Sunday, 5 July 2015

இரானிய படங்கள் பற்றி...
                      இரானிய படங்கள் பார்த்தவரையில் அதில் ஒரு பொதுக்குணம் காண முடியுது.எல்லா படத்திலும் ஒருவித மசோகிச தன்மை தூக்கலாக வெளிப்படும்  அதாவது தன்னைத்தானே வருத்திக்கொள்வது,கடுமையான சூழலுக்கு வேண்டுமென்ற தங்களை ஆட்படுத்திக்கொள்வது,இக்கட்டான சூழலில் ஒருவித இன்பம் காண்பது,பிறர் தம்மை அவமதிக்க,அடிக்க உதைக்க அனுமதிப்பது.இவை அனைத்திலிருந்தும் விடுபட சந்தர்ப்பம் வரும்போதும் அந்த கதாபாத்திரம் விடுபடாது.இந்த துன்பக்கடலிலேயே அழுகாச்சியோடு நீச்சல் அடிப்பதையே அது விரும்பும்.எப்போதும் ஒடுக்குமுறை ஆட்சியில் வாழ்வதனாலேயே அத்தகைய மனநிலை அவர்களுக்கு வந்திருக்கும் என்றே தோன்றுகிறது.
          இந்தத்தன்மையை நீங்கள் கே.பாலச்சந்தர் படங்களில் காணலாம்.அவள் ஒரு தொடர்கதையில் குடும்ப பார சூழலில் இருந்து விடுபட சந்தர்ப்பம் கிடைக்கும்போது விடுபடாத சுஜாதா,பைரவிக்கு புள்ள இல்லைங்கிற குறையை தீர்த்துவைக்க பல்வேறு ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே ஜேகேபி'ன் வாரிசை பெற்று பைரவியிடம் கொடுத்திவிட்டு மஞ்சள் சூரிய வெளிச்சத்தில் விலகிச்செல்லும் சிந்து(அதே டிட்டோ இன் கல்கி),காதல் தோல்வியில் இருந்து மீண்ட கமல் ரேவதியோடு மகிழ்ச்சியாக செல்லும் கார் வெடித்து சிதறுவதாக முடியும் புன்னகை மன்னன் என்று பலப்பல உதாரணங்கள் சொல்லலாம்.இது இயக்குனரின் சேடிச மனத்தாலா?அல்லது அவர் படைக்க விரும்பியது மசோகிச கதாபாத்திரங்களையா?என்று பட்டிமன்றம் வச்சித்தான் முடிவு செய்யோணும்.
                   இப்ப இதே போன்றதொரு தன்மையைத்தான் நான் இரானிய படங்களில் பார்க்கிறேன்.இரண்டு உதாரணங்கள்.சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தில் தந்தையும் மகனும் ஒரு பங்களாவில் தோட்டவேலை செய்து அவர்கள் வாழ்நாளிலேயே காணாத ஒரு பெரிய தொகையை சம்பளமாக பெற்றுக்கொண்டு வீடு திரும்புவார்கள்.'யப்பா!குடும்பத்துக்கு ஒரு விடிவு வந்துட்டுதா!' என்று நாம் என்னும் வேளையில் சைக்கிள் ப்ரேக் பிடிக்காமல் போய் இருவரும் கீழே விழுந்து அந்தப்பணம் முழுவதும் மருத்துவ செலவுக்கு காலியாவதாக காட்டியிருப்பார்கள்.
            பலரும் (சுகாசினி அம்மையார் இதுபற்றி அரைமணிநேரம் டிவியில் புகழ்ந்த)படமான Colour of Paradise படத்தை சமீபத்தில் பார்த்தேன்.இவ்வளவு குரூரமான படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. குரூரமான எவ்வளவோ படங்களை நான் பார்த்திருக்கிறேன்.வித்தியாசம் என்னவெனில் அவை பார்த்த உடனேயே அந்த குரூரத்தன்மை தெளிவாக தெரியும்.ஆனால் இப்படத்தில் அந்த குரூரம் அடி ஆழத்தில் காண முடிகிறது.
        என்ன கதை?பார்வையில்லாத ஒரு சிறுவன்.அவனுக்கு இரண்டு சகோதரிகள் பாட்டி தந்தை.இவனுக்கு பார்வையில்லாததால் கிராமத்திலேயே தனது சகோதரிகளுடன் படிக்க முடியாமல் போகிறது.நகரத்தில் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கிறான்.போர்டிங் ஸ்கூல்.விடுமுறைக்கு கிராமத்துக்கு வருகிறான்.அங்கே நடக்கும் சம்பவங்களே படம்.
          இதில் என்ன சொல்ல வருகிறார்கள்?(பொதுவா இந்தே மெசேஜ் பொடலங்கா படங்களே எனக்கொரு ஒவ்வாமையை உண்டாக்கிவிட்டது தனிக்கதை).பார்வையற்ற சிறுவனை தொடர்ந்து அவனது தந்தையும்/பள்ளி மாணவர்களும்  மனரீதியாக டார்ச்சர் செய்துகொண்டே இருப்பார்களாம்.அவன் கடைசியில் இறந்த(அதாவது இயக்குனரால் திரையில் சாகடிக்கப்பட்டபின்)பின் சொர்க்கம் சென்றதாக முடிக்கப்பார்களாம்.
          அதாவது மாற்றுதிறனாளிகளை சுற்றி இருப்பவர்கள் தொடர்ந்து உடல்/மனரீதியாக டார்ச்சர் செய்தாலும் பாதகமில்லை.கடைசியில் அந்த நபர் சொர்க்கம்தானே செல்வார்!என்பதாகத்தான் இதை புரிந்துகொள்ள முடிகிறது.
அதாவது இந்த வாழ்க்கையில் செத்து சுண்ணாம்பானாலும் அடுத்த வாழ்க்கையில் ஏசி ரூம் கெடக்கும்டா என்பதே இதன் கோட்பாடு.எவ்வளவு அபத்தமான ஒரு சிந்தனை?இருக்குற வாழ்க்கையை முதலில் ஒழுங்காக வாழ இயலாத நிலையில் இருக்கா இல்லையான்னே உறுதியாக தெரியாத ஒரு வாழ்க்கையை பற்றி சிலாகிப்பது குரூர தன்மையல்லாது வேறென்ன என்று தெரியல.
           இன்னொரு விஷயம்.பெரும்பாலான இரானிய படங்கள் emotionally draining ஆக இருப்பது கடும் அயர்ச்சியை உண்டுபண்ணுகிறது.எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கு இப்படங்களை பார்க்கும்போது..அதனாலேயே நான் இரானிய படங்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.
         இது என் கருத்து மட்டுமே!அவரவர் ரசனைகள் மாறுபடலாம்!