில் மற்ற மொழி சினிமாக்களுக்கு முன்னோடியாக தமிழ் படத்தின் கதையோட்டத்திற்கு பெரும்பலமாக பாடல்களையும் பின்னணி இசையையும் ஒரு மொட்டை விடாமல் கொடுத்து கொண்டிருந்தார்.பின் அறிமுகமான எந்த இசையமைப்பாளரும் அதை இப்போதுவரை செய்ய முடியவில்லை/தெரியவில்லை என்பது பெரும் அவலம்!
குறிப்பாக அந்த சிறுவர்கள் பாடும் "மெடிசின் பேப்பர்" பாடல் ஒருபுறம் உற்சாகமாக இருந்தாலும் மற்றொருபுறம் கதையின் போக்கில் சில தீவிர நகர்வுகள் பாடலின் இடையே காட்டப்படுகிறது.
ரிஷப் ஷெட்டி, ரக்ஷித் ஷெட்டி இருவரும் நடித்துள்ளார்கள். நாந்தாண்டா டைரக்டர் எல்லா க்ளோசப் ஷாட்டும் எனக்கே வைங்கடா என்பதான எந்த அலட்டல்களும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் ரிச்சி கதாபாத்திரத்தை விடவும் அதிக காட்சிகள்,கனமான காட்சிகள் கொண்ட கதாபாத்திரங்கள் படத்தில் அதிகம்.(காசர் தாக்கப்பட்டார் - கும்மாங்கோ)
இதில் நடிப்பில் அசத்தியவர்கள் இருவர். டெமாக்ரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் மாஸ்டர் சோஹன்- வெகு இயல்பாக வசனம் பேசி நடித்துள்ளான்."ரெண்டு கூலிங் கிளாஸ் வச்சிருக்க .ஒன்னு எனக்கு குடேன்" என்று முன்னாவை கேட்பதாக இருக்கட்டும் படகுக்கு அடியில் என்ஜினில் வேலை செய்யும் போது முன்னா இடையில் மேலே ஏறி வந்ததும் "ஒரு சின்ன பையனை இருட்டுல விட்டுட்டு வர்றியே" என்று கோபமாக பேசுவதாக இருக்கட்டும் அட்டகாசம்!மற்றொருவர் அச்யுத் குமார் .
மீன் பிடிக்கும்போது கிடைத்த வினோத மரத்துண்டு கிடைத்தது துவங்கி தனக்கு ' சனி பிடித்துவிட்டதாக ' பயப்படுவது துவங்கி,பிறகு அந்த மரத்துண்டு உடைபட்டதும் உண்மையில் அது என்ன என்று தெரிந்து மகிழ்வதும்,அதை அதிக விலைக்கு விற்க முற்பட்டு ஏமாந்து போனதும்,பிறகு கொஞ்சம் கொஞ்சமாக schizophrenia வுக்குள் வீழத்துவங்கி எந்நேரமும் காகம் கரையும் சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதை பொறுக்காமல் சுருண்டு அழுவதும் என்று பிரமாதமாக நடித்துள்ளார்.இடையில் புலிவேஷம் போட்டு ஆடியபடி வரும்போது மிரட்சியோடு மரத்தை அண்ணாந்து பார்த்தபடி செல்லும் காட்சி உச்சம்!
மற்றொரு பிடித்த விஷயம் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம்.Sin City படம் முழுக்க படமாக்கப்பட்ட விதம் தெரிந்ததே! அந்தப்பாணியில் சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளனர் . ரகு (ரிஷப் ஷெட்டி) மும்பையில் இருந்து அந்த சிகப்பு பையுடன் மால்பேவுக்கு தப்பிவரும் காட்சிகள், மீன் பிடிக்கும்போது மரத்துண்டு கிடைக்கும் காட்சியில் ஒரு காகம் அதையெல்லாம் பார்ப்பதாக காகத்தின் பின்னிருந்து படமாக்கியது போன்ற ஒரு காட்சி இவைகள் புதுமையாக இருந்தது.கடற்கரையோர காட்சிகள் நாமே அங்கு அமர்ந்திருக்கும் உணர்வை தந்தது!
மேலும் ரிச்சி ரகுவிடம் சொல்லும் அந்தக்கதை!Cuban kid , மாண்ட்வா kid என்று டோனி மோண்டானா (Scarface) மற்றும் விஜய் (அக்னீபத்) கதாபாத்திரங்களின் கதையை சொல்லியது ரணகளம்!
"
ரிஷப் ஷெட்டி, ரஷித் ஷெட்டி, ராஜ் ஷெட்டி ஆகியோர் கன்னட சினிமாவை வேறொரு உயரத்திற்கு கொண்டுபோக போகிறார்கள்" என்று
ஹரன் பிரசன்னா ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.மற்ற இரண்டு ஷெட்டிகள் பற்றி நமக்கு தெரியாது(இப்பத்தானே கன்னட படங்களையே பார்க்க ஆரம்பித்துள்ளோம்). ரஷித் ஷெட்டி நம்பிக்கை அளிக்கிறார்!
No comments:
Post a Comment