Wednesday 2 September 2020

Reflections in a Golden Eye (1967)

                              அசோகமித்திரன் கதைகளை வாசிக்கும்போது    'இவ்வளவு எளிமையா?' என்ற எண்ணமே முதலில் ஏற்படும்.பிறகு கதை மனவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து விரிந்து பல்வேறு புது பரிமாணங்கள் வெளிப்பட்டு  வியக்க வைக்கும்.இப்படம்   அப்படித்தான்.
                           லாஸ்ட் டேங்கோ இன் பாரிஸ் படத்தில் ஒரு இழப்பு ஏற்படுத்திய மன விரிசலை பிராண்டோ கதாபாத்திரம்  புறவய ரீதியில்  வெளிப்படுத்துவதாக இருந்தால் இப்படத்தில் அடக்கி வைக்கப்பட்ட ஒருபாலின விழைவு அகவயமாக கடும் விரிசலை ஏற்படுத்துகிறது. க்ளாஸ் எடுக்கும் காட்சியில் மேஜர் வெல்டன்  (பிராண்டோ)  திடீரென்று  பேசுவதை நிறுத்திவிட்டு உடைந்து அழும் காட்சி படத்தின் உச்சகட்ட காட்சிகளுள் ஒன்று!இந்த அண்டர்ப்ளே என்ற வார்த்தையை க்ளீஷே ஆக்காமல் இருந்திருந்தால் இங்கே அதை பயன்படுத்தியிருக்கலாம்!


 

 

        படம் வந்த சமயத்தில் திரையரங்கில் அந்த அழும் காட்சி வந்தபோது பார்வையாளர்கள் சிரித்ததாக சொல்வார்கள்!எருமைத்தோல் போர்த்தப்பட்ட  ஆசாமிகளால் செய்ய முடிந்தது அதுதான்!

               ஒருபுறம் அடக்கப்பட்ட ஒருபாலின  விழைவுகள் உண்டாக்கிய  மன கொந்தளிப்புகள் அகவயமாக இறுக்க இன்னொருபுறம் புறவய இறுக்கங்கள் தனி.அதில் ஒருபக்கம் தனது பலவீனங்கள் முழுமையாக தெரிந்த தனது மனைவி தன்னை மிக இழிவாக நடத்துவதோடு மட்டுமல்லாமல் கணவனுக்கு தெரிந்தே வேறொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்ளுதல்.

இன்னொரு பக்கம் ப்ரைவேட் வில்லியம்ஸ்   வெல்டனின் பலகீனங்களை ரகசியமாக வீட்டில் உளவு பார்த்து தெரிந்துகொண்டு தொடர்ந்து வெல்டனை கடுப்பேற்றும் விதமாக பல்வேறு வினோதமான செயல்களை செய்வது என்று இருப்பக்கமும் கடும் இறுக்கத்தில் சிக்கி தவிக்கிறார் வெல்டன்.


                         

மார்லன் பிராண்டோவின்  பகுதி ஒருபுறமிருந்தால் இன்னொரு புறம் கர்னலின் மனைவியாக வரும் அலிசன் லேங்டன் பற்றி சொல்ல வேண்டும்!In Cold Blood என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவலில் வரும் ஹெர்பர்ட் கிளட்டரின் மனைவி பான்னியின்  தன்மைகளை கொண்டவராக உள்ளார்.


                             பான்னி கிளட்டர் கணவன் இல்லாத தருணங்களில் மிகமுக்கிய முடிவுகள் எடுக்கவேண்டி இருந்தால் பதறிப்போய் அதில் இருந்து தப்பிக்க   தனது அறைக்குள் சென்று தாழிட்டுக்கொள்பவர்.

Bonnie Clutter
Bonnie Clutter


                         இந்த படத்தில் அலிசன் கதாபாத்திரம்(ஜூலி ஹாரிஸ்) வாழ்வது வேறொரு உலகில்!இந்த உலகின் சிறு சத்தங்கள் கூட அவரை மிரள வைக்கிறது!தனது தனிப்பட்ட உலகிலிருந்து இந்த நிஜ உலகிற்கு அழைத்து வரும் எதுவும் அவருக்கு கடும் பதற்றத்தை உண்டாக்குகிறது.அலிசனின் தனி உலகம் குறித்து எவ்வித புரிதலும் இல்லாதவராக கணவன் மாரிஸ்.அலிசனின் உலகில் நுழையக்கூடிய ஒரே நபர் பணியாள் அனக்லெடோதான்!ஒவ்வொரு முறை நிஜ உலகின் ஏதோ ஒரு கூறு அலிசனின் மிக பலகீனமான சமநிலையை குலைக்கும்போதேல்லாம் அவரை மீட்டெடுத்து ஆற்றுப்படுத்துவது அனக்லெடோதான்!

Alison

    அனக்லெடோவாக வரும்  சோர்ரோ டேவிட் என்பவர் அசாத்தியமாக நடித்துள்ளார்!அவரின் ஒவ்வொரு உடல்மொழியும் வலிந்து திணித்ததாகவோ செயற்கையாக வரவழைத்துக்கொண்டதாகவோ ஒரு இடத்திலும் காண முடியவில்லை!ஒரு நதியின் இயல்பான நீரோட்டம் போல அவர் நடித்துள்ளார்.இப்படியான ஒரு அசாத்திய திறமைசாலி இந்த ஒரே படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பது சோகம்!

Anacleto & Alison


     படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்கள்தான்!கொஞ்சம் அசந்தாலும் ஒரு மேடை நாடகம் போல தெரிந்துவிடும் அபாயம் இருந்தாலும் அப்படி எதுவும் நிகழாமல் பார்த்துக்கொண்டுள்ளார் இயக்குனர்.


Private Williams


 ஆனால் படம் நன்றாக இருந்தும் இது மார்லன் பிராண்டோவின்/எலிசபெத்டெய்லரின் ஆகச்சிறந்த படங்களுள் ஒன்றாக சொல்லப்படுவதில்லை!காரணம் நான் முதல் பத்தியில் குறிப்பிட்டதுதான்!அந்த "கொஞ்சம் கொஞ்சமாக விரியும்தன்மை கொண்ட படைப்புகள் உடனடி நிறைவுணர்வுதேடி படம் பார்க்கவரும்/புத்தகம் வாசிக்கும் ஆசாமிகளிடம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.அவர்களுக்கு அவை மிக சுமார் ராகமாகவே தோன்றும்! அதற்காக படைப்பை குறைசொல்ல கூடாது!

   படத்தின் அசாத்திய ஒளிப்பதிவையும் குறிப்பிட வேண்டும்!டிஜிட்டலில் கருப்பு/இருட்டு சாணி அடிச்சாமாதிரி படமாகும் வேளையில் இப்படத்தை பார்க்கும்போது  ஃபிலிமில் படமாக்கும் மறந்துபோன அற்புத  பழக்கத்தை சிலராவது நினைவு கூர்வர்!