Saturday 3 October 2015

ஒரு ஓடை நதியாகிறது (1983)

                    காலம்  காலமாக  குழந்தைகள்  என்றாலே  நாம்  நமது  மனதில் சில  பிம்பங்களை  சுமந்துவருகிறோம்.
  • பொய்  சொல்ல  மாட்டார்கள்..
  • குழந்தையும்  தெய்வமும்  ஒன்னு(மனுசன  டார்ச்சர்  பண்றதுலையா  உதயா?-முனியாண்டி)
  • கள்ளம்  கபடமற்றவர்கள் 
  • உள்ளொன்று  வைத்து  புறமொன்று  பேசாதவர்கள் 
இப்படி  பலப்பல..நம் மனதில்  இருக்கும்  இந்த  முன்முடிவுகளை  குழந்தைகள்  மேல்  திணிக்கிறோம்.அல்லது  இரண்டையும்  ஒப்பிட்டு  பார்த்து  ஏமாற்றமடைகிறோம்.எரிச்சல்  அடைகிறோம்.அது அந்த  உறவில்  சரிசெய்ய முடியா  ஒரு விரிசலை  உண்டுபண்ணி  விடும்.
                    சமூகத்திலும்  சரி  சினிமாவிலும்  சரி  தந்தை  கேரக்டர்  பெரும்பாலும்  மகனால்  வெறுக்கப்படும்  ஒரு  சர்வாதிகாரி  போலத்தான்  பார்க்ப்படுகிறது/சித்தரிக்கப்படுகிறது.காரணம்  மேற்சொன்ன  அந்த  முன்முடிவுகள்!எவ்வித  எதிர்பார்ப்பும்  முன்முடிவுகளும் இல்லாமல்  குழந்தைகளை  அணுகுவதே  சிறந்தது.
                  இந்தப்படம்  கூட  ஒரு  சிறுவனின்  கணிக்க  முடியா  மன  ஓட்டத்தை  சொல்வதாகவே  உள்ளது.
                 பதினெட்டு  வயதானால்  மேஜர்  என்பது  சட்டவிதி.ஆனால்  அதற்குமுன்பே  ஏதோ  ஒரு  தருணத்தில்;  யாரோ  ஆற்றும்  எதிர்வினையில்;  ஏதோ  ஒரு  அனுபவத்தால் குழந்தைத்தனம்  விலகி பெரிய  மனுசத்தனம்  என்று  சொல்லமுடியாவிட்டாலும்  ஓரளவு maturity குழந்தைகளுக்கு  வந்துவிடும்.
                 இப்படத்தில்  அந்தத்தருணம்  மிக  அற்புதமாக  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.தந்தை  பெயர்  தெரியாது  வளரும்  சிறுவன்.அவனின்  தாய்  நோய்வாய்ப்பட்டு  இறந்துபோகிறார்.அவனை  எடுத்து வளர்ப்பது  யார்?என்ற  கேள்வி  வருகிறது.திருமணத்திற்கு  முன்பு    உணர்ச்சி  வேகத்தில் செய்த  செயலின்  விளைவு  இப்போது  சிறுவனாக  நிற்பதை  ரகுவரன்  பார்க்கிறார்.மனைவி  குழந்தை  என்று  செட்டிலாகிவிட்டார்.வேலை  கிடைத்ததேகூட  அந்த  ஏமாற்றப்பட்ட  பெண்ணின்  தந்தையின்  உதவியால்தான்.இவ்விரண்டு  விஷயமும்  அவரின் குற்ற  உணர்ச்சியை  நாளுக்கு  நாள்  அதிரிக்கரிக்கச்செய்கிறது.

               என்னவானாலும்  சரி  மகனை  தானே  வளர்ப்பது  என்று  முடிவெடுத்து  மனைவியிடம் தைரியமாக  சொல்லும்  அந்த  தருணத்தில்தான்  ஒட்டு  கேட்கும்  சிறுவன்  உளவியல்  ரீதியில் பெரியவனாகிறான்(அதைத்தான்  ஒரு  ஓடை  நதியாகிறது  என்று  டைட்டில்  வைத்திருக்கிறார்கள்).
                தான்  தந்தை  வீட்டில்  வளர்ந்தால் அவரது  மனைவிக்கு பெரிய  தர்மசங்கடத்தை  கொடுத்துவிடும்  என்று  வேறொரு  ஊருக்கு  கிளம்புகிறான்.பேருந்து  நிலையத்தில்  அவனை  கண்டுபிடிக்கும் ரகுவரனிடம்  "நான் ஒரு  நல்ல  நிலைக்கு  வந்தபின்  உங்களை  கண்டிப்பாக சந்திக்கிறேன்" என்று  சொல்லி  பெங்களூரு  செல்லும் பேருந்தில் தனியே  கண்ணீர்  மல்க  செல்வதாக  முடிகிறது.அவனுக்கு  தந்தையோடு  இருக்க  விருப்பம்தான்.ஆனால்  தாய்க்கும்  அவரது  குழந்தைக்கும்  இது  பிற்காலத்தில்  பல  பிரச்ச்னனைகளை  உண்டாக்குமே? என்று முதிர்ந்த மனநிலையில்   சிந்தித்து உறுதியான  முடிவெடுக்கிறான்.அது  தன்னைத்தானே  அச்சூழலில்  இருந்து  விளக்கிக்கொள்ளுதல்.ஸோ காலட்  பெரிய  மனிதர்களே  இப்படியாக அடுத்தவர்  உணர்வுகளுக்கு  மதிப்பு  கொடுத்து  முடிவெடுக்காத   நிலையில்  ஒரு  சிறுவன்  இவ்வளவு  மெச்சூரிட்டியோடு  சிந்திப்பதை  ரொம்ப  இயல்பாக  அதேநேரம்  மணிரத்னம்  பாணி  குழந்தைகளைப்போல  ஓவர்  ரியாக்ட்  பண்ணாதவகையில்  காட்சிப்படுத்தியிருப்பார் ஸ்ரீதர்.

