Friday, 29 September 2017

Das Experiment 2001

                                           நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்; எதிர்த்தாலும் உடன்பட்டு போனாலும் நாம்அனைவருமே  அதிகாரத்தின் கட்டுப்பாட்டில்தான்  இருக்கிறோம்.அரசு அதிகாரம்,அரசுகள் ஆதரவு  பெற்ற  பன்னாட்டு நிறுவனங்கள்,அரசு  சிக்கலில்லாமல்  நடக்க  சிறுவயதிலிருந்தே மக்களை  அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு செல்ல  பழக்கப்படுத்தும்  கல்வி நிறுவனங்கள் என்று பல  அதிகாரங்களின்  பிடியில்தான்  நாம்  அனைவருமே   இருக்கிறோம்.
           அது  சனநாயக  அரசோ  சர்வாதிகார  அரசோ  பழங்கால  மன்னராட்சிகளோ  எதுவாக இருப்பினும்  அரசு  என்பது   மக்களின்  மீது  அதிகாரம்   செலுத்தி  ஆள்வது! எந்தளவு  அதிகாரம்;வெளிப்படையான  அதிகாரமா?அல்லது சனநாயக போர்வையில்  அதிகாரமா  என்பதில்   வேண்டுமானால்  வித்தியாசங்கள்  இருக்கலாம்!
             இப்படத்தில்   ஒரு   பரிசோதனைக்காக சில  நபர்கள்  தேவைப்படுவதாக  விளம்பரம்  வருகிறது.நாலாயிரம்  பிரான்குகள்  பரிசோதனையின் முடிவில்  வழங்கப்படும்   என்பதாக  விளம்பரம் சொல்கிறது.வேறெதையும்  விளக்குவதில்லை.

             இந்த பரிசோதனை என்பது ஏதோ இந்த கதைக்காக யோசிக்கப்பட்டதல்ல!Stanford prison experiment என்று 1971 ல் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட நிஜ பரிசோதனையை ஒட்டியே இப்படம் அமைந்துள்ளது.அந்த பரிசோதனைக்கு ஸ்பான்சர் செய்தது அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி நிறுவனம். அதில்  கல்லூரி  மாணவ  மாணவிகள் கைதிகளாகவும் காவல்  அதிகாரியாகவும்  இருக்க  ஒப்புக்கொண்டார்கள்!அதிலும்  உடல்  ரீதியான  சித்திரவதைகள்  இல்லாவிடினும்  உளவியல்  ரீதியான  சித்திரவதைகள் தாராளமாக  கைதிகள் மேல்நேரடியாகவோ மறைமுகமாகவோ திணிக்கப்பட்டன.
          ஜெயில்  செட்டப்.பாதி  நபர்கள்  கைதியாகவும்  மீதி  பேர்  காவல் அதிகார்களாகவும்  நடிக்க  வேண்டும்.கைதிகளுக்கு  உள்ளாடைகள் இல்லாத ஒரே ஒரு   "ஆபரேசன்   பேசன்ட்" உடுப்பு.காவல்   அதிகாரிகளுக்கு  வழக்கமான  காவல்  உடுப்பு  லத்தி  கைவிலங்கு  உண்டு..ஆனால்  அவர்கள்  கைதிகள் மேல  வன்முறையை செலுத்த  உரிமையில்லை  என்பது  முக்கியமான  விதி.


           மேற்கண்ட   கண்டிசனை   கண்டதும்  "ஆகா!வன்முறை  இல்லை!அப்போ  கைதிகள்  நிம்மதியா   இருக்கலாம்"  என்ற  எண்ணம் எழலாம்!ஆனால் இங்கே  தடுக்கப்பட்டிருப்பது  உடல்  ரீதியான  வன்முறை  மட்டுமே!அதாவது  அடிப்பது  உதைப்பது  போன்று.மற்றபடி  மனரீதியான  வன்முறைக்கு  தடையில்லை!  அதாவது  கைதியின்   கையில்   விலங்கு   மாட்டி   தனியே  உணவு  நீர்   கொடுக்காமல் நாள் கணக்கில்  அமரவைப்பது(வாயில்  பிளாஸ்திரி  ஒட்டி)  என்பது போன்ற  சித்திரவதைகளுக்கு  தடையில்லை.
          ஆரம்பத்தில்  கைதி-போலீசு  வித்தியாசம்  என்பது  பெரிதாக  இல்லை!கைதிகளாக  நடிப்பவர்கள்  போலீசாக இருப்பவர்களை  கேலி  செய்கிறார்கள்,கொஞ்சம் வார்த்தை  ரீதியில்  அவமானப்படுத்தவும்  செய்கிறார்கள்.அதை போலீசு வேடத்தில் இருக்கும்  சிலர்  ஜாலியாக  எடுத்துக்கொள்ள,  வேறுசில போலீசுகள்   இதை கவுரவ பிரச்சனையாக பார்க்கிறார்கள்.அத்தோடு நில்லாமல்  ஜாலியாக  எடுத்துக்கொண்ட  போலீசுகளை  "நீ போலீசு"  என்று நினைவுபடுத்துகிறார்கள்.
           கைதிகளுக்கு  வழங்கப்படும்  உணவில்  கொஞ்சம் கூட  மிச்சம் வைக்காமல்  சாப்பிட  வேண்டும்  என்பது மற்றொரு  விதி.உணவோடு   பாலும்  வழங்கப்படுகிறது.ஒரு  கைதிக்கு  பால் அலர்ஜி!குடிக்க  மறுக்கிறார்.உடனே மற்றொரு கைதி தெரிக்  பஹ்த்(கிட்டத்தட்ட இவனைத்தான் படத்தின்  நாயகனாக  காட்டுகிறார்கள்) "இத காலி  பண்ணனும்!அவ்வளவுதான?"  என்று சொல்லி  அவனே பாலை  குடிக்கிறான்.கைதிகள் ஆரவாரம்  செய்கிறார்கள்.
பஹ்த்

        அடுத்தநாள் வலுக்கட்டாயமாக  பாலை திணித்து குடிக்கவைக்க அவன்  வாந்தி  எடுக்கிறான்.
           முன்பு சொன்ன  கைதிகளின் மேல் உடல்  ரீதியானவன்முறை என்பது அனுமதிக்கப்படாத நிலையில் வேறெப்படி அவர்களை கூனிக்குறுக செய்யலாம்?சமூகத்தில் ஒரு மனிதனுக்கான  மரியாதையை தருவது அவனது உடைகள் மற்றும் சிகை அலங்காரம்.
            கைதிகளின் உடைகள் வலுக்கட்டாயமாக களையப்படுகின்றன.ஒருநாள் முழுக்க அனைவரும் நிர்வாணமாக இருக்கவைக்கப்படுகிரார்கள்.அனைவருமே கூனிக்குறுகி போகிறார்கள்.அடுத்த கட்டமாக கைதிகளிடையே நிலவும் "சமநிலையை" கலைத்துக்கொண்டே  இருக்கும்  பஹ்த்தின் தலை மொட்டையடிக்கப்படுகிறது.

