Tuesday 15 May 2018

நடிகையர் திலகம்

                         தமிழ் சினிமா உலகுக்கும் தெலுங்கு சினிமா உலகுக்குமான மிகப்பெரும் வித்தியாசமாக ஒன்றை குறிப்பிடலாம்.நான் சொல்லும் தமிழ் சினிமா உலகம் கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகால கட்டத்தை சார்ந்தது.என்ன வித்தியாசம்னா தெலுங்கு படம்னா "ஆமா!இது கமர்ஷியல் படம்தாய்யா" என்று அழுத்தம் திருத்தமாகவே படமெடுப்பார்கள்.
        ஆனா சமீபகால தமிழ்ப்படங்கள் வணிக சினிமாவா?கலைப்படமா?பேரலல் சினிமாவா? என்பது படத்தை தேங்காய் உடைத்து துவக்குவது முதல் பூசணிக்கா உடைத்து முடித்து,post production, விளம்பரம் செய்து வெளியிட்ட பிறகும் இயக்குனர் துவங்கி படம் பாத்தவர் வரை  எவருக்குமே இது எந்த வகையறா?என்ற குழப்பமே மிஞ்சுகிறது .

             ஒரு கலைஞர் என்பவன் கொந்தளிப்பான மன நிலை கொண்டவர்.9-5 பக்ராக்களுக்கு அவர்களின் unexpected நடத்தைகள் புதிராகவும் அபத்தமாகவுமே தோன்றும்.அதை எதிர்கொள்ள முடியாத சில பக்ராக்கள் அவர் திமிர் பிடித்தவர்!இவர் சரக்கடிப்பவர்!அவர் எவரையுமே மதிக்க மாட்டார்!என்று சாமானியனுக்கான நடத்தை விதிகளை கலைஞன் மேல் திணித்து கீழ்மைப்படுத்தவே முயல்வார்கள்.
              அப்படியான ஒரு கலைஞரின் வாழ்க்கையை மூணு மணி நேர சினிமாவா கொடுப்பது அவ்வளவு சுலபமல்ல.மார்லன் பிராண்டோ வாழ்க்கையை படமாக்குறேன் என்று சில கால கட்டத்தை மட்டும் எடுத்து சில un-official படங்கள் வந்துள்ளன.அது சிறு குவளையால் கடலை அள்ளுவது போன்ற முயற்சிதான்.

               ஒரு கலைஞரின் வாழ்வின் ஒரு பகுதியையோ அல்லது முழு வாழ்க்கையயுமே படமாக எடுக்கலாம்.இரண்டுமே மேற்சொன்ன குவளையால் கடலை அள்ளும் முயற்சிதான்.சம்மந்தப்பட்ட அந்த கலைஞனே தன் வரலாறாக ஒரு படம் எடுத்தாலும் அதிலும் factual errors இருக்கும்.
           இங்கு ஒரு இயக்குனரால் செய்ய முடிவது ஒரு கலைஞரின்  வாழ்க்கையை  ஒருவித outline ஆக  சுட்டிக்காட்டுதல்!ஏன் இப்படி செய்தார்?ஏன் அப்போது அந்த சிக்கலில் இருந்து வெளிவராமல் போனார்!ஏன் அப்படியொரு அபத்தமான முடிவை எடுத்தார்? என்று கேள்விகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்காமல் ஒரு வாழ்க்கையை பதிவு செய்தல்!மேலோட்டமாக இருந்தாலும்  ஆழமாக இருந்தாலும்   பார்வையாளனால் அந்த வாழ்க்கையோடு  தொடர்புபடுத்திக்கொள்ள முடிவதான ஒரு முயற்சியாக இருந்தால் அதுவே வெற்றிதான்!