                 ரகுவரனை  பொறுத்தளவில்  கொடூர  வில்லத்தனம் என்றாலும்  சரி  மிக  மென்மையான கதாபாத்திரம்(கூட்டுப்புழுக்கள்,ஆஹா,முகவரி...etc.,) இரண்டுக்கும்  இடைப்பட்ட  சம்சாரம்  அது  மின்சாரம்   கதாபாத்திரமானாலும்  சரி  அனாயசமாக  செய்துவிடக்கூடியவர்.இப்படத்திலும் முதலில்  மைனர்  வேலைகள்  செய்வது;பின்னர் சின்ஸியராக வேலை செய்து நல்லநிலைக்கு வருதல்; பிறகு அந்தச்சிறுவனையும் மரணப்படுக்கையில்  இருக்கும்  அவன் தாயையும்   நினைத்து  உருகுதல்  என்று அட்டகாசமாய்  நடித்திருக்கிறார்.அந்த  சிறுவனுக்கு  தமிழ்  தெரியாது  என்று  நினைக்கிறேன்(ஏதோ  ஹிந்தி  படத்தில்  பார்த்ததாக  நினைவு).ஆனாலும்  சரியாக  வாயசைத்து  நன்றாகவே நடித்திருக்கிறான்.

               படத்தின் குறைகள்  இரண்டு.  ஒன்று   ரகுவரனுக்கு  எஸ்.என்.சுரேந்தரின்  டப்பிங் குரல் .அது  மோகனுக்கு அட்டகாசமாய்  பொருந்திய  அளவில்  பாதிகூட  இங்கே பொருந்தவில்லை..ஏன்  ரகுவரனே  மென்மையான  பல  கதாபாத்திரங்கள்  செய்யக்கூடியவர்தானே(கூட்டுப்புழுக்கள்)!அவர்  குரல்  ஒன்றும்  கர்ணகொடூரமானது  இல்லையே!இரண்டு அந்த  சிறுவனுக்கு  ஒரு பெண்ணின் குரலை  டப்பிங்  கொடுக்க  செய்தது.மிகப்பெரிய இயக்குனரான  ஸ்ரீதர்  இதை  எப்படி  கவனிக்காமல்  விட்டார்  என்று  தெரியவில்லை
     (வழக்கம்போல)  படத்தின்  ஆணிவேராக    இசையராஜா  இசை. 

     பி.கு:         ரகுவரன்  ஹீரோவாக  நடித்ததில்லை..வில்லனாக  மட்டுமே  நடித்திருக்கிறார்  என்று  தனுசு  போன்ற  விஷக்கொசுக்கள்  விஷமத்தனமாக  பொய்த்தகவலை  மக்கள் மனதில்  பதிய  வைப்பது கேடுகெட்ட  ஒரு  சூழலை  காட்டுகிறது.அதற்கு  மறுப்பாக கூட  இப்பதிவை  எடுத்துக்கொள்ளலாம்.

Tuesday 29 September 2015

சாம்ராட்(1997)