                அதோடு நில்லாமல் களையப்பட்ட அவனது உடையைக்கொண்டே கழிப்பறையை கழுவி துடைக்க வைக்கிறார்கள் போலீசாக நடிக்கும் ஆசாமிகள்.உடை முழுக்க  மலக்கறை மற்றும் குமட்டும் நாற்றத்தோடு அதே உடையை திரும்ப அணிய வைக்கிறார்கள்.ஒருவனை உடல்ரீதியில் அவமானப்படுத்துவதோடு அவனை மன ரீதியில் முழுமையாக உடைத்துப்போடத்தான் எத்தனை வழிகள் எத்தனை கண்டுபிடிப்புகள்!

          மேலும் ஆட்சியதிகாரம் என்பது மக்கள் மீது நிலையாக செலுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கத்தான் சாதி,மதம்,பள்ளிகளில் நிகழ்த்தப்படும் domestication,வெகுஜன ஊடகங்கள்,வெகுஜன சினிமா போன்று பல்வேறு கருவிகள் பயன்படுகின்றன.ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மைகள் உண்டு.அவைகளை அதிகரிக்க விடாமல் அவைகளை மேலெழும்ப செய்யாமல் தடுப்பதே  ஆட்சி அதிகாரம் செய்வோருக்கும் பிற நிறுவனங்களுக்கும் தலையாய பணியாகிறது.இந்த பரிசோதனையிலும் தனித்தன்மைகள் ஒடுக்கப்படுகின்றன.குழு நடவடிக்கைகளை மீறி செயல்படுவோர் மிக கொடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.அதன்மூலம் குழுவில் உள்ள பிறர் தங்களுக்குள்ளேயே ஒடுங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

      படத்தில் தேவையில்லாததாக நான் உணர்ந்தது அந்த பெண் வேடம்.ஹாலிவுட் பாணியில் ஒரு உடலுறவு காட்சி,அப்புறம் பஹ்த்க்கும் அவளுக்குமான உரையாடலில் ஹாலிவுட் க்ளீஷேவாக சிறுவயதில் தனது தந்தை செய்த சித்திரவதைகளை(you know my old man used to lock me up in a room...blah blah) விவரிப்பது,அந்தப்பெண் அவனது அபார்ட்மெண்டில் தங்குவது,அவள் காணும் சில சர்ரியலிச பாணி கனவுகள் இதெல்லாம் தனியே துருத்திக்கொண்டு நிற்கின்றன.

          மிக முக்கியமாக குறிப்பிட விரும்பும் முரண்பாடு ஒன்று உண்டு.படத்தின் இறுதியில் இந்த பரிட்சார்த்த முயற்சியில் சிக்கிக்கொண்ட அனைவரும் காப்பாற்றப்படுகிறார்கள்...யாரால்?அரசால்!அதாவது ஒரு சிறு அதிகாரக்குழு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை நசுக்கும்போது அதிலிருந்து மக்களை விடுவிக்க அதைவிட பெரிய அதிகாரம் கொண்ட அமைப்பு தேவைப்படுகிறது ! ஒருவேளை அந்த பெரிய அதிகாரம் கொண்ட அமைப்பு அதே நசுக்கும் வேலையை செய்தால்???? என்ற முக்கிய கேள்வியை இப்படம் எழுப்புவதாகவே நான்உணர்கிறேன்.(கடைசியில்காப்பாற்றப்பட்டவர்களை கேமரா காட்டிக்கொண்டே செல்கிறது.யார் காப்பாற்றினார்கள் என்பதை காட்டாமல்!)

Thursday, 21 September 2017

துப்பறிவாளன்            மிஸ்கின் இயக்கத்தில் விஷால் என்றவுடன் படத்தை பார்க்க கொஞ்சம் தயக்கமாக, ஏன் பயமாகவே இருந்தது.காரணம் தனுசு படங்களை பார்ப்பதை பல வருடங்கள் முன்பு நிப்பாட்டியதைப்போல விசால் படங்களை தவிர்ப்பது உசுருக்கு சேதாரமில்லாம இருக்கும்(குறிப்பாக கழுத்தை ஒரு பக்கமாக வெட்டி வெட்டி பன்ச் வசனம் பேசும் அந்தக்கொடுமை!) என்பதால்!

            அதையும் மீறி இப்படத்தை பார்க்க ஒரே காரணம் மிஸ்கின்.மிஸ்கினோடு ரசனை/மனநிலை ரீதியில் உடன்படும் புள்ளிகள் பிற தமிழ் இயக்குனர்களைக்காட்டிலும் அதிகம் (பித்தநிலை-புத்தகங்கள்-கால்கள் -வயலின்,வயலின்-வயலின்-கதாபாத்திரங்களின் idiosyncrasies). மேலும் தனது படங்கள் மூலம் அட்வைஸ் எல்லாம் பண்ணாமல், க்ளீஷே தருணங்கள் வரும் நேரத்தில் பார்வையாளனே எதிர்பாராத விதமாக கதாபாத்திரங்கள் நடந்துகொள்ளுதல்(இதைப்பற்றி பிற்பகுதியில் சொல்கிறேன்),புதுமையான சண்டைக்காட்சிகள்(பிசாசு சப்வே,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ரயில்வே ஸ்டேஷன்) என்று அவரின் படங்கள் எனது அபிமான தமிழ்ப்படங்கள் பட்டியலில் தவறாது இடம்பெறும்.

          ஆர்தர் கொனன் டாயில் படைத்த ஷெர்லாக்-வாட்சன் கதாபாத்திரங்களை பின்பற்றி தமிழிலேயே பல இருநபர்-டீம் கதாபாத்திரங்கள் வந்துவிட்டன.கணேஷ்-வசந்த்,விவேக்-விஷ்ணு என்று குறிப்பிடலாம்.ஒரு கேரக்டர் அசாத்திய புத்திசாலித்தனமாகவும் இன்னொரு கேரக்டர்(side kick) கொஞ்சம் மந்தமாக ,சில வேளைகளில் ஜொள்ளு பார்டிகளாகவும்(வசந்த்&விஷ்ணு),இக்கட்டான நேரத்தில் உதவுபவர்களாகவும்  படைக்கப்பட்டதுண்டு.