         
            வணிகரீதியாக ஒரு நடிகையின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.அதுவும் வாழ்ந்து-வீழ்ந்த ஒரு நடிகை!ரொம்பவும் இருண்மையாக போய்விட கூடாது என்பதற்காக சமந்தா பகுதியையும் சேர்த்திருக்கிறார்கள்(தெலுங்கு ஸ்டைல்).அங்கே சாவித்திரி வீழ வீழ இங்கே சமந்தா கதாபாத்திரம்  திக்குவாய்-சமையல்பத்தி பத்திரிக்கையாளர் என்பதில் இருந்து சரளமாக பேசக்கூடிய- முதல் பக்கத்தில் பத்தி எழுதும்-முக்கிய பத்திரிக்கையாளராக உயர்வதும், தனது காதலை கண்டு கொண்டவராகவும் காட்டப்படுகிறார்.ஒருவித balancing act.
            இதில் பிரதானமாக இருப்பது சாவித்திரி-ஜெமினி காதல்.ஜெமினி மீதான அளவில்லா காதலால் ஏற்கெனவே திருமணமானவர் என்று தெரிந்திருந்தும் அவரை திருமணம் செய்துகொள்கிறார்.பிறகு சாவித்திரியின் வளர்ச்சி பொறுக்காமல் ஜெமினி பொறுமுவது,சில திரைப்படங்களை வாங்கி வெளியிடுவது தொடர்பான சாவித்திரியின் தவறான முடிவுகளை கண்டிப்பது என்று அக்கறை கொண்டவராக இருந்தாலும் ஒருகட்டத்தில் சாவித்திரியின் புகழ் தனது புகழைவிட மிக அதிக அளவில் போய்விட்டது அவரை கடுப்பேற்றுகிறது.

         வேறொரு பெண்ணுடன் உறவு கொள்வதை சாவித்திரி நேரில் கண்டு  கொதித்து போகிறார்.பிறகு அவர் தனித்து வாழ துவங்குகிறார்.மதுவுக்கு அடிமையாகிறார்,படங்கள் தயாரிக்கிறார் இயக்குகிறார் கடனாளி ஆகிறார்.நிற்க! இது இப்படத்தில் காட்டப்பட்ட காட்சிகள்  சார்ந்து நான் சொல்வது."இது பொய்!நிஜத்தில் அப்படியெல்லாம் இல்லை...what actually happened was... "என்று இஸ்திரி புத்தகத்தை எடுத்துகினு வர வேணாம்.
         
            படத்தில் பாராட்ட வேண்டிய விஷயங்கள் கண்டிப்பா இருக்கு.
இப்பட அறிவிப்பு வந்த சமயத்தில் 'சாவித்திரி கேரக்டர்ல கீர்த்தி சுரேஷா?' என்ற மாபெரும் சந்தேகம்/அதிர்ச்சி எனக்கும் இருந்தது.ஏற்கெனவே கீர்த்தியை ட்ரோல் செய்துகொண்டிருக்கும் இணைய மொண்ணைகளுக்கு இது இன்னும் பெரிய தீனியாக இருக்கும் என்றே நானும் நினைத்தேன்.
        படத்தின் முதல் பாதியில் சில இடங்களில் கீர்த்தியே தெரிந்தாலும் மீதுமுள்ள  படத்தில்  சாவித்திரியை திரையில் கண்ட உணர்வை தந்திருக்கிறார்.அதை மறுக்க முடியாது.கண்டிப்பாக அவரது நடிப்பை  பாராட்டலாம்.இதுபோன்ற இன்னொரு கதாபாத்திரம் அவருக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே!பட ஒளிப்பதிவாரின் மாபெரும்  பங்கையும் இதில் மறுக்க முடியாது.