                                                         ஒரு படம் வெளியாகும்  முன்பே  அதைப்பார்க்கும் ஆவலைத்தூண்டுவதில் போஸ்டரும்  டிரைலரும்  முக  முக்கிய  பங்காற்றும்.
அவ்வகையில்  இப்படத்தின்  டிரைலர்  கூட  அல்ல  டிரைலரில்  வந்த  ஒருநொடி  காட்சிதான்  இதைப்பார்க்கும்  ஆவலைத்தூண்டியது.ராம்கி கண்ணில்  காண்டாக்ட்  லென்ஸ்  மாட்டும் காட்சி.இதேபோன்றதொரு காட்சி  பிறகு  விஜய்ஆண்டனி  நடித்த  நான்  பட  போஸ்டராகவும் காட்சியாகவும்   வந்தது  அனைவருக்கும்  தெரிந்ததே.
             படத்தின்  கதை   தாய்  தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை  பழிவாங்குதல் என்ற  வழக்கமான  ஒன்றுதான் .மோகன்  நடராஜன்தான்  அதற்கு  காரணம்  என்றாலும்  ஹீரோ அவரை  உடனே  கொல்லாமல்  கொஞ்சம்  கொஞ்சமாக  கொல்கிறான்.காரணம்  மரணம்தான்  சிறந்த  விடுதலை.அதைவிடவும்  கொடுமையான  தண்டனைகள்  உலகில்  உண்டு.இப்படத்தில்  மோ.ந வின்  இரண்டு  மகள்களை  திருமணம்  செய்துகொண்டு  ஏமாற்றி  அதன்மூலம்  மோ.ந வை  ஒவ்வொரு  நொடியும்  சாகடித்தல்  என்பதே  படம்.
               வில்லனை பழிவாங்க  ஹீரோ  பல்வேறு  கெட்டப்புகள் போடுவது என்பது  இதற்குமுன்பும்  கைதியின்  டைரி,சுகமான  ராகங்கள்   போன்ற  பல படங்களில்  வந்துள்ளது.
                 ஹீரோ  படம்  துவங்கியதில்  இருந்தே  வில்லத்தனம்  செய்துவந்தால்  பிற்பகுதியில்  அவர்  ஏன்  அப்படி  ஆனார்?எதற்காக  இவைகளை  செய்கிறார்  என்று  ஒரு  பிளேஸ்பேக்  கண்டிப்பாக  இருக்கும்.அதுமாதிரியான  விளக்கங்கள்  தேவையில்லை  என்பது  என்  கருத்து.காரணம்  மனிதர்கள் சிடுமூஞ்சிகளாக  சேடிஸ்டுகளாக கொலைகாரனாக நெஞ்சழுத்தம் கொண்டவர்களாக   இருப்பதற்கெல்லாம்  பின்னணி  காரணம்/சம்பவங்கள்  இல்லாமலேயே இயல்பாக  வரக்கூடிய  சமாச்சாரங்கள்தான்.மனித மனத்தின்  இயல்பே  தான்  வாழ  எதையும்  செய்யும்  தன்மை கொண்டதே(இதை  நோலன் இன்டர்ஸ்டெல்லார் மேட்  டேமன்  கதாபாத்திரம்  மூலம்  காட்டியிருப்பார்).பொதுநலப்புடலங்காய்  எல்லாம்   மேடைப்பேச்சுகளுக்கு  வேண்டுமானால்  பயன்படலாம்.ஆனால்  மனித  இயல்பு  அதுவல்ல  என்பதை  நாள்தோறும்  செய்தித்தாள்  வாசித்தாலே  தெரிந்துகொள்ள  முடியும்.
                   முதல்  மகளை  ஏமாற்றிவிட்டு  போனவர்  இரண்டாவது  மகளான  வினிதா(போலீசு)வை  ஏமாற்ற  முடிந்ததா?என்பதே  படம்..தனது  குடும்பம்  அழிந்ததற்கு பழிவாங்க  வேண்டும் ..அதற்காக  எதையும் செய்யத்தயாராக  இருக்கும்  குரூர  குணம்,  இடி,மழை  வந்தால்  வலிப்பு  வந்துவிடும்  இயலாமை, முதல்  மகளை  தான்தான்  ஏமாற்றியது  என்று  தெரிந்துகொண்ட  டாக்டரை  கொன்றுவிட்டு  அவர்  தன் பெயரை  ரத்தத்தால்  தரையில் எழுதிவைத்ததை  தனது  விரலை  அறுத்து  அந்த  ரத்தத்தால்  மறைக்கும்  கில்லாடித்தனம் என்று ராம்கி  கேரக்டருக்கு சரியாக  பொருந்தியிருக்கிறார்.குறிப்பாக  முதல்  மகளை  கண்டுபிடிக்கும்  பொறுப்பில்  இருக்கும் வினிதா  உடனேயே  தைரியமாக  விசாரணை  நடக்கும்  இடங்களுக்கு  செல்லுதல்; இவரின்  ப்ரேஸ்லெட்டை  பிணத்திற்கு  அருகில்  வினிதா  எடுத்தவுடன்  தலையை  ஸ்டைலாக  கோதுவது   போல கையில் ப்ரேஸ்லெட்  இருப்பதை  காட்டுதல் சுவாரஸ்யமான  காட்சி.
                      நிஜ  வாழ்வின்  சம்பவங்களைத்தான்  சினிமாவாக்குகிறோம்  என்று  சினிமாக்காரர்கள்  சொல்ல ,சினிமாவைப்பார்த்துத்தான்  சமூகம்  கெடுகிறது  என்று மக்கள்  சொல்ல  இந்த  விவாதத்திற்கு  முடிவே  இல்லை.இப்படத்திலும் முதல்  மகளுக்கு  தாலி  கட்டும் விடியோவில்  மறைக்கப்பட்ட  முகம்  யாருடையது? என்று  போலீஸ்  விசாரிக்க ராம்கி  அந்த விடியோகிராபரை  கொன்று  பார்ட் பார்ட்டா  அறுத்து  ரோலர் சூட்கேஸில்  எடுத்துக்கொண்டு  செல்லும்  காட்சி  நாவரசு  கொலை  வழக்கு  உச்சத்தில்  இருந்த  நேரத்தில்  அந்த  பாதிப்பில்  எடுத்துள்ளார்கள்.குறிப்பாக  சூட்கேஸை  தள்ளிக்கொண்டு வரும் வேளையில்  எதிரில்  வினிதா  வர  "சும்மா!  புது  சூட்கேஸ்  பர்சேஸ்"  என்று  சிரித்துக்கொண்டே  சொல்லிவிட்டு  செல்லும்  காட்சி சூப்பரு.
                    மற்றபடி  கிளைமாக்ஸ்  இழுவையாய்  இழுக்கிறார்கள்.அந்த  சண்டைக்காட்சியை  இன்னும்  கொஞ்சம்  சுவாரஸ்யமாய்  க்ரிஸ்பாய்  அமைத்திருக்கலாம்.மற்றபடி  இது  நல்லதொரு  பொழுதுபோக்கு  சினிமா.லாஜிக்  எல்லாம்  பார்க்காமல் ரசிக்கலாம்.ராஜ்  டிஜிட்டலில்  அவ்வப்போது  காண முடியும்.
                    