              இதில் துப்பறிவாளன் கணியன் பூங்குன்றன் ஷெர்லாக் ஹோம்ஸின் தன்மைகளின் சாயல் கொண்டவர்.(படத்தின் கதையே இரவில் கொல்லப்பட்ட நாயில் இருந்துதான் துவங்குகிறது.The curious incident of the dog in the nighttime!) வீட்டிற்குள் யார் வந்திருக்கிறார்?அவர் எப்படிப்பட்டவர்?எதற்காக வந்திருக்கிறார்?தொலைந்து போன கணவன் மாலைக்குள் வருவான் என்றெல்லாம் விசாரிக்காமலேயே கண்டறியும் வல்லமை கொண்டவர்.ஆனால் ஷெர்லாக் –கணியன் வேறுபாடும் மிகமுக்கிய புள்ளி ஒன்று உண்டு.
       அன்பு கருணை இரக்கம் எதுவுமில்லாத பாலவனைமான உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு துளி மனிதம் மீதம் இருப்பதை காட்டுவது மிஸ்கினின் ட்ரேட்மார்க்  பாணி. ஷெர்லாக் ஒரு sociopath.ஆனால் இதில் மேற்சொன்ன அந்த ஒரு துளி மனிதம் நிரம்பிய மனிதராகவே கணியன் உருவாக்கப்பட்டுள்ளார் .குறிப்பாக அனு இம்மானுவேல் கதாபாத்திரம் சம்மந்தப்பட்ட காட்சிகளில் கணியன் உணர்ச்சிவயப்படக்கூடியவராக;இரக்க உணர்வு கொண்டவராக;பிறர் நலனில்(அதாவது வழக்கு சாராத நபர்கள்) அக்கறை செலுத்துபவராக காட்டப்படுகிறார்.ஆனால் ஷெர்லாக் இப்படிப்பட்டவர் அல்ல!சொந்த அண்ணனையே கண்டுக்காம போகக்கூடியவர்.
         [Spoiler Alert]   
     ஆனால் இந்த கணியன் கேரக்டரின் அந்த துப்பறியும் தன்மை எந்நேரமும் இருக்கா? என்றால் இல்லை என்பதே பதில்.உதாரணமாக அபிஷேக்&ஷாஜி வீட்டுக்குள் வரும்போது விசால் கண்ணைக்கட்டிக்கொண்டிருக்கும் நிலையிலேயே யார் யார் வந்துள்ளார்கள் என்பதை சொல்கிறார்.ஆனால் ஹோட்டல் அறையில் ஜான் விஜய் கொல்லப்பட்டதும் ஃபயர் எக்ஸிட் வழியே கொலையாளியை பிடிக்க செல்பவர் ஒரு அறை வாசலில் ஆண்ட்ரியா நிற்பதை பார்க்காமலேயே வேறு திசையில் செல்வதாக காட்டியது கதாபாத்திரத்தின் திறன் consistent ஆக தொடராமல் போன உணர்வை கொடுக்கிறது.

           நான் கவனித்த –ஒலக விமர்சகர்கள் சிலர் வைத்த குற்றச்சாட்டு- எல்லா கதாபாத்திரங்களும் மிஸ்கின் போலவே நடிப்பதாக குறை கூறியிருந்தார்கள்.இதற்கு முன்னர் வந்த மிஸ்கின் படங்களில்(பிசாசில் கொஞ்சம் ஜாஸ்தி) இருந்ததை நான் மறுக்கவில்லை.ஆனால் இப்படத்தில் அப்படி அதிகமாக துருத்திக்கொண்டு தெரியவில்லை என்பதே என் எண்ணம்.விசால் தன் பாணியில் நடிக்காமல் மிஸ்கின் பாணியில் நடித்தது  பெரிய ஆறுதல்.இல்லாட்டி தனது ட்ரேட்மார்க்-நானும்-மதுரக்காரன்தாண்டா அங்க சேஷ்டைகள் செய்திருப்பார்.ஆனால் பிற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அவர்கள் சொந்த  பாணியில்தான் நடித்துள்ளார்கள்.உம்.,பிரசன்னா.
          இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம் விசால் அனுவிடம் எரிந்து விழுவது.இது அவன் இவன் படத்தில் ஆர்யா, மது ஷாலினியை மிரட்டி தலையில் குட்டி பாலத்தில் குட்டிக்கரணம் போடவைத்த காட்சியை நினைவுபடுத்தியது! “பாலாத்தனமாக” இருந்தது.பாலா க்ளீஷே வட்டத்தில் மீளமுடியாது சிக்கிக்கொண்டதை கண்டபின்னரும அவரை பாலோ பண்ண நினைக்கலாமா மிஸ்கின்?

       அப்புறம் மிஸ்கின் படங்களுக்கே உரிய ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தனித்தன்மை.ஜான் விஜய் கேரக்டரின் fetishism சென்சார் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அரசல் புரசலாக காட்டப்படுகிறது (ஆண்ட்ரியா வாஷ் ரூமில் இருக்கும்போது வெளியில் நின்றபடி “கேட்பது”),வினய் கேரக்டர் ஒவ்வொரு மரணம் நிகழும் முன்போ-பின்போ காபி குடிப்பது,தான் இறக்கும் வேளையிலும் நடைபிணமாக இருக்கும் தனது மனைவியை தலையணையால் அழுத்தி கொல்லும் பாக்யராஜ் என்று  கதாபாத்திரங்கள் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை பாராட்டலாம்.
       [Spoiler]    அப்புறம் இரண்டாம்  பத்தியில் சொன்ன “க்ளீஷே தருணங்கள் வரும் நேரத்தில் பார்வையாளனே எதிர்பாராத விதமாக கதாபாத்திரங்கள் நடந்துகொள்ளுதல்”----- இதில் அப்படி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆண்ட்ரியாவும் அந்த மொட்டையும் போலீசால் சுற்றி வளைக்கப்பட்டதும் அந்த மொட்டை முட்டி போட்டுக்கொண்டு தனது டி ஷர்டை கழட்டிவிட்டு ஹராகிரி(Harakiri) செய்துகொள்வது,முதல் காட்சியிலேயே இருவர் மீது விழும் “மின்னல்”.
          படத்தின் இரண்டாம் பாதியில் குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் வரும் அந்த மவுத்ஆர்கன்-பிரசன்னா-கத்தி - விஷயம் முருகதாஸ்-விஜய் படங்களில் வரவேண்டிய காட்சி.தயாரிப்பாளர் விசால் என்பதாலோ என்னவோ மிஸ்கினுக்கு சில நெருக்கடிகள் இருந்திருக்கலாம்.அதனால் வலிந்து வைக்கப்பட்ட காட்சியாகவே அது எனக்கு தோன்றியது.
   அந்த சைனீஸ் உணவகத்தில் வரும் சண்டை நன்றாக இருந்தது என்றாலும் அடிக்க வருபவர்கள் “யாய்ய்” என்று கத்தியபடியே வருவது மிஸ்கின் படங்களில் இல்லாத ஒன்று.துளிகூட ஓசை எழுப்பாமல் தாக்குவதே அவர் படங்களில் இருந்துவந்துள்ளது.விசால் அனுவிடம் “நின்ன எடத்துலையே குழி தோண்டி புதைச்சிடுவேன்” என்று  வ(ப)ழமையான வசனத்தில் மிரட்டுவது,கடைசியில் ஈரோவை கட்டிப்போட்டுவிட்டு கொல்லாமல் விட்டுவிட்டு தப்பிக்க முயலும் வில்லன் என்று விசாலுக்காகவே இவை வலிந்து வைக்கப்பட்டதாக கருதுகிறேன்.