          அப்புறம் எம்ஜிஆர்,சிவாஜி,சந்திரபாபு,நாகேஷ்-தங்கவேலு இவங்கல்லாம் எங்க?என்ற கேள்வியை சிலர் கேட்டிருக்கிறார்கள். இது ஜெமினி-சாவித்திரி உறவையும் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டதும் சாவித்திரியின் வீழ்ச்சியையும் பேசும் படம்.அப்போ இதில் முக்கியமானது ஜெமினி&சாவித்திரி  கேரக்டர்கள்தான்.ஜெமினி இவ்வளவு ஒல்லியாகவா இருந்தார் என்ற கேள்வி எழுது .அதேபோல ஹீரோவான ஜெமினியை வில்லனாக்கிவிட்டார்களா என்று கேட்கிறார்கள்.ஜெமினி ஒரு கேசனோவா என்பத்தைதாண்டி உண்மையில் ஜெமினி-சாவித்திரி இடையே  என்ன பிரச்சனை என்பதை அறிந்தோர் இதைப்பற்றி விளக்கம் அளித்தால் நன்று. இதை பெரிய விவாதம் ஆக்கி மண்டையை உடைத்துக்கொள்ள நான் தயாரில்லை!

           ஒருவேளை எம்ஜிஆர் சிவாஜி சந்திரபாபு  இவர்களையும் காட்டுறேன்னு ஏதாவது சிஜி/prosthetic அணிந்த நடிகர்களை வரிசையா திரையில் காட்டிக்கொண்டிருந்தால்   தசாவதாரம் பாத்த எபெக்டே மிஞ்சியிருக்கும்.தசா படம் பாத்துகினு இருந்தப்போ ஒவ்வொரு கமலாக prosthetic மாட்டிக்கொண்டு வந்துகொண்டே இருந்தபோது இது படமா?இல்ல மாறுவேட போட்டியா?என்ற கேள்வியே மிஞ்சியது.அந்த கோமாளித்தனத்தை இங்கே செய்யாதது நிம்மதி!
          சாவித்திரி கேரக்டருக்கு கூட இரண்டாம் பாதியில் சில இடங்களில்(எடை மிகவும் அதிகரித்த தருணங்களில்)  மட்டும் prosthetic பயன்படுத்தியுள்ளார்கள்.துல்கருக்கு லேசாக வீங்கிய ஈறுகள் மாதிரியான மேக்கப்பையும் காண முடியுது.அதிகமா பல்செட்டு, உப்பிய கன்னம், பெருத்த வயிறு  என்று போயிருந்தால் அது மாபெரும் திசைதிருப்பும் காரணியாக இருந்திருக்கும்(இந்த ஓவர் மேக்கப்பால் திசைதிருப்பப்படுதல் என்பதற்கு Hitchcock படத்தில் ஆந்தனி ஹாப்கின்ஸ் மேக்கப்பை குறிப்பிடலாம்).
            படத்தில் முக்கியமான குறையாக நான் பார்த்தது இதை தமிழ் தெலுங்கு என்று இருமொழிப்படமாக எடுக்காது போனதுதான்!அதனால் லிப் சின்க் பிரச்சனை இருக்கு;பிரதானமான சிலரை தவிர பிற நடிகர்கள் அன்னியமாக தெரிகிறார்கள்   .அப்புறம் அர்ஜுன் ரெட்டி பெற்ற மாபெரும் வெற்றியால் அப்பட ஜோடிக்கும் இதில் முக்கிய கதாபாத்திரங்களை கட்டாயமாக இடம் உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்.அப்புறம் இரு கதைகள் பேரலல்ஆக செல்வதால் படத்தின் நீளம் அதிகமானது.

       ரொம்ப படம் முழுக்கவுமே vintage மாதிரி தெரிந்துவிட கூடாது என்பதற்காக சமந்தா-அர்ஜுன் தேவரகொண்டா காட்சிகள் சேர்த்துள்ளார்கள் .பிரம்மானந்தத்தை வைத்து காமெடி காட்சி வைக்கிறேன்; ஐட்டம் டான்ஸ் வைக்கிறேன்(பாகுபலி நியாபகம் இருக்கா?) என்று எதுவும் செய்யாதது பெரிய ஆறுதல் .என்டிஆரை தேவுடா லெவல்லையே இதிலும் மெயின்டெயின் செய்துள்ளார்கள்.