Sunday 5 July 2015

இரானிய படங்கள் பற்றி...




                      இரானிய படங்கள் பார்த்தவரையில் அதில் ஒரு பொதுக்குணம் காண முடியுது.எல்லா படத்திலும் ஒருவித மசோகிச தன்மை தூக்கலாக வெளிப்படும்  அதாவது தன்னைத்தானே வருத்திக்கொள்வது,கடுமையான சூழலுக்கு வேண்டுமென்ற தங்களை ஆட்படுத்திக்கொள்வது,இக்கட்டான சூழலில் ஒருவித இன்பம் காண்பது,பிறர் தம்மை அவமதிக்க,அடிக்க உதைக்க அனுமதிப்பது.இவை அனைத்திலிருந்தும் விடுபட சந்தர்ப்பம் வரும்போதும் அந்த கதாபாத்திரம் விடுபடாது.இந்த துன்பக்கடலிலேயே அழுகாச்சியோடு நீச்சல் அடிப்பதையே அது விரும்பும்.எப்போதும் ஒடுக்குமுறை ஆட்சியில் வாழ்வதனாலேயே அத்தகைய மனநிலை அவர்களுக்கு வந்திருக்கும் என்றே தோன்றுகிறது.
          இந்தத்தன்மையை நீங்கள் கே.பாலச்சந்தர் படங்களில் காணலாம்.அவள் ஒரு தொடர்கதையில் குடும்ப பார சூழலில் இருந்து விடுபட சந்தர்ப்பம் கிடைக்கும்போது விடுபடாத சுஜாதா,பைரவிக்கு புள்ள இல்லைங்கிற குறையை தீர்த்துவைக்க பல்வேறு ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே ஜேகேபி'ன் வாரிசை பெற்று பைரவியிடம் கொடுத்திவிட்டு மஞ்சள் சூரிய வெளிச்சத்தில் விலகிச்செல்லும் சிந்து(அதே டிட்டோ இன் கல்கி),காதல் தோல்வியில் இருந்து மீண்ட கமல் ரேவதியோடு மகிழ்ச்சியாக செல்லும் கார் வெடித்து சிதறுவதாக முடியும் புன்னகை மன்னன் என்று பலப்பல உதாரணங்கள் சொல்லலாம்.இது இயக்குனரின் சேடிச மனத்தாலா?அல்லது அவர் படைக்க விரும்பியது மசோகிச கதாபாத்திரங்களையா?என்று பட்டிமன்றம் வச்சித்தான் முடிவு செய்யோணும்.
                   இப்ப இதே போன்றதொரு தன்மையைத்தான் நான் இரானிய படங்களில் பார்க்கிறேன்.இரண்டு உதாரணங்கள்.சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தில் தந்தையும் மகனும் ஒரு பங்களாவில் தோட்டவேலை செய்து அவர்கள் வாழ்நாளிலேயே காணாத ஒரு பெரிய தொகையை சம்பளமாக பெற்றுக்கொண்டு வீடு திரும்புவார்கள்.'யப்பா!குடும்பத்துக்கு ஒரு விடிவு வந்துட்டுதா!' என்று நாம் என்னும் வேளையில் சைக்கிள் ப்ரேக் பிடிக்காமல் போய் இருவரும் கீழே விழுந்து அந்தப்பணம் முழுவதும் மருத்துவ செலவுக்கு காலியாவதாக காட்டியிருப்பார்கள்.
            பலரும் (சுகாசினி அம்மையார் இதுபற்றி அரைமணிநேரம் டிவியில் புகழ்ந்த)படமான Colour of Paradise படத்தை சமீபத்தில் பார்த்தேன்.இவ்வளவு குரூரமான படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. குரூரமான எவ்வளவோ படங்களை நான் பார்த்திருக்கிறேன்.வித்தியாசம் என்னவெனில் அவை பார்த்த உடனேயே அந்த குரூரத்தன்மை தெளிவாக தெரியும்.ஆனால் இப்படத்தில் அந்த குரூரம் அடி ஆழத்தில் காண முடிகிறது.