            அரோல் கொரேலி  மிஸ்கினோடு நல்லதொரு புரிதலில் இருப்பது பின்னணி இசையில் காண முடிகிறது.மிஸ்கின் படங்களில் அடிநாதமாக வரும் வயலின் மட்டுமல்லாது இப்படத்தில் Grand Piano வையும் அற்புதமாக பயன்படுத்தியுள்ளார் அரோல்.இக்கூட்டணி தொடரட்டும்.
Jeremy Brett

     சும்மா பேய்கதை-மொக்க காமெடி-காதல் கதை-அட்வைஸ் கதைன்னு தமிழ் திரையுலகில் டார்ச்சர்கள் தொடரும் நிலையில்  ஷெர்லாக் கதாபாத்திரத்தை மிஸ்கின் தன்மையோடு கொடுக்கும் முயற்சியை கண்டிப்பாக   பாராட்டலாம்.அதேநேரம் ஷெர்லாக் டிவி சீரிஸ்கள் சாதரணமாக முக்கால் மணிநேரம்(ஜெரமி ப்ரெட்ட் சீரிஸ்) வரும்.The Hound of Baskerville போன்ற பெரிய கதைகளே ஒன்றரை மணி நேரத்தில் சொல்லி முடிக்கப்படும் என்பதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொண்டிருக்கலாம்! (Typical Sherlock ஆன –“Mercurial” Jeremy Brett ஐ குறிப்பிட்டதற்கு நன்றி மிஸ்கின்!)
  

             


            Sunday, 10 September 2017

In Cold Blood-Truman Capote

                                    கொலையாளி யார்? அவன் ஏன் கொலை செய்கிறான்?கொலை செய்யும் அந்த தருணங்கள்,அந்த தருணத்தில் அவனது மனநிலை எல்லாம் மிக விளக்கமாக கதையில் விவரிக்கப்படும்.மற்றொரு பேரலல் கதையில் அவனை(ளை) தேடும் போலீசு அதிகாரி வகை கதைகள்.கடைசியில் அவன் அகப்படுவதாக முடியும்.உம்.,Jeffrey Deaver எழுதிய லிங்கன் ரைம் சீரிஸ் .
               மேற்குறிப்பிட்ட வகையிலேயே இந்த நாவல்  சென்றாலும் மிக முக்கியமான வேறுபாடு- நாவலில் வரும் சம்பவங்கள் நிஜத்தில் நடந்தவை.கொலை செய்யப்பட்ட க்ளட்டர் குடும்பம்,ஹால்கம்ப் ஊரில் உள்ள மக்கள்,விசாரித்த அதிகாரி,மிக முக்கியமாக கொலை செய்த Dick மற்றும் Perry ஆகியோரிடம் ட்ரூமேன் கபோட்டி மற்றும் அவரது இளமைக்கால தோழி ஹார்பர் லீ (To kill a mocking bird புகழ்)துணையோடு   மிக விரிவாக நேர்காணல்களை நடத்தி அதை வைத்தே இந்த நாவலை எழுதியுள்ளார்.Non fiction வகையில் இது புதுவகையான அப்போது அறியப்பட்டது.
                              
பெர்ரியுடன் ட்ரூமன் கபோடி


                                       ஹெர்பர்ட் க்ளட்டர் அவரது மனைவி  பான்னி,மகன் கென்யன்,மகள் நான்ஸி நால்வரும் ஓரிரவில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள்.கேன்சஸ் மாகாணத்தில் ஹால்கம்ப்  கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயக்குடும்பம் க்ளட்டருடையது.வசதியான குடும்பம்.கோதுமை, மைலோ..etc..,  போன்றவைகளின் அமோக விளைச்சல் காரணமாக நல்ல வருமானம்.
                  ஹெர்பர்ட் மிக மிக நல்லவர் என்று அந்த கிராமம் முழுக்க அறியப்படுபவர்.தன் கீழே விவசாய வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களையும் தன் சொந்தக்குடும்பம் போல பாவிப்பவர்.பேசப்பட்டதற்கு அதிகமாகவே கூலி கொடுப்பவர்.மெதடிஸ்ட் சர்ச்சில் மிக முக்கிய உறுப்பினர்.4H குழுவிலும்(Head,Heart,Hand,Health).அக்குழுவில் வளர் இளம்பருவத்தினருக்கு நல்லொழுக்கம்,சமையல்,கைவினை கலை போன்ற பல விஷயங்களையும் கற்று நல்ல குடிமகன்களை தயார் செய்யும் ஒரு கிளப்.தனது மகனையும் மகளையும் அதில் ஆறு வயதில் சேர்த்து விட்டவர் ஹெர்ப்.
ஹெர்பர்ட் க்ளட்டர்