        இது பிரதானமாக ஒரு தெலுங்குப்படம்.சாவித்திரி&கீர்த்தி சுரேஷ்  தமிழில் பிரபலமானவர்கள் என்பதால் இப்படத்தை டப்பிங் செய்துள்ளார்கள்.அப்படி இருக்கும்போது எம்ஜிஆர் ஏன் நாக்கை கடிக்கவில்லை சிவாஜி ஏன் உதட்டை கடிக்கவில்லை என்றெல்லாம் கேள்வி எழுப்புவது அபத்தமாகவே பார்க்கிறேன் ! இருமொழிகளில் அப்படத்தை எடுத்திருந்தா தமிழ் பதிப்பில் எங்கடா எம்சிஆரு?எங்கடா சிவாசி?என்று கேட்டிருக்கலாம்!
                           ஒலக விமர்சகர்கள் இப்படத்தை இடக்கையால் புறந்தள்ளிவிடுவர்.அவர்களோடு எவ்வித தொடர்பும் தவறியும் வைத்துக்கொள்ளாத சாமானிய ரசிகர்கள் தெலுங்கு வாடையை பொறுத்துக்கொண்டால்  இப்படத்தை ரசிக்க வாய்ப்புண்டு.அப்புறம் "தமிழன் ஜெமினியை வில்லனாக்கி தெலுங்கர் சாவித்திரியை அப்பாவியாக்கியுள்ளார்கள்" என்ற நாதக conspiracy ஐ கூட ஒலக விமர்சகர்கள் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.அவிங்களுக்கும் பொழுதுபோக வேணாமா?
.
டிஸ்கி: இப்படம் தமிழ்நாட்டில் குறைந்த தியேட்டர்களில் மட்டும் ரிலீஸ் ஆகியிருக்கும் போல.ஒரு ஊர்ல நாலு தியேட்டர் இருந்தா அதுல மூணே முக்கா தியேட்டர்களில் விஷாலின் இரும்புத்திரை தொங்குது!மீதமுள்ள தியேட்டர்களில் இதை திரையிட்டுள்ளார்கள்.இப்படத்தை  தமிழக மக்கள் ஏற்பார்களா? என்ற வினியோகஸ்தர்களின் தயக்கமா?அல்லது விஷால் செய்த சேட்டையா?(பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தையும் காணோம்) என்பது தெரியல.எப்படி இருந்தாலும் நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம்னு இரட்டை குதிரை சவாரி செய்யுறேன்னுட்டு ரெண்டுக்கும் விஷால் ஆப்படிக்க போவதாகவே எனக்கு தோணுது!

Thursday 3 May 2018

Stalker 1979

          ....if 300 people are in a cinema watching it, they will all see a different film, so in a way there are thousands of different versions of "Caché -Michael Haneke


                           சாதாரண வணிக சினிமாக்களுக்கு இது பொருந்தாது என்றாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட அணுகுமுறைகளை கோரும் திரைப்படங்களுக்கு இது முற்றிலும் பொருந்தும்.இப்படமும் அப்படியே!
              ஆன்மீகம் எனும் வார்த்தையே கேலி கிண்டலுக்கு மட்டுமல்லாது தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது ஆன்மீகத்தையும் பக்தியையும் போட்டு குழப்பும் சிலர் ஒருபுறம் இன்னொரு புறம் அரசியல் ஆசையில் சிலர் அதை கேலிகூத்தாக்குவது மறுபுறம்  என்று அவலம் தொடர்கிறது.
         ஒரு திரைப்படமோ புத்தகமோ  இசையோ ஓவியமோ அல்லது வேறு வகையான கலை படைப்போகூட  ஆன்மீக உணர்வைத்தரலாம்!
            அவ்வகையில் என்வரையில் ஆன்மீக உணர்வைத்தந்த சில திரைப்படங்கள்/டிவி தொடர்கள் என்றால் Spring,Summer,Fall,Winter,Twin Peaks, Solaris,Apocalypse Now என்று சிலவற்றை குறிப்பிடலாம்!அவ்வகையிலேயே இப்படத்தையும் சேர்க்கலாம்.
            இப்படம் புறம் சார்ந்தது என்பதைவிட அகம் சார்ந்த ஒரு பயணமாகவே நான் பார்த்தேன்.டர்கோவ்ஸ்கியின் படங்களில் காட்சிகள் மிக மெதுவாக நகரும் என்ற குற்றச்சாட்டு உண்டு.உண்மையில் எதிலும் வேகம் வேகம் என்று ட்யூன் செய்யப்பட்ட ஒரு பரபரப்பான மனநிலையின் ஓட்டத்தை குறைப்பதற்காகவே அத்தகைய காட்சிகள் என்பதை அவர் படத்தை சரியான நோக்கத்தில் அனுகியோர் உணர்வர்!மேலும் முந்தைய காட்சியின் பரிணாமங்கள்,அது உண்டாக்கிய ஆழ்மன  உணர்வு போன்றவற்றை அசைபோடுவதற்காகவும் இந்த நீண்ட மெதுவான காட்சியமைப்புகள் அமைக்கப்பட்டதாகவே காண்கிறேன்.