        என்ன கதை?பார்வையில்லாத ஒரு சிறுவன்.அவனுக்கு இரண்டு சகோதரிகள் பாட்டி தந்தை.இவனுக்கு பார்வையில்லாததால் கிராமத்திலேயே தனது சகோதரிகளுடன் படிக்க முடியாமல் போகிறது.நகரத்தில் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கிறான்.போர்டிங் ஸ்கூல்.விடுமுறைக்கு கிராமத்துக்கு வருகிறான்.அங்கே நடக்கும் சம்பவங்களே படம்.
          இதில் என்ன சொல்ல வருகிறார்கள்?(பொதுவா இந்தே மெசேஜ் பொடலங்கா படங்களே எனக்கொரு ஒவ்வாமையை உண்டாக்கிவிட்டது தனிக்கதை).பார்வையற்ற சிறுவனை தொடர்ந்து அவனது தந்தையும்/பள்ளி மாணவர்களும்  மனரீதியாக டார்ச்சர் செய்துகொண்டே இருப்பார்களாம்.அவன் கடைசியில் இறந்த(அதாவது இயக்குனரால் திரையில் சாகடிக்கப்பட்டபின்)பின் சொர்க்கம் சென்றதாக முடிக்கப்பார்களாம்.
          அதாவது மாற்றுதிறனாளிகளை சுற்றி இருப்பவர்கள் தொடர்ந்து உடல்/மனரீதியாக டார்ச்சர் செய்தாலும் பாதகமில்லை.கடைசியில் அந்த நபர் சொர்க்கம்தானே செல்வார்!என்பதாகத்தான் இதை புரிந்துகொள்ள முடிகிறது.
அதாவது இந்த வாழ்க்கையில் செத்து சுண்ணாம்பானாலும் அடுத்த வாழ்க்கையில் ஏசி ரூம் கெடக்கும்டா என்பதே இதன் கோட்பாடு.எவ்வளவு அபத்தமான ஒரு சிந்தனை?இருக்குற வாழ்க்கையை முதலில் ஒழுங்காக வாழ இயலாத நிலையில் இருக்கா இல்லையான்னே உறுதியாக தெரியாத ஒரு வாழ்க்கையை பற்றி சிலாகிப்பது குரூர தன்மையல்லாது வேறென்ன என்று தெரியல.
           இன்னொரு விஷயம்.பெரும்பாலான இரானிய படங்கள் emotionally draining ஆக இருப்பது கடும் அயர்ச்சியை உண்டுபண்ணுகிறது.எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கு இப்படங்களை பார்க்கும்போது..அதனாலேயே நான் இரானிய படங்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.
         இது என் கருத்து மட்டுமே!அவரவர் ரசனைகள் மாறுபடலாம்!

Saturday 24 January 2015

பிசாசு

 ஒரு இயக்குனரின் வீச்சு படத்தின் வேர்வரை ஊடுருவுதல் என்பது நல்லதாகவோ அல்லது மொக்கையாகவோ முடிந்துவிடலாம்.உதாரணமாக டி.ஆர் படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் டி.ஆர் போலவே பேசுவது, பார்த்திபன் படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் பார்த்திபன் போலவே வார்த்தைஜாலம்(பெரும்பாலும் இது மிகையாகி 'போதும்டா சாமி' என்று பார்வையாளனை தினறடிப்பதாகவே இருந்துள்ளது.உதாரணம் கதை,திரைக்கதை,வ,இ...படம்).