         மகன் கென்யன் கண் கண்ணாடி அணியாது எதையுமே பார்க்க முடியாதவன்.அதனாலேயே எந்தவித விளையாட்டுகளிலும் சக வயதினரோடு சேர்ந்து விளையாடமுடியாத நிலை.அந்தக்குறையை அவன் வேறுவிதமாக போக்கிக்கொண்டவன்.வீட்டின் பேஸ்மெண்டில் அவனுக்கென்று தனி சாம்ராஜ்யம்.தச்சு வேலை மூலம் விதவிதமாக மர வேலைகள் செய்வது,புத்தகம் வாசிப்பது,இசைக்கருவி வாசித்தபடியே பாடுவது(வீட்டில் பாடினால் தாய் பான்னி  உறக்கம் கலைந்துவிடுவாள் என்பதால் நான்ஸியின் வற்புறுத்தலால் பேஸ்மெண்டில் பாடுபவன்).
கென்யன்

         நான்ஸி அந்த ஊரின் டார்லிங்.பிற இளம் பெண்களுக்கு சமைக்க கற்றுக்கொடுப்பது,ஊரில் ஏதாவது திருமணம் என்றால் அதற்கு உடைகள் வடிவமைத்து தருவது,இசைக்கருவிகள் வாசிக்க கற்று தருவது என்று அனைவருக்கும் பாகுபாடு பாராமல் உதவும் பதினாறு வயது சிறுமி.
நான்ஸி


 
         ஹேர்பின் மனைவி பாபி.தொடர் பிள்ளைப்பேறுகளால் மீளமுடியாத கடும் மன அழுத்தத்தில் மூழ்கிப்போனவர்.கணவன் இல்லாத தருணங்களில் மிகமுக்கிய முடிவுகள் எடுக்கவேண்டி இருந்தால் அதில் இருந்து தப்பிக்க  பதறிப்போய் தனது அறைக்குள் சென்று தாழிட்டுக்கொள்பவர்.
பான்னி

         விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே.அவர்கள் பேசுவது காதில் விழுந்துவிடக்கூடாது என்று பயந்து தனது அறையிலேயே அடைந்து கிடப்பவர்.கடும் கோடைக்காலத்திலும் குளிரை  உணர்பவர்.
        முதல் பெண் திருமணமாகி வேற்றூரில் இருப்பவர்.இரண்டாவது மகள் தனது வருங்கால கணவனைக்காண சென்றிருக்கிறார்.வீட்டில் நான்கு பேர்.நால்வரும் கொலை செய்யப்படுகிறார்கள்.ஆனால் நகைகள் திருடப்படவில்லை.
          நிற்க...மேற்குறிப்பிட்ட அந்த க்ளட்டர் குடும்பம் கற்பனை அல்ல.நிஜத்தில் வாழ்ந்த குடும்பம்.நிஜத்தில் நடந்த கொலைகளை மையமாக வைத்து எழுதப்பட்டதே இந்த புதினம்.
       இப்போது முதலில் கூறியபடி கொலையை யார் செய்தார்?அல்லது கொலையாளி எப்படி சிக்கினார்?என்பதைத்தாண்டியதே இந்த புதினம்.ஒரு குடும்பம் கொலை செய்யப்பட்டது.அந்த குடும்பம் எத்தகைய வாழ்வை வாழ்ந்தது?குடும்ப உறுப்பினர்கள் எப்படியானவர்கள்?அந்த குடும்பம் அந்த ஊரில் எத்தகைய மரியாதையை, அன்பை சம்பாதித்து வைத்திருந்தது?இந்த கொலைகளுக்கு பிறகு அந்த குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் என்னவானார்கள்?இந்தக்கொலைகள் அந்த ஊரில் எத்தகைய பெரும் தாக்கத்தை பீதியை ஏற்படுத்தியது?கொலை செய்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்?ஏன் இக்கொலையை செய்தார்கள்?இதை விசாரிக்கும் அதிகாரியின் மன உளைச்சல் எத்தகையது? ....என்பது போல பல கேள்விகளை மிக மிக நுட்பமாக (நான் க்ளட்டர் குடும்ப உறுப்பினர்கள் பற்றி மேலே குறிப்பிட்டது வெறும் சாம்பிள்.நாவலில் மிக விளக்கமாக அவர்களின் வாழ்வு விவரிக்கப்பட்டுள்ளது) பதிவு செய்யப்பட்டுள்ளது.
             
          கொலை/கள்  பலரை fascinate செய்யக்கூடிய காலமிது.ஹிட்ச்காக் தனது படங்களில் பெண்கள் ,குறிப்பாக நடுத்தர வயதை கடந்த பெண்கள் கொலைகள் பற்றி மிக ஆவலோடு விவாதிப்பதாக பல காட்சிகளை வைப்பார்.பெண்கள் என்றில்லை பொதுவாகவே இக்காலகட்டத்தில் மட்டுமல்லாது காலம் காலமாகவே கொலைகள் பற்றிய ஈர்ப்பு ஆண் பெண் பேதமில்லாது மக்களிடையே இருந்துவந்துள்ளது .
        அதை பயன்படுத்திக்கொள்ள பல்வேறு மர்ம நாவல்கள்,திரைப்படங்கள்(ஒருகாலத்தில் whodunit வகையறா கதைகள் மிகப்பிரபலம்),நாடகங்கள் செய்தித்தாள்களில் முதன்மை பக்க பத்திகள் என்று தொடர்ந்து வந்துள்ளது.
        ஆனால் அக்கதைகளில் கொலை-ஏன்?யார்?எப்படி? இத்தோடு முடிந்துவிடும்.அந்தக்கொலைகள் ஏற்படுத்திய அந்த பாதிப்பு என்பது வாசிப்பவருக்கு கடத்தப்படாது.அதைவிட முக்கியமாக அவை கற்பனை கதைகள்.நிஜத்தில் நடந்த கொலையை மையமாக வைத்து புதினம் எழுத முயன்றதில்லை.ட்ரூமன் அதை செய்தார்.
 