               அனைத்தையுமே கேள்விகளுக்கு உட்படுத்தி உட்படுத்தி எதன் மீதும் நம்பிக்கை இல்லாதோர் குறித்து பொருமுகிறான் ஸ்டாக்கர்.

               Zone எனும் பகுதியில் விண்கல் விழுந்ததாகவும்,அதன் பின்னர் அங்கிருந்த மக்கள் காணாமல் போனதாகவும் தகவல் பரவ அதைக்காண மக்கள் முண்டியடிக்க அவர்களும் ஆபத்தில் சிக்குகிறார்கள்.அரசு அப்பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாய் அறிவிக்கிறது.ராணுவ பாதுகாப்போடு!


          அதையும் மீறி அப்பகுதிக்கு மனிதர்களை அழைத்து செல்கிறான் ஸ்டாக்கர்.ஸ்டாக்கராக இருப்பவர் தனது சொந்த விருப்பத்திற்காக அங்கே செல்லக்கூடாது.நேர்வழியில் செல்ல முடியாது.கண்ணெதிரே தெரியும் இடத்திற்கும் சுற்றி வலைத்துதான் செல்லவேண்டும்.போன வழியில் திரும்ப வர முடியாது.அதற்கு வேறு வழியை கண்டுபிடித்து வர வேண்டும்.பழைய பொறிகள் மறைந்து புதிய பொறிகள் தோன்றும் ஸோன்!
           ஆனால் ஸோனில் ரூம் எனும் பகுதிக்கு செல்வோரின் ஆழமான விருப்பங்கள் நிறைவேறும்!இதிலும் ஒரு புள்ளி!என்னவெனில் ஒரு நபரின் ஆழ்மன விருப்பங்கள் இருவகைப்படும்.
-ப்ரக்ஞைபூர்வமான விருப்பங்கள்
-ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்கள்.
     ரூம் எனப்படும் பகுதியானது ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்களையே நிறைவேற்றக்கூடியது.நமக்கே ப்ரக்ஞைபூர்வமான விருப்பங்களாக நல்ல வீடு மனைவி மக்கள் பேர் புகழ் விருதுகள் என்று பல்வேறு விருப்பங்கள் உண்டு.