                  மிஷ்கின் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ஒரு புத்தகம் பற்றியோ உலக சினிமா பற்றியோ(யுத்தம் செய்'ல் சேரன் ராஷமன் படம் பற்றி பேசுதல்,இதே படத்தில் எக்ஸ்சார்சிஸ்ட் படம் பற்றிய காட்சிகள்) பேசிக்கொள்வது,தத்துவம் பேசும் கதாபாத்திரம்(இப்படத்தில் பணம் ஏய்க்கும் அந்த இளைஞன்)அல்லது காட்சிகளூடே ஒரு புத்தகத்தை காட்டுதல்(யுத்தம் செய்) இவைகளை ஒலக விமர்சகர்கள் கடுமையாக விமர்சிப்பதை காணமுடிகிறது."சாமானியர்கள் இப்படியா பேசிக்கொள்வார்கள்?" என்று கேட்கிறார்கள்.என்னைப்பொறுத்தளவில் இது ஒரு குறையாக தெரிந்ததில்லை.காரணம் இயல்பு மனிதன் விவாதிப்பதெல்லாம் அடுத்தவன் வூட்டு சுவத்துக்கு அப்பால் என்ன நடக்குது?/டாஸ்மாக் பற்றி/நிஜவாழ்வை விட பன்மடங்கு ஊதி பெருக்கப்பட்ட ஒரு நடிகனின் இமேஜ் பற்றி/நடிகனின் அரசியல் பிரவேசம் பற்றி...blah..blah...ஸ்ஸப்பா...இந்த கருமத்தைத்தானே தினம் நாம் வாழ்வில் கேட்டுக்கொண்டிருக்கிறோம்?அதேநேரத்தில் படத்தில் வருவது போன்ற மனிதர்களே நிஜவாழ்வில் இல்லை என்று சொல்லமுடியாது அல்லவா!
                     ஒரு நல்லவன்/ள் இறந்தால் அவன்/ள்(அது?) பிசாசாக அலைந்தாலும் நல்ல தன்மையக்கொண்டதாகவே இருக்கும் என்பதே கரு.உடனே பிசாசுக்கு சிந்திக்க தெரியுமா?என்று கேட்கிறார்கள்.இவர்கள்தான் ஆங்கில பேய் படங்களை எதிர்கேள்வி கேட்காமல் பார்த்தவர்கள்.சரி படத்துக்கு வருவோம்.
                    படத்தின் குறைகளை முதலில் பார்ப்போம்.
       மிஷ்கின் படமென்றாலே அனைத்து(அல்லது பிரதான கேரக்டர் வரையிலாவது) abrupt ஆக ஜெர்க் அடிப்பது,விழிக்காமல் இமைப்பது,தலைகுனிந்து நிற்பது(இது குரசோவா பாணி) ,ஒருத்தனை லைன் கட்டி ஒவ்வொருத்தராக வந்து அடிப்பது போன்றவைகளைக்கூறலாம்(இசை பற்றி பிறகு பார்ப்போம்).Autuer என்ற சொல்லாடல்படி மேற்சொன்னவை மிஷ்கினின் முத்திரையை பறைசாற்றுவதாக எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் சில சமயங்களில் அது மிகையாகிப்போவதை காணமுடிகிறது.
         உதாரணமாக சுரங்கப்பாதையில் அந்தச்சிறுமி(அட்டகாசமான கண்டுபிடிப்பு!) பார்வையற்றவர்களை அழைத்துச்செளும் காட்சியில் எல்லாரும் லைனில் நின்றுவிட்டு ஏதோ ஒரு cue க்காக காத்திருந்து பிறகு நகர்வதாக வரும் காட்சி.அக்காட்சி துவங்கும்போதே அவர்கள் நகர்வதாக காட்டக்கூடாதா?(எனக்கு சினிமா கோட்பாடுகள் தெரியாது.எனக்கு தோன்றியதை கேட்கிறேன்).

          பிரதான கதாபாத்திரத்தின் பெயர் ஒற்றைக்கண் சிவராசனா?என்று கேட்க தோன்றுகிறது.சரி மாடர்ன் யூத்துங்க எந்த ஸ்டைலை எப்படி பின்பற்றுகிறார்கள் என்பதில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் அதை தவிர்த்துவிடலாம்.
         விளிம்புநிலை மக்களின் வாழ்வை படமாக்குதல் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் "இந்தப்படத்தில் இந்தந்த காட்சிகளில் அவர்கள் இடம்பெறுவார்கள்" என்று வலிந்து திணிப்பது அவர்களுக்கு செய்யும் நியாயமாக இருக்காது.இந்தப்படத்திலேயே அந்தச்சிறுமி&பார்வையற்ற நபர்கள் மிஷிகினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை நினைவுபடுத்துகிறார்கள்.சப்வேயில் சித்தார்த்தை பீர் பாட்டிலால் கொலைசெய்யவரும் அந்த நபர் பிசாசால் கொலை செய்யப்படுவதற்காக மட்டுமே அந்த சப்வே காட்சிகள் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது.