                               டிக்(Dick) ஒருமுறை சிறையில் இருக்கும்போது சக கைதி  ஃபளாய்ட் வெல்ஸ் என்பவனோடு நட்பாகி பேசிக்கொண்டிருக்கும்போதுதான் வெல்ஸ், டிக்கிடம் ஹெர்பர்ட் க்ளட்டரின் கார்டன் சிட்டி ஃபார்ம் பற்றி சொல்கிறான்.ஹெர்பர்ட் க்ளட்டரிடம் தான் வேலை பார்த்ததாகவும் அவர் மிகவும் கனிவோடு நடந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் பேசப்பட்ட கூலிக்கும் அதிகமாகவே பணம் கொடுத்ததாகவும் சொல்கிறான்.மேலும் க்ளட்டரிடம் விவசாயம் மூலம் கிடைத்த வருமானம் பல ஆயிரம் டாலர்கள் உண்டு என்றும் அதை க்ளட்டர் வீட்டில் உள்ள ஒரு பெட்டகத்தில் வைத்துள்ளதாகவும் சொல்கிறான்.
ஃபிளாய்ட் வெல்ஸ்

         ஆனால் அது உண்மையல்ல.ஒரு டாலர் கொடுக்க வேண்டியிருந்தாலும் ஹெர்பர்ட் அதை காசோலையாக கொடுக்கும் வழக்கமுள்ளவர்.தன்னிடம் பைசா காசு கூட ரொக்கமாக  வைத்துக்கொள்ளாதவர்!இந்த பாதுகாப்பு பெட்டக வதந்தி வெல்சே உருவாக்கியதா?இல்லை வேறு யாரும் சொன்னதை அவன் சொன்னானா? என்பது தெரியவில்லை.
         இந்த பாதுகாப்பு பெட்டகத்தை கொள்ளையடிக்கத்தான் செல்வதாக டிக் பெர்ரியிடம் சொல்கிறான்.ஆனால் உண்மைக்காரணம் அதுவல்ல!க்ளட்டருக்கு ஒரு பதின்ம வயது மகள்  உள்ளதை அறிந்துகொண்ட டிக் அவளை பாலியல் பலாத்காரம் செய்வதற்கே அங்கு செல்கிறான்.நாவலில் இது பின்னர் தெரிவிக்கப்படுகிறது.
           ஆனால் டிக் , நான்சியை நெருங்க பெர்ரி அனுமதிக்கவில்லை."கட்டுப்படுத்த முடியாத பாலியல் உணர்வு கொண்டவர்களை கண்டாலே தாம் வெறுப்பதாகவும் அவர்களை சகித்துக்கொள்ளவே தம்மால் முடிந்ததில்லை" எனவும் பிறகு கேபிஐ(கேன்சஸ் பியூரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்) ஏஜென்டிடம் விசாரணையில் பெர்ரி சொல்கிறான்.
                   
                 இங்கே இன்னொரு விஷயத்தையும்  கவனிக்க வேண்டும்.டிக்கும் பெர்ரியும் க்ளட்டரின் வீட்டுக்கு போகிறார்கள்.டிக் அங்குள்ள நால்வரையும் கடுமையாக நடத்துகிறான்.ஆனா பெர்ரியோ "ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்?அவர்கள்தான் சொன்னபடி செய்கிறார்களே?" என்கிறான்.
           கென்யனை பெர்ரி சோபாவில் படுக்கவைத்து கை கால்களை கட்டிப்போடுகிறான்.அதன்பின் கென்யன் தொடர்ந்து இரும ஆரம்பிக்க அவன் மூச்சுவிட வசதியாக தலையணையை எடுத்து கென்யனின் தலைக்கு கீழே வைக்கிறான் பெர்ரி!
கொல்லப்பட்ட  கென்யன்

         க்ளட்டர் குடும்பத்தாரிடம் மென்மையாக நடந்துகொள்ளும் பெர்ரிதான்  நால்வரையும் கொல்கிறான்.இந்த உளவியல் முரண்பாட்டையே குற்றத்தின் ஆணிவேராக கொள்ளலாம்.
           ஹெர்பர்ட் இவர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்த தருணத்தில் இருந்தே துளிகூட பதட்டமடையாமல் பயப்படாமல் அவர்கள் மீது கோபப்படாமல் அவர்களை தாக்க முயற்சிக்காமல் அவர்கள் சொல்வதை செய்கிறார்.
              பின்னர் கேபிஐ ஏஜன்ட் ஒருவர் கூறும்போது "தனது குடும்பத்தை கொல்லத்தான் இவர்கள் வந்திருப்பதாக ஹெர்பர்ட்  உணர்ந்திருந்தால் தன் உயிர் உள்ளவரைக்கும் அதை தடுக்க அவர் போராடி இருப்பார்".பத்து ஆள் பலம் கொண்ட ஹெர்பர்ட்!
                   ஹெர்பர்ட் நினைத்தது இவர்கள் இருவரும்  (இல்லாத) பண  பெட்டகத்தை தேடி வந்துள்ளார்கள்!அது இல்லை என்று தெரிந்ததும் தங்களை இப்படியே கட்டப்பட்ட நிலையில் விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.காலையில் யாராவது தங்களை காப்பாற்றிவிடுவார்கள் என்பதே!அவர்களின் நோக்கம் கொலை என்பது கடைசி வரைக்கும் ஹெர்பர்ட்டுக்கு தெரியவில்லை.
        இவர்களைக்கண்டு பான்னி  பதட்டமடைந்து அழ ஆரம்பிக்கிறார்.அவரை கழிப்பறையில் அமரவைக்கலாம் என்கிறான் டிக்.பெர்ரி அவர் அமர வசதியாக டைனிங் ஹால் நாற்காலி ஒன்றை எடுத்து பாத்ரூமில் போடுகிறான்.
         ஆனால் நான்ஸி லேசாக பயந்தாலும் பதட்டமடைந்ததாக காட்டிக்கொள்ளவில்லை.நான்சியிடம் பணமிருந்தால் கொடுக்கும்படி மிரட்டுகிறார்கள்.அவள் பர்ஸை திறந்து பார்த்தால் ஒற்றை வெள்ளி நாணயம் மட்டுமே உள்ளது.அதை பெர்ரி எடுத்ததும் கைதவறி கட்டிலுக்கு கீழே உருண்டோட அதை மிகவும் சிரமப்பட்டு எடுக்கும்போது பெற்றி நினைக்கிறான்  "மில்லியன் டாலரை கொள்ளையடிக்க வந்தோம்!ஆனால் இப்போதோ ஒற்றை டாலருக்கு இப்படி சிரமப்படுகிறோம்" என்று மனதிற்குள் வெட்கப்படுகிறான்.
           மற்றவர்களைப்போல நான்சியை அவள் கட்டிலிலேயே கட்டிபோடுகிறார்கள்.கைகளை கட்ட ஒரு கட்டு.கால்களை பெட்போஸ்டோடு சேர்த்து ஒரு கட்டு.நான்சியையும் அவ்வாறே!
கொல்லப்பட்ட நான்ஸி