        ஆனால் ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்கள் என்னவென்று நமக்கே தெரியாது!"அவனை புரிஞ்சிக்கவே முடியல" என்று நாம் இன்னொருவனை பார்த்து சொல்கிறோம்.ஆனால் நாம் நம்மை எந்தளவு புரிந்துவைத்துள்ளோம்? என்ற கேள்விக்கு பலரால் பதிலே அளிக்க முடியாது.
           நம்மை நாமே முழுமையாக புரிந்துகொள்ள முடியாத நிலையில் ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்கள் குறித்த சிறு ஊகத்தையும் கூட நம்மால் செய்ய முடியாது என்பதே உண்மை!
          அறிவியல் விஞ்ஞானம் எல்லாம் உச்சகட்ட வளர்ச்சியை தொட்டுவிட்டதாக காலம் தோறும் சொல்லப்பட்டாலும் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு அவைகளாலும் எந்த உறுதியான பதிலையும் அளிக்க முடியவில்லை என்பதே உண்மை.
        படத்தில் மக்கள் வாழும் நகரம் என்பது அழுக்கடைந்து மாசுபடிந்து எந்திர இரைச்சலோடு இருப்பதாக காட்டப்படுகிறது.அதேநேரம்  ஸோன் பகுதியானது பச்சை பசேலென்று அமைதி தவழும் மனிதர்களால் வன்புணர்வு செய்யப்படாத ஒரு பகுதி போல காட்டப்படுகிறது.அதற்கு காரணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்!ஸோன் தவிர்த்த பிற பகுதிகள் மனிதனின் அராஜகத்திற்கு எதிர்வினை ஆற்றும் வல்லமை இல்லாதவை!ஆனால் ஸோன் என்பது அப்படியல்ல!அதன் விதிகளுக்கே மனிதன் கட்டுப்பட்டாக வேண்டும்.

          ஸோன் பகுதியிலும் கூட மனித அராஜகத்தின் சின்னமான பீரங்கிகள் துப்பாக்கிகள் போன்றவை ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகின்றன.ஸோன் என்பது உருவாவதற்கு இருபதாண்டுகளுக்கு முன் வரை அங்கு மனிதன் உண்டாக்கிய சேதாரங்கள்  அப்படியே இருக்கின்றன.
             இங்கே படத்திலும் ஒரு ப்ரொபசர்  ஒரு எழுத்தாளர் இருவரும் ஸ்டாக்கரோடு ஸோனுக்குள் செல்கிறார்கள்.எழுத்தாளன் ப்ரொபசர் இருவருமே ஸோன் பகுதியை அலட்சியமாகவே அணுகுகிறார்கள்.ஸோனின் சில பகுதிகள் மதிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாக்கர் சொல்வதை அவர்கள் கேட்பதில்லை.
             இந்த ஸ்டாக்கருக்கு (இங்கே ஸ்டாக்கர் என்பது பெயரல்ல!சட்ட விரோதமான செயலுக்கு உதவுவோரை குறிக்கும் ஒரு பணி) முன்னர் ஒருவன் ஸ்டாக்கராக(Porcupine என்று அழைக்கப்படுகிறான்) இருந்திருக்கிறான்.தனது சகோதரனை ஸோனுக்கு அழைத்து சென்றபோது சகோதரன் இறந்துவிட இவன் ரூமுக்குள் செல்கிறான்.
         எந்த எண்ணத்தோடு?தனது சகோதரன் மீண்டும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஆழ்மன எண்ணத்துடன்!ஆனால் அவன் ஸோனில் இருந்து திரும்பியதும் நடப்பது வேறு.பெரும் பணக்காரன் ஆகிறான்.

         ஏற்கெனவே சொன்னது போல ரூம் என்பது ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்களை மட்டுமே நிறைவேற்றக்கூடியது.அதுவும் நேர்மறையான விருப்பமாக இருந்தால் மட்டுமே!உலக அழிவை ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பமாக கொண்ட ஒருவன் ரூமுக்குள் சென்றால் அவனின் அழிவுக்கே அது இட்டுசெல்லும்.
        Porcupine ன் ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பம் என்பது பெரும்  செல்வந்தனாவது!ஆனால் அவன் ப்ரக்ஞைபூர்வமாக விருப்பப்பட்டதோ தனது சகோதரனின் உயிர்! சகோதரன் மீதான தனது பாசம்/அக்கறை என்பது மேலோட்டமான போலித்தன்மை கொண்டதே என்ற உண்மையை அவன் உணர்ந்ததும் அந்த குற்ற உணர்ச்சி தாளாமல் தற்கொலை செய்துகொள்கிறான்.
            எனவே ஸோன் என்பதும் ரூம் என்பதும் எவ்வகையிலும் விளையாட்டுத்தனமாக  அணுகிவிடமுடியாத ஒரு பகுதி.