       மற்றொரு குறை ராதாரவி.அவர் நல்ல நடிகர் என்றாலும் பல காட்சிகளில் ஏதோ ஒட்டாமல் நடித்தது போலவே எனக்கு தோன்றியது.அவரைவிட சித்தார்த்தாக நடித்த நாகா நன்றாக பொருந்தியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
          இப்போது இசை பற்றி.ஒரு பாடலை/பின்னணி  இசைத்துணுக்கை கேட்கும்போதே இன்னார்தான் இசையமைத்தது என்று சொல்லிவிடலாம்(தற்காலத்தில் லூப்பில் போடுபவர்களை சொல்லல).ஆனால் இவர்  படத்தின் இசையக்கேட்டால் "இது மிஷ்கின் பட இசை" என்று சொல்லுமளவு அவர் எந்த இசையமைப்பாளருடன் பணியாற்றினாலும் தனது பாணி என்ற ஒன்றில் பொருந்துவதாக இருக்குமாறு சரியாக வேலை வாங்குகிறார்.கண்டிப்பாக இதை பாராட்ட வேண்டும்.குறிப்பாக அவர் படங்களில் வயலின்(எனதபிமான இசைக்கருவி) பிரதானமான ஒன்றாகவே இருந்துவந்துள்ளது(அஞ்சாதே துவங்கி).அது இசையராஜாவாக இருந்தாலும் கே'யாக இருந்தாலும் அரோல் கொரேலியாக இருந்தாலும் தன்  மனதில் தோன்றும் பாணியில் அவர்களை இசையமைக்க வைக்கிறார்.பிரதானமாக Bach'ன் பாணி?(என்று எனக்கு தோன்றுகிறது.தவறிருந்தால் மன்னிக்கவும்).அந்த சப்வேயில் வரும் பாடல், அந்த வயலின் நிரவலிசை, பாடிய அந்த பாடகியின் குரல்(என்ன ஒரு உணர்வு!),அதற்கு வாயசைக்கும் சிறுமி நான்கும்  அட்டகாசமாய் ஒரு புள்ளியில் சேர்வதை உணரமுடிந்தது.உயிரை உருக்கும் அப்பாடல்:

           பேயோட்டும் பெண் சம்மந்தப்பட்ட காட்சிகள் இழையோடும் நகைச்சுவை.  பேயோட்ட வெவ்வேறு மதத்தினர் வந்து சடங்குகள் செய்வதை ஒருவித பகடியாகவே காட்டியது நமட்டுச்சிரிப்பை வரவழைக்கிறது.  சவரம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் இடையில் எழுந்துவந்தாலும் முழுச்சவரம் செய்த முகத்தோடவே இருக்கும் வழமைக்கு மாறாக பாதி தாடியோடு அவர் வந்தது நல்ல கண்டின்யூவிட்டி.நிறக்குருடு என்ற ஒரு புது விஷயத்தை மகா திருப்பத்தை  கொண்டுவர பயன்படுத்திதை பாராட்டலாம்.நாயகியின் தொப்புள்+மார்பகங்கள் நிலையான செட் பிராபர்டியாக இருக்கும் தமிழ் சினிமாவில் வெறும் பத்து நிமிடத்துக்கு மட்டுமே ஒரு பெண்ணை பயன்படுத்தியது புதுமை.
.
பி.கு: படங்களைப்பற்றி நான் எழுதுவதை விமர்சனம் என்று நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்.படம் பார்க்கும்போது தோன்றும் எண்ண ஓட்டங்களைப்பதிவு செய்வதே என் வழக்கம்.அந்த வகையிலேயே இதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த சீன்ல திரைக்கதை செம வீக்கா இருப்பது உன் கண்ணுக்கு தெரியலியா?ஒளிப்பதிவு எட்டாவது சீனில் துருத்திக்கொண்டிருந்ததே?அது உனக்கு தெரியலியா என்றெல்லாம் அக்கப்போர் செய்யப்படாது.ஏன்னா அதைப்பற்றியெல்லாம் எனக்கு தெரியாது!
         

Tuesday 13 January 2015

கரைந்த நிழல்கள்



  நாட்டின் மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில் சினிமாவின் வீச்சு அதிகம்.கடந்த ஐம்பதாண்டு அரசியலை தீர்மானித்தது சினிமாத்துறையை சார்ந்தவர்கள்தான்.இதன் காரணமாகவே இன்று பிரபலமாக இருக்கும் நடிகர்களும் ஆட்சியை பிடிக்க முயலும் அவலங்கள் தெரிந்ததே.அதைப்பற்றி பேசினால் திசை திரும்பிவிடும்.
              இன்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு சினிமா மோகம் உண்டு.சினிமா பார்க்கும் மோகம் தெரிந்ததே.நான் சொல்வது சினிமாவில் சேர்ந்து சாதித்து பெரியாளாக புகழ் பெற வேண்டும் என்பதற்காகவே ஊரை விட்டு படிப்பை விட்டு குடும்பத்தை விட்டு கோடம்பாக்கத்தில் பத்துக்கு பத்து அறைகளில் இருபது பேர் போராடி கொண்டிருப்பதைத்தான்.இவை அனைத்தும் சினிமாவில் பேர் புகழ் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே.
             இந்த கரைந்த நிழல்கள் நாவல் சினிமா துறையை சர்க்கரை பூச்சு,பகட்டுகள் இல்லாமல் அப்பட்டமாக காட்டுகிறது.