            ஹெர்பர்ட்டை மட்டும் அழைத்து செல்கிறார்கள்.வீடுமுழுக்க தேடியும் அந்த பெட்டகம் இல்லை!ஹெர்பர்ட் சொன்னது உண்மை என்பது அவர்களுக்கு புரிகிறது!அந்த உண்மையின் வெப்பம் அவர்களை சுடுகிறது!பேஸ்மெண்ட்டுக்கு அழைத்துச்சென்று அவரின் கைகளை மேலே செல்லும் பைப்பில் காட்டுகிறார்கள்.
            கென்யனின் ரேடியோவை காரில் வைத்துவிட்டு வரச்சொல்கிறான் டிக்.பெர்ரி அதை காரில் வைக்கும் நேரத்தில் அப்படியே டிக்கை  விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்றே நினைக்கிறான்.ஆனால் திரும்ப வருகிறான்,
          காரணம் டிக் மீதான அவனது ஈர்ப்பு.தான் சிறுவயதில் இருந்தே தன்னந்ததியனாய்  பெர்ரி.நண்பர்கள் யாருமில்லை!ஸ்காட்டிஷ் தந்தைக்கும் பூர்வகுடி இந்திய பெண்ணிற்கும் பிறந்தவன் பெற்றி.தாய் குடித்தே அழிந்தவள்.தந்தையோடு தங்கம் தேட அலாஸ்கா செல்லும்வழியில் சண்டைபோட்டு பிரிகிறான்.அவனது தந்தை மட்டும் அலாஸ்கா செல்கிறார்.
          பிறகுதான் டிக்கை சந்திக்கிறான்.இதில் டிக் டாமினேட்டிங் ஆகவும் பெற்றி ஸப்மிஸ்ஸிவ் ஆகவும்!டிக்கின் அபிமானத்தை பெற தான் ஒரு ஆப்ரிக்க-அமெரிக்க மனிதனை சைக்கிள் செயினாலேயே அடித்துக்கொன்றதாக பொய் சொல்கிறான்..டிக் ஏற்கெனவே இருமுறை திருமணம் ஆகி மூன்று பிள்ளைகளுக்கு தந்தை!பெர்ரி பெண் வாடையே அறியாதவன்.அதில் ஈடுபாடும் அவனுக்கில்லை.டிக்கின் ஆதிக்கத்தில் இருப்பதை விரும்புபவன் பெர்ரி.
பெர்ரி -டிக்

           அவனுக்கு பிடித்தது வாசிப்பு.பெட்டி பெட்டியாக புத்தகங்களை தன்னுடனேயே தூக்கிக்கொண்டு அலைபவன்!அதை கடுமையாக எதிர்ப்பவன் டிக்.இந்த குப்பையை எதுக்கு கொண்டுவர?என்று கடிந்து கொள்பவன்.டிக்குக்கு பிடித்த புத்தகங்கள் வேறுவகை!மஞ்சள் பத்திரிகை வகையறா!
             பெர்ரி கொரிய போரில் பங்கேற்றவன்.பிறகு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் கால் எலும்புகள் உடைந்து இடுப்புக்கு கீழே சிறுவனை போன்று குட்டையான அமைப்பை கொண்டவன்!டிக்குக்கும் ஒரு விபத்து நடந்து அதன்பின்னரே கடுமையான தலைவலி, பிளாக்கவுட், சைக்காட்டிக் தன்மைகள் எல்லாம் அதிகமாகிவிடுகிறது(ஆனால் இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை).
                  அப்படியே போய்விடலாம் என்கிறான் பெர்ரி.டிக் மறுக்கிறான்.அந்த நேரத்தில்தான் டிக்கே எதிர்பாராத விதமாக ஹெர்பர்ட்டின்  கழுத்தை அறுக்கிறான் பெர்ரி.மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் ஹெர்பர்ட்டின் தலையில்  சுடுகிறான் .மூளை சிதறுகிறது.பிறகு ஹெர்பர்ட்டை "சவுகரியமாக"  ஒரு மேட்ரசில் படுக்கவைப்பவனும் பெரிதான்!
          அனைவரையும் கொன்றுவிட்டு தப்பிக்கிறார்கள்.4 மணி நேரத்தில் 800 மைல்கள்!டிக் தனது வீட்டிற்கு சென்று வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு டிவி பார்க்கும்போதே தூங்கிப்போகிறான்(பேஸ்கட்பால் விளையாட்டை நடக்கும்போது  அவன் தூங்குவது கண்டு தந்தை ஆச்சரியப்படுகிறார்).பெர்ரி தனது மோட்டல் அறையில் தங்குகிறான்.
பெர்ரி

            
              பிறகு மெக்சிகோ செல்கிறார்கள்.ஆனால் அங்கோ ஒருநாள் வேலைக்கு இரண்டு டாலர் மட்டுமே சம்பளம்.திரும்ப நிவாடா செல்ல கேன்சஸ் மாகாணம் வழியாகவே செல்கிறார்கள்.காரணம் தனது ஊரில் சில நண்பர்களை ஏமாற்றி டிக் பணம் பெறவேண்டும்.அப்போதிலிருந்தே போலீசு அவர்களை பின்தொடர்கிறது.
             பெர்ரி தனது புத்தக குவியல்,ஷூக்கள்,இன்னபிற அடங்கிய பார்சலை மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்கெனவே  பார்சல் அனுப்பி இருக்கிறான்  .அதை வாங்கிக்கொண்டு வரும்வழியில்  அவர்களை கைது செய்கிறார்கள்.
        இப்போது இவர்கள் சிக்கியதற்கு காரணம் சில :
-ரத்தக்கறை படிந்த ஷூ தடம்(அந்த பார்சலில் இருந்தது)
-டிக்கும் பெர்ரியும் அந்த ஷூக்களை  டிஸ்போஸ் செய்யாமலேயே உடன் வைத்திருக்கிறார்கள்.காரணம் -தாங்கள் சிக்கவே மாட்டோம் என்ற எண்ணம்
-ஃபிலாய்ட் வெல்ஸ்ன் வாக்குமூலம்
-கென்யனின் ரேடியோவை அடகு கடையில் விற்றது.