              ப்ரொபசரின் விருப்பம் என்பது ஸோன் குறித்த ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதி நோபல் பரிசு பெறுவது.அதேநேரம் அந்த ரூம் எனப்படும் பகுதி இங்கே வரும் மனிதர்களால் தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற கவலையையும் அவர் கொண்டுள்ளான்.அதற்காக தனது பையில் சிறு அணுகுண்டு எடுத்து வந்துள்ளான்.ரூமை நிரந்தரமாக அழிக்க.அவரை பொறுத்தளவில் ஸோன் என்பது ஒரு ஆராய்ச்சிக்கான ஒரு இடம்.அதன் மர்ம பகுதிகள் பற்றியெல்லாம் அவர் காதில் போட்டுக்கொள்வதில்லை.
               எழுத்தாளனோ பேசிக்கொண்டே இருக்கிறான் .அவனுக்கு எதன் மீதும் நம்பிக்கை இல்லை.A cynic to the core!தொடர்ந்து எழுது எழுது என்று ஊடகங்கள் விமர்சகர்கள் நிர்பந்திப்பதாக புலம்புகிறான்.ஒரு ரத்த கட்டியை பிதுக்கி எடுப்பது போன்றதே தான் எழுதும் எழுத்து என்கிறான்.ஸோனுக்கு அவன் வந்தது கூட ஒருவித உத்வேகத்தை அது கொடுக்கும் என்ற கடைசி நம்பிக்கையில்தான்!இந்த ஸோன் என்ற மிக புதிரான பகுதி கூட அவனுக்கு எவ்வித ஆர்வத்தையோ நம்பிக்கையையோ எழுதுவதற்கான உத்வேகத்தையோ  ஏற்படுத்தவில்லை.இனிமேல் எந்த ஆதாரத்தில் தான் எழுதப்போகிறோம் என்று அழுகிறான்


          ஆனால் தவறான ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பத்தோடு ரூமுக்குள் நுழைவோர் அழிவையே சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து அந்த குண்டை டிஃப்யூஸ் செய்து தண்ணீரில்  எறிகிறான்.
          எழுத்தாளன் ப்ரொபசர் இருவருமே ரூமுக்குள் நுழைய தயங்குகிறார்கள்.Porkupine கதையை கேட்டபிறகு தங்கள் ஆழ்மனதின் விருப்பங்கள் எத்தகையதாக இருக்கக்கூடும் என்ற தயக்கமோ அல்லது தனக்கே தெரியாமல் தவறான ஆழ்மன விருப்பத்தோடு உள்ளே சென்றால் தனக்கே அழிவு என்ற பயம் காரணமோ!
            இங்கே வரும் கதாபாத்திரங்கள் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில்லை.அவரவர் தொழில் சார்ந்த பெயர்களாலேயே அழைக்கப்படுகிறார்கள்.உலகில் மனிதர்கள் எடை போடப்படுவது குணம் சார்ந்து அன்றி  அவரவர் தொழில்/பணி சார்ந்தே என்பதை நாம் மறுக்க முடியாது!
     ஸ்டாக்கரின் நோக்கம் என்பது தன்னலமற்றது.தனக்கான சொந்த விருப்பத்தோடு  ஒரு ஸ்டாக்கர் ரூமுக்குள் நுழைய முடியாது என்ற வரைமுறையால் அது வந்ததல்ல!அவன் இயல்பிலேயே அவ்வாறு நல்ல மனம் கொண்டவனாக இருக்கிறான்.அர்த்தமற்ற நகர வாழ்க்கைக்கு முரணாய் அர்த்தமுள்ள ஒரு பயணமாகவே ஸோனுக்கு செல்லும் பயணத்தை அவன் கருத்துகிறான்.வாழ்வில் ஒரே பிடிப்பாக அப்பயணம் இருப்பதாய் கூட சொல்லலாம்!