             இந்த நாவலை பற்றிய பல விஷயங்களை சொல்ல வேண்டும் .
முதலில் இது வழக்கமான நாவல் இல்லை.அதாவது ஒரு துவக்கம் .அங்கே நாவலின் கதாபாத்திரங்கள் வாசகனுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே அறிமுகம் செய்யப்படும்.பிறகு ஒருவித linear வழியில் துவக்கம், இடையில் பல்வேறு திருப்பங்கள், முடிச்சுக்கள் பிறகு அவை தீர்ந்து ஒரு முடிவு.சில நாவல்கள் முடிவில்லாமல் தொக்கி நிற்கும்.
        ஆனால் இந்த நாவல் மேற்குறிப்பிட்ட அந்த டெம்ப்ளேட்டை உடைத்தெறிகிறது.முழு நாவலுமே எடிட் செய்யப்படாத ஒரு திரைப்படம் போல ஒருவித jumble போல கலைந்து கிடக்கிறது(முன்னுரையில் "நாவல் புரியவில்லை" என்று பலர் சொன்னதாக சொல்கிறார் அசோகமித்திரன்.காரணம் இதுவாக இருக்கலாம்).வாசித்து முடித்ததும் நாமாக அவைகளை ஆங்காங்கே பொருத்தி பார்த்துக்கொள்ள வேண்டும்.பொருத்தி பார்க்காவிட்டாலும் பிரச்சனை இல்லை.Raymond Chandler எழுத்து போல கதை முடிந்ததா?முடிச்சுகள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைவிட கதாபாத்திரங்கள் தங்களுக்குள் interact செய்துகொள்ளும் விதம் ,கதாபாத்திரங்களின் மன ஓட்டங்கள்,அவர்களின் பிரச்சனைகள், அதை தீர்க்க முடியாமல் அவர்கள் மனதில் எழும் ஆற்றாமை அனைத்துமே வாசகனை உச்சு கொட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லாமல்  ஒருவித சமநிலையில் ஆசிரியர் இதை நம் முன் வைத்துள்ளார்.அதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது அவரவர் அனுபவங்களைப்பொறுத்த்து!
         உதாரணமாக பட தயாரிப்பாளர் ரெட்டியார் படத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டார்.கொஞ்சமே பாக்கி.நடிகை ஷூட்டிங் வர மறுக்க அங்கே சென்று இவர் சத்தம் போடுகிறார்.நடிகை மயக்கம் போட்டு விழுகிறாள்.அத்தோடு ரெட்டியார் segment முடிந்தது.ரெட்டியாருக்கு என்னானது என்பதை 2 வருடம் கழித்து வேறொரு தயாரிப்பாளர் அந்த முடிக்காத படத்தை தூசு தட்டி பார்க்கும் போது ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.கடன் நெருக்கி மூழ்கிப்போனார்
         ஒரு  நாவலின் எழுத்துநடை என்பது அந்த எழுத்தாளரை காட்டிகொடுத்து விடும்.இந்த எழுத்தாளர் இப்படித்தான் எழுதுவார்.வார்த்தை பிரயோகம் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்கலாம்.இந்த நாவல் அதையும் நொறுக்கி விட்டது.அசோகமித்திரன் அவர்களின் எழுத்து நடை என்பது மென்மையானது என்றுதான் பலர் நினைக்கிறார்கள் . உதாரணமாக ஒற்றைவிரல் டைப் ரைட்டர் கதையை படித்தால் தெரியும்.இந்த நாவல் அத்தகைய மென்மையான மொழிநடையின் சாயல் துளியும் தெரியாமல் எழுதப்பட்டுள்ளது.

          இன்னும் சற்று தெளிவாக சொல்ல வேண்டுமானால் நாவலில் ஆசிரியர் கதை சொல்லவில்லை.அவர் வசனங்களை எழுதவில்லை.அந்தந்த கதாபாத்திரங்களை  தங்களுக்குள் interact செய்ய வைத்துவிட்டார். குவென்டின் டரண்டினோ ஒரு பேட்டியில்எனது படத்திற்கு நான் வசனங்கள் எழுதுவதில்லை.படத்தில் வரும் கதாபாத்திரங்களே அதை எழுதுகிறார்கள்” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.இதைத்தான் அசோகமித்திரன் செய்துள்ளார்.தவறாமல் வாசிக்கவேண்டிய ஒரு அற்புத படைப்பு.