                  முதலில் இருவரும் மறுக்கிறார்கள்.ஆனால் இருவர் சொன்ன கதைகளும் வெவ்வேறாக உள்ளதை கண்டுபிடிக்கிறார்கள்.பிறகு உண்மையை ஒப்புக்கொள்கிறார்கள்.நால்வரில் இரு பெண்களை டிக்தான் கொன்றான் என்று முதலில் சொல்லும் பெர்ரி பிறகு நால்வரையும் தான்தான் கொன்றதாக வாக்குமூலத்தை மாற்றிக்கொடுக்கிறான்(டிக்கின் தாய்க்காக இதை செய்ததாக சொல்கிறான்)
           ஆனால் கொலைகளை செய்யாத டிக்கும் உடந்தை என்ற வகையில் தூக்கிலிடப்படுகிறான்.ஆனால் அது மிக நீண்ட போராட்டம்!1960 ல் கைது செய்யப்படும் இருவர் மீதான வழக்கு முடிந்து தூக்கு தண்டனை தீர்ப்பாகிறது.அவர்கள் வழக்கை வேறொரு ஊரில் நடத்த வேண்டும்,மனநிலை சரியில்லை,சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு என்று பலவருடங்கள் வழக்கு!கடைசியில் 1965 ஏப்ரல் 14 அன்று இருவரும் தண்டிக்கப்படுகிறார்கள்.
              தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் அறையில் அணையாத விளக்கு,வாரம் ஒருமுறை மட்டுமே சிறையைவிட்டு வெளியே வரவேண்டும்.அன்றுதான் குளியல்&வேறொரு மாற்று உடை வழங்கப்படும்.தொடர்ந்து மூன்று பேர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அந்த கண்டம்ண்டு பகுதியில் வைக்கப்பட அதற்கு டிக் "கேன்சஸ் நீதிபதி மிட்டாய் கொடுப்பதுபோல எல்லாருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கிறார்" என்று நக்கலடிக்கிறான்.
             பெர்ரி அவர்களைக்கொன்றதற்கு காரணம் என்ன?சிறுவயதில் இருந்தே சரியான அன்பு கிடைக்காதது,குடிகார தாய்,நண்பர்கள் யாரும் இல்லாதது,ஏழ்மை நிலை இதையெல்லாம் வழமையாக சொன்னாலும் மிக முக்கியமானகாரணம் -பெர்ரியின் வாழ்நாளில் இதுவரையில் அடிபட்டு மிதிபட்டு பலரால் மனதளவில் காயப்பட்டவன்.அந்தக்காயங்களுக்கு அந்த வேதனைகளுக்கு ஒரு வடிகாலாக இவர்களை கொல்கிறான்.அவனைப்பொறுத்தளவில்  இந்த நால்வரும்  ரத்தமும் சதையும் கொண்ட க்ளட்டர் குடும்பமல்ல!தன்னை இதுவரை காயப்படுத்தியவர்களின் மொத்த உருவகமாகவே அக்குடும்பத்தை காண்கிறான்.இவர்களை கொன்றால் இதுவரை தான் சுமந்துவந்த மனப்பாரம், மனக்காயம் ஆறிவிடும்.ஒருவித relief கிடைக்குமென்றே நினைக்கிறான்.ஆனால் கொன்றபிறகு அப்படி எதுவுமே தோன்றாததைக்கண்டு ஏமாற்றமடைகிறான்!
         ஆனால் அவர்களைக்கொன்றதற்கு அவன் வருந்தவில்லை.Tough ஆன டிக்காவது கொஞ்சம் வருத்தப்படுகிறான்.ஆனால் பெர்ரிக்கு அவ்வித உணர்வே இல்லை!
           மேலும் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் வேளையில் "இவர்கள் என் உயிரை எடுப்பதா?நானே எடுத்துக்கொள்கிறேன்" என்று பதினான்கு வாரங்கள் சோறுதண்ணி இல்லாமல் எதிர்ப்பை காட்டுகிறான் பெர்ரி.நாடகமாடுறான் என்று கிண்டலடிக்கிறான் டிக்.அவனுக்கு தெரியும் அவன் திரும்ப சாப்பிட துவங்கிவிடுவான் என்று!அதன்படியே மீண்டும் சாப்பிட ஆரம்பிக்கிறான்!"Hell அவர்கள் என் உயிரை எடுக்க வேண்டுமென்றால் போராடித்தான் ஆகவேண்டும்!" என்று உறுதிகொண்டு நிறைய சாப்பிட்டு மீண்டும் இழந்த எடையை அடைகிறான்.
          டிக் பல்வேறு சட்ட புத்தகங்களை படித்து தான் தப்பிக்க வழியுண்டா? என்று பார்க்கிறான்.மனிதநேய அமைப்புகள் சட்ட உதவி மையங்கள் போன்றவைகளுக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்புகிறான்.சிலர் உதவியும் செய்கிறார்கள்.அதிலேயே ஐந்து  வருடங்கள் ஓடுகிறது.
          ஐந்து வருடங்கள் கழித்து தூக்கிலிடப்படுகிறார்கள்.தூக்கில் தொங்கவிடப்பட்டதும் டிக் இருபது நிமிடம் துடித்ததாக வருகிறது.பெர்ரி தூக்கில் தொங்கவிடப்பட்டதும் தரையை தொடாத அவனின் கால்களைகேபிஐ ஏஜன்ட் டூயி பார்க்கிறார்.முதன்முதலில் அவனை விசாரணை அறையில் பார்த்தபோது அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் தரையில் கால் படாமல் ஒரு சிறுவனின் ஆகிருதியோடு அமர்ந்திருந்தது அவர் நினைவுக்கு வருகிறது.
வாக்கர் குடும்பம்

              நவம்பர் 15 க்ளட்டர் குடும்பம் கொல்லப்பட்டது.ஒருமாதம் கழித்து டிசம்பர்  19 1959 ல் வாக்கர்  குடும்பம் கிட்டத்தட்ட இதேமுறையில் தலையில் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.அதில் உள்ள கைரேகைகள் டிக் மற்றும் பெர்ரியுடன் பொருந்தாது போனதால் அந்த வழக்கில் இவர்கள் குற்றம் சாட்டப்படவில்லை.ஆனால் சமீபத்தில் 2012 அந்த ரேகைகள் உள்ளங்கை ரேகைகள் எனவும் அதனாலேயே டிக்/பெர்ரியின் ரேகைகளோடு பொருந்தாமல் போனதாகவும் அவர்களின் பிரேதத்தை(எலும்புக்கூடு?) தோண்டி எடுத்து டிஎன்ஏவை ஆய்வு செய்ய ஷெரிப் கோருகிறார்.ஆனால் கிடைத்தவை பாதி டிஎன்ஏ மட்டுமே.வாக்கர் குடும்ப கொலையில் டிக்&பெர்ரி சம்மந்தப்பட்டார்களா இல்லையா என்பதை  உறுதிப்படுத்த முடியவில்லை.
                      டிக் மரண தண்டனை இருக்கவேண்டும் என்பவன்.ஆனால் தனக்கல்ல!