       அகத்திலிருந்து புறம் வரை வெறுமையைக்கொண்டவர்களை இங்கே வழிநடத்தி அழைத்து வருவதிலேயே மன நிறைவைக்கொண்டவனாக இருக்கிறான்.'இங்கே அழைத்து வந்து திரும்ப அவர்களை ஊருக்குள் விட்டதும் அவர்கள் எங்கே எப்படி இருக்கிறார்கள் என்பது தெரியாது' என்கிறான்.ஆக அவர்களிடம் எந்தவித பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவில்லை.அவன் மிக மிக வறுமையான நிலையில்தான் இருக்கிறான்.ஸோன் உடன் ஒருவித உளவியல் ரீதியான பிணைப்பை கொண்டவனாகவே நாம் ஸ்க்கரை காண முடிகிறது!இதை வார்த்தைகளில் விளக்க முடியவில்லை!
         படத்துவக்கத்தில் ஸ்டாக்கரின் மனைவி அழுது புலம்பி அவனை ஸோனுக்கு போக வேண்டாம் என்கிறாள்.ஏற்கெனவே ஸோனுக்கு போனதற்காக சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தவன் அவன்.எனக்கு எங்குமே சிறையில் இருப்பது போலத்தான் என்று சொல்லி அவள் பேச்சை கேட்காமல்  செல்கிறான்.பட முடிவில் தான் ஸோனுக்கு செல்ல விரும்புவதாக அவள் தெரிவித்ததும் "உனது ஆசைகள் நிறைவேறாது" என்கிறான் ஸ்டாக்கர்.
                மிக களைப்பாக இருப்பதாக சொல்வதுடன் மனிதர்கள் அனைத்தின் மீதான நம்பிக்கையையும் இழந்து விட்டதாக புலம்புகிறான்.
                      ஸ்டாக்கர் ஸோனுக்கு அடிக்கடி சென்று வந்ததாலேயே அவர்களின் பெண் குழந்தைக்கு கால்களே இல்லை என்ற பேச்சும் ஊருக்குள் உலவுகிறது.அவளும் வாக்கிங் ஸ்டிக் வைத்துதான் நடக்கிறாள்.ஆனால் பார்வையிலேயே பொருட்களை நகர்த்தும் திறன் அவளிடம் உள்ளதாக படம் நிறைவடைகிறது.

             படம் நெடுகவுமே பலவேறு ஆழமான கருத்துக்களை ஆன்மீக  சிந்தனைகளை காண முடிகிறது.மனிதன் பிறக்கும் போது வலுவற்று நெகிழ்வுத்தனமையோடு இருக்கிறான்.வளர வளர இறுக்கமும் நெகிழ்வற்ற தன்மையும் நிறைந்து இறுகிப்போய் சாகிறான்!
           ஹாலிவுட் ஆக்ஷன் படங்களையே பார்த்து பழக்கப்பட்ட ஒரு நபர் இப்படத்தை பார்க்கும்போது "இவ்வளவு சஸ்பென்சாக நகருதே!திடீர்னு ஏதாவது மனிதனை விட ஆயிரம் மடங்கு பெரிதான ஒரு ஜந்து தரை அதிர வரும் என்றோ திடீரென்று கொழ கொழவென்று ஏலியன்கள் வானத்தில் இருந்து குதிக்கப்போகிறார்கள் என்றோ கண்டிப்பாக எதிர்பார்ப்பார்கள்.அவர்களுக்கான படமல்ல இது!
       அடுத்து என்ன ?அடுத்து என்ன? என்று இந்த தருணத்தை மதிக்காமல்   எதிர்பார்க்க வைக்கும் படமல்ல இது!இந்நொடியை  இத்தருணத்தை முழுமையாக எதிர்கொண்டு உள்வாங்க சொல்லும் ஒரு படமே இது !